Friday, May 01, 2020

இன்முகங்கள் தேடி வந்தால் எப்படியிருக்கும்?


அந்த 42 நாட்கள் -  27
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


நாம் இன்னலுறும் சமயங்களில் இன்முகங்கள் தேடி வந்தால் எப்படியிருக்கும்?


அப்படித்தான் இன்றும் நேற்றும் உணர்ந்தேன்.  வீட்டுக்கு முன் வண்டி வந்து நின்றது.  பைப் எடுத்தார்கள். குழாய் மாட்டினார்கள். வண்டியின் மேல் ஏறி நின்றார்கள்.  காமவுண்ட் சுவர் முதல் வீட்டின் உள்ளே இருபது அடி தொலைவு வரைக்கும் கிருமி நாசினி நீரை ஒவ்வொரு பகுதியிலும் பூப்போல பூ மாரி பொழிந்தார்கள். வெவ்வேறு விதமாக பீய்ச்சியடித்தார்கள். நேற்றும் வந்தார்கள். நாளையும் வருவோம் என்று சொல்லிச் சென்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு கவசமும் இல்லை. எப்போதும் போல ஒரு சின்ன முகமூடி. அதுவும் முகத்தில் இல்லை. வேறொரு பக்கம் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடமையில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள்.





அரசாங்கம் சரியில்லை என்று குறை சொல்லும் மக்கள் இப்போது சரியில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.  சோம்பலாகச் செயல்படும் அரசு எந்திரம் இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சிறப்பாகச் செயல்பட உங்கள் ஒத்துழைப்பு தேவை என்று கெஞ்சலுடன் கோரிக்கை வைக்கின்றார்கள்.  தலைகீழ் மாற்றங்கள்.  கொரானா உருவாக்கிய ஆச்சரியங்கள்.

கண்ணியமிகு காயிலே மில்லத் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.  ஆனால் இப்போது கண்ணியமிகு தமிழகக் காவல் துறை என்று பாராட்டத் தோன்றுகின்றது. சுற்றுகிறவர்களை நிறுத்துகிறார்கள். அறிவுரை சொல்கின்றார்கள். கெஞ்சலாக ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் எதுவுமில்லை. நள்ளிரவில் கூட அணிவகுத்து வருகின்றார்கள். அமைதியாகவே பேசுகின்றார்கள்.

பார்க்கப் பார்க்கப் பரவசமாக உள்ளது. மொத்தச் சமூகத்திற்கும் நம்பிக்கையளிக்கும் மனிதர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்றார்கள். ஒருவர் கூட எவ்விதப் பாதுகாப்பு கவசங்களையும் அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத் தமிழக அரசாங்கமும் ஒரே அணியில் நிற்கின்றது. எல்லாத் துறைகளும் ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றது.

ஊடகங்கள்  நம்பிக்கையளிக்கின்றது. முதலமைச்சர் சமூக ஊடகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மக்களுடன் உறவாடுகின்றார். மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் கண்களில் தெரியும் கருவிழிக் கோளங்கள் அவர் தூங்காமல் உழைக்கும் உழைப்பை உணர்த்துகின்றது.

துரத்துகின்றார்கள். மக்கள் துயரப்படுத்துகின்றார்கள்.  சமாளிக்கின்றார்கள். சங்கடப்படுத்தும் கேள்விகளையும் எதிர் கொண்டு அமைதியாகவே பதில் அளிக்கின்றார்கள்.

11வது நாளில் இன்றும் கூடக் காவல்துறைக்கு மிகப் பெரிய சவால்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பைக் மைனர்களுக்கு நவீனத் தண்டனை கொடுத்தாலும் வெளியே சுற்றுவதை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. இவர்கள் புதிய சொர்க்க வாசலைக் கண்டுபிடித்தவர்கள்.  வார இறுதிக் கொண்டாட்டங்களை இன்றைய தினத்தில் தினமும் கொண்டாட ஆசைப்பட்டு காவல்துறையிடம் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
திருவிழா என்றால் தான் கறிக்கொளம்பு சாப்பிட்ட ஆட்கள் நாம். பைக் மைனர்களின் அப்பாக்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு தடவை கறி சாப்பிட்டவர்கள், ஒரு தடவை துணி எடுத்தவர்கள் என்று எல்லாமே வருட மனிதர்கள். பதிலாக இன்று மகன்கள் தினசரி கொண்டாட்டத்தை அனுபவிக்க அனுமதித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கவுச்சி இல்லை என்றால் செத்துப் போய்விடுவேன் என்று கூட்டமாக இடித்துக் கொண்டு நின்று வாங்கிய மீனுடன் கொரானாவையும் சேர்த்து வாங்கி வந்துள்ளனர். அடுத்த வாரத்தில் ஸ்கோர் நிச்சயம் தெரியும்.

அப்பாக்கள் இப்படி என்றால் மகன்கள் செய்யும் அதகளம் அது தனியாக உள்ளது?

பைக் மைனர்கள் பெரும்பான்மையினர் அனைவரும் 2000க்கு பிறகு பிறந்த புனித ஆத்மாக்கள்,. அம்மா செல்லம், அப்பா செல்லம், இஎம்ஐ செல்லம், கிரடிட் கார்டு செல்லம், டெபிட் கார்டு செல்லம் என்று வளர்ந்தவர்கள். வளர்ந்து கொண்டிருப்பவர்கள்.

"இனி வெளியே வர மாட்டேன்" என்ற உறுதிமொழியை வாசி என்று காவல் துறை அதிகாரி கொடுத்த போது அவன் பாகுபலியில் "காளகேயர்கள் பேசும் மொழி" போலவே தமிழை வாசிக்கின்றான். அதிகாரி நொந்நு போய் அடுத்தவனிடம் கொடுக்க மொத்தத்திலும் வெந்து போய் போதுமடா சாமி என்று நிறுத்திவிட்டார். பள்ளியில் எந்த மொழியில் என்ன படித்தான்? எதைப் படித்தான்? இவன் கல்லூரியில் கல்லுடைப்பானா? இல்லை பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களைக் கண்ணீர் விட வைப்பானா?

எப்படி இவர்கள் உயிர்பயமின்றி "கொண்டாட்ட மனோநிலைக்கு" வர முடிகின்றது?

இன்று தான் இந்திய மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. 1990க்கு முன்னால் பிறந்தவர்களுக்குச் செருப்பு கூட ஆடம்பரம்.  பிளாஸ்டிக் சேர் என்பது அவசியமற்றது. பாய் விரிப்போம். சமுக்காளம் விரித்து உட்கார வைப்போம். இன்று மைனர்களைத் தரையில் உட்கார வைக்க முடியுமா? என்று பாருங்கள்.

வைரஸ் வழங்கிய சீனா மிகப் பெரிய பொருளாதாரப் பாய்ச்சல் நிகழ்த்தியிருந்தாலும் இன்னமும் தன்னை முழுமையாக வளர்ந்த நாடு என்று அறிவிக்கத் தயாராக இல்லை.  சீனாவும், இந்தியாவும் இன்றும் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைக்கும் பெருங்கூட்டத்தைக் கொண்டுள்ளது. சீனாவை விட இந்தியாவில் தான் முப்பது வயதுக்குக் கீழே உள்ள இளையர் பட்டாளத்தின் எண்ணிக்கை சதவிகிதம் அதிகம்.  "வார இறுதிக் கொண்டாட்டம்" என்பது இப்போது தான் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருக்கிறது.

மேற்கிந்திய நாடுகளில் வெள்ளிக்கிழமை மதியம் என்பது சொர்க்கத்தின் வாசல் கதவைத் திறக்கும் நாள்.

மீண்டும் திங்கள் காலை தான் ஒவ்வொருவருக்கும் சுயநினைவு வரும் நாள். குடும்பத்தில் ஒவ்வொருவரும் சம்பாத்தியம் செய்வார்கள். அவரவர் அவரவர் வழியில் சென்று கொண்டிருப்பார்கள். வார இறுதி நாட்களைக் கொண்டாட்ட மனோநிலையில் அணுகுவார்கள். இது உண்மையாக தங்களை, தங்கள் சிந்தனைகளை, தங்கள் உழைப்புகளைக் கொண்டு செலுத்தியவர்கள் ஓய்வெடுத்து அடுத்தப் பாய்ச்சலுக்குத் தயாராகத் தன்னை தன் முனைப்பில் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் அப்பன் காசில் ஒரு பெரிய கும்பலே உட்கார்ந்து தின்று கொண்டு இருக்கும். இங்கு ஓய்வென்பதற்கு வரையறை உருவாகவில்லை. எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யப் போகின்றோம்? எந்தப் புரிதலும் இல்லை. இருக்காது.

நமக்கு ஓய்வென்றால் சினிமா தான். அவனை நக்கிவிட்டு வந்தால் நம் நாக்கில் சர்க்கரை சுவை வந்து விடும். அதிகாலை நான்கு மணி காட்சி என்றாலும் முண்டிக் கொண்டு நிற்போம்.  வாகன நெரிசலுக்குள் புகுந்து புகையைச் சுவாசித்து அலைந்து முடிந்து இதுவே கொண்டாட்டம் என்று குதுகலிப்போம்.  அதே போலத் தான் இன்றைய இன்னலுறும் நிலையிலும் இதனைக் கொண்டாட்டமாக மாற்ற நினைத்து அலைகின்றார்கள். காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுச் சிரிக்க வைக்கின்றார்கள். சிந்திக்க வைக்கின்றார்கள்.

"21 நாட்கள் லாக் டவுன்" முடியும் போது பகுதி 2 தொடங்காமல் இருக்க வேண்டும்? காரணம் இப்போது வந்து கொண்டிருக்கும் கணக்கீடுகள் பந்தயக்குதிரை போலவே போய்க் கொண்டிருக்கிறது.

"உயர்ந்த மாநிலம் தமிழகம்" என்று இந்த விசயத்தில் பெயர் எடுத்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்து விட முடியும்?

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எவ்வித விழிப்புணர்வும் இன்றி இரண்டு சக்கர ஊர்திகளில் சுற்றும் இளைஞர்களைக் கண்டால் வேதனையாகத்தான் இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றாவது லாக் டவுன் - அறிவித்து விட்டார்கள் இன்று.

இன்றைய இளைஞர்கள் - ஒன்றும் சொல்வதற்கில்லை. தலைநகர் இளைஞர்கள் இன்னும் அதிக வேகமாக இருக்கிறார்கள் - பைக் ஸ்டண்டுகள் நடப்பதைப் பார்த்தால் நமக்கு கதிகலங்கும். இந்த பேரிடர் சூழலிலும் சிலர் சுற்றுகிறார்கள் - காவல்துறை அன்பர்கள் ரொம்பவே சாந்தமாக பேசினாலும் அவர்களைப் பற்றிய நெகட்டிவ் செய்திகளை மட்டுமே பரப்புவதில் நம் மக்களுக்கு அதீத மகிழ்ச்சி. பாசிட்டிவ் விஷயங்களை எழுதினால் பலருக்கும் பிடிப்பதில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்பூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு வாழ்த்துகள்... இங்கெல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை...

நடக்கப்போகும் விபரீதங்களை யாரும் தடுக்க முடியாது போல...

உழைக்கும் பாமர மக்கள் உயிருக்கு என்றும் உத்திரவாதம் இருந்ததில்லை... இப்போது மட்டும் எங்கிருந்து வரப்போகிறது...?

செந்தில்குமார் said...

ரொம்ப கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறார்கள் மிக சுலபமாக ரூ ஒரு லட்சத்திற்க்கும் மேல் மதிப்புள்ள இரு சக்கர வாகணங்கள் வாங்கி கொடுக்கின்றனர் அதிலும் அந்த வாகனங்களை சுயமாக ஒரு அடி கூட நகர்த்த தெம்பு இல்லா இளைங்கர்கள்