Wednesday, October 02, 2019

சுடு சோம்பேறிகள்

செல்போனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்? 

அலைபேசி, திறன்பேசி, கைபேசி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டாலும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு பெற்றோர்கள் பரிசாக வழங்குவதை சமீப காலமாக அதிகம் பார்க்கிறேன்.  அவர்களின் அடுத்த மூன்று ஆண்டு கால பள்ளி வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடுகின்றது.

என் மகள்களிடம் சொன்ன விசயங்கள் இது.  தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.........

()

கல்லூரி செல்லும் போது அலைபேசியை உங்களுக்கு வாங்கித் தருவேன். நீங்க விரும்பும் BRAND எதுவாக இருந்தாலும் வாங்கித் தருவேன். அத்துடன் நீங்க விரும்பும் சேர்க்க வேண்டிய சமாச்சாரங்களையும் வாங்கித் தருவேன். ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

மகள்களும் சரி என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தோழிகள் ஒன்பதாம் வகுப்பு முதல் பயன்படுத்தி வருகின்றார்கள்.

1. சாலையில் செல்லும் போது இது போலப் புலம்பிக் கொண்டு செல்லக்கூடாது.

2. ஆறாவது விரல் போல உங்கள் கைகளில் வைத்திருக்கக்கூடாது.

3. குறுகிய கால பயணங்களில் இயர் போன் மாட்டிக் கொண்டு சுற்றிலும் இருப்பவர்களைப் பார்க்காமல், பார்வையிடாமல் சங்கீதங்களை ரசிக்க வேண்டிய அவசியமில்லை.

4. செட்டிங் அமைப்பில் முதலில் நோட்டிபிகேசன் சமாச்சாரம் அனைத்தையும் நீக்கி விட வேண்டும். முடிந்தால் நிரந்தரமாகத் தூங்க வைத்து விடவும்.

5. குறைந்தபட்சம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப் ல் இரண்டு மொழி அறிவை வளர்க்க, சோதிக்க உதவும் ஆப் களை வைத்திருங்கள்.

6. படம், பாட்டு, ஸ்டேட்டஸ், என்று எது வேண்டுமானாலும் பாருங்கள்.... கேளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்.

7. கல்லூரிக்குள் செல்லும் போது நிரந்தரமாகத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைத்து விடுங்கள். விடுதியில் தங்கி இருந்தால் படிக்கத் துவங்கும் நேரத்தில் சைலன்ஸ் மோடில் போட்டு வைத்து விடுங்கள்.

8. ஃபார்வேர்டு செய்திகளை படிக்காதீர்கள். உங்கள் சொந்த விபரங்களைப் பதிவேற்றாதீர்கள். எந்த ஃபார்வேர்டு செய்திகளையும் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். சாட்டிங் செய்கிற நேரத்தில் ஒரு மணி நேரம் அரட்டை அடிக்க வேண்டும் என்றால் கூட பரவாயில்லை. சம்மந்தப்பட்டவரை அழைத்துப் பேசுங்கள். அத்துடன் அதனை விட்டு வெளியே வந்துடுங்க.

9. பெண் தோழியாக இருந்தாலும் கருமாந்திரங்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தால் அவரை அழைத்து இலக்கிய செந்தமிழில் உள்ள வார்த்தைகளைப் பேசி உங்களை யார் என்று காட்டுங்கள். ஒரு முறை பார்க்கப் பழகி விட்டால் அந்த காட்சி உங்கள் மனதிலும் ஓடிக் கொண்டேயிருக்கும். அது குறித்த தேடலும் அதன் பிறகு உருவாகத் தொடங்கி விடும். அதுவே நிரந்தர பொழுது போக்காகவும் மாறிவிடும்.

மொத்தத்தில் தொழில் நுட்பம் உங்களுக்கு எதிர்கால தொழில் வாழ்க்கையை அடையாளம் காட்ட வேண்டும். உங்கள் செயல்பாடுகளால் அப்பா அம்மா பணிபுரியும் தொழிலைக் காவு வாங்கி விடக்கூடாது.

()

சென்ற வாரம் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஹாவ்டிமோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் பார்த்த போது...........

நேற்று இரவு நேரிழை காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது சிரித்துக் கொண்டேயிருந்தேன். காரணம் உள்ளது.

தமிழகத்தை அம்மையார் சந்தியா பெற்ற அருமைப்புதல்வி அரசாண்ட போது தேர்தல் சமயங்களில் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுத்த வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் காட்சியைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

காரணம் புதல்வியார் மேடையில் இருப்பார். நான்கு புறமும் குளிர்சாதனப் பெட்டி குளிரை வாரி வழங்கிக் கொண்டிருக்கும். மேடையின் தூர மூலையில் அந்தத் தொகுதி வேட்பாளர் தண்ணீரில் நனைத்த கோழிக்குஞ்சு போல வெடவெடத்து நின்று கொண்டிருப்பார். ஆடாமல் அசையாமல் கையை மேலே தூக்கிய வண்ணம் ஆசிரியருக்குப் பயந்த மாணவன் போலவே நின்று கொண்டிருப்பார்.
அப்படி தான் நேற்று ட்ரம்ப் நின்று கொண்டிருந்தார்.
மோடி பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவிலிருந்து சென்று அங்கே இந்த வேட்பாளர் தான் அடுத்த முறையும் வர வேண்டும் என்று கூடியிருந்த மக்களிடம் வாக்கு கேட்கின்றார்.

ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றார். இன்னும் என்னன்வோ நடக்கின்றது. மொத்த கூட்டமும் முன்பதிவு செய்து பணம் கட்டி உள்ளே வந்து ஆர்ப்பரிக்கின்றது.

ஒரு பக்கம் ரஷ்யா சென்று புதிய கட்டுமானத்தை உருவாக்கி விட்டு, அமெரிக்கா சென்று வேட்பாளரை அறிமுகம் செய்து முடித்து தமிழகம் வரப் போகின்றார். மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் கலந்துரையாடத் தயாராக இருக்கும் பிரதமர் மோடி தான் உண்மையிலேயே இன்றைய உலக சந்தைப் பொருளாதாரத்தின் பிராண்ட் அம்பாசிடர் என்றே சொல்லலாம்.

மொத்த உலகமும் வேறு திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நாம் தான் உணர மறுக்கின்றோம்.

அமெரிக்கா குறித்த கற்பிதங்கள் நேற்று முடிவுக்கு வந்தது.


()

சென்ற வார பரபரப்புச் செய்தியாக தமிழக உச்சநீதி மன்ற நீதிபதி தஹில் ரமானி அவர்கள் மேகலாயா செல்லமாட்டேன் என்று ராஜினிமா செய்தார்.


ஒரு செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும். சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் எல்லாமே ஒரே நேர்கோட்டில் அவர்களுக்கு உகந்த மாதிரி அதனை இழுத்துக் கொண்டு செல்வார்கள். இது போன்ற சமயங்களில் இதற்குப் பின்னால் நிச்சயம் வேறு ஏதோயிருக்கும்? காரணம் இல்லாமல் இது பெரிது படுத்தப்படுகின்றது என்று யோசித்துக் கொண்டே யாராவது அதனைப் பற்றி மட்டும் எழுதுகின்றார்களா? என்பதனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வருவேன்.

நெருங்கிய நண்பர்கள் அந்த துறை சார்ந்து இருந்தால் அழைத்துக் கேட்பதுண்டு. மேகலாயா நான் போக மாட்டேன். என் கௌரவம் என்னாகும் என்று பிடிவாதம் பிடித்த பெண்மணி குறித்து எனக்குக் கொஞ்சம் குழப்பம் இருந்தது. அதிசயமாக மொத்த வழக்குரைஞர்களும் ஒன்றாகக் கொடி பிடித்த போது சந்தேகம் வலுப்பெற்றது. ஆனால் உண்மையான காரணம் புரிபடவில்லை.

நேற்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் முக்கியமான தகவலைச் சொன்னார்.

நம் கிராமங்களில் பழமொழி ஒன்று சொல்வார்கள். சுடு சாதம் போட்டால் கூட கை சுடும் என்று சோம்பேறிகள் சொல்வார்கள். அவர்களைச் சுடு சோம்பேறி என்பார்கள். அதைப் போலவே இந்த பெண்மணி சரியான சுடு சோம்பேறி. தான் எந்த வேலைக்கு வந்தோமே அதனைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து இருக்கும் போல.

நீதிமன்றத்திற்குத் தினமும் தாமதமாகத்தான். ஆமாம் தினமும். அதன்பிறகு மதியத்திற்கு முன்பே கிளம்பிச் சென்று விடுவார். அப்புறம் அடுத்த நாள். இப்படித்தான் இவரின் பணி இருந்துள்ளது. மாற்றிக் கொள்ளவே இல்லை. அதாவது கோடைச் சுற்றுலா தளத்திற்கு சென்று வருவதைப் போல வந்துள்ளார்.

தன் அதிகாரம் மிக்க பதவியைக் கையாண்டு இருக்கின்றார்.

கவனித்து உள்ளார்கள். கண்காணித்து உள்ளார். சிலமுறை சொல்லியுள்ளார்கள். எதற்கும் சரியாகப் பதில் இல்லை. அதாவது சுகவாசி ஜீவன்கள்.

மொத்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடிய அனைத்து விசயங்களுக்கும் முடிவு சொல்லக்கூடிய, முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் மிக்க பதவியில் ஒருவர் இப்படி இருந்தால் இப்படி?

என்னைக் கேட்டால் இந்தப் பெண்மணி கிராமம் சார்ந்த சிறிய நீதிமன்றங்களில் கூட பணிபுரியத் தகுதியில்லாதவர் போலத் தான் இருக்கின்றார்.

ஆங்கில செய்தித்தாளில் நாகரிகமாக சில விசயங்களை சுட்டிக்காட்டி வந்தது.

அந்த பேப்பர் செய்தியில் "சிலை கடத்தல் விசாரிப்பு அமர்வை கலைத்தது", ஆளும் கட்சி மூத்த ஒருவருடனான உதவியில் மளமளவென இரண்டு அபார்ட்மென்ட்கள் வாங்கியதும்" கொலிஜியத்தின் புருவத்தை நெளிக்க வைத்தது என்பதும் சொல்லப் பட்டுள்ளது.

இப்போது சிபிஐ விசாரனை வரைக்கும் சென்றுள்ளது.



கிண்டில் பக்கம்



5 முதல் 50 வரை: ஐம்பது என்பது வயதல்ல

கடைசி எழுத்து: சுற்றும் முற்றும்


ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி!: அஞ்சலிக் கடிதங்களின் தொகுப்பு






4 comments:

கிரி said...

ஜோதிஜி உங்க பொண்ணுகளுக்கு கூறியது நல்ல அறிவுரை ஆனால், அவற்றைக் கடைபிடிக்க முடியாது என்பது கசப்பான உண்மை.

ஏனென்றால் எதிர்காலம் அப்படி. அவரவரே உணர்ந்தால் மட்டுமே அதனுடைய தாக்கம் இருக்கும்.

ஜோதிஜி said...

அவர்கள் என் கொள்கையின் படி அவர்கள் விருப்பங்கள் படி மாறி உள்ளனர். ஆனால் தோழிகள் ஒவ்வொருவரும் இவர்களை இழுத்துக் கொண்டே செல்கின்றனர். மறுபடியும் மறுபடியும் குளிப்பாட்டிக் கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது. ஓப்பீடு அளவில் 90 சதவிகிதம் விழிப்புணர்வுடன் அவர்களை அவர்களே உணரும் வண்ணம் மாற்றி உள்ளேன். அவர்கள் சுதந்திரமாக உணரும் வகையில் இருக்கின்றார்கள். நீங்க சொன்ன மாதிரி கல்லூரி வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலை சக தோழியர்கள், மனிதர்கள் எப்படி இவர்களை மாற்றுவார்கள் என்று தெரியவில்லை கிரி.

வெங்கட் நாகராஜ் said...

மகளுக்கான அறிவுரை சிறப்பு. இன்றைக்கு அலைபேசிகள் இளைஞர்கள் மட்டுமல்லாது பலருடைய நேரத்தினை கபளீகரம் செய்து விடுகிறது... நேற்று சென்னை விமான நிலையத்தில் சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும், இருந்ததில் இரண்டு மூன்று பேர் தவிர அனைவரிடமும் அலைபேசியும் அதன் பயன்பாடும் தான்! அந்த இரண்டு பேரில் நான் ஒருவன். மற்றவர் ஒரு பெண்மணி - புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

மற்ற தகவல்களும் நன்று.

ஜோதிஜி said...

இரண்டு நாட்கள் ஊர்ப்பயணம் சென்று வந்தேன். நீங்கள் சொல்லி உள்ளதைப் போல நான் பார்த்த காட்சிகளை எழுதுகிறேன். நன்றி வெங்கட்.