கழகத்தினர் நடத்தும் கல்விக்கூடங்களின் பட்டியல் வெளிவந்ததும் கலக்கத்துடன் பல இடங்களிலிருந்து வந்து கொண்டிருக்கும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க முடிகின்றது.
இங்கு யாரும் இவர்கள் ஏன் கல்விக்கூடங்கள் நடத்துகின்றார்கள்? என்று கேள்வி எழுப்பவில்லை. இவர்கள் சொல்லும் கொள்கைகளை ஏன் இங்கே கடைப்பிடிப்பதில்லை என்ற கேள்வி தான் முக்கியமாக உள்ளது. ஆனால் அதற்குண்டான பதிலைவிட இப்போது அவாள் நடத்தும் பள்ளிக்கூடங்களைப் பற்றிப் பேசத் தொடங்கி உள்ளனர்.
இது தான் தந்திர அரசியல்.
இப்படித்தான் வளர்ந்தார்கள். இதைத் தான் அரசியலில் சமயோசிதம் என்கிறார்கள்.
திமுகவினர் கல்விக்கூடங்களை நடத்தும் போது அதனைக் கல்விக் கொள்ளை என்று கூக்குரலிடுபவர்கள் அவாள்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், அதன் கட்டணக் கொள்ளைப் பற்றி யாரும் மூச்சுவிடுவதே இல்லை. இது தான் சாதீய அபிமானம் என்ற கொள்கை பிரகடனத்தை நண்பர்கள் தங்கள் கருத்துக்களாக இப்போது எழுதத் தொடங்கி உள்ளனர்.
இதில் உள்ள நுண்ணரசியலைக் கவனித்தால் சில விசயங்கள் புரிபடும்.
1. அவாள்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றது. அவர்கள் அரசியலில், அதிகார பதவியிலிருந்து கொள்ளையடித்து பள்ளிக்கூடங்கள் கட்டவில்லை. பணம் கட்ட முடிந்தவர்களிடம் வாங்கினார்கள். பணம் கட்ட முடிந்தவர்கள் எதிர்பார்த்த தரத்தினை தொடர்ந்து கொடுத்தார்கள். அப்படித்தான் வளர்ந்தார்கள்.
2. நாங்கள் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக நடத்துகிறோம் என்று எந்த கொள்கை பிரகடனத்தை எந்த இடத்திலும் சொல்வதும் இல்லை. அது அவர்களுக்கு வியாபாரம். வியாபாரத்தில் லாபம் தான் முக்கியம். அந்தந்த சமயங்களில் எவர் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களை அண்டிப் பிழைத்து தங்களுக்குத் தேவையான காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர். ஆட்சியில் இருப்பவர்களும் தாங்கள் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கின்றனர். இந்த இடத்தில் இருவருக்கும் உண்டான பரஸ்பரம் புரிதல் என்பது கொள்கை அல்ல. பணம் தான் என்பதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. அவாள்கள் நடத்தும் நிறுவனங்களில் முழுமையாக வணிகரீதியாகச் செயல்படுபவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அறக்கட்டளை வழியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். லாபம் வந்தாலும் அதனை மீண்டும் மீண்டும் வெளியே எடுக்காமல் தரம் குறித்து விசயங்களுக்குத் தொடர்ந்து செலவளித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு.
4. தொடக்கம் முதல் இப்படித்தான் நடத்தி வருகின்றார்கள். இப்போது கட்சித் தலைகளாகக் காலச் சூழலில் மாறியவர்களும், உருவாகியவர்களும், உருவாக்கப்பட்டவர்களும் இந்தப் பள்ளிக்கூட வாசலில் நின்று காத்திருந்து இடம் கிடைக்காதவர்கள் தான் அதிகம்.
5. இன்று கல்வித்தந்தையர்களாக மாறியவர்கள் பத்திருப்பது ஆண்டுகளுக்கு முன் தங்கள் குழந்தைகளுக்காக அவர்களின் வாசலில் போய் நின்று கெஞ்சியவர்கள். அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் இன்று பொருளாதார , அந்தஸ்து , அதிகார ரீதியாக அவர்களை விட மேம்பட்ட இடத்திற்கு வந்தடைந்துள்ளார்கள். ஆனால் அவாள்கள் நடத்தும் கல்விக்கூடங்கள் அன்று போல் இன்றும் உள்ளது. அவர்கள் தரம் என்று சொல்வதை இன்னமும், இன்றும் நம்ப பெரிய கூட்டமே காத்துக் கொண்டு இருக்கின்றது. விண்ணப்பம் வாங்க அதிகாலையில் இடம்பிடிக்கப் பெரிய கூட்டமே அதிகாலையில் தெருவில் காத்துக் கொண்டு இருக்கின்றது. ஏன்?
6. இவர்களுக்குச் சமூகநீதி, சம உரிமை, ஒடுக்கப்பட்டோர் நலவாழ்வு, அவர்களின் முன்னேற்றம், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல், தமிழ்மொழி வளர்ச்சி, பிற்போக்குத் தனங்களை ஒழித்துக் கட்டல் போன்ற ஏராளமான அஜண்டா வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் நடத்தும் கல்விக்கூடங்கள் வழியாக இதனை எளிதாக நிறைவேற்றலாமே? என்பது தான் முக்கியமான கேள்வியாக இங்கே வைக்கப்படுகின்றது.
அவர்கள் தரம் என்ற பெயரில் மக்களைப் பணம் இருப்பவன், இல்லாதவன் என்று பிரிக்கின்றான். இன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வட்டாட்சியர் பையன் கூட பணம் இருந்தால் அவர்கள் நடத்தும் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால் நீங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு பொட்டல்காட்டில் கட்டிய கல்விக்கூடங்களை வைத்துக் கொண்டு, வாங்கிய பணத்திற்கு மாணவர்களுக்குத் தேவைப்படுகின்ற தரத்தினை வழங்காமல் அரசியலைப் போலவே இங்கும் கொள்ளையடிப்பதைத் தான் முழு நேரத் தொழிலாகக் கொண்டிருப்பதை எதிர்க்கின்றோம்.
(சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள தேர்வு முடிவில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பாதிக்குப் பாதி தேர்ச்சியடையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று உள்ளது. ஒரு பாடத்தில் அதாவது பொறியியல் படிப்பில் உள்ள கணக்குப் பாடத்தில் தான் முக்கால்வாசி மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை. இது அந்தந்த கல்லூரியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லையா? அல்லது கணக்குப் பாடமே என்னவென்று தெரியாமல் இது போன்ற கல்லூரிக்கு வந்த மாணவர்களின் தவறா?)
நீங்கள் இது குறித்து ஏன் இப்படி நடந்தது என்று பேசிப் பாருங்கள். அவர்கள் சொல்லும் பதில் இப்படி இருக்கக்கூடும்.
ஏன் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு வைக்கின்றார்கள்? தேர்வின் மூலமாகத்தான் நல்ல பொறியாளர்கள் கிடைப்பார்களா? இந்த தேர்ச்சி முறையே தவறு? என்று முடிப்பார்கள்.
விழித்துக்கொள்வோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்.
தொடர்புடைய பதிவுகள்
கலைஞரின் கொள்கை வேறு. அரசியல் வேறு
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்
சுப வீரபாண்டியன்
ப சிதம்பரம் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் முதல் பாகம்
பாஜக எதிர்ப்பு போராளிக்குழு சங்கம்
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அரசியல் பார்வை
கடவுச்சீட்டு துறையில் நடந்துள்ள முக்கிய மாற்றங்கள்
அதிமுக அமைச்சர் வேலுமணி
4 comments:
விழித்துக்கொள்வோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்.
முழுக்க முழுக்க கல்வி தற்போது வணிக மயமாகிவிட்டது.
கல்விக்கூடக்கள் நிலை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கும் பதிவு
//விழித்துக்கொள்வோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்.//
ஆம்...
அதே...
Post a Comment