Friday, November 28, 2014

பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்

அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும். இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை. இவரை மேலும் இங்கே வைத்திருந்தால் இவரை வைத்து பலரும் பரமபதம் விளையாட பலரும் காத்திருப்பார்கள்.

ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களும் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் முதலாளி வர்க்கம் நம் செயல்பாடுகளை உளவு பார்க்க அவர்களுக்கென்று படை பட்டாளங்களை ஒவ்வொரு இடத்திலும் வைத்திருப்பார்கள்.

ஆடு, புலி ஆட்டம் போலத்தான் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். எவர் நம்மை வெட்டுவார்கள்? எந்த இடத்தில் நாம் வெட்டப்படுவோம்? என்று காத்திருப்பதை விட வெட்டக் காத்திருப்பவர்களை நாம் வெட்டி விட்டு நகர்ந்து முன்னேற வேண்டும். இறைச்சிக் கடையில் நின்று கொண்டு கருணை, காருண்யத்தைப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது தொழில் வாழ்க்கை. அதுவும் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழில். கோடிகள் புழங்கும் எந்தத் தொழிலும் மேம்பட்ட பதவியில் இருப்பவர்களும், முதலாளிகளும் அடிப்படையில் கேடிகளாகத் தான் இருப்பார்கள். சிலர் அதனை வெளியே தெரியாதாவாறு மறைத்து வாழ கற்று இருப்பார்கள். வெளியே முலாம் பூசம்பபட்ட தங்க நகை போலத்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் அவரவருக்குண்டான தர்மநியாயங்கள் தான் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை நகர்த்தும். எண்ணங்கள் முழுக்க வக்கிரத்தை சுமந்தவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லாப் பெண்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகத்தான் தெரிவார்கள். வயது வித்தியாசமோ, உறவு சார்ந்த உறுத்தல்களோ தோன்றாது. பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களுக்கப் பிணத்தைக் கூட விலை பேசத்தான் தோன்றும்.


ஒரு முதலாளி யோக்கியவானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கோடிக்கணக்கான முதலீடு போட்டவனின் வலியென்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனின் இழப்புகளை எவரும் பங்கு போட்டுக் கொள்ள வர மாட்டார்கள். 

ஆனால் குறைந்த பட்சம் நாணயமானவனாகத்தான் வாழ்ந்தாக வேண்டிய அவசியமுண்டு. நா நயம் என்பது ஒரு கட்டம் வரைக்கும் நகர்த்தும். வாழ்க்கை முழுக்க வாயால் கப்பல் ஓட்டுபவர்களுக்குக் கலங்கரை விளக்கம் என்பது கடைசி வரைக்கும் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடும். 


Saturday, November 22, 2014

அவள் பெயர் ரம்யா

எந்தத்துறை என்றாலும் பயிற்சி முக்கியம். இங்கே எல்லோரிடமும் அளவிட முடியாத ஏதோவொரு திறமை இருக்கக்தான் செய்கின்றது. சிலரால் அதனை இயல்பான பழக்க வழக்கத்தில் வெளிக்கொண்டுவர முடிகின்றது. பலருக்கும் தன்னிடம் என்ன திறமை உள்ளது? என்பதை அறியாமலேயே "கண்டதே காட்சி வாழ்வதே வாழ்க்கை" என்று வாழ்ந்து முடித்து இறந்து போய் விடுகின்றார்கள். 

வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் என்பது தனக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுகின்றார்கள். சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர். எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. என் குடும்பம் சரியில்லை. 

என்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை. என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று எத்தனையோ காரணங்களைத் தங்களின் தோல்விக்காகச் சுட்டிக் காட்டுகின்றார்களோ ஒழிய தன் திறமை தன் உழைப்பு குறித்து எவரும் யோசிப்பதே இல்லை. 

சிலருக்கு கிடைக்கக்கூடிய அறிமுகம் தான் அவர்களின் வாழ்க்கையின் புதிய பாதையை உருவாக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. அதன் பிறகே மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகின்றது. இந்தப் பெண்ணை முதல் முறையாகச் சந்தித்த போது இவர் குறித்து எவ்வித தனிப்பட்ட அபிப்ராயங்கள் எதுவும் எனக்கில்லை. ஆனால் ஒருவரிடமிருக்கும் நிறை குறைகளை அலசி அவரை எந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். இவரை மட்டுமல்ல இவரைப் போன்ற உள்ளே பணிபுரிந்த ஒவ்வொருவர் மேல் தனிக்கவனம் செலுத்தினேன். 

இவரின் தனிப்பட்ட ஆர்வமும் உழைப்பும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. என்னருகே கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல.  

அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. 

சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல. அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும். 

பெருமையும் சிறுமையும் கடைசியில் சம்மந்தப்பட்டவர்களுக்கே வந்து சேர்கின்றது. பெரிய நிறுவனங்களில் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் மூளையாகப் பலரும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே அவர் சரியான நிர்வாகி என்ற பெயர் எடுக்க முடிகின்றது. எனக்கும் அப்பேற்பட்ட பெருமை பல இடங்களில் கிடைத்தது. 

அப்படிக் கிடைக்கக் காரணம் இது போன்ற பெண்களும் ஆண்களும் பலவிதங்களில் உதவியுள்ளனர். என் வெறுப்பு விருப்புகளைப் புரிந்து நடந்துள்ளனர். பல பலவீனங்களை அனுசரித்து நடந்துள்ளனர். நான் விரும்பிய ஒழுக்க விதிகளை அலுவலகத்திற்குள் கடைபிடித்துள்ளனர். அவர்கள் கேட்ட வசதிகளை விருப்பங்களை மறுக்காமல் செய்து கொடுத்துள்ளேன். 




Friday, November 14, 2014

எந்திர மனிதர்கள்

ஆய்த்த ஆடைத் துறை மட்டுமல்ல நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் அலுவலக நடைமுறைகள் என்பதும் தொழிற்சாலை என்பதும் முற்றிலும் வேறாக இருக்கும். வெவ்வேறு முகங்கள் கொண்ட இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தேன். அதிகப் படியான மனஉளைச்சல் இருந்தது. ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது. கற்றதன் வழியே பல பாடங்கள் புரியத் தொடங்கியது. 

பணம் படைத்தவர்களின் திருவிளையாடல் ஒரு பக்கம். அன்றாடங் காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கை ஒரு பக்கம். இரண்டும் வெவ்வேறு கோணங்கள். ஒன்றில் மனிதாபிமானம் என்பதே இருக்காது. மற்றதில் மனிதாபிமானம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும். ஒன்றில் அந்தஸ்து என்பதற்காக எவ்வித கேவலத்தைப் பொருட்படுத்த தேவையிருக்காது. மற்றொன்றில் மானம் பெரிதென வாழும் கூட்டமாக இருக்கும்.  

இந்த இரண்டு பிரிவைப் போல அலுவலக பணியாளர்களும் தொழிற் சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உலகமும் வெவ்வேறாக இருக்கும்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பேசப் பழக நிறைய வாய்ப்புண்டு. பல சமயம் சிந்திக்க நேரம் இருப்பதுண்டு. ஆனால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இயந்திரங்களுடன் தான் தினந்தோறும் உறவாட வேண்டும். மனிதத் தொடர்பு என்பது  குறுகிய நேரம் மட்டுமே. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தாக வேண்டும். தங்களது எண்ணம், ஏக்கம், சோகம் அனைத்தையும் உள்ளுக்குள்ளே பூட்டி வைத்திருக்கப் பழகியிருக்க வேண்டும்.  

எந்தவொரு தனியார் நிர்வாகத்திலும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் குறைந்த அளவில் தான் வாசித்திருக்க முடியும்.  ஆனால் செய்தித்தாளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அன்றாட செய்தியாகவே வந்து கொண்டிருக்கும். காரணம் தொழிலாளர்களின் மன உளைச்சல் என்பது எழுத்தில் எழுதி புரிய வைக்க முடியாத ஒன்று.  திடீரென வெடித்துக் கிளம்பும் போது அது அடங்க நேரம் காலமாகும். 




Saturday, November 08, 2014

பணக்காரன் சொல்வதெல்லாம் தத்துவமே

கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களுடன் நாம் பழகும் போது பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும். எந்த நொடியிலும் நாம் நம்மை இழந்து விடக்கூடாது. எந்தச் சமயத்திலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் தாக்க அது மன வலிமையைக் குறைப்பதோடு அதன் தாக்கம் உடலில் பரவும் போது நாம் சேர்த்து வைத்துள்ள மனோபலத்தைப் பாதியாகக் குறைத்து விடக்கூடிய ஆபத்துள்ளது. 

நாம் வாழும் சமூகம் என்பது நாடகதாரிகளால் சூழப்பட்டது. கள்ளத்தனம் தான் தங்கள் கொள்கை என்ற எண்ணம் கொண்ட பெரும்பான்மையினர் மத்தியில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். 

இது சரி, இது தவறு என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாகத் தான் வாழ்கின்றார்கள். இவற்றை எந்தப் புத்தக அறிவும் நமக்குத் தந்து விடாது. மனிதர்களுடன் பழகும் போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நாம் தான் ஒவ்வொரு சமயத்திலும் புரிந்து கொள்ள வேண்டும். 

சிரிப்பு மற்றும் அழுகை இந்த இரண்டும் மனிதனுக்கும் மட்டுமே உரிய சிறப்பம்சம். விலங்குகளில் அதிகப் பாரம் சுமக்கும் போது அவைகள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை அவற்றின் செயல்பாடுகளில் இருந்து கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும். சில சமயம் அவற்றின் கண்ணீர் நமக்கு அடையாளம் காட்டும்.  

அடக்க முடியாத ஆற்றாமையில் மதம் பிடிக்கும் யானைகளின் செயல்பாடுகளை அதன் பிளிறல் சப்தத்தில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஆனால் விலங்குகளின் மகிழ்ச்சியென்பது அதன் சப்த ஒலிகளில் மட்டுமே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். வினோத மொழியில் விதவிதமான சந்தோஷங்களை அவைகள் வெளிக்காட்டிக் கொள்கின்றன. பசி இல்லா மிருகம் தன் எதிரே வரும் எந்த விலங்கினங்களையும் எந்த நிலையிலும் தொந்தரவு செய்வதில்லை. விலங்குகளின் காமப்பசிக்கு குறிப்பிட்ட பருவம் மட்டுமே. ஆனால் மனித இனத்தில் மட்டும் இவை எதுவுமே செல்லுபடியாகாத பல வினோதங்கள் உண்டு. 

கிராம வாழ்க்கையில் நம் வெளிப்படைத் தன்மை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்பட்டு விடும். பரஸ்பரம் அதற்குரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும் போது அது இயல்பான பழக்கமாகவே இருக்கும். அதுவே அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணமாக மாறிவிடும். ஆனால் நகர்புற வாழ்க்கையில் பல சமயம் நாடக நடிகர் போலவே ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது.