Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May
இராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தில் நடந்த நிகழ்வுகளை,
மாற்றங்களை உங்களுடன் இந்தச் சமயத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். பொதுவாக
நான் எழுதப் போகின்ற விசயங்களை எவரும் வெளிப்படையாக எழுத விரும்ப மாட்டார்கள்.
ஆன்மீகம், பக்தி, புனிதம் என்பதோடு சமூக அறிவியல் குறித்துப் பேச விரும்ப
மாட்டார்கள். ஆனால் நாம் பேசித் தான் ஆக வேண்டும். ஏன் என்பது முழுமையாக வாசித்து
முடிக்கும் போது உங்களுக்கே புரியும்.
பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக்கிய போராட்டத்தின் காரணமாக அரசியலில் வன்னியர் சாதிக்கென்று தனித்த அடையாளம் உருவானது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்தப் போராட்டங்கள் நடந்தாலும் அது கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இதற்குத் தீர்வு காணப்பட்டது.
வன்னியர் சாதிக்கென்று தனித்த இட ஒதுக்கீடு வழங்காமல் கருணாநிதி அவர்கள் அத்துடன்
மொத்தமாக 108 சாதிகள் மிகவும் பிற்பட்ட வகுப்பு (எம்பிசி) என்ற பிரிவில் கொண்டு
வந்தார்.
இதனால் சமூகத்தில் மாற்றங்கள் உருவானது உண்மை. என்னுடன்
கல்லூரியில் படித்த பல நண்பர்கள் அரசுப் பணியில் சேர்ந்தார்கள். உதாரணமாக இன்று
மருத்துவர் என்று அழைக்கப்படும் நாவிதர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்று அரசு
பள்ளிக்கூட ஆசிரியர்களாக பணிபுரிகின்றார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பெற்றார்கள்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களால் இதனை மாற்ற முடியவில்லை. கருணாநிதி அவர்கள் செய்த காரியம்
தமிழச் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.
• MBC (Most Backward Classes): 41 castes are included
in this category.
• DNC (Denotified Communities): 68 castes are included
under this category, which were formerly considered nomadic or criminal tribes
68 சாதிகளில் பிறந்தவர்கள் ஆண்டாண்டு காலமாக அடிமையாகக்
கூலியாகப் பிரிட்டிஷ் அரசின் பார்வையில் கொலைகாரராக, கொள்ளைகாரராகத்
தெரிந்தவர்கள்.
இதற்கும் கீழே வருபவர்கள் பட்டியலின வகுப்பு. நாம் எஸ்சி
என்கிறோம். அதற்குக் கீழே எஸ்டி (பழங்குடியினர்) பிரிவில் உள்ளவர்கள்
வருகின்றார்கள். நாயக்கர் என்றால்
பிற்பட்ட வகுப்பு. காட்டு நாயக்கர்
என்றால் எஸ்டி பிரிவு.
எம்பிசி, எஸ்சி, எஸ்டி இந்த பிரிவுகளை நிரப்பிய பின்பு தான் பிற்பட்ட வகுப்பில் வரக்கூடிய மாணவர்களை தேர்தேடுப்பார்கள். அரசுப் பணி என்றாலும் இதே நிலை தான். இந்திய அளவில் இதனை ஓபிசி என்கிறார்கள். தமிழக அளவில் பிசி என்று அழைக்கப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள அரசியல் காரணமாகப் பிராமணர்கள், ரெட்டியார்கள், முதலியார்கள் போன்ற சில சாதிகளைத் தவிர்த்து பெரும்பாலான அனைத்து பிரிவுகளையும் பிற்பட்ட சாதிகளாக மாற்றிவிட்டனர்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். 1980 வாக்கில் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு இது
தெரிய வாய்ப்புண்டு. அந்தச் சமயத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் என்பது பிற்பட்ட
வகுப்பில் இல்லை. இன்று அது பிற்பட்ட வகுப்பு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல்
பேரங்களில் 90 சதவிகித சாதிகள் பிற்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்ட காரணங்களால்
கல்லூரி முதல் உயர் கல்வி வரைக்கும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்கள் உச்சத்தை
எட்டிப் பிடிக்கக் காரணமாகவும் இருந்தது.
இன்று நீங்கள் பட்டியலின பிரிவில் உள்ள எந்த சாதியைச்
சேர்ந்தவர்களையும் ஒரு வார்த்தை கூடப் பேசிவிட முடியாது. பிசிஆர் சட்டம் உங்களை
வீடு தேடி வந்து தூக்கிச் கொண்டு சென்று விடும். இன்று இந்தியாவில் எவ்வளவு பெரிய
உயர் கல்வி நிறுவனமாக இருக்கட்டும், ஆராய்ச்சி படிப்பாக இருக்கட்டும் எஸ்டி
பிரிவினருக்கு 100 சதவிகிதம் அனைத்தும் இலவசம். நீங்கள் உள்ளே வந்தால் போதும்
என்கிற அளவுக்குத்தான் வைத்து உள்ளார்கள். ஆனாலும் அவர்களுக்கு இன்னமும் முழுமையாக
விழிப்புணர்வு ஊட்ட அந்தந்த சமூகங்களில் ஆட்கள் இல்லை. இருப்பவர்களுக்குத் தன்
நலம் சார்ந்து தான் செயல்படுகின்றார்கள்.
இதே போலப் பிற்பட்ட வகுப்பு என்று பிரித்தாலும்
அதற்குள்ளும் சமூகம் உருவாக்கிய பிரிவினைகள் ஏராளமாக உள்ளது. முக்குலத்தோர் என்று
கடந்த முப்பது வருடங்களாக மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களை அழைக்கின்றார்கள். அதில்
உள்ள கள்ளர் என்றால் அதற்குள் பல பிரிவுகள் உள்ளது. மறவர் என்றாலும் அப்படித்தான்.
கடைசியில் அகமுடையார் என்பதிலும் ஊர் சார்ந்து பல பிரிவுகள் உள்ளது. நாற்பது
வருடங்களுக்கு முன் இந்த மூன்று பிரிவுகளும் உள்ளே உள்ள உட்பிரிவுகளும் பொருளாதார
ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்தார்கள். ஒவ்வொரு சாதியின் பெயரையும் இப்போது
அரசாங்கம் நாகரிகப் பெயராக மாற்றியும் விட்டது. தமிழ்ச் சமூகம் முடிதிருத்துபவர்களை
அம்பட்டையன் போன்ற பல பெயர்களில் அழைத்து வந்ததும். இன்று அதன் பெயர் மருத்துவர்.
காரணம் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மருத்துவத்திலும் கொடி கட்டி
பறந்தார்கள். வலையர் என்ற சமூகம் தற்போது பெயர் மாறியுள்ளது. அதாவது எதையும் சாதி
அடிப்படையில், அதன் பெயரின் அடிப்படையில் இங்கே எவரும் சக மனிதர்களைக்
கேவலப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அரசு பார்த்துப் பார்த்து செய்தது
இன்று இது போன்ற சாதிகளில் பிறந்தவர்கள் பலநிலைகளில்
உயர்ந்துள்ளார்கள். வெளிநாடுகள் வரைக்கும் சென்று சாதித்து உள்ளனர். சாதித்துக்
கொண்டும் இருக்கின்றார்கள்.
இன்று வரையிலும் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் இந்த இரண்டும் பிராமண எதிர்ப்பு என்பதனை இந்து மத எதிர்ப்பாக வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கி உள்ளனர். நான் மேலே சொன்ன சாதிகள் எந்த அளவுக்கு கோவிலுக்குள் வந்து சேர்ந்துள்ளார்கள் என்பதனை இராமேஸ்வரம் கோவிலுக்குள்ளும் வெளியேயும் பார்த்தேன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் சாதாரண அரசு பணியில் சேர்ந்து படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று மேலேறி வந்து விடுகின்றார்கள். பதவி உயர்விலும் இவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. அவர்கள் இருக்கக்கூடிய துறைகளில் உச்சக் கட்ட பதவியாக கருதப்படும் (கன்பர்டு ஐஏஎஸ்) செயலாளர் என்கிற அளவுக்கு வருகின்றார்கள். இன்று தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் தான்.
ஒரு சில குறிப்பிட்ட சாதிகள் 100 ஆண்டுகளுக்கு "முன்
உள்ளே வராதே", "செருப்பு போடாதே", "துண்டு தோளில் போடாதே" என்று பல சட்டங்கள் போட்டு
இழிவு படுத்தியிருந்தவர்களின் கல்வித் தகுதி என்பது ஒரு மாநிலத்தையே நிர்வாகம்
செய்யும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளது.
இராமேஸ்வரம் கோவிலில் இணைஆணையராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனை அங்குள்ள நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். இதை ஏன்
தெரிந்து கொண்டேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.
"ஸ்படிகலிங்கம்" என்பது இராமேஸ்வரத்தில் அதிகாலையில்
செய்யக்கூடிய சிறப்புப் பூஜை. அதாவது காலை நான்கு முதல் ஆறு மணிக்கு அதாவது பிரம்ம
முகூர்த்தத்தில் கர்ப்ப கிரகத்தில் எப்போதும் இருக்கும் சிவலிங்கம் முன்னால் சிறிய
அளவில் இருக்கும் ஸ்படிக லிங்கத்தை வைத்து எப்போதும் செய்யக்கூடிய பூஜைகளை அய்யர்
செய்வார். இந்த பூஜையை தரிசிக்கச் சிறப்புக் கட்டணம் உண்டு. வட இந்தியர்கள் இதற்கென்று கூடுதல்
கவனம் செலுத்தி காலை மூன்று மணிக்கு வந்து வரிசையில் நிற்பார்கள்.
நான் அங்கே சென்ற பிறகு அங்குள்ள நண்பர் சொன்னார். நான்
அதிகாலை மூன்றேகால் மணிக்கு வரிசையில் போய் நின்றேன். அப்போதே முப்பது பேர்களுக்கு
மேல் வட இந்தியர்கள் இருந்தார்கள். ஆனால் தரிசன டிக்கட் வழங்கிய நேரம் காலை ஐந்து
மணி. ஆறு மணிக்கும் ஸ்படிக லிங்க பூஜையைத் தரிசனம் செய்து விட்டு என் அறைக்கு
வந்து விட்டேன். மாலை அங்குள்ள நண்பரைச் சந்தித்தேன். அவரிடம் காலையில் நேர
மாறுதல் குறித்துத் தெரியப்படுத்தினேன்.
அப்போது அவர் சொன்ன தகவல் தான் ஆச்சரியத்தை உருவாக்கியது.
ஏற்கனவே (இணை ஆணையர்) இருந்தவர்
அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கச் சொன்னார். கூட்டம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும். ஆனால் இப்போது வந்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வந்து மதம் மாறி
கிறிஸ்துவராக இருப்பதால் இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் விமர்சனத்துக்கு உரியதாக
உள்ளது. எவராலும் ஒன்றும் கேட்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு நாள் காலையிலும்
இவ்வளவு கூட்டம் வந்தால் தான் ஸ்படிக லிங்க பூஜை செய்ய வேண்டும் என்று
கட்டளையிட்டுள்ளார் என்று சொன்னார்.
இங்கு ஏன் மதம் குறித்துப் பேசுவதற்கு முக்கியக் காரணம் அவர்களின் உள்ளார்ந்து மனதிறகுள் இருக்க வேண்டிய மத நம்பிக்கைகள் சார்ந்த எண்ணங்கள் இங்கே நிர்வாகம் சார்ந்த விசயங்களில் வெளிப்படுகின்றது.
அவரை அணுகக்கூடியவர்கள் பலவிதமான விமர்சனங்களை வைக்கின்றார்கள் என்று சொன்னார். தொடக்கத்தில் இந்து மதம் என்று சொல்லி தன் சாதி குறித்த இட ஒதுக்கீடு பெற்று அதன் மூலம் பதவியை அடைந்த பின்பு பெந்தகோஸ்து க்கு மாறி தங்கள் சாதிய இழிவுகளை துடைத்து விட்டதாக நம்புகின்றார்கள். இது சட்டப்படி தவறு. ஆனாலும் இங்கே இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தான் எதார்த்தம்.
மேலே சொன்ன பட்டியலினம் மற்றும் அது சார்ந்த உள்ளார்ந்த
பிரிவுகளில் அருந்ததியினர் எதிலும் நுழைய முடியாமல் தவித்துக் கொண்டு மலம்
அள்ளுவதையே தலைமுறை தலைமுறையாகச் செய்து கொண்டு இருந்தார்கள். கருணாநிதி அவர்கள்
அவர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கியதும் ஒரு மறுமலர்ச்சிக்குரிய
காலகட்டமாக மாறியது.
ஆனால் மேலே சொன்ன அனைத்து பிரிவுகளும் இராமேஸ்வரம் கோவிலில் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றார்கள். பிரகாரத்தைச் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றார்கள். பல இளைஞர்களை காவலர்கள் என்ற நிலையில் இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உள்ளது.
மூன்று லட்சம், ஐந்து லட்சம் கொடுத்துத் தங்கள் பணியை வாங்கி
உள்ளனர். தங்கள் சாதி சார்ந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் வந்த போதிலும் திமுக வில்
உள்ள அமைச்சருக்கு, துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தண்டம் அழுது பல இளைஞர்கள்
இந்தப் பணியில் வந்து சேர்ந்து உள்ளனர். நிரந்தரமாக்கப்படுவோம் என்று நம்பிக்கையில் வேலை செய்து வருகின்றார்கள். எட்டு மணி நேரம் பணி. தரிசன டிக்கெட் வாங்கி வருபவர்களைச்
சோதித்து அந்த டிக்கெட்களை ஸ்கேன் கருவியில் காட்டி உள்ளே வரிசையாக அனுப்ப
வேண்டும். இதில் முக்கிய இடங்கள் முக்கியமற்ற இடங்கள் உள்ளது.
அதன் அடிப்படையில் வரக்கூடிய பக்தர்களிடம் பணம் வசூலிக்க
முடியும். வசூலித்துக் கொண்டு இருக்கின்றார்கள். விசேட தினங்களில் மிகப் பெரிய
வருமானம். மொத்தமாக ஒரு ஷிப்ட் ல் கூட்டணி அமைத்து வசூலிக்கும் பணத்தை ஒன்றாகச்
சேர்த்துப் பிரித்துக் கொள்கின்றார்கள். இதற்குத் தலைமை பொறுப்பு என்று பிரிவுகள்
வைத்துள்ளார்கள்.
கர்ப்பகிரகம் அருகே ஒருவர் நிற்கின்றார். குறிப்பிட்ட
நேரத்தில் அடுத்தவர் வந்த அங்கே நிற்கின்றார்.இவர்களின் வேலை என்னவெனில் 50,100,200
டிக்கெட் வாங்கி வந்தாலும் கர்ப்பகிரகம் அருகே வரக்கூடியவர்களை எவ்வளவு நேரம்
அங்கே நிறுத்துவது என்பது இவர்கள் பொறுப்பில் உள்ளது. திருப்பதியில் சொல்வது போல
ஜருகண்டி ஜருகண்டி என்பது போல விரட்டிக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் கையில் வட
இந்தியர்கள் கொஞ்சம் பணத்தைத் திணிக்கின்றர்கள். அல்லது வேறொரு நபர்
வாங்கியிருப்பதை இவரிடம் தெரியப்படுத்தத் தாராளமாக நின்று தரிசிக்க அவரே ஏற்பாடு
செய்வதுடன் பிரசாதம், திருநீறு வழங்கு குளிரக் குளிர அனுப்பி வைக்கின்றார். அவர்
கையில் ஒவ்வொரு விரலுக்குள்ளும் அடிக்கி வைத்திருந்த பணத்தைப் பார்த்தேன்.
உத்தேசமாக ஐந்தாயிரம் இருக்கக்கூடும்.அடுத்த சில மணி நேரத்தில் வேறொருவர் வந்து
பொறுப்பு எடுத்துக் கொள்கின்றார். இவர் வேறொரு பகுதிக்குச் செல்கின்றார்.
கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளது. புண்ணியம் புனிதம்
என்று சொல்லி அதில் நீராடி வருவதைப் பக்தர்கள் முக்கியக் கடமையாக வைத்துள்ளார்கள்.
