Friday, May 09, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025) – 4

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May/ - 4

()()() 

2014 ஜனவரியில் டாலர் நகரம் புத்தகம் அறிமுக விழா திருப்பூரில் நடந்தது. எழுத்தாளர் ஞாநி அவர்கள் கடைசி வரையிலும் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்ற உறுதியில்லாத நிலையில் விழா ஏற்பாடுகளைக் கவனித்தேன். ஆனால் திருச்சியில் இருந்து ஞாநி வந்தார். ஏழெட்டு முக்கியப் பிரபல்யங்களுடன் மறக்க முடியாத விழாவாக நடந்தது. ஞாநி அன்று என்னிடம் கேட்ட கேள்விவிழாவிற்கு ஆட்கள் வருவார்களா”? என்று சந்தேகமாய்க் கேட்டார். காரணம் புத்தக விழா என்றால் நம்மவர்கள் எப்படித் தவிர்ப்பார்கள் என்று விளக்கினார்.

ஆனால் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் தொடக்கத்தில் மண்டபத்தில் கால் பங்கு இருந்தது. அதன் பிறகு மீதியும் இறுதியில் முழுமையாக அனைத்து இருக்கையிலும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. புரோட்டகால் மரியாதை உள்ள நீதியரசர் பார்த்துப் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் வந்து கலந்து கொண்டனர். முக்கியமாக ஆறேழு நீதிபதிகள் வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர். விழா கடைசி வரைக்கும் இருந்தார்கள்.



நான் இராமேஸ்வரம் நிகழ்ச்சி எல்லாம் முடித்துத் திருப்பூருக்கு திரும்பி வந்ததும் மறுநாள் கடைசி மகள் புகைப்படங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் மற்றும் பாராட்டுக் குறித்துக் கேட்டார்.

அப்போது நான் மகளிடம் சொன்னது.

புகழ் என்பது ஒரு விதமான போதை. போதை வஸ்துகளை விட மோசமானது. அதனால் ஒன்றும் பிரயோஜனமில்லை. விழாக்களை வெளியே இருந்து பார்க்கும் போது ஒரு வித மயக்கத்தை உருவாக்கும். விழாவில் கலந்து கொள்ளும் சக படைப்பாளிகள், விருதாளர்கள் அனைவரும் எந்த அளவுக்கு நம்மோடு பழகுவார்கள் என்பதனை எதிர்பார்க்க முடியாது. இலக்கிய உலகம், கலையுலகம் என்றால் பொறாமையுலகங்கள் என்றே அர்த்தம்

அமைதியாகக் கவனிக்க முடியும். ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டு அதே இடத்தில் புகழை கழட்டி வைத்து அடுத்து நம் இயல்பான நிலைக்கு மாறிவிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து யார் நம்மைப் பாராட்டுவார்கள் என்று மனம் அலை பாயத் தொடங்கும். எனக்கு அந்த எண்ணம் இருந்தால் திருப்பூரில் உள்ள இது போன்ற பல அமைப்புகளில் இருப்பவர்களுடன் நல்லுறவு பேணிக் கொண்டு, இதற்கென்று இங்கு வாழும் தொழில் அதிபர்களைக் காக்கா பிடித்துக் கொண்டு வாரம் தோறும் ஒரு விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களில் வரும் அளவுக்கு என்னால் செயல்பட முடியும். ஆனால் நான் எழுதுவதைத் தவிர இதுவரையிலும் வேறு எந்தப் பக்கமும் திரும்பிக் கூடப் பார்த்தது இல்லை. அதனால் ஆரோக்கியமாக அதிகமாக எழுதி முடிகின்றதுஎன்றேன்.



விழா துளிகள்.

திருப்பூரில் பணம் உள்ளது. கொடையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் இந்த விழா போல நடந்து நான் பார்த்தது இல்லை. பணத்திமிர் தெரியும். பண்பாடு தெரியாது. ஆணவம் தெரியும். மனிதர்களை மதிக்கும் தன்மை தெரியாது. ஆனால் இப்படி ஒரு விழா நடத்த முடியாது என்கிற அளவுக்குப் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் விழா நடந்தது.

விழாக்களில் எப்படியாவது ஒரு குறை கண்டு பிடித்து விட முடியும். ஆனால் என் பார்வையில் ஒரு குறை கூடத் தெரியவில்லை. விழா முடிந்து வந்தவர்கள் அனைவரும் நான் நினைத்ததையே வாட்ஸ் அப் குரூப்பில் எழுதியிருந்தார்கள்.

விழாவில் வந்த மற்ற விருதாளர்கள் ஒருவருக்கு ஒருவர் உரையாட வாய்ப்பு அமையவில்லை. எவரும் விரும்பியதாகவும் தெரியவில்லை.

நாம் நினைக்கும் பிரபல்ய எழுத்தாளர்களின் கூட்டம் என்பது வேறு. நாம் அறிந்த எழுத்தாளர்களின் பெயர்களுக்கும் இங்கு நான் பார்த்த எழுத்தாளர்கள் படைப்பாளிகள் என்பது முற்றிலும் வேறாக இருந்தது.

எழுத்தை மட்டும் நம்பி எவரும் இல்லை. பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர்.

சங்கத்தின் தலைவர் திரு. தங்கம் மூர்த்தி ஒரு தனியார் பள்ளி உரிமையாளராக உள்ளார். சமூகத்தில் பலதரப்பட்ட உயர்ந்த நிலையில் உள்ள அனைவரும் கொண்டாடக்கூடியவராகவும் உள்ளார். அவருடன் இருக்கும் குழுவினர் எள் என்றால் எண்ணெய் ஆக இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்படியொரு ஒருங்கிணைப்பு வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை.

நான் ஒருவன் மட்டுமே வேஷ்டி அணிந்து இருந்தேன்.



நான் மண்டபத்திற்குள் நுழைந்ததும் என்னை அடையாளம் கண்டு என் அருகே பல வருடங்கள் பழகிய நண்பர் போலப் பேராசியர் வந்து பேசினார். இவர் தான் என் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தவர். விருதாளர் கையேட்டில் என் புத்தக விமர்சனத்தை மிக மிக அருமையாக நேர்த்தியாக எழுதியிருந்தவரும் இவரே. இவர் தன் வாட்ஸ் அப் குரூப்பில் தினமும் ஒரு புத்தக அறிமுகம் என்று ஒவ்வொரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்து 100 வார்த்தைகளில் அதன் விமர்சனத்தை எழுதி வாசிக்கத் தூண்டுகின்றார். சில திட்டங்கள் சொல்லி உள்ளார். நடந்த பின்பு எழுதுகிறேன். கடைசி வரைக்கும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தேன். பரபரப்பில் வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.

விழாவில் தொடக்கவுரையாற்றிய சங்கத்தின் தலைவராக இருக்கும் திரு. தங்கம் மூர்த்தி முதல் சிறப்புரையாற்றிய நீதியரசர் வரை பத்து எழுத்தாளர்களையும் சம அளவில் பாராட்டிப் பேசினர். விருதாளர்கள் என்ற முறையில் அங்கீகரித்தனர்.

மண்டபத்தில் உள்ளே நுழையும் போது மாலை அணிவித்தனர். கூடத் துண்டு அணிவித்து அழைத்துச் சென்றனர். மேடையில் பொன்னாடை போர்த்தினர். நினைவுப் பரிசு வழங்கினர்.

பத்து படைப்பாளிகளின் சுருக்கமான அறிமுகம் அத்துடன் விருது பெற்ற படைப்புகள் பற்றி விமர்சனம் என்று ஒரு கையேடு போலச் சிறிய அளவில் புத்தகம் ஒன்றைய தயாரித்து வந்து இருந்த அனைவருக்கும் வழங்கினர்.

தங்கியிருந்த விடுதியில் தங்கியது முதல் மேடையில் அமர்ந்து இருந்து மரியாதைகளைப் பெற்றுக் கொண்டது வரை இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து கவனிக்க முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒவ்வொரு விருதாளர்களையும் கவனித்து அசத்தினார்கள்.

விழா முடிந்ததும் அருமையான இரவு நேர உணவு வழங்கினார்கள். வந்தது போலத் திரும்பவும் ஒரு வாகனத்தில் தங்கியிருந்த விடுதியில் கொண்டு போய் விட ஏற்பாடு செய்து இருந்தனர்.

எந்த விழாவாக இருந்தாலும் மேடையில் இரண்டு மணி நேரம் அமர்ந்திருப்பது பெரிய அவஸ்த்தையான சமாச்சாரம். பல நூறு கண்கள் நம்மைக் கவனித்துக் கொண்டேயிருக்கும். அளவு கடந்த வெளிச்சத்தில் நாம் அமர்ந்து இருக்க வேண்டும். தலைவலி வந்து விட வாய்ப்பு உண்டு.

நீதியரசர் அவர்களின் சிறப்புரை

புகைப்படங்களும் காட்சி வடிவங்களும் மிக நேர்த்தியாக எடுத்து ஒவ்வொருவரும் ஊருக்கு வந்து சேர்வதற்குள் அனுப்பி வைத்தனர். இந்த விழாவுக்கு என்று வாட்ஸ்அப் குரூப் ஒன்று உருவாக்கியிருந்தார்கள். அனைத்து விபரங்களும் உடனே உடனே அதில் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.



விடுதிக்கு வந்தவுடன் பத்து நிமிடத்தில் தூங்கி விட்டேன். அதிகாலையிலே எழுந்து வைத்திருந்த பூ மாலையைத் தெருவில் இருந்த நடைபாதை கோவில் அருகே பின்புறம் வைத்து விட்டு நடந்தே புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். காலை 7.55 க்குத் திருச்சியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் ரயில் வர ஏறி அமர்ந்தேன். நல்ல கூட்டம். மூன்று மணி நேர பயணத்தில் ஒரு மணி நேரம் நின்று கொண்டே சென்ற போது கையில் வைத்திருந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டே சென்றேன். இராமேஸ்வரம் மதியம் இறங்கிய போது அடித்த வெயில் என்பது உடம்பை சுட்டெறிக்கும்படியிருந்தது.

கோவையில் இருந்து திருச்சி வரும் ரயில் பயணங்களில் பார்க்கும் காட்சிகள், பயணிகளின் செயல்பாடுகள் அனைத்தும் திருச்சி முதல் தென் மாவட்டங்களில் பயணிக்கும் போது முற்றிலும் மாறியிருக்கும். அலைபேசியை நோண்டிக் கொண்டேயிருக்கும் பழக்கம் இராமேஸ்வரம் செல்லும் பயணத்தில் பெரும்பாலானவர்களிடம் பார்க்க முடியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்த அரட்டை அடித்துக் கொண்டு இயல்பான மனிதர்களாக இருந்தார்கள். இஸ்லாமிய பயணிகள் குடும்பம் குடும்பமாக மிக அதிக அளவில் பயணித்தார்கள். முன்னேற்றம் இல்லாத பக்கவாட்டு சிறிய ஊர்களைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

சிறிய நகர் என்பது 25 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட வளர்ந்துள்ளது என்பது உண்மை. ஆனால் நிஜமான வளர்ச்சி அல்ல. வெளியூர் சென்று சம்பாதித்தவர்கள் கட்டிய கட்டிங்களும், அரசியல் மூலம் திடீர் பணக்காரர்களாக மாறியவர்களும் உருவாக்கிய மாய லோகத்தைக் கண்டு ரசித்துக் கொண்டே யோசித்துக் கொண்டே சென்றேன்

இராமேஸ்வரத்தில் மூன்று வித நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். கடைசியில் எதிர்பார்த்தவர்கள் ஒதுங்கி விட்டனர். எதிர்பாரத விதமாக வலைபதிவில் திண்டுக்கல் தனபாலன் மூலம் அறிமுகமான துரை விஜயன் நண்பர் மூலம் தங்கும் விடுதி கிடைத்தது.

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025)

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025) – 3


விடுதிகள் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகளும் இராமேஸ்வரத்தில் உள்ள விலைவாசிகளையும் நீங்கள் கேட்டால் ஆன்மீக உணர்வு மாறி பய உணர்வு வந்துவிடும்.

அடுத்து இராமேஸ்வரம் என்ற நகரத்தில் உள்ளும் புறமும் பார்த்து அங்கிருந்த மூன்று நாட்களில் கற்றதையும் பெற்றதையும் பார்ப்போம்.

பயணம் தொடரும்...

No comments: