அந்த 42 நாட்கள் - 29
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
வீட்டுக்கு அருகே உள்ள கடைக்காரர்கள் மனசாட்சியைச் சாக்குப் பையில் போட்டுக் கட்டி வைத்து விட்ட காரணத்தால் இன்றைய சூழலில் வாரத்தில் ஒரு நாள் உழவர் சந்தைக்குச் செல்கிறேன். அதி காலை 4 மணி காலை முதல் காலை 9 மணி வரைக்கும் கடைகள் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எந்தக்குறையும் சொல்ல முடியாது. ஆனால் பிரச்சனை முகமூடியில் தான் தொடங்குகின்றது. அதன் மூலம் பஞ்சாயத்து உருவாகின்றது.
•••••
கடந்த 21 முதல் இன்று வரையிலும் நாலைந்து முறை தான் வெளியே சென்று இருப்பேன். முகமூடிகளைப் பயன்படுத்தவில்லை. இப்போது சந்தையின் வெளியே நின்று கொண்டிருக்கும் காவல்துறை நிறுத்தி அறிவுரை சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றார்கள். மகள்கள் ஒரு பக்கம் முழங்குகின்றார்கள்.
•••••
பஞ்சு பறக்கும் தொழிலில் இருப்பதால் கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாள் கூட முகமூடி அணியாமல் தொழிற்சாலைக்குள் இருந்ததே இல்லை. தொழிற்சாலையைச் சுற்றி வரும் போது கட்டாயம் முக கவசம் என் முகத்தில் இருக்கும். பெரும்பாலும் தொழிலாளர்கள் முதல் மற்றவர்கள் வரை ஆடிட் நடக்கும் சமயங்களில் தான் அணிந்திருப்பார்கள். அணியச் சொன்னாலும் மறுப்பார்கள். பறந்து கொண்டேயிருக்கும் பஞ்சு துகள்களை அருகே நின்று வேடிக்கை பார்க்க முடியும். சுவாசத்தில் ஒன்றாகக் கலந்து உள்ளே வெளியே என்று விளையாட்டு காட்டி பறந்து கொண்டிருக்கும். ஆனால் மக்களைத் திருத்த முடியாது. நான் திருத்த முற்படுவதில்லை. ஆனால் கட்டாயம் நான் உள்ளே நுழைந்தவுடன் அணிந்து விடுவேன். காரணம் காலையில் முழுமையாக ஒரு ரவுண்டு வர வேண்டும். மதியத்திற்கு முன்பு ஒரு முறை என்று குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுற்றி வர வேண்டும் என்பதால் அணிந்து கொள்வதுண்டு.
ஆனால் ஒரு நாளைக்கு மூன்று கவசங்களை மாற்றி விடுவதுண்டு. பயன்படுத்திய முக கவசங்களை நானே குப்பைத் தொட்டியில் கிழித்துப் போட்டு விடுவதுண்டு. அதாவது குப்பை எடுக்கும் அம்மா கூட அதனைத் தொடாமல் காகித்தில் சுற்றிப் பாதுகாப்பாக என் அறையில் உள்ள கூடையில் போட்டு அந்த அம்மாவிடம் கொடுப்பேன். "ஏன் சார் குப்பையைத் தங்கம் மாதிரி தர்றீங்க" என்று சிரிப்பார். அவருக்குத் தெரியாது. என் நோய் நொடி எல்லாம் வயதான அந்த அம்மாவுக்கு வந்து விடக்கூடாது என்ற அக்கறை. ஆனால் சொன்னாலும் அவருக்குப் புரியாது. நான் சொல்வதும் இல்லை. நான் என்னளவில் சரியாக இருந்து கொள்வதுண்டு.
•••••
கொரானா புயல் வந்த பிறகு வெளிநாட்டில் உள்ள நண்பர் வாங்கி அனுப்பச் சொன்னார். இந்தியாவில் தொடக்கக் காலத்திலேயே முக கவசம் இயல்பான விலையிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக விற்றது. நான் எனக்கு வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு மட்டும் வாங்கி அனுப்பினேன். நமக்கு எதற்கு? இது தேவையில்லை என்றே கருதினேன். காரணம் இதனைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயன்படுத்தியதைச் சரியான விதத்தில் பாதுகாப்பாக நீக்க வேண்டும் என்பது போன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. பெண்கள் நலக் கூட்டணி மற்றும் சபாநாயகரிடம் அறிவு சார்ந்த விசயங்கள் நிறையப் பேச முடியாது. இது போன்ற சமயங்களில் கட்டுரை அல்லது காட்சி வடிவத்தை நான்கு பேர்களிடம் காட்டி நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கி விடுவதுண்டு. அவர்கள் இறுதியில் என் வழிக்கே வந்து விடுவார்கள்.
••••
கோரானா வந்து தடைக்காலம் அறிமுகமான 21ந் தேதிக்குப் பிறகு ஒரு நாள் புதிய பேரூந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைக்குப் போய் பயந்து போய் ஓடி வந்து விட்டேன். காரணம் எப்போதும் போல இயல்பாக ஒட்டி உரசி உறவாடிக் கொண்டிருந்தனர். ஆனால் கட்டாயம் முக கவசம் அணிந்து இருந்தனர். எப்படி? சேலையில், கர்ச்சீப், துணி, துப்பட்டா, சாக்குத் துணி, சாக்குப்பை, அரிசிப்பை எதுவென்று வகைதொகையில்லாமல் மாரியம்மா மஞ்சள் கயிறு போல ஒவ்வொருவரும் விதம் விதமாக அவரவருக்குத் தோன்றிய வண்ணம் இந்த முகமூடி கவசத்தை மாட்டியிருந்தார். ஆனால் ஒருவர் கூடச் சமூக விலக்கத்தை கடைப்பிடிக்கவே இல்லை. நேற்று வரையிலும் திருப்பூர் முழுக்க இப்படித்தான் உள்ளது. (Now Tiruppur Red Alert) நேற்று உழவர் சந்தையில் தக்காளி வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு இளம் பெண்மணி விலை குறைவு என்றதும் என் மேல் மோதிய படி தக்காளியை எடுக்க வந்த போது திட்டி தீர்த்து விட்டேன். அழுதே விட்டார். கடைக்காரர் சமாதானம் செய்து வைத்தார்
•••••••••••••
மோடி, ஸ்டாலின் பயன்படுத்தும் என் 95 முகமூடிகள் எல்லாம் தமிழகத்தில் உள்ள பெரிய மருத்துவர்களுக்கே கிடைக்குமா? என்று தெரியவில்லை. லட்சணம் அந்த அளவுக்கு உள்ளது. நான்கு மணி நேரம் தான் ஒரு முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும். பிறகு பாதுகாப்புடன் அதை அப்புறப்படுத்த வேண்டும். அதுவொரு சள்ளைப் பிடித்த வேளை. கரணம் தப்பினால் மரணம். அது எத்தனைப் பேர்களுக்குப் புரியும்? அதற்கு அதனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். பத்தடி தள்ளி நின்று பேசினால் போதும்., கட்டாயம் இருமல் இல்லாமல், துப்பாமல் இருந்தால் போதும். ஓரளவுக்குப் பரவாயில்லை. நான் அப்படித்தான் இருக்கின்றேன்.
•••••••••••
முக கவசம் குறித்து நான் ஏன் இந்த அளவுக்கு சீரியஸ் ஆக யோசிக்கின்றேன் என்பதற்கு இந்த காட்சியை பார்க்கப் பரிந்துரை செய்கின்றேன். ரத்தம் மூலம் ஹெச்ஐவி பரப்ப முடியும் என்பது போல முகக் கவசம் மூலம் கொரானா பரப்ப முடியும் என்பதனை உணர்ந்து கொள்ளவும். அரசாங்கம் கவசத்தை மாட்டுங்கள் மாட்டுங்க என்கிறார்கள். எங்கள் சந்தில் தினமும் 20 முக கவசங்களைச் சாலையில் பார்க்கின்றேன். இது தான் நம் மக்களின் அடிப்படை அறிவு.
3 comments:
இனி சிறிது காலத்திற்கு அனைவரும் முகமூடியோடு தான்...
முகக் கவசம் - பலருக்கும் அதனை பயன்படுத்துவதும் தெரியவில்லை, பயன்படுத்திய பிறகு அதை அப்புறப்படுத்துவதும் தெரியவில்லை.
இப்போதும் தலைநகர் தில்லியில் சர்ஜிகல் மாஸ்க் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது - நம் ஊரில் அதே 40 ரூபாய். சம்பாதிக்க ஆசைப்படலாம் - கொள்ளையடிக்க ஆசைப் படக்கூடாது எனத் தோன்றுகிறது.
இன்னும் முழுமையாய் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது வேதனைதான்
Post a Comment