நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் எப்படி மாறியுள்ளது என்பதனை எனக்குப் புரிய வைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அவர் முதலாளியின் அறைக்கு முன் காத்துக் கொண்டிருந்தார்.
அவர் கட்டாயம் மாதத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து விடுவார். பாதி நாட்களுக்கு மேல் தாமதாகத்தான் வந்து சேர்வார். பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல நிர்வாகம் இறுதி எச்சரிக்கை கொடுத்தது. அப்போது தான் அவரின் குடும்பச் சூழ்நிலை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது.
அவர் மனைவியும் வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்க இவர் தான் அவர்களின் மகன், மகளின் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக இருந்துள்ளார். இது இயல்பானது தான். ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்குச் செல்லும் போது யாரோ ஒருவர் மற்ற பொறுப்புகளைப் பார்ப்பது இயல்பானது தான் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தைகளின் மருத்துவமனை, பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலும் இவர் மட்டும் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் மனைவி அலுவலகத்தில் விடுப்பு அனுமதிக்க மாட்டார்கள் என்றார்கள்.
எங்கேயோ பிசிறு தட்டுகின்றதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் நான் அவரிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
மீண்டும் ஒரு முறை பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். மதியம் தான் வருவேன் என்று அலைபேசி வாயிலாக அனுமதி கேட்ட போது நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மனைவியிடம் அழைத்துப் பேசிய அலுவலகப் பெண்மணி என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நிகழ்காலத்தின் மாறிய சூழலின் வேறொரு பரிணாமத்தை எனக்குக் காட்டியது. "என் பொண்ணும் பையனும் எனக்கிட்ட ஒட்டவே மாட்டார்கள். அவருதான் ஆரம்பத்திலேயிருந்து அவங்களைப் பார்த்துக்குறாரு. நான் கண்டு கொள்வதே இல்லை. அதனால் தான் அவர் லீவு எடுக்கிற மாதிரி ஆயிடுது" என்று அவர் சொன்ன போது தான் அம்மா என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள பாசம், பிரியம் போன்றவை எப்படி மாறியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.
இதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் குணாதிசியங்கள் சார்ந்த பலவிசயங்கள் இருந்தாலும் முழுமையாகப் பொறுப்புகளைத் துறப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாக எனக்குத் தெரிந்தது. இதே போல மனைவி பணிபுரிய கணவன்மார்கள் வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கெட்டழியும் போக்கும் உள்ளது.
வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரம் மிக முக்கியம். ஆனால் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றை இழந்து கொண்டே வரும் நிலையில் தற்போதைய குடும்ப வாழ்க்கை உள்ளது.
குழந்தைகளைக் கவனிக்க முடியாமலும், கற்றுக் கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியாத போது குழந்தைகள் தீவாக வளர்கின்றார்கள். கடைசியில் பலவற்றை இழந்து சிலவற்றைப் பெறும் வாழ்க்கை அமைகின்றது. அதுவே வாழும் முறையாகவும் மாறிவிடுகின்றது.
••••••••••
"என் மகனின் கணினி அறிவு பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே? அவன் ஒரு கில்லாடி சார்? என்று எப்போதும் என்னிடம் வந்து சொல்லும் அலுவலக நண்பர் அன்று சோகத்துடன் வந்து பகிர்ந்த செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள கணினியை தொடக்கத்தில் விளையாட்டு, படிப்பு என்று பயன்படுத்தி வந்தவனுக்கு நண்பர்களின் வழிகாட்டல் வழியை மாற்றியுள்ளது. நேரம் காலமின்றி நீலப்படங்களின் ரசிகனாக மாறியிருப்பதை எதிர்பாராத விதமாக நண்பரின் மனைவி கண்டறிந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டார்.
அதன்பிறகு எப்படி அவனை மீட்டார்கள் என்பது குறித்து நாம் இங்கே பேசப்போவதில்லை.
தொழில் நுட்பங்கள் தந்த வளர்ச்சி எதுவும் தவறில்லை என்ற கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. வயதும், வளர்ச்சியும் படிப்படியாக நிகழ்பவை. ஆனால் இப்போதுள்ள சூழல் குழந்தைகளின் அடிப்படை குணாதிசியங்களை மாற்றுகின்றது. பஞ்சு போன்ற மனதில் நஞ்சு கலந்து விட வாழ வேண்டிய வயதில் கருகிவிடுகின்றார்கள்.
அவரவர் கையில் வைத்துள்ள அலைபேசி என்பது நாசகார ஆயுதமாக மாறியுள்ளது. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற புரிதல் இல்லாத காரணத்தால் அசிங்கங்களைச் சிங்கமெனக் கருதிக் கொள்கின்றார்கள். கல்விக்கென்று ஒரு வயது. கலவிக்கென்று ஒரு வயது என்பது தலைகீழாக மாறும் போது இங்கே ஒவ்வொரு நாளும் வக்கிரம் அரங்கேறுகின்றது. வயதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லாத நிலையில் அது நேரிடையாகவே குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கின்றது.
நம் வாழ்வில் ஒரு லட்ச ரூபாய் என்பது நம் உழைப்பின் மூலம் பெற்றுச் சேமிப்பது என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால் இன்று கல்லூரி நுழைவதற்கு முன்பே மகனின் பைக் ஆசையை நிறைவேற்றுபவர் அதிகம். நரம்புகள் முறுக்கேற, நிலையில்லாத சிந்தனையோட்டத்தில் அவன் மட்டும் அழிவதில்லை. கூடவே பலரையும் காவு வாங்கி விட்டே செல்கின்றான். இந்த மாற்றங்கள் எதுவும் முன்பு எப்போதும் நிகழ்ந்தது இல்லை.
••••••••
ஒரு நாள் என் மகள் எங்கள் மிஸ் அலைபேசி எண் என்று சொல்லி என் அலைபேசியில் சேமிக்கச் சொல்லியிருந்தார். எதற்காகவது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைத்தேன். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது அவரின் மிஸ் உருவாக்கிய வாட்ஸ் அப் குரூப் ல் இவரும் ஒரு அங்கத்தினராக மாறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டு நான் உள்ளே வந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு இதுவே முக்கிய வேலையாக இருந்தது. கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் எடுத்துப் பார்த்த போது ஒன்றுக்கும் உதவாத, அரட்டைச் சமாச்சாரங்களும், அவரவர் நடிகர்களின் வீர தீர பிரதாபங்களும் மீம்ஸ்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இவர்களைக் குறைசொல்வதை விடக் குழுமத்தில் சேர்த்த ஆசிரியை அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். அன்றொரு நாள் காலாண்டு தேர்வு முடிவுகள் என்று சொல்லி பெற்றோர் வந்து கையொப்பமிட வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நூறு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் சந்திக்க விரும்பிய ஆசிரியை அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன்.
குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால்.
அப்படியென்றால் இங்கு நல்லதே இல்லையா? என்ற கேள்வி வரும். நல்லது நிறைய உள்ளது. நம்பமுடியாத வாய்ப்புகளை வழங்கத் தயாராகவே உள்ளது. ஆனால் அதனைச் சுற்றிலும் உள்ள கெட்டவைகளை கடந்து வரவேண்டிய கட்டாயச் சூழலும் தற்போதைய குழந்தைகளுக்கு உள்ளது என்பதனை நாம் உணர்ந்து இருக்க வேண்டும்.
கல்வி பரவலாக்கப்படாமல் இருந்த காலகட்டத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விட்டு இறங்கினால் நம் குழந்தைகள் சந்திக்கும் ஒவ்வொருவரும் போட்டியாளர்களாகத்தான் தெரிகின்றார்கள். மனிதாபிமானம் அறவே தேவை இல்லை என்று ஆழ்மனதில் உருவாவது இந்த இடத்தில் தான். முறைப்படியான வாய்ப்பு வழங்காமல் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் வாழ்வில் தோற்றவர்களின் பட்டியல் இங்கு வெகு நீளம்.
குடும்ப வாழ்க்கையில் முக்கிய அங்கத்தினராக இருக்கும் மகன், மகளின் விருப்பங்கள், தேவைகள் என்று பாரபட்சமின்றி இப்போதைய பெற்றோர்களால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. இதுவே எதுவும் எளிதில் கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. கிடைக்காத போது தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள்.
பதின்ம பருவம், வளரிளம் பருவம், வளர்ந்த பருவம் என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்வோம்.
எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என்ற நிலை என்பது ஒரு இளைஞனின் வாழ்வில் முதலில் வரும். கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நானும் முயற்சித்தும் பார்ப்பேன் என்ற இரண்டாவது நிலையில் தான் அனுபவம் தன் பாடங்களை நடத்தத் தொடங்குகின்றது. மூன்றாவது நிலையில் என் அப்பா கோபக்காரர் ஆனால்? என்று தன் தந்தையைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கின்றது.
அந்த நிலையில் நிச்சயம் கல்லூரி வாழ்க்கை முடித்து அவர்களுக்குண்டான வாழ்க்கையைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குள் பெற்றோர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவம் சரியாகத் தெரியாவிட்டால் ஒவ்வொரு நாளும் மரணக்குழிக்குள் இறங்கி ஏற வேண்டியதாக இருக்கும்.
கிராமச் சூழலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை நகர்ப்புறத்திற்கு மாறினாலும் அவர்கள் பெரும்பாலும் மனதளவில் கிராமவாசிகளாகவே வாழ்கின்றனர். சிந்தனை, நோக்கம், செயல்பாடுகள் என்று அனைத்திலும் கிராமத்தின் தாக்கத்தை ஏதோவொரு நிலையில் பார்க்க முடியும். ஆனால் கிராமம் என்றே தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையென்பது முற்றிலும் புதிது.
வீட்டில் அரிசி சாப்பாடு என்றால் பணக்காரர் என்று பார்த்து வாழ்ந்த வாழ்க்கையில் இன்று அரிசி சாப்பாட்டை உங்கள் நோய்க்காகக் குறைத்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு உணவு முதல் உடைகள் வரைக்கும் மிதமிஞ்சி அனுபவிக்கும் நிலையில் இருக்கும் அந்தக் காலம் போல வராது. இப்ப எல்லாமே மோசம் சார்? என்பதைச் சொல்ல முடியுமா?
ஒவ்வொரு ஐம்பது வயதுக்காரர்களும் இருபது வயதுக்குள் இருப்பவர்கள், அதனைக் கடந்து வாழ்பவர்கள் என்று அடுத்த இரண்டு தலைமுறைகளுடன் வாழ்ந்தே ஆக நிலையில் உள்ளனர். ஐம்பதைக் கடந்தவர்களின் அறிவென்பது இருபதைக் கடந்தவர்களுக்கு விளங்க முடியாததாக இருக்கும். அதுவே இருபதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.
இந்த இரண்டையும் கடந்து வரத் தெரிந்தவர்களுக்கும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை புரிந்தவர்களுக்கும் தலைமுறை இடைவெளி பெரிய அளவு பாதிப்பை உருவாக்காது. இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் சிறுசுங்க எல்லாம் எங்கே நம்ம பேச்சை கேட்குது என்ற புலம்பல் மொழி கட்டாயம் வரத்தான் செய்யும்.
இறுதியாக,
இங்கு எல்லாமே என் சொந்தம். கடைசி வரைக்கும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் முன்பு குடும்பத்தை வளர்க்க உதவியது. அதுவே இப்போது குடும்பங்கள் பிரிவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 15 வயதில் என் உரிமை இது? என்று பேசத் தொடங்கும் குழந்தைகளிடம் உங்கள் உரிமைகளை வார்த்தைகளாகப் பேசாதீர்கள். உரிமை என்பதற்கும் கடமை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். செயல் தான் முக்கியம்.
என் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் குழந்தைகளிடம் உடனே எதையும் புரிய வைக்க முயலாதீர்கள். அவர்களுக்குக் காலம் கற்றுக் கொடுக்கும் நேரம் வரவில்லை என்பதனை சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.
இப்போது நேருக்கு நேர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவரவர் குழந்தைகளின் பத்து வயதிற்குள் முடிந்து விடுகின்றது என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். சுருங்கிய உலகத்தில் மனமும் சுருங்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆசிரியர்களைத் தேடவில்லை. அறிவுரை தேவையில்லை. அவர்களுக்கான உலகத்தில் வாழ அவர்கள் தான் அவர்களின் தேவையைக் கண்டறிய முடியும்.
இவையெல்லாம் மாயம் என்பதனை அவர்கள் உணர பலசமயம் உங்கள் வாழ்க்கை முழுமையையும் அவர்களுக்காகப் பணயம் வைத்து ஆக வேண்டும். அது போன்ற சமயங்களில் அதற்காக உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து அவர்களுக்காகக் காவு கொடுத்து விடாதீர்கள். செல்வம் இருந்தாலும் ஆரோக்கியம் இழந்து நடைபிணமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள்.
காலம் மருந்து போடும்.
"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்.
( பயணம் முடிவடைந்தது. தொடர் வாசிப்புக்கு நன்றி)
50 வயதினிலே 5
50 வயதினிலே 6