இதற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் இருபத்தி ஐந்து. வாங்கிக் கொண்டு தீர்த்தங்கள்
அருகே சென்றால் மொத்தமாக வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு தெளிப்பார்கள் அல்லது
மொத்தமாக விசிறியடிப்பார்கள். நம் உடம்பில் தண்ணீர் பட்டது என்ற திருப்தியில்
நகர்ந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும். காரணம் நாம் நிற்க முடியாது. பின்னால்
உள்ள கூட்டம் நம்மை நகர்த்திக் கொண்டேயிருக்கும். அடுத்தடுத்த தீர்த்தங்களில்
ஒவ்வொரு நபரும் கிணற்றில் மேல் கையில் வாளியை கையில் வைத்துக் கொண்டு நிற்பார்கள்.
நொடிப் பொழுதியில் வாளியில் கட்டியுள்ள கயிற்சை சரேலென்று உள்ளே விட்டுப் பாதித்
தண்ணீர் அந்த வாளியில் இருக்கும். அதன் அப்படி விசிறியடிப்பார். போங்க போங்க என்று
அனுப்பிக் கொண்டேயிருப்பார். ஆனால் இதில் பல பிரிவுகள் உள்ளது.
இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 4 2025) – 9
குறைந்தபட்சம் நான் பார்த்த வரையில் இந்தத் தீர்த்தம் என்பதனை வைத்துக் கொண்டு நூறு பேர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். அரசு டிக்கெட் எடுத்து வந்தாலும் வரக்கூடிய வட இந்தியர்களிடம் பேசுகின்றார்கள். பத்துப் பேர்கள் ஒரு பேக்கேஜ் போல உள்ளே தீர்த்தங்களுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். சிறப்புக் கவனிப்பு. இவர்களுக்கு மட்டும் அவர்கள் கையில் கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் கேனில் அந்தத் தீர்த்தத்தை ஊற்றிக் கொடுக்கின்றார்கள். (இந்த கேன் மிகப் பெரிய தொழில். விதம் விதமாக உள்ளது)22 தீர்த்தங்களுக்கு ஆள் மாறி அடுத்தடுத்து அழைத்துச் சென்று கடைசியில் வெளியே கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு நபருக்கு ரூபாய் நூறு வாங்குகின்றார்கள். இதில் உள்ளவர்கள் பெரும்பாலும் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை புரிந்து கொண்டேன். அவர்களைத் தவிர வேறு எவரையும் அனுமதிப்பார்களா? என்பதும் சந்தேகமே. பத்துக்கு மேற்பட்ட பிரிவாக இருக்கின்றார்கள் என்றாலும் வசூலிப்பதை ஆட்கள் கணக்கு வைத்து இறுதியில் பிரித்துக் கொள்கின்றார்கள்.
24 மணிநேரமும் வாளியும் கையுமாக இயங்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். இது தான்
அவர்கள் தொழில்.
இது தவிர மற்ற சில விசயங்களை அங்கே கவனித்தேன்.
தர்ப்பணம் கொடுக்கும் போது அதற்கு முன்னாலும் பின்னாலும்
பல தொழில்கள் உள்ளது.
உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
தானம் வாங்கிக் கொடுங்கள் என்ற ஒரு டேபிளின் மேலே பாக்ஸ்
பாக்ஸ் ஆக அடுக்கி வைத்து சாப்பாட்டு வகைகளைப் பலரும் விற்றுக் கொண்டு
இருக்கின்றார்கள். அதனை அங்கே உள்ள சாமியர்களுக்கு நீங்கள் வாங்கிக் கொண்டு
கொடுத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அதே சாப்பாடு பாக்ஸ் விற்றவரிடம் வந்து
சேர்ந்து விடும். குறிப்பிட்ட பணம் சாமியாருக்கு.
தர்ப்பணம் செய்ய வாங்கிக் கொடுக்கும் காய்கறிகள்,
மளிகைச் சாமான்கள், மற்ற பூஜை சாமான்கள், அப்பா அம்மா என்றால் விரும்பி அணிவார்கள்
என்று ஆசை ஆசையாக வாங்கிய வேஷ்டி சேலை ( அய்யர் கட்டாயம் வாங்கி வந்து விடுங்கள்
என்பார்) என்று அனைத்தும் அடுத்த நாள் வாங்கிய கடைக்கே சென்று விடுகின்றது.
பூஜையின் போது அதிகச் சேதாரம் இல்லாமல் அப்படியே அலுங்காமல் குலுங்காமல் அதை பூஜை
செய்யபவர்கள் எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றார்கள் என்பதனை ஆதி முதல்
அந்தம் வரைக்கும் பார்த்தேன். அதுவொரு தனிக்கலை.
எத்தனை முறைகள் இவை அனைத்தும் சுற்றிச் சுற்றி வரும்
என்பதனை என்னால் யூகிக்க முடியவில்லை.
கோவில் கர்ப்பகிரகம் முதல் உள்ளே உள்ள பல இடங்களைத் தொடர்ந்து சுத்தம் செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் பல ஊழியர்கள் ஆண்கள் பெண்கள் பணிபுரிகின்றார்கள்.
ஒப்பந்தம் எடுத்தவர் மலையாளி என்பதனை அங்குள்ள பெண்மணியிடம்
கேட்டு ஆச்சரியப் பட்டேன். அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் மட்டும் முக்கிய
காரணம். கட்சிக்காரன் என்பது இரண்டாம் பட்சம் என்றார்கள்.
எட்டு மணி நேர வேலை. வந்து கொண்டு இருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்துவது, அங்கங்கே அமர விடாமல் தடுப்பது, உடனே வெளியே அனுப்புவது. கூட்டம் இல்லாத நேரங்கள் ஒவ்வொரு இடங்களையும் சுத்தம் செய்வது என்று அனைத்து இடங்களிலும் எளிய சாதாரணக் குடும்பத்துப் பின்புலங்களில் இருந்து வந்தவர்கள் தான் பணிபுரிகின்றார்கள். அதாவது கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஒரு காலத்தில் தடுக்கப்பட்ட அனைவரும் கோவிலுக்குள்ளே 24 மணி நேரமும் இருக்கும் அளவுக்கு காலச் சூழல் மாறியுள்ளது. இடஒதுக்கீடு காரணமாக மாற்றப் பட்டு உள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டில் தான் புண்ணியம் தேடி வந்து போகின்றவர்கள் இருக்கின்றார்கள். இது போன்ற பல விசயங்களை சாமி தரிசனம் செய்யச் சென்ற போது வரிசையில் நின்று கொண்டு இருந்த போது யோசித்துக் கொண்டேயிருந்தேன்.
தொடக்கத்தில் சாதி சார்ந்த விசயங்களை விரிவாகச் சொல்லி வந்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. நான் நான்கு நாட்கள் இராமநாத சுவாமியை அம்பாளை தரிசனம் செய்தேன். இரண்டு இடங்களிலும் மொத்தம் இரண்டு பேர் அய்யர்கள் மட்டும் இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் கர்ப்பகிரகத்திற்குள் சென்று பூசை செய்கின்றார்கள். மற்றபடி கோவிலின் உள்ளே வெளியே அனைத்துக் கட்டுபாடுகளும், வருமானங்களும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின இளைஞர்கள், நபர்கள் கட்டுப்பாட்டில் தான் இராமேஸ்வரம் கோவில் உள்ளது. அதாவது அங்கே அய்யர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இருப்பது போல யாருக்கும் தெரியாது.
இந்தத் தீவில் வாழக்கூடியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு உழைப்புக்கு ஏற்ப பணம் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. ஒரு குடம் பத்து ரூபாய் பல சமயம் இருபது ரூபாய் விலைக்கு வாங்கித்தான் வாழ்கின்றார்கள். கோவில் மூலம் வரக்கூடிய மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு மடங்கு அரசாங்கத்தில் சென்றால் ஆச்சரியமே. யார் யாரோ பைக்குச் சென்று கொண்டு இருக்கின்றது. புனிதம் என்ற பெயரில் வந்து போகக்கூடிய எந்தப் பக்தர்களும் இருக்கக்கூடிய அனைத்து குறைகளைக் கண்டும் காணாமல் சென்று கொண்டேயிருக்கின்றார்கள்.
(அடுத்தப் பதிவோடு பயணம் முடிவடைகின்றது)