Monday, May 12, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 2 2025) – 6

 Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May/ - 6


()()()


May 2 2025 மதிய நேரம்

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் முதல் நண்பரை அழைத்தேன். அவர் இரவு பணி முடித்து விட்டு தூங்கிக் கொண்டுருந்தது பிறகு தான் தெரிய வந்தது. மற்றொருவர் கோவிலில் அறநிலையத் துறை சார்பாக அரசு ஊழியராகப் பணிபுரிந்து கொண்டுருந்தவருக்கு அழைத்த போது அவரின் பதிலுரை யோசிக்க வைத்தது. அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். மூன்றாவது பாஜக கட்சியைச் சேர்ந்த நண்பர் கொடுத்த எண்ணுக்கு அழைத்த போது அவரின் எதிர்பார்பு, உரையாடல், பேசிய விதம் என்பது தனியாக ஒரு அத்தியாயம் எழுதும் அளவுக்கு மனதில் உள்ளது. தனியாக விரிவாக எழுதுகிறேன்.







அப்போது நண்பர் துரை விஜயனுக்கு அழைத்து அதன் பிறகு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் நண்பர் தொடர்பு எல்லைக்குள் வந்தார். இப்போது இராமேஸ்வரம் உள்ளே செல்ல வேண்டும். அதற்கு முன்னால் சில விசயங்களைப் பற்றி நாம் பேச வேண்டும்.

நம் வாழ்க்கையை 25 வருடங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.

முதல் 25 வருட வாழ்க்கையில் பள்ளி மற்றும் கல்லூரி பருவம் முடித்து இருப்போம். வேலைக்கு அலைந்து கொண்டு இருக்கலாம் அல்லது அமர்ந்து இருக்கவும் வாய்ப்புண்டு.

பெரும்பாலும் ஆன்மீகம் குறித்துக் கேலியும் கிண்டலுமாகத்தான் அதனை அணுகியிருப்போம். குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் கடவுள் நம்பிக்கை இருந்துருக்கும். அப்போதைய வாழ்க்கையில் நிர்ப்பந்தம் எதுவும் இருந்துருக்க வாய்ப்பு இல்லை. கடன் தொந்தரவு முதல் கட்டாயம் முடித்தே ஆக வேண்டும் என்ற எவ்வித அவசரமும் இல்லாத மேம்போக்கு இளைஞர் வாழ்க்கையைத் தான் நாம் அனைவரும் வாழ்ந்து வந்து இருப்போம்.

கடவுள் நம்பிக்கை என்பது தேவையற்றது. நானும் அப்படித்தான் இருந்தேன். இந்தக் காலகட்டத்தில் தான் வீட்டில் தாத்தா இறந்தார். அவர் என்னுடன் தான் அதிகம் பேசினார். அதீத கோபமும், முரட்டுத்தனமுமாக இறப்பு வரைக்கும் வாழ்ந்தவர். இதே காலகட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்த இராமநாதன் செட்டியல் மேல்நிலைப்பள்ளியில் எங்கள் இயற்பியல் ஆசிரியர் ஏஆர்என் (ஏ.ஆர். நாராயணன் சார்) இராமேஸ்வரம் அழைத்துச் சென்றார். அது கல்விச் சுற்றுலா. அப்போது தான் இப்போது உள்ள பாலத்தின் பீம் பகுதிகளைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். நாராயணன் சார் எங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துத் தோணி போன்ற ஒரு அமைப்பில் கடலுக்கு நடுவே கட்டிக் கொண்டு இருந்த அந்தப் பில்லர் பகுதிக்கு அழைத்துச் சென்று அதன் உருவாக்கம் குறித்து அந்த மாலை நேரத்தில் விவரித்து, இயற்பியல் விதிகள், உப்புக் காற்றை எப்படிச் சமாளித்துத் தூண்கள் நிற்கும் போன்ற பலவற்றைப் பொறுமையாக விவரித்துச் சொன்னது இன்னமும் என் நினைவில் உள்ளது.

அந்தச் சமயத்தில் கோவிலுக்குச் சென்றது குறித்து இப்போது என் நினைவில் எதுவும் இல்லை.

இரண்டாவது 25 ஆண்டுகள் மிக முக்கியமானது.

கல்வி வாழ்க்கையில் இருந்து பொறுப்புகள் தேடி சமூக வாழ்க்கையில் நுழைந்ததும், ஒவ்வொரு ஊராக மாறி இறுதியில் திருப்பூர் வந்து சேர்ந்ததும், என் தொழில் வாழ்க்கை ஆய்த்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பதனையும் புரிந்து மனம் நிலை கொண்டது. இத்துடன் திருமண வாழ்க்கை, குடும்பம், அடுத்தடுத்துக் குழந்தைகள் என்று காட்சிகள் மாறி மாறி நகர்ந்து கொண்டேயிருந்தது. வாழ்க்கை குறித்த பார்வைகள் மாறியது. மனிதர்கள் குறித்த எண்ணங்கள் வேறு விதமாக இருந்தது. ஊரிலிருந்து 300 கீமி தள்ளி வாழ்க்கை வாழ்க்கையில் ஒருவர் கூட அருகே இல்லை என்ற எதார்த்தம் உரைத்தது. எவரும் தேடி வரவில்லை. நானும் தேடிப் போகும் சூழலும் இல்லை. வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்க்கை ஓடிக் கொண்டு இருந்தது. நம்பிக்கை மட்டும் நிரம்பி வழிந்தது.

இதே காலகட்டத்தில் இரண்டாவது சித்தப்பா காசி விஸ்வநாதன் அவர்களின் மரணம் நிகழ்ந்தது. தாத்தாவின் மரணமும், சித்தப்பாவின் மரணமும் என்னை எந்த வகையிலும் பாதிப்படையச் செய்யவில்லை. காரணம் எனக்கு முதலில் அது குறித்துப் புரிதல் இல்லை. அதிகத் தொடர்புகளும் இல்லை. மற்றபடி இரண்டாவது காலகட்டத்தில் ஆன்மீகம் என்ற நிலையில் உச்சத்தில் இருந்தேன். திருவண்ணாமலை என்ற தலம் அறிமுகம் ஆகியிருந்தது. அங்கே அடிக்கடி சென்று வந்து கொண்டு இருந்தேன். ரமண மகிரிஷி ஆசிரமம் செல்வது வாடிக்கையாக இருந்தது.

இளைஞர் வாழ்க்கையில் இருந்து சமூக வாழ்க்கையில் நுழைந்து அடுத்தடுத்துக் கிடைத்த தோல்விகள் அனுபவங்களாக மாறி பாடம் நடத்தத் தொடங்கியது. முயற்சிகள் ஒவ்வொன்றும் தோற்று அதுவே உள்ளூற பல கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தது. மனம் வெறுமையடைந்து எதையோ தேடி அலையத் தொடங்கியது. திருப்பூர் தொடக்க வாழ்க்கையில் மூன்று வேளையும் தறிகெட்டுப் போய்க் கண்டதும் தின்று உடல்நலக் கோளாறு உருவாக அதுவரையிலும் நான் பார்க்காத டைபாய்டு காய்ச்சல் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்க உயிர் ஊசலாட்டம் என்கிற அளவுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது

அப்போது தான் அந்தியூர் பத்ரகாளி அறிமுகம் ஆனது. வேண்டுதல் என்பது மனதிற்குள் உருவானது. மனதிற்குள் உடலில் என்னன்னவோ மாற்றங்கள் நடந்தது. மனதில் மாற்றங்கள் உருவான முதல்படியிது. ஆன்மீகம் என்பது உண்மை. கடவுள் நம்பிக்கை அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்பது இவ்வுலகில் உள்ளது என்பது மனம் நம்பத் தொடங்கியது. தொழிலில் நடந்து கொண்டு இருந்த தோல்விகளும், மாற்றங்களும், இங்கே நான் பார்த்த மனிதர்களின் குணங்களும் ஏராளமான ஆச்சரியங்களை மனதில் உருவாக்கிய காரணத்தால் கர்மவினை என்பது உண்மைதானே? என்று மனம் யோசிக்கத் தொடங்கியது.

