Saturday, December 31, 2016

ஜோதிமயமானவனின் சில குறிப்புகள்.............


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.  எண்ணிய எண்ணம் 2017 வருடம் மெய்ப்பட வாழ்த்துகள்.


சூழ்நிலைகளை நாம் எவ்வளவு விருப்பத்துடன் எதிர்கொள்கிறோம் என்பதே நம் அனுபவத்தின் தரத்தையும் வாழ்வின் தரத்தையும் நிர்ணயிக்கிறது.

How willingly we go through whatever situations we face decides the quality of our experience and the quality of our life.

++++++


மனித வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் மனம் தளராமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டேயிருப்பது தான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். 

1989 ஆம் ஆண்டுக் கல்லூரிப் படிப்பை காரைக்குடியில் முடிக்கும் வரையிலும் வாழ்க்கையில் உள்ளே, வெளியே எந்தப் போராட்டங்களையும் நான் பார்த்தது இல்லை. நடுத்தரவர்க்கத்தின் இயல்பான ஆசைகள் எப்போதும் போல கிடைத்தது.

ஆனால் அதற்குப் பிறகு கடந்து போன 25 வருடங்களில் போராட்டங்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொன்றும் போராட்டத்தின் வழியே தான் கடக்க வேண்டியுள்ளது.  

ஒவ்வொரு போராட்டங்களும் ஒரு அனுபவத்தினைத் தருகின்றது. அந்த அனுபவம் ஒரு பாடத்தைக் கொடுத்து விட்டு நகர்கின்றது. அடுத்தடுத்து புதிய பாடங்கள் புதிய அனுபவங்கள். மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் கற்றுக் கொள்வது மட்டுமே பிரதானமாக உள்ளது. 

எனக்குக் கிடைத்த அதிகப்படியான அனுபவங்கள் தான் என் எழுத்துப் பயணத்திற்கு உறுதுணையாக உள்ளது. 

2009 முதல் 2016 வரைக்கும் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இணையம் வழியே கற்றதும் பெற்றதும் ஏராளம். வரலாறு, கட்டுரை வடிவங்களில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இந்த முறை என் சுய தேடலை இந்த மின் நூலில் உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன். 

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி என் முதல் மின் நூலான "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளிவந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து எனது எட்டாவது மின் நூல் "பழைய குப்பைகள்". இது என் வாழ்வின் காலடித்தடங்கள். ஒவ்வொன்றும் குப்பைகளாக மாறி உரமாக மாறியவை. நான் வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,64,000+ பேர்களை சென்றடைந்துள்ளது.
அட்டைப்பட வடிவமைப்பு திரு மனோஜ்
நான் கடந்து வந்த பாதையை, என் குடும்பச் சூழ்நிலை, பின்னணி, எண்ணங்கள், நோக்கங்கள் போன்றவற்றை ஓரளவுக்கு இந்த மின் நூல் வழியே உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது முழுமையான சுயசரிதை அல்ல. நமக்கான அடையாளத்தை நாமே உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் நாம் வாழும் சமூகத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்? என் புரிதலின் முதல் பகுதி இது.  

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பயணச்சுவடுகள் இதில் எங்கேனும் தெரியக்கூடும். உங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 

75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் இந் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். 

பணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. 
இந்த மின் நூலை நண்பர் இராஜராஜனுக்கு சமர்ப்பிக்கின்றேன்.  தாயுமானவன் நீ.

பொருள் சேர்க்க வேண்டும் என்றால் "இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் ஒழுக்க விதிகளை கடைபிடிப்பவனின் சங்கட விதிகளை சமரசமின்றி எழுதியுள்ளேன். இதனைச் சுற்றியுள்ள உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக "இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?" என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சமூகப் பார்வையோடு எழுதியுள்ளேன். என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. என் ஆரோக்கியம் மட்டுமே பெரும் சொத்தாக உள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களை கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். வாழும் போதே வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன்.

என் ஆரோக்கியம் முழுமையாக இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். 

இந்நூலுக்கு விமர்சனத்தின் வாயிலாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் மாறாத அன்பும்.

நல்வாழ்த்துகள். 

ஜோதிஜி  திருப்பூர். 
இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்


ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்  (51.356)

தமிழர் தேசம்  (16.652)


காரைக்குடி உணவகம் (23.713)


பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)


கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)


வெள்ளை அடிமைகள்  (16. 943)



2016 -- தலைமைக் கொள்ளைக்காரன்


ந்த வருடமும் இல்லாத அளவிற்குப் புதிய புதிய சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டு நடந்தது. எப்போதும் போல ஏற்றமும் வீழ்ச்சியும் கலந்தே வரவேற்றது. "கற்றதும் பெற்றதும்" ஏராளம். ஆனால் நான் நினைத்தே பார்த்திராத பல விசயங்களை, குடும்பம், தொழில், சமூகம் உருவாக்கிய பாதிப்புகளை வருடத்தின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புகிறேன். 

னது எட்டாவது மின் நூல் (பழைய குப்பைகள்) நாளை வெளிவருகின்றது. இதுவொரு சுய அலசல். இந்தப் புத்தகம் பதிவில் தொடர்ந்து எழுதி வந்த விசயமாக இருந்தாலும் மொத்தமாகக் கோர்த்துப் பார்த்தபோது என்னை நானே உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,70,000 பேர்களைச் சென்றடைந்துள்ளது என்பது முதல் ஆச்சரியம். இன்று வரையிலும் யாரோ ஒருவர் வாசித்த மின் நூல் குறித்து மின் அஞ்சல் வழியாக அவர்களின் விமர்சனத்தை எழுதி அனுப்பியபடி தான் இருக்கின்றார்கள். படிக்க ஆள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த மின் நூலை உருவாக்க எண்ணம் உருவானது. 

ந்த வருடம் வாசித்த புத்தகங்களில் முக்கியமான இரண்டு புத்தகங்கள். ஒன்று. எழுத்தாளரும் நண்பர் என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டு என்னுடன் நெருக்கம் பாராட்டும் அமுதவன் எழுதிய சிவகுமார் என்னும் மானுடன். இவர் மூலம் தான் நடிகர் சிவகுமார் அவர்களின் தொடர்பும் கிடைத்தது. இரண்டு. நண்பர் ரவி எழுதிய வெட்டிக்காடு. இந்த இரண்டும் எனக்குள் உருவாக்கிய தாக்கத்தின் விளைவே "பழைய குப்பைகள்". இந்த மின் நூல் யாருக்குப் பயன்படுகின்றதோ இல்லையே என் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுக்கு என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். 
திவில் எழுதுகின்ற நம் எழுத்து குறித்து நமக்கு நாமே எத்தனை முன்னேற்றம் கண்டுள்ளோம்? என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் நெருங்கிய நண்பர்கள் சொல்லும் சில விமர்சனங்கள். 

தொடர்பற்று இருக்கின்றது. அலைபாய்கின்றது. ஒரே விசயம் திரும்பத் திரும்ப வருகின்றது. கூர்மை இல்லை. ஆணித்தரம் விட்டுப் போகின்றது முடிக்கும் போது தெளிவு இல்லை போன்ற பல விமர்சனங்களை எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இது உண்மையும் கூட. எதனையும் கற்றுக் கொண்டால் குற்றமில்லை.

தொடக்கத்தில் எழுதும் போது பிழை திருத்த நேரம் இல்லாமல் அப்படியே வெளியிட்டு வந்தேன். இப்போது நீச்சல்காரன் உதவியினால் சந்திப்பிழை, வாணி பிழைதிருத்தி மூலம் அதனைச் சரி செய்ய முடிந்தது. மற்றபடி அன்றைய தின தாக்கத்தை அப்படியே வரும் வேகத்தில் எழுதி முடிக்கும் போது அதனை ஆராய்ந்து வெட்டி ஒட்டி மாற்றப் பொறுமை இருப்பதில்லை. சமீபத்தில் எழுதிய ஜெ. பதிவுகள் கூட நண்பர் சிவா தான் செப்பினிட்டுக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் ஒருவரை தேடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் எழுத்தே தொழிலாக மாறும் காலம் வரும் போது உள்ளே நுழைந்து அதனுடன் வாழும் போது இந்தக் குறைபாடுகளை நீக்க வழி கிடைக்கும் என்று நம்புகிறேன். 

"பழைய குப்பைகள்" மின் நூலை நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி அது குறித்த அவர்களின் எண்ணங்களைக் கேட்டு வாங்கியுள்ளேன். நிச்சயம் படிப்படியாக ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது வெளியிடுவேன். நண்பர்கள் பொருத்தருள்க. என் குறைகளையும் தாண்டி எழுத்துலகில் என்னையும் நேசிக்க நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் வாசித்த போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். 

குழந்தைகள் பதின்ம வயதிற்குள் நுழைந்துள்ளார்கள். அவர்களின் முதல் பத்து வயதிற்குள் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து பதிவாக மாற்றி எழுதியுள்ளேன். கடந்த சில வருடங்கள் அதிகம் எழுதவில்லை. இதுவரையில் 700 பதிவுகள் எழுதியுள்ளேன். ஆரோக்கியத்துடன் 1000 பதிவுகள் எழுதிவிட வேண்டும் என்ற எண்ணமுண்டு. இனியும் சில காலம் அதிகம் எழுத முடியாத சூழ்நிலையில் இருப்பதால் குழந்தைகளை அதிகம் கவனித்து வருகிறேன். 

வர்களின் மாறிய நடவடிக்கைகள், தலைமுறை இடைவெளியை உருவாக்க நினைக்கும் அவர்களின் செயல்பாடுகள், கவனச் சிதறலின் காரணங்கள், சம காலக் கல்வி அவர்களைச் சிதைக்கும் காரணிகள், தகுதியில்லாத ஆசிரியர்களால் அவர்கள் இழக்கும் பொக்கிஷங்கள் என்று ஏராளம் உண்டு. 

ந்த வருடம் எனக்குப் புதிதாக அறிமுகமான தமிழ் திரைப்படத்துறை பல பாடங்களை, அனுபவங்களைத் தந்தது. இந்தச் சமயத்தில் அதனைப் பற்றி எழுதுவது சரியாக இருக்காது என்பதால் சமயம் வரும் போது விரிவாக எழுதும் எண்ணம் உண்டு. ஆறு மாதங்கள் அதற்குள் இருந்த போதிலும் பல ஆண்டுகள் இருந்த அனுபவங்கள் கிடைத்தது. பத்தாண்டுகளாக ஊடகத்துறை, திரைப்படத்துறையைக் கவனித்து வருபவன் என்ற முறையில் நடந்த எதுவும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

ம்பிக்கைத் துரோகம், பணம் படுத்தும் பாடு, விட்டில் பூச்சிகள் போன்ற தலைப்புக்கு பயன்படுத்தும் வார்த்தைகள் மூலமே பலருக்கும் புரிய வைக்க முடியும்.  நண்பர் எனக்குச் சொன்ன ஒரு அறிவுரை இப்போது நினைவுக்கு வருகின்றது.  "பணம் போட்டவரை மதிக்காத தொழில் ஒன்று உண்டு என்றால் அது திரைப்படத்துறை மட்டுமே" என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசி.  அவரும் இதை வாசித்துக் கொண்டிருப்பார். 

ஜெ. மறைவு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. தமிழ்நாடு என்ற மாநிலத்தின் "தலைமைச் செயலாளர்" என்ற மொத்த அதிகாரம் கொண்ட பதவியைத் "தலைமைக் கொள்ளைக்காரன்" என்கிற ரீதியில் இருந்த ராம் மோகன் ராவ் தொடங்கி நாள் தோறும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வந்து கொண்டிருக்கும் செய்திகளை வாசித்துக் கொண்டே வரும் போது மனதில் உருவாகும் வார்த்தைகளைப் பதிவுகளாக மாற்ற தற்போது நேரமில்லை என்ற வருத்தம் மேலோங்குகின்றது. 

காரணம் அடுத்தடுத்து தொடர் பயணங்கள் என்று நகர்ந்து கொண்டே இருப்பதால் எப்போதும் போல இணையத்தை விட்டு சில காலம் வெளியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நிச்சயம் இது போன்ற விசயங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. காரணம் சமகாலத்தில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் விசயங்களை மேலோட்டமாக வாசித்து விட்டு "எல்லாருமே திருடனுங்க தான்" என்கிற ஒற்றை வாக்கியத்தில் கடந்து சமூகக் கூட்டத்திற்கு ஊழல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டது. 

ஜெயலலிதா என்ற பெண்மணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இன்று வரையிலும் எத்தனை லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது என்பதனைக் கூட எவராலும் அறுதியிட்டு கூற முடியாத அளவிற்கு ஊழல் என்பது எல்லையெல்லாம் கடந்து மீறி விட்டது. காயங்களைக் கூட மறந்துவிடலாம். ஆனால் தழும்பு மாறாது. 

தன் காரணமாகவே ஜெயலலிதா பதிவை விளக்கமாக எழுதி வைத்தேன். ஒரு வேளை இன்னும் நான்கு வருடங்கள் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே பட்டா போட்டு இந்தக் கொள்ளைக்கூட்டம் மற்ற மாநிலத்திடம் விற்று இருக்கக்கூடும். இயற்கை விதி மாறாதது. கழிப்பதும் சேர்ப்பதும் அதன் அடிப்படை. 

னால் தமிழ்நாட்டில் மாநில ஆளுநர் என்ற பெயரில் அலங்கோல கூத்து நடத்தி விட்டுச் சென்ற பீஷ்மநாராயணன் சிங், பாத்திமா பீவி, ரோசையா போன்றவர்களை எவரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற வருத்தம் எனக்குண்டு. 

வ்வொரு துறையிலும் "திறமை இல்லாதவர்கள்" என்ற நிலையில் பலரையும் பார்க்க முடியும். ஆனால் இந்த வருடம் "நாங்கள் எங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவே மாட்டோம்" என்கிற ரீதியில் நான் பார்த்த பலரும் எனக்கு ஆச்சரியமளித்தார்கள். அதனை விடத் தனக்கு என்ன தேவை? என்பதில் எந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சுயபாதுகாப்பை காப்பாற்றிக் கொள்கின்றார்கள் என்பதனைப் பார்த்த போது "நான் ஒரு முட்டாளுங்க" என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது. 

சாதகமற்ற சூழ்நிலை ஏன் நம்மை நோக்கி வருகின்றது என்று கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அதற்கு முக்கியக் காரணம் நம்முடைய நேர்மையாக அணுகுமுறை என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. 

குறுகிய மனமும், கொடூர குணமும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர்களைப் பார்க்கும் போது பல பதிவுகள் எழுதும் அளவிற்குப் பல சம்பவங்கள் மனதில் வந்து போகின்றது. "வாழ முடியும் ஆனால் வளரமுடியாது" என்று தெரிந்த போதிலும் இது தான் வாழ்க்கை என்று ஒரு பெருங்கூட்டமே இப்படித்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். "பணத்திற்கு அப்பாலும்  இங்கே பல மகிழ்ச்சிகளும் உண்டு" என்பதனை எவருமே ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இல்லை என்பது தான் வருத்தப்படும் செய்தியாக உள்ளது. 

"ராஜதந்திரங்களை நான் கரைத்துக் குடித்தவன்"  என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கடைசியில் பலியாவது ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் என்பதனை இந்த வருடம் அதிகம் பார்த்தேன். உடலை பாராமாகச் சுமந்து வாழ்பவர்கள் அநேகம் பேர்கள். ரசிக்க, ருசிக்க இவ்வுலகில் உள்ள அனைத்தும் அவர்களுக்குக் கசப்பாக இருக்கின்றது. 

வர்களின் எண்ணங்கள் அனைத்தும் மற்றவர்களின் வாழ்க்கையை தாக்குகின்றதோ இல்லையோ அவசியம் அவர்களின் ஏதோவொரு உடல் உறுப்பை உள்ளும் புறமும் தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை இழந்து வேறு ஏதோவொன்றைப் பெற்று நாங்கள் பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்கிறார்கள். பாவப்பட்டுப் பாரம் சுமப்பவர்களைக் கடைசியில் அவர்கள் சேர்க்கும் பணம் காப்பாற்றுமா? என்று யோசித்ததுண்டு. 

ங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். 

வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 

75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் பழைய குப்பைகள் என்ற மின் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். 

ணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. 

"கொள்கை ஏதும் தேவையில்லை. பொருளாதார ரீதியாக பெற்ற உயர்வே வாழ்வின் அங்கீகாரம். இறுக்கமாக எப்போதும் இருந்து விடு. எதனையும் எப்போதும் பகிர்ந்து கொள்ளாதே. இதனையே வாழ்வின் தத்துவமாக கொண்டு விடு" என்ற மாறாத பாடங்களை  புதிய சமூகம்  கற்றுக் கொடுக்கும் பாடத்தில் இன்று வரையிலும் சராசரி மதிப்பெண்கள் வாங்க முடியாமல் வாழ்ந்தால் நீங்களும் என் தோழனே?

"இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற கொள்கை கொண்டவனின் வாழ்க்கையை உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக "இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?" என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சுற்றியுள்ள சமூகப் பார்வையை பொருப்படுத்தாமல் என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 


வ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். தொழில் வாழ்க்கையில் உருவாகும் போட்டிகள் அதன் மூலம் உருவான எதிரிகள் என் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்கள். இன்றைய என் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் இதுவே. என் "வாழ்நாள் கனவு" சாத்தியக்கூறின் முதல் படியில் காலடித்தடம் பதிக்கும் ஆண்டாக இந்த வருடம் முடிவுக்கு வந்துள்ளது.

வ்வொரு சமயத்திலும் நான் கண்ட, அனுபவித்த, சந்தித்த நிகழ்வினை அதன் வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன். எந்த சமயத்திலும் என் எண்ணங்களை மாற்றிக் கொண்டதே இல்லை. என்னுள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவங்கள் இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். 

த்திய அரசாங்கம் ஏன் சமஸ்கிருத திணிப்பை நடத்துகின்றது என்று விபரம் தெரிந்தவர்கள் புலம்புகின்றார்கள். இந்த வருடம் நான் சந்தித்த 90 சதவிகித குழந்தைகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்ததாகவே இருந்தது. அதனைத்தான் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள் என்பது முதல் ஆச்சரியம். ஒவ்வொரு கணினி வேலைகள் சார்ந்த கடைகளில் ஜாதகம் என்பது வளம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. தெய்வ நம்பிக்கை என்பது கொடுக்கல் வாங்கல் போல மாறியுள்ளது. 

ந்த வருடம் ஏற்காடு சென்றோம். ஏன் சென்றோம்? என்கிற அளவிற்கு இருந்தது. தமிழ்நாடு அரசாங்கம் மட்டும் சுற்றுலாத்துறை மற்றும் அறநிலைத்துறையை மட்டும் சரியான அதிகாரிகள் வசம் ஒப்படைத்தால் வருட நிதிநிலை தொகையில் பாதி வருமானத்தை இந்த இரண்டு துறைகளில் இருந்து எடுக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் இதனை வைத்து சம்பாரித்துக் கொண்டிருப்பவர்கள் வாயில் மண்ணு விழுந்துவிடுமே?

500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் எட்டாம் தேதி மாலை அறிவித்த அந்த நிமிடம் முதல் எழுதும் இந்த நேரம் வரைக்கும் எனக்கு என் குடும்பத்திற்கு எந்தப் பிரச்சனையும் உருவாகவில்லை. காரணம் என்னிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம் இந்தச் சமயத்தில் உதவியது. வீட்டில் வைத்திருக்கும் எந்தப் பெரிய தொகை என்றாலும் முதல் வேளையாக அதை உடைப்பது என் வாடிக்கை. மனைவி உடைக்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பார். நான் அவருக்கே தெரியாமல் உடைத்துப் புத்தகங்கள் வாங்கி வந்து விடுவதுண்டு. அப்படிச் சேர்த்த ரூபாய்கள் உதவியது. 

அதற்கு மேலாகத் திட்டமிட்ட வாழ்க்கையில் அதிகப்படியான செலவீனங்கள் இருக்க வாய்ப்பில்லை. தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லை என்பதோடு திருப்பூரைப் பொறுத்தவரையிலும் தனியார் வங்கிகள் சிறப்பாகவே செயல்பட்டன. 

டந்த ஒரு மாதத்தில் ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளேன். அடித்தட்டு மக்கள், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பை நடத்த வேண்டிய மக்கள், வங்கி என்றால் தெரியாமல் வாழ்ந்த மக்கள் என்று அத்தனை பேர்களும் மொத்தமாக நடைப்பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை. இனி அவர்களால் இழந்த இழப்பைச் சரி செய்ய முடியுமா? என்ற பெரிய கேள்வி உருவானது. வீட்டுக்குக் காய், பழம், மற்ற பொருட்கள் கொண்டு வரும் பெண்களின் வாழ்க்கை சோகங்களைக் கேட்ட போது அழ முடியாத சோகமாக இருந்தது. 

வ்வொரு சமயத்திலும் யாரோ சிலரின் நலனுக்காக அவ்வப்போது உருவாக்கப்படும் போரினால் லட்சணக்கான அப்பாவிகள் எப்படிக் கொல்லப்படுகின்றார்கள் என்பதனை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பை 2016 பண மதிப்பு இழப்பு காட்டியுள்ளது. இதன் விளைவுகள் இன்னமும் எப்படியிருக்குமோ? என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது. அரசாங்க கொள்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது. பாதிக்கப்படுவர்களின் வாழ்க்கை சுனாமி கோரத்தை விடக் கொடுமையாக உள்ளது. 

ந்தச் சமயத்திலும் முயற்சிகளையும் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை நான் விட்டு விடுவதே இல்லை. தன்னம்பிக்கை என்பது மற்றொரு கை போல உள்ளதால் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகவே இருந்து உள்ளது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் எங்கிருந்து? எப்போது? நமக்கான வாய்ப்பு வரும்? என்பதனை அறுதியிட்டுக் கூறமுடியாது. அப்படியான முயற்சிகள் பலிதமாகும் போது எப்போது போல நான் நினைத்துக் கொள்வது "வாழ்ந்து காட்டுவதை விடப் பழிவாங்குதல் வேறொன்றுமில்லை."

பழைய வருட டைரிக்குறிப்புகள் வாசிக்க



Wednesday, December 28, 2016

திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?


ஏழாண்டுகள் முடியப் போகின்றது. இணைய உலகில் எட்டாவது ஆண்டை நெருங்கப் போகும் எனக்கு ஒவ்வொரு ஆங்கில வருடப் புத்தாண்டு சமயத்திலும் "கற்றதும் பெற்றதும்" என மனதில் தோன்றுவதை ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புவதுண்டு. காரணம் சென்ற மாதம் நடந்தது என்ன? என்பது மறந்துவிடும் அளவிற்குத் தொழில் வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் உந்தித்தள்ளினாலும் என் வலைப்பதிவில் எழுதும் எழுத்து என்பது ஒவ்வொரு சமயத்திலும் என்னை என் வாழ்க்கையை, என் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டே வந்துள்ளது. 

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்தாலும் உருவான அன்றைய நெருக்கடிகளை எழுத்துக்களைச் சமூகப் பார்வையாக மாற்றி வைத்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் என் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வதுண்டு. 

பல வருடங்கள் கழித்துப் பழைய குப்பைகளைக் கிளறிப் பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருந்து இன்று எந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம்? என்பதனை புரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மற்றபடி இணைய உலகில் மகுடம் சூட்டியவர்களையும், மகுடத்தை இன்னமும் கழட்ட விரும்பாதவர்களையும் வேடிக்கை பார்ப்பதோடு சரி. 

இந்த வருடம் என்ன எழுதலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது எப்போதும் அவரிடம் இருந்து அவரின் புதிய பதிவு குறித்து மின் அஞ்சல் வந்தது. அதே சமயத்தில் என் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குழுவில் அவர் என்னை இணைத்து இருந்தார். 

சரியாகக் கடந்த 12 மாதங்களாகத்தான் வாட்ஸ்அப் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். அதற்கு முன்னால் இந்த வாட்ஸ் அப் என்ற வசதி இல்லாத காரணத்தால் பல இன்னல்களையும் சந்தித்த போதும் கூட விடாப்பிடியாக அதனைப் புறக்கணித்தே வந்துள்ளேன். நம் நேரத்தைக் கொன்று விடும் என்பதே முக்கியக் காரணமாக இருந்தது. நண்பர் ராஜராஜன் தான் புதிய அலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு? எதற்கு? எந்தச் சமயத்தில்? கையாள வேண்டும் என்பதற்கு வரையறை வைத்துள்ள காரணத்தால் கடந்த ஒரு ஆண்டில் இந்த வாட்ஸ் அப் மூலமாகப் பல உன்னதச் செயல்பாடுகள் என் வாழ்வில் நடந்துள்ளது. 

மிக அழகான தொழில் நுட்பம். எந்தக் குழுவையும் உள்ளே அனுமதிப்பதே இல்லை. முக்கியக் காரணம் ஒரு தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதனை நம் தமிழர்கள் கற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படும். குப்பைகளைப் பகிர்வதே பெருமையாகக் கருதுவதால் நேரவிரயமும் மன உளைச்சலும் தான் நமக்குப் பரிசாகக் கிடைக்கும். 

ஆனால் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னையும் வாட்ஸ் அப் (தமிழ் வலைப்பதிவகம்) குழுமத்தில் சேர்த்து இருந்தார். 

அவரின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் சென்று வாசித்து விடுவதுண்டு. காரணம் அவரின் வலைப்பதிவு என்பது ஒரு கலைக்களஞ்சியம். புரிந்தவர்களுக்குப் பொக்கிஷம். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்குப் பல்கலைக்கழகம். கற்றுக் கொடுத்தாலும் காசு வாங்காத ஆசான். 

பதிவு வெளியிட்ட பத்து நிமிடத்திற்குள் போக்குவரத்து நெரிசல் போன்ற கூட்டத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவர். வாசிக்கும் அத்தனை பேர்களும் ஒட்டளித்து விடுவார்கள். விமர்சனம் செய்து விடுகின்றார்கள். காரணம் ஏதோவொருவகையில் அவருக்கு நன்றி கூற விரும்பும் ஏராளமான நண்பர்களைப் பெற்றுள்ளார். அவருக்கு வலையுலக நண்பர்கள் "வலைச்சித்தர்" என்று பெயர் வைத்துள்ளனர். 

திண்டுக்கல் என்றாலே பூட்டு என்பதனைத் தாண்டி இன்று உலகம் முழுக்க வாழும் தமிழ் வலையுலகம் அறிந்த ஒரே பெயர் என்றால் அது திண்டுக்கல் தனபாலன் தான் என்பதனை என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். அவரைக் கிண்டலடித்த பலரும் கிண்டி கிளங்கெடுத்த அத்தனை பேர்களும் இருந்த இடம் இல்லாமல் மறைந்து விட்டனர். ஆனால் இவரோ நாளுக்கு நாள் வாலிப மிடுக்கோடு அதே வேகத்தோடு தான் செயல்பட்டு வருகின்றார். 

எல்லோருக்கும் உள்ளதைப் போல அவருக்கும் தொழில் சார்ந்த நெருக்கடிகள் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் அதனையும் தாண்டி அவர் கற்றதையும் பெற்றதையும் பலருக்கும் பலன் அளிக்கும் வகையில் தன் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

நான் எழுதுவது என்பது என் தேவைகளின் பொருட்டே. என்னை இறக்கி வைக்க, சற்று இளைப்பாற, சற்று எழுதக் கற்றுக் கொள்ள என்பது போன்ற எதுவும் அவரிடம் இல்லை. ஆனால் அவர் எழுத்து என்பதோடு நின்று விடாமல் ஒவ்வொருவரின் திறமைகளைக் கடத்தும் சாதனமாகவும் இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல. 

எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. இவரைக் கிண்டல் செய்யாத நபர்களே இல்லை என்கிற அளவிற்குப் பல இடங்களில் இவர் செயல்பாடுகளைப் பற்றிப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். தனிப்பட்ட குழுமங்களின் வாயிலாக இதைத்தவிரச் சந்திக்கும் போது என்று பல இடங்களில் இவர் பெயர் அடிபடும். நானே பல இடங்களில் கேட்டுள்ளேன். பல சமயங்களில் வாசித்துள்ளேன். ஒவ்வொருவரும் நக்கல் கலந்த பாணியில் விமர்சனம் செய்வர். அப்போது வரைக்கும் அவர் பெயர் தெரியுமே தவிர நேரில் சந்தித்தது இல்லை. அவரின் செயல்பாடுகளை எப்போதும் போல அமைதியாகக் கவனித்துக் கொண்டு தான் வந்துள்ளேன். 

எந்த வலைப்பதிவு என்றாலும் எவர் என்ற பாரபட்சம் இல்லாத இவரின் விமர்சனம் தான் முதலில் இருக்கும். எனக்கே சற்றுக் குழப்பமாக இருந்தது. எப்படி இது சாத்தியம்? இதையே கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? அடிப்படையான அன்றாட வாழ்க்கையை இவரால் வாழ முடியுமா? என்று பலவிதங்களில் யோசித்துள்ளேன். எனது முதல் புத்தகம் "டாலர் நகரம்" புத்தக விழாவில் கலந்து கொள்ளத் திருப்பூர் வந்தவரை அப்போது தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அன்று முதல் மனதுக்கு இனியவராக மாறினார். தோழமையுடன் தொடர்ந்த நட்பு குடும்ப ரீதியான உறவாக மாறினார். 

அதன் பிறகு ஒரு நாளில் வெளியாகும் ஒவ்வொரு வலைப்பதிவுகளையும் எளிதாகக் குறுகிய நேரத்தில் அடையாளம் காண்பது என்பது பற்றி எனக்குப் புரியவைத்தார். அவர் சார்ந்த தொழில் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். எங்கள் ஏற்றுமதி துறை சார்ந்த பல விசயங்களில் நேரிடையாக மறைமுகமாகப் பணிபுரிந்ததையும் கண்டு கொண்டேன். நேரிடையாக அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்ற போது முழுமையாகப் புரிந்து கொண்டேன். 

அவரின் தற்போதைய போராடும் தொழில் வாழ்க்கை முதல் தோற்றுப் போன அவரின் கடந்த காலக் காலடித்தடம் போன்ற அனைத்தையும் புரிந்து கொண்ட எனக்குள் உருவான ஆச்சரியம் என்னவெனில் இத்தனையும் கடந்து அவருக்குள் இருக்கும் "பகிர்தல்" என்பது வெறும் பழக்கமாக இல்லாமல் இது பிறவி குணமாக உள்ளது என்பதனையும் தெரிந்து கொண்டேன். 

தனக்குத் தெரிந்த வலைப்பதிவு தொழில் நுட்ப சமாச்சாரங்களை அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பது என்பதனை தனது அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஒரு தவம் போலவே கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்.  வலையுலகத்தில் புதிய நபர்களின் வருகை மற்றும் தொடர்ந்து செயல்பட ஆர்வமும் இவரால் தான் உருவாகின்றது.

அழியப் போகும் பட்டியில் தமிழ் மொழி உள்ளது என்றார்கள். ஆனால் இன்று எவருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உலகமெங்கும் வலைமொழியாகி உள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் தன்னால் பணியைத் தன்னலம் கருதாமல் செய்த காரணத்தால் இன்று தமிழ் மொழி உலக மொழியாகி உலகத்தில் பல பகுதிகளில் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக மாறியுள்ளது. 

என் பார்வையில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள மூவர் உண்டு. 

தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கக் காரணமாக இருந்த காசி ஆறுமுகம். தமிழ் சந்திப்பிழை திருத்தி, தமிழ் எழுத்துப்பிழை திருத்தி முதல் தமிழ் மொழி சார்ந்த பல மென்பொருள் சமாச்சாரங்களை இன்று வரையிலும் ஒவ்வொன்றாகப் படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நீச்சல்காரன் என்ற பெயரில் உள்ள ராஜாராமன் வரிசையில் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் உள்ளார் என்பதனை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். 

வலைப்பதிவு உலகத்தில், உலகம் முழுக்க உள்ள வலைப்பதிவர் மத்தியில் காலம் கடந்து நிற்கும் பெயர் திண்டுக்கல் தனபாலன். 

வலைப்பதிவில் உள்ள தொழில் நுட்பம் சார்ந்த விசயமாக இருக்கட்டும்?, வலைப்பதிவில் சிறப்பான எவரும் அறியாத தொழில் நுட்பங்கள் மூலம் புதுமையாகப் பதிவுகளை உருவாக்கிப் பல ஆச்சரியங்களையும் உருவாக்குவதாக இருக்கட்டும்? வலைப்பதிவுகளைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் தனி நபர்கள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வது, விளக்கவுரை மூலம் சிறப்புச் செய்வது என்று இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் எனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. 

தற்போது வாசிக்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த என்ன செய்யலாம் என்று யோசிப்பதோடு நின்று விடாமல் திரட்டி மற்றும் திரட்டியைப் போன்ற பல வடிவங்களில் உள்ள அத்தனை நவீன தொழில் நுட்ப வசதிகளையும் அறிமுகம் செய்வதோடு அதனைப் பகிர்ந்து பலரின் பார்வைக்குக் கொண்டு செல்வது சிறப்பல்ல. உங்களுக்கு இது குறித்து ஏதும் சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று சொல்லும் இவரின் பணியென்பது பெருமைப்படக்கூடிய விசயமாகும். 

2016 ஆம் ஆண்டின் தன்னலம் கருதாத "வலையுலகச் சாதனை மனிதர் "திண்டுக்கல் தனபாலன் அவர்களை வாழ்த்துகிறேன். 




Monday, December 19, 2016

வெட்டிக்காடு - விழாத் துளிகள்


வி இணையம் மூலம் அறிமுகமானவர். அவரின் இணைய முகவரி வெட்டுக்காடு. தான் பிறந்த ஊரையே தளத்திற்கு வைத்திருப்பவர். நாங்கள் இருவரும் சந்தித்ததே இல்லை. குறுகிய காலத்தில் பழகி, அலைபேசி உரையாடலின் வழியே நெருக்கமானவர்.

குடும்ப உறுப்பினர் அளவில் நெருங்கியவர். பரஸ்பரம் குடும்பம் தொடர்பான விசயங்கள் முதல் அரசியல் வரைக்கும் இருவருக்கும் ஒரே கருத்தோட்டம் மற்றும் அலைவரிசை இருப்பதால் ஒவ்வொரு உரையாடலும் முடிவற்றதாகவே இருக்கும். சமவயது. எந்த நாட்டில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அழைத்துப் பேசி விடுவார். 

"டாலர் நகரம்" புத்தக வெளியிட்டு விழாவில் வந்து கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தவர். எனக்குத் தெரிந்தவரையில் ரவி மேடையில் பேசச் தொடங்கியது என் புத்தக வெளியீட்டு விழாவில் இருந்து தான் என்று நினைக்கின்றேன். ஆனால் இன்று படிப்படியாக வளர்ந்து தான் வசிக்கும் சிங்கப்பூரில் பட்டிமன்றம் நிகழ்வில் கலந்து கொள்ளும் அளவிற்குப் பேச்சாற்றலில் வளர்ந்து கொண்டிருப்பவர். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அவரையும் அவர் என்னையும் பரஸ்பரம் எழுத்து ரீதியாகக் கவனித்துக் கொண்டிருப்பதால் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் இடைவெளி இல்லாமல் இருக்கின்றது. 

வம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தன்னுடைய "வெட்டிக்காடு" மற்றும் அவர் மனைவி எழுதிய "கீதா கஃபே" என்ற நூலில் வெளியிட்டு விழா தஞ்சாவூரில் நடக்க இருப்பதைச் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் இணையத்தில் எழுதத் தொடங்கியது முதல் கவனித்து வருபவன் என்ற முறையில் மகிழ்ச்சியைத் தந்தது. 18.12.2016 ஞாயிற்றுக் கிழமை என்பதால் கலந்து கொள்ள முடிவு செய்து அன்றே ரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தேன். 

விழா அரங்கில் மதியம் நான் தான் முதலில் நுழைந்தேன். நான் பயணித்து வந்த சதாப்தியில் ஈரோடு கதிரும் வந்திருந்தார். ஆனால் இருவரும் சந்திக்கவில்லை. அவர் நேரிடையாகத் தங்கும் விடுதிக்குச் சென்று விட்டார். அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை ரவியுடன் சாப்பிட்டுவிட்டு ஏற்பாடு செய்து இருந்த விடுதிக்கு வந்து விட்டேன். சற்று நேரத்தில் புதுகை அப்துல்லா மற்றும் ஓஆர்பி ராஜா இருவரும் விடுதிக்கு வந்து தங்களைத் தயார் படுத்திக் கொண்டு அரங்கத்திற்குச் சென்று விட்டனர். என் அறைக்கு அருகே இருந்த மணிஜி, கேஆர்பி செந்தில், கேபிள் சங்கர், போன்றோர்களுடன் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். 

வாழும் ஊர் அருகருகே இருந்தாலும் ஈரோடு கதிருடன் அரங்கத்தில் முதல் முறையாக அப்போது தான் சந்தித்துப் பேசினேன். நண்பர் பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வந்து சேர்ந்தார். அப்பொழுதே அரங்கத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்குக் கூட்டம் இருந்தது. அரங்கத்தில் மருத்துவர் புருனோ மற்றும் அரவிந்தன் கிருஷ்ணமூர்த்திப் போன்றோரை சந்தித்தேன். ஜாக்கி சேகர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்திருந்தார். அவர் தான் காணொளி தொடர்பான அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். 

விழா தொடங்கியதுமே விழா அரங்கம் நிரம்பியது. வந்திருந்த அத்தனை பேர்களும் மொத்தமாக அனைவரும் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். புத்தக விழா என்றால் எத்தனைப் பேர்கள் தற்போதைய சூழ்நிலையில் கலந்து கொள்வார்கள் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?. ரவியின் புத்தக வெளியீட்டு விழாவில் 400 பேர்களுக்குக் குறைவில்லாமல் கலந்து கொண்டார்கள். என்னை ஆச்சரியப்படுத்திய புத்தக வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருக்கும். 

திவர்கள் சார்பாக அப்துல்லா, கதிர், முனைவர் இளங்கோவன், ஓஆர்பி ராஜா போன்றோர் பேசினார்கள். நிகழ்ச்சியைச் சுரேகா சுந்தர் தொகுத்து வழங்கினார். 

னால் விழாவில் கூடுதல் சிறப்பம்சமாக ரவியின் தொடக்கப் பள்ளிக்கூட ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பேசினார்கள். தொடக்கப் பள்ளியில் ரவிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரே ரவியின் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. 

விழாவின் சிறப்பு அழைப்பாளராக நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்களும் பேசினார். அதே போலக் கீதா அவர்களின் ஆசான், வழிகாட்டி அவர்களும் பேசினார்கள். தஞ்சாவூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் பேசினார்கள். இவர்கள் என்ன பேசினார்கள்?. 

நான் ரவி குறித்து மனதிற்குள் வைத்திருந்த சில விசயங்களை அங்கே இருந்த ஒவ்வொருவரும் பேசிய போது எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த அளவிற்கு ரவி பலரையும் பாதித்துள்ளார். 

ராசரி மனிதர்கள் நம்ப முடியாத அளவிற்குத் தொடக்கம் முதல் தன்னைத் தெளிவாக வடிவமைத்து வளர்ந்துள்ளார். "கல்வியே பெரிய சொத்து" என்பதனை தனது 3 வயதில் அடையாளம் கொண்டு அதன்படியே வளர்ந்து வாழ்ந்து இன்று அவர் அடைந்துள்ள உச்சம் என்பது பெருமைப்படக்கூடியதாகவே உள்ளது.  இன்று சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் தொலைத் தொடர்புத் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றார்.

வர் எப்படிக் கிராமத்தில் படித்த போது அண்ணா யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து அங்கே போய்ச் சேர்ந்தார்? 

வர் எப்படி நாடு நாடாகச் சுற்றிக் கொண்டு எழுத உட்கார முடிகின்றது? 

வ்வொரு தனி மனிதர்களுடன் பழகும் போதும் அவர்களுக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு சிறிது கூடச் சுயகௌரவம் பார்க்காமல் பண ரீதியான உதவி முதல் நினைவில் வைத்துத் தொடர்ந்து தொடர்பில் வைத்திருந்து தன் நட்பு வட்டத்தைப் பேணிக் கொண்டு வருதல் என்பது நிச்சயம் தற்போதைய சூழ்நிலையில் வாய்ப்பில்லை என்று தான் கருதுவோம். 

னால் இவர் மட்டுமல்ல இவர் மனைவி கீதா அவர்களும் அவர் நட்பு வட்டாரம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் என்கிற ரீதியில் பெரிய கூட்டமே வந்து கலந்து கொண்டார்கள். பல ஊர்கள். பல பெரிய பதவிகள் தொடங்கிச் சாதாரணமானவர்கள் என்பது வரைக்கும் இருவருக்கும் பெரிய பட்டியல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். 

குடும்ப விழா, நண்பர்கள் விழா என்று பலமுகமாக இந்த விழா இருந்தாலும் எண்ணமும் சொல்லும் ஒரேமாதிரியாக வாழ நினைப்பவர்களுக்கு ரவி இந்த விழாவின் மூலம் முன் உதாரணமாக இருந்தார். 

லக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள், நானும் எழுத்தாளன் தான் போட்டியில் இருப்பவர்கள் என்ற பெரும் படைபட்டாளங்கள் நடத்தும் விழாவில் காண முடியாக ஒழுக்கமும் நேர்த்தியும் உண்மையும் இந்த விழாவில் இருந்தது. 

ரங்கத்தில் இருந்த நண்பர் சொன்ன வாசகம் இது. "இதுவே எழுத்தாளர்கள் விழா என்றால் அரங்கத்தில் பத்துக் கூட்டங்கள் தனித்தனியாக நடந்து கொண்டிருக்கும். இந்த விழாவில் மட்டும் தான் விழாவை நோக்கிய அனைவர் பார்வையும் இருக்கின்றது" என்றார். அது உண்மையும் கூட. 

வியின் அம்மா முதல் ஆசிரியர்கள், முக்கிய விருந்தினர்கள் என்று அனைவருக்கும் ரவியும் கீதாவும் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றனர். ரவி தனது அம்மா அவர்கள் காலில் விழுந்து வணங்கிய போது மகனுக்கும் மகளுக்கும் ஆசிர்வாதம் செய்து உடனே இருவர் கையில் ஆசிர்வாத பணம் கொடுத்ததும் அதே போல ரவியின் மாமனார் (தஞ்சையின் பிரபல மருத்துவர்) மகளுக்கும் மருமகனுக்குத் தங்க மோதிரம் மாட்டி ஆசிர்வாதம் செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

னக்குத் தெரிந்தவரையில் ரவி கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் தான் பிறந்த கிராமம் முதல் கல்விக்காகக் கஷ்டப்படும் பல மாணவர்கள் வரைக்கும், பல துறைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே பண உதவி செய்து வருபவர். அதனை விழாவில் ஓஆர்பி ராஜா குறிப்பிட்டு பேசியது சிறப்பான அங்கீகாரமாக இருந்தது. 

ரங்கத்தில் வெளியிட்ட புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்? அதே சமயத்தில் அந்தப்பணம் தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ரீதியான செயல்பாட்டுக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அதனையே விழாவில் செயல்படுத்திக் காட்டினார்.  

தனைத் தொடர்ந்து கல்வி செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு அறக்கட்டளை தொடங்க எண்ணம் இருப்பதை வெளிப்படுத்தினார்.  கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த வள்ளல் அழகப்பச் செட்டியார் போல வாழ நினைக்கும் ரவி எண்ணம் ஈடேற வேண்டும்.

ப்துல்லா வரவேற்பு நிகழ்ச்சியில் பேசும் போது நான் என்ன மனதில் நினைத்து இருந்தேனோ? அதனைச் சுருக்கமாக அழகாகப் பேசினார். பொய் பேச விரும்பாத அரசியல்வாதியைத் தமிழகம் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோடு கதிர் கீதா கஃபே புத்தகத்தை வெளியிட்டுத் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போலவே பேசியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. 

வி என்னிடம் நவம்பர் மாதம் விழா குறித்துத் தகவல் தெரிவித்து விட்டு வெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே புத்தக வடிவத்தை அனுப்பி ஒரு பார்வை பார்த்து விடுங்கள் என்றார். இரண்டு நாட்கள் பார்த்து படித்து விட்டு அவரை நான் அழைத்துச் சொன்ன வார்த்தைகள் இது. 

"இது இலக்கியமில்லை. நேர்ந்த எழுத்தாளர் நடையில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வந்த முக்கியமான புத்தகம் இது. குறிப்பாகத் தமிழகக் கிராமங்களின் வாழ்க்கை முறைகளை எதிர்காலத்தில் எவராவது ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் புத்தகம் நிச்சயம் உதவி புரியக்கூடியதாக இருக்கும்" என்று சொல்லி தொடர்ந்து அவரிடம் பேசிய போது ரவி கூச்சத்தில் நெளிந்தார்.  

ஆனால் இந்த வார்த்தைகளை அப்படியே மாறாமல் முனைவர் இளங்கோவன் பேசிய போது தெரிவித்தார்,

இப்போது சொல்லுங்கள் ரவி. நான் உங்களிடம் என்ன சொன்னேன் என்பது உங்கள் நினைவில் இருக்கும் தானே? நான் சொன்னவற்றைத்தான் வேல ராமமூர்த்தி அவர்கள் வரைக்கும் அவரவர் பாணியில் பேசினார்கள். 

வாழ்த்துகள் ரவி. 

தொழில் வாழ்க்கையில் வென்றவர்கள் குடும்ப வாழ்க்கையில் தோற்றுவிடுவதுண்டு. ரவியின் மகள் இங்கிலாந்து சர்வதேச பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகின்றார். அவர் விழாவில் கடைசியாகப் பேசினார். மகன் சிங்கப்பூரில் சர்வதேச பள்ளியின் பயின்று வருகின்றார். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் வென்றவர். இதில் இரண்டிலும் வென்றவர்கள் தங்கள் வந்த பாதையை மறந்து விடுவார்கள். ரவி தான் பிறந்த மண்ணை, கிராமத்தை, ஆசிரியர் எவரையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. 

விழாவில் தன் கிராமம் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள், பழக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் வரவழைத்து மரியாதை செய்து இருந்தார். மூன்றிலும் வென்றவர். கடைசியாக நட்புலகத்தைப் பேணுவதில்லை. நமக்கென்ன? என்ற எண்ணம் இயல்பாக உருவாகி விடும். ஆனால் இதிலும் நேர்த்தியாக நட்புலகத்தை வடிமைத்த ரவி ஆச்சரியப்படக்கூடிய வகையில், பெருமைப் படத்தக்கவராக எனக்குத் தெரிகின்றார். 

மொத்தத்தில் ரவி அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டவர். லட்சத்தில் ஒருவருக்குத் தான் இது போன்ற வாழ்க்கை அமையும். நான் பார்த்த வரைக்கும் நடிகர் சிவகுமார் அவர்களுக்குப் பின் ஆச்சரியப்பட்ட மனிதர் ரவி என்றால் அது மிகையல்ல. 

ழுத்துலகத்தில் நாம் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் உண்மை என்று சொல்ல முடியாது. சில சமயம் சிலர் மட்டும் உண்மைக்கு அருகே சென்று முயற்சிப்பதுண்டு. ஆனால் ரவி தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை பேர்களும் உயிருடன் வந்திருந்து வாழ்த்தியது ஆச்சரியம் என்றால் அத்தனை பேர்களும் ரவி சொன்ன மாதிரியே இருந்தது அதைவிட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

விழாவின் கடைசி வரைக்கும் கூட்டம் கலையாமல் இருந்தது முதல் ஆச்சரியம். அதுவே விழா முடிந்து கடைசியில் கூட்டத்தினர் விழா நாயகன் நாயகிக்கு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அன்பு செலுத்த மொத்த கூட்டம் முண்டியடித்ததைப் பார்த்துக் கொண்டே நானும் கதிரும் அவசரமாக ரயில் நேரம் பார்த்து ஓடி வந்தோம். 

வி அரங்கத்தில் தனிப்பட்ட உரையாடலில் பேசும் போது இந்த விழாவை சிங்கப்பூரில் நடத்துவதாக இருந்தது என்ற எண்ணத்தைச் சொன்னார்.  ஆனால் காலம் என்பது மிகச் சரியாக யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதனை உணர்த்திவிடும். உங்களின் சரியான நேர்த்தியான, தெளிவான வாழ்க்கைக்கு இந்த விழா மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் ரவி,  

பிறந்த ஊரில், பழகிய மனிதர்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைப்பது என்பது தமிழ்நாட்டில் குதிரைக் கொம்புக்குச் சமமானது.  ஆனால் அது உங்களுக்கு இயல்பாக கிடைத்துள்ளது. என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரின் எண்ணமும் இதுவாகவே இருந்தது.



Friday, December 16, 2016

சசிகலா?


முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவுச் செய்தியைக் கேட்டதும் நம் பதிவில் இது குறித்து எழுதி வைத்து விடலாம் என்ற நோக்கத்தில் குறிப்புகளாக எழுதி வைத்தேன். விரிவாக எழுதும் எண்ணமே இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் சிவா, பகவான்ஜி, அமுதவன் போன்றவர்களால் விரிவான விளக்கமான என் மனதில் உள்ளதை, என் அரசியல் பார்வையை எழுத இவர்கள் தான் உதவி உள்ளார்கள். மூவருக்கும் என் நன்றி.

ஜெ. குறித்துக் கடைசிப் பதிவாக அவர் உடல்நிலைமை மற்றும் ஏன் 75 நாட்கள் அவஸ்தையில் கழிந்து இறந்தார் என்று நான் வாசித்த பத்திரிக்கைகளின் வாயிலாக உணர்ந்ததைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து இருந்தேன். 2016 ஆம் வருடத்தின் முடிவில் இருக்கின்றோம்.

சுருக்கமான பார்வையுடன் பார்த்து விடலாம்.

ஜெயலலிதா இயல்பாகவே ஆசை, கோபம், வெறுப்பு என மூன்றிலும் அதீத உணர்ச்சிகளுடன் வாழ்ந்தவர். வழிநடத்த ஆள் இல்லை. சுட்டிக்காட்டவும் அருகே எவரும் இல்லை. இவர் அனுமதிக்கவும் இல்லை.

2016 செப்டம்பர் 22ந் தேதி அப்போலோவில் சேர்க்கப்பட்டார். இதன் தொடக்கம் 2014 செப்டம்பர் 27 ஆம் பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் தொடங்கியது.

"நாம் விலைக்கு வாங்க முடியாத நபர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்" என்ற எதார்த்தத்தை நீதிபதி குன்ஹா அன்று மதியம் 3 மணிக்கு எழுதிய தீர்ப்பின் மூலம் ஜெ. வுக்குப் புரியவைத்தார். அதுவரையிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் உருவான மன அழுத்தங்கள் படிப்படியாகச் சிறுநீரகம், நுரையீரல் வரைக்கும் வந்தது. கடைசியாக இதயம் வரைக்கும் வந்து சேர்ந்தது.

அவருடைய அதிர்ஷ்டம் உயரத் தூக்கிக் கொண்டு சென்றது. ஆரோக்கியம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்றது. மனிதர்களின் இறப்பை மூன்று விதமாகச் சொல்கின்றார்கள்.

இயற்கை மரணம் (முதுமையின் காரணமாக இயற்கையோடு கலந்து விடுவது) 

அகால மரணம் (படுகொலை, கோரமாகச் செயற்கையாக உருவாக்கப்படுவது) 

துர்மரணம் (எப்படிச் செத்தார்? என்பதனை கண்டுபிடிக்கப்படாமல் மரணபிப்பது) 

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அதிர்ஷ்டம் வாரி அனைத்த ஜெ. வுக்கு மரணம் என்பது மூன்றாவது வகையில் அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் குப்பைத்தொட்டியில் கூட ஜெ. புகைப்படம் உள்ள சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுக்க ஒட்டப்பட்டது.

எல்லாவிதமான அநாகரிகங்களையும் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகம் செய்து அனுமதித்த ஜெ. இனி இல்லை. அதனால் என்ன?

நமக்கு மற்றொரு சின்ன அம்மா கிடைத்து விட்டார். அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் மறைக்கப்பட்டு எப்படிக் கலைஞர் புகழ் உருவாக்கப்பட்டதோ அதே போல இனி சசிகலா புகைப்படங்களைத் தமிழ்ச் சமூகம் பாரக்கக்கூடிய வாய்ப்பை இப்போது காலம் வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடந்து கொண்டிருந்த போது, ரசிக்கக்கூடியதாக, எரிச்சலடையக்கூடியதாக என்று எல்லாவிதங்களிலும் இருந்தன. அதனை இங்கே பதிவும் செய்துள்ளேன். 

அதற்குப் பிறகு தற்பொழுது தமிழகத்தின் சின்னம்மா சசிகலா (சின்ன அம்மா என்று தான் எழுத வேண்டும் என்று உத்தரவு கொடுத்துள்ளாராம்) சசிகலா புகைபடங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தற்போது மூலைமுடுக்கெல்லாம் ஒட்டப்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வாரமாக இது குறித்த செய்திகள் வலைத்தளமெங்கும் அணிவகுத்து வந்து கொண்டே இருக்கின்றது. ரசிக்கும்படி இருக்கும் படங்களைச் சேமித்துக் கொண்டே வந்தேன். காரணம் இப்போது தமிழ்நாடு புதிய பாதைக்குத் திரும்பியுள்ளது. முக்கியமான மாற்றம் இது. சசிகலா குறித்துச் சமயம் வரும் போது எழுதுகின்றேன். 

இந்த வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்கள் பார்வைக்கு. நான் ரசித்த படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன். 

15 ஆம் ஆண்டு நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாயக்கர் காலத்தில் ஒரு பிராமணக் குடும்பம் சார்ந்த நபர்கள் அடுத்தடுத்து மூன்று தலைமுறை அதிகார மையமாக இருந்தார்கள் என்று சுப. வீரபாண்டியன் பேசியுள்ள காணொலியின் வழியாகத் தெரியவந்த போது அது சார்ந்த தகவல்களைத் தேடிப்பிடித்துப் படித்துப் பார்த்தேன்.

மன்னர் ஆட்சி முதல் இன்றைய மக்கள் ஆட்சி வரைக்கும் வெகு ஜன மக்களுக்குத் தெரியாத அதிகார மையங்கள் என்பது எல்லா நாட்டின் அரசியலிலும் உண்டு. இன்று பன்னாட்டு நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் அதிகார மையங்களைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பது சர்வதேச அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும். 

ஆனால் காலம் காலமாக எந்த அதிகார மையமும் ஆட்சி அதிகாரத்தில் நேரிடையாகப் பங்கெடுத்துக் கொள்வதில்லை. முன்னால் வந்து முகம் காட்டுவதில்லை. இந்த முறை தமிழ்நாட்டில் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நல்வாழ்த்துகள் சசிகலா அவர்களே. மன்னிக்கவும் சின்னம்மா அவர்களே. ஏறக்குறைய 30 வருடங்கள் தமிழ்நாட்டின் அதிகாரவர்க்கத்தை நேரிடையாக மறைமுகமாகக் கைக்குள் வைத்திருந்த உங்களை வரவேற்கின்றேன்.

ஜெ. வை விட அதிக அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்.  அடுத்த நாலரை வருட ஆட்சிப் பொறுப்பு என்பதனை தங்கத்தாம்பளத்தில் ஜெ. அவர்கள் உங்களுக்கு கொடுத்து விட்டு சென்று விட்டார். 

மொத்த (அரசியல்) தமிழ்நாட்டின் சூத்திரதாரி. உங்களுக்கு எதனையும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அரசியலில் உள்ள அனைத்து ராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்.

ஜெ. மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உள்ள முக்கிய அதிகாரிகளைத் தொடக்கம் முதலே திட்டமிட்டு உருவாக்கியவர். இன்று குறிப்பிட்ட சமூகம் சார்ந்த மக்கள் காவல் துறை முதல் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி நிற்பதற்கும் நீங்களும் உங்கள் கணவருமே முக்கியக் காரணம் என்பதனை விபரம் புரிந்த அத்தனை பேர்களுமே அறிந்தே வைத்திருப்பார்கள். ஒவ்வொரு படியாக நகர்ந்து வந்து இலக்கை அடைந்து இருக்கும் சசிகலா தமிழ்நாட்டின் அரசியலில் சாதிக்கப் போவது என்ன? 

ஜெ. வை வைத்து உங்களைத் தூற்றுகின்றார்கள். உங்களுக்கும் வாரிசு இல்லை. நீங்களும் காலத்தின் கடைசி வாய்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இனி பணம் தேவையிருக்காது. புகழ் மட்டும் தான் தேவை. காலம் உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு வழங்கியுள்ளது. ஊர் உலகமே உங்களை, உங்கள் குடும்பம் சார்ந்த உறவினர்களைப் பார்த்து பயந்து நடுங்குகின்றார்கள். சாதிக்கப்பிறந்த பெண்மணியா? இல்லை உங்கள் தோழி சென்ற பாதையில் பயணிக்கப் போகின்றீர்களா?

இந்த சமயத்தில் ராகுல் மற்றும் ஸ்டாலின் அவர்களின் நிலைமையை நினைக்கத் தோன்றுகின்றது?





















தொடர்புடைய பதிவுகள்


வரலாறு முக்கியம் அமைச்சரே (அரசியல் மின் நூல்)

ஜெ. ஜெ. சில குறிப்புகள்

அரசியல் (கோர) முகம்


அரசியல் (கோர) முகம் 2


அரசியல் (கோர முகம்) 3




Tuesday, December 13, 2016

அரசியல் (கோர) முகம் 3


இத்தனை விரிவாக அலசி ஆராயும்போது உங்களுக்குச் செம்பரம்பாக்கம் ஏரித்திறப்பு நினைவு வரவில்லை என்பது ஆச்சரியம்தான். 

Amudhavan 

சென்ற வருடம் (2015) டிசம்பரில் நடந்த "செம்பரம்பாக்கம் பேரழிவு" என்பது பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நீக்கவே முடியாத சோகமாக வாழ்க்கை முழுக்க இருக்கும். வாழ்ந்தே ஆக வேண்டிய அடித்தட்டு மக்கள் ஒரு பக்கம். அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்த நடுத்தர வர்க்கம் மறுபக்கம். இழப்பு ஐந்து லட்சம் முதல் அதிகபட்சம் பல கோடிகள். நபர்கள் பொறுத்து நிறுவனங்கள் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும் சோகக்கதை இது.

சேதாரமான அரசு சொத்துக்கள், இறந்து போனவர்கள், இழந்து போனவர்கள் என்று பட்டியலிட்டால் பல மைல் நீளம் கொண்ட சமாச்சாரத்தை எந்த எழுத்துக்களாலும் எழுதிவிட முடியாது. அமுதவன் அவர்களின் கேள்வியை விமர்சனத்தில் படித்த போது அடுத்த நொடி எனக்குப் பல நினைவுகள் வந்து போனது.

2015 வருடம் நவம்பரில் சென்னையில் சில இடங்களில் மட்டும் வெள்ளம் புகுந்தது. சென்னை முழுக்கப் பரவவில்லை. அந்தச் சமயத்தில் நானும் சென்னையில் இருந்தேன். ஜாபர்கான் பேட்டையில் ஆசான் வீட்டில் தான் தங்கியிருந்தேன். கீழ்த் தளம், முதல் தளம் மற்றும் மொட்டை மாடி என்று குறுகிய இடத்தில் அழகாக அந்த வீட்டை ஆசான் கட்டியிருந்தார்.

நான் திருப்பூரில் இருந்து கிளம்பும் போதே தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்து வீட்டினர் எச்சரித்த போதும் கூட அதனை நான் பொருட்படுத்தவில்லை. நான் எப்பேர்ப்பட்ட துயரத்தில் மாட்டிக் கொள்ளப் போகின்றேன் என்பதனை அப்போது என்னால் உணர முடியவில்லை.

நான் சென்னை சென்று சேர்ந்த போது வெயில் தெரிய மனதிற்குள் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் மறுநாள் மழை பெய்யத் தொடங்கியது. மழை நின்றபாடில்லை. இரண்டாவது நாள் மொத்த மழையுடன் அருகே இருந்த கூவம் ஆற்றின் நீர் எல்லை தாண்டி உள்ளே வரத் தொடங்கியது.

ஜாபர்கான்பேட்டை என்பது கூவம் ஆற்றை கொத்துக்கறியாக்கி உருவாக்கப்பட்ட இடம். மொத்தமாகப் பள்ளத்தில் உள்ள பகுதி ஜாபர்கான் பேட்டை. இரண்டு பக்கமும் மேடு. நடுவே குழி என்பது உள்ள இந்தப் பகுதியின் மொத்த ஆபத்தையும் அப்போது தான் என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. கூவம் ஆற்றின் தண்ணீரும் நேரம் செல்லச் செல்ல அதிகமாக வீட்டுப்பகுதிகளுக்குள் வரத் தொடங்கியது.

ஆசான் வீடு சாலையில் இருந்து ஐந்தடிகள் உயரமாக உள்ள வீடு. இரவுக்குள் வீட்டின் பாதி அளவு உள்ளே நீர் ஏறத் தொடங்கியது. பகல் நேரத்திலே கீழே இருந்த முக்கியமான பொருட்களை மாடிப் பகுதிக்கு எடுத்து வந்த போதிலும் கூட அனைத்துப் பொருட்களையும் எங்களால் மேலே கொண்டு வர முடியவில்லை.

பெரிய அளவுக்குப் பிரச்சனை உருவாகப் போகின்றது என்பதனை புரிந்து கொண்டு அமைதியாக மொட்டை மாடியில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த தடுப்புச் சுவர்களை உடைத்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு ஆற்றின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

மின்சாரம் இல்லாத காரணத்தால் அலைபேசியை நிறுத்தி வைத்து விட்டேன். வீட்டில் அழைத்துச் சொல்லிவிட்டேன். மாலையில் எடுத்த சாட்சிப் புகைப்படத்துடன் தூங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்த போது சந்து முழுக்க ஏழு அடி உயரத்துக்குத் தண்ணீர். ஒவ்வொரு வீட்டின் கீழ்ப்பகுதி முழுக்க முழுகியிருந்தது.

ஆசான் வீட்டின் கீழ்ப்பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை. கையில் இருந்த ரொட்டி, அரிசியை வைத்துக் கொண்டு அடுத்த இரண்டு நாள் சமாளித்தோம். இயற்கை உபாதைகளையும் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் விலை மதிக்க முடியாததாக இருந்தது. பல் விளக்கக் கழிப்பறைக்கு வைத்திருந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை.

மொத்த பொருட்களை மேலே கொண்டு வந்த காரணத்தால் எந்தப் பொருள் எங்கே இருக்கின்றது? என்பதனைக் கூடக் கண்டு கொள்ள முடியாமல் மானத்தை மறைக்க ஒரு துணி என்பதாகத்தான் வாழவேண்டியிருந்தது. ஆனால் அரசு சார்ந்த அதிகாரிகளோ, வார்டு உறுப்பினர் என்று ஒரு நபர் கூட அந்தப் பகுதியில் எட்டிப் பார்க்கவே இல்லை. பிரச்சனை அதிகமாக ரப்பர் டயர் படகு மூலம் குறிப்பிட்ட வீடுகளில் உள்ள பெரியவர்களை அழைத்துச் சென்றார்கள்.

தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல், அடிப்படைத் தேவைகளுக்கு அவஸ்தைப் பட்டுக் கழிந்த நான்கு நாட்களில் நான் உணர்ந்த ஒன்று சென்னையில் நிர்வாகம் என்பது ஒன்று இல்லவே இல்லை என்பதே.

தமிழ்நாட்டின் தலைநகரம். அதி முக்கியமான சென்னை நகரத்திலே அரசு நிர்வாகம் என்பதே இல்லை என்ற போது சூழ்நிலையின் விபரீதத்தை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது, சென்னையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நடந்த சேதங்களைப் போர்க்கால நடவடிக்கை எடுக்க முடியாத அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பது சென்னையில் உள்ள 1.5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாதிப்பு குறித்து ஏராளமான செய்திகள், கவலைகள், காட்சிகள், சேதாரங்கள், கண்ணீர், இழப்புகள் என்று திகட்ட திகட்ட ஒவ்வொரு செய்தி ஊடகமும் மக்களிடம் கொண்டு வந்து சேர்ந்த போதிலும் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் தெளிவான பார்வையோடு இருந்தார்கள். யாரும் ஜெயலலிதாவைக் கேள்வி கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், காட்சி ஊடகங்கள் என்று யாருமே போயஸ் கார்டன் பக்கம் சென்று எந்தக் கேள்வியையும் எழுப்பத் தயாராக இல்லை.

வெள்ள சேதாரங்களைப் பார்வையிட பிரதமர் மோடி மாலை 4.15 மணிக்கு வருகின்றார் என்ற செய்தி வந்ததும் ஜெயலலிதா 12 மணிக்குச் சேதாரங்களைப் பார்வையிட ஹெலிகாப்டர் வழியாகச் சென்றார். ஒரு வேளை மோடி வராமல் இருந்திருந்தால் இவர் சென்று இருக்க மாட்டார்.

ஒரு ஆறுதல் அறிக்கை இல்லை. செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இல்லை. அதிகாரிகளின் கூட்டம் இல்லை. பிற துறைகளுடன் கூடிய ஒருங்கிணைப்பு என்பதை உருவாக்கவும் இல்லை. இதை விட மற்றொரு கோரமான கொடுமையான விசயம் என்னவென்றால் மாநகராட்சி நிர்வாகத்தை முடங்க வைத்த பெருமை ஜெ. வையே சாரும். மேயர் சைதை துரைசாமியை எவருடனும் பேசக்கூடாது என்று முடக்கிப் போட்ட சமாச்சாரம். அவரை ஊடகங்கள் துரத்திக் கொண்டே இருக்க அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தான் கவனமாக இருந்தார்கள். மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் முக்கியப் பிரபலங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு மாதிரியாகவும் மற்ற இடங்களும் ஒரு மாதிரியாகவும் இருந்தது. மாநகராட்சி செயல்பாடுகள் விலைபோகத் தொடங்கியது. பணம் இருப்பவர்கள் மாநகராட்சி சேவையைப் பயன்படுத்த தொடங்கினர்.

கடைசி வரைக்கும் அரசாங்கம் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது என்பதைவிட. தனிப்பட்ட முறையில் செயல்பட நினைத்தவர்களையும் முடங்கிப் போகுமளவிற்கு கோர அரக்கர்களைப் போல ஒவ்வொரு அதிமுகவினரும் செயல்பட்டனர் என்பது வரலாற்றுப் பதிவாக இன்றும் பலரின் மனதில் உள்ளது.  ஆனால் இத்தனை கொடுமை மிகுந்த அரசு கொடுத்த நஷ்டஈடு 5000 ரூபாயை வாங்க முண்டியடித்துக் கொண்டு சென்ற மக்கள் அத்தனை பேர்களும் ஜெ. வை எப்போது போல மன்னித்து விட்டார்கள் என்பது தான் மொத்தத்திலும் தமிழகத்தின் எதார்த்த நிலைமை.

இப்போது நான் பேசப் போவது நடந்து முடிந்த பேரழிவு குறித்தல்ல. ஒரு நிர்வாகி, அதுவும் முதன்மை நிர்வாகி எப்படிச் செயலாற்ற வேண்டும்? நெருக்கடியான சமயத்தில் எப்படிச் செயலாற்றி இருக்க வேண்டும்? ஏன் செயல்படவில்லை? அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?

இவற்றைப் பற்றி நாம் பேச வேண்டுமென்றால் முதலில் ஜெ. குறித்த சில விசயங்களைப் பற்றி மீண்டும் கழுகுப் பார்வை பார்க்க வேண்டும். அவரின் உளவியல் குறித்து நாம் பேச வேண்டும்.

அதன் பிறகு தான் அவர் உண்மையிலேயே முதலமைச்சர் பதவிக்குத் தகுதியான நபரா? இல்லை ஊடகங்களைக் கையில் வைத்துக் கொண்டு அல்லது மிரட்டிப் பணிய வைத்து தன் போலி பிம்பத்தை மக்கள் மனதில் நம்ப வைத்தாரா? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஒரு மாநிலத்தின் முதன்மை நிர்வாகி என்பதற்கு அடையாளம் என்ன? என்பதனை ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்த்து விடுவோம்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாத வட கிழக்கு மாநிலங்களே இல்லை எனலாம். அஸ்ஸாம் முதல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பின்னாலும் ஒரு சோகம் உண்டு. அது வருடந்தோறும் அனுபவித்தே ஆக வேண்டிய சோகம். ஒரு முறை ஒரிஸ்ஸாவில் மிகப் பெரிய இயற்கை பேரிடர் உருவாகப் போகின்றது என்ற தகவலின் அடிப்படையில் (மட்டுமே) முதல்வர் பிஜு பட்நாயக் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த சில லட்ச மக்களை அப்படியே (கால்நடைகளும் சேர்த்து) வேறு பகுதிக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்றார். ஆனால் கிடைத்த தகவலின்படி பேரிடர் ஒன்றும் தாக்கிவிடவில்லை. ஆனால் தெளிவான திட்டமிடுதல். அழகான முன்னேற்பாடு. அந்தச் சமயம் ஐ.நா. சபை இதற்கு அங்கீகாரம் கொடுத்து பாராட்டியதைப் பத்திரிக்கையில் படித்துப் பலரும் தெரிந்து இருக்கக்கூடும்.

ஆனால் தமிழ்நாட்டில்?

நாம் அவசரப்பட்டுச் செம்பரம்பாக்கம் பேரழிவு சமயத்தில் அப்போது நடந்து இருக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்துப் பேசப் போவதில்லை? நடந்து முடிந்தது மிகப் பெரிய கோரம் என்று தெரிய வந்தும் கூட இனிமேலாவது அரசு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்? என்பது கூடச் செய்யாமல் ஒரு மாநில நிர்வாகமே முடங்கிப் போனது.

ஜெ. ஆட்சிக்கு வந்தது முதல் மாநிலத்திற்குத் தேவைப்படுகின்ற தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமே நடக்கவில்லை என்று விபரம் தெரிந்த அத்தனை பேர்களுக்கும் தெரியும். ஆனால் எவரும் வாய் திறக்க விரும்பவில்லை. காரணம் ஜெ. விற்கு ஒருவர் ஆகாது என்றால் என்ன செய்வார்? எந்த அளவுக்குக் கீழே இறங்கிச் செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த காரணத்தால் நமக்கேன் வம்பு? என்கிற ரீதியில் தான் எல்லாத்தரப்பும் அமைதி காக்கத் தொடங்கினார்கள்.

ஜெ. ஆட்சியில் அவரின் நிர்வாகத்திறமை உருவாக்கிய சிறப்புகளில் ஒன்று. ஒருவரின் பலவீனம் என்ன? அவரின் விலை என்ன? இல்லாவிட்டால் போட்டுத் தாக்கு. முதல் தாக்குச் சட்டம் வழியே. இரண்டாவது தாக உயிர் பயம். இதில் இவருக்குச் சவால் விடுத்த ஒரே நபர் சுப்ரமணியசுவாமி மட்டுமே. அவர் மட்டும் கடைசி வரைக்கும் தப்பிப் பிழைத்தார்.

இவையெல்லாம் ஜெ. தன் பதவியைக் கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொள்ள முக்கியக் காரணமாக இருந்தது.  சட்டங்கள் என்பது வெறும் காகிதமாக மாறிப் போனது. மக்களுக்கு இலவசம்.  தேர்தல் சமயத்தில் பணம். மதுக்கடைகள் மூலம் ஆண்களுக்கு சொர்க்கம்.  இவையெல்லாம் நம் முன்னால் முதல்வரின் திறமைகள்?

ஒரு பிரதமர் அல்லது ஒரு மாநில முதல்வர் அதிகாலையில் உளவுத்துறை தலைவர்களைச் சந்திப்பது தொடங்கிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் சார்ந்து விவாதிப்பது முதல் காலை அலுவலகம் செல்வதற்குள் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

தனது பதவிக்காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற நிலைமைக்கு தன் உடல் நலனைப் பேணிய பெருமையும் இவருக்குண்டு.  ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் போல இரண்டு இடங்களில் ஆட்சி நடத்திய பெருமையும் ஜெ. வுக்கு உண்டு.இவரின் நிர்வாக விதிகள் மற்ற முதல் அமைச்சர்களுக்கும் முன் மாதிரியானது.

இவரின் நிர்வாக விதிகள் மற்ற முதல் அமைச்சர்களுக்கும் முன் மாதிரியானது.

முதல் வட்டம், இரண்டாவது வட்டம், மூன்றாவது வட்டம் என்று வட்டம் வட்டமாக அதிகாரவர்க்கத்தைப் பிரித்து வைத்திருந்தார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே சந்திக்க முடியும்? அதுவும் எப்போது சந்திப்பார் என்று யாருக்குமே தெரியாது? என்ன கேட்பார் என்றும் தெரியாது? எது குறித்துப் பேசப் போகின்றோம் என்று தெரியாமல் போயஸ் தோட்டத்திற்குச் சென்று காத்திருந்து சந்திக்காமல் வந்தவர்கள் பல பேர்கள்.

கட்சி என்ற பெயரில் கொள்ளைக்கூட்டத்தை இவர் தான் உருவாக்கினார். வளர்த்தார். ஆதரித்தார். கணக்கு வழக்குகளைக் கண் கொத்திப் பாம்பாய் கவனித்தார். வசூலிக்கும் அதிகாரத்தை அமைச்சர்களுக்குக் கொடுத்த பின்பு அதனையும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வைத்தார்.

நடைமுறை திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் என்பது பற்றி அவர் கவலைப்பட்டதும் இல்லை. அப்போதைக்கு என்ன தேவை? வலி நிவாரணி மாத்திரை போலத்தான் நிர்வாகத்தை கவனித்தார். முடியாவிட்டால் இருக்கவே இருக்கு காவல் துறை.  ஏவல்துறையாக மாற்றி ஏவி விட்டால் பிரச்சனை அப்போதைக்கு முடிவுக்கு வந்து விடும். அப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் நீர்த்துப் போக வைத்தார்.

ஜெ வின் நிர்வாகத்தில் எப்போதும் எல்லாவற்றிலும் உடனடி அறுவடை முக்கியம். விலைவாசி உயர்வு பற்றி மக்கள் கவலைப்பட்டார்களே இல்லையோ இவர் 40 சதவிகிதம் என்று கவலைப்பட்டு ஏற்றினார். அதுவும் முன்பணம். அதைப் பற்றி பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. அவர் விருப்பத்தை நிறைவேற்றத் தெரிந்தவர்கள் அதிகாரியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற புதிய கோட்பாட்டின் காரணமாக அரசுத் துறையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சூறையாடப்பட்டது. பங்கு பிரிக்கப்பட்ட பங்களாளிகள் பலரும் அமைச்சர் என்ற பெயரில் வலம் வந்தனர்.

எம்.ஜி.ஆர் கூடச் சாராய அனுமதி கொடுத்து அதன் மூலம் வந்த பணத்தைத் தன் வீட்டில் எப்படி வைத்திருந்தார் போன்ற பல கதைகளை நாம் கேட்டிருப்போம். அதனை நல்லவிதங்களுக்கும் பயன்படுத்தினார். ஆனால் ஊழலை அடிமட்டம் வரைக்கும் பரவ விடவில்லை. பயத்தை உருவாக்கி வைத்திருந்தார். எவரும் படபடப்புடன் அவரிடம் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் அவரைச் சந்திக்க வாய்ப்பு உருவாக்கி வைத்திருந்தார்.

அவர் அமைச்சரவையில் இருந்த எவரும் யோக்கியமானவர்கள் அல்ல. ஆனால் அமைச்சர்கள் என்பவர்கள் அவர்கள் பணியைச் செய்ய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். கலைஞரும் அப்படித்தான் நிர்வாகத்தை நடத்தினார்.

ஜெ. கடைசி வரையிலும் மக்களை தீண்டத்தகாதவர்கள் போலக் கருதினார். இன்று சசிகலா அவர் தினமும் விரும்பிக்குளிக்கும் நறுமணம் கலந்த பன்னீர் மூலம் பிணத்தை குளிப்பாட்டி அலங்கரித்தார் என்று ஊடகங்கள் எழுதுகின்றதே? இந்த வரிகள் உண்மையோ பொய்யோ? ஆனால் நிச்சயம் அவர் இப்படிப்பட்ட வாழ்க்கை தான் வாழ்ந்திருக்க முடியும்?

எம்.ஜி.ஆரும் சரி கலைஞரும் சரி இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.

பசி, வறுமை, ஏழ்மை போன்ற வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் உள்வாங்கி உணர்ந்து வாழ்ந்தவர்கள். இவர்கள் செய்த தவறுகள் எதுவாக இருந்தாலும் அதில் தர்மநியாயங்கள் சிறிதளவாவது இருந்தன.

என்ன சொல்வாரோ? எப்படி அவரிடம் கொண்டு செல்வது? யார் சொல்வது? நாம் அவசரப்பட்டுச் செய்தால் நம் பதவி போய்விடுமோ? என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஒரு பக்கம். நாம் இதனைப் பேசலாமா? பேசக்கூடாதா? நிமிர்ந்து பார்த்தால் கூட தன் பதவி போய்விடுமோ? என்று தெரியாமல் திகைத்த அமைச்சர் கூட்டம் மறுபக்கம். இதன் காரணமாகத்தான் கிடைத்தவரைக்கும் லாபம் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் என இரண்டு பேர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு சுருட்டத் தொடங்கினார்கள். இது தான் அவர் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் அப்போல்லோவில் மூளைச் சாவில் கிடத்தப்பட்டு கிடந்த வாழ்க்கை வரைக்கும் இருந்தது.

அவர் பெண் என்ற போதிலும் ஆண்கள் உலகமான அரசியல் உலகத்தில் போராடித்தான் தான் அதிமுக வின் தலைமைப் பதவிக்கு வந்தார் என்று ஒவ்வொருவரும் இன்று வரையிலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அது தான் உண்மை என்று நம்புகின்றார்கள். அது உண்மையா? எப்படிப்பட்ட போராட்டம்? அதன் மூலம் அவர் என்ன கற்றுக் கொண்டார் ?

எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன் புகழுக்கு தான் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு யாரோ ஒருவர் பங்கம் விளைவிக்கப் போகின்றார் என்றால் அதனை என்ன விலை கொடுத்தாலும் தடுத்து விடுவார். எந்த நிலைக்கு வேண்டுமானாலும் இறங்கி நின்று காரியம் சாதித்து விடுவார். ஆனால் இது அத்தனையும் மேல்மட்ட நிலையில் நடக்கக்கூடியது. ஜெ. அரசியலுக்கு வந்தது கூட ஒரு மிரட்டல் மூலம் தான் என்பதனை எத்தனைப் பேர்கள் அறிந்து இருப்பார்கள்?

1982 ஆம் ஆண்டு.

1948 ஆண்டு பிறந்த ஜெ. வின் வயது 34. திரைப்பட உலகத்தில் நடிகையின் வாழ்க்கை என்பது மின் மினி பூச்சி போன்றது தானே. பொதுவாகச் சொல்லப்படும் அவர் நடித்த போதே வசதியாக இருந்தார் என்பது உண்மையல்ல. அவர் 1980 ஆண்டுக் காலகட்டத்தில் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்ட காலம். தனியாக நடனப்பயிற்சி வகுப்பு நடத்த அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடிகர் சோபன்பாபுவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது இது குறித்து ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த போது தான் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதப் போகின்றேன் என்ற வெடிகுண்டு ஒன்றை வீசினார்.

அப்புறமென்ன?

1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஜெ வை அதிமுக வில் உறுப்பினராகச் சேர்த்தார். அடுத்த ஆண்டே அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளர். 1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர். அதே ஆண்டுச் சத்துணவு திட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் என்ற அரசுப்பதவி. முதல் 24 மாதங்களில் ஜெ. எவரும் தொட முடியாத உச்சத்தைத் தொட வைத்தவர் எம்.ஜி.ஆர். நிச்சயம் அடிப்படையான பணம் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும்.

ஒருவருக்கும் அதிர்ஷ்டம் தனது கதவுகளைத் திறக்கப் போகின்றது என்றால் மற்றொருவருக்கு வீழ்ச்சி தொடங்கப் போகின்றது என்று அர்த்தம். இது இயற்கை விதி.

1984 ஆம் எம்.ஜி.ஆர் உடம்பு பாதிக்கப்பட்டுக் காட்சிகள் மாறத் தொடங்கியது. இருந்தபோதிலும் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே ஆண்டிப் பட்டியில் எம்.ஜி.ஆர் வெல்ல ஜெ. மனதில் நினைத்து வைத்திருந்த எதுவும் நடந்தபாடில்லை. ஒரு பக்கம் இவருக்கு ஆர்.எம்.வீரப்பன் உன்னை வளர விட்டு விடுவேனா? என்று முட்டுக்கட்டைப் போட மறுபக்கம் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு போன்றோர் ஆதரவுக்கரம் நீட்டினாலும் அவர் நினைத்த கனவு பூர்த்தியாகவில்லை. காரணம் 1985 பிப்ரவரி 10ந் தேதி முதல்வர் பணியை மீண்டும் எம்..ஜி.ஆர். ஏற்றுக் கொள்கின்றார். மேலே ராஜீவ் காந்தி.

அப்போது எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்த ராஜிவ் காந்தியைச் சந்திக்க ஜெ. சென்றார். அப்போது புலனாய்வு பத்திரிக்கைகள் "பலவிதமாக" எழுதியது.

இனி பூதத்தைப் பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று கட்சியை விட்டு ஜெ. வை நீக்கி எவரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எம்.ஜி.ஆர் வாய்மொழியாக உத்திரவு இட்ட போதிலும் ஜெ. வின் செல்வாக்கு, சாமர்த்தியம் சகல இடங்களிலும் வியாபித்து இருக்க நிலைமை கைமீறிவிட்டது. 1987 ஆம் எம்.ஜி.ஆர் இயற்கை எய்த அதற்குப் பிறகு நடந்த சம்பங்கள் ஒவ்வொன்றும் ஜெ. விறகு சாதகமாக மாறத் தொடங்கியது.

கட்சியின் உள்ளே நுழைந்த முதல் ஐந்து வருடங்களுக்குள் முதல் அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். மக்கள் செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆரை நீயா? நானா? என்று போட்டு போராடிப்பார்த்தவர். தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆரின் தாக்கத்தைப் புரிந்த அமரர் ராஜீவ் காந்தி ஜெ. வின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத போதும் அவர் இறந்து இவரின் முதல் அமைச்சர் கனவை நனவாக்கிவிட்டுச் சென்றார்.

ஜெ. மிகக் குறுகிய காலத்திற்குள் உழைப்பின்றி தான் நினைத்ததை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடக்கம் முதலே இருந்தார்.

அவருக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லை என்பது வெறுமனே பம்மாத்து. எம்.ஜி.ஆர் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அரசு பதவிகள் மூலம் எதையும் சாதிக்கவில்லை என்பதோடு எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. அவர் நோக்கமெல்லாம் முதல் அமைச்சர் என்ற கனவு நிலையிலேயே நகர்ந்து வந்தார். பதவி கைக்கு வந்ததும் எம்.ஜி.ஆரை மறைத்து இன்று அம்மாவாகி காலத்தோடு கரைந்து போய்விட்டார்.

எனக்கேது வாரிசு? என்று உருக்கமாக கேட்டவருக்கு ஏன் இத்தனை கோடி? என்று எவரும் கேட்கமுடியாத என்ற தைரியத்தில்  தேடித்தேடி சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் இன்று யார் யாரோ பங்கு பிரிக்கப்போகும் சூழ்நிலையில் உள்ளது.

முதல் முறை பதவிக்கு வருவதற்கு முன்பு நடந்த பல காட்சிகள் அனைத்தும் அவரே உருவாக்கியது. சட்டமன்றத்தில் தலைவிரி கோலமாக என்னைப் பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்தில் "திமுக அமைச்சர்கள் மானபங்கம் செய்ய முற்பட்டார்கள்" என்றுப் பத்திரிக்கையில் முழுப்பக்க அளவிற்கு வந்தாரே? நினைவில் இருக்கின்றதா?

முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் செய்ய வாசித்துக் கொண்டிருந்த போது போய்ப் பிடுங்கினால் என்ன நடக்கும்? திமுகவில் இருப்பவர்களைப் பற்றிச் சாதாரணமாகவே சொல்லத் தேவையில்லை? அன்று சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களும் திருநாவுக்கரசரும் இல்லாவிட்டால் அவர் உடம்பு கந்தலாகிப் போயிருக்கும்.

இது அவருக்கு மக்கள் மனதில் அனுதாபத்தை உருவாகக் காரணமாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள திமுக எதிர்ப்பாளர்கள் நேரிடையாக மறைமுகமாக இவருக்கு உதவத் தொடங்கினார்கள். அப்போது முதல் "தான் செய்வது தான் சரி?" என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. அது தவறான வழி என்றாலும் கூட.

மற்ற துறைகளை விட அரசியலில் இலக்கை அடைய வேண்டும் என்றால் இழப்புகள் குறித்துக் கவலையே படக்கூடாது. போர் நடக்கும் போது மீறப்படும் விதிமீறல்கள் அனைத்தும் ராஜதந்திரம் என்று போற்றப்படும். வியாபாரத்தில் செய்யப்படும் பகல் கொள்ளை அனைத்தும் வெற்றிக்கதைக்கான அஸ்திவாரமாக மாற்றப்படும். வளர்த்தவர்களை அழித்து விடு. வளரும் போதும் எதையும் எவரையும் கண்டு கொள்ளாதே.. ஜெ வும் அதே தான் செய்தார். கலைஞரும் அதே தான் செய்தார்.

தவறில்லை.
இன்றைய சூழ்நிலையில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவிகிதம்

ஆனால் மக்கள் செல்வாக்கு ஒன்று வேண்டுமே? மறுபடியும் அவர்கள் முன்னால் போய் நிற்க வேண்டுமே? போடப் போகும் ஓட்டு வாயிலாக காறித்துப்பி விடுவார்களே?

கடைசி வரைக்கும் இருவருமே அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது தன் புகழுரைகளை கவனிக்க அதிகம் நேரம் செலவளித்தார். டெல்லியில் மகளுக்காக மொத்த தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்க விட்டார். இலங்கைப் பிரச்சனையில் வாழ்நாள் முழுக்க தான் சம்பாரித்த புகழை இழந்தார். வாழும் காலம் வரைக்கும் டெல்லி தயவில் தான் வாழ்ந்தாக வேண்டும் சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இவரோ புகழ் என்பதே எனக்கு மட்டுமே? என்பதாக ஒவ்வொன்றையும் மாற்றினார். சந்திக்கும் ஒவ்வொருவரையும் விலைப்பட்டியலாக மாற்றினார். குறுக்கு வழிகள் மட்டுமே உயர்வைத்தரும் என்று தான் நம்பியதோடு தமிழக மக்களையும் நம்ப வைத்தார்.  அறம் என்ற வார்த்தையை அகராதியில் இல்லாத அளவிற்கு அனைத்து வேலைகளையும் செய்தார். குற்றவுணர்ச்சியே இல்லாமல் சுக வாழ்க்கை வாழ்ந்தார்.

இவருக்கு இறந்த பின் தூற்றுகின்றார்கள். அவருக்கு வாழும் போதே செய்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள மற்ற வட மாநிலங்களை ஒப்பிட்டு நம் தமிழகம் வளர்ந்துள்ளது தானே என்று சிலாகித்துப் பேசுகின்றார்கள்.  ஆனால் இன்னமும் வளர்ந்து இருக்க வேண்டிய தமிழகம் 25 ஆண்டுகள் பின்னால் போய் நிற்கின்றது.

வரலாறு முக்கியம் அமைச்சரே (மின் நூல்)

ஜெ ஜெ  சில குறிப்புகள் 

அரசியல் (கோர ) முகம் 1 

அரசியல் (கோர) முகம் 2