Sunday, November 17, 2019

பிறந்த ஊர் நினைவுகள்

ஒவ்வொரு சமூகமும் தமிழகத்தில் தனக்கென தனித்த அடையாளங்களைக் கொண்டு, வாழ்க்கை முறையை அமைத்துள்ளார்கள். அந்த முறையைக் கொண்டு தான் வாழ்ந்தும் வருகின்றார்கள்.

அதுவே தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றது. நாம் விரும்பலாம். விரும்பாமல் புறக்கணிக்கலாம். கண்டு கொள்ளாமல் தவிர்க்கலாம். ஒவ்வொரு ஊரிலும் இதற்கென வருடம் தோறும் கூடுவார்கள். கூடுகிறார்கள். இன்னமும் இங்கே இப்படித்தான் உள்ளது. புலம் பெயர்ந்து வந்தாலும் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் நாம் தவிர்க்கலாம். எதிர்க் கேள்விகள், நக்கல், நையாண்டிகள் செய்யலாம்.





நம் விருப்பங்கள் மாறியிருக்கும். உருவான கொள்கைகள் நம்மை வழி நடத்தும். ஆனால் தலைமுறை மாற்றங்கள் இன்னமும் இது போன்ற சமூக நிகழ்வில் பெரிதான மாற்றங்களை உருவாக்கவில்லை என்பது தான் உண்மையே.

காரணம் சில சமூகம் மட்டுமே அறிவை துணை கொண்டு பயணிப்பார்கள். சிலர் வன்முறை கையில் எடுப்பார்கள். இது மாவட்ட வாரியாக நடக்கும் குற்றச் சம்பவங்களை வைத்தே நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அறிவை துணை கொண்டவர்கள் ஆலயம், அன்னசத்திரங்கள், பள்ளிக்கூடங்கள் கட்டினார்கள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டினார்கள். மறைந்து விட்டார்கள். விதைகள் இன்று விருட்சமாக ஆலமரமாக படர்ந்து விரிந்து பூக்களோடு இன்று சமூக மாற்றத்திற்கு காரணமாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து அழைப்பு வரும். காரணங்கள் சொல்லித் தப்பித்து விடுவோம் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்கறையாக அழைத்துச் சொல்வார்கள். இப்போது கண்டு கொள்வதில்லை. தண்ணீர் தெளித்து விட்டார்கள் என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

எவரும் கவலைப்படமாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் அமைதியான நதி போலப் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இன்று வரையிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஊரில் கும்பாபிஷேகம் என்று என்னைச் சிலர் வரச் சொல்லியிருந்தார்கள். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அல்ல. காரணம் நான் ஒன்பதாவது படிக்கும் போது பிள்ளையார் கோவில் விசேடங்களில் கலந்து கொண்டுள்ளேன். அதற்குப் பிறகு கால மாற்றத்தில் எண்ண மாற்றங்களில் எல்லாமே மாறிவிட்டது. இப்போது என்னை வரச் சொன்னவர்கள் இந்த கோவில் அறங்காவல் குழுவில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள்.

என் எழுத்தை வாசித்து இருப்பார்கள் போல. வேறொரு வேலையாக என்னை வரச் சொல்லி இருந்தனர். அவர்கள் குடும்பம் தான் ஊரில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி என்ற நிலையில் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையும் இவர்கள் நடத்தும் பள்ளியில் தான் படித்து வெளியே வந்தோம். என் தங்கை இங்கே தான் ஆசிரியராக பணியாற்றினார்.

நான் எட்டாவது முடித்து வெளியே வந்த போது பெண்கள் பள்ளியாக மாறியது. இப்போது தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி என்று மூன்று பிரிவாகப் பிரிந்து ஆயிரம் பெண் குழந்தைகள் படிக்கின்றார்கள். இதில் ஆங்கில வழிக் கல்வி, தமிழ்க் கல்வி என்று இரண்டு பிரிவாகவும் உள்ளது. மொத்தம் ஆயிரம் மாணவிகள் படிக்கின்றார்கள்.

என்னை ஏன் வரவழைத்தார்கள்? என்ன சொன்னார்கள்? என்பதனை அடுத்த மாதம் இறுதியில் எழுதுகிறேன். அது என் வாழ்வில் கிடைக்கவிருக்கும் "உட்சபட்ச அங்கீகாரம்". கூடவே நடந்து முடிந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு என உருவாக்கப்பட்ட விழா மலருக்கு ஒரு கட்டுரை கேட்டு இருந்தார்கள்.

நாம் தான் எந்த சமூகத்திற்குள்ளும் சேர்வதும் இல்லை. நுழைய விரும்புவதும் இல்லை. வீட்டில் ஏற்கனவே தண்ணீர் தெளித்து விட்ட காரணத்தால் நான் எழுதினால் அது சரியாக வராது? என்று மறுத்தேன். காரணம் ஏற்கனவே அம்மா "நீயெல்லாம் எப்படா திருந்தப் போகின்றாய்?" என்று அவ்வப்போது அன்போடு ஆசீர்வாதம் செய்வார். இன்னமும் இந்த ஆசீர்வாதம் குறையாமல் அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நாம் நினைப்பதை எழுதினால் அது பல பஞ்சாயத்துக்களைக் கொண்டு வந்து சேர்த்து விடும் என்ற பயமும் ஒரே காரணம். மறுத்தேன். அவர்கள் விடுவதாக இல்லை. "நீங்க எழுதுவதை நாங்கள் திருத்த மாட்டோம். மற்றவர்களுக்கு ஒரு பக்கம். உங்களுக்கு உங்கள் கட்டுரை எத்தனை பக்கம் வருகின்றதோ? அதனை அப்படியே போடுகின்றோம்" என்றார்கள்.

ஒரு மணி நேரத்தில் ஊர் நினைவுகள், அப்பா நினைவுகளுடன், பிள்ளையார் கோவிலைச் சுற்றியிருந்த சமூக அமைப்பு, முன்பு இருந்த பக்தி மார்க்கம், மாறிய மக்களின் மனோபாவம், இப்போது பக்தி என்ற பெயரில் மக்கள் செய்யும் கயமைத்தனம் என்று கலந்து கட்டி பயந்து கொண்டே அனுப்பி வைத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் அத்தனை பேர்களுக்கும் அதிலிருந்த உண்மை பிடித்து விட்டது.

ஒரு வரி கூட இந்தக் கட்டுரையை மாற்ற வேண்டாம் என்று மலரை உருவாக்கியிருக்கிறார்கள்.

வீட்டில் யாரிடமும் இதுவரையிலும் சொல்ல வில்லை. விழா மலர் வருவதற்கு முன்பே அம்மா என் மேல் மலர் தூவி மரியாதை செய்து விடுவார்.

டிசம்பர் 22 மீண்டும் வர வேண்டும் என்று சொல்லி உள்ளனர். விழாவில், விழா மலரில் பங்கெடுத்தவர்களுக்குப் பாராட்டு விழா என்று சொல்லியுள்ளனர். மனைவியுடன் ஒரு மகளும் சேர்ந்து கொண்டு "உங்களைக்கூட இன்னமும் உலகம் நம்புகிறது?" என்று கிண்டலடிக்கின்றார்.

கும்பாபிஷேகம் நடந்த போது ஒவ்வொரு தெருவாகச் சுற்றி வந்தேன். என்னுடன் வந்த பழைய நண்பன் நடக்க முடியாமல் சோர்ந்து விட்டான். ஒவ்வொரு சின்ன சந்துக்குள்ளும் பல பென்ஸ் வாகனங்களைப் பார்த்தேன். முக்கிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள அத்தனை கணவான்களும் நான்கு முழ வேட்டிக் கட்டிக் கொண்டு, நவீன ரக வாழ்க்கை வாழும் பெண்கள் அடக்கம் ஒடுக்கமாகப் புடவை, தாவணி கட்டிக் கொண்டு நெற்றி நிறைய விபூதி வைத்துக் கொண்டு வயதான அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா பின்னால் மௌனமாகக் கோவிலுக்குச் செல்லும் பெருங்கூட்டத்தை நண்பனிடம் காட்டி இப்படிச் சொன்னேன்.

"திருப்பூரில் கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் வாங்கி பென்ஸ் வாகனம் வாங்கி மாதம் தோறும் இஎம்ஐ கட்டத் தடுமாறும் கூட்டம் அங்கே. ஆனால் இங்கே அரசாங்கத்தின் வரித் தொந்தரவுக்காக வாகனம் வாங்கி, கோவிலுக்கு நடந்து செல்லும் கூட்டத்தைப் பார்" என்றேன்.

காலம் இழுத்துக் கொண்டே செல்கிறது. பின்னால் பயணியாகப் பயணித்துக் கொண்டே செல்கிறேன்.

















8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// "உங்களைக்கூட இன்னமும் உலகம் நம்புகிறது?" //

ஆம்... இங்கும்...!

கரந்தை ஜெயக்குமார் said...

பின்னோக்கிப் பயணிப்பது சுகமே

'பரிவை' சே.குமார் said...

ஊருக்குச் சென்று வருதல் என்பதும்... அங்கு நாம் வாழ்ந்த, நேசித்த கட்டிடங்கள் முதல் மனிதர்கள் வரை எல்லாவற்றையும் பார்த்து மகிழ்தல் என்பதும் வரம்... அருமை அண்ணா.

Mohamed Yasin said...

35 வயதை கடந்த பின், நெடுதூரம் பயணம் மேற்கொண்ட ஒரு அயர்ச்சி ஏற்படுகிறது.. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை குறித்த தேடலும், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது அதிகமாக இருக்கிறது.. எனக்கு உறவினர்களிடையே பெரிய அளவில் தொடர்பு இல்லை.. உறவுகளிடையே பணம் பிரதான பொருளாக இருக்கிறது..

பள்ளி,கல்லூரி நண்பர்களிடம் ஓசி சோளமும், நாவல்பலமும், குச்சி ஐஸும், சாப்பாடும், டீயும் வாங்கி குடித்து வளர்த்ததால் உறவினர்களை விட நண்பர்களுக்கு நான் எப்பவும் முக்கியத்துவம் கொடுப்பவன்.. காலம் செல்ல செல்ல பழைய நிகழ்வுகள் குறித்து பேசவோ, நினைத்து பார்க்கவோ நண்பர்கள் விரும்பவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது..

குறிப்பாக அவர்களது கடந்த கால நிகழ்வுகள்!!! எப்படி இப்படி ஒரு மாற்றம் என்று என்னால் யோசிக்க கூட முடியவில்லை.. பல வருடங்களுக்கு பிறகு நேரிலோ, அலைபேசியிலோ பேசும் போது ஒரு வித பரவசம் ஏற்படும்.. ஆனால் எதிர் திசையில் எந்த ஒரு ஆர்வத்தை பார்க்கமுடியவில்லை.. நான் பேச்சை வளர்க்க எண்ணினாலும், பேச்சை முடித்து கொள்ளலாம் என்று தான் நினைக்கிறார்கள்..

நண்பர்கள் கடந்த கால நினைவுகளை அசை போட விரும்பவில்லையோ என்று தான் தோன்றுகிறது.. உங்களின் எழுத்துக்கள் ரசிக்கும் படி இருந்தது.. (டிசம்பர் 22 மீண்டும் வர வேண்டும் என்று சொல்லி உள்ளனர். ) கிளைமாக்ஸ் அன்று தான் என்று நினைக்கிறேன்.. பாதுகாப்பை பலப்படுத்தி சென்று வென்று வாருங்கள்!!!

ஜோதிஜி said...

என் பதிவை விட உங்கள் விமர்சனத்தை மிகவும் ரசித்தேன். ஊருக்குச் சென்று வந்த நிகழ்வுகளை ஒரு தொடர் போல எழுத எண்ணம். எழுதுகிறேன்.

ஜோதிஜி said...

யாசின் சொன்னதையும் படித்து விடுங்க குமார்.

ஜோதிஜி said...

நினைவுகளில் மட்டுமே முடியும்.

ஜோதிஜி said...

ஒய் பிளட். சேம் பிளட்.