Friday, November 29, 2019

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 

அன்புள்ள ஜோ

எவரும் வாசிக்க விரும்புவதே இல்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளதே?

உண்மையிலேயே மக்களிடம் வாசிப்பு பழக்கம் உள்ளதா? இல்லையா?

அன்புள்ள ஜா

சில வாரங்களுக்கு முன் பிறந்த ஊருக்குச் சென்று இருந்தேன். ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக் கொண்டே வந்த போது நான் ஒரு காலத்தில் விரும்பிச் சென்ற அண்ணா படிப்பகம் உள்ளே சென்று அரை மணி நேரம் அமர்ந்து இருந்தேன். அதே இருபதுக்கு இருபது சதுர அடிப் பரப்பு. அதே கீற்றுக் கொட்டகை. அதே முரசொலி. இன்னும் கொஞ்சம் திமுக ஆதரவு பத்திரிக்கைகள், புத்தகங்கள். 29 வருடங்களுக்குப் பின்பு நான் அங்கே சென்றேன். உள்ளே எப்போதும் போல நாலைந்து பேர்கள் நெருக்கியடித்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரி விடாமல் படித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். அடுத்தவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.




இனி இங்கே நீ வாசிக்க ஒன்றுமில்லை. ஒட்டடை படியும் போது உன்னை அழைக்கின்றேன். ஒடிப்போ என்று விரட்டியடித்த நூலகரைப் பார்க்க நூலகத்திற்குச் சென்று இருந்தேன். புதிய நூலகர், புதிய இடம். புதிய கட்டிடம். உள்ளே இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். நாலைந்து அக்காமார்கள் புத்தகம் எடுத்து பதிவேட்டில் பதிந்து கொண்டிருந்தார்கள்.

பரபரப்பான திருப்பூரில் தலைமை நூலகத்திற்குள் செல்லும் போதெல்லாம் ஒன்றைக் கவனிப்பேன்.

கடன்காரர்களுக்குப் பயந்தவர்கள், அலுவலக வேலையாக வெளியே வந்து டிமிக்கி கொடுத்து விட்டு உள்ளே அமர்ந்து ஹாயாக இருப்பவர்கள், பிக்பாக்கெட் கோஷ்டிகள், கடலை மன்னர்கள் இந்தக் கூட்டத்துடன் படிக்கும் கூட்டம் என்பது இன்று வரையிலும் பெரும்பான்மையாக உள்ளது.

வாரப்பத்திரிக்கைகளை நான் சமீப காலமாக வாங்காமலிருந்தாலும் காதலியைப் பார்க்கும் வாஞ்சையுடன் ஒவ்வொரு பத்திரிக்கை மற்றும் இதழ்களின் வால் போஸ்டர்களை ஆர்வமாகக் கவனிப்பதுண்டு. இந்த வாரம் எந்தச் செய்தி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது? கடைக்காரர் உடன் உரையாடுவதுண்டு. வாங்குபவர்கள் குறைந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வாரமும் நாலைந்து புத்தகங்களை விடாமல் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் அப்படியே தான் இருக்கின்றார்கள். அடுத்த வாரம் இதழ்களின் நிர்வாகத்தைக் கேவலமாகத் திட்டிக் கொண்டே மறுபடியும் வாங்குகின்றார்கள் என்றார்.

நேற்று தான் Good Reads தளம் மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தது. அவ்வப்போது அனுப்பும். நான் கண்டு கொள்வதில்லை. நேற்று உள்ளே சென்று பொறுமையாகப் பார்த்த போது என் 5 முதலாளிகளின் கதை பலரின் தேர்வில் இருந்தது. பலரும் பரிந்துரை செய்து இருப்பதைப் பார்த்தேன். பலரும் படித்துக் கொண்டு இருப்பதாக அவர்கள் குறிப்பில் எழுதி வைத்து இருந்தனர். அவர்கள் மூலம் உள்ளே சென்று பலரின் விருப்பங்கள், தேர்வுகள், படித்த புத்தகங்கள், படிக்க விரும்பும் புத்தகங்கள் என்பதனை முழுமையாகக் கவனித்த போது வியப்பாக இருந்தது.

உணர்ந்தது ஒன்றே ஒன்று தான்.

உலகம் பெரிது. விருப்பங்கள் வெவ்வேறானது.

அவரவர் உலகத்தில் அவரவர்கள் வாழ்கின்றார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கூட அடுத்த நாள் காலை வரைக்கும் காத்திருக்க வேண்டும். இப்போது அடுத்த கண்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை அடுத்த நொடியில் பார்க்கின்றோம்.

வாரத்தில் ஒரு முறை தொலைக்காட்சியில் பாடல்களைப் பார்த்துப் பரவசமடைந்த நிலை மாறி இன்று இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட அலைவரிசைகளைப்பார்க்கும் அளவிற்கு மைக்ரோ செகண்ட் அளவில் நம்மை வேறு சிலர் இழுத்துக் கொண்டே செல்கின்றனர்.

மாதம் ஒரு மாதம் திரைப்படம் பார்த்தால் பெரிது என்ற நிலை மாதிரி இன்று வீட்டில் இருந்தபடி முப்பது நாளும் உலகத் திரைப்படம் முதல் உள்ளூர் திரைப்படங்கள் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்கும்.......

இந்தச் சூழலில் நூறுபேர்கள் படிக்கின்றார்கள் என்றால் அது 10 000 பேர்களுக்குச் சமம். இந்த நூறு பேர்களில் நிச்சயம் பத்துப் பேர்கள் நிரந்தர வாசகர்களாக இருந்து விட்டாலே போதும்.

வலைப்பதிவுகளில் வரும் விமர்சனங்களைப் பாருங்கள். அது குடும்ப ரீதியான பாசப் பிணைப்பு போலவே இருக்கிறது.

உடனடி அங்கீகாரம் தேவைப்படுகின்றவர்களுக்கு சமூக வலைதளங்கள் உதவுவதைப் போல உள்ளார்ந்த ஈடுபாடுகளைப் பகிர்ந்து கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இங்கே இன்னமும் உள்ளது. அது பயன்படுத்துபவர்களின் தேர்வைப் பொறுத்து மாறுபடும்.

30 நாளும் பிரியாணி தின்று பாருங்கள். 31வது நாள் மருத்துவமனையில் இருப்பீர்கள்.

வெளிச்சத்தையே விரும்பி செயல்படுபவர்கள் ஒரு நாள் எனக்கு இந்த வெளிச்சம் மன அழுத்தத்தை உருவாக்குகின்றது. நான் மாற விரும்புகிறேன் என்று உருவாக்கிய கணக்கு அனைத்தையும் முடக்கி விட்டு வெளியேறி விடுவார்.

ஒவ்வொருவரும் ஒரு நாள் மாறித் தான் ஆக வேண்டும்.

நாம் கண்களை மூடிக் கொண்டு உலகமே இருட்டாக உள்ளது என்று புலம்பத் தேவையில்லை.

தற்போதைய உலகம் விருப்பங்களுக்கான உலகம்.

விரும்புவர்களுக்கு(ம்) அந்த வாய்ப்பு இருப்பதால் மாற்றங்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

ஜோ

#5MuthaleegalinKathai
#Pentopublish2019
#AmazonLongform
#JothiGanesan
#5முதலாளிகளின்கதை

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இந்தச் சூழலில் நூறுபேர்கள் படிக்கின்றார்கள் என்றால் அது 10 000 பேர்களுக்குச் சமம். இந்த நூறு பேர்களில் நிச்சயம் பத்துப் பேர்கள் நிரந்தர வாசகர்களாக இருந்து விட்டாலே போதும்.

உண்மை

Rathnavel Natarajan said...

அருமை