Wednesday, July 31, 2019

பத்தில் ஒன்று



@ 2009 ஜூலை மாத தொடக்கத்தில் இணையவெளி அறிமுகம் ஆனது. இன்று பத்து வருடங்கள் முடிந்துவிட்டது.  நான் எழுதத் தொடங்கிய போது மகள்கள் பள்ளிக்குச் செல்ல துவங்கியிருந்தார்கள்.  சுதந்திரமாக எழுதிக் கொண்டேயிருந்தேன். தொந்தரவு என்பதே இருக்காது. இன்று  வளர்ந்து விட்டார்கள்.   அவர்களுடன் உண்டான போட்டிகளுடன் எழுத வேண்டியதாக உள்ளது.  

@ எந்தவொரு துறையையும் கற்றுக் கொள்வது எளிது. தொடர்ந்து இயங்குவதும், தன்னை தக்கவைத்துக் கொள்வதும் தான்  கடினமும் சவாலானதும் கூட. நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதென்பது மிகப் பெரிய கொடுப்பினை தான். முயற்சியும் பயிற்சியும் இருந்தாலும் நாம் வாழும் சூழல் முக்கிய பங்காற்றுகின்றது.  அது எனக்கு அமைந்த காரணத்தால் எழுதிக் கொண்டே இருக்க முடிகின்றது.

@ இன்றைய நாள் வரைக்கும் எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆயிரம் பதிவுகளைத் தொட முடியவில்லை. காரணம் நேரம் இருந்த போதிலும் அவவ்வபோது இதனை விட்டு வேறு பக்கம் நகர்ந்து சென்று விடுகிறேன். என் எழுத்து வெவ்வேறு தளங்களுக்கு மாறும் போது யாரோ ஒருவர் அலைபேசியில், மின் அஞ்சலில் பேசி இங்கே வரவழைத்து விடுகின்றார்கள்.  ஆனால் தினமும் எழுதுவதென்பது என் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவே உள்ளது. அவர்களுக்கு நன்றி.

@ கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு பதிவும் குறைந்தபட்சம் ஆயிரம் பேர்கள் படித்தார்கள்.  அதிகபட்சம் 3000 பேர்கள் படித்தார்கள்.  இன்றைய சூழலில் குறைந்தபட்சம் 300 பேர்கள் படிக்கின்றார்கள். அதிகபட்சம் 600 பேர்கள் படிக்கின்றார்கள். தமிழ்மணத்தில் பல சமயம் இணைக்க முடியாமல் போய்விடும்.  அது போன்ற சமயங்களில் 100 பேர்கள் படித்து இருப்பார்கள்.  இது தான் எதார்த்தம். 

@ இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உளவியல் விசயம் ஒன்று உள்ளது.  ஒருவருக்குக் குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது? இல்லை? என்பதனைத் தாண்டி இங்கு ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளக்கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றார்கள் என்பதனைத் தான் நாம் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

@ இயல்பாகவே தமிழர்களுக்கு வாசிப்பது என்பது விருப்பமில்லாத ஒன்று.  தொடக்கத்தில் வாசிக்க, கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தார்கள். இன்று அனைத்து விதமான வாய்ப்புகளும் இருந்தாலும் எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை? படித்து என்ன ஆகப் போகின்றது? என்ற அதீத புத்திசாலியாக மாறியுள்ளார்கள் என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

@ சிறிதாக எழுதினால் படிப்பார்கள் என்ற பொதுவிதியைப் பற்றி பலரும் சொல்கின்றார்கள்.  ஆனால் இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் ஒருவரால் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிகின்றது? நேரம் ஒதுக்க முடிகின்றது? என்பதனை வைத்துப் பார்க்கும் போது பெரிது? சிறிது? என்பது இங்கு பிரச்சனையில்லை.  விருப்பம் தான் முக்கியம். இலவசமாகக் கொடுத்தால் கூட படிக்க மாட்டேன் என்கிற மனோபாவத்தை உங்களால் எந்த நிலையிலும் மாற்ற முடியாது என்பதனை உணர்ந்து கொண்டால் போதுமானது. இதன் காரணமாகத்தான் பேஸ்புக் என்ற தளம் இன்று முன்னிலையில் நிற்கின்றது.

