Saturday, May 09, 2020

ஏப்ரல் 26 - ஊரடங்கு ஆலோசனைகள்

சுய ஊரடங்கு 3.0 - 44
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)



மேல்தட்டு வர்க்கப் பார்வையில், வாழ்க்கையில் அறிவுரைகள் சொல்வது எளிது. ஊரடங்கும், முழு ஊரடங்கு என்று சுனாமி போல நம்மைத் தாக்கி, சிறையில் இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சொந்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியுமா? என்று மைண்ட் வாய்ஸ் ல் யோசிக்கும் நண்பர்களுக்காக சில ஆலோசனைகள்.

தற்போதைய சூழலில் எப்படி வாழ வேண்டும்? வாழ முடியும்? நான் வாழ்கிறேன்?




1. சந்தையில் கிழங்கு வகைகள் இருப்பதை பெரும்பாலும் எவரும் சீண்ட மாட்டார்கள். விபரம் தெரிந்தவர்கள் தான் அதிகம் வாங்குவார்கள். சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற பல வகைக் கிழங்குகள். இதற்கென தனியாக பை கொண்டு சென்று விடுவேன். கூடுதலாக வாங்கிக் கொள்வதுண்டு. காரணம் பத்து நாளைக்கு அப்படியே கெடாமல் இருக்கும். தினமும் சமைக்கத் தேவையில்லை. தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. அதிகச் சத்து. அதிக ஆரோக்கியம். விலை மலிவு.

2. கருவேப்பிலை துவையல், புதினா துவையல், கொத்தமல்லி துவையல், இஞ்சித் துவையல், கருவேப்பிலைப் பொடி இவையெல்லாம் ஒரு முறை செய்து வைத்துக் கொண்டால் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குத் தாங்கும். இதைக் கடைப்பிடிக்கின்றோம். ஆரோக்கியம் ப்ளஸ் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.

3. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே கேழ்வரகு 5 கிலோ அரைத்து வைத்துக் கொண்டோம். கூழ், அடை, புட்டு, உப்புமா எந்த விதத்தில் பிடிக்குமோ அந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். விலை மலிவு. ஆரோக்கியம் ஸ்டராங்.

4. தினமும் ஒரு நேரமாவது கஞ்சியை உணவாக வைத்துக் கொள்ள முடியும். வெளியே வெயில் பொளந்து கட்டுது. வீட்டில் செய்த ஊறுகாய், பொடி, வெங்காயம் பயன்படுத்திக் கொள்ளலாம். செலவு மிக மிகக் குறைவு.

5. கட்டாயம் ரேசன் அரிசியை இது போன்ற சமயங்களில் பயன்படுத்துங்கள். காரணம் வெளியே வாங்கும் அரிசியில் வெள்ளை நிறத்திற்காகப் பட்டைத் தீட்டித் தீட்டி குப்பை போல அரிசி என்ற பெயரில் குப்பை. ஒன்றுமே பலன் இல்லாதது. ரேசன் அரிசி நண்பர்கள் சொல்வது போல எந்த வாடையும் இல்லை. தெளிவாக உள்ளது. தாராளமாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்துகிறோம். ஒரு மாதத்திற்கு இப்போது 17 கிலோ கொடுக்கின்றார்கள். உங்கள் உடம்புக்கு எதிர்ப்புச் சக்தி வேண்டும் என்றால் கட்டாயம் ரேசன் அரிசியை பயன்படுத்துங்கள்.

6. உங்கள் வயது ஐம்பது என்றால் தினமும் இரண்டு வேளை சாப்பிடுங்கள் அல்லது சாப்பிடும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். காரணம் தொப்பையின் அளவு உங்கள் சட்டை காட்டிக் கொடுத்து விடும்.

7. எண்ணெய் பலகாரப் பிரியர்கள் மகள்களிடம் கடன் வாங்கி சாப்பிடுங்கள். நேரிடையாக எடுத்து சாப்பிடாதீர்கள். சர் சர் என்று உள்ளே போய்க் கொண்டேயிருக்கும் ஆபத்துள்ளது. இந்த இடம் தான் எனக்கு வழுக்குப் பாறையாக உள்ளது.

8. விடுமுறைதானே என்று இரவு முழித்துப் பழகாதீர்கள். ஒரு வாரம் பழகிவிட்டால் ராத்திரி சிவ சம்போ தான். அது பல விசயங்களுக்குப் பிரச்சனை. உடல் ஆரோக்கியம் முதல் உள்ள ஆரோக்கியம் வரைக்கும்.

9. ஊரடங்கு முடிந்தாலும் நீங்கள் இயல்பான மன நிலைக்கு வர ஒரு வாரம் ஆகக்கூடும். கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. முடிந்தவரைக்கும் வீட்டுக்குள் இருக்கும் மகள் மகன் மனைவியைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டேயிருங்கள். பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். அப்பா பாவம்டா. ஸ்னாக்ஸ் எடுத்ததற்குத் திட்ட வேண்டாம் என்று மகள்களே உங்கள் மேல் பரிதாபப்பட்டு மேலும் கொஞ்சம் கொடுப்பார்கள். Enjoy/.

மேலே சொன்ன விசயம் அனைத்திற்கும் நான் காப்புரிமை வாங்கி வைத்துள்ளேன்.😆

செலவே இல்லாமல் அல்லது குறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்துடன், ஊரடங்கு சமயத்தில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் நம்மைச் சுகமாக வைத்திருக்கும்.

கடைசியாக ஊரடங்கு முடியும் வரைக்கும் மனைவியிடம் உப்பு குறைவாக இருக்கிறது. புளி அதிகமாக இருக்கிறது என்று சொல்லி வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

காப்புரிமை - ஹாஹா...

இரண்டு வேளை உணவு - இதுவும் ஒரு விதத்தில் நல்லதே.

இரவு நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும் - இதே தான் எனக்கும் தோன்றியது. சில நாட்களில் அதிகம் விழித்திருக்க நேர்ந்து விடுகிறது. பகல் நேர உறக்கமும் தவிர்க்க வேண்டியதே!

ஜோதிஜி said...

இரவு தேவையில்லாமல் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரைக்கும் முழித்து இருப்பவர்கள், தொடர்ந்து பழகியவர்கள், அப்படியே வாழ்க்கை அமைந்தவர்கள் இவர்களின் வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியே.