Monday, October 07, 2019

சங்ககால தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்துள்ளனர்: உதயச்சந்திரன்...


தமிழக அரசு நிர்வாகத்தில் இஆப அதிகாரிகளின் பங்கும் பரிதாபங்களும் என்பது போன்ற தலைப்பில் யாராவது முனைவர் பட்டம் வாங்க முயன்றால் அதிகமான தகவல்களை நம்மால் அறிய முடியும். கூடவே துணை தலைப்பாக மாவட்ட ஆட்சியர் முதல் (கட்சி) மாவட்டச் செயலாளர் வரை என்ற தலைப்பையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

கடந்த 25 ஆண்டுகளில் தமிழக நிர்வாகத்தில் ஆட்சியர் பொறுப்பில் இருக்க வேண்டியவர்களின் தரம் கெட்ட தனத்தால் தமிழர்கள் கற்றதும் பெற்றதும் ஏராளம். ஆனால் ஊடகங்களுக்கு இது குறித்து கவலையில்லை. எந்த காலத்திலும் பேசவும் மாட்டார்கள். இது போன்ற மேம்பட்ட விசயங்கள் சராசரி தமிழர்களுக்கு வந்து சேராது. புரியவும் புரியாது.

இங்கு எல்லாமே அரசியல். எங்கும் அரசியல். எப்போதும் அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. இங்குள்ள ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொருந்தும்.

கடந்த 25 வருடங்களில் தமிழக அரசு நிர்வாகத்தில் குடிமைப்பணி எழுதி தேர்ச்சி பெற்று பதவிக்கு வந்தவர்களையும், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதம் பெற்ற காரணத்தால் பதவியைப் பெற்றவர்களையும் ஒப்பீட்டுப் பார்த்தால் உங்களுக்கு இதன் விபரீதம் புரியும். இதே தான் ஐபிஎஸ் முடித்து வருபவர்களின் கதையும். இங்கு ஒரு நுண்ணரசியல் உள்ளதைக் கண்டுகொள்ள வேண்டும்.

ஐபிஎஸ் முடித்து வரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் அரசியல்வாதிகளுக்குப் பணிவதே இல்லை. அஸ்ராகர்க் திருப்பூருக்கு வந்தார். மணல் கொள்ளையர்கள் மூச்சு முட்டி சாகும் நிலைக்கு வந்து சேர்ந்தார்கள். நான்கு பக்கமும் கேட் போட்டார். திருப்பூர் மாவட்டமே தனியாகத் தீவு போல ஆனது. துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பலரும் மாயமானார்கள்.

விடுவார்களா?

குறுகிய காலத்தில் தூக்கி விட்டார்கள். இப்போது சிபிஐ யில் தகுதியில் பதவியில் உள்ளார்.

மகாராஷ்டிராவில் பணியாற்றி தாதாக்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த தமிழர்,கமிஷனர் பதவி வரைக்கும் வந்து சென்ற வருடம் ஓய்வு பெற்றார். அவரிடம் பேட்டி எடுத்த போது தமிழகத்திற்கு எந்த காலத்திலும் வர விரும்பவில்லை என்பது தான்.

காரணம் இங்கு நடப்பது நிர்வாக அரசியல் அல்ல. அரசியலுடன் கூடிய அக்கிரம நிர்வாகம். கட்சி மாறலாம். காட்சி மாறாது.

ஆனால் தலைமைச் செயலகத்தைப் பாருங்கள். பெரும்பாலும் வடமாநில அதிகாரிகள் தான். ஏன் இப்படி? உமாசங்கர், இறையன்பு, உதயச்சந்திரன் இன்னும் பல தமிழக அதிகாரிகள் போன்றவர்கள் என்ன ஆனார்கள்?

இவர்களுக்குத் திறமை இல்லாத காரணத்தால் ஒதுக்கி வைத்து உள்ளார்களா? இல்லை தங்கள் செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் பழிவாங்குகின்றார்களா?

தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்ட உதயச் சந்திரன் மறைமுகமாக இங்குள்ள அரசியல்வாதிகளுக்குச் சொல்வது ஒன்றே ஒன்று தான்.

நான் பணிபுரிய வந்துள்ளேன். என்னை வெவ்வேறு துறைக்கு மாற்றலாம். ஆனால் என் பரந்துபட்ட அறிவை,ஆற்றலை, விருப்பங்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான்.

தொல்லியல் துறை ஒட்டடடை அடைந்து போய்க் கிடந்தது. இப்போது உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின்பு அறிவியல் பின்புலத்துடன் ஒவ்வொரு ஆச்சரியங்களும் நம்மைத் தேடி வந்து கொண்டேயிருக்கின்றது. தமிழர்களின் நாகரிகத்தை முழுமையாக மாற்றி எழுத வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

உதயச்சந்திரன் உருவாக்கி விட்டுச் சென்ற பாடத்திட்டங்கள் இங்குள்ள தனியார்ப் பள்ளிகளுக்கு மிகப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது என்பது உண்மை. அதே போல இப்போது இவர் வெளியிட்டுக் கொண்டிருக்கும் தமிழக சங்க கால ஆதாரச்சுவடுகளை தூக்கிக் கொண்டு எந்த கட்சி பேசப் போகின்றது? என்பதனை கவனித்துப் பாருங்கள்? அப்போது புரியும் இவர்கள் எப்பேற்பட்டவர்கள் என்று?

சங்ககால தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்துள்ளனர்: 

அமேசான் கிண்டில் பக்கம்இங்கே அரசியல் பேசாதீர்: அரசியலும் அரசியல் சார்ந்த நிலமும்

8 புத்தகங்களின் விமர்சனம்: வாசித்தே ஆக வேண்டிய புத்தகங்கள்

பயணிகள் கவனிக்கவும்: (முகவரியில்லா முகங்கள்)

மின்சார வாரியம் - மின்சார ஆணையமாக மாறிய (கண்ணீர்) கதை: கொள்ளையடிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்.

1 comment:

  1. திரு உதயச்சந்திரன் அவர்களைப் பற்றி அறிவேன். நன்றி.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.