Wednesday, July 31, 2019

பத்தில் ஒன்று



@ 2009 ஜூலை மாத தொடக்கத்தில் இணையவெளி அறிமுகம் ஆனது. இன்று பத்து வருடங்கள் முடிந்துவிட்டது.  நான் எழுதத் தொடங்கிய போது மகள்கள் பள்ளிக்குச் செல்ல துவங்கியிருந்தார்கள்.  சுதந்திரமாக எழுதிக் கொண்டேயிருந்தேன். தொந்தரவு என்பதே இருக்காது. இன்று  வளர்ந்து விட்டார்கள்.   அவர்களுடன் உண்டான போட்டிகளுடன் எழுத வேண்டியதாக உள்ளது.  

@ எந்தவொரு துறையையும் கற்றுக் கொள்வது எளிது. தொடர்ந்து இயங்குவதும், தன்னை தக்கவைத்துக் கொள்வதும் தான்  கடினமும் சவாலானதும் கூட. நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதென்பது மிகப் பெரிய கொடுப்பினை தான். முயற்சியும் பயிற்சியும் இருந்தாலும் நாம் வாழும் சூழல் முக்கிய பங்காற்றுகின்றது.  அது எனக்கு அமைந்த காரணத்தால் எழுதிக் கொண்டே இருக்க முடிகின்றது.

@ இன்றைய நாள் வரைக்கும் எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆயிரம் பதிவுகளைத் தொட முடியவில்லை. காரணம் நேரம் இருந்த போதிலும் அவவ்வபோது இதனை விட்டு வேறு பக்கம் நகர்ந்து சென்று விடுகிறேன். என் எழுத்து வெவ்வேறு தளங்களுக்கு மாறும் போது யாரோ ஒருவர் அலைபேசியில், மின் அஞ்சலில் பேசி இங்கே வரவழைத்து விடுகின்றார்கள்.  ஆனால் தினமும் எழுதுவதென்பது என் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவே உள்ளது. அவர்களுக்கு நன்றி.

@ கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு பதிவும் குறைந்தபட்சம் ஆயிரம் பேர்கள் படித்தார்கள்.  அதிகபட்சம் 3000 பேர்கள் படித்தார்கள்.  இன்றைய சூழலில் குறைந்தபட்சம் 300 பேர்கள் படிக்கின்றார்கள். அதிகபட்சம் 600 பேர்கள் படிக்கின்றார்கள். தமிழ்மணத்தில் பல சமயம் இணைக்க முடியாமல் போய்விடும்.  அது போன்ற சமயங்களில் 100 பேர்கள் படித்து இருப்பார்கள்.  இது தான் எதார்த்தம். 

@ இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உளவியல் விசயம் ஒன்று உள்ளது.  ஒருவருக்குக் குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது? இல்லை? என்பதனைத் தாண்டி இங்கு ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளக்கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றார்கள் என்பதனைத் தான் நாம் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

@ இயல்பாகவே தமிழர்களுக்கு வாசிப்பது என்பது விருப்பமில்லாத ஒன்று.  தொடக்கத்தில் வாசிக்க, கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தார்கள். இன்று அனைத்து விதமான வாய்ப்புகளும் இருந்தாலும் எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை? படித்து என்ன ஆகப் போகின்றது? என்ற அதீத புத்திசாலியாக மாறியுள்ளார்கள் என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

@ சிறிதாக எழுதினால் படிப்பார்கள் என்ற பொதுவிதியைப் பற்றி பலரும் சொல்கின்றார்கள்.  ஆனால் இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் ஒருவரால் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிகின்றது? நேரம் ஒதுக்க முடிகின்றது? என்பதனை வைத்துப் பார்க்கும் போது பெரிது? சிறிது? என்பது இங்கு பிரச்சனையில்லை.  விருப்பம் தான் முக்கியம். இலவசமாகக் கொடுத்தால் கூட படிக்க மாட்டேன் என்கிற மனோபாவத்தை உங்களால் எந்த நிலையிலும் மாற்ற முடியாது என்பதனை உணர்ந்து கொண்டால் போதுமானது. இதன் காரணமாகத்தான் பேஸ்புக் என்ற தளம் இன்று முன்னிலையில் நிற்கின்றது.

@ வாசிப்பு என்பது பலவிதமாகச் சிதறிப்போயுள்ளது.  வாட்ஸ்அப் வாசிப்பு, ஃபேஸ்புக் வாசிப்பு, ட்விட்டர் வாசிப்பு என்று மூன்று விதமாக மாறியுள்ளது.  இது தவிர யூ டியுப் சுவாசிப்பு, அமேசான் ப்ரைம் சுவாசிப்பு, நெட்ப்ளிக்ஸ் சுவாசிப்பு என்பதாகவும் பிரிந்துள்ளது. அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு திரைப்படம் வெளியாகும் போது காலைக்கடன் கழிக்க மறந்து கூட தன் விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கும் இளைய தலைமுறையினரை நாம் குறை சொல்லக்கூடாது.  மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று மூன்று தீபாவளி கடந்தும் பாகவதர் படம் ஓடியதாகச் சொல்கிறார்கள்.  இன்று மூன்றாம் நாள் படம் ஓடி விட்டால் வெள்ளிவிழா கொண்டாடும் நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. மக்களின் சுவாசிப்பும், வாசிப்பும் இன்னமும் பலவிதமாக மாறக்கூடும்.

@ இணையத்தில் செயல்படும் ஒவ்வொருவரும் எழுத்தாளர்களாக மாறியுள்ளனர்.  நவீன ரக அலைபேசிகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பத்திரிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.  அதாவது வாசிப்பாளர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகக் காலமாற்றம் உருவாக்கியுள்ளது. வாசித்து உணர்ந்து உள்வாங்கி எழுதுவதை விடக் கண்டதையும் எழுதுபவர்களைக் கவனிக்கப்படுபவர்களாக மாறியுள்ளனர். 

@ உங்களால் கணினியில் ஒரு படம் வரையத் தெரிந்து அதைச் சிதைக்கத் தெரிந்தால் உடனே கவனிக்கப்படுவீர்கள். பாலியல் குறித்து விலாவாரியாகப் பேசத் தெரிந்தால் பேசப்படுபவர்களாக மாறுவீர்கள்.  சாதி, மதம் பற்றி எழுதத் தெரிந்தால் முற்போக்கு என்ற முகமூடி உங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போய்விடும்.

@ நிலைத்து நிற்பது முக்கியமல்ல.  அன்றைய பொழுதில் நம்மைப் பற்றிப் பேச வைக்க முடிகின்றதா? என்பது தான் புதிய வழிமுறையின் வாசலாக உள்ளது.  அந்தரங்க உறவுகள் மட்டும் இருட்டுக்குள் செய்து கொண்டிருந்த காலம் மாறி இன்று இணையத்தில் இருட்டறையில் முரட்டுக்குத்து போலவே புதிதாக உருவான இணையவெளி இளைய தலைமுறை சமூகம் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

@ தன் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர்களின் செயல்பாடுகள் இணையத்தில் முக்கியமாக மாறியுள்ளது. முகம் இல்லாமல் இங்கே செயல்படுபவர்கள் தான் தீவிர கருத்தாளர்களாக, கொள்கை வாதிகளாக மாறியுள்ளனர். தரமில்லாப் பொருட்கள் விலை அதிகமாக விளம்பரங்களின் மூலம் விற்கப்படும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தைப் போல தரமில்லாத மனிதர்களே இங்கு தகுதியானவர்கள் என்று முன்னிறுத்தப்படுவார்கள். மற்ற அனைத்தையும் விட விளம்பரம் என்பதே இன்றைய சூழலில் மிக முக்கியமானது.

@ காலமாற்றம் என்பது இங்கு மனிதர்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கும். அதன் பொருட்டே இங்கே ஒவ்வொன்றும் மாற்றம் பெறும். அதுவே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். 

@ கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையிலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்தேன். அதன்பிறகு 17 வருடங்கள் தீவிர வாசிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் அமைந்தது. இணையம் அறிமுகமான பின்பு ஈழம் குறித்து, பிரபாகரன் குறித்து அறியும் பொருட்டு வாசிப்பு மீண்டும் தொடர்ந்தது.  ஆனாலும் உள்ளே சின்ன நெருடல் இருந்து கொண்டேயிருந்தது.  கடந்த 30 வருட இந்திய, தமிழக சூழலை நாம் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம் என்ற குற்றவுணர்ச்சி உறுத்திக் கொண்டேயிருந்தது.  

@ இன்றைய சூழலில் தினமும் வாசிக்கும் தினசரி, வார இதழ்கள், இணையம் என்று மாறிய சூழல் கூட எதையும் முழுமையாக நமக்கு உணர்த்தவில்லை என்ற வருத்தம் இருந்தது.  அதனைக் கடந்த இரண்டு மாதமாக கிண்டில் போக்கிவிட்டது.  அரசியல், சமூகம், வரலாறு என்ற மூன்று பிரிவின் கீழும் வாரம் இரண்டு புத்தகமாவது படித்துக் கொண்டிருக்கின்றேன். 

@  ஒவ்வொன்றையும் விமர்சனமாக எழுதியாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆழமாகப் படித்துப் புரிந்து கொள்ள முடிகின்றது. மனம் உற்சாகத்தில் நிறைவடைந்துள்ளது.

@ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மன்னர் இராசராசன், ராஜேந்திர சோழன் குறித்து இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். அவர் என்ன சாதி என்பதில் தொடங்கி ஒவ்வொன்றும் பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த இரண்டாயிரம் வருடத் தமிழர்களின் வாழ்வியல் சரித்திரம் நமக்குக் கிடைத்த தகவல்கள் எதுவும் முழுமையானது அல்ல. இன்று வரையிலும் அடுத்தடுத்து எத்தனையோ ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அது வரை நாம் வைத்திருந்த எண்ணங்களும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இன்னமும் மாறும்.  உத்தேசமான ஒன்றை வைத்து ஒரு மாதிரியான கட்டுமானத்தில் தான் நாம் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.  

@ ஆனால் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் உள்ள சரித்திர உண்மைகள் அனைத்தும் தற்போதைய தொழில் நுட்ப வசதிகளினால் ஆவணமாக மாறியுள்ளது. பல பார்வைகள். பல கோணங்கள். எவர் வேண்டுமானாலும் வெளிப்படையாக  ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.  உங்கள் அனுபவங்களை உங்கள் நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது அதுவே அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் யாரோ ஒருவரால் ஆவணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பதிகம். இனி எவரும் வரும் காலங்களில் வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து சரித்திரத்தோடு விளையாட முடியாது.

@ 2009 ல் நாம் பார்த்த இந்தியா, தமிழ்நாடு இப்போது இல்லை.  அரசியல், சமூகம் முழுமையாக மாறியுள்ளது. நம்பவே முடியாத ஆச்சரியங்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  விலகி நிற்க முடியாது. விரும்பாவிட்டாலும் ஒதுங்கவும் முடியாது.  சாதி வீட்டுக்குள் சந்துக்குள் இருந்தது. இன்று இணையம் வரைக்கும் வந்து நிற்கிறது.  புனிதர்களின் பட்டங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இங்கு இப்போது எல்லோருமே பிரபல்யங்கள் தான். நெருங்கவே முடியாதவர்களைக் கூட இன்று கேள்வி கேட்க முடியும்? அசிங்கப்படுத்த முடியும்? அவமானப்படுத்த முடியும்? களங்கம் கற்பிக்கமுடியும்?  நவீன தொழில் நுட்பம் மொத்தத்தையும் மாற்றியுள்ளது. இதன் காரணமாக வக்கிர எண்ணங்கள் என்பது நமக்கு இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

@ உடன் வந்தவர்கள் காணாமல் போய் விட்டார்கள். சிலர் காலமாகி விட்டார்கள். நெருங்கிப் பழகியவர்கள் வெகு தூரத்திற்கு அப்பால் சென்று விட்டார்கள். பலரும் பொருளாதார நெருக்கடியில் புலம் பெயர்ந்த காரணத்தால் அவர்களின் விருப்பங்கள் காணாமல் போய்விடக் கடமை ஒன்றே வாழ்க்கை என்பதாகவும் மாறியுள்ளனர்.

@ மதவாதத்தை ஆதரிக்காதே? கலைஞரை எதிர்க்காதே? என்பதில் தொடங்கி பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இங்கு என்ன ஆகியிருக்கும் தெரியுமா? என்ற வாதம் இங்கே நிலை பெற்றுள்ளது. கருப்பு, வெள்ளை மட்டும் நிறமல்ல. ஏராளமான வண்ணங்கள் உள்ளது என்பதனை எவரும் உணர்வதில்லை.  தான் நம்புவது மட்டுமே உண்மை என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது.  அது குறித்து எழுதும் போது நாம் ஏராளமான அவதூறுகளையும் சுமந்தே ஆக வேண்டும். கலக்கம் இல்லாமல் கலங்கரை விளக்கத்தை தேடிக் கொண்டே செல்ல மன உறுதியும் வேண்டும்.

@ இந்தியாவை முழுமையாகச் சுற்றிவர என் வாழ்நாளில் வாய்ப்பு அமையுமா? என்று தெரியவில்லை.  அது குறித்த ஆசைகளும் விருப்பங்களும் மிக அதிகம் உள்ளது.  ஆனால் குறைந்தபட்சம் இந்தியாவை பல்வேறு பார்வைகளில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்போது முயன்று கொண்டு இருக்கின்றேன்.  என் வாசிப்பு அதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது.

ண்பர்கள் சில கடந்து போன பல பதிவுகளில் கேள்விகள் போல விமர்சனம் செய்து இருந்தனர். சில சமயம் அது பலரின் பார்வைக்குக் கேலியாகவும் இருந்திருக்கக்கூடும்.  அதன் மூலம் என்னை நானே உணர்ந்து கொள்ள அதனைக் கேள்வியாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்து பதில் அளிக்க உள்ளேன்.  அதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் கற்றதும் பெற்றதும் தொடர் போல எழுத முடியும் என்று நம்புகிறேன்.


Tuesday, July 30, 2019

ஜுலை மாதமென்பது.........



ங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கையுண்டு. தான் பணிபுரியும் வேலைக்குத் தொடக்கத்தில் எட்டு மணி நேரம் ஒதுக்கினார்கள். இப்போது 12 மணி நேரம் ஒதுக்க வேண்டிய சூழல் மாறியுள்ளது. மீதி 12 மணி நேரத்தில் தான் தன் சுய விருப்பங்கள், குடும்ப விருப்பங்களுடன் ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.  தினந்தோறும் இரண்டு மணி நேரத்தை தன் சுயவிருப்பதிற்காக எடுத்துக் கொண்டாலும் நிறையச் சாதிக்க முடியும்.

ஆனால் நாம் செய்வதில்லை.  ஆனால் நான் எப்போதும் என் ஓய்வு நேரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வதுண்டு.  அதனை வாசிக்க, எழுதத் தான் அதிகம் பயன்படுத்துகிறேன்.


நாம் வாசிக்கும் புத்தகம் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருப்பேன்.  வெறுமனே வாசிப்பு என்பதற்கும் அதனைப் புரிந்து கொண்டு அதனைப் பற்றி விமர்சனமாக எழுத வேண்டிதற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது.  இதன் மூலம் உணர்ந்து படிக்க முடியும்.  முழுமையாக உள்வாங்கவும் முடியும். இது கடந்த சில மாதங்களில் சாதிக்க முடிந்ததாக மாறியது மகிழ்ச்சியே.


ணைய உலகில் எனக்கென்று சொந்த விருப்பங்கள் சில உண்டு.  குறிப்பாக வலைபதிவில்  சில விருப்பங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்து இருந்தேன். ஒவ்வொரு வருடத்திலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான மாதமாகும்.  அது என்ன? என்பதனைப் பற்றி அடுத்த பதிவில் எழுதியுள்ளேன்.


2013 ஆம் ஆண்டு மிக மிக அதிகமாக எழுதிய ஆண்டு.  அதற்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது.  ஒரு மாதத்தில் 17 பதிவுகள் எழுதிய காலம் மாறி ஒரு வருடத்தில் மொத்தமே 30 பதிவுகள் எழுதியதும் நடந்தது.  ஆனால் சென்ற மாதம் இந்த முறை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தினமும் ஒன்று எழுத வேண்டும். ஒவ்வொன்றும் சமகால சமூகத்தில் நடக்கும் சம்பவங்களாக இருக்க வேண்டும். அதிக விவாதத்தை உருவாக்கியதாக இருக்க வேண்டும். புதிய மாற்றம், பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். 

அதன்படி இந்த மாதம் முழுக்க தினமும் ஒரு பதிவு என்று எழுத முடிந்தது. 

நிச்சயம் ஏதோவொரு சமயத்தில் தினமும் இரண்டு பதிவுகள்  எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உண்டு.  அதையும் சமயம் வரும் போது நிறைவேற்றுவேன்.


த்து வருடங்களாக ஃபேஸ்புக்கில் இருந்தாலும் அதனை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.  முக்கியமான நபர்கள் எழுதுவதை அதன் மூலம் படிக்க வாய்ப்பு இருந்த காரணத்தால் வாசிப்புத் தளமாகப் பயன்படுத்தி வந்தேன்.  இந்த வருடம் தான் மிக அதிக அளவு அதாவது தினமும் ஏதாவது ஒன்றைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆனாலும் இருட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியும் கலாச்சாரம் நிறைந்த பிற்போக்குவாதிகள் அந்த தளத்தில் அதிகம் இருப்பதால் கரம் சிரம் புறம் பார்த்து நகர்ந்து கொண்டே வந்தேன்.  

அங்கு எழுதியது, வாசித்தது எனக்கு இந்த  மாதம் பலன் உள்ளதாக இருந்தது.  நான் நினைத்த மாதிரியே இந்த மாதத்தில் என் நீண்ட நாள் விருப்பத்தைச் சாதித்த திருப்தியுள்ளது.


ண்பர் சீனிவாசன் தான் முதலில் மின் நூலுக்கென இணையதளம் உருவாக்கினார்.  அதற்கு முன்னால் தமிழில் யாராவது உருவாக்கி இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை.  

ஆனால் அவர் இடைவிடாமல் உழைத்த உழைப்பில் இன்று அந்த தளம் 61 லட்சம் இலவச மின் நூல்களை உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. தமிழர்கள் தமிழகத்தில் எட்டு கோடியும் வெளியே மூன்று கோடியும் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 கோடி என்றால் இணையம் பயன்படுத்த தெரிந்தவர்கள், நாள் தோறும் இணைய பயன்பாட்டில் இருப்பவர்கள் என்று ஓரு கோடி தமிழர்களை எடுத்துக் கொள்ள முடியும். இதனை கணக்கிட்டால் சீனிவாசன் மற்றும் அவரின் குழுவின் உழைப்பு எத்தனை சதவிகித மக்களைச் சென்று அடைந்துள்ளது. இது மலைப்பான சாதனை ஆகும்.

என் மின்னூல்களைச் சீனிவாசன் தான் சிரத்தை எடுத்து வெளியிட்டு அங்கீகாரம் கொடுத்தார்.  அதன் பிறகு பல தளங்கள் எடுத்து வெளியிட்டது.  பிரதிலிபி தளமும் ஒன்று.  இன்று பத்திரிக்கைகளில் கதைகள் என்ற அமைப்பே காணாமல் போய் திரைத்துறை துணுக்குகளை மட்டும் வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.


னால் பிரதிலிபி இன்று தமிழில் பல நூறு எழுத்தாளர்களை, கட்டுரையாளர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது.  துடிப்பான இளைஞர்கள் அதில் சுயலாபம் எதுவும் இல்லாமல் இந்த சேவையைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு என் வாழ்த்துகள்.  சில நாட்களுக்கு முன் இந்த தகவலை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.  யாரோ ஒருவருக்கு நம் எழுத்து ஏதோவொரு வகையில் சென்று சேர்ந்து கொண்டேயிருப்பது மகிழ்ச்சி.


2019 ன் மற்றொரு குறிப்பிடத்தக்கச் சாதனை கிண்டில் அறிமுகமாகி அதில் என் மின்னூல்கள் வெளியிடப்பட்டது.  மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிறிய தொகை என்றாலும் வங்கியில் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

இவையெல்லாம் எழுத்தே தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டும் தான் முடியும் என்று நம்பியிருந்தேன்.  ஆனால் நாம் உருவாக்கியுள்ள நம்பகத் தன்மை ஏதோவொரு வகையில் நமக்கு திரும்பவும் வந்து கொண்டு இருக்கின்றது என்பதாக நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பதிவு இம்மாதத்தின் இறுதி பதிவு.  சிறிது இடைவெளி விட்டு உரையாடுவோம்.

பிரதிலிபி எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை வாசியுங்கள்

உங்களது படைப்புகளின் புள்ளிவிவரம்
வணக்கம் ஜோதிஜி திருப்பூர்,
கடந்த வாரம் உங்கள் படைப்புகளுக்கு நல்ல எதிர்வினைகள் வந்திருக்கிறது. பிரதிலிபியில் உங்களது புள்ளிவிவரங்கள் இதோ :


எழுத்தாளர் புள்ளிவிவரம் 
மொத்த வாசகர்கள்
10343
சராசரி மதிப்பீடு
3.71
மொத்த விமர்சனங்கள்
31
மொத்த ஃபாலோவர்ஸ்
270
























Monday, July 29, 2019

வைகோ 2019


"எனக்குப் பேச மூன்று நிமிடம் தான் கிடைக்கும். அதற்குள் என்ன பேச முடியுமோ? அதைப் பேசுவேன் "என்று எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வைகோ இங்கிருந்து போகும் போதே ஒரு முடிவுடன் தான் போனார்.

அதெல்லாம் சரி. போன வேலையைப் பார்க்காமல் அங்காளி பங்காளி என்று ஒருவர் விடாமல் எல்லாரையும் ரவுண்டு கட்டி இரண்டு மூன்று நாளா ஒவ்வொரு வீடா ஏறி இறங்கிட்டுருக்காரு. குடும்பத்தையும் வேறு கொண்டு போய்ச் சேர்த்துருக்காரு.

வாழ்வின் கடைசி சமயங்களில் இங்கே பலருக்கும் ஒன்று பயம் வந்து விடுகின்றது. இரண்டு எதார்த்தம் புரிந்து விடுகின்றது. மூன்று நம் கொள்கைகள் பேசுவதற்கு மட்டும் தான். நடைமுறையில் வாய்ப்பில்லை என்ற உண்மையும் புரிந்து விடுகின்றது.

ஆனால் அதற்கு அரசியலில் நுழைந்து உணர்ந்து கொள்ள ஐம்பது ஆண்டுகள் தேவைப்படுகின்றது.😔

+++++++++++

ஏற்கனவே கூகுள் ப்ளஸ் என்ற அமைப்பு இருந்தது. கொஞ்சம் நெருக்கமான உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. ஆனால் 50 வயதைக் கடந்தால் உருவாகும் அனைத்து முட்டாள் தனங்களும் அவர்களிடம் இருந்தது. தான் நம்புவது மட்டும் தான் சரி என்று நம்பும் கூட்டமாகவும் இருந்தது. இழுத்து மூடிவிட்டார்கள். அவர்கள் ஃபேஸ்புக் பக்கம் வராமல் டிவிட்டர் பக்கம் ஒதுங்கி விட்டார்கள். மொத்தமாகக் கலைந்தும் போய்விட்டார்கள்.

அவர்கள் ஃபேஸ்புக் வராமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் தங்களை ஆப்ரேசன் செய்து குற்றுயிரும் கொலையுமாகச் செய்து விடுவார்களே? என்ற பயம். கருப்பு வெள்ளை மட்டுமே நிறம். இங்கே பல வண்ணங்கள் உண்டு என்பதனை உணர மறுப்பவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன கூட்டத்தால் ஒதுக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.

நான் அறிந்தவரையிலும் பேஸ்புக் தளத்தில் நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து நிதானமாக கற்றுக் கொள்ள முடியும். அது சதவிகித அடிப்படையில் குறைவு என்றபோதிலும். வேறு ஏதாவது தளம் கிடைக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்த இந்த தளம் திடீரென்று அறிமுகம் ஆனது. முதலில் ஆங்கிலம் வழியே மின் அஞ்சலுக்கு வந்து கொண்டிருந்தது. பலவிதமான உரையாடல்கள். ஆனால் மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்குப் படிப்பது போன்று உருப்படியான சமாச்சாரங்கள். அதைத்தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததேன்.

ஒரு நாள் உள்ளே நுழைந்த போது உன் தாய் மொழி தமிழ்தானே? என்று கேட்டது. அப்படியே தமிழுக்குத் திருப்பி விட்டது. அப்போது தான் தமிழில் கூட உரையாடல் உள்ளது என்பதனை புரிந்து கொண்டேன். (நான் இது போன்ற விசயங்களில் கொஞ்சமல்ல நிறைய ட்யூப்லைட்).

தினமும் மின் அஞ்சலுக்கு வந்து கொண்டேயிருக்கின்றது. இன்று வந்த உரையாடலின் ஒரு பகுதி இது.


பணத்தைத் தோற்கடிக்கும் ஆயுதம் எது?

எபனேசர் எலிசபெத் (Ebenezer Elizabeth), எந்திரவியல் பயிற்சியாளர் (2016-தற்போது)

மாறுதலாகி வேறொரு பள்ளியில் சேர்ந்தேன் அந்த பள்ளியில் 'அ' பிரிவு ஆங்கில வழி கல்வியும் மற்ற பிரிவு தமிழ் வழிக் கல்வியும் கற்று தரப்படும்.
அப்பர் மிடில் கிளாஸ் மாணவர்கள் தான் பெரும்பாலும் ஆங்கில வழி கல்வி படிப்பதுண்டு. விளையாட்டு விழாவில் பங்கேற்க மாணவிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார் அந்த உடற்கல்வி ஆசிரியை. விளையாட்டில் மிகவும் ஆர்வம் இருக்க நானும் எனது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்க, தமிழ் மீடியாம? Shoe வாங்க முடியுமா? நீங்க எல்லாம் ஏன் விளையாட வாரீங்க?னு கேட்டார் அந்த ஆசிரியை.

எதையும் புரிந்து கொள்ளும் பதின்ம வயதாகையால் ஒன்றும் சொல்லாமல் வெட்கத்துடன் திரும்பி வந்து விட்டேன் …..

எங்க போனாலும் அந்த ஒன்னு மட்டும் மறக்கவே இல்லை அந்த வார்த்தை என்னை துரத்திக்கொண்டே இருந்தது... விடலையே நானும்....., படிச்சேன் அடிச்சி பிடிச்சி..,தொரத்தி விரட்டி வேலையை வாங்குனேன்................., shoe வா வாங்கி குமிச்சேன் ... காலம் உருண்டோடியது .... நான் அணியும் உடைக்கு பொருத்தமாக shoe போடும் அளவிற்கு இறைவன் இரக்கம் காட்டினார். இப்ப shoe எல்லாம் பெரிய விஷயமாவே தெரியல, அது மேல இருந்த ஆசையே போய்விட்டது.சலித்துவிட்டது.

நெல்சன் மண்டேலாவின் கூற்று மிக உண்மையே.

“Education is the most powerful weapon which you can use to change the world.”

பணத்தைத் தோற்கடிக்கும் ஆயுதம் என நான் நம்புவது கல்வியையே.

ஆதலால் கற்பிப்பீர்.


**************

தமிழக அரசியல்வாதிகள் டெல்லியில் எப்படிச் செயல்படுகின்றார்கள்?

வைகோ மாநிலங்களவையில் கர்ஜித்தார். முழங்கினார். திணறடித்தார் என்று வரிசையாக யூ டியூப் ல் ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த தலைப்பினை வைத்துப் பயமுறுத்துகிறார்கள்.

அப்படி என்ன சாதித்தார்?

இரண்டு விசயங்களைப் பற்றிப் பேசினார்? டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் குறித்துப் பேசினார். ஆயத்த ஆடைத்துறையில் மத்திய அரசு கொள்கை குறித்துப் பேசினார்.

ஆயத்த ஆடைத்துறையில் உள்ள சார்புத் தொழிலாக உள்ள சாயப்பட்டறைகளுக்கு மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு ஒரு மாதிரியாகவும், மற்ற மாநிலங்களில் வேறு விதமாகவும் கொள்கை முடிவு எடுக்கின்றது என்றார்.

இதனை விரிவாகப் பேசினால் வட மாநிலங்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் என்பது எங்குமே இல்லை. அப்படியே கடலில் கலந்து விடுகின்றார்கள். அருகில் உள்ள கர்நாடகாவில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெருக்கடியான இடங்களில் கூட திருப்பூரிலிருந்து சென்றவர்கள் சாயப்பட்டறைகள் வைத்துள்ளார்கள். குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் சாக்கடை செல்லும் வழிகளில் இந்த சாயத் தண்ணீரை அப்படியே திறந்துவிடுகின்றார்கள். அந்த கழிவு சாய நீர் அனைத்தும் காவேரியாக நமக்கே திரும்பி வந்து விடுகின்றது.

சரி திருப்பூரில் யோக்கியவான்கள் இருக்கின்றார்களா?

சாயப்பட்டறைகளின் தண்ணீரை வாங்கி சுத்திகரிக்கும் நிறுவனம் அந்தத் தண்ணீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே நொய்யல் ஆற்றில் கலப்பதும், சங்கப் பொறுப்பிலிருந்து கொண்டு மத்திய அரசு வழங்கும் மானியங்களை அப்படியே ஸ்வாகா செய்வதும் தான் நடக்கின்றது. நேர்மையாகத் தொழில் செய்பவர்களை மிரட்டுவது, முடக்குவது, அதிகாரிகளை வைத்து சித்திரவதை செய்வதும் தான் நடக்கின்றது.

அதாவது தனிப்பட்ட முறையில் நீ சுத்திகரித்து சமூகத்திற்குச் சேவை செய்யக்கூடாது. நாங்கள் சொல்லும் நிறுவனத்தில் நீ இணைந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் காசை நீ தொழில் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் மாதந்தோறும் கட்டியாக வேண்டும் என்று அமைச்சர், அதிகாரிகள், சங்கப்பொறுப்பாளர்கள் என்ற கூட்டணி களவாணிகள் இந்த தொழிலையே படிப்படியாகச் சிதைத்துக் கொண்டிருப்பது வைகோ அவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை.

இது முழுக்க முழுக்க மாநில அரசாங்கம் சம்மந்தப்பட்டது.

அத்துடன் வங்கதேசத்திலிருந்து வரும் பருத்தி இந்தியத் தமிழக பஞ்சாலையை முடக்கிப் போடுகின்றது என்றார்.

காங்கு ஆட்சியில் சரத்பவார், சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னும் பலரும் எப்படிச் செயல்பட்டார்கள்? எப்படி வட இந்திய லாபி மொத்த பஞ்சுத் தொழிலை மாபியா கும்பல் போலச் செயல்பட்டு வளைத்து தமிழக பஞ்சாலை முதலாளிகளைக் கதறவிட்டார்கள் என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு கேள்விகளில் பத்து துணைக் கேள்விகளை உள்ளே வைத்துப் பேசி முடித்து அமர்ந்ததும் ஸ்மிருதி ராணி இதனையே குறிப்பிட்டு வேறு விதமாகப் பதில் அளித்தார். அமைச்சர் பதில் எனக்குத் திருப்தியில்லை என்றார் வைகோ.

இவர் என்ன செய்திருக்க வேண்டும்?

ஒவ்வொருவர் வீடாக ஏறி இறங்கிய நேரத்தில் ஸ்மிருதி ராணியை அவர் அலுவலகத்தில் சந்திருந்திருக்க வேண்டும். இங்கிருப்பவர்களிடம் மொத்த பிரச்சனைகளையும் கேட்டு அதனை வரைவுத் திட்டமாகத் தயாரித்து சாதக பாதக அம்சங்களை அமைச்சர், அதிகாரிகளைப் பார்த்துப் பேசி கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை வைத்து பத்திரிக்கைக்கு அறிக்கையாகக் கொடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தன் சமூக வலைதளத்தில் இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் உள்ள பாதக அம்சங்களை பட்டியலிட்டுருக்க வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைப் போய் பார்த்திருக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவுகள் பரிசீலிசனை செய்ய வாய்ப்புள்ளதா? என்பதன் எதார்த்தத்தைப் புரிந்திருக்க வேண்டும். வண்டு முருகன் போலத் தமிழக மேடை போல இங்கே வாதாட முடியாது என்பதனையும் புரிந்திருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பது என்பது காலம் காலமாக அங்குள்ள பதிவேடுகளில் பதிய உதவுமே தவிர லாபியை நெருங்காமல், நெருக்காமல் இருக்கும்பட்சத்தில் பத்து பைசாவுக்கு கேட்ட கேள்விக்குப் பிரயோஜனம் இருக்காது.

அதிகாரம் இருந்தாலே அங்குள்ள ஹிந்திவாலாக்கள் நம்மை மேலும் கீழும் நக்கலாகப் பார்ப்பார்கள். துறை சார்ந்த அமைச்சருக்குப் பின்னால் உள்ள இணை, துணை செயலாளர்கள் வட்டத்தைப் பார்த்து முடிப்பதற்கே நமக்கு நாக்கு தள்ளிவிடும். இவரோ தனி நபராகப் போயுள்ளார்.

புல்லட் ரயில் போல படபடவென்று நிறுத்தாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசி, அரசுக்கு எச்சரிக்கை விட்டு வெங்கையா நாயுடுவிடம் எச்சரிக்கை வார்த்தைகள் வாங்கியது தான் இறுதியில் வைகோவுக்கு கிடைத்த பரிசு.

23 ம் புலிகேசியில் வடிவேல் சொல்லும் வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது.

"வெளியில் அரண்மனையில் வேலை என்று சொல்லிக் கொள்ள வேண்டியது".



Sunday, July 28, 2019

ஜனநாயகத்தைப் பரவலாக்கியவர் அண்ணா:


அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா?

அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகுமக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில்தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது தீவிரமான கவனம் கொடுத்தது. என்னுடைய சிறுவயது நினைவிலிருந்து சொல்கிறேன். திருநெல்வேலியில் அப்போதே மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குப் பெரிய செல்வாக்கு இருந்தது.

திராவிட நாடு’, ‘முரசொலி’, ‘நம்நாடு’, ‘மன்றம்’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘போர்வாள்’ இப்படி நிறையப் பத்திரிகைகள் வரும். பள்ளிக்கூட மாணவர்களே சொந்தக் காசிலிருந்து ‘திராவிட நாடு’ வாங்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் அண்ணாவுக்கு ஒரு மவுசு இருந்தது. வாங்குவது மட்டுமல்ல; மனப்பாடமே செய்துவிடுவார்கள். அண்ணாவின் மொழிநடையும் இயல்பாகவே மனப்பாடமாகும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது என்று நினைக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் பற்றி தேர்வில் ஒரு கேள்வி வந்தது. ‘சேரநாடு செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து வளர்ந்து வளம் கொஞ்சும் நாடு... எழிலுறத் திகழும் பொழில்கள், அப்பொழில்களைச் சுற்றி அடுக்கடுக்கான மாளிகைகள். அம்மாளிகைகளின் உள்ளே கலகலவென ஒலியெழுப்பிக் களிப்படையும் காரிகைகள், இத்தனையும் படைத்துச் செல்வத் திருநாடாய் இன்பத் திருவீடாய் இருந்தது 

சேர நாடு…” இப்படி! (கடகடவென ஒப்பிக்கிறார்) விடைத்தாள் கொடுக்கும்போது ஆசிரியர் என்னை அழைத்தார். எனக்கோ பயம். “திராவிட நாட்டைப் படிச்சி மனப்பாடம் பண்ணுனியா?” என்றார். தலையாட்டினேன். விடைத்தாளைக் கையில் கொடுத்துவிட்டார். இப்படி ஆசிரியரும் மாணவரும் ஒன்றுபோல் படிக்கும் சூழல் அன்றிருந்தது. பேச்சுப் போட்டி என்றால், திமுக பாணியில்தான் மாணவர்கள் பேசுவார்கள். நாடகப் போட்டி என்றால் அண்ணா, கருணாநிதி எழுதிய நாடக வசனங்களைத்தான் பேசினார்கள். பொதுவாக, அந்நாட்களில் மூன்று இயக்கங்கள் மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெரிய அளவில் திமுக, சிறு துளி மாதிரி தமிழரசுக் கழகம், இரண்டுக்கும் நடுவே பொதுவுடமை இயக்கம். காங்கிரஸுக்குப் பெரியவர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்ல முடியாது. 

