ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.....
அத்தியாயம் 20
துணிவே துணை
"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன். பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள், அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள், அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன்.
சில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன். அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன். இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது.
பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன். என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல. இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும். ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே? ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை. நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை. ஏன்?
இங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை. முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது. மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது. அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது
"பயத்தோடு வாழப் பழகிக் கொள்" புதிய மின் நூலை தரவிறக்கம் செய்ய