ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்க்கை சீரழிந்து போய்க் கொண்டுருப்பதற்கு இந்த மூன்றையும் தான் உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் இன்று சூது எந்த இடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை என்று கொண்டு வந்த பிறகு கிராமங்களைச் சார்ந்த சிறு நகரங்களில் மட்டும் இன்றும் கூட மறைமுகமாக விற்றுக் கொண்டுருக்கிறார்கள்.
தொடக்கத்தில் கிராமப்புறங்களில் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி பெரிய மனிதர்கள் என்ற கௌரவத்தோடு குஷலாக பணம் வைத்து சீட்டாடிக் கொண்டுருந்தார்கள். இன்று எந்த இடத்திலும் கிளப்புமில்லை. ஆட்டம் காட்டிய பெரிசுகளுமில்லை..
இன்று பெரிய நகரங்களில் கிளப் என்பது மனமகிழ் மன்றமாக மாறி நடுத்தர மக்களின் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டுருக்கிறது. அதுவும் பெயர் மாற்றமாகி காபரே டான்ஸ் என்கிற ரீதியில் வளர்ந்துள்ளது. இதுவே குறிப்பிட்ட விசேடங்களை குறி வைத்து உயர்தர நட்சத்திர விடுதி கல்லா கட்டும் கலாச்சார நடனம் வரைக்குமாய் திமிலோகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிறிய விடுதிகளில் நடந்தால் சட்டத்திற்கு புறம்பான செயல். அதுவே உயர்தர விடுதிகளிலும், அரசியல் அதிகாரவர்க்கத்தின் பினாமிகள் நடத்தும் இடங்களில் நடந்தால் பெரிய தலைகள் கூடுமிடமாக விசேஷ அந்தஸ்த்தும் பெற்று விடுகிறது. குறிப்பாக அரசியல் விளையாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கும் பவர் புரோக்கர்கள் கூடும் இடமாக இருப்பதால் சீட்டு என்பது மறைமுகமாகவும் விபச்சாரம் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.
தாசி குலம், தேவரடியார், பொட்டு கட்டுதல் என்று ஒவ்வொரு காலமாற்றத்திலும் மாறி மாறி இன்று அங்கிகரிக்கப்பட்ட விபச்சாரம் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. நுகர்வோர் கலாச்சாரத்தின் இதுவுமொரு அங்கமாகி விட்டது. "எதுவும் தவறில்லை" என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் இன்று காசு இருந்தால் எல்லாமே எளிது என்ற கலாச்சார மாற்றத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் தமிழர்களின் வாழ்க்கையில் பொதுப்படையான பெண்கள் பழககமென்பது எப்போதுமே எட்டாக்கனி.
கள்ளக்காதல், முறையற்ற காதல், பொருந்தாக் காதல், உணராத காதல் என்று பிரிந்து இன்று பத்தாவது படிக்கும் மாணவர்கள் கூட இந்த காதலைக்குறித்தே அதிகம் யோசிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டுருக்கிறார்கள். எல்லாவிதமான ஊடகங்களும் தங்களது சேவையை சிறப்பான முறையில் செய்து கொண்டுருக்கிறது. காதலைப்பற்றி தெரியாமலும், கடைசி வரைக்கும் காமத்தையும் புரிந்து கொள்ளா முடியாமலும் பெரும்பாலானவர்கள் தங்கள் காதல் எண்ணங்களை பெருமூச்சில் கரைத்து விடுகிறார்கள்.
சமகாலத்தில் இந்த மாது விவகாரம் பண்டமாற்று முறை போல் இயல்பாக மாறிவிடும் போலிருக்கு. வாழ்க்கையை போராட்டமாக கடனே என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு பெரிதான ஈடுபாடு இல்லாமல் கிடைக்காத வாய்ப்பை நினைத்துக் கொண்டு திரை அரங்க இருட்டுக்குள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் என்றுமே மேல்தட்டு மக்களுக்கு இதுவொரு இயல்பான கலாச்சாரம்.
ஆனால் மூவாயிரம் வருட மூத்த குடி தமிழர்களின் வாழ்க்கையில் எப்போதும் போல இந்த குடி மட்டும் முதல் இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டுருக்கிறது. சோமபானம் என்பதில் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் மாறி வந்துள்ளது. கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்று இயற்கையான பெயரில் அழைக்கப்படட இந்த குடிபானத்துக்கு இன்று எத்தனை எத்தனை பெயர்கள்.?