@ வாசிப்பு என்பது பலவிதமாகச் சிதறிப்போயுள்ளது.  வாட்ஸ்அப் வாசிப்பு, ஃபேஸ்புக் வாசிப்பு, ட்விட்டர் வாசிப்பு என்று மூன்று விதமாக மாறியுள்ளது.  இது தவிர யூ டியுப் சுவாசிப்பு, அமேசான் ப்ரைம் சுவாசிப்பு, நெட்ப்ளிக்ஸ் சுவாசிப்பு என்பதாகவும் பிரிந்துள்ளது. அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு திரைப்படம் வெளியாகும் போது காலைக்கடன் கழிக்க மறந்து கூட தன் விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கும் இளைய தலைமுறையினரை நாம் குறை சொல்லக்கூடாது.  மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று மூன்று தீபாவளி கடந்தும் பாகவதர் படம் ஓடியதாகச் சொல்கிறார்கள்.  இன்று மூன்றாம் நாள் படம் ஓடி விட்டால் வெள்ளிவிழா கொண்டாடும் நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. மக்களின் சுவாசிப்பும், வாசிப்பும் இன்னமும் பலவிதமாக மாறக்கூடும்.

@ இணையத்தில் செயல்படும் ஒவ்வொருவரும் எழுத்தாளர்களாக மாறியுள்ளனர்.  நவீன ரக அலைபேசிகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பத்திரிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.  அதாவது வாசிப்பாளர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகக் காலமாற்றம் உருவாக்கியுள்ளது. வாசித்து உணர்ந்து உள்வாங்கி எழுதுவதை விடக் கண்டதையும் எழுதுபவர்களைக் கவனிக்கப்படுபவர்களாக மாறியுள்ளனர். 

@ உங்களால் கணினியில் ஒரு படம் வரையத் தெரிந்து அதைச் சிதைக்கத் தெரிந்தால் உடனே கவனிக்கப்படுவீர்கள். பாலியல் குறித்து விலாவாரியாகப் பேசத் தெரிந்தால் பேசப்படுபவர்களாக மாறுவீர்கள்.  சாதி, மதம் பற்றி எழுதத் தெரிந்தால் முற்போக்கு என்ற முகமூடி உங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போய்விடும்.

@ நிலைத்து நிற்பது முக்கியமல்ல.  அன்றைய பொழுதில் நம்மைப் பற்றிப் பேச வைக்க முடிகின்றதா? என்பது தான் புதிய வழிமுறையின் வாசலாக உள்ளது.  அந்தரங்க உறவுகள் மட்டும் இருட்டுக்குள் செய்து கொண்டிருந்த காலம் மாறி இன்று இணையத்தில் இருட்டறையில் முரட்டுக்குத்து போலவே புதிதாக உருவான இணையவெளி இளைய தலைமுறை சமூகம் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

@ தன் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர்களின் செயல்பாடுகள் இணையத்தில் முக்கியமாக மாறியுள்ளது. முகம் இல்லாமல் இங்கே செயல்படுபவர்கள் தான் தீவிர கருத்தாளர்களாக, கொள்கை வாதிகளாக மாறியுள்ளனர். தரமில்லாப் பொருட்கள் விலை அதிகமாக விளம்பரங்களின் மூலம் விற்கப்படும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தைப் போல தரமில்லாத மனிதர்களே இங்கு தகுதியானவர்கள் என்று முன்னிறுத்தப்படுவார்கள். மற்ற அனைத்தையும் விட விளம்பரம் என்பதே இன்றைய சூழலில் மிக முக்கியமானது.

@ காலமாற்றம் என்பது இங்கு மனிதர்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கும். அதன் பொருட்டே இங்கே ஒவ்வொன்றும் மாற்றம் பெறும். அதுவே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். 

@ கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையிலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்தேன். அதன்பிறகு 17 வருடங்கள் தீவிர வாசிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் அமைந்தது. இணையம் அறிமுகமான பின்பு ஈழம் குறித்து, பிரபாகரன் குறித்து அறியும் பொருட்டு வாசிப்பு மீண்டும் தொடர்ந்தது.  ஆனாலும் உள்ளே சின்ன நெருடல் இருந்து கொண்டேயிருந்தது.  கடந்த 30 வருட இந்திய, தமிழக சூழலை நாம் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம் என்ற குற்றவுணர்ச்சி உறுத்திக் கொண்டேயிருந்தது.  

@ இன்றைய சூழலில் தினமும் வாசிக்கும் தினசரி, வார இதழ்கள், இணையம் என்று மாறிய சூழல் கூட எதையும் முழுமையாக நமக்கு உணர்த்தவில்லை என்ற வருத்தம் இருந்தது.  அதனைக் கடந்த இரண்டு மாதமாக கிண்டில் போக்கிவிட்டது.  அரசியல், சமூகம், வரலாறு என்ற மூன்று பிரிவின் கீழும் வாரம் இரண்டு புத்தகமாவது படித்துக் கொண்டிருக்கின்றேன். 

@  ஒவ்வொன்றையும் விமர்சனமாக எழுதியாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆழமாகப் படித்துப் புரிந்து கொள்ள முடிகின்றது. மனம் உற்சாகத்தில் நிறைவடைந்துள்ளது.

@ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மன்னர் இராசராசன், ராஜேந்திர சோழன் குறித்து இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். அவர் என்ன சாதி என்பதில் தொடங்கி ஒவ்வொன்றும் பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த இரண்டாயிரம் வருடத் தமிழர்களின் வாழ்வியல் சரித்திரம் நமக்குக் கிடைத்த தகவல்கள் எதுவும் முழுமையானது அல்ல. இன்று வரையிலும் அடுத்தடுத்து எத்தனையோ ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அது வரை நாம் வைத்திருந்த எண்ணங்களும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இன்னமும் மாறும்.  உத்தேசமான ஒன்றை வைத்து ஒரு மாதிரியான கட்டுமானத்தில் தான் நாம் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.  

@ ஆனால் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் உள்ள சரித்திர உண்மைகள் அனைத்தும் தற்போதைய தொழில் நுட்ப வசதிகளினால் ஆவணமாக மாறியுள்ளது. பல பார்வைகள். பல கோணங்கள். எவர் வேண்டுமானாலும் வெளிப்படையாக  ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.  உங்கள் அனுபவங்களை உங்கள் நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது அதுவே அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் யாரோ ஒருவரால் ஆவணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பதிகம். இனி எவரும் வரும் காலங்களில் வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து சரித்திரத்தோடு விளையாட முடியாது.

@ 2009 ல் நாம் பார்த்த இந்தியா, தமிழ்நாடு இப்போது இல்லை.  அரசியல், சமூகம் முழுமையாக மாறியுள்ளது. நம்பவே முடியாத ஆச்சரியங்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  விலகி நிற்க முடியாது. விரும்பாவிட்டாலும் ஒதுங்கவும் முடியாது.  சாதி வீட்டுக்குள் சந்துக்குள் இருந்தது. இன்று இணையம் வரைக்கும் வந்து நிற்கிறது.  புனிதர்களின் பட்டங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இங்கு இப்போது எல்லோருமே பிரபல்யங்கள் தான். நெருங்கவே முடியாதவர்களைக் கூட இன்று கேள்வி கேட்க முடியும்? அசிங்கப்படுத்த முடியும்? அவமானப்படுத்த முடியும்? களங்கம் கற்பிக்கமுடியும்?  நவீன தொழில் நுட்பம் மொத்தத்தையும் மாற்றியுள்ளது. இதன் காரணமாக வக்கிர எண்ணங்கள் என்பது நமக்கு இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

@ உடன் வந்தவர்கள் காணாமல் போய் விட்டார்கள். சிலர் காலமாகி விட்டார்கள். நெருங்கிப் பழகியவர்கள் வெகு தூரத்திற்கு அப்பால் சென்று விட்டார்கள். பலரும் பொருளாதார நெருக்கடியில் புலம் பெயர்ந்த காரணத்தால் அவர்களின் விருப்பங்கள் காணாமல் போய்விடக் கடமை ஒன்றே வாழ்க்கை என்பதாகவும் மாறியுள்ளனர்.

@ மதவாதத்தை ஆதரிக்காதே? கலைஞரை எதிர்க்காதே? என்பதில் தொடங்கி பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இங்கு என்ன ஆகியிருக்கும் தெரியுமா? என்ற வாதம் இங்கே நிலை பெற்றுள்ளது. கருப்பு, வெள்ளை மட்டும் நிறமல்ல. ஏராளமான வண்ணங்கள் உள்ளது என்பதனை எவரும் உணர்வதில்லை.  தான் நம்புவது மட்டுமே உண்மை என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது.  அது குறித்து எழுதும் போது நாம் ஏராளமான அவதூறுகளையும் சுமந்தே ஆக வேண்டும். கலக்கம் இல்லாமல் கலங்கரை விளக்கத்தை தேடிக் கொண்டே செல்ல மன உறுதியும் வேண்டும்.

@ இந்தியாவை முழுமையாகச் சுற்றிவர என் வாழ்நாளில் வாய்ப்பு அமையுமா? என்று தெரியவில்லை.  அது குறித்த ஆசைகளும் விருப்பங்களும் மிக அதிகம் உள்ளது.  ஆனால் குறைந்தபட்சம் இந்தியாவை பல்வேறு பார்வைகளில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்போது முயன்று கொண்டு இருக்கின்றேன்.  என் வாசிப்பு அதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது.

ண்பர்கள் சில கடந்து போன பல பதிவுகளில் கேள்விகள் போல விமர்சனம் செய்து இருந்தனர். சில சமயம் அது பலரின் பார்வைக்குக் கேலியாகவும் இருந்திருக்கக்கூடும்.  அதன் மூலம் என்னை நானே உணர்ந்து கொள்ள அதனைக் கேள்வியாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்து பதில் அளிக்க உள்ளேன்.  அதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் கற்றதும் பெற்றதும் தொடர் போல எழுத முடியும் என்று நம்புகிறேன்.


31 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// பெரிது? சிறிது? என்பது இங்கு பிரச்சனையில்லை... விருப்பம் தான் முக்கியம்... //

உண்மை... வாசிப்பதில் மட்டுமல்ல... கேட்பதிலும்... ஓர் உதாரணம் :-

பலரின் "சொற்பொழிவுகளை" பல ஆண்டுகளாக கேட்கும் சிலர், அவர்களுக்கு பிடிக்காத விசயம் சொல்லிவிட்டால், அதன்பின் அவர்களை தொடருவதேயில்லை... காரணம் கேட்டால், அவர்களையே ஏசுகிறார்கள்... சிரிப்பதா...? அழுவதா...?

// என்னை நானே உணர்ந்து கொள்ள அதனைக் கேள்வியாக வைத்துக் கொண்டு //

இந்த புரிதல் எத்தனை பேருக்கு வாய்க்கும்...?

ஈகை அடுத்து புகழ் என்று ஒரு அதிகாரத்தை குறளின் குரலாக எழுதியது உங்களுக்கு தெரியும்... அதில் அனைத்து குறள்களும் இரக்கத்தை தான் சொல்கின்றன, இரக்கம் தான் புகழ் என்று... (என்னைப் பொறுத்தவரை)

பல வருடங்களாக இதை உங்களுக்கு சொல்லவில்லை... இப்போது சொல்கிறேன்... உங்கள் கருத்துரைப்பெட்டி மேலே உள்ள வாசகம்... புகழ் அதிகாரத்தை வேறுவிதமாக சுருக்கி சொன்னால் "கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு"

நன்றி...

KILLERGEE Devakottai said...

//இன்று அனைத்து விதமான வாய்ப்புகளும் இருந்தாலும் எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை படித்து என்ன ஆகப் போகின்றது ? என்ற அதீத புத்திசாலியாக மாறியுள்ளார்கள்//

இதுதான் நிதர்சனமான உண்மை நண்பரே...
இன்று படித்த ஆண்-பெண் இருபாலருமே பட்டதாரி என்ற பேப்பரை வைத்துக் கொண்டு தன்னை அதி புத்திசாலியாக நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

G.M Balasubramaniam said...

/தான் நம்புவது மட்டுமே உண்மை என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது. அது குறித்து எழுதும் போது நாம் ஏராளமான அவதூறுகளையும் சுமந்தே ஆக வேண்டும். கலக்கம் இல்லாமல் கலங்கரை விளக்கத்தை தேடிக் கொண்டே செல்ல மன உறுதியும் வேண்டும்./உண்மை உரக்கச் சொல்ல வேண்டிய உண்மை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களின் எழுத்தை நேசிப்பவர்களில் நானும் ஒருவன். வாசிப்பவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. அந்த வகையில் உங்களுக்கு என்றுமே ஓய்வு கிடையாது. இவ்வாறான பகிர்வுகள் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ள உதவுகின்றன.

ஸ்ரீராம். said...

தமிழ்மணம் இப்போதெல்லாம் பதிவுகளைத் தானாகவே இணைத்துக் கொள்கிறது.

வாசித்தல் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்து அமைகிறது. அறிவுத்தேடல் ஒருவகை. பொழுது போக்கு ஒருவகை. வாட்ஸாப்பில் நீளமாக அனுப்பப்படும் ஃபார்வேர்டுகளை நான் படிப்பதே இல்லை. நிறைய பார்வேர்டுகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு எழுதுபவர்களுக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் செய்யப்படாமல் காபி அடிக்கப்பட்டிருக்கும்!

ஸ்ரீராம். said...

//தான் நம்புவது மட்டுமே உண்மை என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது. அது குறித்து எழுதும் போது நாம் ஏராளமான அவதூறுகளையும் சுமந்தே ஆக வேண்டும். கலக்கம் இல்லாமல் கலங்கரை விளக்கத்தை தேடிக் கொண்டே செல்ல மன உறுதியும் வேண்டும்.//

உண்மை என்ன என்று தேடவேண்டுமே தவிர, அவதூறுகளை சுமந்தாவது அதே கருத்தில் நிலையாக இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லையே... வேறு யார் கருத்தையும் ஏற்க மாட்டேன் என்று இருப்பது சரியல்ல என்பது என் கருத்து.

G.M Balasubramaniam said...

தமிழ்மணம் சில நாட்களாக முடங்கிக் கிடக்கிறதே

திண்டுக்கல் தனபாலன் said...

// உண்மை என்ன என்று தேடவேண்டுமே தவிர, அவதூறுகளை சுமந்தாவது அதே கருத்தில் நிலையாக இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லையே... வேறு யார் கருத்தையும் ஏற்க மாட்டேன் என்று இருப்பது சரியல்ல என்பது என் கருத்து.//

"வேண்டாம் DD... விட்டு விடுங்கள்... சில கருத்துரைகளை நீக்கி விடுங்கள்..." எனக்கு ஞாபகம் வருகிறது...

சரி, அதை விடுங்கள்... என்னிடம் மட்டுமே தர்க்கம் செய்வார் எனது அப்பா... எதற்கெடுத்தாலும் நானும் அவ்வாறே...(!)

எதையும் பாதி தான் சொல்லித் தருவார்... மிச்சத்தை நீயே தெரிந்து கொள் என்பார்... ஏன் அப்போது தர்க்கம் செய்தார் - என்பது எனக்கு புரிந்தது...

நெல்லைத்தமிழன் said...

//இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் ஒருவரால் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிகின்றது?// - அப்படில்லாம் இல்லை. எனக்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஒரு படத்தைப் பார்க்க முடியாது. தியேட்டர்களிலும் முழுப் படம் பார்ப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். அதையும் மீறி நான் 30 வருடங்களில் வீட்டில் முழுமையாகப் பார்த்த படங்கள் 10க்குள்தான் இருக்கும். தியேட்டரில் இரண்டு பாஹுபலிகளும், ஒரு சில படங்களும்தான்.

படிப்பது (நூல்களை) என்பது எல்லோரிடமும் இருக்காது. நான் ஒரு ஒரேஷியஸ் ரீடர். ஆனால் இடுகை இண்டெரெஸ்டிங் ஆக இருக்கணும். எனக்குப் பிடிக்காத சப்ஜெக்டைத் தவிர்த்துவிடுவேன்.

நெல்லைத்தமிழன் said...

/தரமில்லாத மனிதர்களே இங்கு தகுதியானவர்கள் என்று முன்னிறுத்தப்படுவார்கள்.// எப்போதும் மலிவான ரசனைக்கு கூடுதல் ஜனங்கள் இருப்பதும், தேர்ந்த ரசனைக்கு ரசிகர்கள் குறைவாக இருப்பதும்தான் வழக்கம்.

/இனி எவரும் வரும் காலங்களில் வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து சரித்திரத்தோடு விளையாட முடியாது.// அப்படி எனக்குத் தோன்றவில்லை. சரித்திரம் என்பது அரசியல் சார்ந்து அவரவர்களுக்குத் தோதாக இன்றும் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது

//இதன் காரணமாக வக்கிர எண்ணங்கள் என்பது நமக்கு இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.// - உண்மை. ஒவ்வொருவரும் அவர் இன்றடைந்திருக்கும் நிலைக்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள், எத்தனை கஷ்டங்களைக் கடந்து வந்திருப்பார்கள் என்பதை மறந்துவிட்டு, இணையப் பின்னூட்டங்களில் அவர்களை அசிங்கப்படுத்திவிடுகிறோம், நமக்கு அவர்களுக்கு இருக்கும் தகுதி/உழைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு இல்லாதபோதும்.

//தான் நம்புவது மட்டுமே உண்மை என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது.// - இது ஒவ்வொருவரின் நம்பிக்கை, படித்த விஷயங்கள், அனுபவங்கள் சார்ந்தது. அதனால் நீங்கள் உங்கள் எண்ணத்தை உங்களின் அனுபவம், நம்பிக்கை, பழக்கம் சார்ந்து எழுதும்போது அது எனக்கு அந்நியமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் ஆகிவிடுகிறது. இது இயற்கைதான். அதனால்தான் தளத்தைப் படிக்கும் நூறு பேரில் 60% இடுகைக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் எதிர்ப்பாகவும் சிந்திக்கின்றனர். 60% என்பதால் நம் எண்ணம் மெஜாரிட்டி என்று நினைக்கவேண்டாம். தளத்துக்கு ஒத்த கருத்துள்ளவர்களின் வருகைதான் அதிகமாக இருக்கும். திமுக சார்பு தளத்துக்கு 80% திமுக ஆதரவு மக்கள் வருவது போல.

/இந்தியாவை முழுமையாகச் சுற்றிவர என் வாழ்நாளில் வாய்ப்பு அமையுமா? என்று தெரியவில்லை// - இது சாத்தியம் இல்லை. எனக்கு கும்பகோணத்தைச் சுற்றியே பலப் பல இடங்கள் பார்க்க வேண்டியிருக்கு. முழுமையாக தமிழகத்தையே பார்ப்பது, உணர்வது, புரிந்துகொள்வது கடினம். நீங்கள் திம்பம், தாளவாடி அதனைத் தாண்டிய இடங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா? கொல்லி மலை, அங்கிருக்கும் அருவி பார்த்திருக்கிறீர்களா? திற்பரப்பு, தொட்டிப்பாலம்.... தமிழகத்திலேயே ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மாதிரி, மனிதர்களும் அப்படித்தான்.

ஜோதிஜி said...

நீங்க குறிப்பிட்ட இடங்களில் கொல்லிமலை மட்டும் இன்னும் வாய்ப்பு அமையவில்லை.

முகநூலில் நீங்க சொன்ன மாதிரி எப்போது அறிமுகம் இல்லாத குறிப்பிட்ட நபர் எழுதியுள்ளதைப் பார்க்கும் போது பொதுவான நண்பர்கள் யார் யார் இருக்கின்றார்கள் என்பதனைக் கவனிப்பேன். பல ஆச்சரியங்கள் தெரிந்தது. அதைப் பற்றி எழுதுகிறேன்.

திமுக ஆதரவு
பெரியார் ஆதரவு
இந்து மத ஆதரவு
பாஜக ஆதரவு
மோடி ஆதரவு
இப்படியே இன்னும் நாலைந்து பட்டியலில் சேர்க்க முடியும்.

இந்த மாதம் முழுக்க நீங்க எழுதிய அனைத்து விமர்சனங்களும் அருமை. நன்றி.

ஜோதிஜி said...

இந்த வருடம் தான் மிக மிக அதிகமான படங்கள் பார்த்தேன். வாசிப்பை குறைத்தேன். பிறகு கடந்த மூன்று மாதமாக வாசிப்பு மட்டும். என்னால் தோன்றும் போது ஒவ்வொன்றையும் மாற்றிக் கொள்ள முடியும். அறிமுகம் இல்லாதவர்கள் எழுதியவது முக்கியமான கருத்தைக் கொண்டு வந்தாலும் அங்கு விமர்சனம் எழுதி விட்டு வருவது என் வழக்கம். அதே போல ஒரு புத்தகம் வாசிக்க சிறப்பாக இருந்தது என்றால் அவர் முகநூலில் இருந்தால் அவரிடம் நேரிடையாக பாராட்டிவிடுவதும் என் பழக்கம். வரலாற்றுச் சுவடுகள் என்றொரு வலைதளம் உள்ளது. மகளின் கட்டுரைக்காக அவர் எழுதியது பயன் உள்ளதாக இருந்தது. அவர் முகநூலில் இருந்தார். என்னைத் முகநூலில் தொடர்ந்து கொண்டு இருந்ததை அப்போது தான் பார்த்தேன். ஆறு வருடத்திற்கு முன்பு எழுதியதற்கு உங்களைப் போன்றவர்கள் பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கின்து என்றார்.

ஜோதிஜி said...

எதையும் பாதி தான் சொல்லித் தருவார்... மிச்சத்தை நீயே தெரிந்து கொள் என்பார்.......... என் மகள்களுக்கு இதைத்தான் கடைபிடிக்கிறேன் தனபாலன்.

ஜோதிஜி said...

