Sunday, May 24, 2020

புலம்பெயர்த் தொழிலாளர்கள் - அகதியா அனாதையா (JothiG's Voice)

குரல்வழிப் பதிவு -  3

ஜோதிஜியின் வாரம்தோறும் ஒரு செய்தி.

"தமிழகத்தின் தலைப்புச் செய்தி"க்கு ஆதரவளிக்கும் உலகத் தமிழர்கள்  அனைவருக்கும் வணக்கம். 

இன்று இந்தியாவில், கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.  

ஏதாவது நல்லது நடந்துருக்கும் என்று நம்புகிறீர்களா? வாருங்கள் பேசுவோம்.  




காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள முக்கிய தேசிய நெடுங்சாலைகள் அனைத்திலும் இப்போது மனிதத்தலைகள் தான் அதிகம் தெரிகின்றது. 

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என்று வயது வித்தியசாமின்றி அனைவரும் நடைபாதை பயணிகளாக மாறி உள்ளனர்.  500 கிலோ மீட்டர் ஆயிரம் கிலோ மீட்டர் என்றாலும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அரசாங்கம் உதவாத காரணத்தால் நடந்தே சென்று விடலாம் என்று இன்று வரையிலும் நடந்து கொண்டேயிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் மனதை உலுக்குகின்றது. இவர்கள் தான் இப்போது இந்திய அரசியலில் மையம் கொண்டுள்ள ஆம்பன் புயல். என்ன காரணம்? என்ன அரசியல்? வாங்க பேசுவோம். இன்னும் ஒரு வாரத்தில் இந்திய ஊரடங்கு முடிவுக்கு வந்து விடும் என்று பிரதமர் சொல்லியுள்ளார்.  ஆனால் பிரதமர் ஊரடங்கு தொடங்கும் முன்பு என்ன பேசினார் என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா? 

“நான் இதைப் பிரதமராகச் சொல்லவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவனாகச் சொல்கிறேன். எனவே காரணம் எதுவாக இருந்தாலும் 21 நாட்கள் வெளியே செல்வதை மறந்துவிடுங்கள்.  2020 மார்ச் 24ந் தேதி நள்ளிரவு கொரானா என்ற தொற்று நோய்க்காக ஊரடங்கு இந்தியாவில் தொடங்கும் முன்பு இப்படித்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசினார்.  அந்தப் பேச்சில் ஒன்றை மறவாமல் குறிப்பிட்டார்.

"சிலரின் பொறுப்பற்ற தன்மை உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளுக்கும், ஏன் இந்த நாட்டிற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்". என்றார்.

அவர் பேசிய சில தினங்களில் அதாவது மார்ச் 27, 28 அன்று டெல்லியில் பல்வேறு மாநிலத் தொழிலாளர்களும்  டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் தத்தமது ஊருக்குச் செல்வதற்காகக் கூடத் தொடங்கினார். கொரானா ஊரடங்கு சமயத்தில் இந்தியாவில் புலம் பெயர்த் தொழிலாளர்களின் அவல நிலையென்பது இங்கிருந்து தான் தொடங்கியது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டது  கேரளா மாநிலத்தில் 29 ஜனவரி   (30ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.) வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு வெளிவந்தது மார்ச் 6.  

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இடைப்பட்ட காலம் - சுமார் 40 நாட்கள். மார்ச் 21 என்ற தேதியில் இந்திய அரசாங்கம் கோவிட் 19 க்காக செய்ய வேண்டிய கடமைகளை செய்யத் தொடங்கியது.  ஆனால்  எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த இயக்கமும் சில மணி நேரங்களில் நின்று போனது.  சுதந்திரம் அடைந்த போது உருவான இந்திய பாகிஸ்தான் பிரிவினை கலவரத்திற்குப் பிறகு இவ்வாறு அதிக அளவில் மக்கள் நடப்பது இதுவே முதல் முறை.  

கையில் காசில்லை. அனைவரும் அன்றாடக் கூலிகள். படிப்பறிவு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பயம் உருவாகத் தொடங்கியது. வாழுமிடங்களில் சந்தித்த பிரச்சனைகள் மிக அதிகம்.  அவரவர் சொந்த ஊருக்குச் செல்லச் சாலைகளுக்கு வரத் துவங்கினர்.  வாகனங்கள் இல்லை. மத்திய மாநில அரசாங்கங்கள் கண்டு கொள்ளவில்லை. அறிவுரை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். வெறிச்சோடிய சாலைகளில் நடந்தே சென்றுவிட முடியும் என்று நம்பினார்கள்.

தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இதில் பாதிக்கப்பட்டது வட மாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. தமிழர்களும் பல நூறு மைல்கள் நடந்தே வந்தார்கள். சிலர் இறந்தே போனார்கள். 

ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் பெயருக்கென்று முணுமுணுத்து வாயை மூடிக் கொண்டு விட்டார்கள். தொற்று நோய்  பரவிவிடக்கூடாது என்பது முதல்  காரணமாகவும், முதலாளிகளுக்கு ஆட்கள் கிடைக்காமலிருந்தால் ஒவ்வொரு தொழிலும் பாதிக்கப்பட்டு விடுமே என்பது முக்கியக் காரணமாகவும் இருந்தது. 

இப்போது 54 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இன்று வரையிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களைக் காது கொடுத்துக் கேட்கக் கூட யாருமில்லை. எந்த மாநில அரசும் உதவும் மனநிலையிலும் இல்லை.

சொந்த ஊரில் வாழ முடியாது. காரணம் வேலை வாய்ப்புகள் இல்லை.  இருந்தாலும் சரியான சம்பளம் இல்லை. பிறந்த ஊரில் திருமணமாகி குடும்பத்துடன் வாழவே முடியாது.  குறைவான சம்பளத்தில் வாழ வழியில்லை. வேறு வழியே தெரியாமல் தொலை தூர நகரங்களில் கிடைத்த வேலைகளில் ஓட்டிக் கொண்டு தெருவோரங்களில் வாழ்பவர்கள் கோடிக்கணக்கான பேர்கள். மாநில அரசுகளிடம் இதற்கான கணக்கு இல்லை. மத்திய அரசும் இன்னமும் இதில் முழு அக்கறை செலுத்தவில்லை என்பது தான் உண்மை. 

ஒருவர் நடக்க முடியாத தன் மனைவியைத் தோளில் தூக்கிக் கொண்டு நடந்த புகைப்படத்தைப் பார்த்தோம். தன் குழந்தையை உருளும் சூட்கேஸ்சில் படுக்க வைத்து இழுத்துக் கொண்டு செல்லும் தாயின் படத்தைப் பார்த்தோம்.  மத்தியப் பிரதேசத் தேசிய நெடுஞ்சாலையில் உடல்நிலை குன்றிய இளைஞர் ஒருவர் தன் நண்பனின் மடியில் படுத்துக் கிடக்கும் புகைப்படமும் அதற்குப் பின்னால் உள்ள கதையும் பலரையும் கலங்கடித்தது.  இது போல ஒவ்வொரு நாளும் ஆயிரம் கதைகளும் படங்களும் ஊடகத்தில் வந்து கொண்டே இருந்தாலும் மாநில அரசின் வேகம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. மத்திய அரசின் கண்டும் காணாத போக்கும் பாராட்டத்தக்கதாகவும் இல்லை.

சாலை வழியே சென்றால் காவல் துறையினர் தங்களைத் தடுப்பார்கள் என்று எண்ணம் கொண்டவர்கள் ரயில் பாதை வழியே பயணித்தனர். இரவு வேளைகளில் தண்டவாளத்தின் ஓரத்திலும், சிலர் தண்டவாளங்களிலும் அசதியில் தூங்கிவிட வந்த சிறப்பு ரயில்கள் பலரையும் பரலோகத்திற்கு அனுப்பி வைத்தது.  லாரியில், ட்ரக் ல் பயணித்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் படங்களைப் பார்க்கும் போது இது மக்களுக்கான ஆட்சி என்பதே மறந்து போனது. ஏன் இத்தனை ஆயிரம் பேர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு வந்து பணிபுரிகின்றார்கள்? 

