Saturday, May 02, 2020

சில்லி பக்கோடா


அந்த 42 நாட்கள் -  28
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


சில்லி பக்கோடா

நேற்றைய முன் தினம் தக்காளி கிலோ எட்டு ரூபாய். விலை குறைவு என்பதால் அதிகமாக வாங்கி வந்தால் சபாநாயகரின் சாபத்தைப் பெற வேண்டும் என்று அமைதியாக இரண்டு கிலோ மட்டும் வாங்கி வந்தேன். இன்று கிலோ 14 ரூபாய். காரணம் கேட்டால் கடைக்காரர் "அண்ணே கொரானா வைரஸ்ன்னே. இன்னும் விலை கூடும். சீக்கிரம் வீட்டுக்குப் போங்க. வெளியே சுத்தாதீங்க" என்றார்.
***


கோழி விலை சரிந்தது என்று அலறுகின்றார்கள். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூபாய் 200. அப்படியே 180க்கு வந்தது. இப்போது தோல் உறித்த கோழி 140 ரூபாய். உரிக்காமல் 120 ரூபாய். காரணம் கேட்ட போது "கூட்டம் அதிகமாக இருக்கு தம்பி. வாங்க அப்புறம் நிதானமாகப் பேசுவோம்" என்றார். வெளியே தோல் குடல் கும்பியெல்லாம் வண்ண வண்ணக் கலவைகளில் ஊறவைத்து சில்லி தயாரித்துக் கொண்டிருந்தவரும் "அண்ணே எண்ணெய் இன்றைக்கு மாற்றியதா"? என்று கேட்டேன். "உள்ளே அக்கா இருக்குறாங்க. அவங்ககிட்டே கேளுங்க அண்ணே" என்றார். அக்கா கையில் பெரிய கத்தி வைத்திருந்தார். அமைதியாக வந்து விட்டேன்.
***

புத்தகம் வாங்கும் கடையில் "என்ன அண்ணே சோகமாக இருக்குறீங்க?" என்று கேட்ட போது "பார் கடையை மூடிட்டாங்க. வருகிறவன் பூரா ப்ளாக்ல வாங்கிட்டு பேண்ட் பாக்கெட்ல திணித்துக் கொண்டு போய்க்கிட்டே இருக்கான். ஒருத்தனும் நம்ம கடைப்பக்கமே வரமாட்டுறான்" என்றார்.
***

இத்தாலியை நம்பி மட்டும் திருப்பூரில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் பத்து வருடத்திற்குப் பின்னால் சென்று விட்டார்கள். ஸ்பெயின் நாட்டுக்குச் செய்து கொண்டிருந்தவர்கள் ஐந்து வருடம் பின்னால் சென்றுள்ளனர். "எதையும் அனுப்பாதீர்கள்" என்கிறார்கள். "அக்கா எங்களை காப்பாற்றுங்கள்" என்று நிர்மலா அக்காவிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
***

கிண்டில் போட்டியில் கலந்து கொண்ட போது ஒரு நாள் தூங்கி காலையில் எழுந்து பார்த்த போது நூற்றுக்கும் மேற்பட்ட நட்புக் கோரிக்கைகள் அணிவகுத்து நின்றது. பயந்து போய்விட்டேன். எந்த நம்பிக்கையில் கதவைத் தட்டினார்கள் என்றே குழம்பிப் போனேன். "நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல கண்ணுகளா" என்று சொல்லத் தோன்றியது. ஆனால் "வணிகம் பழகு" என்ற தொடர் தொடங்கி மூன்று பகுதிகள் தான் எழுதினேன். இந்த முறை 200க்கும் மேற்பட்ட நட்பு கோரிக்கை ஒரு நாள் இரவில் வந்து நின்றது. பல நண்பர்கள் ஷேர் செய்து இருந்தனர். வருடம் முழுக்க ஸ்லிப்பர் செல்லாக இருப்பவர்களை நீக்கிக் கொண்டேயிருந்தாலும் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் "வணிகம் பழகு" எங்கங்கு போய்ச் சேர்ந்ததோ இன்று வரையிலும் நட்புக் கோரிக்கைகள் வந்து கொண்டேயிருக்கிறது. அனைவரும் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
***

என் எழுத்து என்பது 25 வயதிற்குள் இருப்பவர்களைச் சென்று சேர வேண்டும் என்றே அதிகம் விரும்புவேன். 40 ப்ளஸ் எல்லாம் இருக்கிற எதார்த்த அவஸ்தைகளிலிருந்து விடுதலை பெறவே ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்பதனை ஆழமாக நம்புகிறேன். இது தான் உண்மையும் கூட. நட்புக்கோரிக்கையில் கதவைத் தட்டும் 25 வயதிற்குக் கீழே உள்ளவர்களைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுண்டு. எழுதாமல் இருந்தாலும் அவர்கள் நிச்சயம் படிக்க வாய்ப்புண்டு. கடந்த சில தினங்களாகக் கல்லூரி மாணவர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.
***

சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமுறையில் சென்னை நிருபர் குழுவில் பணியாற்றும் தம்பியொருவர் அழைத்துப் பேச வேண்டும் என்றார். துடிப்பான இளவயது. ரசாயனம் கலந்த மீன்கள் கண்டுபிடிப்பது எப்படி? என்று நான் பகிர்ந்திருந்ததை அவர் தான் எடுத்து இருந்தார். "வணிகம் பழகு" குறித்துச் சிலாகித்துப் பேசினார். அவர் பேசிய அடுத்த மூன்று நாள் இரவில் நேரம் ஒதுக்கி ஏழெட்டு அத்தியாயங்கள் எளிமையாக எழுதி, புத்தகங்களில் வாசித்ததைக் கோர்த்து, பலவற்றைச் சேர்த்து, ஃபேஸ்புக்கில் எழுதியதை ஒழுங்குபடுத்தி முழுமையாக ஒரு மணி வாசிப்பாகச் சிறிய நூலாக எழுதி முடித்துள்ளேன். 
***

வணிகம், அரசியல் இவையிரண்டும் அறநெறிகளுக்கு அப்பாற்பட்டது. களம் தான் ஆயுதம். அனுபவம் தான் ஆசான். தன்னம்பிக்கை கதைகள் உதவாது. ஊடகங்கள் காட்டும் எந்தப் புத்தகமும் உங்களை வளர்க்காது. ஆளுமை மிக்க நாலைந்து தலைமுறை வணிகம் செய்தவர்களின் சுயசரித புத்தகஙகளைப் படிங்க என்று ஆலோசனை சொல்வதுண்டு. ஆனால் இதில் படம் காட்டவில்லை. அடிப்படை மூலக்கூறுகளை, எதார்த்த உலகி்ன் நேர்மறை எதிர்மறைகளை அலசி காயப்போட்டுள்ளேன். வாசித்துப் பாருங்கள்.



இன்முகங்கள் தேடி வந்தால் எப்படியிருக்கும்?

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த அளவுக்கு 'ஒர்த்' என்பதை நாம் அறியவே சிரமம்...!

கரந்தை ஜெயக்குமார் said...

வணிகம் பழகு
அவசியம் தரவிறக்கம் செய்து வாசிக்கிறேன் ஐயா

G.M Balasubramaniam said...

நிஜமாகவே வணிகம் பழகுகிறீகள்