வாரத்தில் வருகின்ற ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு யுத்தத்திற்கு தயாராகும் படைத்தளபதி
போல் செயல்பட வேண்டியிருக்கிறது. குடும்பத்திற்காக குறிப்பாக குழந்தைகளுக்காக வரும்
வாரத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளின் முன்னோட்டத்திற்கு நம்மை தயார் படுத்திக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரைக்கும் அலுவலகம் சார்ந்த பணிகளினால்
சக்கையாக பிழியப்படும் மனமும் உடலும் ஓய்வெடுக்க விரும்பும் அதே தருணத்தில் குடும்ப
வாழ்க்கை கடமைகள் என்ற பெயரில் நாம் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நாம் முன் ஏராளமாக
இருக்கிறது என்பதை நினைவு படுத்தும் தினம் தான் ஞாயிற்றுக்கிழமை. வெள்ளிக்கிழமை மதியம்
என்றாலே 90 சதவிகித தொழில் தொடர்பில் இருக்கும் மேலைநாட்டு மக்கள் மின் அஞ்சலுக்கு
கூட பதில் அளிக்க விரும்பாமல் ஓட்டமாக ஓடி மறைந்துவிடுகிறார்கள்.
மேலைநாட்டில் வீக் எண்ட்
என்ற பெயரில் சனி, ஞாயிறு
என்பதை விடுமுறை தினமாக வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். தத்தமது குடும்ப உறுப்பினர்களுடன்
விசேட நிகழ்ச்சியில் பங்கெடுப்பது முதல் சுற்றுலா என்பது வரைக்கும் போன்ற மனதிற்கும்
உடலுக்கும் வலு சேர்க்கும் விதமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஓரளவுக்கு வருமானத்திற்கு வழிவகையில்
வாழ்க்கை நடத்தும் நடுத்தரவர்க்கத்தினர் கூட முழுமையாக இந்த ஞாயிற்றுக் கிழமை தினத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்களா என்பதே சந்தேகம்
தான்.
அதிகபட்சம் ஞாயிற்றுக் கிழமை என்ற ஒரு
நாள் ஓய்வில் மதிய உணவாக அசைவம் என்ற ஒரு விசயத்திற்குள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்பது தான் உண்மை. இதற்கு மேலே இருக்கவே இருக்கு இத்துப்
போன தொல்லைக்காட்சிகள். பெரும்பாலும் இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்கின்றதே என்ற பெயரில்
ஞாயிற்றுக் கிழமையைக் கூட வீணடிக்க விரும்பாமல் தங்கள் வருமானத்திற்காக வேலையில் தங்களை
அடகு வைத்துக் கொள்பவர்கள் ஏராளமான பேர்கள்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் வீட்டில்
குழந்தைகளுடன் நடைபெறுகின்ற விவாதங்கள் ஒரு விதமான இன்பமான போராட்டமாகவே இருக்கிறது.
வாக்குவாதம், விவாதம், பிடிவாதம் கலந்த கலவையாக வீடே ரணகளமாக மாறி விடுகின்றது. குழந்தைகள் தங்களின் தேவைகள் குறித்து வெள்ளி முதலே
அபாய சங்கை ஊத தொடங்க விடுகிறார்கள். இது குறித்த நினைவூட்டல்களை சமயம் கிடைக்கும்
போதெல்லாம் தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற சமயத்தில் தான் வீட்டுக்குத் தேவைப்படும்
அவசியமான சாமான்கள் முதல் குழ்ந்தைகளுக்கு பள்ளியிலிருந்து கொடுக்கபடும் செய்முறை பயிற்சி
(ப்ராஜெக்ட்) வரைக்கும் எளிதாக நம் தலையில் சுமத்தப்படுகின்றது.