பெரியாருக்குத் தீவிர ஆதரவாளர்கள் இருந்தார்கள். அதேசமயம், அது பெருங்கூட்டம் என்று சொல்ல முடியாது. திராவிடர் கழகத்தின் வளர்ச்சியிலேயே அண்ணாவுக்குப் பங்கிருந்தது. ஒரு சரியான தருணம் முகிழ்ந்தபோது சமூக மறுமலர்ச்சி இயக்கமான அதிலிருந்து அரசியல் இயக்கத்தை உருவாக்கிய அண்ணா, அரசியல் களத்தை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டார். திமுக கூட்டங்களிலும் சரி, பத்திரிகை களிலும் சரி, பெரிய வசீகரம் தமிழ்.

தமிழ்நாட்டின் அறிவியக்கத்தில் பொதுவுடமை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் இவற்றினூடாக திராவிட இயக்கம் – குறிப்பாக, அண்ணாவின் திமுக – செய்த முக்கியமான மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்? நவீனத் தமிழ்ச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் அண்ணா நடத்திய அறிவியக்கம் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியது?

திராவிடர் இயக்கம்தான் தன்மான உணர்வை அடித்தட்டு மக்கள் வரை கொண்டுசேர்த்தது. எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன அக்ரகாரமுண்டு. ஆனாலும், ‘சூத்திரர்கள்’ என்ற வார்த்தையை நான் கேட்டதில்லை. நான்காம் வகுப்பு படிக்கையில் சென்னை மயிலாப்பூர் கோயிலுக்குப் போனபோதுதான் முதல் முறையாக ‘சூத்திரா ஒத்திக்கோ’ என்று பிராமணர்கள் சொல்லக் கேட்டேன். விதவை மாமிகள் அப்படிச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். அப்போது அதற்கு எனக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அப்பாவிடம் கேட்டேன். “சூத்திரர் என்றால் பிராமணர் அல்லாதவர்” என்று சுருக்கமாகச் சொல்லிக் கடந்துவிட்டார். 

ஆனால், படிக்கப் படிக்க சாதியின் பின்னுள்ள அரசியல் புரிபட்டது. “சூத்திரன் என்றால் தேவடியா மகன்னு அர்த்தம்டா. யாராச்சும் சூத்திரன்னு சொன்னா, யார்டா தேவடியா மகன்னு எதிர்த்துக் கேளு” என்று பெரியார் அன்று சொன்னது நேரடி அர்த்தப்பாட்டுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம்; ஆனால், அவ்வளவு சாதிய இழிவுகள் அன்று பிராமணரல்லாதோர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இன்றைக்கு யாருமே ‘சூத்திரா ஒத்திக்கோ’ என்று சொல்ல மாட்டார்கள்; திராவிட இயக்கத்தின் விளைவு அது. அதேபோலதான் புராணம் என்ற பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அதை அடிப்படையாகக் கொண்டு நடந்த ஊழல் சமூக அமைப்பையும் கேள்வி கேட்கவைத்தார் பெரியார். பேச்சு வழியாக மட்டும் அல்லாமல், இதையெல்லாம் பத்திரிகைகள், சிறு பிரசுரங்கள் வழியாகவும் பேசியது திராவிட இயக்கம். மேலைச் சிந்தனையாளர்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. 

ஆக, திராவிட இயக்கப் பத்திரிகைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் தமிழ் உணர்வு, சமத்துவம் இவற்றை மட்டும் அவை பேசாமல் ஏனையோர் பேசத் தயங்கிய சமூக நீதியையும், பகுத்தறிவுக் கோட்பாட்டையும் பேசின. கடவுளையே விமர்சிக்கலாம் என்ற சூழலை உருவாக்கியதன் மூலம், எதையும் விமர்சிக்கலாம் என்று கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை விரிவுபடுத்தின. பத்து, பன்னிரெண்டு வயது பையன்களெல்லாம் தீவிரமான பத்திரிகைகளைப் படிக்கும் சூழல் இந்தப் பின்னணியில்தான் ஏற்பட்டது. பெரியார் காலத்திலேயே திராவிட இயக்கக் கூட்டங்களில் முக்கிய அம்சமாக, புத்தக விற்பனை வந்துவிட்டது. புத்தகங்களை விற்றுவிட்டுதான் பெரியார் பேச்சையே தொடங்குவார். இன்றைய புத்தகங்களின்  பின் அட்டையில் அதைப் பற்றிய சிறு குறிப்பு எழுதுகிறோம் இல்லையா, அந்த மாதிரி புத்தகத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சின்ன அறிமுகத்தைச் சொல்லிவிட்டு, “இந்தப் புத்தகத்தின் விலை ரெண்டணா. இந்தக் கூட்டத்தில் ஒன்றரையணாவுக்குக் கொடுக்கிறேன்” என்பார். 

அதைப் பகுத்தறிவாளர்கள் மட்டுமில்லை, ரொம்ப வைதீகமான ஆட்கள்கூட வாங்குவார்கள். கூட்டத்துக்கு நடுவே புத்தகங்களைச் சுமந்துகொண்டு வந்து திராவிட இயக்கத்தினர் விற்பார்கள். அதேபோல, ஒரு விஷயத்தைப் பேசும்போது ஆதாரபூர்வாகப் பேசுகிறோம் என்பதை உணர்த்துவதற்காக சம்பந்தப்பட்ட புத்தகத்தைக் காட்டி அதில் உள்ள பகுதியைப் பக்க எண் குறிப்பிட்டு வாசிக்கும் பழக்கத்தையும் பெரியார் கொண்டுவந்துவிட்டார். ஆக, புத்தக வாசிப்பின் மேல், அறிவின் மேல் ஒரு பசியை உண்டாக்குவது என்பது பெரியார் காலத்திலேயே திராவிட இயக்க மேடைகளில் தொடங்கிவிட்டது. வாசிப்பின் மீதான ஆர்வத்தை அடுத்து எழுத்தின் மீதான ஆர்வம் எல்லோரையும் தள்ளியது. 

அண்ணா தலையெடுத்த பின் அவரை முன்னுதாரணமாகக் கொண்ட ஒவ்வொருவரும் மேடைப் பேச்சும், பத்திரிகை எழுத்தும் அரசியலுக்கான தகுதிகள் என்பதுபோல உணரலானர். ஆளாளுக்குப் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். இது திராவிட இயக்க இதழ்களின் எண்ணிக்கையை விசுவரூபம் எடுக்கவைத்தது. சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் திராவிட இயக்கத்தவரிடமிருந்து மட்டும் அப்போது வந்தன. தனித்தமிழ் இயக்கம் சார்பில் வெளிவந்த முதல் பத்திரிகை, பெருஞ்சித்திரனார் நடத்தி கடலூரிலிருந்து வெளிவந்த ‘தென்மொழி’; முக்கியமான பத்திரிகை. போலவே, இளைஞர்களுக்காக ‘தேன்சிட்டு’ என்று நடத்தினார்கள். பிறகு, லெனின் தங்கப்பா போன்றவர்கள் மாவட்டத்துக்கு ஒரு பத்திரிகையை நடத்தினார்கள். 

ஆனால், அது பெரிய மக்கள் இயக்கமாக மாறவில்லை. பொதுவுடைமை இயக்கத்தில் முதலில் ‘ஜனசக்தி’ வந்தது. 1958 டிசம்பரில் ‘தாமரை’ முதல் இதழ் வந்தது. தொழிலாளர்கள் காத்திருந்து வாசிக்கும் இதழாக ‘ஜனசக்தி’ இருந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். மாணவர்கள் மத்தியில் திராவிட இதழ்கள் போன அளவுக்கு எதுவும் போகவில்லை. பொதுவுடைமை இயக்கம் ஆகட்டும்; ஏனைய இயக்கங்கள் ஆகட்டும்; தனிநபர்கள் பத்திரிகைகள் நடத்துவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அவரவர் இஷ்டப்படி நடத்துகிறார்கள் என்று தடைபோட்டார்கள். ஆனால், அண்ணா எல்லா கருத்து முரண்பாடுகளையும் விவாதங்களையும் அனுமதித்தார். 

பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்த் தரப்பினரின் வாதத்தையும் திராவிட இயக்கத்தினரின் வாதத்தையும் ஒன்றாகப் பிரசுரித்து ‘எழுத்துப்போர்’ என்றெல்லாம் சிறு வெளியீடுகளை நடத்தும் கலாச்சாரம் உருவானது. ஊருக்கு ஊர் பூங்காக்கள் தொடங்கி டீக்கடைகள், சைக்கிள் கடைகள், சலூன்கள் வரை திராவிட இயக்கப் பத்திரிகைகளை வாய்விட்டு ஒருவர் வாசிக்க ஏனையோர் கேட்கும் சூழல் இருந்தது. எல்லாமுமாகச் சேர்ந்து சாமானியர்கள் மத்தியில் அரசியல் மீதான ஒரு ஈர்ப்பையும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கின. ஏனைய கட்சிகளிடமும் தாக்கத்தை உண்டாக்கின.

தமிழ்நாட்டின் அரசியல் மேடைகளை அண்ணா எந்த வகையில் மாற்றியமைத்தார்?

மேடைகளின் வடிவம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1950-களில் எல்லா கட்சி மேடைகளும் ஒரே மாதிரியாக, எளிமையாக இருந்தன. ஒரு பிளாட்பார்ம், ஒரு சின்ன ஏணியுடன் மேடைகள் இருக்கும். மேலே மேற்கூரை இருக்காது. பக்கவாட்டில் இரண்டு கம்பு, மேலே இரண்டு கம்பு. மொத்தம் ஐந்தாறு டியூப் லைட் அவ்வளவுதான். மின் விசிறிகூட இருக்காது. இரவில் ஒரு கட்டத்துக்கு மேல், நிறைய  பூச்சிகள் வந்து விழும். இதற்காகவே விளக்கருகே எண்ணெய்த் தாளைத் தொங்கவிட்டிருப்பார்கள். பெரியாரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. தள்ளாத வயதிலும் தொடர்ந்து ஊர் ஊராகப் போய்க் கூட்டம் பேசினார். அவருடைய நேர்மையை எல்லா தரப்புகளிலும் ரசிப்பவர்கள் இருந்தார்கள். 

சிதம்பரத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு கூட்டம். பெரியார் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்சாரம் போய்விட்டது. சட்டென்று ஒரு கமென்ட் அடித்தார், “பார்ப்பனர்களை விமர்சிக்க ஆரம்பிச்சா, கரென்ட்கூடப் போயிடுது. என்ன செய்ய? நம்மாள் போஸ்ட்ல ஏறி இறங்குனாலும் சுவிட்ச் இன்னமும் பார்ப்பனர்கள் கையிலதானே இருக்கு?” கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கும். 

கூட்டத்தில் பங்கேற்ற பிராமணர்களும்கூடத்தான்! அப்புறம் பெரியார் பேச்சின் இன்னொரு விசேஷ அம்சம் என்னவென்றால், எந்த ஊரில் அவர் பேசினாலும், கொஞ்சம் உள்ளூர் விஷயங்களையும் எடுத்துக்கொள்வார். திருநெல்வேலியில் கூட்டம் என்றால், நெல்லையப்பர் திருவிழாவின் மோசமான புராணக் கதைப் பின்னணியைச் சொல்லித் திட்டுவார். நெல்லையப்பர் மானூர் என்ற ஊரில் எழுந்தருள்வதற்கு வைப்பாட்டி வீட்டுக்குப் போவதாக ஒரு கதை உண்டு. “வைப்பாட்டி வீட்டுக்குப் போகுது சாமி. முட்டாப் பசங்களா, அதுக்கு விழாவா?” என்று திட்டுவார். ஆனால், சிரிச்சுக்கிட்டே மக்கள் கேட்டுக்கொள்வார்கள். காங்கிரஸில் விபூதி வீரமுத்து என்று ஒருவர் இருந்தார். பெரியார் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடையில் நின்றபடி, “செருப்பால் அடிப்பேன்” என்பார். சொன்னபடியே, பெரியார் படத்தைச் செருப்பால் அடிக்கவும் செய்வார்; பெரியார் படத்தைக் கொளுத்தவும் செய்வார். பெரியார் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. “நானே நிறைய படம் அடிச்சி வெச்சிருக்கேன். என்கிட்டையே வாங்கிக்கோ” என்று இயல்பாய்ச் சொல்வார். கூட்டம் இதையெல்லாம் வெகுவாக ரசிக்கும். 

அந்தக் காலத்தில் அரசியல் கூட்டம் நடந்தால், பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் எழும். எப்படி என்றால், துண்டுச்சீட்டில் கேள்வியை எழுதி தலைவருக்குக் கொடுத்தனுப்புவார்கள். 

