நரசிம்மராவ் என்ற பெயர் என் நினைவுக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஆனந்த விகடனில் மதன் பணியாற்றிய போது அவர் பிரதமர் நரசிம்மராவை பேட்டி கண்டு வெளியிட்ட கட்டுரை தான் முதலில் நினைவுக்கு வரும். இதில் உள்ள சில வார்த்தைகள் அப்படியே இன்னமும் மனதில் நிற்கிறது.
"அப்போது பம்பாய் கலவரம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. நான் நரசிம்மராவ் அவர்களைச் சந்தித்த போது அவர் வெள்ளரியில் பனித்துளி இருப்பது போல இருந்தார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. அவசரமும் இல்லை. சொல்லப் போனால் வெளியே இந்தியா எரிந்து கொண்டு இருக்கின்றது என்ற எண்ணமே அங்குள்ள சூழல் எனக்கு உணர்த்தவில்லை. அப்படித்தான் பிரதமரின் பேச்சும் இருந்தது. எனக்கு வியப்பாகவே இருந்தது" என்று எழுதியிருந்தார்.
அதன் பிறகு நரசிம்மராவ் பற்றி அறிந்த தகவல்கள் தினசரி மற்றும் வார இதழ்களின் வழியே மட்டும் தான்.
குறிப்பாக ஏ1 கிரிமினல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த அலங்கோல காட்சிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது மனக்கண்ணில் வந்து போகின்றது. உச்சக்கட்டமாக நரசிம்மராவ் மகனைச் சென்னையில் வைத்துக் கொண்டு கூட்டணி அரசியல், மற்றும் தான் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க ஏ1 கிரிமினல் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட் "கூட்டிக் கொடுக்கும்" அற்புத பணியைத் தொடங்கியதும், பாதிக்கப்பட்ட நடிகைகள் முதல் பலரையும் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
தமிழகத்திற்கு அனைத்து விதமான கலாச்சார சீரழிவிற்கும் வித்திட்ட ஏ1 கிரிமினலை ஒரு தட்டிலும் மற்றொரு தட்டில் நரசிம்மராவை வைத்திருந்தேன்.
ஆனால் வினய் சீதாபதி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் ஜெ.ராம்கி மொழிபெயர்ப்பில் கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ள நரசிம்மராவ் புத்தகம் மொத்தமாக என்னைத் திருப்பி போட்டு விட்டது. திடுக்கிடவும் வைத்து விட்டது என்றால் மிகையில்லை. நாம் எத்தனை தவறான எண்ணங்களை மனதில் வைத்திருந்தோம் என்ற ஆதங்கமும் உருவானது.
ஜெ. ராம்கியின் மொழிபெயர்ப்பு என்பது நேரிடையாக தமிழில் எழுதியுள்ளதைப் போல இருப்பது தான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான வெற்றி.
தமிழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கவர்ச்சி, உணர்ச்சி இரண்டுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இது மக்களின் மனோபாவம் சார்ந்தது அல்லது மக்களை அப்படி மாற்றி வைத்து இருக்கின்றார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் தலைவர்கள் என்ற பெயருக்கு உண்டானவர்களின் தனித்திறமைகள், நிர்வாக ஆளுமைகள், அதனால் விளைந்த மொத்த சமூக மாற்றத்தையும் எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை. அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.
இதனை மனதில் வைத்துக் கொண்டு தேசிய அரசியலை மொத்த மாற்றி அமைத்தவரும், இன்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் எல்லாவித தொழில்நுட்ப வசதிகளுக்கும் பிதாமகன் என்றால் அது நரசிம்மராவ் மட்டும் தான் காரணம் என்றால் அது ஒரு துளி மிகையில்லை.
காந்தி இருந்த போது காங்கிரஸ் என்பது வேறு. நேரு ஆண்டு போது காங்கிரஸ் என்பது முழுமையாக மாறியது. எல்லாவிதமான பயிற்சிகளும் பெற்று இருந்தாலும் இந்திரா காந்தி அம்மையார் வைத்திருந்த காங்கிரஸ் ன் முகம் முழுமையாக முற்றிலும் அது வேறுவிதமாக மாறியது. அது ராஜீவ்காந்தி கைக்கு வந்து சேர்ந்த போது பனிக்கட்டி உருகி இறுதி நிலையில் இருப்பதாக இருந்தது.
உருகிக் கொண்டிருந்த கட்சியைக் கடைசி காலகட்டத்தில் முழு உருவமாக மாற்றியவர் நரசிம்மராவ். அவர் கட்சியைத் தனிப்பட்ட முறையில் வளர்க்கவில்லை. ஆனால் கட்சியின் சார்பாக, நான் வகித்த பிரதமர் என்ற பதவியின் மூலம் இந்திய நாட்டை தலைகீழாகப் புரட்டிப் போட்டார் என்பதே உண்மை.
அடுத்த மாதம் சாமியாராகப் போகிறேன் என்ற நினைப்பில் உள்ள, முழுமையாக ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கி குப்பை போல மாற்றப்பட்ட ஒருவர் வாழ்க்கையில் சரஸ்வதி சபதம் படத்தில் வருவது போல யானை மாலை போட்டு மன்னராக மாற்றினால் எப்படியிருக்கும்?
அதனை அதிர்ஷ்டம் என்பீர்களா? இந்தியாவின் நல்லூழ் என்பீர்களா? அது தான் 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்தது.
நாட்டுக்கு நல்லூழ் இருந்ததே தவிர நரசிம்மராவ் வாழ்க்கை முழுக்க தீயது மட்டுமே அவரைச் சுற்றி கடைசி வரைக்கும் சுழன்றடித்துக் கொண்டு இருந்தது.
பக்கா கிரிமினல் என்ற வார்த்தைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மாநில அரசியலில் வெற்றி பெற முடியும். ஆனால் ஆனால் பயங்கரமான புத்திசாலித்தனம் கலந்த கிரிமினல்தனம் இருந்தால் மட்டுமே இந்தியத் தேசிய அரசியலில் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதற்கு முக்கியமான முழு உதாரணம் நரசிம்மராவ் அவர்களே. வட மாநில அரசியல்வாதிகளிடம் இல்லாத பத்து மொழிகள் அறிந்த ஆளுமை இருந்தது.
மாநில அரசியலின் இண்டு இடுக்கு என்று ஒன்று விடாமல் கற்றுத் தெளிந்த லாவகம் இருந்தது. சோசலிசம் என்ன தந்தது? என்ன தரும்? என்ற தெளிவு இருந்தது? மாநில அரசியலில் தோற்றுப் போனால் என்ன நடக்கும்? சொந்த வாழ்க்கை எப்படி மாறும்? என்ற கடந்த கால அவரின் தோல்விக்கதைகள் அவருக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்து இருந்தது. உச்சத்தில் இருப்பதும், உயரத்தில் பறப்பதும் அடுத்த மாதமே அதளபாதளத்தில் வீழ்ந்து கிடந்தாலும் கடைசி வரைக்கும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல்தான் பிரதமர் பதவி வரைக்கும் அவரைக் கொண்டு வந்தது சேர்த்தது.
18 மணி நேரம் உழைத்தே ஆக வேண்டிய பிரதமர் பதவியுடன், உடல் முழுக்க நோய்களைச் சுமந்து வாழும் ஒரு 70 வயது முதியவர் புதிதாக அறிமுகமாகி உள்ள கணினி சார்ந்த அறிவியலை கற்றுக் கொள்ள முயல்வதும், அதுவும் ஆழ அகல அதற்குள் இறங்குவதும் என்பது நாம் நினைத்தே பார்க்க முடியாது.
சிங்கம் போல நிர்வாகத்தில் இருந்துள்ளார். நரி போலப் பல சமயம் ஒதுங்கியும் உள்ளார். கோஷ்டிகளைத் தூரத்தில் வைத்துத் தேவைப்படும் போது கொம்பு சீவியும் விட்டுள்ளார். தன்னை தக்கவைத்துக் கொள்ள அத்தனை தகிடுதத்தங்களை பொறுமையாகச் செய்துள்ளார். குறிப்பாகச் சோனியா என்பவரை எங்கே வைக்க வேண்டும்? எப்படி வைக்க வேண்டும்? என்பதனை மிகத் தெளிவாக அழகாக நேர்த்தியாகச் செய்துள்ளார். வச்சு செய்வது என்ற கலையைப் பற்றி இவர் தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்த பிதாமகன்.
ரிலையன்ஸ் நிறுவனத்தை வளர்ப்பதில் மட்டுமே கடைசி வரைக்கு அக்கறை காட்டிய, அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்படாத நிறுவனராக வாழ்ந்த பிரணாப் முகர்ஜி ஒரு பக்கம், அர்ஜுன் சிங் மறுபக்கம் என்று வடமாநில அரசியல் லாபி அனைத்தையும் ஆந்திரா காரச் சட்னி போலச் சுவைத்து நக்கியுள்ளார்.
ஆனால் இந்திரா முதல் சோனியா வரைக்கும் காங்கிரஸின் முக்கியக் கொள்கை பிரகடனமாக இருக்கும் எவரையும் வளர விடக்கூடாது? எவரும் எங்களை மீறி முன்னிலைப்படுத்தக்கூடாது என்ற உயரிய தத்துவங்களை உடைத்து நொறுக்கிய பெருமகனார் நரசிம்மராவ் அவர்கள்.
அவர் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதனை விட அடுத்த நகர்வு என்ன? என்பதனை யோசிக்க முடியாத அளவிற்கு தன் ஆட்சியை மக்கள் நல ஆட்சிக்காக அர்ப்பணித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் முதல் நிழல் உலகத் தொடர்புகள் வரைக்கும் எத்தனையோ இவரைச் சுற்றி சுழன்று அடித்தாலும் எதையும் தாங்கும் இதயம் போலவே இருந்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது.
ஐந்து பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் இவர் பெற்று இருந்தாலும் மனைவியைத் தவிர்த்து மற்ற இரு பெண்களிடம் எப்படி மயங்கினார்? இவர் வயதான காலத்தில் எதனைப் பரிமாறிக் கொண்டார் என்பது புதிராகவே உள்ளது?
இவர் இறந்தபின்பு எப்படி சோனியா பழிவாங்கினார் என்பதனை முழுமையாக வாசிக்கும் போது எதை விதைத்தோமோ அதுவே தான் கிடைக்கும் என்பது சோனியாவுக்குப் புரிய நியாயமில்லை. ஆனால் நிச்சயம் ராகுலுக்கு இப்போது புரிந்திருக்கும்.
இந்தப் புத்தகத்தின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு தலைவரைப் பற்றி எழுதும் போது அது ஒரு நபர் சார்பாகப் புகழ்ந்து அல்லது இகழ்ந்து தான் எழுதுவது தான் இங்குள்ள வாடிக்கை. காரணம் இங்குள்ள அரசியல் சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. ஆனால் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒவ்வொரு மாற்றத்தையும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எப்படிப் பார்த்தார்கள்? அவர்கள் கருத்து என்ன? என்பதில் தொடங்கி ஒரு விசயத்தை பத்து பேர்களின் பார்வையில் மிகுந்த நம்பகத்தன்மையுடன் அடுத்த நிகழ்வோடு தொடர்பு படுத்தி எழுதியுள்ளார்கள். குறிப்பாக பாப்ரிஜி மசூதி இடிக்கப்பட்ட பின்பு முன்பும் பின்பும் நடந்த ஒவ்வொரு சம்பவங்களை மிக அழகாக தொகுத்துக் கொடுத்துள்ளார்.
மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் எவரெல்லாம் நம்பிக்கைத் துரோகம் செய்தார்களோ ஒருவரையும் விடாமல் நரசிம்மராவ் அவர்களை ஏதோவொரு வகையில் ஏதோவொரு இடத்தில் சிக்க வைத்தும் சென்றுள்ளார்.
அது பலரின் அரசியல் வாழ்க்கையையும் அஸ்தமனமாக்கியுள்ளது. குறிப்பாக அத்வானி.