ஏழு சகோதரிகள் என்று சொல்லப்படும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள ஆண் பெண் என்ற பாரபட்சமின்றி திருப்பூரில் வந்து பணிபுரிகின்றார்கள். ஜார்க்கண்ட் ல் இருந்து வந்தவர்கள் காரைக்குடிக்கு அருகே உள்ள அரிசி ஆலையில் வந்து பணிபுரிகின்றார்கள்.  மதுரையிலிருந்து மும்பைக்குச் சென்று பணிபுரிகின்றார்கள். மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் என்று பல மாநில மக்கள் அத்தனை பேர்களும் அருகே உள்ள டெல்லியில் கூலி வேலை செய்கின்றார்கள். இவர்களும் இந்தியர்கள் தான்.  ஆனால் கொரானா காலத்தில் இவர்கள் அகதியாக எப்படி மாறினார்கள்?

கடந்த 73 ஆண்டுக் காலம் இந்தியாவை ஆண்டுவிட்டுச் சென்ற அயோக்கியர்கள் சுரண்டிவிட்டுச் சென்றதன் எச்சமும் மிச்சமும் இன்றைய வட மாநிலங்கள். அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் உருவானவர்கள் தான் அந்தந்த மாநில புலம் பெயர்த் தொழிலாளர்கள். இந்தியாவை எந்தக் கட்சி அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது? அவர்கள் தான் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் ஒரே நாளில் தெருவுக்கு வந்து நிற்போம் என்றோ? தங்கள் சொந்த ஊருக்கு இந்த நவீனக் காலத்திலும் கால்நடையாகவே கடந்து செல்ல வேண்டிய கொடுமையான சூழல் உருவாகும் என்று நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

பாஜக, காங்கிரஸ் அரசியல் அக்கப்போர்களைக் கடந்து மற்றொரு விசயத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியாவில் இன்னும் எத்தனை காலம் தான் தேசிய நெடுஞ் சாலையில் நடைப் பயணமாகப் பயணிக்கும் மனிதத்தலைகளை நாம் பார்த்துக் கொண்டேயிருப்பது?

இது இந்திய ஜனநாயக அதிகார அமைப்பின் பிரச்சனையா? இல்லை ஆள்கின்றவர்களின் மனோபாவத்தில் உண்டான கோளாறா?


குரல் பதிவுகள்

தமிழகத்தின் தலைப்புச் செய்தி- என் குரல் வழிப் பதிவு



16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறை ஒலியமைப்பு மிகவும் அருமையாக வந்துள்ளது...

ஒவ்வொரு தகவலும் துக்கம்... வேதனை... வருத்தம்...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரம்பத்தில் வரும் இசை தான் அதிக ஒலியுடன் வரும்... இந்த முறை உங்களின் குரலின் ஒலி அளவைப் போலவே சமமாக உள்ளது சிறப்பு...

திண்டுக்கல் தனபாலன் said...

இதை நான் பேசுவதாக நினைத்தால்... கண்டிப்பாக முடியாது; அழுது விடுவேன்... இல்லை என்றால் கோபம் வந்து கதறி விடுவேன் என்று நினைக்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

படக் காட்சிகளுடன் காணொளியாக இருப்பது சிறப்பாக இருந்தாலும், நமது வலைப்பூவில் கேட்பொலியாக மாற்றியும் வைத்துக் கொள்வதும் அவசியம்... அவை வலைப்பூ இருக்கும் வரை வாழும்...

எஸ் சம்பத் said...

தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் செய்தித் தொகுப்பு தொழில்நுட்பம் மேம்பட்டு சிறப்பாக ஜோதிஜி குரலில் ஒலிக்கிறது. இதுவரை பல ஊடகங்கள் இதைப்பற்றி செய்தியாக, படங்களாக சொல்லியிருப்பினும், ஐம்பது நாள் அரசியலை ஒரே தொகுப்பில் படங்களுடன் செய்தியாய் வேதனை நீள்கிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் மாநிலங்களில் "ஓட்டுரிமை" என்றொரு ஆயுதம் இன்மையால் மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளா சோகமது. குடியுரிமை கணக்கிற்கு மசோதா ரெடி, ஆனால் உரிமையே இல்லாத இந்த பல்லாயிரக்கணக்கானோர் எந்தக் கணக்கில் வருவாரோ, யாமறியோம் பராபரமே. அனைத்து மாநிலங்களிலும் தொழில்கள் தலைதூக்க நிச்சயமாக இவர்களை மீண்டும் அழைத்துவர முகவர்கள் முனைவார்கள். பணிபுரியும் இடம் துவங்கி இனியாவது இவர்கள் குறித்து எண்ணிக்கையும் கணக்கும் அவசியமிங்கே என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்..
சிறப்பான செய்தி பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜோதிஜி

ஜோதிஜி said...

சிறப்பு. மகிழ்ச்சி சம்பத்.

ஜோதிஜி said...

நல்ல ஆலோசனை. செய்ய வேண்டும்.

G.M Balasubramaniam said...

அயல் மாநிலத்தவர் நம்வேலைகளைபறித்துக் கொள்கினனர் என்று குறை சொன்னவர்கள் இப்போதுமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் கை கழுவியும் முகமூடி அணிந்தும் கொரோனாவை விரட்டலாம் என்னும்நம்பிக்கை அறவே இல்லாமல் போனதும் ஒரு காரண மாகும்உயிர்களை விட பொருளாதாரம் முக்கியமாய் விட்டதும் ஒரு காரணமாகும் குரல் பதிவு நன்றாக வந்துள்ளது

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை

ஜோதிஜி said...

திருப்பூரில் மட்டும் கணக்கில் எடுத்து தமிழர்களின் மனோபாவத்தை யோசித்துப் பார்த்தால் இவர்கள் உழைக்க லாயக்கு இல்லாமல் வாழப் பழகி விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. மகிழ்ச்சி. நன்றி.

ஜோதிஜி said...

கொரானா வந்து மாற்றத்தை உருவாக்கியது போல இன்னும் சில மாற்றங்கள் அடுத்து வரும் வருடங்களில் வந்தால் நன்றாக இருக்கும் ஆசிரியரே.

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு பாடம் கற்றுக் கொள்கிறோம். இந்தக் கொடுமையான, வேதனையான விஷயம் பார்த் இனியாவது இதற்கான கணக்கெடுப்பு, மற்றும் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட வேண்டும்.

கர்னாடகத்தில் உச்சகட்ட விரக்தி, களைப்பில் ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி அரசு வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்ல முற்பட்டது ஒரு வேதனையான சம்பவம். அவரே இருபது முப்பது பேர்களை கூடவே ஏற்றிச் சென்றிருந்தால்? சாதாரண காலங்களில் தவறுதான்.

vimalanperali said...

ரத்தக்கண்ணீர்!

ஜோதிஜி said...

படங்களைப் பார்க்கும் போதே அப்படித்தான் உள்ளது.

ஜோதிஜி said...

அருமை. அடுத்த பதிவில் இதைப் பற்றித்தான் பேசி உள்ளேன். கெட்டிக்காரர் நீங்க ராம்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்தத் தொற்று நிறையவே பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. இது மிகவும் வேதனையான விஷயம். இங்கும் பார்த்தீர்கள் என்றால் திரும்பி வந்த புலம்பெயர்த் தொழிலாளிகள் தாங்கள் இருந்த இடத்திற்குச் சென்றால் அங்கு அதிர்ச்சி அவர்கள் வீடுகள்/டெண்டுகள் எலலாம் தீக்கிரையாகி எரிந்து போயிருக்கின்றன. என்ன கொடுமை பாருங்கள்.

பணக்காரர்கள் கூட தங்கள் வளர்ப்புச் செல்லங்களை ஷெல்டரில் விட்டோ அல்லது தெருவில் விட்டோ விடும் வேளையில் இந்த எளிய மக்கள் புலம் பெயரும் போதும் கூடத் தங்கள் செல்லங்களையும் தங்களுடனேயே அன்புடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் தானே மனிதர்கள்! அவற்றாய் ஃபோட்டோ கூட எடுக்க விடவில்லையாம். வண்டியில் அவற்றை ஏற்றாவிட்டால் தாங்களும் ஏற மாட்டோம் என்று சொல்லி தங்களுடனேயே அழைத்துச் சென்றிருக்கிரார்கள். மனம் நெகிழ்ந்துவிட்டது. பாவம் அம்மக்கள் தான். இனியேனும் ஒவ்வொரு மாநிலத்திலும் சரியான கணிப்பு எடுக்க வேண்டும். இப்படியான மக்களையும் சேர்த்து.

கீதா