வேறு யார் கருத்தையும் ஏற்க மாட்டேன் என்று இருப்பது சரியல்ல என்பது என் கருத்து............. இங்கு அதிகமான பேர்கள் தன் கருத்து தன் கொள்கை என்ற சின்ன வட்டத்திற்குள் தான் இருக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

சம்மந்தப்பட்டவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன்.

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

திருப்பூரில் தினமும் இது போன்ற பத்து பேர்களை வேலை தேடி வரும் போது சந்திக்கின்றேன் நண்பா.

ஜோதிஜி said...

கேள்வி பதில் பதிவில் முதலில் தொடங்கப் போவதே உங்கள் விமர்சனம் மூலம் தான்.

வெங்கட் நாகராஜ் said...

இந்தியா முழுவதும் சுற்றி வர ஆசை இருக்கிறது - உங்கள் ஆசை நிறைவேறட்டும். வாழ்நாளில் பார்க்க முடியும் இடங்கள் குறைவு தான் ஜோதிஜி. தில்லியில் இருப்பதால் வட இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று வர முடிகிறது. ஆனால், தமிழகத்திலேயே பல இடங்களுக்குச் சென்று வரமுடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. இக்கரைக்கு அக்கரை பச்சை!

பதிவுகளுக்கான வருகைகள் - பெரும்பாலும் இது பற்றி சிந்திப்பதே இல்லை. சில பதிவுகள் நன்று வந்திருக்கிறது என நம்புவோம் - ஆனால் அதற்கான வரவேற்பு மிகக் குறைவாக அமைவதுண்டு! தமிழ் மணம் சில நாட்களாக வேலை செய்வதில்லை என்பதால் இந்த நாட்களில் எனது பதிவுக்களுக்கான வருகை மிகவும் குறைவு. ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

எந்தவொரு துறையையும் கற்றுக் கொள்வது எளிது. தொடர்ந்து இயங்குவதும், தன்னை தக்கவைத்துக் கொள்வதும் தான் கடினமும் சவாலானதும் கூட.

உண்மை ஐயா
தொடர்ந்து இயங்குங்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இன்றைய நிலையில் படைப்பாளர்களுக்கு பெரும் சிக்கல் உள்ளது.சமூக வலை தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக வேண்டும் இல்லையெனில் மறந்து விடுவார்கள். இதற்காக தொடர்ந்து எழுத அல்லது கருத்து தெரிவிக்கும்போது ஏதாவது ஒரு சூழலில் அரசியல் சாதி மதம் சார்ந்த கருத்தை ஆமோதிப்பதோ அல்லது எதிர்க்கவோ நேரிடுகிறது. பரவலான புகழைப் பெற்றவர்கள் பரவலான எதிர்ப்புக்கும் உள்ளாகிறார்கள். ஒரு நேரத்தில் எழுத்துக்காக கொண்டாடப் பட்டவர்கள் இது போன்ற சூழலில் அபிமானமாக இருந்த வாசகர்களை இழக்கிறார்க்ள்.

ஜோதிஜி said...

உண்மைதான் முரளி. இணைய தளத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் சிலரின் எதிர்ப்பு சிலரின் பகைமை போன்றவற்றை சந்தித்தே ஆக வேண்டும்.

ஜோதிஜி said...

அடுத்த பத்து வருடங்கள் மிகவும் சவாலாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

விளம்பரங்களில்அண்டை வீடுக்காரரின் பொறாமை என்று ஒனிடா டிவி யைக் காட்டுவார்கள். இப்போது வலைதளங்களில் நீங்க தான் பலருக்கும் டாப் மாடல். ஊரெல்லாம் சுத்த முடியுது. தினமும் அதைப் பற்றி எழுதவும் முடியுது. வாழ்த்துகள் வெங்கட்.

கொல்லால் எச். ஜோஸ் said...

ரொம்ப அழகா இருந்தது சார் பதிவு. நானும் அப்பப்ப நெனைக்கிறேன் தொடர்ந்து எழுதணுமா தேவையில்லாம வெட்டி வேலை பார்க்கிறோமோ என்று. ஆனாலும் எழுத்தை விடக்கூடாதுன்னு தோணுது. 2015 லேருந்து எழுதுறேன். இன்னும் சரியா எழுதி பழகலேன்னு தான் தோணுது. அப்பப்ப பெரியார் தன்னோட குடியரசு பத்திரிக்கை தொடங்கினப்ப சொன்னத நானும் சொல்லிக்கிறேன் "நாம எழுதுறத யாரும் படிக்கலேன்னா நானே எழுதி நானே படிச்சுக்கிறேன்."