இந்தப் புத்தகம் உங்கள் வீட்டில் கீதை போல, பைபிள் போல, குரான் போல இருந்தே ஆக வேண்டிய புத்தகம். காரணம் நரசிம்மராவ் க்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்பது குறைந்த பட்சம் அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளளவாவது வேண்டும் என்பதற்காக.
இது நரசிம்மராவ் ன் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. முடிந்தே போய் விட்டது. திவாலாகி விட்டது என்ற உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டு இருந்த போது வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்று வீறு கொண்டு மீண்டும் எழ வைத்த இந்தியச் சரித்திரம் கொண்டாட வேண்டிய ஒரு நாயகனின் கதை மட்டுமல்ல.
இந்தியாவை 1991 க்கு பிறகு புரிந்து கொள்ள, அதன் தொழில் நுட்ப, சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையினை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த நூல் மிக மிக முக்கியமானது. மாறாத பிரியமும் நன்றியும். Ramki J
#Amazon
14 comments:
பாப்ரி மசூதி இடிப்பைத் தவிர்த்திருக்கலாமோ
நரசிம்மராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி) - அருமையான மதிப்புரை. இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
நரசிம்மராவ் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். அத்வானி நம்ப வைத்து கழுத்தறுத்தார்.
நன்றி
புத்தகம் வாங்கவேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
இதுபோன்ற பகிர்வுகளில் பதிவில் புத்தகம், பதிப்பகம், விலைபோன்றவற்றையும் குறிப்பிட்டால் நல்லது. கிழக்குப் பதிப்பகம் என்றுசொல்லியிருக்கிறீர்கள். விலை?
நரசிம்ம ராவ் - இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி.
மூலம் - வினய் சீதாபதி
தமிழில் - ஜெ. ராம்கி
கிழக்கு பதிப்பகம்.
விலை - 400 ரூபாய்
நான் கிண்டில் அன்லிமிட் ல் உள்ளேன். மாதம் 166 ரூபாய். வாரம் இரண்டு புத்தகம் படிக்கிறேன். பத்து புத்தகம் எப்படியும் படித்து விடுவேன். கணக்கு போட்டுப் பார்த்தால் 3000 முதல் 4000 ரூபாய் உள்ள புத்தகங்களை படிக்கின்றேன். ஒவ்வொரு புத்தகமும் கிண்டில் வடிவில் 1000 முதல் 1300 பக்கங்கள் உடையது. ராமசந்திரா குஹா இன்னமும்அதிகம். கிண்டில் வாங்க முடியுமா? என்று பாருங்க.
நன்றி.
கிண்டில் எனக்கு இதுவரை பழகவில்லை. மேலும் எனக்கு தமிழில் படிப்பது சௌகர்யம்.
நானும் உங்களைப் போல வாங்கி வைத்து ஆறு மாதங்களாக எரிச்சலாக வைத்து இருந்தேன். ஆனால் பயன்படுத்த முயற்சித்துப் பார்க்கவும். சொர்க்கம்.
நான் இன்னும் வாங்கவே இல்லை ஸார். :)))
PV நரசிம்மராவ் ஒரு பன்மொழி வித்தகர், நல்ல படிப்பாளி. ஒரு நல்ல அரசியல்வாதியா என்பதை அவரது கடைசிக் காலங்களை வைத்து மட்டும் எடைபோட முடியாது. சோனியாவின் பேராசை, வஞ்சகக்குணம் நரசிம்ம ராவை மட்டுமல்ல, நரசிம்மராவை இறந்தபின்னாலும் கூட அவமதித்த சண்டியர், நேரு குடும்ப விசுவாசி YS ராஜசேகர ரெட்டியையும், அவரது மரணத்துக்குப் பின்னால் ஜெகன் மோகன் ரெட்டியை ஒரு வலுவான எதிரியாக வளர்ந்துவிட்டது.
காங்கிரஸ் வளர்த்து விட்ட நபர்கள் இந்தியா முழுக்க மிக மிக அதிகம். பேராசை வஞ்சககுணம். மிகமிக சரியான வார்த்தைகள்.
Post a Comment