Friday, October 11, 2019

பெரியார் விமர்சனங்களும் பார்வையும்



வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருதுகிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘

1926 ஆகஸ்ட்டில் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த மதிப்புரை, 1930-ல் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த கர்ப்பத்தடை என்ற தலையங்கம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் திருவிசலூரில் ‘கல்யாண விடுதலை’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை.

அரசியல் துறைப் பேராசிரியரான சுனில் கில்னானி, ‘ பிபிசி ரேடியோ 4’ வானொலியில் ‘இன்கார்னேஷன்ஸ்: இந்தியா இன் 50 லைவ்ஸ்’ என்றொரு வரலாற்றுத் தொடரைத் தொகுத்து வழங்கினார். இந்திய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ஆளுமைகளில் ஒருவராக பெரியாரை சுனில் பட்டியலிட்டிருக்கிறார்.

பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘புனிதப் பசுக்களைச் சுட்டுத் தள்ளிய வீரர்’.

கேரளத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றாய்வாளர் மனு எஸ்.பிள்ளையின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான ‘தி கோர்ட்டிசன், தி மகாத்மா அண்ட் தி இத்தாலியன் பிராமின்’ இந்திய வரலாற்றை அறுபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் வழியே வெவ்வேறு கோணங்களிலிருந்து விவாதிக்கிறது.

‘துறவியின் பக்தியே உருவானவர் காந்தி என்றால், பெரியார் கலகத்தின் உதாரணம். கிராமக் குடியிருப்புகளை விதந்தோதியவர் காந்தி, பெரியாரோ ஆகாய விமானங்களையும் இயந்திரங்களின் வளர்ச்சியையும் வரவேற்றவர். காந்தியின் சீடர்கள் வெள்ளாடை உடுத்தி, பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார்கள் என்றால், பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தி வாழ்நாள் முழுவதும் உடலைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கப் போராடிக்கொண்டிருந்தார், பெரியாரோ தனது ஆடையைத் துறந்து நிர்வாணச் சங்கத்தில் சேரவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தயங்கவில்லை. ஒரு வைதீக இந்துவாக எரியூட்டப்பட்டார் காந்தி, பெரியாரோ புதைக்கப்பட்டார்’

ராமாயண நாயகியான சீதையை இந்தியப் பெண்களின் தூய்மைக்கும் சுயதியாகத்துக்கும் உதாரணமாக காந்தி வர்ணிக்கும்போது, அந்த இதிகாசத்தையே அபத்தம் என்று சாடியவர் பெரியார். லட்சியப் பெண்ணை உருவாக்குவதற்காக காந்தி முயன்றுகொண்டிருந்தபோது, பெரியாரோ சாதாரணப் பெண்களை தெய்வங்களாக மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் .

பெண்ணுரிமைப் போராட்டத்தில் ஆண்களிடமிருந்து நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்பது பூனைகளால் எலிகளுக்கு எப்படி விடுதலை கிடைக்குமென்று நம்புவதைப் போன்றது என்று பெரியார் எச்சரித்ததும் கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும்.

பெரியாரின் எழுத்தும் பேச்சும் இன்னும் குறைந்தபட்ச அளவில்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தக் குறை தொடர்வதே பெரியார் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படாததற்கான முக்கியக் காரணம்.

செ. இளவேனில்
இந்து தமிழ் திசை.


ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு கொண்டு வரப் போகும் தேர்வு குறித்து-----------


கல்லூரி ஆசிரியர்கள் பிளஸ் 2 ஆசிரியர்களைக் குறை சொல்வார்கள். பிளஸ் 2 ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புவரை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களைக் குறை சொல்வார்கள். 

அவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைக் குறைசொல்வார்கள். கல்லூரி ஆசிரியர்களை உண்மையான ஆய்வு வழிகாட்டிகள் குறைசொல்வார்கள். எதற்கு? வயதுக்குரிய கற்றல் திறனிலும் பொது அறிவிலும் காணப்படும் போதாமைகளைக் காண்பதால். ஒட்டுமொத்தக் கல்விப் புலத்தில் மிகப் பெரும் சீரழிவு நிகழ்ந்திருக்கிறது. இது ஏதோ பழனிசாமி ஆட்சியில் மட்டுமே நடப்பதாக இடதுசாரி, திராவிட இயக்க, தமிழ்த் தேசிய அறிவுஜீவிகள் முழங்குவார்கள். 

கருணாநிதி காலத்திலே தொடங்கி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இந்தச் சீரழிவு செழித்து வளர்ந்தது. 

அந்த ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் என்பவை வாக்குவங்கிகள்தாம். ஆசிரியர்களும், அவர் சம்பளம் உயர்த்தினார், இவர் அகவிலைப்படி உயர்த்தினார் என்பதற்காகவே அவர்களுக்கு வாக்கும் அளிப்பார்கள். இந்தப் புலத்தின் மிக முக்கிய stakeholderஆன ஆசிரியர்கள் என்றைக்காவது சுய விமர்சனம் செய்துகொண்டதுண்டா? 

சமூக நீதி, ஏழைகளின் மேம்பாடு என்று தொடர்ந்து பேசும் அமைப்புகள் தொழில் தர்மம் என்பதைப்பற்றி ஆசிரியர்களோடு எப்போதாவது விவாதித்ததுண்டா? இது ஒரு பெரிய குழப்பமான வலைப்பின்னல். இத்தனை இருந்தும் தமிழ்நாட்டுக் கல்வி நிலை ஓரளவுக்குத் தரமானதாக இருப்பதற்குக் காரணம் மனசாட்சியுள்ள ஆசிரியர்கள் சிலரும் கற்றலில் உழைப்பைச் செலுத்தும் மாணவர்கள் சிலரும்தாம். எளிதாக ஒருகாலத்தில் கிடைத்தது என்பதற்காகவே, நிறைய ஓய்வு கிடைக்கும் என்பதற்காகவே, சமூகத்தில் இன்னும் கொஞ்ச நஞ்சம் மரியாதை கிடைக்கும் தொழில் என்பதற்காகவே பலரும் ஆசிரியர்களானார்கள். தற்போதைய கவர்ச்சியாக ஊதியம்.

1990கள் வரைக்கும்கூட மாணவர்களின் கற்றல் திறனுக்கும் ஆசிரியர்களின் வகுப்பறை ஈடுபாட்டுக்கும் வினாத்தாள்களின் அமைப்புக்கும் மதிப்பீட்டுக்கும் ஏதோ ஒருவகை அர்த்தமுள்ள உறவு இருந்தமாதிரி தோன்றுகிறது. ஓரளவுக்குத்தான் தரம் என்றீர்களே, இப்போது பத்தாம் வகுப்பிலும், பிளஸ் 2 லும் 95% க்கும் மேல் மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். 

அதெல்லாம் ஊதிப் பெருக்கப்பட்ட சதவீதம். உலகத்தில் எந்தத் தேர்வு என்றாலும் 60-70 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி என்பது நிகழவே முடியாது. இங்குதான் எந்த தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட நூறு சதவீதத் தேர்ச்சி என்ற இலக்கு. இந்தத் தேர்வுகளில் தேர்வதற்கு பெரிதாக உழைப்பெல்லாம் வேண்டாம். சுமாரான மாணவனே 500க்கு 450 பெற்றுவிடுகிறான். மிகச் சூட்டிகையான மாணவனுக்கு 500க்கும் மேல் கொடுக்க முடியாது என்பதால் 499 என்பதோடும் சில சமயங்களில் 500 என்றும்/1199 என்பதோடும் நிறுத்திக்கொண்டு வருந்துகிறார்கள். மொழிப் பாடங்களில் 99ம் 100ம் எப்படிச் சாத்தியம்? ஒரு காலத்தில் ஆதீனங்கள் நடத்திய தமிழ்க் கல்லூரிகளில் படித்தவர்கள் தமிழ் சொல்லிக்கொடுத்தார்கள். அது ஒரு கனாக் காலம். 

அப்புறம் கலைக் கல்லூரிகளில் பி.ஏ. தமிழ் படித்தவர்கள் தமிழ் கற்பித்தார்கள். பரவாயில்லை. அதன் பிறகு ஒரு பெரிய தமிழ் மொழிப் புரட்சி நடந்தது பலருக்குத் தெரியாது. முதல் நாள் மாலைவரை கைவேலையையும் ஓவியத்தையும் (?) கற்பித்தவர்கள் பி. லிட். தமிழ் என்று ஒரு படிப்பைத் தபால் மூலம் படித்து அடுத்த நாள் காலை தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்கள். இப்போது புரிகிறதா ஏன் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் ஊடக வல்லுநர்களிடமும் தமிழ் இந்தப் பாடு படுகிறது என்பது? 

தேர்வு வாரியங்கள் வாரி வழங்கும் இந்தத் தேர்ச்சி வீதத்துக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ள ரொம்ப அறிவெல்லாம் வேண்டாம். நீட் தேர்வுக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தமிழ்நாட்டில் பிளஸ் 2 பாடத்திட்டம் பதினைந்து ஆண்டுகளாக ஹுமாயூன் காலத்தியதாக இருந்ததைப் பற்றிப் பேசினார்களா? இப்போது பாடத்திட்டம் மாறியுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும்.

இத்தனை பெரிய முன்னுரை வேண்டியிருக்கிறது ஒரு விஷயத்தைச் சொல்ல. இப்போது ஐந்தாம் வகுப்பு முடிவிலும் எட்டாம் வகுப்பு முடிவிலும் தேர்வுகள் என்று அறிவித்தவுடன் வரும் எதிர்ப்பில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தத் தேர்வு ஏதோ பத்து வயது குழந்தைமீது ஏவப்படும் வன்முறை என்றெல்லாம் பேசுகிறார்கள். 

ஐந்தாம் வகுப்பு மாணவனை ஐ.ஐ.ட்டி. நுழைவுத் தேர்வு எழுதச் சொல்வது போல பீதியூட்டுகிறார்கள். இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதெல்லாம் மாயை. ஐந்து வருடங்கள் படித்ததில் குறைந்த பட்சம் முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற மாட்டானா? அதற்கு அவனைத் தயார் செய்வதுதானே ஆசிரியர்களின் வேலை? இப்போது எட்டாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வுகள் இருந்தாலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. 

இதில் பள்ளி ஆசிரியர்கள் சிலருமே குறை காண்கிறார்கள். அறிவிக்கப்பட்டுள்ளதைத் தேர்வு என்று சொல்ல முடியாது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் மதிப்பிடுதல் என்றுதான் இதற்குப் பொருள். தேர்ச்சி பெறவில்லையென்றால் எந்தக் குழந்தையையும் வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள். 

அடுத்த வகுப்புக்குப் போவான். புதிய கல்விக் கொள்கையில் குறைகாண வேறு பல உண்டு. குளிப்பாட்டியத் தண்ணீரோடு குழந்தையையும் எறிந்துவிடாதீர்கள். குழந்தைகள் நம் அனுமானங்களைப் பொய்ப்பிப்பார்கள்.


No comments: