பாஜக மாநில தலைவரின் கடிதம்.-4
#தமிழக_பாஜக_தலைவர்_கடிதம்
நீட் தேர்வு அண்மைக் காலத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்களுக்குத் தொண்டாற்றும் மகத்தான பணி மருத்துவப்பணி. அந்த மருத்துவப்பணியில் ஈடுபட நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 சட்டப் பிரிவு 10(D ) மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகம் தவிர மற்ற அனைத்துக் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆளும், மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்,. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்தும் திமுகவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.
முன்பெல்லாம், மருத்துவம் படிக்க நாடு முழுக்க மாநில வாரியாக கல்லூரி தனித்தனியே நடக்கும் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இதனால் மாணவர்களுக்குக் கூடுதல் பணச் செலவு, அதிகரித்தது. “நீட்” தேர்வு எழுதுவதன் மூலமாக, நாடு முழுவதும் உள்ள எந்த மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் படிக்க முடியும். இதனால் பண செலவுகளும், நேர விரயங்களும், மன உளைச்சலும் குறையும்.
நான்கு வகையான பாடத்திட்டம் நமது நாட்டில் பயன்பாட்டில் உள்ளது..
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் சேர்த்தனர். அதன் மூலம் தங்கள் பிள்ளைகள் கல்வித்தரம் உயரும் எனப் பெற்றோர்கள் நினைத்தனர். நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், நீட் தேர்வுக்கு என ஒரு பாடத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டத்திற்கு ஏற்ப கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டது.
எனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குப் பதில் அளிப்பது சுலபமாக இருந்தது. தமிழகப் பாடத்திட்டம் தரத்தை உயர்த்தி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட, மிகவும் உயர்ந்த தரத்தில் ஏற்படுத்தினால், அதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
நீட் தேர்வை எதிர்ப்பது போல, கல்வித் தரத்தை உயர்த்தக் கூடிய, புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தின் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் எதிர்ப்பது கவலைக்குரியது.
ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி, சரி சமமான வாய்ப்பை நீட் தேர்வு அனைத்து மாணவருக்கும் வழங்குகிறது..
பணம் கொடுத்து மருத்துவப் படிப்பு முடியும் என்ற நிலையை நீட் தேர்வு மாற்றியுள்ளது. நல்ல மதிப்பெண் இருந்தால் மட்டுமே, மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தி இருக்கின்றது.
நீட் தேர்வுக்கு முன் பணத்தை வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு அலையும் வியாபாரச் சந்தை இருந்தது. இப்போது தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது. சில தனியார் கல்லூரிகளும், மருத்துவப் படிப்புக்கான சீட்டை வாங்கித்தரும் வணிகர்களே நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
நீட் தேர்வில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 15% மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவ – மாணவியர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதன் மூலம், நிறைய இடத்தைத் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும். மேலும், தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள 15 சதவீத இடங்களுக்கும் போட்டி போட முடியும். நீட் தேர்வு குறித்து இங்கே இவர்கள் அவதூறு பரப்பும் அளவிற்கு மறைமுகமாக எந்த ரகசியமும் இல்லை, இதில் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு மேற்கொள்ளப் படுகின்றது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2019-ம் ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்தது. 2020 ஆண்டும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2019 ஆண்டு தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 412 இலவச நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 6,692 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர்.
இதில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் திறமையான பங்களிப்பு இருக்கும் தேர்ச்சி விகிதம் கூடுதலாக அதிகரிக்கும் என்று கல்வி வல்லுநர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நீட் தேர்வைக் குறித்த தவறான பொய்யுரைகளைத் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், எடுத்து வைத்தது. நீட் தேர்வை மோடி அரசுதான் கொண்டு வந்தது போலவும், தமிழ் நாட்டு மாணவர்களுக்கு, நீட் தேர்வு எதிரானது போலவும் ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கியது.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது என்ற கட்டுக்கதை தேர்தல் வாக்குறுதியாக தரப்பட்டது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு வராது என்று தேர்வுக்குத் தயாராகாமலிருந்து விட்டனர் . வராது ஆனால் வரும், வரும் ஆனால் வராது என்று மாற்றி மாற்றி பேசிய திமுக தலைவர்கள், கடைசி நேரத்தில் மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகும்-படி கூறியபோது மாணவர்கள் ஏமாற்றத்தாலும் அச்சத்தாலும் துவண்டு போயினர்.
திமுகவின் வாக்குறுதியை நம்பிய அந்த ஏமாற்றத்தின் தொடர்ச்சியே, இன்று சேலத்தில் மாணவர் தனுஷ், தன் உயிரை மாய்த்துக் கொண்டது. தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவைக் காலம் ஒருபோதும் மன்னிக்காது. அரசியல் லாபத்துக்காக அப்பாவி மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் விதத்தில் நீட் எதிர்ப்பாளர் செயல்பாடு அமைந்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரானவர்களாக நாடகமாடும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது என்ற உண்மை எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.
2010 டிசம்பர் திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக (Minister of state for Health and Family Welfare ) இருந்தார்.
அப்போது திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் மருத்துவக் கல்விக்கான நெறி முறைகளில் (Regulations on Graduate Medical Education , 1997) மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தார்.
ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் காலத்தில், மருத்துவத் துறை இணை அமைச்சராக காந்திசெல்வன் இருந்தபோதுதான், எம்.பி .பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (eligibility cum entrance test ) நடத்துவது என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. அப்போது இந்த நுழைவுத் தீர்வு "Regulation s on Graduate Medical Education , 2010" என்று அழைக்கப்பட்டது.
புதிய கொள்கைகளின் படி அடிப்படையில் MCI (Medical Council of India ) 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தங்களுடைய பாடத்திட்டத்திற்கும், MCI அறிவித்துள்ள பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் அல்லாத சில மாநிலங்கள் இதை எதிர்த்தன.
மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று மருத்துவத் தகுதி மற்றும் நுழைவு (நீட் )தேர்வு ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.
மத்தியில் முதல் முறை பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் 26.05.2014. முதல் நீட் தேர்வு நடத்தப்பட்ட நாள் 05.05.2013. அப்போது பாஜக ஆட்சிக்கு வரவே இல்லை. ஆக நீட் தேர்வைக் கொண்டு வந்து, முதல் தேர்வை நடத்தியது திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு.
திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தை, தான், திமுகவின் எம்.பி . அமைச்சராக இருந்தபோது, அதுவும் மருத்துவத்துறை துறையின் அமைச்சராக இருந்தபோது, திமுக கொண்டு வந்த சட்டத்தைத்தான் தற்போது திமுக எதிர்க்கும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
முதல் நீட் தேர்வு 2013ஆம் ஆண்டு மே 5, 2013ல் நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டது மாணவர்கள் இல்லை. பணபலம் மிக்க சில தனியார் மருத்துவக் கல்லூரிகளே. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
ஜூலை 18, 2013 அன்று நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு பல்வேறு மாநிலங்களில் தனியார் கல்லூரிகளில் பலவகையான தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காகத் தனித்தனியே பல தேர்வுகளை எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
ஆகவே நாடுமுழுவதும் தனித்தனியே பல நுழைவுத்தேர்வு நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது... திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் நீட் தேர்வு வரவேற்கத் தக்கது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதை எதிர்த்து சில தனியார் கல்லூரிகள், மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தன . அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென் , ஏ.ஆர். தவே கொண்ட அமர்வு விசாரித்தது.
மூவர் கொண்ட அமர்வில் மூவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும், தவே நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு ஒருமனதான தீர்ப்பாக இல்லாமல் பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சாதகமான இந்தத் தீர்ப்பு. 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது.
2014 மே வரை திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வைக் கட்டாயமாக்க நினைத்தது. எனவே நீட் தேர்வு தேவையில்லை என்ற கபீரின் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்தது திமுக காங்கிரஸ் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான்.
அதன்பின் அமைந்த மோடி அரசு நீட் தேர்வை இரண்டாண்டுகளாக அமல்படுத்தவில்லை.
அப்போது உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, நீதிபதி கபீர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றது. 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட முதல் அறிவிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற உத்தரவால் மோடி ஆட்சியில் நீட் தேர்வு மீண்டும் உயிர் பெற்றது.
பின்னர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களைத் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின் கீழ் ஒதுக்கி மாநில அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்.
அப்போது தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 85 சதவீத இடம் தரக்கூடாது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடம் தரவேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர்கள்... காங்கிரஸ் சார்புடைய மூத்த வழக்கறிஞரும், திரு.ப.சிதம்பரத்தின் மனைவியுமான திருமதி.நளினி சிதம்பரம், திமுக சார்புடைய, திமுக அரசில் அட்வகேட் ஜெனராலாகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ஆகியோரும் ஆஜரானார்கள்.
நீட் தேர்வில் 27% பிற்பட்ட வகுப்பினர்களுக்கும், 10% பொருளாதார ரீதியாக பிற்பட்டவர்களுக்கும், 15% பட்டியல் இன (SC ) மக்களுக்கும், 7.5% பழங்குடியின (ST ) மக்களுக்கும், 5% மாற்றுத் திறனாளிகளுக்கும் என ஒதுக்கப் படுகின்றது. இதில் தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும், எந்தவிதக் குந்தகமும் இன்றி, சரியான முறையில், மாணவர்களுக்கு நீட் தேர்வில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
2019 தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகள் (தோராயமாக)
(i ) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii ) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii ) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv ) பொதுப்பிரிவில் (Un Reserved ) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரைத் தவிர வேறு பல சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
(பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -1594)
(மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -720)
(தாழ்த்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -600)
ஆக 2019ல் சமூக வாரியாக தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட MBBS இடங்கள், (i ) FC -136, (ii ) BC -1594, (iii ) MBC -720, (iv ) SC /ST -600, சமூக நீதி வழங்கும் நீட் தேர்வை நீக்க முடியுமா?
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், “நீட் தேர்வை நீக்குவோம்” , என்ற கோரிக்கையைத் தமிழக மக்களிடம் முன் வைத்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில், 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும். நீட் தேர்வை நீக்கி விட்டார்களா..? 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே பொய்யைத் திரும்பச் சொன்னார்கள். இந்த வருடமும், நீட் தேர்வு நடைபெறுகின்றது.
சமூக நீதி காக்கும் நீட் தேர்வை,, ஏழை மாணவர்களுக்கு உதவும் நீட் தேர்வை, பணத்தால் மருத்துவப்படிப்பை வாங்க முடியாமல் செய்த நீட் தேர்வை, தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் பெற்றுத் தரும் நீட் தேர்வை, வேண்டாம் என்று அரசியல் மற்றும், பொருளாதாரக் காரணங்களுக்காக நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று திமுக போன்ற கட்சிகளின் பேச்சைக் கேட்பது நல்லதா என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்.
நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எதிர் கட்சிகள் ஒன்று கூடி வழக்குத் தொடுத்தாலும், நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. நீட் தேர்வு, செப்டம்பர் 12 அன்று, நிச்சயமாக நடைபெறும் என்று வழிகாட்டி உள்ளது. மத்திய அரசைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற ஒற்றை கொள்கையில், மாணவர்கள் நலனுக்கு எதிராக , உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக, பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக, அறிவுடைமையாகுமா என்று சிந்தியுங்கள்.
என்றும் தாயகப் பணியில்
மாநிலத்தலைவர்
No comments:
Post a Comment