முட்டாள், குடிகாரன், பெண்பித்தன் தொடங்கிய தொழில் அடுத்தடுத்து நல்லவிதமாக வளர்ந்து கொண்டே செல்ல நல்லவர்களின் வாழ்க்கை என்பது முட்டுச் சந்தில் கொண்டு போய் நிற்க ….. இது போன்று பல நிகழ்வுகளை நிஜவாழ்க்கையில் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு வாழ்க்கை பாடம் எடுக்கத் தொடங்கியது. திருமணத்திற்கு முன் மூன்று வேளையும் அசைவ உணவை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த நான் நிஜமான நல்ல தரமான பிராமணர் போல வாழத் தொடங்கினேன். சைவத்திற்கு மாறியதோடு வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றியமைத்தேன். குடிகாரர்கள், பெண்பித்தர்கள் மத்தியில் வேறொரு மனிதராக வாழ்ந்தேன். ஆன்மீகம் என்பதனை நிஜமும் நிழலுமாக நினைத்து அதனை அப்படியே உள்வாங்கி வாழ்ந்தேன். மூன்று வருடங்கள் இப்படித்தான் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன். நான்காவது ஆண்டில் திருமண வாழ்க்கை அறிமுகம் ஆனது. மாமனார் என்னைத் தேடி வந்தார். என் கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். அந்தச் சமயத்தில் தான் அப்பா இறந்து இருந்தார். மாமாவிடம் ஒரு வருடம் கழித்துத் திருணமம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.







தாத்தா, சித்தப்பா, அப்பா மூவரின் மரணத்தின் போதும் இராமேஸ்வரம் செல்லவில்லை. நேரம் இல்லை. சூழல் அமையவில்லை. திருப்பூர் வாழ்க்கை அப்படியே மென்று துப்பிக் கொண்டு இருந்தது. அப்பா இறந்த போது நான் இருந்த நிறுவனத்தின் முதலாளிக்கு தான் தகவல் வந்து சேர்ந்து இருந்தது. அவர் இந்தத் தகவலைச் சொல்வதற்கு முன்பு நான் அப்போது செய்து கொண்டு வேலை அனைத்தும் முடிந்து விட்டதா? என்று என்னிடம் கேட்டு விட்டு மற்றவர்களையும் விட்டுச் சோதித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மூன்றாவது 25 ஆண்டுகளின் தொடக்கத்திலேயே கடைசிச் சித்தப்பா அண்ணாமலை இறந்தார். அவர் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன் உடனே திருப்பூர் வந்து விட்டேன். ஏழு வருடங்களுக்கு முன் இரண்டாவது சகோதரி இறந்த போதும் அவசரம் அவசரமாகக் கலந்து கொண்டு குடும்பத்துடன் உடனே திருப்பூர் திரும்பி வர வேண்டியதாக இருந்தது. கருமாதி, திதி கொடுத்தல், தர்ப்பணம், நீத்தார் கடமைகளைச் செய்தல் போன்ற எதையும் நான் திருப்பூர் வாழ்க்கை காரணமாகச் செய்ததே இல்லை. அம்மா இறந்ததும் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தாக வேண்டிய அவசியம் உருவானது.

அப்போது இராமேஸ்வரம் அனைவரும் ஒன்றாகச் சென்று கடற்கரையில் அமர்ந்து திதி கொடுத்தோம். இது தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த நிகழ்வு.

இராமேஸ்வரம் என்பது வட மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தெய்வீக தலம். நான் இராமேஸ்வரத்தில் சந்தித்த நண்பர் கோவிலுக்குள் சென்றே ஏழெட்டு வருடங்கள் ஆகி விட்டது என்றார். அதே போல இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ளவர்களும் தோன்றும் போது குறிப்பாகக் கட்டாயத்தின் அடிப்படையில் தான் இந்தக் கோவிலுக்கு வருகின்றார்கள். என் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்துள்ளது.

என் மேல் தனிப்பட்ட பிரியம் கொண்டு, என் தொழில் வாழ்க்கையில் எல்லாவிதங்களிலும் உதவிய என் சகோதரி இறப்பு என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய வருத்தத்தை உருவாக்கியது. அவரின் முதல் ஆண்டு முடியும் தருவாயில் மனைவி மகளுடன் இராமேஸ்வரம் சென்று கடற்கரையில் அமர்ந்து திதி கொடுத்தேன். பத்து வருடங்களுக்கு முன் யோகா ஆசான் திரு. கிருஷ்ணன் அவர்களை அழைத்துக் கொண்டு இராமேஸ்வரம் வர வேண்டிய வேலையிருந்தது.

அதாவது இதுவரை வாழ்ந்த மொத்த வாழ்நாளில் ஐந்தாவது முறையாக இராமேஸ்வரம் வந்துள்ளேன். குறிப்பாக நிஜமான ஆன்மீகம் என்பதனை உணர்ந்தவனாக வந்துள்ளேன். எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி, கோரிக்கை மனு எதுவும் இல்லாமல் நான் வளரக்காரணமாக இருந்தவர்களுக்கு மரியாதை செய்ய வந்துள்ளேன்.இறந்தவர்களுக்கு இந்து மதம் சொல்லும் நீத்தார் கடன் செய்ய வந்துள்ளேன். இந்து மத நம்பிக்கைகளை உணர்ந்தவனாக வந்துள்ளேன். நம் மதச் சடங்கு சம்பிரதாயங்களின் மேல் உண்மையான நம்பிக்கை கொண்டு இறந்தவர்களுக்கு மரியாதை செல்லுத்த வந்துள்ளேன். நீத்தார் கடன் என்பது ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதும், உணர்ந்து உள்வாங்கி அதனை முறைப்படி நிதானமாகச் சரியான நபர்களை வைத்துச் செய்ய வேண்டும் என்பதனை உணர்த்துவதற்காகவே இந்தத் தொடரை எழுதி வருகின்றேன்.

மனிதப் பிறவி என்பது பாவங்களின் கூட்டுக் கலவை. பாவம் செய்த காரணத்தினால் மட்டுமே மனிதனாகப் பிறக்கின்றான். அவனால் பாவம் செய்வதை நிறுத்த முடியாது. வேறு வழியும் இல்லை. தண்டனைகளில் இருந்து தப்ப வழியில்லை. மனம் ஆறுதல் அடைய வேண்டும் என்பதற்காகவும், திருந்த வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டும் தான் கடவுள் நம்பிக்கைகளும், இது போன்ற நீத்தார் கடன்களும் உருவாக்கப்பட்டதாக நான் நினைத்துக் கொள்வதுண்டு.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பேயிருந்து காசியும் இராமேஸ்வரமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளே ஓடிக் கொண்டு இருந்தது. எப்படி எங்கே செல்வது என்ற எண்ணம் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். அது அம்மா வழியில் நான் மட்டுமே இராமேஸ்வரம் செல்வதாக அமையும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

இறந்து பிறகும் அம்மாவின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது என்பதனை புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் உருவாக்கிய விழாவும் வழங்கிய பரிசுத் தொகையும் உணர்த்தியது.

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025) – 4

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு உத்தேசமாகக் கோவில் வடக்குத் தெரு சென்று விட்டு என்னை அழையுங்கள் என்று நண்பரின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ தேடி வெளியே வந்தேன். அங்கேயிருந்து இராமேஸ்வரம் என்று ஆன்மீக தலத்தின் மற்றொரு முகம் தெரியத் தொடங்கியது.

பயணம் தொடரும்...

No comments: