ஒவ்வொரு வருடமும் கல்வி குறித்த மற்றும் முக்கியமான நுழைவுத் தேர்வுகள் மூலம் செல்கின்ற படிப்புகள் பற்றி படித்து விட்டு நாம் எளிதாக கடந்து சென்று விடுகின்றோம். அதற்குப் பின்னால் உள்ள அரசியல், அவலங்கள், அலோங்கலங்கள் போன்றவற்றை மறந்தும் விடுகின்றோம்.
சென்ற முறை பாஜக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் உள்ள முக்கியமான பத்திரிக்கை முதலாளிகள், முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் மோடியைச் சந்தித்தனர்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியே அறிவிக்கவில்லை.
வலைதளங்களில் அதனைப் பற்றி பேச்சு வந்ததும் அதன் பிறகே படிப்படியாக ஆமாம். நாங்கள் சென்று சந்தித்தோம் என்று ஒப்புக் கொண்டனர்.
முழுமையாக என்ன பேசினார்கள்? என்ன உடன்பாடு ஏற்பட்டது? யாருக்கு என்ன லாபம்? போன்ற எதுவும் வெளியே வரவில்லை. ஆனால் ஒரே பத்திரிக்கை முதலாளி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நான் மோடியிடம் தமிழகத்தில் உள்ள நீட் பற்றி கேட்டு நீக்கலாமே? என்றேன் என்றார். அதற்கு மோடி அது உச்சநீதிமன்றம் தொடர்புடையது என்று சொல்லிவிட்டார் என்று பேட்டியில் சொல்லியிருந்தார்.
அரசுக்கும் இது தொடர்பில்லை போலும் என்று தான் நானும் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
தற்போது அன்புமணி இராமதாஸ் நீட் என்ற தேர்வு குறித்து (அவரும் தொடக்கத்தில் ஆதரவு அளித்தார்) முழு விபரங்களைச் சொன்ன போது பகீர் என்றது.
உச்சகட்ட அயோக்கியதனம் என்ற முடிவுக்கு வர முடிந்தது.
எனக்கு இன்னமும் ஆச்சரியம் என்னவென்றால் தமிழகம் தவிர எந்தவொரு மாநிலமும் இதனை பொருட்படுத்துவது கூட இல்லை.
இங்கே கல்லூரிகளின் கட்டமைப்பு, தனியார் ஆதிக்கம் என்று எத்தனை காரணங்கள் அடுக்கினாலும் மத்திய அரசாங்கத்தின் அயோக்கியதனத்தை ஏன் எந்த மாநில அரசும் தமிழகம் போல கேட்பதில்லை என்ற கேள்விக்கு இன்று வரையிலும் பதிலே கிடைக்கவில்லை.
அதில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகள் இங்கே.
+++++++++++
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டு 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு.
ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 134 ஆகும்.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 107 ஆகும்.
நீட் மருத்துவ நுழைவு தேர்வில் தேசிய அளவில் 56.50 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57வது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம்.
720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்துள்ளார்.
+++++++
2018-ம் ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பகுப்பாய்வு செய்துள்ளது. அதில் நீட் தேர்வில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்ணும் மைனஸ் மதிப்பெண்ணும் எடுத்த 50 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களில் 7 பேர் இந்த இரு பாடங்களில் ஏதோ ஒன்றில் சுழியம் (0) மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளனர். 10 பேர் மைனஸ் மதிப்பெண் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்ணுக்கு மைனஸ் 25 மதிப்பெண், அதாவது சுழியத்தைவிட 25 மதிப்பெண் குறைவாகவும், வேதியியலில் 10 மதிப்பெண்ணும் எடுத்த ஒரு மாணவர் உயிரியலில் 185 மதிப்பெண் எடுத்ததால் மொத்தம் 170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்கிறார்.
மற்றொரு மாணவர் இயற்பியலில் சுழியம் மதிப்பெண், வேதியியலில் 15, உயிரியலில் 85 என மொத்தம் 100 மதிப்பெண்களுடன் மருத்துவ மாணவராகியிருக்கிறார். அதாவது, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண், வெறும் 13.88% மதிப்பெண் பெற்றால் மருத்துவம் சேர முடிகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற முடியாது. ஆனால், நீட் தேர்வில் 13%-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால்கூட தேர்ச்சி பெறுவதுடன் மருத்துவப் படிப்பில் சேரவும் முடிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்ல... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலையே தொடருகிறது.
2018-ம் ஆண்டில் மட்டுமல்ல... அதற்கு முந்தைய ஆண்டிலும் இதே நிலைமைதான். 2017-ம் ஆண்டில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்ட இரு முக்கியக் காரணங்கள், நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும், மருத்துவக் கல்வி வணிகமாவது தடுக்கப்படும் என்பதுதான். நீட் தேர்வில் 13.88% மதிப்பெண் பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது என்பதிலிருந்தே அந்த வாதம் அபத்தமானது என்பது உறுதியாகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதையும் தடுக்க முடியவில்லை என்பதும் 100% உண்மையாகும். இதை நிரூபிப்பதற்கும் ஏராளமான புள்ளி விபரங்களை எடுத்துக்காட்ட முடியும்.
நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும்.
ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக்கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்துக்கு அதிகமான தரவரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதுதான். நீட் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக்கட்ட முடியாமல் விலகிக்கொள்ள, கோடிகளை குவித்து வைத்திருக்கும் பலர் 15 விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர்.
மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவப் படிப்புக்குக் கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது.
4 comments:
அதிர்ச்சிதான் வருகிறது. அயற்சிதான் தருகிறது.
இது மாபெரும் கூட்டுக் களவாணித் திட்டம். அரசியல்வாதிகள் ஒரு பக்கம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றொரு பக்கம். கோச்சிங் சென்டர் நடத்துபவர்கள் (சென்றவருடம் 12 000 கோடி ரூபாய சம்பாரித்துள்ளார்கள்) அடுத்த பக்கம்.
இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் மருத்துவ கல்லூரி முடித்து வரும் மாணவர்களின் சம்பளம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
பத்து வருடம் தொடர்ந்து பணத்தையும் உடல் உழைப்பும் செலவளித்து இறுதியில் கிடைப்பது என்ன? என்பது தான் பெரிய கேள்விக்குறி. உயர்மருத்துவ படிப்பு என்பது வேறாரு மாபியா கும்பலின் ஆதிக்கம்.
இந்த கூட்டுக் களவாணித் திட்டத்தை தகர்த்து எறிய சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று ஏதும் ஒரு திட்டத்தை ஆளும் மத்திய அரசு செய்யப் போகிறதா?
வாய்ப்பு இல்லை.
Post a Comment