Wednesday, May 13, 2020

"நான் சாதிக்கப் பிறந்தவன்"

சுய ஊரடங்கு 3.0 - 52
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

இது கொரானா காலம்.
எல்லாத் தினமும்
ஞாயிற்றுக் கிழமையே.
இரவென்றால் விடியுமென்பது நம்பிக்கை.
கொரானா விடியல் என்பது
அவநம்பிக்கையாகவே உள்ளது.
இப்போது 56 நாட்கள் என்கிற அளவுக்கு வந்து நிற்கின்றது. வருகின்ற 17 அன்று மேலும் நீடிக்குமா? என்பது நமக்கு புரியும்.





நாடு தோறும் பிரச்சனை
நாள் முழுக்க வெளியே
நகர முடியாத பிரச்சனைகள்.

கொள்கை நோய் என்றார்கள்.
தொற்று. தொடாதே என்கிறார்கள்.
உள்ளேயிரு. அதுவே மருந்து.
மனிதர்கள் மாறிவிட்டார்கள்.
எல்லாமே மாறிவிட்டது.

இரவில் முழிப்பு
பகலில் உறக்கம்.
தெளிவற்ற சிந்தனைகள்.
முடிவே தெரியாத பயணம்.
வீட்டுக்கு வெளியே அமைதி.
வீட்டுக்குள்ளும் அமைதி.

நாள்முழுக்க
செல்போன் தடவி
வலிக்கும் விரல்கள்.
இணையம் பார்த்து
சுயம் மறந்த பொழுதுகள்.

களத்தில் இருப்பவர்கள்
அரசியல் பேசுவதில்லை.
களமே தெரியாதவர்கள்
அரசியலைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை.

பேசப் பேச உதிரும் உறவுகள்.
நெஞ்சில் வன்மம். நினைவில் வருத்தம்.
நட்பு நாய் போலக் குலைக்கும்.
உறவு பேயாக அலையும்.
சந்தர்ப்பங்கள் நரி போலக் காத்திருக்கும்.
கடைசியில் நட்புக்கான
தடைக்காலம் தொடங்கி விடுகின்றது.

இது அறிவுரையல்ல.
நான் எனக்கே சொல்லிக் கொண்ட
ஆலோசனைகள்.
தேவையெனில் எடு.
இல்லையெனில் விடு.

பத்தானதும் படுக்கைக்குப் போய்விடு.
அதிகாலை ஐந்தென்றால்
அலாரமின்றி எழுந்துவிடு.
மனைவியை எழுப்பாதே.
உன் தேநீர் சுவை உனக்கே தெரிய
ரசனையுடன் ஏலக்காய் சேர்த்து
இஞ்சியைத் தட்டுப் போடு.
உறிஞ்சு. மெதுவாக உறிஞ்சு.
பறவைகளுடன் பேசு.
பக்கத்தில் நடந்து பழகு.

வாரிசுகள் முழிப்பதற்குள்
இரண்டை முடித்து விடு.
உடற்பயிற்சி. நடைப்பயிற்சி.
வாரிசுகள் எழுவதற்குள்
இரண்டை முடித்து விடு.
காலைக்கடன்கள், ஆனந்தக் குளியல்,
மனைவியை மகிழ்ச்சிப்படுத்து.
பூக்களுக்கு வலிக்காமல் நீரூற்று.
செடிகளுக்குத் தளும்பாமல் நீரூற்று.
பறவைகளுக்கு உணவளி.
குயிலோசையை ரசித்து விடு.
அணிலின் நடையை அமைதியாக ரசி.

சூரிய வணக்கம், இறை வணக்கம்,
மகள் வணக்கம், மனைவி வணக்கம்,
மீதியுள்ள உள்(ள) வணக்கத்தைத்
தியானத்தில் கண்டு
எட்டு மணியில் நிறுத்தி விடு.

திட்டமிடுதல் முக்கியம்.
இப்போது அது முக்கியமல்ல.
உயிர் பிழைத்திருப்பதே முக்கியம்.

வரவு செலவு பணம் முக்கியம்.
இப்போது அது முக்கியமல்ல.
கொரானா வார்டுக்கு போகாமலிருப்பதே
முக்கியம்.

உனக்கே புரியும்.
கொரானா காலத்தில்
சோர்வடைய வேண்டியதில்லை.
அதிகாலை வெக்கை வருவதற்குள்
உன் ஆரோக்கியக் கடமைகள்
நிறைவுக்கு வரும்.

உன் தினசரி பழக்கவழக்கம்
மகுடம் சூட்டும் பாதைக்கு
அழைத்துச் செல்லும்.
காத்திருப்பவன் சாதிக்கக்கூடியவன்.

சல்லித்தனத்தை அடையாளம் கண்டு கொள்.
அங்கீகாரத்திற்கு ஏங்காதே.

சொல்லிப் பழகு
"நான் சாதிக்கப் பிறந்தவன்".



பழக்கங்கள் இனி தேவையில்லை



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா வகையிலும் ஜொலிக்க ஆரம்பிச்சிட்டீங்க அண்ணே... வாழ்த்துகள்...

முப்பெரும் தேவியர்களுக்கும் நன்றிகள்...

ஜோதிஜி said...

கடக்க வேண்டிய தூரமுள்ளது தனபாலன். காத்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

//களத்தில் இருப்பவர்கள்
அரசியல் பேசுவதில்லை.
களமே தெரியாதவர்கள்
அரசியலைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை.//

சிறப்பு. காத்திருப்போம். நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம்.

கரந்தை ஜெயக்குமார் said...


திட்டமிடுதல் முக்கியம்.
இப்போது அது முக்கியமல்ல.
உயிர் பிழைத்திருப்பதே முக்கியம்.

வரவு செலவு பணம் முக்கியம்.
இப்போது அது முக்கியமல்ல.
கொரானா வார்டுக்கு போகாமலிருப்பதே
முக்கியம்.

உண்மை ஐயா
உண்மை

ஜோதிஜி said...

அரசியல் பேசி எதிரிகளைத்தான் இணையத்தில் அதிகம் பேர்கள் அவமானப்படுகின்றார்கள். அவமானப்படுத்துகின்றார்கள்.

ஜோதிஜி said...

நன்றி நன்றி.