Tuesday, May 06, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025)

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May/  - 1

 ()()()

அம்மா 2024 மே மாதம் 5 ஆம் தேதி அதிகாலை காலமானார். 12 மாதங்கள் முழுமையடைந்த நிலையில் முதலாமாண்டு நீத்தார் கடனை” நான் தனியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன். குடும்பத்தில் ஏராளமான மாற்றங்கள் மற்றும் குழப்பங்கள்.  விலகியிருப்பதால் பலன் அதிகம். விரும்பத் தகாதவற்றை மனதில் இருத்திக் கொள்வதில்லை. “கற்றதும் பெற்றது”மாக யோசித்துக் கொள்வதுண்டு. ஏராளமானபாடங்கள்” கற்றுக் கொண்டேன். அப்பா ஆகஸ்ட் மாதம் 2001 அன்று காலமானார். 23 வருடங்கள் கழித்துக் கணவரைப் பார்க்க அம்மா சென்றுள்ளார்.

அப்பா இறந்த நாள் முதல் அம்மா மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார். எந்தக் குறையுமில்லை. ஆனால் கடைசி ஒரு வருடத்தில் அம்மா தன்னையும் வதைத்துக் கொண்டு மற்றவர்களைச் சங்கடப்படுத்திக் கஷ்டப்பட்டுத் தான் இறந்தார். மன நிலை மாறியிருந்தது. பேச்சு உளறலானது. அப்பா சென்னையில் இருந்து வந்த போது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திடீர் மாரடைப்புக் காரணமாக அதிகாலையில் இறந்தார். அம்மாவும் இதே அதிகாலையில் திருச்சியில் இருந்த சகோதரன் வீட்டில் இருந்து இறந்தார்.



அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருச்சி என்பது ஏதோவொரு வகையில் தொடர்பு இருக்குமோ? என்று யோசித்துக் கொண்டேன். இருவரும் பிரம்ம முகூர்த்ததில் தான் இறந்தனர். அப்பா எவருக்கும் தொந்தரவு கொடுக்காமல் எப்படி இறந்தார்? என்பதனை அறிவதற்குள் நொடிப் பொழுதில் இறந்து விட்டார். ஆனால் அம்மா தன்னிலை மறந்தார். அவரே ஒரு கட்டத்தில் சாவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பேத்தியின் மகளைக் கண்டவர். ஆனால் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்பு முன்னால் இருப்பவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு மனநிலை மாறியிருந்ததைக் கண்டு அனைவருக்கும் வருத்தமாகவே இருந்தது. என் திருப்பூர் வாழ்க்கையில் ஒரு முறை அம்மாவை அழைத்து வந்து இருந்தேன். குழந்தைகள் பிறந்த போது வந்து இருந்தார். அவசரமாக சென்று விட்டார். மற்றொரு முறை வந்தார். ஒரு மாதம் இருப்பதாகச் சொன்னார். இந்த ஊர், மொழி எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. பிடிவாதமாக கொண்டு போய் விடு என்று இந்த முறையும் சென்று விட்டார்.  குழந்தைகள் அப்போது பாலர் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார்கள். இதில் உள்ள அம்மாவின் புகைப்படம் அப்போது எடுத்தது தான்.

)()()(

இறந்தவர்களுக்குத் திதி கொடுப்பதும், தர்ப்பணம் செய்வததையும் ஒரு சடங்காகவே தற்போது அனைவரும் செய்து வருகின்றனர்எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு. வாழும் போது சரியாகக் கவனிக்காதவர் இறந்தபிறகு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது சரியா? என்று யோசித்துக் கொள்வதுண்டு.

இன்று அம்மாவாசை அன்று ஒவ்வொரு கோவில்களும் நிரம்பி வழிகின்றது. அய்யர் முன்னால் பெரிய வரிசை நின்று கொண்டே இருக்கின்றது. அய்யரும் மிகவும் சுருக்கமாக மந்திரம் சொல்லி வருகின்றவரை அவர்கள் விரும்பும் நேரத்திற்கு ஏற்ப திருப்தி செய்து அனுப்பி விடுகின்றார். அவருக்கும் வேறு வழி தெரியவில்லை. அவரைக் குற்றம் சொல்ல வாய்ப்பு இல்லை.

சடங்கு, சம்பிரதாயம் என்றாலும் நம் மனதோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அது இறை நம்பிக்கையாக இருந்தாலும் மற்ற வழிபாட்டு முறைகளாக இருந்தால் அடுத்தவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் எப்போதும் செய்வதே இல்லை.

இதன் அடிப்படையில் அம்மா இறந்த முதல் வருடம் அன்று இராமேஸ்வரம் சென்று அம்மாவுக்கு மட்டுமல்ல குடும்பத்தில் இறந்த அனைவருக்கும் மொத்தமாக நீத்தார் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருந்தேன். முழுமையாக நேரம் ஒதுக்கி, அர்ப்பணிப்பு உணர்வோடு, ஈடுபாட்டுடன் இந்தக் கடமையை இந்த முறையாகச் செய்ய வேண்டும் என்று காத்திருந்தேன்.

()()()

ஏப்ரல் 17 2025 அன்று சென்னை சுவாசம் பதிப்பகத்தில் இருந்து நண்பர் ஹரன் பிரசன்னா அழைத்து இருந்தார். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் உங்கள் அழைப்பார்கள் என்று சொல்லியிருந்தார். முழுமையான விபரங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அலைபேசி எண் வாங்கிச் சேமித்துக் கொண்டேன்.

அடுத்த அரை மணி நேரத்தில் எதார்த்தமாக என் யாகூ மின் அஞ்சலை பார்வையிட்ட போது புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பாக அதன் தலைவர் திரு. தங்கம் மூர்த்தி என்பவர் உங்கள் டாலர் நகரம் 2.0 என்ற புத்தகம் விருதுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். உங்கள் ஒப்புதல் தேவை. பதில் அளிக்கவும்” என்று கடந்த 14 ஏப்ரல் அன்று எழுதியிருந்ததை அப்போது தான் பார்த்தேன்.

உடனே அவர்களுக்கு என் அலைபேசி எண் எழுதி அனுப்பிச் சங்கத்தின் தலைவர் எண் பார்த்து அவரின் வாட்ஸ் அப் வழியாக என் தனிப்பட்ட விபரங்களை அவர் கேட்டபடி அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு திரு. தங்கம் மூர்த்தி என் அலைபேசி எண்ணுக்கு அழைத்தார். பேசினார். முழுமையான விபரங்களைத் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாகக் குழப்பத்தில் இருந்தோம். உங்கள் எண் கிடைப்பதில் தாமதம் ஆகி விட்டது. பதிப்பகத்தில் வாங்க முடியவில்லை” என்றார்.

அப்போது அவர் காரைக்குடி அருகே உள்ள ஊருக்குச் சென்று விட்டு மகிழ்வுந்தில் புதுக்கோட்டை வந்து கொண்டு இருந்தார். இருவரும் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேச வாய்ப்பு அமைந்தது. என் டாலர் நகரம் 2.0 புத்தகத்தை மூன்று மாதங்களுக்கு முன் சுவாசம் பதிப்பகம் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் அறிவித்த போட்டிக்கு அனுப்பி வைத்ததைப் பற்றிச் சொன்னார். கட்டுரை பிரிவில் எப்படிப் படிப்படியாகக் குறைந்து இறுதியாக டாலர் நகரம் புத்தகம் விருதுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளைப் படிப்பயாக விவரித்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்தப் போட்டிக்கு பத்துப் பிரிவுகள் வைத்து இருந்ததையும் மொத்தம் அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து 5000 தலைப்புகளில் புத்தகம் வந்து சேர்ந்ததையும் தெரிவித்தார். கட்டுரை பிரிவில் வந்த புத்தகங்கள் 50 இருந்ததையும் அது படிப்படியாக ஒரு குழுவினர் வசம் ஒப்படைத்த போது இறுதியாகப் பத்து புத்தகங்களாக மாறியது. மற்றொரு குழுவிடம் இந்தப் பத்துப் புத்தகங்களைக் கொடுத்த போது அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது ஐந்து. கடைசியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் தான் டாலர் நகரம் 2.0. அதாவது இறுதியாக மூன்று பேர்கள் இதில் நடுவர்களாக இருந்தார்.

ஒருவருக்கு ஒருவர் முகம் தெரியாது.

ஆச்சரியம் என்னவெனில் மூவரும் டாலர் நகரம் 2.0 புத்தகத்தையே தலைவர் தங்கம் மூர்த்தி அவர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். தலைவருக்கு ஆச்சரியம். அதன் பிறகு நடுவரில் ஒருவராகச் செயல்பட்ட புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு. விஸ்வநாதன் அவர்கள் இந்தப் புத்தகம் உருவாக்கிய தாக்கத்தைப் பற்றி முழுமையாகத் தலைவரிடம் விவரித்து உள்ளார். அவர் சொன்ன முக்கியமான விசயங்கள் என்னவெனில் மற்ற புத்தகங்கள் போல வேறு எதில் இருந்து நகல் எடுக்கவில்லை. குறிப்பாக வெட்டி ஒட்டவில்லை. எல்லாமே புது விசயங்கள். ஒரு நகர் குறித்து, நிர்வாகம் குறித்து, தொழிற்சாலை, தொழிலாளர்கள், முதலாளிகள் என்று பல முகமாகக் காட்சியளிப்பதோடு இறுதியில் தன்னம்பிக்கை மற்றும் தன் முனைப்பு நூலாகவும் உள்ளது என்று பரிந்துரைத்தேன் என்றார்.

இது அம்மாவின் ஆசிர்வாதம் என்று உள்மனம் சொல்லியது.

புதுக்கோட்டையில் மே 1 2025 மாலை நிகழ்ச்சி என்று சொல்லியிருந்தார்கள்.

புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்தபடியே இராமேஸ்வரம் சென்று விட வேண்டும் என்று நினைத்து அதன் படி பயணத்திற்கான வேலையை மூன்று வாரத்திற்கு முன்பு இருந்தே செய்யத் தொடங்கினேன். 

காரணம் காசி மற்றும் இராமேஸ்வரம் என்ற இந்த இரண்டு ஊர்களில்  குறைந்தபட்சம் நாலைந்து நாட்களாவது அங்கே இருக்க வேண்டும். அவசரம் கூடாது. மற்ற கடமைகளைப் பற்றி அங்கிருந்தபடியே யோசிக்கக்கூடாது. குறிப்பாக குடும்பத்தைப் பற்றி நினைக்கக்கூடாது என்பது போன்ற பல விருப்பங்கள் என் மனதில் இருந்தது.  இதற்கு முன்னால் இராமேஸ்வரம் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது சென்றது. அதன் பிறகு இரண்டு முறை சென்று உள்ளேன்.  



எந்த முறையும் நின்று நிதானமாக ரசித்தது இல்லை. எப்போதும் போல அவசரம்... அவசரம் என்கிற நிலையில் தான் இருந்த காரணத்தால் இந்த பயணம் என்பது மிகவும் நிதானமாக ஒவ்வொரு தெருக்களையும் அளந்து வரவேண்டும். ரசித்து ருசித்து நிஜமான ஆன்மீகத்தை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இருந்தேன். நிஜமான ஆன்மீகம் என்பது நமக்கு தனிப்பட்ட முறையில் உடம்பில், உணர்வில் அதிர்வுகளை உருவாக்கும். மாற்றங்களை உணர வேண்டும். 

கோவிலுக்குள் நின்று வரவு செலவு ஒப்படைக்கக்கூடாது. எனக்கு ஏன் பத்து கோடி தரவில்லை என்று பிச்சைக்காரனாக இருக்கக்கூடாது. மனம் லயிக்க வேண்டும். உண்மையான உணர்வுகளை உள்வாங்க வேண்டும். ஞானம் என்பதனை சிறிதளவாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.  பதட்டப்படாமல் வேடிக்கை பார்க்கும் மனநிலையில் பிச்சைக்காரன் போல என் பொறுப்பில் இங்கே எதுவுமில்லை என்ற நிலையில் இருக்க வேண்டும்.

இப்படித்தான் அங்கே இருந்தேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு இராமேஸ்வரத்தில் அமைந்தது என்பது இறையருள் அல்லது அம்மாவின் ஆசிர்வாதம் என்றே கருதுகினறேன். அதனை வரப்போகும் அத்தியாங்களில் உங்களால் உணர முடியும்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -- அறமனச் செம்மல் சீனு சின்னப்பா -- இலக்கிய விருதுகள் 2025


சீனு சின்னப்பா இலக்கிய விருது - Dollar Nagaram- 2.0

கல்லூரி படித்துக் கொண்டு இருக்கும் மகள்களின் தேர்வுகள் காரணமாக நான் மட்டும் புதுக்கோட்டை மற்றும் இராமேஸ்வரம் செல்ல வேண்டிய சூழல் உருவானது.

பயணம் தொடரும்....