இந்த முறை பள்ளிக்கூடம்
திறந்ததிலிருந்து என்னடா எந்த பஞ்சாயத்தும் நம்மை நோக்கி வரவில்லையே? என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். சரியாக கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அப்பா, பட்டம் செய்ய வேண்டும். ஒரு மலை அமைப்பை உருவாக்கி கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்கள்
என்றார்கள். மூன்று பேருக்கும் மூன்று விதமான
செய்முறைகள். பெரிதான செலவில்லை என்றாலும்
அரை நாள் பொழுதை அதில் நாம் கவனம் பிசிறாமல் ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே அந்த வேலை
முழுமையடையும்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒவ்வொன்றாக செய்து கொண்டு வரும் இடையிடையே
ஒவ்வொருவரும் கொடுக்கும் ஆலோசனைகளை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காது கொடுத்து
கேட்டே ஆக வேண்டும்.
இல்லாவிட்டால் பஞ்சாயத்து
தொடங்கி கடைசியில் வீடே ரணகளமாக போய்விடும் அபாயமுண்டு. அடி வாங்குவது முதல் கடி படுவது
வரைக்கும் நடந்து முடிந்து செய்த சமாச்சாரங்கள் கலைந்து மறுபடியும் தொடக்கம் முதலே
தொடங்க வேண்டியிருக்கும். இதற்கு பயந்து கொண்டே
நாம் அமைதி காக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தே ஆகவேண்டும்.
பெரிய
அலுவலக நிர்வாகத்தை
கட்டி மேய்க்க கண்டிப்பு என்ற வார்த்தையை கையாண்டு ஒரு கட்டுக்குள் கொண்டு
வந்து விடலாம். ஆனால் குடும்பத்தில் அவையெல்லாம் செல்லுபடியாகுமா? கதை கந்தலாகி விடும்.
நாம் வெளியே புலியாக இருந்தாலும்
இல்லாவிட்டாலும் வீட்டுக்குள் எலியாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். இது மனைவிக்கு அடங்கியவன் என்ற சொல்லுக்கு வழு சேர்ப்பது
என்ற போதிலும் பல விசயங்களில் மனைவியிடம் குழந்தைகள் சமாச்சாரத்தை ஓப்படைத்து விட வேண்டும்
என்று நினைப்பவர்களுக்கு இதைவிட அருமருந்து வேறெதும் இல்லை.
உன் அளவுக்கு எனக்கு பொறுமை
போதாது? என்று சொல்லியே நான் பல சமாச்சாரங்களை
நான் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிவிடுவதுண்டு. இது போன்ற சமயங்களில் வாங்கி கட்டிக் கொள்வது வாடிக்கை என்ற போதிலும்
விடுடா சூனா பானா என்றே நகர்ந்து போய்விடுவதுண்டு. என்னை எப்படி எந்த விசயத்திலும் எளிதில் திருப்தி
படுத்திவிடமுடியாது என்பதைப் போலவே என் குழந்தைகளை திருப்திபடுத்திவிடுவதும் அத்தனை
சாதாரண விசயமாக இல்லை.
குழந்தைகளுக்கு வயசு அதிகமாக அதிகமாக நம்முடைய எந்த ஜிகர்தண்டா
வேலையும் எடுபட மாட்டேன் என்கிறது.
இந்த
முறை கொண்டு வந்த பட்டம்
மற்றும் மலை அமைப்பு சமாச்சாரத்தை செய்து கொண்டுருக்கும் போது
குழந்தைகளுடன் பொறுமையாக
உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளின்
ஏராளமான கேள்விகளை எதிர் கொள்ள நேர்ந்தது. ஒருவரின் கேள்விக்கு பதில்
சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்விக்கணை நம்மை நோக்கி வரும் போது ஒரு விளையாட்டு வீரரின்
லாவகத்தோடு தான்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
மும்முனை தாக்குதலினால் நாம் எந்த அளவுக்கு
தகுதியாக
நம்மை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே அப்போது தான் நமக்கு புரியத்
தொடங்குகின்றது.
என் குழந்தைகளைப் போல என் அப்பா அம்மாவிடம் பேச
முடியாத வாழ்க்கை வாழ்ந்த அனுபவம் என் மனக்கண்ணில் வந்து போனது. அப்பாவிடம்
பேசிய விசயங்கள்
மிக மிக குறைவு. நான் மட்டுமல்ல. குடும்பத்தில்
உள்ள அத்தனை பேர்களும் அப்படித்தான் இருந்தார்கள். கடைசி வரைக்கும் அவர்
ஒரு தனித்தீவாகத்தான்
இருந்தார். அதுவே சரி என்பதாக நினைத்துக் கொண்டு
அந்த தனிமை கவசத்தை கெட்டியாக மாட்டிக் கொண்டு இறப்பு வரைக்கும்
அப்படித்தான் இருந்தார்.