வெவ்வேறு நிறுவன முத்திரையுடன் அரசாங்க முத்திரையும் சேர்ந்து இன்று ஒரு தலைமுறையையே மறைமுகமாக அழிவுப் பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கிறது.
அரசியல்வாதிகள் முதல் திடீர் பணக்காரர்கள் வரைக்கும் உள்ள சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் ஆயுத தரகர்களுக்கு அடுத்து இந்த மது தயாரிப்பாளர்கள் தான் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். ஆட்சியை விலைக்கு வாங்குவதும், மாற்றுவதும் என்று ஜனநாயகவாதிகளையும் பணநாயாக மாற்றுபவர்களாக இருக்கிறார்கள். எந்த அரசியல் தலைகளும் இவர்களை பகைத்துக் கொள்வதுமில்லை.
என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்னால் சாராயம் காய்ச்சுவது தான் முக்கிய தொழிலாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்தினரும் இதை குடிசைத் தொழில் போலவே நடத்திக் கொண்டுருந்தார்கள். முன்னால் காவல் துறை அதிகாரி தேவாரம் போட்ட அதிரடி ஆட்டத்தில் அத்தனையும் காணாமல் போய்விட்டது.
சைக்கிள் டயர் தொடங்கி, வயிற்றுக்குள் பாட்டிலை வைத்துக் கொண்டு கடத்துவதை வியப்புடன் பார்த்து இருக்கின்றேன். அதிகாலையில் பல் விளக்காமல் நடந்தே சென்று அடித்து விட்டு உருண்டு கிடந்தவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. "இவன் சாரயம் குடிக்கிறவன்", "இவன் அப்பா மகா குடிகாரர்". என்று பெண கொடுக்க மறுத்த. சமூக அமைப்பு இன்று மாறிவிட்டது.
" மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் " என்கிற ரீதியில் மது என்பதை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றி விட்டனர். தொடக்கத்தில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒளிந்து கொண்டு புகைத்தனர். ஆனால் இன்று?
லஞ்சம் வாங்காதவர் பிழைக்கத் தெரியாதவன் போலவே குடிப் பழக்கம் இல்லாதவர்கள் அரசியல், வியாபார, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக தெரிகின்றனர்.
இன்று அந்த சிறிய கிராமத்திற்குள் மூன்று டாஸ்மார்க் கடைகள் இருக்கின்றது. தினந்தோறும் கூட்டத்திற்கும் பஞ்சமில்லை. அருகருகே வீடுகள். எவருக்கும் அச்சமில்லை. குடிமகன்களுக்கு தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்தும் பயமுமில்லை.
அதே கிராமத்தில் விற்கப்படும் கள் என்பதற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதான மரியாதை இல்லை. தொடக்கத்தில் கள் குடிப்பதை நாட்டு மருந்து போலவே பயன் படுத்திக் கொண்டுருந்தனர். ஆனால் அரசாங்கம் அதற்கும் பெரிய ஆப்பு வைத்து விட்ட காரணத்தால் அத்தனை மரங்களும் அனாதையாய் நிற்கிறது. வானம் பார்த்த பூமியில் வளரும் மரம் செடிகள் கூட ஏக்கத்துடன் மல்லாந்து பார்க்கும் மனிதர்களைப் போலவே தான் இருக்கின்றது.
ஆனால் இன்று டாஸ்மார்க் என்ற கலாச்சாரம் எங்கெங்கும் வியாபித்து குறிப்பாக நகர்புறங்களில் தொழிலாளர், பணியாளர், முதலாளி என்ற பாரபட்சம் இல்லாமல் பாடைக்கு இந்த உடம்பை கொண்டு போக மறைமுக வழிகாட்டியாய் இருக்கிறது. அரசு அங்கீகாரம், ஆள்வோர்களின் உத்தரவாதம் என்று முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இந்த சாரய வியாபாரம் மாறிவிட்டது,
வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பயந்து கொள்ளும் ஒவ்வொரு அரசாங்கமும் இறுதியில் இத்ந குடிமகன்களை நம்பித்தான் தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை எந்த பெரிய தலைகளும் பொருட்படுத்துவதே இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்தி மறந்து விடுகின்றது. இதனாலேயே இன்று அரசாங்கமே குடிமகன்களுக்கு விரைவில் சொர்க்கத்தை சென்றடையும் வழியையும் காட்டிக் கொண்டுருக்கிறது. ஆனால் ஒவ்வொரு குடிமகன்களின் குடும்பம் மட்டும் நிரந்தர நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது