Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May/ - 7
()()()
பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளாக இருந்தாலும் சரி, இந்தியா போன்ற வளர்ந்து கொண்டு இருக்கும் நாடுகளாக இருந்தாலும் சரி, ஆன்மீக தலம் மற்றும் சுற்றுலா தலம் என்ற இந்த இரண்டு இடங்களிலும் உங்களிடமிருந்து பணம் பறிக்க எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் அங்கேயிருப்பவர்கள் கடைபிடிப்பார்கள் என்பதனை நீங்கள் முதலில் புரிந்து இருக்க வேண்டும். விலைகள் இரண்டு மடங்கு மூன்று மடங்காகவே இருக்கும். இதனை மனதளவில் உணர்ந்து தயார் படுத்திக் கொண்டு தான் அங்கே செல்ல வேண்டும்.
மற்றொன்றை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் இருப்பதால் நாம் செல்லக்கூடிய இடங்களைப் பற்றிக் காட்சி வடிவத்தில், எழுத்து வடிவங்களில் இருக்கும் தகவல்களை அப்படியே முழுமையாக நம்பாதீர்கள். எல்லாமே மாறுதலுக்குட்பட்டது என்பதனை மனதளவில் தயார் படுத்திக் கொண்டு அங்கே செல்லவும். அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அங்கே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டால் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது.
இராமேஸ்வரம் குறித்து நான் பார்த்த யூ டியூப் காணொளியில் தென்னக ரயில்வே ரயில்வே நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு அறைகள் எளிய விலையில் கட்டி விட்டுள்ளது. நம் பயணச் சீட்டு அடிப்படையில் அந்தச் சமயத்தில் முன்பதிவு செய்து கொண்டால் போதுமானது என்பதாகக் கொண்டாடி இருந்தார்கள். பொய். இப்போது தான் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. பெரிய அளவில் மூன்று மாடிகளாகக் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அங்கே இருந்தவரிடம் கேட்டேன். குளிர்சாதன வசதிகளுடன் 250 அறைகள் வரக்கூடும் என்றார்.
இராமேஸ்வரம் ரயில் நிலையம் என்பது சமீப காலங்களில் தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதனை பார்க்கும் போதே புரிந்து கொண்டேன். ஓப்பீட்டளவில் ரயில் நிலையம் மிகச் சிறியதாகவே இருந்தது. ஒவ்வொரு ரயிலும் வட இந்தியர்களின் வருகை அடிப்படையில் தான் இயக்கப்படுகின்றதோ என்பது போல எனக்குத் தோன்றியது. எளிய விலை. ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்குப் பலவிதமான நேரங்களில் தொடர்பு இல்லாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தின் அனைத்து ஊர்களையும் இணைக்கின்றது.
பயணித்து வரும் போதே இராமநாதபுரம் ரயில் நிலையமும், பாம்பன் நிலையத்தையும் கடந்து வரும் போது எனக்குப் பல நினைவுகள் வந்து போனது. ஈழம் சார்ந்து நான் வாசித்த ஏராளமான புத்தகங்கள் மூலம் நான் புரிந்து கொண்டது என்னவெனில் 200 வருடங்களுக்கு முன் இராமேஸ்வரம், தலைமன்னார், தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குச் சரக்கு கப்பலும், பயணிகள் கப்பலும் சென்று கொண்டு இருந்தது. இலங்கையில் வாழ்ந்த சிங்களர்களை வேலை வாங்க முடியாத காரணத்தால் ஆங்கிலேயர்கள் உருவாக்க நினைத்த தேயிலை மற்றும் காபி பயிரிட தமிழர்கள் தேவைப்பட்டார்கள். அங்கே அப்போது வாழ்ந்து கொண்டு இருந்த தமிழர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்கள் மூலம் இடம் பெயர வைத்தனர். ஆசை காட்டினர். கட்டாயப்படுத்தினர். இலங்கைக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழர்களை ஆடு மாடு மேய்ப்பது போல எண் இலக்கமிட்டுப் பாம்பனில் தங்க வைத்து தொடர்ந்து அழைத்துச் சென்று கொண்டே இருந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுபவர்களைப் பாம்பனில் தான் தங்க வைப்பார்கள். அடுத்தக் கப்பல் வரும் வரை அங்கே தான் இருக்க வேண்டும்.
அப்போது ஓடிக் கொண்டு இருந்த கப்பலில் பட்டி மாடுகளை அடைத்துக் கொண்டு செல்வது போலச் சென்ற கதை என் நினைவுக்கு வந்து போனது.
இராமேஸ்வரம் என்ற கோவில் வரலாறு 1000 வருட பழமையானது. சோழப் பேரரசு முதல் மாறி மாறி எத்தனையோ ராஜாக்களை இராமநாத சுவாமி பார்த்தபடியே அருள்பாலித்துக் கொண்டு இருந்தார். அதே போல ஒரு காலத்தில் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை என்பது நடந்தே சென்று விடலாம் என்கிற அளவுக்கு மணல் திட்டுகள் அதிகம் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றது. என் ஈழம் வந்தவர்களும் வென்றவர்களின் புத்தகத்தில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.
இன்றைய சூழலில் இராமேஸ்வரம் நகராட்சியாக உள்ளது. திமுகச் சார்பாக ஒரு இஸ்லாமியர் தான் தலைவராக இருக்கின்றார். சுமாராகப் பத்தாயிரம் குடும்பங்கள் இருக்கலாம் என்று நினைக்கின்றேன். ஐம்பது முதல் அறுபது கிலோ மீட்டர் சதுர பரப்புக்குள் இந்தக் கோவில் ஒன்று மட்டுமே அனைவருக்கும் வாழ்வாதாரத்தை அளித்துக் கொண்டு இருக்கின்றது என்பது தான் எதார்த்தம். அங்கே இருப்பவர்கள் உண்ணும் ஒவ்வொரு சோற்றிலும் இராமநாத சுவாமி கொடுத்த கொடை என்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது. சுற்றுலா போல வரக்கூடியவர்களும், கோவிலுக்கு வந்து செல்லக்கூடியவர்களுக்கு உதவக்கூடியவர்களாகவும், ஒன்றினைந்து செயல்படக்கூடியவர்களாகவும் இருந்து பணத்திற்காக அகோரபசி எடுத்தும் அலையும் மிருகமாகத்தான் ஒவ்வொரு மனிதர்களும் இருக்கின்றார்கள் என்பதனை அங்கே இருந்த மூன்று நாட்களும் உணர்ந்து கொண்டேன்.
ரயில் நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் வந்து செல்லும் என்றார்கள். ஆட்டோ தான் எல்லாவற்றும் நாம் பயன்படுத்த வேண்டும். ஷேரிங் ஆட்டோ என்பது அங்கே எந்த இடத்திலும் பார்க்க முடியாது. பைக் மூலம் பயணச் சவாரி வாய்ப்பு இல்லை. மற்ற தனியார் நிறுவனங்கள் போட்டி போட முடியாது. தனி நபர்கள் ஆதிக்கம் தான் கொடி கட்டி பறக்கின்றது. ஐந்து பேர்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒவ்வொருவரிடம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு நூறு ரூபாய் என்பதனை தயங்காமல் கேட்டு வாங்கின்றார்கள். ஒரு சவாரி என்பது ஆட்டோகாரருக்கும் ஐநூறு ரூபாய். விசேட தினங்களில் அவரின் வருமானத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தினசரி வருமானம் ரூபாய் இரண்டாயிரம் என்பது அங்கே இருப்பவர்களின் இயல்பான தொகை. முக்கிய விசேட தினங்களில் பத்தாயிரத்தில் தொடங்கிப் பல லட்சம் வரைக்கும் பார்க்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். அதாவது ஒரு நாள் வருமானம். ஒரு மாதத்தில் மூன்று முக்கிய விசேட தினங்கள் வந்தால் அங்கே இருப்பவர்களுக்கு ஜாக்பாட் தான்.
கோவிலுக்கு வெளியே கிழக்கு, வடக்கு,தெற்கு, மேற்கு என்பதாக நான்கு தெருக்களுக்குப் பெயர் சூட்டி இருக்கின்றார்கள். நான்கு தெருக்களை நம்பித்தான் அனைத்து இயக்கங்களும் நடக்கின்றது. தங்கும் விடுதி முதல் உணவகங்கள் வரை.
தங்கும் விடுதியில் ஒருவர் மட்டும் சென்றால் உள்ளே நுழையக்கூட விடுவதில்லை. கட்டாயம் இருவர் இருந்தே ஆக வேண்டும். காரணம் காவல்துறை சட்டதிட்டம் என்று சொல்லி அதற்குப் பின்னால் ஏற்கனவே நடந்த துர் மரணங்கள் பற்றிக் கதை கதையாகச் சொல்கின்றார்கள். நான் மட்டும் சென்ற காரணத்தால் இதுவொரு பெரிய சவாலாக இருந்தது. நண்பர் அழைத்துச் சொன்னதும் அது சரியானது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் குறைவாக எங்கேயும் விடுதிகள் இல்லை. அங்கே அடிக்கின்ற வெயிலுக்குக் குளிர்சாதன வசதிகள் கட்டாயம் வேண்டும் என்கிற நிலையில் தான் விடுதிகள் வசதிகளை உருவாக்கி காசு பார்க்கின்றார்கள். இரண்டு சென்ட் இடம் என்றாலும் அதிலும் காற்று கூடப் புக முடியாத அளவுக்கு வினோத வடிவங்களில் விடுதிகள் கட்டி இருப்பதைப் பார்த்து அசந்து போய் விட்டேன்.
கோவிலுக்கு என்ன காரணத்திற்காக வந்துள்ளோம் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு மிகவும் பிரயாசைப்பட்டு நண்பர் உதவியோடு அறுநூறு ரூபாய்க்கு ஒரு அறை கிடைத்தது. இது சாதாரண நாட்களில் வாய்ப்பே இல்லை. நான் சென்ற சமயம் கூட்டம் இல்லை. குளிர்சாதன வசதிகள் இல்லை. ஆடம்பர வசதிகள் இல்லை. தூங்குவதற்கு ஒரு இடம். அவ்வளவு தான். அதன் அடிப்படையில் விடுதிக்குள் நுழைந்தேன். காலை எழுந்தவுடன் அறையில் ஒரு குளியல். கடலில் ஒரு குளியல். மாலையில் அறையில் ஒரு குளியல். இது தவிரத் தினமும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வது. கூட்டம் இல்லை என்பதால் எல்லாமே எளிதாக இருந்தது. ஐம்பது, நூறு, இருநூறு என்ற தரிசன கட்டணங்கள் வைத்துள்ளார்கள். இது தவிர அதிகாலை தரிசனம் என்று சிறப்பு (ஸ்படிக சிவலிங்கம்) பார்வைக்குத் தனிக் கட்டணம்.
இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 2 2025) – 6
அங்கிருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு அதிர்ஷ்டக்காற்று என் பக்கம் வீசிக் கொண்டேயிருந்தது.
No comments:
Post a Comment