பெரியார் இப்படியான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஆர்வமாக இருப்பார். பாளையங்கோட்டையில் ஒரு கூட்டத்தில் திமுகக்காரர் ஒருவர், பெரியாரிடம் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். “தந்தை பெரியார் அவர்களே, எங்கள் தலைவர் அண்ணா புத்தியைத் தீட்டச் சொல்கிறார்; நீங்களோ கத்தியைத் தீட்டச் சொல்கிறீர்கள். இதில் இருந்தே இரண்டு பேருக்குமுள்ள வேறுபாடு தெரிகிறதல்லவா?” கேள்வியை முழுமையாக வாசிக்கும் பெரியார், “இப்படி ஒருத்தர் கேள்வி கேட்டிருக்கார். ஏன்யா, எவன் எவனுக்கு எது எது பஞ்சமோ அதைத்தானே தீட்டணும்!” என்று போகிற போக்கில் அடித்துவிட்டுப் போய்விடுவார். அப்போது சிரித்தேன். 

பல வருஷம் கழித்து யோசித்த பிறகு, அந்த ஆள் திமுகவில் இருந்தாலும் பெரியாருக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து, ‘தந்தை பெரியார் அவர்களே…’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்; இந்த மரியாதையை எப்படி திமுகவினரிடம் அண்ணா உருவாக்கினார் என்று யோசித்திருக்கிறேன். அரசியல் மேடைப் பேச்சுகளை வெறும் பிரஸ்தாபமாக அல்லாமல், இலக்கிய நடையோடும் புள்ளிவிவரங்களோடும் பேசும் தீவிரமான இடமாக அண்ணா உருமாற்றினார்; தமிழின் பெருமையையும் தமிழர்களின் வீழ்ச்சியையும் மேடைப் பேச்சின் மையத்துக்குக் கொண்டுவந்தார். 

நிறையப் புள்ளிவிவரங்களைப் பேச்சில் தருவார். தமிழ்நாடு எந்தெந்த விஷயங்களிலெல்லாம் புறக்கணிக்கப்படுகிறது என ஆதாரபூர்வமாகப் பெரிய பட்டியலே போடுவார் (இதை மீண்டும் சிந்திக்கும் காலத்தில் இன்றைக்கு இருக்கிறோம்). அவருடைய இயக்கத்துக்கு அப்பாற்பட்ட ஆட்களும் பங்கேற்கும் கூட்டங்களாக அண்ணாவின் கூட்டங்கள் அமைந்தன. நட்சத்திரப் பேச்சாளர் என்றால், அவர்தான். அண்ணா கூட்டங்களுக்கு வெள்ளம்போல மக்கள் வருவார்கள்.

ஒரு ஒப்பீட்டுக்கு அண்ணாவுக்குத் தமிழ்நாட்டில் இருந்த செல்வாக்கை  அகில இந்திய அளவில் நேருவுக்கு இருந்த செல்வாக்கோடு ஒப்பிடலாமா?

தாராளமாக! எங்கள் அப்பா நேரு பக்தர். நேரு இறந்தபோது இரு நாட்கள் அவர் சாப்பிடவில்லை. அப்படி ஒரு நேசம். வரலாற்று ஆர்வம் காரணமாக, நேரு எழுதிய ‘உலக சரித்திரம்’ புத்தகத்தை ‘புக்ஸ் இண்டியா’ கம்பெனியில் வாங்கினேன். அந்த புத்தகத்தை ரூ.5, ரூ.7.50 என்று இரண்டு தரத்தில் வெளியிட்டிருந்தார்கள். நான் ஐந்து ரூபாய் பதிப்பை வாங்கிவந்தபோது என்னுடைய அப்பா “பைண்டட் வால்யூம் வாங்கிவா” என்று சொல்லிக் கூடுதலாகக் காசு கொடுத்தார். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, “எப்படி இருக்கிறது?” என்று கேட்ட அப்பாவிடம், “அண்ணாவின் பேச்சு இதற்கு இணையானது” என்று சொன்னபோது அவரது கடுமையான கோபத்துக்கு ஆளானேன். ஆனால், அதுதான் உண்மை. 

மாசிடோனியா என்ற நாட்டின் பெயரே அண்ணாவின் பேச்சின்மூலம்தான் எனக்குத் தெரியவந்தது. நேருவின் அரசியல், அவரது ஆதரவாளர்கள் எல்லாவற்றிலும் மேட்டுக்குடித்தன்மை உண்டு. ஆனால், அண்ணா கீழ்நிலை மக்களிடம் அதைக் கொண்டுசென்றார். நேருவின் வாழ்க்கைச் சூழல், பொருளாதாரச் சூழல், உலக அனுபவங்கள் இது எதுவும் அண்ணாவுக்குக் கிடையாது. ஆனால், நேருவின் இடத்தைச் சிந்தனையில் எட்டிப்பிடித்தவர் அண்ணா. ஐரோப்பியப் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் - ‘ஸ்கூல் ஆஃப் ஓரியன்டல் ஆப்ரிக்கன்ஸ்’ அமைப்பில் செயல்பட்டவர் - ஒரு பொதுப் பேச்சுக்கும் ஆய்வுக் கட்டுரைக்கும் உள்ள தொடர்பை அற்புதமாக வரையறுக்கிறார். 

அதைப் படித்தபோது எனக்கு அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ நினைவுதான் வந்தது. காலனிய கால வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீடுகளைத் துல்லியமாகப் பட்டியலிட்டு, தெற்கின் மக்கள் முதலீடுகள் எப்படி வடக்கின் தொழில் முதலீடுகளாக மடைமாற்றப்படுகிறது என்பதை விவாதிக்கும் புத்தகம் அது. கிராமத்து மேடைகளில் அவர் பொருளாதாரத்தை எளிமையாகப் பேசினார். 

மாணவர்கள்  மத்தியில் சென்றபோது அதை மேலும் விரிவாக்கினார். அறிவுஜீவிகள் மத்தியிலான விவாதத்துக்கான தேவையை உணர்ந்து ஆய்வுக் கட்டுரைகளாக எழுதியபோது அதைப் புத்தகமாக்கினார். ஒரே விஷயத்தை வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு ஆழத்தில் விரிவாக அவரால் விவாதிக்க முடிந்தது. இரவில் வெகுநேரம் படிப்பது, எழுதுவது; காலையில் தாமதமாக எழுந்திருப்பது; ஒரே நாளில் பல கூட்டங்களில் பங்கேற்பது என்ற பழக்கம் அண்ணாவிடம் இருந்தது. இது உண்டாக்கிய குறைபாடு என்னவென்றால், கூட்டத்துக்குச் சரியான நேரத்துக்கு அண்ணா வர மாட்டார். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் தாமதமாகும். அதனால், அண்ணா வரும் வரை கூட்டத்தைத் தக்கவைக்க இயக்கப் பாடல்கள், நாடகம் போன்ற கலை வடிவங்களைத் திமுகவினர் மேடையில் புகுத்தினார்கள். 

கூடவே, கட்சியின் உள்ளூர்த் தலைவர்களுக்கு அந்த நேரத்தில் பேச வாய்ப்பளிக்கும்படி அண்ணா சொன்னார். மேடையில் அவர் உண்டாக்கிய இன்னொரு கலாச்சாரம், 

கூட்டத்துக்குப் பங்களித்தவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி விளித்து அங்கீகரிப்பது. ‘நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே’, ‘கலைஞர் கருணாநிதி அவர்களே’ என்று ஆரம்பித்து, கட்சியின் சாதாரண நிர்வாகிகள் வரை ‘பழக்கடை பாண்டி அவர்களே’, ‘பூக்கடை முருகன் அவர்களே’ என்று எல்லோரையும் விளிப்பார்கள். இது சாமானிய மக்களிடத்திலே ஒரு பெரிய அங்கீகாரமாக அமைந்தது. 

அதுவரை எந்தக் கட்சியிலும் இது கிடையாது; பெரியாரிடத்திலும்கூடக் கிடையாது. மேடையில் துண்டு போர்த்தும் கலாச்சாரத்தின்மூலம் சாதிகளுக்கு அப்பாற்பட்டு ஒருவரையொருவர் கட்சியின் பெயரால் அணைத்துக்கொள்ளும் கலாச்சாரத்தையும் அண்ணா ஊக்குவித்தார். இவையெல்லாம் திமுகவைத் தாண்டியும் எல்லா கட்சி மேடைகளையுமே மேலும் ஜனமயப்படுத்தின!
  
‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...
  ஆ.சிவசுப்பிரமணியன் 



Saturday, July 27, 2019

ஊழலை பாஜக ஒழித்துவிடுமா?


ஒவ்வொரு முறையும் மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சிகள் மாறுகின்றது.  முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்வாதிகளைக் கூண்டில் ஏற்றுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் அறைகூவல் விடுப்பதை,  பாஜக வை காங்கிரசுக்கு எதிரி போலவே நாம் இன்று வரையிலும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்? நம்பிக் கொண்டு இருக்கின்றோம்?  இது உண்மையா?  

ஊடகத்துறையில் பணியாற்றும் கதிர்வேல் என்பவர் இது குறித்து முன்பு எழுதிய தகவல் இது.  இதைத்தான் நான் தொடக்கம் முதலே சொல்லிக் கொண்டு வருகிறேன்.  

அதிகாரம் என்பது எங்கு? எப்போது? யார் மேல்? எந்த நிலையில்? பயன்படுத்த வேண்டுமோ அந்த நிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதே இந்திய அரசியலில் எழுதப்படாத சாசனமாக உள்ளது.  

நாம் தான் மதவாதம், மதசகிப்புத்தன்மை என்று உளறிக் கொண்டு இருக்கின்றோம்.

**************

கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் எவருமில்லை என்கிற நக்கீர வம்சத்தின் வம்சாவளி நாம்.  ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட போபர்ஸ் ஊழல் புகாரை 16 ஆண்டுகள் புலனாய்வு செய்தது சிபிஐ.  

காங்கிரஸ் ஆட்சியில் அல்ல. காங்கிரஸ் அல்லாத 3 ஆட்சிகளில்.

2004 ல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி என்ன சொன்னார்?

ராஜிவ் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அல்ல, ஆதாரம் இருக்கலாம் என்பதற்கான அடையாளம்கூட சிபிஐக்கு கிடைக்கவில்லை என்றால், குற்றச்சாட்டின் நோக்கம் குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை.. என்றார் நீதிபதி. எஸ் டி ஷர்மா மாதிரி ஏதோ பெயர்; எனக்கு நினைவில்லை.

அப்போது யார் ஆட்சி தெரியுமா?

பிஜேபி கூட்டணி ஆட்சி.

பிரதமர் யார் தெரியுமா?

அடல் பிகாரி வாஜ்பாயி.

அப்பீல் செய்யலாமா என்று சட்ட அமைச்சகம் கேட்டபோது, பிரதமர் வாஜ்பாய் சொன்ன பதில் நினைவிருக்கிறதா?

"இதற்கு மேலும் என் அரசாங்கம் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அவமானப்பட வேண்டுமா?" என்று கேட்டார் அவர்.

"இன்று நான் உயிரோடு இருப்பது ராஜிவ் காந்தியின் கருணையால்" என்று வெளிப்படையாக பேட்டி அளித்த வாஜ்பாய், அதற்கு நன்றிக் கடனாக ராஜிவை விட்டுவிட்டார் என நினைக்க வேண்டாம்.

"மணிப்பூரில் நமது அரசு செய்ததைவிட இது மலிவாக தெரிகிறதே? மக்கள் நம்மை எவ்வளவு கேவலமாக எடைபோடுவார்கள்?" என்று கொதித்தார் அந்த பிஜேபி ப்ரதான் ப்ரசாரக்.

மணிப்பூர் அரசு விவகாரம் நடந்தபோது நீங்கள் பள்ளி மாணவனாக இருந்திருக்கலாம். 

"அரசுக்கு சொந்தமான கோழி குஞ்சுகளை திருடி சென்று விட்டார்" என்று வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வாரன்டும் பிறப்பித்தது, மணிப்பூர் அரசு.

அது ஜனதா கட்சி அரசு. மத்தியிலும் அப்போது ஜனதா கூட்டணி அரசு. அதன் பிரதமர் மொரார்ஜி தேசாய். பிஜேபி அதன் அங்கம்.

கோழி திருடிய குற்றவாளி பெயர் இந்திரா காந்தி!

இதற்கு மேலும் அந்த நிகழ்வு குறித்து சந்தேகம் இருந்தால், நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் முக்கியஸ்தரான டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமியை கேளுங்கள்.

பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு தேசபக்த குடும்பத்தின் பிரதிநிதியை, கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அசிங்கமாக விமர்சித்த நபரையும், அவரது வாரிசை வழிப்பறி கொள்ளையனாக சித்தரித்த அம்மணியையும் ஆதரிப்பது உங்கள் உரிமை. முழுமையாக அதை மதிக்கிறேன்.

அதற்காக, எதையும் எடுத்து வீசிவிட்டு போவோம்; அதை கேட்க எவருக்கும் உரிமை இல்லை என நீங்கள் நினைத்தால், ஸாரி ப்ரபசர், நீங்கள் மோடி கேபினட்டில் மினிஸ்டராக இருக்க வேண்டியவர்.

போபர்ஸ் வழக்கை தோண்டி எடுத்து விசாரிக்க மோடி அரசு தலைகீழாக நின்று பார்த்தது.

கையால் சீண்டினால் பாவம் என்று காலால் ஒதுக்கி தள்ளியது சுப்ரீம் கோர்ட். மறந்து விட்டீர்களா?

எல்லாம் போகட்டும். ஒரே ஒரு கேள்வி. பதில் சொல்லுங்கள்.

கடைந்தெடுத்த ஒரு க்ரிமினல் குடும்பத்தை மொத்தமாக ஜெயிலில் தள்ள முழுசாக ஐந்து வருசம் போதவில்லை என்றால், அதைவிட வெட்கக்கேடு ஏதாகிலும் உண்டா, சொல்லுங்கள்.

******************

நம்மைச்சுற்றிலும் எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கக்கூடிய தகவல்களும், செய்திகளும் தான் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

நான் எப்போது சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த நண்பர்களிடம் உரிமையுடன் சொல்வேன்.  தயவு செய்து உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை உயர் கல்வி வரைக்கும் கொண்டு போய் நிறுத்துங்கள்.  இடையில் எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள்.  உங்களுக்கு மதம் எந்த அளவுக்கு முக்கியமோ எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் கல்வி தான் மிக மிக முக்கியம் என்பேன்.  

ஆனால் இன்று வரையிலும் முடிவு ஜீரோ தான்.  நாம் ஊதுகின்ற சங்கை ஊதிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.  

வாய்ப்பிருந்தால் இந்த காணொலிக் காட்சியை நேரம் ஒதுக்கி முழுமையாகப் பாருங்கள்.  உங்களுக்கே புரியும்.


 

*****************

இந்திய நீதித்துறையின் நேர்மைக்கு ஓர் உயர்ந்த உதாரணம் மாண்புமிகு நீதியரசர் 2gபுகழ் ஓபி சைனி அவர்கள். நேர்மையின் சிகரம் ஒப்பில்லா ப சிதம்பரம் , கார்த்திக் சிதம்பரம் இவர்களுக்கு உச்ச நீதி மன்றம் வழங்கி இருக்கும் ஜாமீன்களின் கால அளவு. பொது மக்களுக்கு நீதியின் மீது உயர்ந்த நம்பிக்கையை அளிக்கும் இந்த செய்கைக்கு எப்படியும் நியாயம் கற்பிப்பார்கள். 

ஆனால் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இதை தாண்டி சொல்ல வேறொன்றுமில்லை. அதே போல ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரும் நீர்த்து போய் நீதியின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு வாரி வழங்கி இருக்கிறது.

தயாநிதி மாறன்கள், கனிமொழிகள், ஷாகித் உஸ்மான் பல்வாக்கள், ப சிதம்பரங்கள், ராபர்ட் வாத்ராக்களின் ஊழல் , கொலை, கொள்ளைகளுக்கு இயற்கையாகப்  பார்த்து தண்டித்தால் தான் உண்டு.

Friday, July 26, 2019

அதிர்ஷ்டம் என்பது புயல் காற்று


காலம் விசித்திரமானது. நீ தவழ்ந்து வரத் தெரிந்தால் போதும். நீ தான் ராஜா என்று சிலரை அங்கீகரித்து விடும். சிலருக்கோ பேசத் தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கக்கடவாய் என்று கடைக்கண் காட்டி அவர்களுக்கும் இடம் கொடுத்து விடும்.

சிலருக்கு முழுத் தேங்காய் கொடுத்து உரித்துத் தின்று கொள் என்றும், சிலருக்கோ உரித்துள்ளேன் நீ உடைத்துக் கொள் என்றும் சொல்லவல்லது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கோ தேங்காயை உடைத்தும் கொடுத்து இப்போது நீ உண்பாயா? என்று கெஞ்சும். குறிப்பிட்ட சிலருக்குத் தான் சிறு சிறு கீற்றாக மாற்றி தட்டில் வைத்து பரிமாறிக் காத்துக் கொண்டிருக்கும்.

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரைக்கும் உங்களுக்குத் தெரிந்தவர்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது. பாகிஸ்தான் என்ற நாட்டுக்கும் அதன் பெயர் உருவாக்கத்திற்குமே தொடர்பில்லாதவர் ஜின்னா. அவர் எந்த காலத்திலும் முஸ்லீமாக வாழ்ந்தது கூட இல்லை. கணவான் வாழ்க்கை தான்.

உண்பது, உடுத்துவது என்று எல்லாமே அமெரிக்கனை உரித்து வைத்துத் தான் வாழ்ந்தார். அவர் உயிரைக் காப்பாற்ற மவுண்ட் பேட்டன் பிரபு தன் உயிரைப் பயணம் வைத்து அந்த நாட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார். அவர் நினைத்த பதவியை அடைந்தார். இறக்கும் வரையிலும் ஜின்னா பாகிஸ்தானியாகவும் வாழவில்லை. உண்மையான முஸ்லீமாகவும் வாழவில்லை. அவர் தான் இன்று வரையிலும் பாகிஸ்தானின் தந்தை.

ஆனால் இன்று வரையிலும் எந்த பாகிஸ்தானியர்களும் தங்கள் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்ததே இல்லை.

ஜின்னாவிற்குப் பிறகு எத்தனை எத்தனை மாற்றங்கள். எத்தனை கொடூரங்கள், அவலங்கள், கண்ணீரும் கம்பலையும் உள்ள வாழ்க்கை இன்னமும் மாறவில்லை. அடிப்படையில் நாம் அனுபவிப்பது கூட அங்கே சராசரி மக்கள் அடைய முடியாத வாழ்க்கை தான் உள்ளது.

சொல்லப்போனால் இப்போது தான் நாடே திவால் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்தப் பெருமையை உருவாக்கிய ஒவ்வொருவரும் ஹாயாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள் அல்லது அடித்த கொள்ளையை வெவ்வேறு நாடுகளில் கொண்டு போய் சேர்த்து சுகவாசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம்ரான்கான் வந்து வகையாக மாட்டிக் கொண்டார்.

இம்ரான்கான் அரசியல் ஆசை என்பதே இல்லாத போது, அதனைப் பற்றியே நினைக்காத போது தன் நாட்டை, மக்களை நேசித்தவர். தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து உடனே செயலில் காட்டியவர்.

பாகிஸ்தானில் புற்றுநோய்க்கு மருத்துவமனையே இல்லை என்பதனை உணர்ந்து நிதி திரட்டி தன் பங்களிப்போடு 1994 ஆம் ஆண்டு லாகூரில் கட்டினார். இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. 2015 ல் பெஷாவார் நகரில் இரண்டாவது புற்று நோய் மருத்துவமனையைப் புற்று நோய் தாக்கிய சிறுவனை வைத்துத் திறந்து வைத்தார். இதுவும் பலரின் நிதியளிப்புடன் சாத்தியமானது. தனது தாயார் செஷதக் கான் நினைவாகக் கட்டி இன்று வரையிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

அரசியல் ஆசை வந்து போராடித்தான் இந்த இடத்தை அடைந்தார். பாத்திரத்தைக் கழுவித் துடைத்து வைத்திருந்தார்கள். முன்னால் இருந்தவர்கள் எவரையும் குற்றம் சாட்டவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் செய்த தவறுகளைச் செய்யாமல் தவிர்த்தார். ஆடம்பரங்களை அறவே தவிர்த்து அரண்மனை மாளிகையை விட்டு எளிய வீட்டிற்குச் சென்றார். எவையெல்லாம் தன்னால் செய்ய முடியுமோ அரசியல் ஸ்டண்ட் என்பதற்கு அப்பாற்பட்டு செயலாக்கல் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவர் சென்றவாரம் அமெரிக்காவிற்குப் பயணிகள் விமானத்தில் செல்வதைப் பார்த்து பலரும் கிண்டலடிக்கின்றனர். ஆனால் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அசராமல் ஒவ்வொரு இடமாகச் சென்று கையேந்தி வருகின்றார். இதுவரையிலும் எந்த பாகிஸ்தான் ஆட்சியரும் தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம் குறித்து மூச்சு கூட விட்டதில்லை. தீவிரவாதிகளை தங்கள் அமைச்சரவை சகா போலவே பார்த்தனர். ஆனால் இவரோ அப்பட்டமாகப் போட்டு உடைக்கின்றார். நாட்டின் சூழல் அப்படி என்று எடுத்துக் கொண்டாலும் அவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தன் மக்களை நேசிப்பவனால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட முடியும். ஆப்கானிஸ்தானில் எங்கள் பங்களிப்பு இருக்காது. நாங்கள் அவர்கள் உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. காரணம் இந்தியா அங்கே ஆழமாக வேரூன்றியுள்ளது. எங்களால் இந்திய அரசியலைச் சமாளிக்க முடியாது. இப்போது எங்களை வேலையும் அதுவல்ல என்று எதார்த்தம் புரிந்து பேசுகின்றார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் உளவுத்துறை முதல் தீவிரவாதிகள் வரைக்கும் இங்கே உள்ள நிலையான ஆட்சியும், தீவிரவாத எதிர்ப்பில் காட்டும் உடனடி செயல்பாடுகளும் பயத்தை உருவாக்க அமைதி காக்கின்றார்கள். சீனா தாங்கும் என்று நம்பியிருந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் எகத்தாளம் மட்டுமே கிடைக்கின்றது.

இன்று காலம் இம்ரான்கானுக்கு உரிக்காத முழுத் தேங்காய் கூட கொடுக்கவில்லை. சுரண்டப்பட்ட சிரட்டையைத்தான் கொடுத்துள்ளது.

மதம் என்ற போதை அபினை விட மோசமானது என்பதற்கு நாம் வாழும் போதே பாகிஸ்தான் நமக்கு உதாரணமாக உள்ளது.

*************

சென்னையில் வசிப்போர் தண்ணீருக்கு தவியாய் தவித்த போது தண்ணீர் பஞ்சமல்ல. தண்ணீர் பற்றாக்குறை என்று வாக்கு அருளினார் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் வேலுமணி. அவர் மட்டுமல்ல. அதிமுக வில் உள்ள எந்த அமைச்சர்களும், முதலமைச்சரும், அதிகார வர்க்கத்தினரும் இதனைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் குளிக்காமல், குடிக்காமல் தவித்தார்களே தவிர கீரின்வேஸ் சாலை பக்கம் போய் யாரும் நிற்கவே இல்லை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வான் ஏறி வைகுண்டம் போக நினைத்த கதையாகக் கடல் நீரைக் குடி நீராக மாற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆட்சியின் இறுதிக்காலத்தில் நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தருவோம் என்று சொல்லாமல் சொன்னார்.

ஆனால்...........

இப்போது ஒரு பக்கம் காவேரி ஒழுங்காற்று குழு ஆணையம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. குமாரசாமி பதவி விலகுவதற்கு முன்பு தண்ணீர் திறந்து விடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மற்றொருபுறம் கர்நாடகாவில் இப்போது மழை வெளுத்து வாங்கத் துவங்கியுள்ளது. காவேரி நீர் அதிகமாகவே மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கின்றது. நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்புள்ளது.

இப்போது சொல்லுங்கள்........

தகுதியில்லாதவர்களுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் என்பது புயல் காற்று போல விரைவாக வீட்டுக்குள் வந்து சேருமா?

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

எங்கு படிக்கலாம்? எதைப்படிக்கலாம்? கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. 

நல்லது என்றால் எங்கங்கே என்னன்ன வாய்ப்புகள் உள்ளது? என்பது முழுமையாகச் சந்தையில் வெளியே தெரிகின்றது. கெட்டது என்றால் குப்பைகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டு விளம்பரங்கள் மூலம் கவர்ச்சியாகக் காட்டப்படுகின்றது. மாணவர்களுக்குக் குழப்பம். பெற்றோர்களுக்கு மயக்கம்.

••••

இந்த முறை பத்திரிக்கைகளுக்கு பம்பர் லாட்டரி. டபுள் போனஸ். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ வகுப்புகள் தேர்ச்சி முடிவு வரும் போது ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் விளம்பரம் மட்டுமே தொடர்ந்து வரும். இந்த முறை தேர்தல் இத்துடன் சேர்ந்து வந்து விட்ட காரணத்தால் விளம்பரங்களுக்குப் பஞ்சமே இல்லை. பத்திரிக்கைகளில் பாதிக்குப் பாதி விளம்பரங்கள். அதுவும் முழுப்பக்க விளம்பரங்கள். 

கடந்த ஒரு மாதமாக அதிலும் குறிப்பாகக் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கு வரும் பத்திரிக்கைகளில் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களை மகள்களுடன் உட்கார்ந்து விவாதிப்பதுண்டு. எத்தனை எத்தனை கல்லூரிகள்? புதுப்புது பாடத்திட்டங்கள். நாம் கற்பனையில் நினைத்தே பார்த்திராத அத்தனை கோர்ஸ் களும் வரிசைகட்டி நிற்கின்றது.

கடந்த சில வருடங்களாகத் தொழில்நுட்ப படிப்பு காற்று வாங்கத் தொடங்கியுள்ளது. இப்போது கலைக்கல்லூரிகள் பக்கம் திரும்பியுள்ளது.

•••••

தமிழகத்தில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 479
மொத்த இருக்கைகள் 1, 72 .940
இதுவரையிலும் நிரம்பிய இடங்கள் 45 662 ( 26 சதவிகிதம்),  
பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வெறுமனே பத்து சீட்டுகள் கூட நிரம்பாத கல்லூரிகளும் உண்டு.  இனி என்ன செய்வார்கள்? என்ன செய்யப் போகின்றார்கள்?

கடந்த பத்து வருடங்களில் இது போன்ற கல்லூரிகளில் படித்து வெளியே வந்த மாணவர்கள் எந்த தரத்தில் இருப்பார்கள்.  முழு விபரம் அறிய.  தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளாவது, கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இதைப் பற்றித்தானே முதன்மையாக பேச வேண்டும்? யாராவது இதுவரையிலும் வாயைத் திறந்து உள்ளார்களா?

*******

எம்.ஜி.ஆர் தனியார் கல்லூரிகளுக்கான வாசலைத் திறந்து வைக்காமல் போயிருந்தால் இப்போதைய சூழலில் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயம் இவ்வளவு மாணவர்களுக்கு அரசு முழுமையாகக் கல்வி வழங்கியிருக்க முடியுமா? உழுத்துப்போன நிர்வாகத்தில், ஊழல் மிகுந்த அதிகாரவர்க்கம் தன் கடமையைச் சரிவரச் செய்து இருக்க முடியுமா? கல்லூரிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை இவர்கள் உருவாக்கியிருப்பார்களா? போன்ற பல கேள்விகள் வந்து போகின்றது.

••••••

திருப்பூர் மாவட்டத்திற்குள் மட்டும் எத்தனை கல்லூரிகள் என்பதனைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகின்றது. பெரும்பாலான பெற்றோர்கள் மகள்களை மகன்களுக்குச் சமமாக பார்க்கும் மனோபாவம் இப்போது வளர்ந்துள்ளது. மாணவியர்களுக்கென்று உள்ள கல்லூரிகள் தாண்டியும் இருபாலரும் படிக்கும் கல்லூரிகளில் ஏராளமான மாணவிகள் சேர ஆர்வமாக இருக்கின்றனர். மாணவியர்களின் கல்வியறிவு தற்போது வேறொரு புதுப் பிரச்சனையை இங்கே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. 

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் கவுண்டர் இன சமூக மக்கள் மணமகன் மணமகள் கூடும் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். அதாவது மேட்ரிமோனியல்.காம் மாதிரி. அதற்கு அவர்கள் தனியாகப் பெயர் ஒன்று வைத்துள்ளனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பெண்கள் எவரும் இதனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. காரணம் அவர்கள் எதிர்பார்ப்புக்குரிய ஆண்கள் இல்லை. கூட்டம் நடத்தியவர்கள் நொந்துபோய் முழுமையான தோல்வி என்றார்கள். இன்னும் நாலைந்து வருடங்களில் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் நடக்கப் போகும் காலம் வரப் போகின்றது.

•••••

மாணவர்கள் மாணவியர்கள் பத்திரிக்கைகளில் வரும் கல்லூரி சார்ந்த விளம்பரங்களைப் பாருங்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கலந்துரையாடல்களைக் கவனிக்கவும். அவர்கள் சொல்லும் கோர்ஸ் ன் சாதக பாதக அம்சங்களை, எதிர்கால வாய்ப்புகளை உங்களுக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் சோதித்துப் பாருங்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் படித்த படிப்பு மூலம் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால் அதை இன்றைக்கே உங்கள் வீட்டில் உள்ள பரணில் ஒரு சாக்குப் பையில் கட்டி மேலே பத்திரமாக வைத்து விடுங்கள். உங்களின் தனித்திறமைகளைத்தான் இனிவரும் உலகம் எதிர்பார்க்கின்றது என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும்.

முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் சேர விரும்பும் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலருடன் கட்டாயம் பேசுங்கள். அங்கே உள்ள அரசியல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பணியாற்றும் ஆசிரியர்களின் தரம், லேப் வசதிகள் போன்றவற்றை அங்கு படித்து முடித்து வந்தவர்களிடம் கேட்டால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியக்கூடும்.

••••••

எதை நம்புவது? யாரை நம்புவது? என்பது தற்போதைய சூழலில் குழப்பமாக உள்ளது. சென்னையில் உள்ள பிரபல்யமான மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி என்பது இருநூறு வருடப் பாரம்பரியம் கொண்ட கல்லூரி. எல்லாவகையிலும், எல்லாநிலையிலும் புகழ்பெற்றது. இந்திய அளவில் தரச்சான்று பெற்ற கல்லூரியில் கூட பாலியல் வன்முறை நடக்கின்றது என்பதே அதிர்ச்சியாக உள்ளது.


•••••••••

இந்த மூன்று இணைப்பையும் பார்க்க வேண்டுகிறேன்.

காரணம் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து, கடன் வாங்கி செலவளித்து, கனவுகளுடன் வெளியே வரும் போது உங்களை வரவேற்கப் போவது என்ன என்பதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன்.

முதல் இணைப்பு (அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்பிற்கான கல்லூரிகளின் பட்டியல்)

TNEA 2018 College Cutoff Marks

Anna University Counselling 2018 Cutoff Marks

இனி ஒவ்வொரு மாணவருக்கும் கல்லூரி பட்டப்படிப்பு தேவையா? பட்டப்படிப்பு முடிந்து வரும் மாணவர்களின் திறமை (தமிழக கல்விச்சூழலில்) எப்படியுள்ளது? அவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? என்ன வாய்ப்புள்ளது? இதனைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பு உதவக்கூடும்.


"உலகில் 6-ல் ஒரு பங்கு மக்கள்தொகை இருக்கும் இந்தியாவை, வெறும் ஆறாயிரத்துக்கும் குறைவான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே ஆள்கிறார்கள். இந்த ஆறாயிரம் என்பதுகூட தோராய மதிப்பீடுதான். 130 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் நம்முடைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, வெறும் 130-க்கும் குறைவான உயரதிகாரிகள், முக்கியமான அரசுத் துறைச் செயலர்கள்தான் தீர்மானிக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஐஏஎஸ் கனவு என்றால், மாவட்ட ஆட்சியர் என்பதுடன் சுருங்கிவிடக் கூடாது. பிரதமர் அலுவலகச் செயலர், முதன்மைச் செயலர், மாநிலத்தின் தலைமைச் செயலர் என்று விரிய வேண்டும். இந்த இடங்களில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் சென்று அமர வேண்டும். இது சுறா வேட்டைக் கனவுதான். நம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு, திட்டமிட்டு, அயராது உழைத்தால் அது இயலாத காரியம் அல்ல. அதேநேரம், `தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லை' என்று சொல்வீர்களேயானால், இலக்கை அடைவது சிரமம்தான்.

சுறா வேட்டைக்குச் செல்பவர்கள் கடலுக்குள் வெறும் கையோடு செல்ல முடியுமா? அதேபோல, வாசிப்பு இல்லாமல் போட்டித் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? இந்த தேர்வுக்கு நமக்கு வழிகாட்டுவது வாசிப்புதான். அதில் ஒன்று பத்திரிகை வாசிப்பு. தினமும் குறைந்தது ஒரு தமிழ் நாளிதழ், ஓர் ஆங்கில நாளிதழையாவது இரண்டு மணி நேரத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உண்டாக்கிக்கொள்ளுங்கள். வாரம் ஒரு புத்தகத்தையேனும் படிக்கத் திட்டமிடுங்கள்" என்றார்.

சமஸ் (இந்து தமிழ் திசை)

Thursday, July 25, 2019

சீமானும் கமலும்............


FLEX BOARD

ஊருக்குச் சென்று வரும் போது ஒரு விசயத்தை மட்டும் கூர்மையாகக் கவனிப்பதுண்டு. ப்ளெக்ஸ் போர்டு எங்கே? எதற்காக? யாருக்காக? வைத்துள்ளார்கள் என்பதனைப் பார்த்தால் சில வித்தியாசங்களை உணர முடியும். திருச்சி வரைக்கும் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கையில் மட்டும் அங்கங்கே தென்படும். ஆனால் திருச்சியைக் கடந்து புதுக்கோட்டையை நெருங்க நெருங்க எங்கெங்குகாணினும் ப்ளெக்ஸ் போர்டு தொடர்ந்து தென்பட்டுக் கொண்டேயிருக்கும்.

தொடர்ந்து ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை செல்லும் வழிகள் எங்கெங்கும் இது பிரமாண்டமாக மாறிக் கொண்டேயிருக்கும். அரசியல் கட்சிகளை விடத் தனி மனிதர்களின் பூப்புனித நன்னீராட்டு விழா, பிறந்த நாள், இறந்தவர்கள் பற்றிக் குறிப்புகள் என்று வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ப்ளெக்ஸ் போர்டாக மாற்றியிருப்பார்கள். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் தான் இந்த மாற்றங்களை இங்கே பார்க்கிறேன்.

பெரும்பாலும் வெளிநாட்டிற்குச் சென்று சம்பாரித்த குடும்பங்களில் இது பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனையும் நாம் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.

********************




பெவிக்காலுக்கு பிராண்ட் அம்பாசிடர்க்கு தகுதி படைத்த குமாரசாமி வெற்றிகரமாக தன் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.  பாஜக குதிரைபேரம் நடத்தியது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சித்தராமையா அரசியல் உலகம் அறிந்தது.  ஆனால் குமாரசாமி குடும்பம் எப்படிப்பட்டது?

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குக்கூடத் தெரியாது? எந்தக் கோவில்? எங்குள்ளது? என்ன விசேடம்? என்ன பரிகாரத்திற்கு எந்த கோவில்? எந்த நாளில் எந்த நேரத்தில் வர வேண்டும்? போன்ற அத்தனை விசயங்களுக்கும் அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியும். கூடவே குடும்பத்திற்கும் தெரியும். அவர்கள் தமிழகத்தை தங்களின் கிரக பரிகாரத்திற்காக, அதிர்ஷ்டத்திற்கு, அடைய வேண்டிய பதவிக்காக மட்டும் பயன்படுத்துவார்கள். அப்படித்தான் பார்ப்பார்கள். மற்றபடி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் எந்த விசயத்திற்கும் தொடக்கம் முதல் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்தார்கள்.

அதாவது வாயை மூடிப் பேசவும்.

இந்த முறை முன்னாள் பிரதமர் என்ற கௌரவத்தில் இருந்த தேவகௌடா தான் ஆதிக்கம் செலுத்திய தொகுதியில் தோற்க்கடிக்கப்பட்டார். மக்கள் வச்ச ஆப்பு சாகிற வரைக்கும் போதும். பாடையில் ஏறும் போது கூட வரக்கூடாது.

தேவ கவுடா பரிதாபங்கள்.

•••••••••••••••••••••••


மற்ற மாநிலங்களில் எந்த கட்சியில் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவரவருக்கு மாநில நலன் தான் முக்கியமாகக் கட்சி பாரபட்சமின்றி பார்ப்பார்கள். முடிந்தவரைக்கும் மிரட்டி தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வார்கள். இங்கே தலைகீழ்.

