Monday, November 11, 2019

5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்

Chakkravarthy Mariappan 
.
7 November at 21:57 · 

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் திரு.கே.எஸ்.ரவிக்குமார் ஒரு வெற்றி பெற்ற இயக்குநர். அவரது முதல் படமே தன் சொந்தக் கதையை இயக்க முடியாமல் "புரியாத புதிர்" எனும் வேறு இயக்குநர் கதையை இயக்கி, பின்னர் "சேரன் பாண்டியன்" படம் மூலம் தன் கற்பனைக் கருவை உருவாக்கி வென்றவர். "சரவணா" எனும் மொழி மாற்றுப்படத்தின் தெலுங்குப் படக் காட்சிகளை ஒட்டி வைத்து பிற்காலத்தில் தயாரிப்பாளரின் செலவை வெகுவாகக் குறைத்து எடுத்துக் கொடுத்தார்.




அதே போல் இங்கும் பல்வேறு திறன்களைப் பெற்ற நமது அண்ணாச்சி தமது வாழ்க்கை அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போல எழுதியுள்ளார். பல்வேறு முதலாளிகளிடம் பணியாற்றிய போது கிடைத்த தனது புத்திக் கொள்முதலை சேர்த்து வைத்துள்ளார். பின்னர் வாய்ப்புக் கிடைக்கும் போது பயன்படுத்தி, சொந்தக் காலில் முன்னேறியுள்ளார். தொழில்முறை நிர்வாகம் இல்லாத பெரும்பான்மை இந்திய வணிகச் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் புதிதல்ல. ஆனால் அவர் சார்ந்த துறையின் படிநிலைகள், பணி நேரம், போட்டி, பணம், ஏமாற்றம், நம்பிக்கை, துரோகம், வளர்ச்சி என்று அதன் இலைமறை பக்கங்களை சுட்டிக் காட்டுவது நன்று.

வாசிப்பின் வழி பார்வையில் அவரது முதலாளிகளின் தனிநபர் பண்புகளை அலசுகிறது இப்புத்தகம். நண்பரும் ஒரு கூட்டுப் பறவையல்ல. அண்ணாச்சி பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை. ஒரு விளம்பரம் வெளியாகி மூன்று நாள் கழித்தும் இவர் வேலை தேடிப் போய் அதைப் பெறுவதும், மற்றொரு ஆலை வேலைக்கு விளம்பரமே தேவையின்றி தன் நட்பு வட்டாரம் மூலம் இவர் ஆட்களை அமர்த்துவதும் கவனிக்கத்தக்க மேலாண்மைக் குறிப்புகள்.

"உஸ்தாத் ஹோட்டல்" எனும் மலையாளத் திரைப்படம் உச்சபட்ச காட்சியில் சொல்லும் விஷயம் தான் இப்புத்தகத்தின் சாராம்சம். வெளிநாடுகளில் சென்று சமையற்கலை பயின்ற நாயகன் ஐந்து நட்சத்திர ஹோட்டல், மாநகர வாழ்க்கை, ஆடம்பரம் போன்றவற்றில் கிடைக்காத திருப்தி தனது தாத்தாவின் நண்பர் நடத்தும் ஏழைகளுக்கு இலவச உணவு திட்டத்தை உணரும் போது கிடைக்கும். ஒரு மனிதனுக்கு எந்த ஒரு ஆசையும், பொருளும் எவ்வளவு கிடைத்தாலும் மனம் மீண்டும் மீண்டும் வேண்டும் எனத் தூண்டும். ஆனால் பசியான ஒரு வயிற்றில் நீங்கள் ஒரளவுக்கு மேல் அன்னமிட்டாலும் #போதும் என்று அந்த உயிர் சொல்லும்.

அது போலத் தான் வணிகத்தின் அணுகுமுறை. இலாப நட்டங்கள் இல்லாத வர்த்தகம் இல்லை. ஆனால் அது நிறுவன வளர்ச்சியை மட்டும் வைத்து அளவிடுவதன்று. அது மரத்தின் வேர்கள் போல ஆழமாகவும், கிளைகள் பரந்து பட்டும், ஒடிந்தாலும் துளிர்த்தும், புதிதாக யார் வந்தாலும் அரவணைத்தும், தன்னை வெட்டினாலும் பயன் தரும் பொருளாகவும் ஆக வேண்டும். தனி மனித வளர்ச்சி ஒரு பொருட்டல்ல என்பதையே அவரது அனுபவம் உணர்த்துகிறது.

தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்கள், ரசிக்கத்தக்க மனிதர்கள், கற்றுக் கொண்ட திறமைகள், சமாளித்த சிக்கல்கள், பிரச்சனைக்குரிய தீர்வுகள் போன்றவற்றை இரண்டாம் பாகமாக வெளியிட வேண்டுகிறேன்.


()()()()

⇪திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையில் சாதித்த, சறுக்கிய முதலாளிகளை வாழ்வியலைப் பற்றிப் பேசும் மின்னூல்.  இந்த நூல் உங்களுக்கு ஒரு புதிய துறை குறித்து எளிமையாகப் புரிய வைக்கும்.  ஒரு தொழிலுக்குப் பின்னால் உள்ள தொழிலாளர்கள், முதலாளிகள், சமூகம் குறித்துப் புரியப் பார்வையில் பார்க்கத் தூண்டும். 


⇎திருப்பூர் என்ற ஊர் இதுவரையிலும் நீங்கள் உங்கள் மனதில் எப்படி இருந்தது? என்பதனையும், வாசித்து முடித்த பின்பு எப்படி மாறுகின்றது என்பதனையும் எளிமையாக ஆசிரியர் போலப் பாடம் நடத்தும்.  நீங்கள் தொழில் முனைவோராக  வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்கு வழிகாட்டும். வழிநடத்தும்.



⇈அமேசான் இணையதளம் வளரும், வளர்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும், வளர வேண்டும் என்று ஆசைப்படும் எழுத்துத் துறையைச்  சேர்ந்தவர்களுக்கு வருடம் தோறும் போட்டி ஒன்றை நடத்துகின்றது. இந்த முறை வலைபதிவர்கள் சார்பாக நான் கலந்து கொள்கிறேன்.  உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.  



↰உங்களையும் வாசிக்க அழைக்கின்றேன். உங்கள் விமர்சனங்கள் (ஆங்கிலத்தில்) அமேசான் தளத்தில் எழுதினால் அது பலரின் பார்வைக்கும் செல்லும் நம்புகிறேன்.



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான உதாரணங்களோடு விமர்சனம்...

முடிவாக // தனி மனித வளர்ச்சி ஒரு பொருட்டல்ல // சிறப்பு...