நம் வாழ்க்கையில் நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பல வார்த்தைகள் உண்டு. அதில் ஒன்று தான் "அடுத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்த வேண்டாம்" என்ற வாக்கியமும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் வைத்திருக்கும் நம்பிக்கைகள் ஒன்றா? இரண்டா?
மதம், இனம், மொழி, சாதி, ஊர் எனப் பலதரப்பட்ட நம்பிக்கைகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் சுமந்து கொண்டே தான் திரிய வேண்டியுள்ளது. அது தேவையா? என்பதை உணர்வதும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் நமக்கில்லை. பகுத்தறிய விரும்புவதுமில்லை. சரியா? தவறா? என்று கூட யோசிப்பதில்லை. இந்த வார்த்தையே தவறு. நம்மை யோசிக்க விட விடுவதில்லை என்பது தான் சரி.
நீ இந்த மதத்தில் பிறந்துள்ளாய். இது தான் உன் தெய்வம். இது தான் உன் பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்று கோட்டை உருவாக்கி சுற்றிலும் அகழியையும் உருவாக்கி உள்ளேயே வாழ்ந்து உள்ளேயே மரணித்தும் போய் விடுகின்றோம். உலக மாறுதல்களை அறிவது இருக்கட்டும், ஊருக்கு அருகே நடக்கும் மாறுதல்களைக் கூடக் கவனிக்க முடியாத அளவுக்குச் சேனம் கட்டிய விலங்கு போலவே நம் வாழ்க்கை குறுகிய வட்டத்திற்குள் உழன்று முடிந்தும் போய்விடுகின்றது.
கோவிலுக்குள் சென்றாலும் முந்திக் கொண்டு முன்னால் நிற்கவே விரும்புகின்றோம். உண்டியலில் காணிக்கை போடும் போதே நாம் வைத்துள்ள ஆசைகளின் வரவு செலவு அடிப்படையில் கணக்குபுள்ளையாகச் செயல்படுகின்றோம். கோவிலுக்குள் பக்திமானாகச் செல்லும் அனைவரும் வெளியே வரும் போது சீதை விரும்பிய மாயமானை தேடுபவர்களாகத்தான் வருகின்றார்கள்.
கடைசியில் பக்தி என்பது பகல் வேஷம் போல மாறிவிடுகின்றது.
நாம் வைத்துள்ள எல்லாவிதமான நம்பிக்கைகளும் மதத்திலிருந்து தொடங்கி மத நம்பிக்கைகளுக்குளே முடிந்து போயும் விடுகின்றது. ஏன்? என்று கேட்கக்கூடாது? இது எதற்காக? என்று பார்க்கக்கூடாது. பகுத்தறிவுவாதி என்பதே கெட்டவார்த்தை போலவே பார்க்கப்படுகின்றது.
நம்மை ஒதுக்கி விடக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்பவர்கள் தான் "ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எதையும் "ஆராய்ச்சி மனப்பான்மையில் பார்க்காதே" என்பவர்கள் தான் "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட.
ஒன்றைப்பற்றி அறியாத போது தான் ஆதங்கம் அதிகமாக உருவாகின்றது. இந்த ஆதங்கம் தான் காலப்போக்கில் ஒவ்வொரு மனிதர்களுக்குக் கழிவிரக்கத்தை உருவாக்கி ஏக்கத்தை மட்டும் சுமந்து வாழும் மனிதர்களாக மாற்றி விடுகின்றது. அவனின் சக்தியை அவனால் உணர முடியாத போது எளிதாக "எல்லாமே விதிக்குள் அடக்கம்" என்பதான யோசனையில் போய் முடிந்து விடுகின்றது.
'முயற்சித்தேன் கைகூடவில்லை' என்பதற்கும் 'விதியிருந்தால் அது நடக்கும்' என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ஆன்மீகத்தின் ஆதார பலத்தைப் பற்றி உணர முடியும்.
வயதாகி விட்டது. உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதில் இரண்டு அர்த்தம் உண்டு என்பதை எப்போதும் நாம் மறந்து விடக்கூடாது. உடல் உறுப்புகள் காலப்போக்கில் அதன் வீரியத்தன்மையை இழப்பதென்பது இயற்கை விதி. ஆனால் இளமையில் போட்ட ஆட்டத்தினால் உறுப்புகள் அந்தர்பல்டி அடித்துச் சத்தியகிரகம் செய்யும் போது தான் ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக ஞானமே பிறக்கின்றது.
அதாவது நான் திருந்தி வாழ விரும்புகின்றேன். ஆனால் என் மனதை அடக்க முடியவில்லை. அதற்கு ஒரு சாய்வு தேவை என்கிற ரீதியில் தான் பலருக்கும் இந்த ஆன்மீகம் அருமருந்தாக உள்ளது.
"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது. ஒரு வேளை அப்படியே மனித இனம் யோசித்திருந்தால் மின்சாரம் இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். சீரியல் பைத்தியமாக இருக்காளே என்று சம்சாரத்தைத் திட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. கணினியை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தக் 'கடவுள் ஆராய்ச்சி' தொடங்கியிருக்காது. இந்த வரிகளை வாசித்திருக்க முடியாது. கல்வியறிவு வளர்ந்திருக்காது. 'கண்டவர் விண்டிலர்' என்ற சொல்லும் போதே "அதெல்லாம் சரிப்பா அதுக்குக் கொஞ்சம் அர்த்தத்தையும் சொல்லிட்டு போ" என்கிற தைரியம் பிறந்திருக்காது.
மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நாலு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது.
எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதை உணரவும் வைத்துள்ளது.
விஞ்ஞானிகள் கடவுளைப் பற்றி நினைக்கவில்லையே தவிர ஒவ்வொரு காலகட்டத்திலும் மதவாதிகள் நினைக்க வேண்டிய கடவுள்களைத் தவிர மற்ற அனைத்தையும் நினைத்தார்கள். தங்கள் ஆளுமைக்குள் தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அது தொடர்பான வேலைகளை மட்டுமே செய்தார்கள். அக்கிரமங்கள் மட்டும் நின்றதே இல்லை. கல்லடி கொடுத்தார்கள். கழுவில் ஏற்றினார்கள். உண்மைகளை வெளியே வராத அளவுக்கு உக்கிரமாகச் செயல்பட்டார்கள்.
கடைசியில் "பாவத்தைச் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்று மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு பரிதாபமாகக் கூவினார்கள். உன் விதிப் பயன் மாறும் என்றார்கள். பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் திறந்த அணையைக் கை வைத்து தடுக்க முடியுமா?
மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்க்கும் அளவிற்கு மாறியுள்ளது. ஆனால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றையும் மக்கள் தேடிப்போய் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கின்றது.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் வசதியை விரும்புகின்றார்கள். இந்த வசதிகள் கொடுத்த தைரியத்தில் தான் 'சிறப்புத் தரிசனம்' என்ற பெயரில் நானும் ஆன்மீகவாதிதான் என்று திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள்.
ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது. இது இயற்கை உருவாக்கிய பொதுவான விதி. ஆனால் ஒருவன் எங்கு வாழ்ந்தாலும் அவனிடம் உள்ள ஆதார பயமென்பது 'அப்பாற்பட்ட ஏதோவொன்று இருக்கின்றது' என்பதாக அவன் மனம் நம்பத் தொடங்குகின்றது.
அப்போது தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. வணங்கும் பொருட்கள் மாறலாம். வழிபாட்டுத் தன்மை கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆதார பயம் மட்டும் சாவின் கடைசி நொடி வரைக்கும் தொடருகின்றது. ஒரு மனிதனின் பயம் விலக அவன் பார்க்கும் பார்வைகள் ரொம்பவே முக்கியம். எதையும் உணர மறுக்கும் குருடனிடம் போய் எந்தப் பார்வையை உங்களால் உணர்த்த முடியும்?
'பலவற்றை உன்னால் உணர முடியாது'? என்று சொல்லியே தன்னை உணர மறுக்கும் மனித கும்பலை மதவாதிகள் வளர்த்தார்கள். அப்படித்தான் வளர்க்கவும் விரும்புகின்றார்கள். உருவாக்கப்பட்ட மதக் கொள்கைகளில் இடைச் சொருகலாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றையும் புகுத்திக் கொண்டே வர இன்று எது உண்மையான ஆன்மீகம் என்ற கேள்விக்குறியில் வந்து நிற்கின்றது?
வாழும் போது மற்றவர்களை வதைப்பவர்களைப் பார்த்து அவன் முன் ஜென்ம பலனால் இன்று அரசாட்சி செய்கின்றான் என்கிறார்கள். வதைபட்டுத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் அதையே தான் சொல்கின்றார்கள்?
உணர மறுப்பவனின் தவறா? உணர்வே தெரியாதவனின் குறையா?
எங்கே வந்து முடிந்துள்ளது?
அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது.
ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல.
சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களை படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாக தெரியவில்லை.
ஆனால் உங்கள் மனதில் ஓவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.
"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழ கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனை பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன்.
இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா?
காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம்.
காலையில் தொடங்கும் வார்த்தைகளே இன்னமும் காபி போடலையா? என்று எரிச்சலுடன் மனைவியைப் பேசத் தொடங்க உள்ளேயிருக்கும் வன்மம் வளரத் தொடங்க வாழ வந்தவளை மதிக்கத் தெரியாதவன் கடைபிடிக்கும் ஆன்மீகம் எதைக் கற்றுக் கொடுக்கும்? குழந்தைகளை கொண்டாடத் தெரியாதவன் சிலைகள் மேல் கொண்டு போய் கொட்டும் பாலையும் தேனையும் ஆண்டவன் மட்டுமல்ல? நக்கிக்குடிக்கும் நாய் கூட சீந்தாது.
இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும்.
)()()()()()(
(ஆசான் பயணத் தொடர் முடிவுற்றது. ஒவ்வொரு பதிவுக்கும் அற்புதமான வரவேற்பு கொடுத்தவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும், விமர்சனங்கள் மூலம் எனக்குக் கற்றுத் தந்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும், ஆசான் தொடர் பதிவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் அனைவருக்கும் மற்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றி)
ஏழெட்டு மாதங்களாக உள்ளே உழன்று கொண்டிருந்ததை இறக்கி வைத்த திருப்தி. பலருக்கும் சென்று சேர உதவிய வருண் மற்றும் ஜெய்தேவ்க்கு என் தனிப்பட்ட நன்றி.
என்னைக் குத்தி விட்டுக் குத்தாட்டம் போட வைத்த நண்பர் 'சவுதி எண்ணெய் கிணறு மொதலாளி' பிகேஆருக்கு ஸ்பெஷல் நன்றி
தொடர்புடைய பதிவுகள்.
எல்லாமே ஏதோவொரு வகையில் தொடர்பு தான். தேடிப்பபாருங்க. நீங்க தான் இந்த பயணத்தை தொடக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்க வேண்டும்.