சென்ற பதிவில் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கியதுடன் நிறுத்தியிருந்தேன். இப்போது நான் இராமேஸ்வரம் உள்ளே நுழைய வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் புதுக்கோட்டையில் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உள்ளது. அதையும் முடித்து விட்டால் முழுமையாக என் கடமை முடிந்து விடும் என்று கருதுகின்றேன்.
நான் திருப்பூர் வந்ததும் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு தங்கம் மூரத்தி அவர்கள் உங்கள் எண்ணங்கள், விழா குறித்த உங்கள் பார்வை, குறைகள், நிறைகள் என்று எதுவாக இருந்தாலும் கடிதம் போல எழுதி அனுப்புங்கள் என்று வாட்ஸ் அப் வாயிலாக பத்து படைப்பாளிக்கும் கோரிக்கை விட்டுருந்தார்கள். அதற்காக என் கடிதத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். இதை முழுமையாக நீங்கள் படித்து விட்டால் இராமேஸ்வரம் உள்ளே சென்று விடலாம். நன்றி.
()()()
இராமேஸ்வரம் பயணக் குறிப்புகள் / 5
(Rameswaram - Pudukkottai Tamil Sangam - Travel story Experience - 5)
()()()
விருதுகள் என்பது விலைக்கல்ல என்று மாற்றியுள்ள தங்க மகன்.
இன்றைய நிலையில் விருதுகள் அனைத்தும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப் படுவதில்லை. பணம் மற்றும் அதிகார பலத்தினால் வாங்கப் படுகின்றன. ஆஸ்கார் முதல் மத்திய, மாநில அரசின் விருதுகள் வரைக்கும் இப்படித்தான் உள்ளது.
பணம் இல்லாதவர்களும், பதவிகளில் இருப்பவர்களை அறியாதவர்களும், தகுதியுள்ள எளிய மனிதர்கள் அனைவரும் காலம் காலமாக அங்கீகரிக்கப்படாமல் காலத்தில் கரைந்து போய் விடுகின்றார்கள். வாழும் போது கண்டு கொள்ளாமல் இருந்தவர்களின் படைப்புகள் அவர்கள் இறந்த பின்பே கொண்டாடப் படுகின்றது. படைப்புகளுடன் மட்டுமே வாழ்ந்தவர்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு, வறுமையுடன் உழன்றவர்களுக்கு காலம் முடிந்து விருதுகளும் அவர்களின் நினைவுகளுமே போற்றப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி மிக அருமை.
நான் வாழும் ஊரில் உள்ள, அருகில் உள்ள மாவட்டங்களில் விருது வழங்கும் விழா என்பது “உனக்கு நான் இதைச் செய்துள்ளேன்”. “எனக்கு நீ இதைச் செய்” என்ற பண்டமாற்று முறையாகவே இருப்பதை நண்பர்கள் வாயிலாக அறிந்து வைத்துள்ளேன். ஆனால் “புதுக்கோட்டை தமிழ் சங்கம் விழா” என்பதனை விழா முடிந்து வரும் போது நான் நினைத்து கொண்டது “தமிழ் தங்கம் விழா” என்றே மனதில் இருத்திக் கொண்டேன். காரணம் தலைவர் பெயர் தங்கம் மூர்த்தி.
ஒரு திரைப்படம் முழுமை அடைய அதில் 24 துறைகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆனால் வெற்றி தோல்வி என்பது இயக்குநர் தலையில் மட்டுமே விழும். தோல்விக்கு பல தகப்பன்மார்கள் உண்டு. ஆனால் வெற்றிக்கு ஒரு ஒரே தலைவன் தான். அதன் பெயரும் தங்கம் என்று அமைந்திருப்பது இயற்கை உருவாக்கிய வரம் என்றே கருதுகின்றேன்.
ஒரு தலைவன் எப்படி செயல்படுவான்? என்பதனை அவரின் பின்னால் அணிவகுத்து நிற்கும் ஒவ்வொருவரையும் என்னால் யூகிக்க முடியும். அவற்றை இந்த விழாவில் பார்த்தேன். எங்கள் ஏற்றுமதி துறை சார்ந்த நிர்வாகத்தில் நுணுக்கம் என்றொரு வார்த்தை உண்டு. இதற்குப் பின்னால், அதற்குப் பின்னால் என்று தூங்க முடியாத இரவுகளாக இருக்கும். அதற்குப் பின்னால் திட்டம் 1 திட்டம் 2 திட்டம் 3 என்று மாறிக் கொண்டேயிருக்கும்.
இவை தான் ஒரு நிர்வாகத்தின் சூட்சம விதிகள். ஆனால் இந்த விழாவில் திட்டம் ஒன்று மட்டுமே வைத்திருந்தார்கள். திகட்டிப் போகும் அளவிற்கு கவனித்தார்கள். திரும்பவும் அடுத்த வருடமும் நம் புத்தகத்தை தேர்ந்தெடுப்பார்களா? என்று ஏங்க வைத்தார்கள். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் என் டாலர் நகரம் 2.0 புத்தகத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்காக இந்த வார்த்தைகளை எழுதவில்லை.
என் மனம் உணர்ந்ததால் இதனை இங்கே எழுதுகிறேன்.
இது ஒரு திரைப்படத்தில் இடைவேளை வரை வரக்கூடிய இயல்பான காட்சியாகும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு பார்வையாளர்களை கட்டிப்போட இருக்கையின் நுணியில் அமர்ந்து இருக்கும் வண்ணம் இறுதிக்கட்டம் வரைக்கும் நிலைத்து நிற்கும் வரைக்கும் செய்யப்பட வேண்டிய வேலைகளைத்தான் மே 1 2025 விழாவில் நான் பார்த்தேன்.
No comments:
Post a Comment