'பரிவை' சே.குமார் said...

அன்பின் அண்ணா.
தங்களின் எழுத்தின் மீது எனக்கு எப்பவும் அதீத ஆர்வம் உண்டு.
கருத்து இடுகிறேனோ இல்லையோ வாசித்து விடுவேன்.
நான் எழுதுவதெல்லாம் சும்மா பொழுது போக்கு.
உங்களது கட்டுரைகளில் பல காலத்துக்கும் பொருத்தமாய்... எப்போது வேண்டுமானாலும் வாசிக்க, அதைக் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
வாழ்த்துக்கள் அண்ணா.
தொடர்ந்து எழுதுங்கள்.

கிரி said...

"2009 ஜூலை மாத தொடக்கத்தில் இணையவெளி அறிமுகம் ஆனது. இன்று பத்து வருடங்கள் முடிந்துவிட்டது."

வாழ்த்துகள் ஜோதிஜி :-)

"நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதென்பது மிகப் பெரிய கொடுப்பினை தான்."

இதற்கு நம்முடைய ஆர்வம் மட்டுமே காரணம்.

"இன்றைய சூழலில் குறைந்தபட்சம் 300 பேர்கள் படிக்கின்றார்கள். அதிகபட்சம் 600 பேர்கள் படிக்கின்றார்கள்."

உண்மை தான் மிகக்குறைந்த விட்டது. துவக்கத்தில் இதுகுறித்து வருத்தம் இருந்தாலும், தற்போது அதைப் பார்ப்பதே இல்லை :-) . நமக்குப் பிடித்ததை எழுதுவோம் என்றாகி விட்டது.

சிலர் எப்பவாவது பேசும்போது Blog பற்றிக் கூறும் போது ..ஓஹோ இன்னும் சிலர் படிக்கிறார்கள் போல என்று உற்சாகமாகிறது.

"சிறிதாக எழுதினால் படிப்பார்கள் என்ற பொதுவிதியைப் பற்றிப் பலரும் சொல்கின்றார்கள். "

இது உண்மை ஜோதிஜி. பெரிய கட்டுரைகளைப் படிக்கச் சிலர் இருக்கிறார்கள் ஆனால், பெரும்பான்மை அப்படியில்லை.

"அதாவது வாசிப்பாளர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகக் காலமாற்றம் உருவாக்கியுள்ளது."

:-) ஆமாம்

"உங்களால் கணினியில் ஒரு படம் வரையத் தெரிந்து அதைச் சிதைக்கத் தெரிந்தால் உடனே கவனிக்கப்படுவீர்கள். பாலியல் குறித்து விலாவாரியாகப் பேசத் தெரிந்தால் பேசப்படுபவர்களாக மாறுவீர்கள். சாதி, மதம் பற்றி எழுதத் தெரிந்தால் முற்போக்கு என்ற முகமூடி உங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போய்விடும்."

எதிர்மறை கருத்துகளுக்கும், பேசுபவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் எப்போதும் கூடுதல் வெளிச்சம் உண்டு.

"மதவாதத்தை ஆதரிக்காதே? கலைஞரை எதிர்க்காதே? என்பதில் தொடங்கி பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இங்கு என்ன ஆகியிருக்கும் தெரியுமா? என்ற வாதம் இங்கே நிலை பெற்றுள்ளது"

இது பற்றி எழுதும் திட்டமுள்ளது. அதாவது இப்படி பேசுவதே ஒரு ஃபேஷன் ஆகி விட்டது.

"இந்தியாவை முழுமையாகச் சுற்றிவர என் வாழ்நாளில் வாய்ப்பு அமையுமா? என்று தெரியவில்லை. அதுகுறித்த ஆசைகளும் விருப்பங்களும் மிக அதிகம் உள்ளது. "

எனக்கு வட இந்தியாவில் சில இடங்கள் செல்ல வேண்டும் என்பது என்னுடைய பல வருட விருப்பம். தற்போது நேரம் அமைய வாய்ப்பில்லை.. விடுமுறை தான் காரணம்.

பார்ப்போம் :-) .

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும் கிரி.

ஜோதிஜி said...

உங்களின் வெளிப்படையான விமர்சனத்திற்கு அன்புக்கு நன்றி குமார்.

ஜோதிஜி said...

குறுகிய காலத்தில் உங்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள். பிரமிப்பாய் உள்ளது. வாழ்த்துகள்.