சம்மந்தப்பட்ட அரசியல்வாதி தனக்கு என்ன வேண்டுமோ? அதில் கனகச்சிதமாக முட்டி போட்டுச் செய்ய வேண்டியதைச் செய்து பெற்றுக் கொண்டு இங்கே வந்து உதார் காட்டுவார்கள். ஆனால் இங்குள்ள மக்கள் எங்களை நீ தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்? நீ என்னவோ செய்துக்கோ? என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இருப்பார்கள்.

ஆனால் தமிழக மக்கள் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றை எந்த வழியில் எவரிடமிருந்து வந்தாலும் எதை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். காந்தி பாணியில் சொல்லப்போனால் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். இந்த சகிப்புத்தன்மை தான் ஒவ்வொரு தேர்தலிலும் கோடிகோடியாக கொள்ளையடித்தவனாக இருந்தாலும் கட்சி என்ற கட்டத்திற்குள் நின்று பார்த்துக் குத்து குத்து என்று குத்தி தள்ளிவிடுகின்றார்கள்.

கமல் தொடக்கம் முதலே ஓயிட் காலர் வேலை செய்து கிலுகிலுப்பை உருவாக்கினார். வெள்ளைத் தோல் பொய் சொல்லாது என்ற உயரிய தத்துவம் வேறு அவருக்குப் பொருந்திப் போகின்றது. இப்போது வேலூரி பாராளுமன்ற வேட்பாளருக்கு மக்கள் நீதி மையம் தன் வேட்பாளரை நிறுத்தவில்லை.  நாசூக்காக ஒதுங்கிவிட்டார். சீமான் விடுவதாக இல்லை.

எவையெல்லாம் ஓட்டுப் போடுகின்ற மக்களுக்குப் பிடிக்காதோ அதையே தன் கொள்கையாக வைத்திருக்கிறார். அதையே பிரகடனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அவர் வாய் என்ற உறுப்பு அவருக்குக் கட்டுப்படாதது போல. வாட்ஸ்அப் வந்து மானாவாரியான சேதாரத்தை உருவாக்கியுள்ளது.

18 முதல் 25 வயதுள்ளவர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டுபவராக உள்ளார். அது மொத்தமே ஆறு சதவிகிதம் தான். சாதாரண மனிதர்கள், சராசரி மனிதர்கள் விரும்பக்கூடிய கடன் தள்ளுபடி, ஒரு நொடியில் ஓராயிரம் வேலைவாய்ப்பு போன்ற புளூகுமூட்டைகளைச் சொல்லாமல் புகாபுகா வேறு என்று சிரித்துப் பயமுறுத்துகிறார். ஏறக்குறைய அவர் நம்பிக்கொண்டிருக்கும் உயரிய தத்துவங்கள் இங்கே ஜோக்கர், கோமாளி,நகைச்சுவை நடிகர் போலவே வெகுஜன மக்களால் பார்க்கப்படுகின்றது. அவரும் மாறத் தயாராக இல்லை.

அவரைப் பார்க்கக் கூட்டம் கூடிக் கலைந்து செல்லும் மக்களும் நல்லாப் போசுறாரு. ஆனால் ........ என்று இழுத்துக் கொண்டு போய் அடுத்த வேலையில் இவரை மறந்து விடுகின்றார்கள்.

பக்கா கிரிமினல்கள், பயங்கர கிரிமினல்கள் மத்தியில் அரசியல் எப்படிச் செய்யவேண்டுமென்பதை காளிமுத்து மகள் தான் இனி கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது பிறந்த மகன் வாலிபனாக வரும் வரைக்கும் இப்படி ஊருக்கு ஊர் தொண்டைத்தண்ணிர் வற்ற கத்திக் கொண்டே திரிய வேண்டியது தான்.

சீமான் பரிதாபங்கள்..........

•••••••••••••••••••••••••

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ராட்சசி படம் என்னை மிகவும் கவர்ந்தது.  தற்போதைய ஆசிரியர்களைப் பற்றி அதிகம் பேசியது.  இன்னமும் பேசவேண்டிய விசயங்கள் உள்ளது..............

1. அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் எவராக இருந்தாலும் மாணவர்களை (நீங்க எல்லாம் எப்படித்தான் படிக்கப் போகிறீர்களோ?சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட அதிகமாக இருக்கிறது? பாடம் முழுக்க படித்தால் தான் உங்களால் எழுத முடியும்? எங்களுக்கே பாதி புரியவில்லை? )பயமுறுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

2. சுவராசியம் என்ற வார்த்தை என்றால் என்ன? என்பதனை முதலில் ஆசிரியர்களுக்குச் சிறப்பு வகுப்பு மூலம் அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும்.

3. ஒரு செடி எவ்வாறு நீர் உறிஞ்சுகிறது? எப்படி கடத்துகின்றது? அதன் வேர்கள் பங்களிப்பு என்ன? என்ற பாடத்தை நடத்தும் போது குறைந்தபட்சம் ஆசிரியர் செய்முறை விளங்கங்களை மேஜையில் வைத்து மாணவர்களைச் சுற்றிலும் நிற்க வைத்துச் சொல்லிக் காட்டிவிட்டு அதன் பிறகு வாய்ப்பு இருந்தால் காணொளி காட்சி மூலம் புரியவைத்து பாடம் நடத்த வேண்டும். இவை குறித்து எந்த வசதிகளும் இல்லாத பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடம் உங்கள் வீட்டில் கணினி இருந்தால் அப்பாவிடம் கேட்டு நீங்கள் முழுமையாகக் காட்சியாகப் பார்த்து விட்டு வாருங்கள்? என்று ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர் சொன்னால் மட்டுமே மாணவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்ற (கட்டாயத்தின் அடிப்படையில்) எண்ணமே உருவாகின்றது.

4. வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்களை நடத்தும் ஆசிரியர் கட்டாயம் பல புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கும் ஆசிரியர்களாக இருந்தால் மட்டுமே அந்தப் பாடங்கள் மாணவர்களுக்குச் சுவராசியமாக இருக்கும். சிறப்பு வகுப்பு என்ற பெயரில் கோடை விடுமுறையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் 16 பக்கம் உள்ள பாடங்களை நடத்தி விட்டு நாளை டெஸ்ட் என்று சொல்லும் ஆசிரியர் என் பார்வையில் கொடூரமானவர் மட்டுமல்ல. மாணவர்களின் மனங்களை வெல்ல முடியாத கொடுமையான மனிதரும் கூட.

தற்போது இங்கே ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்குச் சமமாக தற்கால தொழில் நுட்ப உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும்.


Wednesday, July 24, 2019

1984 சீக்கியர் கலவரம்

நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும், அரசியல்வாதிகளும் மறைந்திருப்பார்கள். நமக்கு முதலில் தோன்றுவது "ஹையா ஜாலி. இன்றைக்கு லீவு" என்று தான் சொல்லியிருப்போம்.

ஏன் இறந்தார்? எப்படி இறந்தார்? அவர் யார்? இறப்புக்குப் பின்னால் என்ன நடந்தது? என்ன மாறியது? போன்ற அரசியல் தட்ப வெப்ப நிலை குறித்து நாம் அறிந்து இருக்க மாட்டோம். காரணம் நாம் கல்லூரி வரைக்கும் அரசியல் என்பதே விலக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளோம். 

கல்லூரி முடித்து சமூக வாழ்க்கையில் உள்ளே நுழையும் போது தான் அடிப்படைக் கடமைகளுடன் நமக்குப் புரிந்த, பிடித்த அரசியலைக் கற்றுக் கொள்ளவே தொடங்குகின்றோம். காலப் போக்கில் சிலர் மேல் விருப்பு உருவாகின்றது. சிலரை நிரந்தரமாக வெறுப்பு பட்டியலிலும் வைத்து விடுகின்றோம்.

இந்திரா காந்தி எந்த சூழலில் மறைந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். ஆய்வகத்தில் விலங்கியல் ஆசிரியர் டி.குமரேசன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் அய்யா வேகமாக உள்ளே வந்தார். முதல் இருக்கையில் நான் இருந்தேன். விலங்கியல் ஆசிரியர் என் இருக்கை அருகே நின்று கொண்டு இருந்தார்.

"டேய் குமரேசா இந்திரா அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டார்களாம்?" என்று பதைபதைப்புடன் சொன்னார். நொடிப் பொழுதும் தாமதிக்காமல் அப்படியென்றால் "இன்றைக்கு லீவா சார்?" என்று கேட்டது தான் தாமதம் விலங்கியல் ஆசிரியர் கன்னத்தில் கொடுத்த அரை இன்னமும் நினைவில் உள்ளது.

அடுத்த முப்பது வருடங்களில் இந்திரா காந்தி குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. மகளுக்கு அவர் பெயரை வைக்கும் அளவிற்கு அவரின் குறைகளை மீறியும் இன்றளவும் அவரை நேசிக்க முடிகின்றது.

ஆனால் அவர் இறப்பின் போது நடந்த, உருவான, உருவாக்கப்பட்ட சீக்கியர் இனப் படுகொலை பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டு. கிண்டில் மூலமாகப் படித்துக் கொண்டு இருந்தாலும் அதில் உள்ள அன்லிமிட் உள்ளே நுழையாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஜெ. ராம்கி எழுதிய 1984 என்ற புத்தகத்தைப் பார்த்ததும் இதை வாசிக்க நிச்சயம் நாம் கடலுக்குள் குதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டுத் தான் தூங்கவே முடிந்தது.

ஆவணம் என்று சொல்லலாம். அற்புதம் என்றும் சொல்லி கடந்து விடலாம்.

ஆனால் நாம் வாழ்ந்த சமகால கொடூரங்களை அப்படியே நமக்குக் கடத்தியதில் முழுமையாக ராம்கி வெற்றி பெற்றுள்ளார்.

ராஜீவ்காந்தி தன் அம்மாவின் இறப்பை எப்படி பார்த்தார்? என்ன சொன்னார்? என்ன செய்தார்? என்ன செய்யாமல் தவிர்த்தார்? காங்கிரஸ்காரர்கள் அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்தார்கள்? இதில் பங்கெடுத்த முக்கியஸ்தர்கள் யார் யார்? அவர்கள் பின்னாளில் எந்த உயர் பதவியை அடைந்தார்கள்? வீரத்திற்குப் பெயர் சீக்கிய இனத்தை எப்படி அலங்கோலப்படுத்தினார்கள்? இன்று சொல்லப்படும் கேங் ரேப் என்பதனை எப்படிக் கூசாமல் செய்தார்கள்? காங்கிரஸ்காரர்கள் எப்படி கொள்ளையர்களாக மாறினார்கள்? உருவான விசாரணை ஆணையம் என்ன செய்தது? என்ன செய்யாமல் விட்டது?

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் அவர்களை எப்படி பாடுபடுத்தினார்கள்?

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் ஏன் வாயை பொத்திக் கொண்டு இருந்தார்?

இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? துணை ராணுவப்படை ஏன் அமைதியாக இருந்தது. சீக்கிய இனத்திலிருந்த ராணுவ உயரதிகாரிகள் கூட இந்த கலவரத்தில் எப்படி பாதிக்கப்பட்டார்கள்?

ஆறாத ரணங்களை, அதன் காயங்களை, இன்னமும் மாறாத வடுக்களை அப்படியே அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தவிர பிந்தரன்வாலே, லோங்கோவால், சீக்கிய இனத்தில் உள்ள உயர் சாதி, தாழ்ந்த சாதி, காலிஸ்தான், பாகிஸ்தான் ஊடுருவல், உருவான உருவாக்கப்பட்ட அரசியல் சதிகள் என்று கலந்து கட்டி பொளந்து கட்டியுள்ளார்.

நம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய புத்தகமிது.

குறிப்பாக மதச்சார்பின்மையை மகோத்தனமாக உச்சரிக்கும் காங்கு மக்கள் மந்திரம் போல வாசித்து தன்னைத் தானே பார்த்துத் துப்பிக் கொண்டால் தவறில்லை.

"என் நாட்டிலேயே நான் அகதியாக வாழ வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என்று ஒரு இடத்தில் வரும் வார்த்தைகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்.

காங்கு செய்த அரசியல் அலங்கோலத்தை அப்படியே நமக்கு படம் பிடித்துக் காட்டும்.

வாழ்த்துகள் ராம்கி.

#Amazon