அம்மாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
அவர் உலகம் ஒரு மிகச்சிறிய வட்டம். அந்த வட்டத்திற்குள்
அவர் மட்டுமே நிற்க முடியும். இன்னும் சொல்லப்போனால்
அந்த வட்டத்திற்குள் வாழ்க்கை முழுக்க அவர் ஒற்றைக்காலில் தான் நின்று கொண்டு வாழ்ந்து
கொண்டிருக்க வேண்டும். அப்பாவின் இறப்புக்குப் பிறகு தான் அவர் சுவாசித்த சுவாசக் காற்றில்
சுதந்திரம் என்ற வாடையே வந்துருக்கும். ஆனால்
என் குழந்தைகள் பேச்சு கற்றுக் கொண்ட நாள் முதல் தினந்தோறும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அன்பாக, மிரட்டலாக, கெஞ்சலாக, கொஞ்சலாக என்று பல்வேறு பரிணாமத்தில் தங்களின்
தேவைகளை புரியவைத்து தங்களது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.
மூவரிடமிருந்தும்
எப்போதும் போலவே கேள்விகள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கிறது. தெரிந்தது, புரிந்தது,
புரியாதது, புரிந்து கொள்ள முயற்சிப்பது போன்ற
பல கலவையான கேள்விக்கணைகள் நம்மை தாக்கிக் கொண்டேயிருக்கிறது. ஏறக்குறைய அந்த ஒரு நாள் வாரத்தின் மொத்தமாக அணை
திறந்த வெள்ளம் போல பாய்ந்து நாம்மை பிறாண்டி எடுக்கிறார்கள்.
உலகத்திலே தியானத்தை
விட பொறுமையான சமாச்சாரம் ஒன்று உண்டெனில் குழந்தைகளை எதிர்கொள்வது தான். அதுவும் துளிகூட கோபப்படாமல் உரையாடலை கொண்டு செலுத்துவது
தான் முக்கியமான சாதனையாக நான் கருதுகின்றேன்.
இது போன்ற சமயங்களில் தான்
தற்போதையை கல்வியின் உண்மைகளை உணரமுடிந்தது.
இந்த முறை அக்கா மற்றும்
அண்ணன் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். மூன்று பேரில் இரண்டு பேர்கள் 473 மதிப்பெண்கள்
பெற்று இருந்தார்கள். அண்ணன் மகன் 420 பெற்று
இருந்தான். மாநில அளவில் உள்ள மதிப்பெண்களை
ஒப்பிட்டு பார்க்கும் போது அக்கா மகள்கள் பெற்றுருந்த மதிப்பெண்கள் எனக்கு பிரமிப்பாகத்தான
இருக்கிறது. காரணம் நான் படிக்கும் போது
400 என்பதே உலக சாதனை போல இருந்தது. 400 மதிப்பெண்கள்
பெற்ற எனது வகுப்புத் தோழர்கள் மூன்று பேரும் தொழில்நுட்ப பயிற்சி (பாலிடெக்னிக்) படிப்புக்குச்
சென்றார்கள்.
நான் அண்ணாந்து பார்த்துக் கொண்டு
இருந்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.
இப்போது
எல்லோரும் ஒரே வாக்கியத்தை
கிளிப்பிள்ளை போல ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காலத்து
பிள்ளைங்க அத்தனை பேர்களும் படிப்பில்
கில்லியாக இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறந்த
குழந்தைகள் கூட நல்ல புத்திசாலியாக இருக்கிறார்கள் என்ற பேச்சு எல்லா
இடத்திலும் பரவியுள்ளது.
நாம் ஒன்றை மறந்து விடுகின்றோம். சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், வாய்ப்புகள் போன்றவற்றை
நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மீடியா என்ற உலகம் இன்று எல்லாவற்றை புரிய வைக்கின்றது.
