கடந்து போன கோடை விடுமுறையில் வீட்டில் உள்ள நான்கு பெண்களையும் சென்னைக்கு அனுப்பி வைத்து இருந்தேன். இண்டு இடுக்கு விடாமல் ஒவ்வொரு பகுதியைப் பார்த்து வரச் சொல்லியிருந்தேன். நண்பர் ராஜா ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று காட்டினார். ராஜராஜன் திருமணத்திற்காகத் திட்டமிட்ட பயணமிது. நான் திருமணத்திற்கு முதல் நாள் அவர்களுடன் சென்று சேர்ந்தேன். நான் சென்று சேர்ந்த போது மியூசியம் என்ற அருங்காட்சியகத்தில் இருந்தார்கள்.
மகளிடம் கட்டாயம் மாநிலக் கல்லூரியைப் பார்த்து விட்டு வா? என்று சொல்லி அதற்கு முன்னால் இந்த காணொலியைப் பார்த்து விடு என்று சொல்லி மூவரையும் பார்க்கச் சொல்லியிருந்தேன்.
மாநிலக் கல்லூரியின் முதல் முதல்வர் திரு. பவல். முதலில் பள்ளியாகத் தொடங்கப்பட்டு பிறகு கல்லூரியாக மாற்றப்பட்டு படிப்படியாகத் தரம் உயர்த்தப்பட்டு பின்னாளில் மாநிலக் கல்லூரியாக மலர்ந்தது.
அவரது ஆறாவது தலைமுறை பேத்தி லண்டனிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக வந்து இருந்தார். இப்படியொரு தாத்தா இருந்தார் என்பது அவருக்குத் தெரியாது. அவரின் முகம் என்று எதுவும் தெரியாமல் கேள்விப் பட்டு தான் வசித்துக் கொண்ட இருக்கும் லண்டனிலிருந்து இங்கு வந்தார்.
வேறொரு நாட்டில் தன் தாத்தாவின் உருவச் சிலையைப் பார்த்த போது அவரின் உணர்வுகள் எப்படியிருந்து இருக்கும்? எத்தனை கோடி மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படித்து முடித்து வெளியேறியிருப்பார்கள்? 1840 ஆம் ஆண்டு வாழ்ந்தவர் இன்று 2019 ஆம் ஆண்டு வாழ்கின்ற தன் ஆறாவது தலைமுறைச் சங்கிலியுடன் உறவாடுகின்றார்.
+++++++++++
தேனி மாவட்டத்திற்கு ஒரு முறை மட்டும் சென்று அவசரமாகத் திரும்பும் சூழ்நிலையில் வந்து விட்டேன். அப்போது முல்லைப் பெரியாறு அணைப் பக்கம் செல்லவில்லை. ஜான் பென்னி குயிக் பற்றி முழுமையாக அறிந்திருக்கவும் இல்லை.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அணை கட்டத்திட்டமிடப்பட்டது. அதற்கு முன்னால் சேதுபதி மன்னர் தொடங்கி அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரிகளாலும் விடப்பட்ட திட்டமிது. 1884 ஆம் ஆண்டு பென்னி குயிக் தன் அணைக் கட்டும் நிதி ஆதாரத் திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்தார். 1893 ஆம் ஆண்டு இதன் திட்ட மதிப்பீடு 75 லட்சம். (அன்றைய மதிப்பு) ஆனால் திட்டம் தொடங்கப்பட்டு புயல் மழையில் அடித்துச் சொல்லப்பட்டு அரசாங்கமே இது முடியாது என்று வெளியே வந்த போது தன் சொத்துக்களை விற்றுக் கட்டிக் கொடுத்த பென்னி குயிக் அவர்களைத் தென் மாவட்ட மக்கள் இன்று தெய்வமாக வழிபடுகின்றார்கள். ஆறாவது தலைமுறையில் இவரைக் கொண்டாடுகின்றார்கள்.
https://www.youtube.com/watch?v=GYP-zs-uHBc
++++++++++++++
மகள்கள், அவருடன் படிக்கும் தோழிகள், நான் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது பார்க்கும் பழகும் உறவுகளின் அடுத்த தலைமுறைகளின் மனோபாவங்களைக் கூர்மையாகக் கவனிப்பதுண்டு.
எவரும் தன் தாய், தந்தையுடன் திருமணத்திற்குப் பிறகு பேசுவதைத் தவிர்க்கவே செய்கின்றார்கள். சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என்ற எந்த உறவு முறையாக இருந்தால் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் நலம் விசாரிக்கின்றார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு உறவாடத் தயாராக இல்லை.
வாட்ஸ் அப் இருந்தால் காலை வணக்கம் முதல் எரிச்சல் ஊட்டும் பலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஆனால் பேசத் தயாராக இல்லை. குறிப்பாக எவருடனும் மனம் விட்டுப் பேசத் தயாராக இல்லை. பேச்சுக் கலையை விரும்பவில்லை என்பதனை உணர்ந்து கொண்டேன்.
ஃபார்வேர்ட்டு தலைமுறையாக மாறியுள்ளது.
நான் ஆறாவது தலைமுறையைப் பற்றி யோசிக்கும் போது இவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றிக் கூட யோசிப்பார்களா? என்ற யோசனையும் வந்து போகின்றது. காரணம் மாற்றங்கள் அப்படியே ஒவ்வொன்றையும் அப்படியே அலை போல அடித்துக் கொண்டே செல்கின்றது.
சென்ற வார பதிவுகள்
6 comments:
எங்கள் வீட்டில் வளரும் பெண் பார்வோர்ட் தலைமுறையாக இல்லை அதுமட்டுமல்ல் டெக்ஸ்ட் அதிகமாக அனுப்பவுது இல்லை இரவு நேரத்தில் சாப்பிடும் சமயத்தில் உட்கார்ந்து அன்று நடந்த நிகழ்வுகளை பேசுவோம்
இப்போது குடும்பத்துக்குள் பேசுவதைக்கூட அலைபேசி பறித்துக் கொண்டுவிட்டது... அடுத்த தலைமுறை எப்படியோ.
// பேச்சுக் கலையை விரும்பவில்லை //
உண்மை... உண்மை... உண்மை...
அமெரிக்காவில் திருப்பூர் போல வாழ்க்கையா? வாழ்த்துகள். ஆனால் வெளிநாடுகளில் உள்ள சூழல் வேறு. மொழி, பழக்கவழக்கம் எல்லாமே மாறும். தமிழகம் இப்போது தான் முதல் தலைமுறை அலைபேசியை பயன்படுத்துகிறார்கள். நிச்சயம் இன்னமும 25 ஆண்டுகள் கழிந்து பின்பு தான் நிதானம் வரும் என்றே நினைக்கின்றேன். மற்ற அனைத்தையும் விட அலைபேசி இப்போது நம்பமுடியாத பெரிய சூறாவளி அலையை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருக்கின்றது. நல்லதும் கெட்டதும் இரண்டும் தான் உள்ளது. அப்பா அம்மா புரிந்து கொள்ள வேண்டும். வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடினம் தான்.
தலைமுறை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள ஒவ்வொரு முறையும் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே வழியை, வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்து விடும். பயப்படத் தேவையில்லை. கிறக்கம் மயக்கம் எல்லாமே குறிப்பிட்ட கால கட்டத்தில் மாறி விடும். மாறியே ஆக வேண்டும் என்ற சூழலில் கொண்டு வந்து நிறுத்தி விடும்.
இது குறித்து தனியாக பதிவு எழுதுகிறேன். தொடர் பதிவாக வரும் தனபாலன்.
Post a Comment