Wednesday, November 13, 2019

KINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை


Kovai Neram
51 mins · 

12/11/2019
KINDLE unlimited

ஐந்து முதலாளிகளின் கதை.

இந்த டிஜிட்டல் லைப்ரரியில் முதன் முதலாய் வாசித்த புத்தகம் ஐந்து முதலாளிகளின் கதை.நம்ம பக்கத்து ஊரான திருப்பூரை சேர்ந்த எழுத்தாளரும், தொழிலதிபருமான திரு ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதிய ஒரு சுய முன்னேற்ற நூல் என்றும் கூட சொல்லலாம்.தம் வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவங்களை அழகாய் பதிய வைத்துள்ளார்.புத்தகம் எந்த ஒரு வர்ணனைகளும் இல்லாமல் மிக மிக சுவராஸ்யமாக செல்கிறது.எந்த சாயமும் பூசாத எதார்த்த வரிகளுடன் கொஞ்சம் வேகமாகவே செல்கிறது.






திருப்பூரின் கடந்த கால நிலைமை, தற்போதைய வளர்ச்சி, பனியன் கம்பெனிகளின் திடீர் எழுச்சி, தொழிலாளர் நலன், அவர்களின் வாழ்வாதாரம். வெளிமாநில தொழிலாளர்கள் வருகை, சாயப்பட்டறை வீழ்ச்சி, நொய்யலாற்றின் வீழ்ச்சி அரசாங்கத்தின் கவனிப்பின்மை என அனைத்தையும் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார்.

அதேபோல் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆங்கிலக் கலப்பின்றி இயல்பாய், அழகாய் விவரிப்பதற்கும் ஒரு தனித்திறமை வேண்டும். அது இவரிடத்திலே நிறைய இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்..

#KINDLE #amazon #ஐந்துமுதலாளிகளின்கதை
#ஜோதிஜி

()()()()

Jose H Jose 
.
11/11/2019 at 19:42 · 


ஆசிரியர் : ஜோதிஜி

குமார் எனும் கோடிகளில் புரண்ட முதலாளி இறுதியில் தன் வாழ்வைத் துவங்கிய இடத்தில் போய் நின்ற கதையைச் சொல்கிறது இப்புத்தகத்தின் முதல் கதை. பெண் பித்துப் பிடித்துத் திரிந்தால் குபேரனும் குப்பைக்குத் தான் செல்வான் என்பதைச் செவுளில் அறைந்து செல்கிறது இக்கதை. அவர் வாழ்வில் புகுந்த ஒரு விஜயா போல் தொழில் நகரங்களில் பல விஜயாக்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தென்றலாக வருவர் தீயாக மாறி வாழ்வைப் பொசுக்குவதற்கு.

இது தென்றல் அல்ல தீ என்பதை யார் உணர மறுக்கிறார்களோ அவர்கள் பட்டே திருந்துவார்கள்.

அவர்கள் திருந்தித் திரும்பிப் பார்க்கும் போது தான் சம்பாதித்திருந்த பணம், புகழ், பெயர், சொத்து, குடும்பம், குழந்தைகள், உடல் நலன் அத்தனையும் அவர்களை விட்டு காத தூரம் ஓடியே போயிருக்கும் என்பதைச் சுட்டெரிக்கும் சூரியனாய் விளக்குகிறது இக்கதை.

விஜயா விரித்த வலையில் சிக்காத இருபத்தி மூன்று வயது இளைஞனான ஜோதிஜி அண்ணன் எனக்குச் சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் தளுக்கும் குலுக்குமான பேரழகி அநங்கமா வீணையிடம் சிக்காத சோணகிரியாகவே தெரிந்தார்.

இக்கதை மது, மங்கையிடம் மயங்கினால் என்னாகும் எனும் உளவியலை விளக்குகிறது நமக்கு.

1992 ல் திருப்பூரைப் பற்றியோ ஆடை உற்பத்தி தொழிலைப் பற்றியோ எதுவும் தெரியாமல் உள்நுழைந்தவர் 1997 ஆம் வருடம் திருப்பூரையும், ஆடை உற்பத்தி தொழிலையும் கரைத்துக் குடித்து தன் தகுதியை உயர்த்திக்கொண்டு புரொடெக்சன் மேனேஜர் பதவிக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்வதிலிருந்து இரண்டாம் கதை துவங்குகிறது.

தன்னுடைய நேர்முகத் தேர்வின் அறிமுகம் மூலமே தன்னை அடையாளம் கண்டு தன் வேகம் பிடித்துப்போய் வேலைக்குச் சேர்த்தார் அந்த முதலாளி. நல்லவர், நம்பிக்கையானவர், தன்னிடம் விதைத்த நம்பிக்கையை எவ்வகையிலும் கெடுத்துக்கொள்ளாதவர், தன் வேலையில் குறுக்கிடாதவர் எல்லாம் சரி தான் ஆனால் அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். நல்லதோ கெட்டதோ சில விசயங்களை மனம் ஏற்றுக்கொள்ளாது. மனம் ஒப்பாத இடத்தில் இருக்கப் பிடிக்காது யோசிக்காது முடிவெடுக்கச் செய்து விடும். அப்படி அந்நிறுவனத்தை விட்டு வெளியே வந்துவிடுகிறார் ஆசிரியர்.

ஒரு தொழில் நகரத்தில் தான் எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான மனித குணங்கள், முகங்கள்.

மூன்றாம் கதையில் ஜெனரல் மேனேஜர் பதவி தேடி வந்தது, தேனமுதாக இனித்தது. பெரிய பதவி, பெரிய நிறுவனம், தொழில் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்வது, வளர்வது யாருக்குப் பிடிக்காது அப்படி விரும்பிப் போய் மாட்டிக்கொண்டது தான் இந்த மூன்றாம் முதலாளியிடம். 1990 களில் ஜோதிஜி அண்ணனின் கல்லூரி காலங்களில் இன்டியா டுடே பத்திரிக்கையில் திருப்பூர் ஆடை நிறுவனங்களில் முதல் பத்து இடங்களில் இருக்கும் நிறுவன முதலாளிகளுள் ஒருவர் என்பதற்காய் அவர் புகைப்படத்துடன் கூடிய பேட்டி வெளிவந்திருந்தது.

அதை நேர்முகத்தேர்வின் போது அவருடன் சொல்லி மகிழ்ந்தார். ஒரு காலத்தில் தன்னுடைய ஆதர்ஷ நாயகர்களில் ஒருவரான முதலாளியிடம் வேலை செய்யப்போகிறார் அதுவும் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கப் போகிறார். அவரிடம் நம்பிக்கை, எதிர்பார்ப்போடு சென்றால் அதற்கு நேர் எதிராய் பணப்பேயாக இருக்கிறார் அவர். எல்லாம் எனக்கு வேண்டும் எனும் பேராசையில் வேலை செய்ய யாருமின்றி நிறுவனம் காத்தாடிக்கொண்டிருந்தது. மெசின்கள் தொட ஆளின்றி தூசி படித்துக் கிடந்தது.

சரிந்து கிடந்த அத்தொழில் நிறுவனத்தை புனரமைத்து மீண்டும் இயங்க வைப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் சொந்த முயற்சியால் அந்நிறுவனத்தைக் கட்டி எழுப்பி லாபத்தைக் காட்டினால் அது முதலாளிக்கு பத்தவில்லை. கொடுக்க வேண்டியவர்களுக்குப் பணம் கொடுக்க விருப்பமில்லை. புதிய முதலீடுகளில் பணம் போட மனமில்லை. மனைவி, மகன், மகள் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவிக்க ஆசை வாங்கிக்குவித்தார்.

தொழிலாளிகள், கான்ராக்டர்கள், சிறு முதலாளிகள் என அத்தனை பேரையும் ஏய்த்தும் பொய்த்தும் உருவாக்கிய தன்னுடைய தொழில் சாம்ராஜ்யம் என்ன ஆனது? அநியாயமாய் சம்பாதித்த பணம் தங்குமா என்ன? கற்பனையினூடே அல்ல தன் வாழ்வியல் அனுபவத்தினூடே இக்கதையில் விளக்குகிறார் ஆசிரியர்.

பேராசை பெருநஷ்டம் சொல்கிறது இக்கதை.

திருப்பூரில் தன் வீட்டில் வைத்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தேடி வந்த தென்றல், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வழியாகப் புயலாக மாறியதை தன் புயல் வேக எழுத்து நடையால் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். எங்கோ நடக்கும் நிகழ்வுகள் நம் வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை இக்கதை மூலம் அறிய முடிந்தது. லிபியாவில் கடாபி வீழ்ந்தது தெரியும்.

ஆடைகளை கன்டெய்னரில் லிபியாவிற்கு அனுப்பிவிட்டு இங்குக் காத்திருந்த ஜோதிஜி அண்ணனைப் போல் எத்தனை பேர் கனவுகள் லட்சியங்கள் வீழ்ந்ததோ யாருக்குத் தெரியும். இவர் எழுதியதால் நமக்குத் தெரிந்தது. தெரியாமல் எத்தனை எத்தனையோ பேர் வீழ்ந்திருக்கக் கூடும் என்பதைச் சொல்கிறது இக்கதை.

விதியின் முன் மதி சில நேரம் மண்டியிடத்தான் செய்கிறது.

"எனக்கு இனி பணம் தேவையில்லை திருப்தி தான் முக்கியம்" இதைச் சொன்ன முதலாளி தான் இந்த ஐந்து முதலாளிகளின் கதைக்கு நாயகன் என்று நான் கருதுகிறேன். போதும் எனும் இடத்திலே லட்சுமி நிரந்தரமாய் குடியிருப்பாள் என்பதை தன் வாழ்வு மூலம் நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியார் இந்த முதலாளி.

நேர் வழி, அகலக் கால் விரிக்காத குணம், கடுமையான உழைப்பு, கொடுக்கல் வாங்கலில் வெளிப்படைத் தன்மை, சீரான முன்னேற்றம், தொழில் நுட்பம் புரியவில்லை விடு, தெரிந்ததைத் தெளிவாகச் செய்யும் அறிவு, அத்தனைக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருத்தல், அதைப் பாதுகாத்தல், எல்லாத்திற்கும் மேல் போதுமென்ற மனம் இது இருந்தால் போதும் இந்த முதலாளி போல் வெற்றி பெறலாம் தொழிலில் மட்டுமல்ல வாழ்விலும் தான்.

மது, மாது, புகழ் மயக்கத்தில் விழாது வெற்றியைத் தக்க வைத்த முதலாளியின் வாழ்வு நமக்குள் தன்னம்பிக்கை வளர்க்கும் விதை இக்கதை.

புத்தகம் என்பது வெறும் பொழுது போக்கல்ல அது நம் வாழ்க்கை பாதையை மடை மாற்றிவிட வல்லது. நம்மை மாற்றி யோசிக்க வைப்பது. புதிதாகச் சிந்திக்க வைப்பது. புதிதாய் வாழக் கற்றுத்தருவது. இப்புத்தகம் இவை அத்தயையும் ஒருங்கே நமக்குத் தருகிறது.

இது ஒரு நம்பிக்கை நூல். நமை நல்வழிப்படுத்தும் நூல். தொழில் முனைவோராய் மாற்ற முயலும் நூல். நம் உள்ளத்தில் உள்ள எதிர் மறை எண்ணங்களைத் துடைத்தெறிந்து நேர்மையாய் நெஞ்சுறுதியாய் வாழ்ந்தால் எழலாம் லயிக்கலாம் என்பதைச் சொல்லும் சுய முன்னேற்ற நூல். இந்த புத்தகம் பலரிடம் போய்ச் சேர வேண்டும். அவர்கள் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். திருப்பூருக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொருவருக்கும் பாதை காட்டும் கலங்கரை விளக்கம் இந்த நூல்.

இச்சிறந்த புத்தகம் போட்டியில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும் எனில் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்யுங்கள், முழுமையாய் படியுங்கள், ஐந்து நட்சத்திர குறியீட்டை வழங்குங்கள். உங்கள் விமர்சனங்களை ஆங்கிலத்தில் தாருங்கள். நல்ல ஒரு புத்தகத்தை நீங்களும் நாலு பேருக்குச் சொல்லுங்கள். உங்கள் அனுபவங்களைப் படையுங்கள் படைத்து இது போன்று மற்றவர்களும் பயன்படும் வண்ணம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதற்கு உங்களை ஊக்கப்படுத்தும், தொழில் முனைவோராய் மாற்ற உற்சாகப்படுத்தும் உன்னத வேலையைச் செய்யும் இப்புத்தகம்.

அன்புடன்,

கொல்லால் எச். ஜோஸ்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய அல்லது தொலைவில் உள்ளது... நன்றி...

ஜோதிஜி said...

50 க்குள் மாறி மாறி வருகிறது.