கற்றுக் கொடுக்கின்றது. வேறென்ன வேண்டும்.
நல்லது, கெட்டது என்று கலவையாக ஒவ்வொருவரையும் தாக்கிக்
கொண்டேயிருக்கிறது.
கற்றுக்
கொண்டு தேர்ச்சி
அடைபவர்களின் சதவிகிதத்தில் எத்தனை பேர்கள் உருப்படியான வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். கல்விக்கு அப்பாற்றபட்ட பல விசயங்கள் இருக்கிறது
என்பதை நாம் எவரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.
காரணம் சென்ற வாரத்தில்
உறவினர் வீட்டு திருமணத்தில் பத்தாம் வகுப்பில் அக்காக்கள் தங்கள் மகள்கள் பெற்ற மதிப்பெண்
சாதனையை பீற்றிக் கொள்ளும் வண்ணம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சாதனைக்குரியவர்களிடம் நான் தனிப்பட்ட முறையில்
பேசிக் கொண்டிருந்தேன். வெறும் மண்ணாக இருக்கிறார்கள். படித்தார்கள்.
மன்ப்பாடம் செய்தார்கள். அப்படியே எழுதியிருக்கிறார்கள். மதிப்பெண் வாங்கியிருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆங்கில வழிக்கல்வி, தமிழ்வழிக்
கல்வி என்ற எந்த பாகுபாடும்
இல்லை. பொதுப்படையான விசயங்களில் எந்த தெளிவும் இல்லை. எதிர்காலம் குறித்த
எந்த நோக்கமும் இல்லை. வெளி உலகம் எப்படி இயங்குகின்றது என்பதை
யோசிக்கக்கூட
தெரியவில்லை.
எந்த பாதையின் பயணம் இது என்பதை
சுட்டிக் காட்டி பேசும் அளவுக்கு அவர்களிடம் எந்த பக்குவமும் இல்லை.
அதிகபட்சம் டாக்டர் ஆக வேண்டும்.
இஞ்சினியர் ஆக வேண்டும் எந்த இரண்டு ஆசைகளில் அடங்கி விடுகின்றது. இன்னும் கொஞ்சம்
அழுத்திக் கேட்டால் கம்யூட்டர் படிப்பு முடித்தால் உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலை
கிடைத்து விடும் என்று அவர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கையை அடைகாத்துக் கொண்டு அடுத்த
அடியில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். நான் பெரிதாக அவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை என்ற
போதிலும் பல விசயங்கள் என் மனதில் நிழலாடிக்கொண்டேயிருந்தது.
காரைக்குடியில் இருந்து திருப்பூர் வரைக்கும் ஏறக்குறைய
300 கிலோ மீட்டர் வழித்தடத்தில் நான் பார்த்த ஏராளமான பொட்டல் காடுகளில் எத்தனை பாலிடெக்னிக்
கல்லூரி,இஞ்சினியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி பார்த்து இருப்பேன் என்று என்னால் கணக்கு கூட வைத்துக்
கொள்ள முடியவில்லை. புற்றீசல் போலவே கல்லூரி
திறந்து பலரும் இங்கே கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதியாக எந்த தகுதியும்
தேவையில்லை என்பதைப் போலவே எந்த கல்லூரி வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் எந்த இடத்திலும்
வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம் என்கிற ரீதியில் நான் கல்வித்துறையில் வெற்றிக் கொடி
நாட்டியிருக்கின்றோம்.
ஆனால் கம்பத்தில் பறப்பது கிழிந்து போன கொடி என்பதை எல்லோரும்
எளிதாக மறந்து போய்விட்டோம்.
இன்று செய்திதாளை படித்துக்
கொண்டிருந்த போது ஒரு செய்தி கண்ணில் பட்டது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே
இருந்ததாம். காரணம் பெயர்ச்சொல், உரிச்சொல்
போன்ற அடிப்படை விசயங்களே
தெரியவில்லை என்பதோடு அதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு நாக்கு வறண்டு
விட்டதாம். எப்படி நம்முடைய குழந்தைகளுக்கு அறிவுக்கண்களை திறக்கப்
போகும் ஆசியர்களின் லட்சணம்?