Friday, August 31, 2012

மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள்.


ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுதல் என்பது எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை. அது அவரவர் மகிழ்ச்சி அல்லது விருப்பம் என்பதாக எடுத்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் வேறொரு மதத்திற்கு மாற்றும் போது என்னவெல்லாம் சொல்லி மாற்றுகின்றார்கள் என்பது தான் கொடுமையாக கொடூரமாக தெரிகின்றது. 

தீவிரவாதத்திற்கு மூளைச்சலவை செய்து உருவாக்குகிறார்கள் என்பதைப் போலத் தான் தற்போது தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுருக்கின்றது. இங்கே தற்போது நடந்து கொண்டுருக்கும் மதமாற்றங்கள் ஒரு முடிவில்லா குழப்பத்திற்கே கொண்டு சென்று விடுமோ? என்று தோன்றுகின்றது. இன்று அதிக அளவில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டுருக்கிறார்கள். கடைசி புகலிடம் என்பதாக மக்களும் நம்புகிறார்கள்.

ஒவ்வொரு நகர்புறத்திலும் நடந்து கொண்டுருந்த மதமாற்ற நிகழ்ச்சிகள் இன்று புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டது.  காரணம் உருவாகும் பிரச்சனைகள் அதிக அளவில் இருப்பதால் ஆட்சியாளர்களும் இந்த கூத்துக்களை கண்டு கொள்ள விரும்புவதில்லை.  மதத்தை தொட்டால் மட்டுமல்ல பேசினாலே ஷாக் அடிக்கும் விசயமல்லவா? அதற்கு மேலும் கேட்டாலும் இருக்கவே இருக்கு தனிநபர் சுதந்திரம் என்று வாயை அடைத்து விடுவார்கள். 

ஆனால் மதம் மாறும் பெரும்பான்மையோர் அததனை பேர்களும் பொருளாதார ரீதியில் விளிம்புநிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.  இவர்களுக்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகள், வழங்கப்படும் உதவிகள் தான் இந்த மதமாற்றத்தை விரைவு படுத்துகின்றது. தங்களின் அத்தனை பிரச்சனைகளும் கர்த்தர் காத்தருள்வார் என்று செல்பவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றதா? 

இந்து மதத்தில் இருக்கும் சாதீயத்தால் நாங்கள் மதம் மாறுகின்றோம் என்று கடநத இரண்டு நூற்றாண்டுகளாக இஸ்லாம், கிறிஸ்துவம் வளர்ந்தது.  ஒரு ஊரே மாறும் போது அதன் தாக்கம் என்பது வேறு.  ஒரு தனிப்பட்ட மனிதர்கள் அதுவும் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பவர்கள் மாறும் போது உருவாகும் பிரச்சனைகள் என்பது வேறு.  சுற்றிலும் உள்ள உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டு, எதிர்ப்புகளை மீறி காதலித்து கரை சேர முடியாதவர்களைப் போல பலரின் வாழ்க்கையும் அல்லாடிப் போய்விடுகின்றது.

திருப்பூர், கோவை, மாவட்டங்க்ளில் கடந்த நாலைந்து வருடங்களாக இருந்த இது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகம் இல்லை.  காரணம் மதமாற்றிகளின் முக்கிய குறிக்கோளான பொருளாதாரம் சார்ந்த பங்களிப்புகள் இங்கே அந்த அளவுக்கு செல்லுபடியாவதில்லை. 


கிடைத்த வரை லாபம் என்பதாக மாற்றியவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தினரை சேர்த்துக் கொண்டுருக்கிறார்கள்.  சேர்ந்தவர்களிடம் வசூலிக்கும் தொகையை வைத்துக் கொண்டு இப்போது வழிபாட்டு தலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.  வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ஒருபக்கம்.  வசூலிக்கும் நிதி மறுபக்கம்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  இதற்கு மேலும் வசூலிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த மதத்தில் கிடைக்கும் அங்கீகாரம் என்பது கடைசியில் அரசியல் தரகராக மாறும் அளவுக்கு கொண்டு போய் சேர்க்கின்றது.  அப்படிச் சென்றவர்கள் தான் இன்றைய மதமார்களும், குருமார்களும், சாமியார்களும்.

திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் உள்ள தனிநபர்கள் தொடங்கிய ஒரு சிறிய ஜெபகூடம் இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி செலவு செய்து கட்டும் அளவுக்கு பிரம்மாண்ட அளவுக்கு வளர்ந்துள்ளது. சுற்றியுள்ள பொட்டல்காடுகளை மிக குறைந்த அளவுக்கு வாங்கி, கிறிஸ்வ மதத்திற்கு மாறுபவர்களுக்கு ஐந்து செண்ட் நிலம் இலவசம் என்ற கொள்கை இன்று அந்த பகுதி முழுவதையும் கிறிஸ்துவ பூமியாக மாற உதவியுள்ளது.  வந்து குவிந்து கொண்டுருக்கும் வெளிநாட்டு நிதியென்பது உள்ளூரில் வெறியை உருவாக்க காரணமாக அமைந்து விடுகின்றது.

மொத்தத்தில் மனிதர்களை தன்னிலை மறக்கும் அளவுக்கு விபரீத பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கின்றது. நாங்கள் மதவெறியர்கள் அல்ல என்று நாடகமாடும் அரசியல்வியாதிகளின் உதவியோடு ஒவ்வொரு ஊரிலும் இன்று மத ஓநாய்கள் வளர்ந்து கொண்டுருக்கின்றது.

உள் மன ஆதங்கம், ஆதரவற்ற நிலைமை, எதிர்பார்த்த விசயங்கள் நடக்காத
போது உண்டான வெறுமை என்று ஒவ்வொன்றாக ஆழ்மனதில் பதிந்து அன்றாட வாழ்க்கையில் சபலத்துடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தான் அதிக அளவுக்கு மதம் மாறுகின்றார்கள். நம்பிய சாமிகள் என்னை காக்க வரவில்லை.  நம்பிக்கையளித்து எங்களை வாழ்விக்க வந்தவர்கள் தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதே இன்று மதம் மாறிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களின் வாக்குமூலமாக இருக்கிறது. 

இதில் உண்மைகள் இருந்தாலும் மதம் மாறினாலும் அதில் உள்ள உள்பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களை ஒதுக்கினார்கள் என்று சொல்லியவர்கள் அத்தனை பேர்களும் வேறொரு ரூபத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள சாதிகளை ஒழித்து விட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என்பவர்களிடம் மற்ற மதத்தில் உள்ள பிரிவுகளை எப்படி போக்குவது என்றால் பதில் இருக்காது. காரணம் இங்கே மதம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. தன்னிலை உணர விரும்பாத கூட்டம் தான் இப்போது அதிகமாகிக் கொண்டுருக்கிறது. அரசியலுக்கும், மதத்திற்கும் முக்கியத் தேவையே சுயநினைவு இருக்கக்கூடாது.  சுயமாக யோசித்தால் கேள்விகள் வரும்.  கேள்வி என்றால் அதற்கு பதில் ஒன்று தேவையாய் இருக்கும்.  பொய், உண்மை என்பதை எளிதாக கண்டு கொள்ள முடியும். 

தொடக்கம் முதலே இதை நம்பு. இதை மட்டுமே நம்பு என்று சொல்லிக் கொடுத்து விடுவதால் எவராலும் மாற்றுப் பாதையை யோசிக்கக்கூட முடிவதில்லை.  

மதங்கள் காட்டிய பாதைகள் அப்படியே தான் இருக்கிறது. இடையில் வந்தவர்கள் உருவாக்கிய கொள்கைகள் தான் இன்று உலகத்தை வழிநடத்திக் கொண்டுருக்கிறது.

மதங்கள் இருக்கின்ற வரைக்கும் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது. 

இதுவொரு மாற்று ஏற்பாடு. ஒன்றை மறக்க மற்றொன்று. அதை மறக்க இன்னோன்று. குறிப்பாக மைனாரிட்டி ஓட்டு வாங்க நினைக்கும் ஒவ்வொரு அரசியல்வியாதிகளுக்கும் சந்தோஷமாகவே இருக்கும்.  மதத்திற்கு ஒரு தலைவன்.  அதில் உள்ள உட்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தலைவர்கள்.  இறுதியாக மோதவிட்டு அழகு பார்க்கும் போது தேர்தல் காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.  இன்று இந்தியா முழுக்க இந்த மத கலவரத்தின் தொடக்கங்கள் அங்கங்கே தோன்றிக் கொண்டேயிருக்கிறது.  பாதிக்கப்படுவது தனி நபர்கள் மட்டுமே.  


உறவுகளை இழந்து, தனது அடையாளங்களை மறந்து, தன் மொழியை வெறுத்து இறுதியில் எது தனது பாதை என்பதை உணராமல் யாருடைய ஆதாயத்திற்காக நாம் இறந்தோம் என்பதை அறியாமலே இறந்து போனாலும் இந்த மதம் உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரைக்கும் அழியப் போவதில்லை.

மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராக செல்லத் துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது.

மனிதர்களின் வக்கிரமான உணர்ச்சிகளை மட்டும் தூண்டுவதற்கு இங்கே சிலர் இருக்கிறார்கள்.  ஆனால் தூண்டில் புழுவாகவே பலரும் மாறிக் கொண்டுருக்கிறார்கள். ஓட்டுக்காக உங்கள் உரிமைகளைப் பற்றி பேசிக் கொண்டு வருபவர்களை நன்றாக உற்று கவனித்துப் பாருங்கள். அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் உங்களின் சுய உரிமைகளை இழந்ததானால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

Monday, August 27, 2012

நீயும் பொம்மை நானும் பொம்மை

நன்றி.... தமிழ் பேப்பரில் வெளியான கட்டுரை

ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள், நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள்,  

ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாக தேவைப்டுகின்றது, பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்,  தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்பு செய்திகள்,

நம்பியவ்ர்களுக்கு?


ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாக தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது,  தொடக்கத்தில் திண்டபங்களுக்குத் தான் கொறிக்க சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள், இப்போது ஊடகங்களுக்கும் தேவையாய் இருக்கிறது,  இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது, 

வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையை கிழித்து செவிடர்களாய் மாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,

வலைதளம் முதல் செய்திதாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது,  கடினமான விசயத்தை கொடுத்தால் பக்கத்தை நகர்த்தி சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்கு சந்தனம் பூசிக் கொண்டுருக்கிறார்கள்.  அவளின் காண முடியாத மார்பை கனவுகளில் தேடிக் கொண்டுருக்கின்றோம், நமக்கும் அதுவே தான் தேவையாய் இருக்கிறது,  திரை அரங்கத்திற்குள் சென்றால் மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க என்ற போதை ஊட்டப்படுவதால் படம் எடுப்பவர்கள் என்ன கருத்து கந்தசாமி கணக்காக கைக் காசை செலவழிப்பார்கள் என்றா நம்ப முடியும்,  கலை என்பது பணம் சம்பாரிக்க என்ற பிறகு அங்கு கலைக்கு வேலையில்லை.  சதைக்குத் தான் வேலை.

ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிக்கைகள் கொடுக்கும் வார்த்தைகளை கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாக புரியும்,  கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளை சுருட்டி சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்பத் தொடங்கி விடுகிறார்கள்.  நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்து கொண்டுருக்கும் பி.ஆர்,பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மகதைகளைப் போலத்தான் போய்க் கொண்டுருக்கிறது,  இப்போது தான் மக்களுக்கே டாமின் என்றொரு அரசாங்க நிறுவனம் இதற்கென்று இருக்கிறது என்பதே தெரிய வருகின்றது,  

முன்பிருந்த இருந்த தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது இந்த கனிம வள துறை தான் என்பதை புரிந்து கொள்ள முடியும்,  சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும்,  ஆனால் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லாமலே கடந்து போய்க் கொண்டுருக்கிறது, 

அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருக்கும் போது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா?  இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் நாம் ஏறி உட்கார்ந்து கொண்டுருக்கின்றோம் என்று நம்பியிருப்பாரா?  ராசா தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகின்றோம் என்று கனவு கண்டுருப்பாரா?  அமைச்சராக வந்தாலே போதும்?  கற்றுக் கொடுப்பவர்கள் சுற்றியிருக்கும் போது களவு என்பது புத்திசாலிதனத்தின் வெளிப்படாக மாறிவிடுகின்றது, 

இன்று சூறாவளியாக செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றி கலைஞருக்குத் தெரியாதா?  இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டுருக்கும் ஜெ, வுக்குத்தான் தெரியாத விசயமா? கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக இந்த கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ?  இல்லை கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும்,  ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படி கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்கு தெரியாமலா போயிருக்கும்,

ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள் தான் வீழும் போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரையாக எழுத முடிகின்றது, 

உலகமெங்கும் அரசியல் செய்வதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதொவொரு பலியாடுகள் தேவையாய் இருக்கிறது,  அதிலும் இந்தியாவில் இந்த பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடக்கின்றது, 

திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுக்களைப் போல ஒவ்வொரு சமயத்திலும் இதற்கென்று குறி பார்த்து காத்துக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள்.  அது அமைச்சராக இருக்கலாம், ஆட்சிக்கு ஜீவநாடியாக உதவிக்கொண்டுருக்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம், 

மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்றியவர்கள் தான் அவர் அனுப்பிய கோப்பின் நகலை படிக்கவே பல மாதங்கள் ஆகியுள்ளது,  காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது,  அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை,  அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது,  காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான்,

ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல் அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போல படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர்,  மறுநாளும் படிக்கும் போது எரிச்சல் தான் உருவாகின்றது,  காரணம் படிப்பவர்களும், பார்ப்பவர்களும் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது, நல்லொழுக்கம் என்ற வார்த்தை என்பதே நாற்றம் பிடித்த வார்த்தையாக சமூகம் பார்க்கத் தொடங்கிய போதே நல்ல விசயங்கள் என்பது நம்மைச்சுற்றி அரிதாகத்தான் நடக்கும், நான்காயிரம் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நாலு அதிகாரிகள் செய்யும் செயலால் சிலருக்கும் இன்னமும் தர்ம புண்ணியத்தின் மேல் நம்பிக்கை வருகின்றது, 

நாம் தான் வாழ்வில் பாதி நாட்கள் ஏக்கத்திலும், மீதி நாட்கள் எரிச்சலிலுமாய் கழிக்கும் போது இறுதியில் நமக்கு மிஞ்சப்போவது கழிவிரக்கம் மட்டுமே,  நுகர்வு கலாச்சாரம் என்பது நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல ஒரே நேர்கோட்டில் போய்க் கொண்டுருக்கிறது,  நமக்கு எது தேவை என்பதை விட மற்றவர்கள் பார்வையில் நாம் சிறப்பாக தெரிய எதுவெல்லாம் தேவை என்பதாக கலாச்சாரம் மாறியுள்ளதால் நமக்கே நமக்கான தேவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை,  ஃபேஷன் என்ற வார்த்தையை நாம் நோண்டிப்பார்த்தால் நம் பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் அசிங்கம் என்பதை யோசிப்பதே இல்லை, அவர்கள் முன்னால் நாம் கௌரவமாக தெரிய வேண்டாமா? என்று யோசித்து யோசித்து கடைசியில் கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய் கடனாளியாக மாறி இங்கு பாதிப் பேர்களின் வாழ்க்கை தெருவுக்கு கொண்டு வந்து விடுகின்றது,

தற்போது அதிகாரியாய் இருப்பவன் சம்பளத்திற்கு மேல் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் ஆசைப்படுபவன்,  அவனை சரிக்கட்ட நினைப்பவன் கருப்பு பணத்தை கட்டிக் கொண்டு தூக்கம் மறந்து தவிப்பவன், 

பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாக பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும்,  அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும்,  பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்க பொம்மையாய் காட்சிகளை கண்டு நகர்ந்து விடுவது உத்தமம்,

டாலர் நகரம் இரண்டாவது அத்தியாயம்,

Saturday, August 25, 2012

விஜய் மல்லையா கொடுத்ததும் - திறக்காத கதவுகளும்


"இப்ப கொஞ்சம் நேரம் சரியில்லப்பா...". 

இப்போது இதுவொரு சாதாரண வாக்கியமாகி விட்டதுஆடி முடிந்து ஆவணி வந்தா டாப்புங்ற மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கணக்கு. நாட்டை ஆளும் சக்திவாய்ந்த அமைச்சர்கள் முதல் அடுத்தநாள் சோத்துக்கு காத்திருப்பவர் வரைக்கும் தினந்தோறும் நல்ல நேரத்திற்காகத் தான் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்அவர்கள் எதிர்பார்த்தது நடக்காத போது இறுதியில் சொல்வதும் இப்படித்தான் இருக்கிறது

விஜய் மல்லையா (ஆகஸ்ட் 25) இன்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு பரிகாரமாக தங்ககதவு (80 லட்சம்) செய்து கொடுத்த கதவுகளை பார்த்த போது பரிகாரத்திற்கும் எதார்த்ததிற்கும் உள்ள வித்யாசங்களை நம்மால் உணரமுடிகின்றது

Liquor baron என்றால் நாலைந்து அர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்சாராய சக்ரவர்த்திசாராய சாம்ராஜ்யம்சாராய தொழிலதிபர்லிக்கர் மேக்னெட் என்று நமக்கு தோன்றிய வகையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்சபரிமலை ஐயப்பன் முதல் இன்று இந்த கர்நாடக கோவில் வரைக்கும் மல்லையாவும் எதை எதையோ கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். ஆட்சியாளர்களுக்கு தேர்தல் சமயங்களில் கொடுத்தது போக மீதி இருப்பதை இப்படி கோவிலுக்கு கொண்டு போய் கொடுத்து விடுகிறார் போலும்ஆனால் கிங்பிஷர் விமான ஓட்டிகளுக்கு மட்டும் மாதமானால் சரியான தேதிக்கு சம்பளம் மட்டும் அவரால் கொடுக்க முடியவில்லை. 

விஜய் மல்லையா பெட்ரோல் கேட்டுப் போனால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவனங்களும் உள்ளே வராதே என்று கதவை சாத்துகிறார்கள்,  வங்கி மக்களோ அலறி ஓடுகிறார்கள்இவரிடம் வாங்கி தின்ன பாவத்திற்காக மட்டும் அமைச்சர் பெருமக்கள் கொடுத்த காசுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகவே கூவினார்கள்,  ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை,  பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை.  முறைப்படி தீர்ப்பவர்கள் எவரும் அருகிலும் இல்லை.  இவரை நம்பி முக்காடு போட்டவர்கள் எத்தனை பேர்களோ

சாரயம் குடித்தவனை தப்பாக பார்த்த காலம் போய் அது கௌரவத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவதால் சாராய அதிபருக்கு கோவிலுக்குள் இருக்கும் சாமியே வந்து வரவேற்பு அளிக்கும் போல. இது அம்பானி முதல் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதி முதலாளிகள் வரைக்கும் இப்படித்தான் கோவிலில் கொண்டு போய் கொட்டுகிறார்கள்.  ஆனால் தங்கள் நிறுவனம் வளர காரணமாக இருக்கும் எவரையும் கண்டு கொள்ளக்கூட தயாராய் இல்லை.

இன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியும் வலையில் சிக்கவைத்து விட வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமியும் தலைகீழாக நின்று கொண்டு ஒவ்வொரு அஸ்திரமாக ஏவிக் கொண்டே தான் இருக்கிறார்,  ஆனால் அவர் குடும்பமோ ஊர் ஊராக ஒவ்வொரு கோவிலாக அலைந்து கொண்டுருக்கிறார்கள்காரைக்குடிக்கு அருகே உள்ள சிதம்பரத்திற்கு சொந்தமான மானகிரி பண்ணை வீட்டிலும் ஏதோவொரு யாகம் பூஜைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது,  இவர் தான் ஜெயலலிதாவைப் பார்த்து யாகத்தை நம்பும் வரைக்கும் அவருக்கு விமோசனம் இல்லை என்றார்ஒரு வேளை அவர் விரும்பியுள்ள பிரதமர் பதவி கிடைப்பதற்காக குடும்பம் அலைகின்றனரோ? ஆனாலும் விடாது கருப்பாய் அவரை ஒவ்வொன்றாக துரத்திக் கொண்டேயிருக்கிறது.  

தொடக்கம் முதல் ஜெயலலிதா பூஜை ப்ரியர்,  நடந்தால் பூஜைஉட்கார்ந்தால் யாகம் என்று அவர் மூலம் தமிழ்நாட்டில் பாழடைந்த பல கோவில்கள் புதிய அவதாரங்களாக சுற்றுலா தளங்களாக மாறியதுஎதிரியை அழிக்க என்று இவர் யாகத்தில் கொட்டிய மிளகாயக்கு புதிய பார்வை கிடைத்தது, இந்த யாகத்தினால் இன்று அந்த கோவிலைச் சுற்றிலும் மிளகாய்க்கு சரியான கிராக்கி,  ஆனால் எதிரியான கலைஞர் அழிந்தாராஎன்றெல்லாம் கேட்கக்கூடாது

ஆனாலும் இன்று ஜெயலலிதாவோ கலைஞருக்கு பாடம் எடுக்கக்கூடிய தகுதி வாய்நத நபராக மாறி அசராமல் கோர்டு வாசலில் சிக்ஸராக விளாசித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்,  சாட்சிகள் ஓடி ஒளிகின்றார்கள்பிறழ் சாட்சியாக மாறுகிறார்கள்,  உச்சகட்டமாக அரசு வழக்குரைஞரே என்னை ஆளை விட்டால் போதும் என்று ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் காட்சியெல்லாம் அரங்கேறிக் கொண்டுருக்கிறதுவாய்தா மேல் வாய்தா வாங்கி வாய்தா ராணியாகிக் கொண்டுருக்கிறார்,  ஆனால் இன்று வரையிலும் அவர் செய்யும் பூஜை புனஸ்காரங்கள் குறைந்தபாடில்லை,

இது போன்ற தொந்தரவுகள் கலைஞருக்கு இல்லை,  அவர் சார்பாகத்தான் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் உலகத்தில் உள்ள அத்தனை கோவில்களுக்கும் சென்று நேர்த்திக்கடன் செய்து விடுகின்றார்களே?

சோனியாவுக்கு பிரச்சனையே இல்லை,  இத்தாலியில் உள்ள கோவில்களைப் பற்றி நமக்கு தெரிய வாய்ப்பில்லை,  வீட்டுக்குள் இருந்து கொண்டு ஜெபிக்கின்றாரா என்று தெரியவில்லை,  மன்மோகன் சிங் அதற்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துருக்கக்கூடும்

ஆனால் பிரச்சனைகளை உருவாக்குபவர்களும்பிரச்சனையில் சிக்கியவர்களும்சிக்கப் போகின்றோம் என்ற தெரிந்து வைத்திருப்பவர்களும் மறக்காமல் ஒன்றை செய்யத் தவறுவதில்லை,  யாகம் வளர்ப்பதுகோவில் கோவிலாக செல்வதுஅன்னதானம்கல்யாணம் செய்வதற்களுக்கே மறுபடியும் கல்யாணம் செய்து வைப்பது.  எதுவுமே முடியாவிட்டால் இருக்கவே இருக்கு பரிகாரம்,  இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு ஆஸ்தான ஜோதிடர்களும் மாநிலம் விட்டு மாநிலம் பறந்து சென்றாலும் நேரம் போதவில்லை என்ற நிலையில் சேவையாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,  இப்போது நாட்டில் மருத்துவர்களை விட இந்த ஜோதிடர்களுக்குத் தான் அதிக கிராக்கியாக இருக்கிறது

தற்போது கம்பி எண்ணிக் கொண்டுருக்கும் பிஆர்பி நிறுவன அதிபர் பழனிச்சாமியும் இது போன்ற அதிக நம்பிக்கை கொண்டவர் தான்,  அவருக்கு பிடித்த எண் 56,  அவர் பிறந்த வருடமும் 1956 என்பதால் சற்று கூடுதல் பாசம் போலஅவரின் தொழில் ரீதியான ஒவ்வொரு முடிவுகளுமே ஜோதிடர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்படுவதும் இல்லையாம்,  என்ன செய்வது?  56 வயது நடக்கும் இப்போது தான் அத்தனையும் தலைகீழாக போய்விட்டது,

ஒருவேளை பழனிச்சாமியின் நேரம் பார்த்த ஜோதிடரின் மனதை கிரகங்கள் தப்பாக மாற்றியிருக்குமோ?

அறம் என்பதும் பக்தி என்பதும் ஒன்றோடு ஒன்று கலந்த உடன்பிறவா அண்ணன் தம்பிகள்,  ஓழுக்கமாக வாழ் என்பதற்காக உருவாக்கப்பட்ட போதனைகள் அத்தனையும் தொடக்கம் முதல் பக்தி என்ற தேன் கலந்து கொடுக்கப்பட்டது.  "தப்பு செய்யாதே. சாமி கண்ணை குத்தி விடும்" என்று குழந்தைகளுக்கு கதை சொல்வதில் தொடங்கி "அவன் செய்த பாவத்திற்கு தான் இப்படி ஆயிட்டான்" என்று சுட்டிக்காட்டப்படுவதும் வரைக்கும் இந்த அண்ணன் தம்பிகளின் உறவு ஏதோவொரு வகையில் பாசகார பயலுகளாகவே இருந்தார்கள்

ஆனால் காலம் மாற மாற இந்த அண்ணன் தம்பிகளுக்குள் மக்கள் பிரிவினையை உருவாக்கி விட்டார்கள்,  பெரிய தப்பு செய்தால் அதற்கு ஒரு விதமான பரிகாரம்சின்னதென்றால் அதுக்கு ஒரு மாதிரிமொத்தத்தில் அது தவ்று என்று உணரத் தேவையில்லைஅடுத்த முறை மாட்டாமல் செய்து விடு என்பதாக மற்றவர்கள் சொல்லிக் கொடுக்க அப்படித்தான் உலகம் நகர்கின்றதுமதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்பரிகாரம் என்பது பாவ மன்னிப்பாக மாறுகின்றது,  அவ்வளவுதான்இன்று இறை பக்தி என்பதே ஒரு ஃபேஷனாகி விட்டது,

இறை பக்தி என்பதன் மூலம் கலந்து கொடுத்த பயமுறுத்தல்கள் போன்ற எந்த பப்புகளும் இன்று மக்களிடம் வேகாதுகாரணம் மக்கள் பக்தியையும் ஒழுக்கத்தையும் தனித்தனியாக பிரித்து விட்டார்கள்.  பக்தி ஒரு பக்கம்வாழ்வதற்காக செய்ய வேண்டிய நடைமுறை எதார்த்தம் என்பது மறுபக்கம்.

எந்த தப்பான் காரியங்களும் இன்று எவரையும் உறுத்துவதே இல்லைஊழல் புகாரில் மாட்டியவர்கள் என்றால் திருடன் என்று தானே அர்த்தம்.  எவராவது முகம் கருத்துப் போய் புகைப்படத்தில் போஸ் கொடுக்கின்றார்களா?  வாயெல்லாம் பல்லாகத்தான் கையாட்டிக் கொண்டு செல்கிறார்கள்படிப்பவனுக்கும்பார்ப்பவனுக்கும் கோபம் வந்து பார்த்துருக்கிறீர்களா

தேனை எடுத்தவன் நக்காமலா போவான்என்று இயல்பாக எடுத்துக் கொண்டு போக அடுத்து வருபவன் அகாய சூரனாக மாறிக் கொண்டுருக்கின்றான். 

Tuesday, August 21, 2012

பழைய குப்பைகள்


ஊரில் வாழ்ந்த வீடென்பது தோட்டமும் மரங்களுமாய் இருந்த காரணத்தால் எப்போதும் குப்பைகளுக்கு பஞ்சமில்லை, உதிர்ந்த இலைகளும், உதிர்ந்து போக காத்திருக்கும் இலைகளும் சேர்ந்து அடிக்கும் காற்றில் வீட்டை நோக்கி பறந்து வந்து கொண்டேயிருக்கும், திடீரென்று அடிக்கும் காற்றில் எங்கோயோ சுழன்று கொண்டுருக்கும் தூசிகள் எதிர்பாரா விருந்தாளியாய் வீட்டை ஆக்ரமிக்கும், எப்போதும் தூசிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையாகத் தான் இருந்தது,

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முறை வைத்து கூட்டி பெருக்கிக் கொண்டேயிருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில் வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் குப்பைகள் இருந்து கொண்டேயிருக்கும்ஏன் இப்படி வீடே குப்பையாய் இருக்கிறது? என்று கேட்கத் தோன்றாது, காரணம் அவற்றை இயல்பான வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட காரணத்தால் கூட இருக்கலாம்,

விசேட தினங்களில் தான் வீட்டுக்கு புது சுவாசம் வரும், அது வரைக்கும் அந்த தூசிக்குள் தான் நமது சுவாசக்காற்று அலைமோதும், வெளியுலகம் தெரியாத மனதில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை, பெரிதான ஏக்கமும் இல்லைஆனால் காலமாற்றத்தில் நாம் கண்ட ஒவ்வொரு சுத்தமான வீட்டை பார்க்கும் போதெல்லாம் நாமும் இப்படி இருக்க வேண்டும் என்பதாக நினைத்துக் கொண்டே அது முடியாமல் தான் இன்று வரைக்கும் வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது,


எப்போதும் நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதிறகுள் இன்று வரை இருந்து கொண்டேயிருக்கிறது,  வீட்டுக்குள் இருக்கும் சின்ன ஒட்டடைகளை பார்த்து விட்டாலே போதும் நேரம் காலம் தெரியாமல் உடனே குச்சியை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்ய தொடங்கி விடுவதுண்டு, ஆனால் ஓட்டடைகளை சுத்தம் செய்யத் தொடங்கினால கடைசியில் அடுக்கி வைத்துள்ள அத்தனை மூட்டைகளையும் கலைக்க வேண்டியதாக இருக்கும், எதையும் வெளியே தூக்கி போட முடியாமல் கடைசியில் வீட்டுக்குள் பிரச்சனை தான் உருவாகும்வீடு முழுக்க முக்கால்வாசி புத்தகங்களாக அடைந்து கிடைக்கும் போது எதை ஒதுக்கி எதை நீக்குவது என்ற குழப்பத்தில் மீண்டும் ஒவ்வொரு மூட்டைகளும் இருந்த இடத்திற்கே சென்றுவிடும்,

ஆறாவது படிக்கும் போது வாசிக்கத் தொடங்கிய வாழ்க்கையில் கல்லூரி படிப்பு படித்து முடித்த போது தான் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானதுகாசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவது என்பது காசை பிடித்த கேடு என்பது வீட்டில் உள்ளவர்களின் தராக மந்திரம்ஆனால் புத்தக காதல் என்பது இன்று வரை மாறவில்லைஎன்ன கற்றுக் கொண்டோம்? இதனால் என்ன பிரயோஜனம்? என்று எதைப்பற்றியும் யோசிப்பதில்லை, வாசிக்க வேண்டும் என்பது மட்டும் கொள்கையாக இருந்ததுஒவ்வொரு காலகட்டத்திலும் வைத்திருந்த கொள்கைகள் மாறியிருக்கிறது, ஆனால் இந்த புத்தக வாசிப்பு என்ற கொள்கை மட்டும் தான் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது,

படக்கதைகளில் தொடங்கி, கதைக்கு மாறி, சதைக்கு திரும்பி இன்று கட்டுரைகளில் வந்து நிற்கின்றது, வாசிக்கும் விசயங்கள் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டுருக்கிறதே தவிர புத்தகங்கள் வாங்குவது இன்று வரை நின்றபாடில்லைஇடையிடையே வேலைப்பளூவின் காரணமாக வாங்கி வரும் புத்தகங்களை படிக்க முடியாமல் மூலையில் கிடந்தாலும் அடுத்த வாரம் கால்கள் இயல்பாக புத்தக கடைக்குச் சென்று விடுகின்றதுபடிக்காமலேயே புத்தகங்கள் இருக்கின்றேதே என்று மனம் கேட்பதில்லை, அடுத்த வார புத்தகமும் வீட்டில் வந்து விழும்ஆனால் மொத்தமாக மெனக்கெட்டு ஒருநாள் உட்கார்ந்து படிக்கத் தொடங்கும் போது கொடுத்த காசுக்கு பிரஜோனமில்லையே என்ற அங்கலாய்ப்பு மனதிற்குள் இருந்தாலும் அதுவும் மாறிவிடும்அப்புறம் எப்போதும் போல ஏதோவொரு குப்பை பத்திரிக்கையை தலைப்பு பார்த்து காசு கொடுத்து வாங்கி வந்து திட்டிக் கொண்டே தூக்கி எறிந்து விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,

நூலகத்திற்குள் சென்றால் எவர் கையில் எந்த புத்தகம் இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பதே ஒரு பெரிய சவாலான வேலையாக இருக்கிறது.  அந்த புத்தகத்தை எடுத்து எப்போது படித்து முடித்து வைப்பார் என்பதை கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்நம்மைப் போல மற்றொருவரும் கவனித்துக் கொண்டுருப்பார். இத்தனை தொந்தரவுகளையும் தாண்டி அந்த புத்தகத்தை கையில் எடுக்கும் போது சார் வேலை நேரம் முடிந்து விட்டதுபூட்டப் போகின்றோம் என்று நூலகர் பக்கத்தில் வந்து சொல்லும் போது மனம் வெறுத்துப் போய்விடும்இந்த பஞ்சாயத்துக்கு பயந்து கொண்டே வாரமானால் நூறு ரூபாயை ஒதுக்கி வைத்து விடுவதுண்டுஅந்த வாரத்தில் படிக்காத புத்தகங்களை மறுவாரத்தில் பார்க்கும் போது படிக்கத் தோன்றாதுஇப்படியே கடந்து வந்த பாதையில் என்ன சாதித்தோம் என்று யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் அதிகம் மிஞ்சுகின்றது,

தொடக்கத்தில் படித்த வாரபத்திரிக்கையில் முக்கியமான கட்டுரைகள், அற்புதமான துணுக்குத் செய்திகள் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து படித்து முடித்ததும் கத்திரித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது, அதற்கென்று ஒரு கோப்பு உருவாக்கி துறை வாரியாக பிரித்து வைத்துக் கொள்வதுண்டுஇது எதற்காக இப்படி செய்கின்றோம் என்பது தெரியாமலே பல வருடங்கள் செய்து கொண்டே வந்துருக்கின்றேன்நாமும் எழுதப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லைஆனால் சேகரித்த தாள்களை திடீர் என்று கிடைக்கும் விடுமுறை தினத்தில் ஆர்வமாக ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கும் போது என்சைக்ளோபீடியா போல நம் மனக்கண்ணில் பல பிம்பங்கள் விரியும்பல மனிதர்களின் மேல் வைத்திருந்த அபிமானங்களும் மாறும்நம்மை குருடர்களாக, செவிடர்களாக, பைத்தியங்களாக நினைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அவரவர் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப கொடுத்த பேட்டிகளை படித்து முடிக்கும் போது இவர் மேல் நாம் இத்தனை அக்கறை கொண்டுருந்தோமா? என்று நமக்கே வெட்கமாக இருக்கும்,

ஆரம்பத்தில் விரும்பிய நடிகை, நடிகர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாறிய பிம்பங்கள் நமக்கு பல பாடங்களை உணர்த்தும், வட நாட்டில் எவருக்கோ இரண்டாம் தாரமாகவோ அல்லது மறைந்து வாழும் வாழ்க்கையென்ற வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த நடிகையின் மேல் நாம் கொண்டுருநத அக்கறை இப்போது நமக்கும் கேலியாய் பார்த்து சிரிக்கும்என்ன செய்வதுமாற்றம் என்பது மாறாதது தானே

Saturday, August 18, 2012

கலைஞர் முகப்பு நூலா? அவர் முகமா?


திருப்பூருக்குள் மழை பெய்து நாளாகி விட்டது,  வானம் மேகமூட்டமாக வந்து காற்றில் ஒரு சிலுசிலுப்பை உருவாக்கினாலும் கடந்த நாலைந்து வாரமாக மழை என்பது வருமா? என்று ஒவ்வொரு முறையும் ஏங்க வைத்துக் கொண்டுருக்கின்றது, மரங்களை அழித்த வளர்ச்சியினால் ஈரப்பதமே இல்லாத வெயிலின் கொடுமையும், ஒரு விதமான புழுக்கத்தையும் அனுபவித்தே ஆக வேண்டியிருக்கிறது, சுற்றுப்புற காற்றில் இல்லாத ஈரத்தைப் போல ஊருக்குள் உள்ள பெரும்பாலான நிறுவனங்களும்  புழுங்கிப் போய் தான் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்,  ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களும் அவஸ்த்தைகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் அல்லாடிக் கொண்டுருக்கின்றது,  

கடனுக்கு தொழில் என்பது மாறி கையில் காசு இருந்தால் தொழில் என்ற நிலைக்கு வந்து விட்ட காரணத்தால் சம்பாரித்து வைத்துள்ள பணத்தை எவரும் வெளியே எடுக்க தயாராக இல்லை,  சிறு குறு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை நம்பத்தயாராக இல்லை,  பெயரைக் கேட்டால் பவ்யம் காட்டும் போக்கும் மாறிவிட்டது,  பணத்தை கொடுத்து விட்டு எடுத்துப் போ? என்கிற தொனியில் வியாபாரத்தின் போக்கே மாறிவிட்டது,  வளர்ந்த நிறுவனங்களுக்கு கௌரவம் என்பது முக்கியம்,  ஆனால் நாணயம் என்பது தொடக்கம் முதலே இல்லாத காரணத்தால் இன்று பேய் முழி முழித்துக் கொண்டுருக்கிறார்கள்,  கடன்களை வசூலிக்க முடிந்தவர்கள் முடிந்தவரை போராடிக் கொண்டுருக்கிறார்கள்,  கொடுக்க மறுப்பவர்கள் மாற்று வழியை தேடிக் கொண்டுருக்கிறார்கள்,  மொத்தத்தில் இந்த ஆடு புலி ஆட்டத்தில் அதிகம் பாதிக்கப்படுவது வங்கிகளும், இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களும் மட்டுமே,  


ஒவ்வொரு நிறுவனங்களின் காசோலை உள்ளே வரும் போதும் வங்கி ஒவ்வொன்றும் தங்கள் கண்களில் விளக்கெண்ய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டுருக்கிறார்கள், நிறுவனங்கள் வளரத் தொடங்கிய போது மற்ற தொழில் துறைகளில் தங்கள் மூதலீட்டை முடக்கிப் போட்டவர்கள் தற்போது தப்பிப் பிழைத்தவர்களாக உள்ளனர்,  ஏற்றுமதியை மட்டும் நம்பியவர்கள் மட்டுமே தற்போது நட்டாத்தில் தவிப்பவர்களாக இருக்கின்றனர், 

மற்றபடி உள்நாட்டு சந்தையில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு பெயரை உருவாக்கியவர்கள் இன்றைய காலகட்டத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டுருக்கின்றார்கள், விளம்பர மாயத்தால் பணத்தை வாரிக் கொண்டுருப்பவர்களுக்கு இதுவொரு வசந்த காலம்,  ஒரு சிறப்பான உதாரணம் ராமராஜ காட்டன், 

குடும்பத் தொடர்பு போல நடிகர் சிவகுமாரைப் பயன்படுத்தி அடுத்தடுத்து திரைப்பட நட்சத்திரங்களை வைத்து விளம்பரங்கள் செய்ய இன்று சிறிய கிராமங்கள் வரைக்கும் இவர்களின் வேஷ்டி, சட்டை என்பது ஒரு கௌரவத்தை தரும் ஒரு டிரேட்மார்க் என்கிற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது, 

இவர்களைத் தொடர்ந்து இதே வழியில் பலரும் வந்து விளம்பர உலகத்திற்கு ஒரு சிறப்பான வருமானத்தை அளித்துக் கொண்டுருக்கிறார்கள்.  வாங்குபவர்களுக்கு எப்போதும் இதன் சூட்சமம் தெரியப்போவதில்லை, 

உற்பத்தி விலைக்கும் வாங்கும் விலைக்கும் உள்ள இடைவெளி ஏறக்குறைய 300 சதவிகித லாபத்தில் நம் தலையில் கட்டிக் கொண்டுருக்கிறார்கள் என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை. காரணம் விளம்பரங்கள் செய்யும் மாயை,  விளம்பரங்களை வைத்து மட்டும் நீங்கள் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் பணத்தை கண்களை திறந்து கொண்டே திருட அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம், இல்லாவிட்டால் ஈமு விளம்பரத்தைப் பார்த்து கோடிகளை கொட்டி கொடுத்து விட்டு இன்று தெருக்கோடிக்கு வந்துருப்பார்களா? இத்தனை இளிச்சவாயன்கள் நம் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உணர வாய்ப்பில்லாமல் போய்விடுமே?

••••••••••••••••••••••••••••••

கலைஞர் இணையத்தில் நுழைகின்றார் என்றதுமே தவறான வழிகாட்டுதல் காரணமான இந்த முடிவு எடுத்து இருப்பார் என்று மனதில் வைத்திருந்தேன்,

காரணம் கலைஞர் மேல் கொலவெறியோடு காத்துக் கொண்டுருப்பவர்கள் உலகமெங்கும் கோடிக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள்,  குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குத்திக் குதறியே விடுவார்கள். ஏற்கனவே இணையத்தில் கலைஞர் என்றாலே வடிவேல் கணக்காக ஓடிக் கொண்டுருப்பது அணைவரும் அறிந்ததே, 

அவர் இன்னமும் 30 வருடங்களுக்கு முன்பு அடுக்கு மொழி பேசி கவிழ்த்த கதை போல இன்று எவரும் இல்லை என்பதை உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.  

குறைந்தபட்சம் இணையத்தில் அவர் புகழ்பாடும் கோஷ்டிகளிடம் இந்த பொறுப்பை முறைப்படி ஒப்படைத்திருந்தால் கூட தப்பித்து இருக்கக்கூடும்.  முகப்பு நூலில் சேர அனுமதி கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்த காரணத்தால் மக்கள் புகுந்து விளையாடி விட்டார்கள். 


விமர்சிப்பவர்கள், விளாசித்தள்ளுபவர்கள், கிழி கிழிவென்று கிழித்துத் தள்ளுபவர்கள் என்று மூன்று விதமான கலைஞர் எதிர்பார்க்காத உடன்பிறப்புகள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அதிலும் மூன்றாவது ரகத்தினருக்கு கலைஞரின் குடும்பத்தை அசிங்கமாக அநாகரிகமாக பேசுவது என்பது அல்வா சாப்பிடுவது போல,  நானும் அவரும் முகப்பு நூலை அதில் வந்த விமர்சனத்தை கவனித்துக் கொண்டிருந்த போது படிக்க முடியாத அளவுக்கு போய்க் கொண்டேயிருந்தது.  நிச்சயம் கலைஞர் பார்வைக்கு இதை கொண்டு போயிருக்க மாட்டார்கள்.  கடைசி காலத்தில் புகழுக்காக என்று ஏன் தான் இத்தனை போதையோடு அலைகின்றாரோ? 

எல்லோரும் ஜெகத்ரட்சகன்,வைரமுத்து,வாலி போல அமைந்து விடுவார்களா என்ன? 

வழிகாட்டியாக மாறி ஒதுங்காமல் இருக்கும் வரைக்கும் இன்னும் பல அவமானங்களை சந்தித்தே ஆக வேண்டும், அவரும் உணரமாட்டார், அவரை வைத்து வாழ நினைப்பவர்களும் அதை செய்யவும் விடமாட்டார்கள், முக்ப்பு நூலில், ட்விட்டரில் இவர் தான் பதில் சொல்லப் போகின்றாரா?  ஏதோவொரு அல்லக்கை அருகில் இருக்கும்.  இவர் மனதில் நினைப்பதை அப்படியே செய்து காட்ட இன்னோரு சண்முகநாதனை உருவாக்கவா முடியும்?

•••••••••••••••••••••••••••••

ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வாரப்பத்திரிக்கைளின் மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது,  முக்கால்வாசி திரைப்படங்கள் சார்ந்த செய்திகளைத் தவிர்தது,  போனால் போகிறதென்று சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை தேடிப்பிடித்து நாம் தான் கண்டு கொள்ள வேண்டும் போலிருக்கிறது,  கலைஞருக்கு மாற்று ஏற்பாடு ஜெயலலிதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பிக்கையாய் வாக்களித்தனர்,  ஆனால் அவரின் சொத்து குவிப்பு வழக்கில் தனி ஒரு ஆளாய் களத்தில் நின்றவரின் பேட்டியைப் பாருங்க, 

ஜனாதிபதி பதவிக்கு எந்த காலத்தில் மறக்க முடியாத களங்கத்தை உருவாக்கிய பிரதீபா பாட்டீல், போராட்டத்திற்கு மட்டும் தான் லாயக்கு,  ஆட்சி, நிர்வாகத்திற்கு பத்து பைசாவிற்கு பிரயோஜனமில்லாத மம்தா பானர்ஜி, அற்புதமான வாய்பை அறிவீலியாக மாற்றிக் கொண்ட மாயாவதி வரிசையில் தான் ஜெயலலிதாவும் இடம் பிடிக்கின்றார்,  மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ்க்கு மாற்று இல்லாத போக்கை போல இங்கும் இருப்பதால் கண்டதே காட்சி கொண்டதே கோலமாக ரெஸ்ட் எடுத்து டயர்ட்டாகி கொட நாடு வரைக்கும் சென்று ரெஸ்ட் எடுக்கின்றார் போலும், 

நண்பர்கள் திடீர் என்று அழைத்து ஒரு ஆச்சரிய தகவலைச் சொன்னார்கள்,  ஒரே அரசு ஆணையின் மூலம் குறிப்பாக அண்ணா பிறந்த நாள் முதல் தமிழ்நாடு முழுக்க மதுபான கடைகளை ஜெயலலிதா ஒழிக்கப் போகின்றார் என்றார்கள்,  ஒருவர் அல்ல,  பலரும் மாறி மாறி அழைத்துச் சொன்னார்கள்,  நான் நம்பவில்லை,  காரணம் அதன் மூலம் வரும் வருமானம் என்பது அரசாங்கத்திற்கு என்பதை விட பல மடங்கு தனி நபர்களுக்கு போய்க் கொண்டுருக்கின்றது என்பதை எத்தனை பேர்கள் அறிவார்கள்?  

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த ஆச்சாரியா அவர்களின் பேட்டி


'கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''

''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''

''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'

''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். 

லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''

''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''

(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!''  

''அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''

''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''

''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''

''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''

''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''

''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''

''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''

''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''

''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''

''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''

''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''

-ஜூவி

காரணம் நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டுருக்கின்றோம்,  ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம்,  ஆனால் ஒரு நிராதிபதியைக் கூட தண்டித்துவிடக் கூடாது அல்லவா?  அது தான் இந்த வழக்கின் நோக்கமாக இருக்கலாம்,

•••••••••••••••••••••••••••••


வேர்ட்ப்ரஸ் ல் திருப்பூர் குறித்து மனதில் தோன்றியதை என் சுய அனுபவங்களை நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கினேன்,  அது இருபது வருட திருப்பூர் வளர்ச்சியைப் பற்றியது,  என் சொந்த வாழ்க்கை அனுபவம் ஊடாக எழுதிக் கொண்டே வந்ததை டாலர் நகரம் என்ற பெயரில் புத்தகமாக மாற்றி ஒரு பதிப்பகத்தில் கொடுதது இரண்டு வருடமாக பெரிய அவஸ்த்தையில் மாட்டிக் கொண்டு விட்டேன். அவரைப் போல, இவரைப் போல என்று மாற்றி மாற்றி சொல்லி அதனை சுருக்கி, மாற்றி கடைசியில் ஆளை விட்டால் போதும் என்று என் வேலைப்பளூவின் காரணமான மறந்தே போய்விட்டேன். 

தமிழ்மீடியா தளம் நாங்கள் அதை தொடராக வெளியிடுகின்றோம் என்று சொல்லி அதன் முதல் அத்தியாயத்தை  வெளியிட்டு உள்ளார்கள்,  ஒவ்வொரு வாரத்தின் செவ்வாய் அல்லது புதன் அன்று ஒவ்வொரு பகுதியாக வரப் போகின்றது,  இரண்டு பாகங்கள் எழுதும் அளவிற்கு திருப்பூரின் வளர்ச்சியும் இன்றைய வீழ்ச்சியும் பகிர்ந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது,  நாட்டின் வரலாற்றை படிக்கும் போது நமக்கான செய்திகள் நிறைய உள்ளதைப் போலவே ஒரு ஊரைப் பற்றி நம் வாழ்வில் ஊடே பார்க்கும் போது நாம் கடந்து வந்த பாதை பல பாடங்களை நமக்கு உணர்த்தும்,  தமிழ் மீடியா தளத்திற்கு தேவியர் இல்லத்தின் நன்றிகளை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்,

Tuesday, August 14, 2012

டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும்

டெசோ என்ற வாணவேடிக்கை விளையாட்டை தடைகள் பல கடந்து கலைஞர் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார்.

திரைப்பட விமர்சனத்தினைப் போலவே மனம் போன போக்கில் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட, கலைஞர் எப்போதும் போல தோல்விகளுடன், விமர்சனங்களுடன் வாழ பழகிவிட்ட காரணத்தினால் அவரை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.  எப்போதும் போல கலைஞருக்குப் பினனால் அமர்ந்து குறிப்பெழுதும் சண்முகநாதன் குறித்து வைத்திருப்பதை ஒரு வேளை கலைஞர் நெஞசுக்கு நீதிக்காக தயார் செய்து கொண்டிருக்கக்கூடும்.  

ஆனால் எனக்கு மட்டும் இந்த கலைஞர் திரைக்கதை தயாரிப்பில் வெளிவந்த டெசோ என்ற வாணவேடிக்கை வைபோகத்தில் சில விசயங்களுக்குப் பினனால் உள்ள உண்மைகள் என்னவாக இருக்கும் தினந்தோறும் ஊடகத்தினை, செய்திதாள்களை பார்த்து குறிப்பெழுத தயாராக இருந்தேன்.

ஆனால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருபக்க விசயங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன.  அப்போது தான் ப. சிதம்பரம் என்ற கதாநாயகன் கலைஞரை சந்திக்க மாலையில் கலைஞரிடமிருந்து அந்த அறிக்கையும் வந்தது.  அதாவது வாழ்வுரிமை மாநாடு என்பதாக திடீர் பல்டி அறிக்கை வந்தது. மனதிற்குள் அப்பொழுதே மணியடித்தது.  இதற்குப் பின்னால் மத்திய அரசாங்க்த்தின் ஏதோவொரு விளையாட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேனே தவிர உண்மையான நிலவரங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 

இதில் உள்ள (May 17 Sivanthan CEPA) இயக்கம் சார்பாக திருமுருகன் பேசிய காணொளியைப் பார்த்த பிறகு தான் நான் சந்தேகப்பட்டது சரிதான் என்பதாக முடிவுக்கு வந்தேன்.

வெறுமனே ஈழம், ஈழத்தமிழர்கள், அவர்களின் அவலங்கள், இந்தியா ஒதுக்கிய நிதியில் இதுவரை கட்டிய 50 வீடுகள், தமிழர்கள் வாழுமிடங்களில் சிங்கள மயமாக்கம் என்பது போன்ற பல செய்திகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டே வந்தாலும் இதற்குப் பினனால் உள்ள உண்மையான நிலவரம் தான் என்ன? ஏன் இந்தியா இலங்கை விசயத்தில் இந்த கள்ள மௌனம் சாதிக்கின்றது?  எந்த ஊடகமும் இதன் உண்மையான நிலவரத்தினை இதுவரை எடுத்துச் சொல்லவே இல்லை என்று தான் முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது. 

ஒரு வகையில் பார்க்கப் போனால் கலைஞரும் பகடைக்காய் தான்.  

ஆட்டுவிப்பவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்?. 

இவரும் தன் பங்குக்கு மத்திய அரசின் ஆதரவு இந்த சமயத்தில் இல்லாவிட்டால் தன் குடும்ப கதி அதோகதி என்பதாக ஆடு ராமா ஆடு என்பதாக வயதான காலத்தில் நடிகர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் எழுதப் போகும் நெஞ்சுக்கு நீதியில் இந்த ஈழ அநீதி குறித்து எழுதுவாரா என்று தெரியவில்லை.?


Wednesday, August 08, 2012

கன்னித்தமிழ் இனியென்றும் கணினி தமிழ்

புதியதாக ஒரு ஓசிஆர் மென்பொருளை உருவாக்க வேண்டும் என்கிறபோது அதை உருவாக்க ஏற்ற கணிணி மொழிகளை அறிந்திருக்க வேண்டிய அவசியமாகின்றது. நமது தேவைகளுக்கு ஏற்ப (CODE) கோடிங்களை உருவாக்கி முழுமையாக்க நேரம் மற்றும் உழைப்பு நிறையவே தேவைப்படுகின்றது. அதுவும் தமிழ் மொழி போன்ற இந்திய மொழிகளுக்கு இன்னும் அதிகமாக இரண்டும் தேவைப்படும்.  


இந்நிலையில் ஏற்கனவே உள்ள சில மென்பொருட்களை கொண்டு புதிய மொழிகளுக்கு பயிற்சி அளிக்க முடியும். அவற்றை ocr engine என அழைக்கின்றனர்.Ocrad, Gocr என பலதரப்பட்ட ocr engine-கள் கிடைத்த போதிலும், பரவலாக தமிழ் ocr தயாரிக்க பயன்படுத்தப்படும் engine – Tesseract ocr engine ஆகும்.

Tesseract ஒரு இலவச ஓசிஆர் எஞ்சின் ஆகும். இதை எல்லா வகையான கணிணிகளிலும் பயன்படுத்த முடியும். இதுவரை மூன்று வெர்சன்களில் வந்துள்ள இம்மென்பொருள் ஏற்கனவே பல மொழிகளில் ocr பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றது. தமிழில் ocr மென்பொருளை உருவாக்க இதன் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அடிப்படையாக இதில் ஸ்கேன் செய்யப்பட்ட எழுத்துக்களின் படங்களை கொண்டு ஒரு மொழியை பழக்கப்படுத்துகின்றனர்.

இம்மென்பொருளை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

புதிய மொழி ஒன்றிற்கு பயிற்சியளிக்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்

அதிகமான மென்பொருள் அறிவு இல்லாத போதும், இம்மென்பொருளைக் கொண்டு தமிழ் ஓசிஆர் உருவாக்கும் பணிகளை முயற்சிக்க முடியும் என்கின்றனர். இருப்பினும் மேலே சொன்னது போல உழைப்பும் நேரமும் தேவைப்படுவதால் அது எப்போது முழுமையடையும் என காத்திருக்க வேண்டியுள்ளது. infitt  போன்ற அமைப்புகள் தொடர்ந்து தமிழ் ஓசிஆர் குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றன. கூடுதலாக தனிப்பட்ட முறையிலும் சில முயற்சிகள் நடக்கின்றன. அதன் ஒரு பலனாக tesseract மென்பொருள் கொண்டு தமிழுக்கான சில மொழிப்பயிற்சி தரவுகளை உருவாக்கியுள்ளனர்.

மேலும் அறிந்துகொள்ள சில கட்டுரைகள்:






Monday, August 06, 2012

அடுத்த தலைமுறை தமிழ் -- OCR (Optical Character Recognition)

OCR (Optical Character Recognition) ஓசிஆர் மென்பொருள்களின் முக்கிய நோக்கம் பழைய ஆவணங்கள், புத்தகங்கள் போன்றவற்றை ஸ்கேன் செய்து அவற்றை மீண்டும் புதிய வகையில் பதிப்பிப்பதற்காக, திருத்தம் செய்யும் வகையிலான கோப்புகளாக உருவாக்குவதே ஆகும். மேலும் கோப்புகளை விரும்பும் வகையில் ஃபார்மெட் செய்யலாம், பல்வேறு டிவைஸ்களில் பயன்படுத்தும் வகையில் கோப்புகளை மாற்றியமைக்கலாம். 

ஆங்கிலத்தில் ஏராளமான வர்த்தகரீதியான மற்றும் கட்டற்ற இலவச மென்பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் இந்திய மொழிகளில், அதுவும் தமிழ் மொழியில் சிறப்பான ஓசிஆர் மென்பொருள் இதுவரை உருவாக்கப்படவில்லை.

ஏன் உருவாக்கப்படவில்லை? என ஒரு கேள்வி எழலாம். அதற்கு ஓரளவிற்கு இந்த கட்டுரை பதில் கூறும். தமிழ் ஓசிஆர் மென்பொருள் உருவாக்கப்படுவதில் எழக்கூடிய இடையூறுகள் பற்றி காண்போம்.

Scan:
பெரும்பாலும் ஓசிஆர் மென்பொருட்களின் முக்கிய நோக்கமே பழைய ஆவணங்களை புதுப்பிப்பதே ஆகும். எனவே அவ்வகை பழைய ஆவணங்களின் பதிப்பு சற்று சேதப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே இவ்வகை ஆவணங்களை ஸ்கேன் செய்யும்பொழுது அதில் தெளிவற்ற படங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகின்றது. இந்த தெளிவற்ற படங்களிலிருந்து ஓசிஆர் மென்பொருள் மூலம் துல்லியமான எழுத்து வடிவங்களை கொண்டு வருவது என்பது மிக கடினமான வேலையாகும்.

Font:
தமிழில் Unicode, Non-Unicode என இருவகைப்பட்ட ஃபோண்ட்கள் உள்ளன. யுனிகோட் வகை ஃபோண்ட்களை இணையத்தில் பரவலாக பயன்படுத்தி வருகிறோம். புத்தக பதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் இந்த யுனிகோட் வகை ஃபோண்ட்களை சப்போர்ட் செய்வதில்லை. எனவே இப்படிப்பட்ட மென்பொருட்களில் non-unicode வகை ஃபோண்ட்களே பயன்படுத்தப்படுகின்றது. இவற்றிலும் tscii, tab, tam, shrilipi போன்று பலவகையான ஃபோண்ட்கள் உள்ளன. ஒவ்வொரு பதிப்பாளரும் தனக்கென ஒவ்வொரு வகையான ஃபோண்ட்களை பயன்படுத்துகின்றன. எனவே ஓசிஆர் உருவாக்கப்படும்போது ஒவ்வொன்றின் எழுத்து வடிவம், அவற்றின் நுணுக்கமான வேறுபாடுகள் என எல்லாவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

Script:
Inline image 1
தமிழ் மொழியின் எழுத்து வடிவமைப்பு ஓசிஆர் உருவாக்கத்தில் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சமாகும். மேற்கண்ட படத்தில் காணுமாறு எழுத்துக்கள் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைகின்றது. மேல்பகுதி மற்றும் கீழ்பகுதி பிரிவில் வரும் வளைவுகள் எந்தெந்த எழுத்துக்களுக்கு எப்படி வரும் என்பதையும் நடுவில் உள்ளவற்றோடு அவற்றை ஒத்திசைத்து முழு எழுத்தாக வெளிக்கொண்டு வருவது ஓசிஆர் நுட்பத்தில் மிகவும் கடினமான செயலாகும். மேலும் கா, மெ, போன்ற துணையெழுத்துகள் வரும் எழுத்துக்களை இணைத்து கொண்டு வருவதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியாதகும். இவை தவிர, தமிழ்மொழியில் ஏற்படும் ல-வ, க-சு, ன-ள போன்ற எழுத்துக்களின் வடிவ ஒற்றுமை பல சமயங்களில் குழப்பம் விளைவிக்கும் ஒன்றாகும்.

மேலும் italic, bold போன்ற ஸ்டைல்கள் கலந்து வருவது, பலவகை ஃபோண்ட்கள் கலந்து வருதல், பல்வேறு எழுத்து அளவுகள் கலந்து வருதல், பழைய கிரந்த எழுத்துகள் கலந்திருத்தல், படங்கள் இணைந்திருத்தல், column பிரச்சினை போன்ற எல்லா வகையான இடையூறுகளை சமாளிக்கும் வகையிலான மென்பொருள் தயாரிக்கப்பட வேண்டும்.

இதுவரை தமிழ் ஓசிஆர் மென்பொருள் வளர்ச்சியில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளைக் காண்போம். 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு PonVizhi எனும் தமிழ் ஓசிஆர் மென்பொருளை வெளியிட்டது. இந்த மென்பொருள் ஆவணங்களின் ஸ்கேன்கள் துல்லியமாக இருந்தால் 90% சிறப்பாக எழுத்துக்களை பிரதியெடுக்கின்றன. இருந்தபோதிலும் இந்த மென்பொருள் ஒரு ஆரம்ப நிலை மென்பொருளாகவே இருக்கின்றது. இதுவரை இதில் பெரிதான மேம்பாடுகள் எதுவும் வரவில்லை. இதுபோக இணையத்தில் gTamilOCR எனும் மென்பொருளும் கிடைக்கின்றது. இது எவ்வகையில் செயல்படுகின்றதென தெரியவில்லை.

ஒரு முழுமையான தமிழ் ஓசிஆர் மென்பொருளை உருவாக்க மென்பொருள் வல்லுநர்கள் முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிற்கும் ஓசிஆர் மென்பொருட்கள் உருவாக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. புதிதாக முயற்சிப்பவர்களுக்கும், அதற்கான அடிப்படை மூலங்களும் தேவையான தகவல்களுக்கும் இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. கடினமான உழைப்பு மற்றும் முயற்சியுடன் முனைந்தால் நிச்சயம் மேற்கண்ட அனைத்து இடையூறுகளையும் சரிசெய்யும் வகையிலான மென்பொருளை உருவாக்குவது சாத்தியமே. ஆனால் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. இம்முயற்சி வெற்றியடைந்தால் அடுத்ததாக கையெழுத்துப் பிரதிகளை படியெடுக்கும் Handwriting recognition மென்பொருள் உருவாக்கத்திற்கு அடியெடுத்து வைக்கலாம்.