சில தினங்களுக்கு முன் மதுரையில் இருக்கும் நண்பருடன் சமீபத்தில் நடந்து முடிந்த பொன்னமராவதி மற்றும் பொன்பரப்பி கலவரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் என்னைப் போலவே மருத்துவர் ராமதாஸ் மேல் தொடக்க காலத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகச் சொன்னார்.
இந்த கட்டுரை நண்பர் சவுக்கு சங்கர் 2012 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். நேற்று தான் என் கண்ணில் பட்டது.
உங்களால் ஒரு மணி நேரம் ஒதுக்கி முழுமையாக ஒவ்வொரு வரியாக வாசிக்க முடிந்தால் மட்டும் வாசிக்கவும். இல்லாவிட்டால் நேரம் இருக்கும் போது வந்து வாசிக்கவும்.
காரணம் கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் உண்மையான அரசியல், அதற்குப் பின்னால் உள்ள பேரங்கள், யார் சாதிக்கட்சி? சாதிக்கட்சி எப்படி உருவாகின்றது? யார் உருவாக்குகின்றார்கள்? எப்படி வளர்க்கின்றார்கள்? ஏன் வளர்க்கின்றார்கள்? என்ன ஆதாயம் பெறுகின்றார்கள்? சரி நாங்கள் சாதிக்கட்சி இல்லை என்று சொல்லும் கட்சிகள் எப்படி சாதிக்கட்சிகளை பயன்படுத்துகின்றார்கள்? என்ன பேரங்கள்? எப்படி அரசியல் தட்பவெப்ப நிலை மாறுகின்றது? போன்ற நுண்ணிய அரசியல் சார்ந்த பல விசயங்கள் இந்த கட்டுரையில் உள்ளது.
பா.ம.க ஆதரவு? எதிர்ப்பு? போன்ற சின்ன வட்டத்திற்குள் நின்று இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். அதே போல திமுக காலம் காலமாகச் செய்து வரும் அரசியலைப் பற்றி இதன் மூலம் உங்களுக்குப் புரியக்கூடும்.
இந்தக் கட்டுரையை என் தளத்தில் வெளியிடக் காரணம்
1. சவுக்கு தளத்தில் எழுதப்பட்ட பல முக்கிய கட்டுரைகள் காலப்போக்கில் கவனிப்பார் இன்றி தள மாறுதல் காரணமாகக் காணாமல் போய்விடுகின்றது. அவரும் அதைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. எவர் கேட்டாலும் வெளியிட அனுமதி கொடுத்து விடுகின்றார். எந்த எதிர்பார்ப்புமின்றி.
2. நான் வாழ்ந்த ஊரில் இது போன்ற பல சம்பவங்களைப் பார்த்து வளர்ந்தவன் என்ற முறையில் நிச்சயம் இந்தச் சமூகம் மாறுதலாக மாறிவிடும் என்ற நம்பிக்கையில் தான் கடந்த சில வருடங்களாக இருந்தேன். ஆனால் இப்போது சமூகம் பின்னோக்கி வேகமாகச் சென்று கொண்டு இருக்கின்றது.
3.படித்தவர்கள், உயர்பதவியில் இருப்பவர்கள், வெளிநாட்டில் பத்தாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று பாரபட்சமின்றி தங்கள் சாதி அபிமானத்தை ஒரு துளி கூட மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
மேலும் அதனை தங்களுக்கான களமாக வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
நண்பரும் நானும் இது குறித்து வாரந்தோறும் உரையாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த சமயத்தில் இந்த நீண்ட கட்டுரை முக்கியமாகத் தெரிகின்றது.
நன்றி.
*************
அவள் பெயர் அம்பிகா. அவள் கணவன் பெயர் குமார். அவளுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். பெரிய மகளின் பெயர் சுஷ்மிதா. சின்ன மகளின் பெயர் சுஷாந்திகா. மகனின் பெயர் சக்திவேல். சுஷ்மிதா ஒன்பதாவது படிக்கிறாள். சுஷாந்திகா ஏழாவது படிக்கிறாள். சக்திவேல் மூன்றாவது படிக்கிறான். அம்பிகாவின் கணவர் பெங்களுரில் வேலை செய்கிறார்.
அம்பிகா அவள் கணவர் குமாரை காதல் திருமணம் செய்தவள். எப்படிக் காதலித்தீர்கள் என்று கேட்டால் அம்பிகாவின் முகத்தில் வெட்கம். பணியாற்றும் இடத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று வெட்கத்தோடு சொல்கிறாள்.
இந்தப் பெயர்களை வைத்து, அம்பிகாவின் குடும்பம் ஒரு மென்பொறியாளரின் குடும்பமோ, அல்லது ஒரு நடுத்தர வர்க்க அரசு ஊழியர் குடும்பமோ என்று எண்ணத் தோன்றும். அப்படி ஒரு குடும்பமாக இருந்திருந்தால், அம்பிகா இன்றும் சிரித்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு அவள் காதல் கதையை பகிர்ந்திருப்பாள். குழந்தைகளோடு சிரித்து விளையாடிக் கொண்டிருப்பாள்….
அம்பிகா வேறு சாதியில் பிறந்திருந்தால் .. …
இன்று அம்பிகா தன் வாழ்வை இழந்து நிற்கிறாள். உழைத்து உழைத்து அவள் சேர்த்த சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவள் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. அவள் பிள்ளைகள் உடுத்த உடையில்லாமல், பத்து நாட்களாக பழைய உடைகளை அணிந்து தெருவில் அழுக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவள் கணவன், பத்து நாட்களாக பழைய கைலியை கட்டிக் கொண்டு மர நிழலில் அமர்ந்திருக்கிறான். அம்பிகா அடுத்து என்ன என்ற கேள்வியோடு வானத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்…
அம்பிகா செய்த குற்றம் என்ன…. ….. ?
அவள் பறச்சியாக பிறந்து விட்டாள். அவள் செய்த ஒரே குற்றம் பறச்சியாக பிறந்ததுதான். அம்பிகாவின் கணவன் குமார், பெங்களுரில் கட்டிடம் கட்டும் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பவன். மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று, கணவன் மனைவி இருவரும், தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, சிறுகச் சிறுக சேர்த்து 5 பவுன் நகையைச் சேர்த்து வைத்துள்ளனர். தீபாவளிக்காக குடும்பத்துக்கு புதுத்துணி மணிகள் வாங்கவும், அந்த தீபாவளி அன்றே இன்னும் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றும் 20 ஆயிரம் பணத்தை வைத்திருக்கிறாள் அம்பிகா.
கையில் ஆயுதங்களோடு ஆரவாரமாக ஊருக்குள் நுழைந்த கும்பலைப் பார்த்து கலவரமடைந்த அம்பிகா, தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வயல்வெளிக்குள் உயிரைக் காப்பபாற்றிக் கொள்வதற்காக ஓடுகிறாள். இரவு நெடுநேரம் கழித்து திரும்பிய அம்பிகாவின் வீடு எரிந்து கொண்டிருக்கிறது.
ஊருக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல், அம்பிகாவின் வீட்டுக் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த பணத்தையும் நகையையும் கவனமாக எடுத்துக் கொண்டு, மண்ணென்னையை வீடு முழுக்க ஊற்றி தீ வைத்து விட்டுச் சென்று விட்டது.
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஊர் இது.
அப்பு மற்றும் பாலன் என்ற இரண்டு தோழர்களின் களமாக இருந்த ஊர் அது. தமிழக நக்சலைட் இயக்கத்தின் தாய் வீடு அந்த நாயக்கன் கொட்டாய். தலித்துகளுக்காகவும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், முதலாளித்துவ அரசியலையும், கந்து வட்டி அரசியலையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சூளுரைத்த தோழர்களின் களம் அது.
கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு மார்க்சியத்தை மரணக்குழியில் தள்ளி விட்டு, திராவிடக் கட்சிகளின் கால்களை நக்கி, ஓட்டுக்களை பொறுக்கிக் கொண்டிருக்கும் தா.பாண்டியன்களும், ஜி.ராமகிருஷ்ணன்களும், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்களைச் செய்த பல தோழர்களின் களம் அது.
அப்புவும் பாலனும் இறந்து பல ஆண்டுகள் கடந்தாலும் இன்று வரை, காவல்துறை நடுக்கத்தோடு பார்க்கும் ஊர் அது. 75 வயதான முன்னாள் நக்சலைட் அந்த ஊருக்குள் நுழைந்தாலும் ஆயிரம் முறை விசாரித்து விட்டு பிறகுதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்றால் காவல்துறையினருக்கு எந்த அளவுக்கு நாயக்கன் கொட்டாய் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அந்த நாயக்கன் கொட்டாயில்தான் அம்பிகா வசிக்கிறாள். வளர்ப்பு மகன் திருமணத்திற்கு வாட்ச்மேனாக இருந்த வால்ட்டர் தேவாரம் போன்ற பொறுக்கி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட அந்த தோழர்களின் தியாகத்தாலோ என்னவோ… இன்று நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் வசிக்கும் தலித்துகள், சுயமரியாதையோடு வாழ்கிறார்கள். தங்கள் உரிமைகளை உணர்ந்துள்ளார்கள். அம்பிகா குடும்பத்தைப் போல பல தலித்துகள் அங்கே நன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். அத்தனை குடும்பங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். நில உடைமையாளர்கள் வெகு குறைவாகவே உள்ளார்கள்.
பெரும்பாலானோருக்கு கூலி வேலை. கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் ஹோசூர் மற்றும் பெங்களுருக்கு கூலி வேலைக்காகச் செல்கிறார்கள். கிராமப்புறம் என்பதால் அதிக அளவில் செலவுகள் இல்லை. தாங்கள் சம்பாதித்ததை சேர்த்து வைத்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி, திருமணம், போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள். அரசாங்கம் தரும் இலவச தொலைக்காட்சி, அனைத்து வீடுகளிலும் இருக்கிறது. கேபிள் இணைப்பு இருக்கிறது. பெரும்பாலும் சம்பவங்களற்ற வாழ்க்கை. .
அருகாமையில் உள்ள கிராமங்களில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரு சமூகத்தினரிடையே சாதி உண்டு. வன்மம் இல்லை. தாங்கள் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற பிரக்ஞை இரு சமூகத்தினருக்குமே உள்ளது.
ஆனால் மாமன், மச்சான் என்று பாசத்தோடே உறவாடிக் கொள்கிறார்கள். பெண் கொடுப்பது, திருமண உறவுகள் இல்லை. ஆனால், ஒருவர் மற்றவர் வீடுகளுக்குச் சென்று உணவருந்துவது, விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொள்வது என்று இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.
எப்போதாவது இந்த இரு சமூகத்தில் உள்ள இளைஞர்கள் திடீரென்று காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்போது இரு சமூகத்தினரிடையே சல சலப்பு ஏற்படுகிறது. வார்த்தைகளை கவனிக்கவும், சல சலப்பு. இரு சமூகத்தினர் என்பதை விட, இரு குடும்பத்தினரும் பேசுகிறார்கள். சில நேர்வுகளில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், தங்கள் வீட்டுப் பெண்ணையோ, பையனையோ ஒதுக்கி வைக்கின்றனர். சில நேர்வுகளில் சேர்த்துக் கொள்கின்றனர். பெரும்பாலும், இது போல காதல் திருமணம் செய்பவர்கள், வேறு ஊர்களுக்குச் சென்று விடுவதால், அவர்களின், காதலும், திருமணமும் இரு சமூகத்தாராலும் மறக்கப்படுகிறது.
ஆனால், இளவரசன், வித்யா என்ற இருவரின் காதல் இது போல மன்னிக்கப்படவும் இல்லை. மறக்கப்படவும் இல்லை. அவர்கள் காதல் மற்றும் திருமணத்தால் நேர்ந்த நிகழ்வுகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீங்காத வடுவாக நிலைக்கும் அளவுக்கு பதிந்து விட்டன.
இளவரசன் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கிறான். வித்யா இரண்டாம் ஆண்டு நர்சிங் படிக்கிறாள். செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கின்றன. வித்யா ஒரு வன்னியர். இளவரசனோ ஒரு பறயன். எப்படி ஒப்புக் கொள்வார்கள். வித்யா வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க தொடர்ந்து நடந்த நெருக்குதல் காரணமாக, 2012 அக்டோபர் 8 அன்று வித்யா, இளவரசனைத் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இளவரசன் தமிழ்நாடு காவல் துறையில் காவலர் பணிக்காக தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர உள்ளான். அரசுப் பணி கிடைத்த பிறகு, காதலித்தவளை மணம் முடிக்க அவனுக்கு என்ன தயக்கம் இருக்கப் போகிறது… ?
சேலத்தில் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வித்யா வீட்டிலிருந்து தொடர்ந்து நெருக்கடி. வித்யாவைத் தேடுகிறார்கள். நெருக்கடி அதிகமாகவே, இளவரசன், 15 அக்டோபர் அன்று, நேரடியாக சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமாரைச் சந்தித்து, திருமணம் ஆன விபரத்தையும், வித்யா வீட்டில் கொடுக்கப்படும் நெருக்கடியையும் விவரிக்கிறான். சஞ்சய் குமார், உடனே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அஸ்ரா கார்கை சென்று சந்திக்கச் சொல்கிறார். மாலை ஏழரை மணிக்கு, அஸ்ரா கார்க்கை சந்தித்து விபரத்தைச் சொல்லவும், அவர் இரு தரப்பினரையும் வரச் சொல்கிறார்.
வித்யாவின் தந்தை மட்டும் வந்து எஸ்.பியை சந்திக்கிறார். அவர் தந்தை சம்மதம் தெரிவிக்காததால், காவல்துறையினரின் பாதுகாப்போடு, மணமக்களை நல்லம்பட்டியில் உள்ள, இளவரசனின் பாட்டி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
பெண்ணின் தந்தை நாகராஜனோ, வித்யாவை தலை முழுகி விட்டேன். இனி அவள் எனக்கு மகள் இல்லை என்று மனம் வெதும்புகிறார். இவ்வளவு நாட்களாக இருந்த சூழல் மாறியிருக்கிறது.
அருகாமையில் இருந்த கிராமத்தில் உள்ள வன்னியர்களுக்கெல்லாம் தகவல் பரவுகிறது. பெண்ணின் தந்தை நாகராஜனை நெருக்குகிறார்கள். “என்னய்யா ஒரு பறப்பய உன் பொண்ணத் தூக்கிட்டுப் போயிட்டான்… விட்டுட்டு பொலம்பிக்கிட்டு இருக்கியே” என்று தொடர்ந்து அவரை நச்சரிக்கிறார்கள். அவர்களின் நெருக்குதல் பொறுக்க முடியாமல், பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று இளவரசன் குடும்பத்தாருக்கு தூது அனுப்புகிறார். அவர்களோ.. விஷயம் மாவட்ட காவல்துறையினரிடம் போய் விட்டது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரிக்கின்றனர்.
4 நவம்பர் அன்று 25 கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களின் கூட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்கு பாமக ஒன்றியச் செயலாளர் வி.பி.மதியழகன் தலைமை தாங்குகிறார். வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராசா, வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, அதிமுக கணேசன், செல்லங்கொட்டாய் முருகன், மற்றும் அதிமுக, திமுக, மதிமுக, புரட்சிகர முன்னணித் தோழர்கள் கலந்துக்கொண்டு பஞ்சாயத்து செய்கின்றனர். 200 வன்னியர்கள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் தலித்துகள் சார்பாக ஊர் தலைவர் சக்தி, பொடா.பழனி, பொடா.துரை, செயராமன் உள்ளிட்ட 15 பேர் கலந்துக் கொள்கின்றனர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் வன்முறை நடக்கும் என்று அச்சமடைந்த தலித்துகள் காவல்துறைக்கு தகவல் தர, அவர்கள் 20 காவலர்களை பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கின்றனர். இக்கூட்டத்தில் எந்த சமாதானமும் எட்டப்படவில்லை.
நவம்பர் 7 அன்று பெண்ணின் தாயார் தேன்மொழி, மற்றும் உறவினர்கள் சிலர், வெள்ளக்கல் கட்டமேடு என்ற இடத்தில் மணப்பெண் திவ்யாவையும், மணமகன் இளவரசனையும் அழைத்துப் பேசுகின்றனர். பெண்ணின் தாயார் தேன்மொழி, நீ திரும்ப வரவில்லையென்றால், நானும் உன் தந்தையும் தூக்கு போட்டுச் சாக வேண்டியதுதான். திரும்பி வந்து விடு என்கிறார். ஆனால், மணப்பெண் வித்யாவோ, இதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.
ஏமாற்றத்தோடு, திரும்பும் வன்னிய சமூக மக்களுக்கு பெண்ணின் தந்தை நாகராஜன், தூக்கிட்டு தற்கொலை செய்த விபரம் தெரிய வருகிறது. அக்கம் பக்கத்தில் உள்ள வன்னிய கிராமங்களுக்கு, தலித்தோடு ஏற்பட்ட காதல் திருமணத்தால் அவமானம் தாங்க முடியாமல் பெண்ணின் தந்தை நாகராஜன் இறந்து விட்டதாகவும், செய்தி பரவுகிறது. 1500 பேருக்கு மேல் கூடுகிறார்கள். நாகராஜனின் பிரேதத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். இந்தச் சாவுக்கு காரணமான தலித்துகளை கைது செய்யாவிட்டால், தீக்குளிப்போம் என்று மிரட்டுகிறார்கள். காவல்துறையினர் சாலை மறியல் செய்த இடத்தில் குவிக்கப்பட்டு, மறியல் செய்தவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் அருகாமையில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டப்பள்ளி, செங்கல்மேடு ஆகிய இடங்களில் உள்ள தலித் கிராமங்களுக்குள் புகுந்த வன்னியர்கள், ஒவ்வொரு வீடாக சூறையாடுகிறார்கள். தலித்துகளின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.
சத்தம் கேட்ட தலித்துகள், வயல்வெளிகளுக்குள் புகுந்து ஒளிந்து கொள்கிறார்கள்.
முன்கூட்டியே திட்டமிட்டது போல, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள, பீரோ உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் சூறையாடப்படுகிறது. வெள்ளிக் கொலுசு உட்பட, அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன.
கையோடு கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்ணென்னையை ஊற்றி, ஒவ்வொரு வீடாக தீ வைக்கப்படுகிறது. பெண்கள் யாராவது உள்ளே இருந்தால், ஓங்கி ஒரு அறை அறைந்து பணத்தையும் நகையையும் எடுத்துத் தருமாறு மிரட்டுகிறார்கள். உயிருக்குப் பயந்த பெண்கள் நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொடுத்து, வந்த வன்முறைக் கும்பலின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறார்கள். ஓடிப்போய் விடு என்று சொல்லி விட்டு, வீட்டுக்குத் தீ வைத்துச் செல்கிறார்கள்.
ஒரு லாரியை எடுத்து வந்து வெண்கல பாத்திரங்களை விற்கும் ஒருவரின் வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான புதுப் பாத்திரங்களை அள்ளிச் செல்கிறார்கள். கருணாநிதி கொடுத்த இலவச தொலைக்காட்சியை உடைத்தெரிந்தவர்கள், எல்.சி.டி டிவிக்களை பத்திரமாக எடுத்துச் செல்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு வீடாக 300 வீடுகள் சூறையாடப்படுகின்றன. காவல்துறை இரவு 10 மணிக்கு வந்து, வயலில் ஒளிந்திருந்த மக்களை அழைத்து வந்த பிறகு, தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.
கொளுத்தப்பட்ட இந்த மக்களின் வீடுகள் வன்முறை வெறியாட்டத்தின் நினைவுச் சின்னங்களாக அப்படியே இருக்கின்றன. அரசு 50 ஆயிரம் உடனடி நிவாரணமாக அறிவித்துள்ளது. மன்னிக்கவும், ஜெயலலிதா அறிவித்துள்ளார். வன்னியர்கள் தரப்பில் காவல்துறை ஏறக்குறைய 100 பேர்களை கைது செய்துள்ளது. தலித்துகள் தரப்பிலும், நாகராஜனை தற்கொலைக்குத் தூண்டியதாக 10 பேரை கைது செய்துள்ளது.
இந்த தலித் கிராமத்தில் உள்ள வீடுகள் முடிந்தவுடன், 20 அடி தூரத்தில் நான்கு வன்னியர் வீடுகள் உள்ளன. அந்த வன்னியர் வீடுகளின் ஓடுகள் கூட இன்று வரை உடைக்கப்படவில்லை. ஒரே ஒரு காவலர் மட்டும் அந்த வீடுகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்.
திருமண உறவு முறைகளைத் தவிர்த்து, இயல்பாக பழகி வந்த இரு சமூகத்தினருக்கிடையே திடீரென்று எப்படி வந்தது இந்த மோதல்… ? மாமன் மச்சான் என்று உறவு முறை சொல்லி அழைத்து வந்தவர்கள், திடீரென்று ஒரு சமூகத்தினரின் சொத்துக்களை ஏன் வெறி கொண்டு சூறையாடுகிறார்கள்… ?
18 மாதங்களுக்கு முன்னால், கொண்டம்பட்டியில் ராஜு மற்றும் வேடியம்மா என்பவர்களின் மகன், நேதாஜி, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். இருவரும் கல்லூரியில் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிக்கையில் காதல் ஏற்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அறிந்த வன்னிய சமூகத்தினர் பையனின் தாயார் வேடியம்மாளை கடத்திச் செல்கிறார்கள்.
வேடியம்மாவின் கணவர் ராஜு, காவல்துறையில் புகார் தெரிவிக்கிறார். வேடியம்மா கடத்தப்பட்டதாக, வன்கொடுமைச் சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசுகிறார்கள். வன்னியர்கள் பையனின் தாயார் வேடியம்மாவை விடுவிக்கிறார்கள். காவல்துறையினர், யாரையும் கைது செய்யாமல் அனுப்பி விடுகிறார்கள்.
இந்தத் திருமணமும் ஒரு தலித் இளைஞனுக்கும், வன்னிய பெண்ணுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளது. அப்போது நேராத வன்முறை இப்போது ஏன் நேர்கிறது… ? திடீரென்று வன்னியர்கள் வீராவேசத்தோடு கிளர்ந்தெழக் காரணம் என்ன ?
“எங்களுக்குச் சாதி வெறி பிடித்து இருக்கிறது என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் எவனுக்கு சாதி வெறி இல்லை? தி.மு.க-வில் உள்ள செட்டியார்களும் முதலியார்களும் அடுத்த சாதியிலா சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள்?
அடுத்த முதலமைச்சரா யார் யாரோ வருவாங்கன்னு பத்திரிகைகாரங்க சொல்றாங்க… ஒரு வன்னியன் வருவான்னு எழுதலையே… ஏன்? எல்லாம் சாதி வெறி”
நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியிலதான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சுவைச்சா… தொலைச்சுப்புடுவேன்”
இப்படிப் பேசியவர் யார் தெரியுமா ? டாக்டர் ராமதாஸின் நெருங்கிய உறவினரும், பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு.
இந்த ஆண்டு மே மாதம், மகாபலிபுரத்தில், வன்னிய இளைஞர் பெருவிழா நடந்தது. அந்த விழாவில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் காடுவெட்டி குரு பேசிய பேச்சுதான் இது. குருவின் இந்தப் பேச்சை ஒட்டி, மகாபலிபுரம் போலீசார், குரு மீது, வழக்கு பதிவு செய்தனர்.
மே மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் குருவை ஏன் கைது செய்யவில்லை என்பது, எக்ஸ்டென்ஷன் ராமானுஜத்திற்கே வெளிச்சம்.
சரி… குரு திடீரென்று ஏன் இப்படி ஆவேசமாக பேசுகிறார்.. ?
மருத்துவர் ராமதாஸ் யார் என்பது பற்றி சற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள சவுக்கில் முன்பு வெளி வந்த இரு கட்டுரைகளைப் படியுங்கள்.
2009 பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த ராமதாஸ், 2011 சட்டமன்றத் தேர்தலிலாவது இழந்த தன் செல்வாக்கை மீட்டு எடுக்கலாம் என்று திட்டமிட்டார். இந்தத் தேர்தலிலும் அவருக்கு படு தோல்வியே. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு சதவிகிதம் கடுமையாக சரிந்தது.
வன்னியர் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று பிளிறிக் கொண்டிருந்த மருத்துவர் அய்யாவுக்கு, விழுந்த பெரிய அடி… அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. அந்தத் தீர்ப்பினால் கலங்கியிருந்த ராமதாஸூக்கு விழுந்த அடுத்த அடி… மருத்துவர் சின்ன கொய்யா… மன்னிக்கவும், சின்ன அய்யா என்று அழைக்கப்படும் அன்புமணி மீது டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த இரண்டு குற்றப்பத்திரிக்கைகள். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த இரண்டு குற்றப் பத்திரிக்கைகளிலும், அன்புமணி வசமாக சிக்கியுள்ளார் என்று தெரிகிறது.
கருணாநிதியின் மகன், அழகிரி மற்றும், ராமதாஸின் மகன் அன்புமணி, இருவரில் யார் சிறந்த தொடை நடுங்கி என்று போட்டி வைத்தால், யார் சிறந்தவர் என்று தேர்ந்தெடுப்பது அவ்வளவு சிரமம்.
அப்படி ஒரு “தைரியசாலி” அன்புமணி.. அமைச்சராக இருந்தபோது துட்டு வாங்குவதற்கு இருந்த தைரியம், தற்போது வழக்கை சந்திப்பதில் இல்லை.
நைனா.. என்ன காப்பாத்து நைனா என்று டாக்டர் ராமதாஸை தொடர்ந்து நச்சரிக்கவும், ராமதாஸும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அன்புமணியின் மாமனாருமான கிருஷ்ணசாமி மூலமாக, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேலை தொடர்ந்து முயற்சி செய்தும் யாருமே சட்டை கூட செய்யவில்லை.
ராமதாஸ் பேரனுக்காக சம்பந்தம் செய்துள்ள, காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோவின் உறவினர் மூலமாக காங்கிரஸ் கட்சியை அணுகினாலும், பயனில்லை.
2014 தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை சட்டை செய்யும் என்று தோன்றவில்லை. அதிகபட்சம் ஒரு எம்.பி சீட் கொடுத்து வேண்டுமென்றால் வாங்கிக் கொள், இல்லையென்றால், தைலாபுரம் தோட்டத்திலேயே புல் புடுங்கு என்று சொல்லிவிடுவார்கள் என்பதை ராமதாஸ் நன்கு உணர்ந்திருக்கிறார்.
தன்னை ஒரு தலைவராக உயர்த்தி, பல கோடிகளை கொள்ளையடிக்க உதவியது வன்னியர்களின் ஆதரவே. அந்த ஆதரவே தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதை ராமதாஸ் நன்றாகவே உணர்ந்துள்ளார். இழந்த தன் வன்னிய இன ஆதரவை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராமதாஸ் தான் வளர்த்து வரும் வேட்டை நாயான காடுவெட்டி குருவை குரைக்கச் சொல்லியிருக்கிறார்.
ஒரு இனத்தின் ஆதரவை பெறுவதற்கு வன்முறையை விட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை. பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் நிகழ்ந்த கலவரங்களையும், அதனால் பிஜேபி பெற்ற ஆதரவையும், தற்பாது எவ்வித வன்முறையும் இல்லாததால் தங்களுக்குள்ளேயே ஒருவர் டவுசரை ஒருவர் மாற்றி மாற்றி கழற்றிக் கொண்டிருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
கிழட்டு நரியான ராமதாஸ் தற்போது மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் தந்திரத்தை கையெடுத்துள்ளார். சாதி வெறியைத் தூண்டி வன்முறையை நடத்தினால் மட்டுமே வன்னியர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என்பதை ராமதாஸ் நன்றாகவே உணர்ந்துதான், காடுவெட்டி குரு என்ற வேட்டை நாயை அவிழ்த்து விட்டுள்ளார். எப்போதெல்லாம் ராமதாஸுக்கு வசதியோ, அப்போதெல்லாம் குருவை குரைக்கச் சொல்வார். அந்த நாயும் நன்றாகக் குரைத்தால்தான் பிஸ்கட் கிடைக்கும் என்று கேவலமாக குரைக்கும்.
கருணாநிதிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்பதற்காக, 2008ல், குருவை குரைக்கச் சொன்னதும், அந்த நாய் எப்படிக் குரைத்திருக்கிறது பாருங்கள்…
“2008ம் ஆண்டு பாமகவுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக மலரப் போகிறது. ஆண்டிமடம் எம்எல்ஏ (திமுக) சிவசங்கருடைய அப்பாவாலேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை. இவன் நேத்து வந்த பையன். அமைச்சர் ராஜாவோட (மத்திய திமுக அமைச்சர்) எடுபிடி. அந்த ராஜாவோ கருணாநிதிக்கு எடுபிடி. இந்த ராஜாவுக்கு ஒரு எடுபிடி இருக்கான். அவன்தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்.
எங்க மாவட்டச் செயலாளர் வைத்தி மீது இந்த கலெக்டர்தான் வழக்கு போடச் சொல்லியிருக்கான். அவன் போடச் சொன்னானா… அல்லது அவனுக்கு தலைவனான அந்த கருணாநிதி போடச் சொன்னானா தெரியாது. நீ என்ன வழக்கு வேண்ணா போடு, ஒண்ணும் புடுங்க முடியாது. என் …. கூட புடுங்க முடியாது.
எங்க கட்சி பொறுப்பாளர்கள் யார் மேல கேஸ் போட்டாலும், இந்த ராஜா, சிவசங்கர் அவனுங்களுக்குத் தலைவன் எவனும் உயிரோட இருக்க முடியாது.
குடும்பத்தையே உயிரோட எரிச்சுடுவோம். இந்த பெரம்பலூர் கலெக்டர் மாமா வேல பாக்குறான். அந்த மாமா சொன்னான்னு இந்த போலீஸ் மாமாக்கள் ஆட்டம் காட்றானுங்க…
ஒரு போலீஸ்காரன்கூட அவனுங்க… (போலீசாரின் குடும்பத்தினரை சுட்டிக் காட்டி மட்டமாக பேசுகிறார்)…ஜாக்கிரத…
நாங்க மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றானுங்க திமுககாரனுங்க. ஏன் வசூல் பண்றது இவனுங்களுக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமையா… ஆமாண்டா… நாங்க வசூல் பண்ணோம். என்ன பண்ணிடுவ… மிரட்டி தாண்டா வசூல் பண்ணோம். உன்னால என்ன புடுங்க முடியும்?
டேய் சின்னப் பையன் சிவசங்கரா… உங்க அப்பன்கிட்டப் போய் என்னப் பத்தி கேட்டுப் பாருடா… வைத்தியை மட்டும் கைது பண்ணியிருந்தா மவனே ஆண்டிமடம் தொகுதில இந்நேரம் இடைத்தேர்தல் தாண்டி…
வைத்தியை உள்ளே அனுப்பிட்டு நாங்க வாயில விரல வச்சிக்கிட்டிருப்பமா… இனிமே திமுக்காரன் எவனாவது பாமகவை எந்த பொதுக் கூட்டத்தில் தாக்கிப் பேசினாலும் அங்கேயே வெட்டுங்கடா… இந்த ராஜாவோ அந்த கருணாநிதியோ ஒரு ம…ம் புடுங்க முடியாது. கருணாநிதியால இனி நிம்மதியா ஆட்சி செய்ய முடியாது. அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்.
இந்த ஆற்காடு வீராசாமி ஆந்திராவிலருந்து வந்த செ…டு (மிருகத்தை சொல்லி திட்டுகிறார்).. இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம்ம வன்னியர் சங்க கல்விக் கோயில பொறம்போக்குல கட்டியிருக்கிறதா சொல்றான்.
மவனே… தைரியம் இருந்தா ஒரு கமிஷன் போட்டு நிலத்தை சர்வே செய்து பாரு. ஊராட்சித் தேர்தலில் திமுக்காரனுங்க காட்டிக் கொடுத்ததும் கூட்டிக் கொடுத்ததும் ஊருக்கே தெரியும்டா… மானங்கெட்ட பயலுங்களா.
27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுற ஒரே தலைவன் யாரு… இந்தியாவிலயே நம்ம டாக்டரய்யாதான். நீ திராவிடம் பேசி நாட்டை ஏமாத்திக்கிட்டிருக்கே. ரெண்டு கோடி மக்கள் உள்ள நம்ம சமுதாயத்துக்கு 3 அமைச்சராம். ரெண்டு சதவிகிதம் கூட இல்லாத ஆற்காடு வீராசாமி குரூப்புக்கு 2 அமைச்சராம். என்னங்கடா விளையாடறீங்களா…
2011ல் பாமகதான் தமிழ்நாட்டுல ஆட்சி அமைக்கும். இதைக் கருணாநிதியோ ஜெயலலிதாவோ தடுக்க முடியாது.
கருணாநிதியே, எங்களுக்கு முகவரி இருக்கு. உனக்கிருக்கிறதா… திமுக கூட்டணியில் பாமதான் இருக்கு. வன்னியர் சங்கம் இல்ல. சும்மா எங்களை மிரட்டிப் பார்க்காதே. தாங்க மாட்டே… நீ எத்தனை வழக்குப் போட்டாலும் சந்தோஷமா ஜெயிலுக்குப் போவோம், ஆனா வெளிய உள்ள எங்க ஆளுங்க என்ன செய்யணுமோ அதைச் செய்துடுவாங்க. அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல.
எங்க டாக்டரய்யா டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்றார். காரணம், அதனால நஷ்டம் எங்க பாட்டாளி மக்களுக்குத்தான். டாஸ்மாக் மூலம் 9000 கோடி ரூபாய் வருதுன்னு சொல்றே. இது அத்தனையும் எங்க பாட்டாளி மக்கள் பணம். எந்த… (பிராமண சமூகத்தினரை சுட்டிக் காட்டி) டாஸ்மாக்குக்கு வந்து குடிக்கிறான்… பொண்டாட்டி பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு எங்க விவசாய மக்கள்தானே குடிச்சி அழியறாங்க… அவங்க தாலிய அறுத்துதானே நீ இவ்ளோ கல்லா கட்ற!
இந்த அமைச்சர் ராஜாவுக்கு பூர்வீக சொத்து எவ்வளவு? இன்னிக்கு எத்தனை நூறு கோடி சேர்த்திருக்கான். இதுக்கு காரணம் திமுகாரன் ஓட்டா… எங்க ஓட்டுடா… நாங்க போட்ட ஒன்னரை லட்சம் ஓட்டுலதான் நீ இன்னிக்கு ஜம்பமா சம்பாதிக்கிற… நீதான் எங்காளுங்க மேல கேஸ் போடச் சொன்னியா… மவனே தொலைச்சிடுவேன்!.
மரியாதையா எல்லா கேஸ்களையும் வாபஸ் வாங்கிட்டு வேற வேலயப் பாரு…”
-இதுதான் குரு பேசிய முழு பேச்சு விபரம்.
குருவின் பேச்சில் உள்ள பிரசுரிக்கவே முடியாத அளவுக்கு மட்டகரமான வார்த்தைகளை ‘எடிட்’ செய்துள்ளோம். ஆதாரம் ஒன் இண்டியா.
இந்தப் பேச்சை குரு பேசியபோது, அருகில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் ராமதாஸ்.
சுத்தமாக சூடு சொரணையே இல்லாத, காண்டாமிருகத் தோல் படைத்த கருணாநிதிக்கே இந்த பேச்சு சொரணை வர வைத்து விட்டது. இந்தப் பேச்சை கேட்ட கருணாநிதி, மறுநாள் நடந்த ஒரு திருமண விழாவில், இப்படியெல்லாம் பேசும் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்று அறிவித்து, பாமக விலக்கப்பட்டது என்று அறிவித்தார். 2009 தேர்தல் திருவிழாவில் போயஸ் தோட்டத்தின் வாசலில் செருப்பு காண்ட்ராக்ட் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த ராமதாஸ், கருணாநிதி எப்படியாவது கூட்டணியை விட்டு வெளியே அனுப்பினால் போதும் என்று மகிழ்ச்சியானார்.
குரு கைது செய்யப்பட்டார். குருவை கைது செய்ததோடு விடாமல், குரு மீது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தை போட்டார் கருணாநிதி. தேசியப்பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டவுடன், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பாமக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம், மறுத்து விட்டது. காடுவெட்டி குரு போன்ற அப்பாவிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று உருக்கமாக வாதாடினார் குருவின் வழக்கறிஞர்.
நீதிமன்றம் குருவை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது சரியே என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம்,
காடுவெட்டி குரு ஒரு ரவுடி என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பட்டவர்த்தனமாக சொல்லியது.
இது ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையே என்று ராமதாஸ் மீண்டும் கருணாநிதிக்கு தூது அனுப்பினார். எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்தால் போதும் என்று இருந்த கருணாநிதி குரு மீதான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தையே விலக்கிக் கொண்டார். அப்போது உறவைப் புதுப்பிக்க இந்த இரு கபடவேடதாரிகள் என்ன நாடகம் போட்டார்கள் தெரியுமா ?
“இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தை இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்”.
மீண்டும் வன்னியர்களின் வாக்கு வங்கிகளைப் பெற்றால்தான் எப்படியாவது, பிள்ளையை வழக்கிலிருந்து காப்பாற்ற முடியும், 2014ல் பழையபடி 5 சீட்டாவது பெற முடியும் என்று வன்னியர்கள் மீது கரிசனத்தை பொழியத் தொடங்கினார் ராமதாஸ்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற திருமண விழாவில் ராமதாஸ் பேசியது…
“வன்னியர் சங்கத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி, கடலில் குதிக்க சொன்னாலும் தயாராக இருந்த வீரர்கள் இன்று தளபதிகளாக உள்ளனர். கடந்த கால போராட்டங்களில் அதிகமாக சிறை சென்றவர்கள் செஞ்சி இளைஞர்கள். இளைஞர் படையினர், இளம்பெண்கள், மாணவர் சங்கத்தினர் என வன்னியர்கள் திரண்டு மே.5-ந் தேதி மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
அங்கு நடைபெற உள்ள வன்னியர் சங்க சித்திரை பெருவிழாவில் 25 லட்சம் வீர வன்னியர்கள், இளைஞர்கள் கூடுகிறார்கள். சத்தியம் கூற, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆண்டே தீரும். 2016-ல் வன்னியர் ஆட்சி அமைந்தே தீரும் என அவர்கள் கூறுகின்றனர். இது வரை வன்னியர்களை ஏமாற்றிய திராவிட கட்சிகளை வீழ்த்துவது, ஒழிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம். நாங்கள் இனிவேறு எந்த சின்னத்துக்கும் ஓட்டுபோட மாட்டோம்.
இலவசங்களை கொடுத்து சாராயகடை, சினிமா தியேட்டர்களை திறந்து சாராயம் குடிக்க சொன்னவர்களின் மாயை இனிமேல் எடுபடாது. 4 ஆட்டுக்குட்டிகளை கொடுத்து பெண்களை வாழ சொல்கிறார்கள். இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி விடுவார்கள் என இன்னமும் ஏமாற்றுகின்றனர். 1980-ம் ஆண்டில் என்னுடன் வந்தது போல் தற்போதும் என்பின்னால் வரவேண்டிய நேரம் வந்து விட்டது.
வாருங்கள், மற்ற கட்சிகளுக்கு இனிவேலை இல்லை. 2016-ம் ஆண்டோடு திராவிட கட்சிகளுக்கு மூட்டை கட்ட போகிறோம். அவர்களுடைய அத்தியாயம் முடங்க போகிறது. புதிய பாதையை தொடங்க வேண்டும், புதிய அரசியலை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழர்களுக்கும் தர உள்ளோம். இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார்.
நீங்கள் தயாரா? நீங்கள் இதுவரை எந்த திட்டம் கொடுத்தீர்கள்? ரோஷத்துடன் கூடிய வன்னியர்கள் மற்ற கட்சிகளில் இருக்க வேண்டாம். நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சியார் போன்றவர்களின் இன்றைய நிலை என்ன? 2016-ல் இதனை மாற்றி காட்டுவோம். இனியும் நாம் கோழைகளாக இருக்க மாட்டோம். நமது வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் இதுவரை ஒரு வன்னியர் கூட ஆட்சி புரியவில்லை.
நீங்கள் மட்டும் ஆதரவு கொடுத்தால் போதாது. உங்கள் வாரிசுகளையும் அ.தி.மு.க., தி.மு.க.வில் இருந்து விலக வைத்து வன்னியர் சங்க கொடியை பிடிக்க செய்ய வேண்டும். மே.5-ந் தேதி மாமல்லபுரம் வர கூறுங்கள். உங்கள் வாழ்க்கை மாறிவிடும், இதுவரை எம்.எல்.ஏ., சேர்மன், கவுன்சிலர் பதவிகளை தவிர்த்து வேறு என்ன கண்டீர்கள் எழுதிவைத்துக் கொள்ளுங்கள், 2016-ல் வன்னியர்கள் ஆட்சி மலரும் இது உறுதி. இதனை நோக்கி நமது பயணம் தொடரும். “
ஜுலை 2012ல் பேசியது….
“உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிரளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம்”
ஆகஸ்ட் 2012ல் பொதுக்கூட்டத்தில் பேசியது.
“வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை தான் நாம் கேட்கிறோம். பலருக்கு இட ஒடுக்கீடு என்றால் என்ன என்பதே தெரியவில்லை. 100 இடங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் நமக்கு 20 இடங்களை தனியாக கேட்கிறோம். இதுதான் இட ஒதுக்கீடு.
இந்த இட ஒதுக்கீட்டை மற்ற ஜாதிக்காரர்கள் நமக்காக கேட்பார்களா? கேட்க மாட்டார்கள். நமக்கு நாம் தான் கேட்க வேண்டும். இட ஒதுக்கீட்டை நமக்காக மட்டும் கேட்கவில்லை மற்ற ஜாதிகளுக்காகவும் தான் கேட்கிறோம். நம்மிடம் ஒற்றுமை இல்லை. இதற்காக இந்த ஒற்றுமைக்காக 35 வருடமாக போராடி வருகிறேன். இப்போது தான் ஒற்றுமை வந்துள்ளது. எப்படி கூறுகிறேன் என்றால் ஜெ.குரு உருவாக்கியுள்ள மஞ்சள் படையை பார்த்து தான் ஒற்றுமை வந்து விட்டது என கூறுகிறேன்.
மஞ்சள் நிறமும், அக்னி கலசமும் வன்னியனின் அடையாளம். நாம் ஆட்சிக்கு வந்தால் யாதவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்போம். ஏனெனில் வன்னியர்களும், யாதவர்களும் மாமன், மச்சான்கள் தான். யாதவர்களும் 95 ஜாதிகளில் ஒருவராகதான் உள்ளனர். நம்மை போல அவர்களுக்கும் போராட தெரியாது. செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் போராட்டம் ஒரு அடையாள போராட்டம் தான். அதை தொடர்ந்து ஜெயலலிதா தனி இட ஒதுக்கீட்டை தரவில்லை என்றால் வருகிற 2013ம் வருடத்தில் நாம் நடத்தும் போராட்டத்தால் நாடு தாங்காது.
தமிழ்நாட்டில் 12 சிறைகள் உள்ளன. அதில் இருக்கும் கைதிகளை தவிர்த்து 10 ஆயிரம் பேரை அடைக்கலாம். அந்த போராட்டத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் நாம் அடுத்த ஆண்டில் சிறையை பார்ப்போம். கருணாநிதியிடம் தனியாக இட ஒதுக்கீடு கேட்டோம் 107 ஜாதிகளை சேர்த்து கொடுத்தார். முழுமையாக கிடைக்கவில்லை. செப்டம்பர் 17 போராட்டம் சைவ போராட்டம் தான். இதற்கு பிறகு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் 1-ல் 2 பார்த்து விடுவோம். 130 வருடங்களாக வன்னியர் முன்னுக்கு வரவில்லை. இந்த ஜாதியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் என்னுடைய பேச்சை கேட்டு ஒருமுறை மாம்பழத்திற்கு வாக்களித்தால் இந்த நிலை மாறும்.“
இந்த நெருக்கடிக்கு முன்பெல்லாம், தான் ஒரு சாதிக்கட்சித் தலைவர் என்ற அடையாளத்தை துறக்க விரும்பிய ராமதாஸ், தமிழ் வழிக்கல்வி, சமூக நீதி, மது ஒழிப்பு, ஈழம், என்று அறிக்கைகளும், மேடைப்பேச்சுக்களும் பேசிக் கொண்டிருப்பார். தனக்கு வேண்டிய பத்திரிக்கையாளர்களை வைத்து, ராமதாஸ் ஒரு வாழும் பெரியார் என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பார்.
தற்போது அக்னி கலசத்தின் கீழ் எரியும் நெருப்பு மங்கி விட்டதால், சாதி வெறி என்ற நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார் ராமதாஸ்.
இப்படியெல்லாம் வன்னியருக்காக உயிரைக் கொடுப்பேன், மயிரைத் திரிப்பேன் என்று பேசும் ராமதாஸ், வன்னியர்களுக்காகவும் எதுவும் செய்ததில்லை. அக்டோபர் 10 அன்று ராமதாஸின் மகள் வயிற்றுப் பேரன் முகுந்தனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திற்கு ராமதாஸ் வரதட்சிணையாக என்ன வாங்கினார் தெரியுமா ? ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரும், போயஸ் தோட்டத்தில் ஒரு பங்களாவும். இப்படி வாங்கும் நிலையில்தான் மற்ற வன்னியர்கள் இருக்கிறார்களா… ?
ராமதாஸின் இந்தச் செயல், இனவெறியைத் தூண்டி யூதர்களை அழித்துக் கொன்ற ஹிட்லர் மற்றும் கோயபல்ஸின் செயல்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. ராமதாஸ் அரசியல் உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒரு விஷக்கிருமி. இந்த விஷக்கிருமி, தமிழினத்தையே அழித்து விடும்.
ராமதாஸ் போன்ற விஷக்கிருமிகளைக் கண்டிக்க வேண்டிய புரட்சியாளர்கள், திருச்சியின் மூலையில் “பிராமணாள் கபே” என்ற பெயர் இருக்கிறது என்பதற்காக ஒரு ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்.
பார்ப்பனின் வேதம் சாதிக்கு அடிப்படையாக இருந்தது என்றால், அந்த பார்ப்பனீயத்தின் மறு வடிவமாக மாறி தலித்துகளின் மீது தாக்குதல் தொடுப்பது இடைநிலைச் சாதியினர்தானே.. ? தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்து விட்டு, பெருமையாக தேவர் ஹோட்டல் என்று மூலைக்கு மூலை இருக்கும் ஹோட்டல்களுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள் என்றால், தேவர் என்பது சாதி, பிராமணாள் என்றால் வர்ணம். அது ஏஷியன் பெயின்ட்ஸ், இது நெரோலாக் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். தேவர் ஹோட்டல், செட்டிநாடு ஹோட்டல்கள் இருக்கையில் பிராமணாள் ஹோட்டல் இருந்தால் என்ன குடி முழுகி விடப்போகிறது ? அந்த ஹோட்டலை மூடி விட்டால் வர்ணாசிரம தர்மமே அழிந்து விடுமா ?
தலித்துகளின் சொத்துக்களை சூறையாடி, அவர்கள் வாழ்வாதாரங்களை அழித்து, அவனோடு தீராமல் மோதிக் கொண்டிருக்கும் இடைநிலைச் சாதியினரின் பெயரால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாமாம்… ஆனால் பிராமணாள் என்ற பெயர் இருக்கக் கூடாதாம்….
பிராமணாள் என்ற பெயருக்கு எதற்காக எதிர்ப்பு என்றால், மழை சரியாகப் பெய்யவில்லை என்றால் கூட, அதற்கு ஆரிய ஆதிக்கமே காரணம், பார்ப்பனீயமே அதன் வேர் என்று பேசுவது மற்ற ஆதிக்க சாதியினரின் சாதி மனப்பான்மையை தலித்துகளுக்கு எதிராக தூக்கி நிறுத்த உதவுகிறது என்பதே. பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன், பார்ப்பனியமே எல்லா தீமைகளுக்கும் காரணம் என்று முண்டா தட்டுபவர்கள், என் மகனுக்கோ மகளுக்கோ, தலித் சமூகத்திலிருந்து மட்டுமே திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லுங்கள்….
கேட்டால், ‘திருமணம் என்பது தனி மனித உரிமை, தண்ணி குடிக்குது தஞ்சாவூரு எருமை’ என்று விளக்கம் கொடுப்பார்கள்.
பார்ப்பனீயமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறும் “புரட்சியாளர்கள்” சாதி மறுப்புத் திருமணம் செய்தால் சும்மா விடமாட்டேன் வெட்டுவேன் என்று பகிரங்கமாக அறிவித்த ஒரு ரவுடிப்பயலுக்கு கொம்பு சீவி விட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும் ராமதாஸை பகிரங்கமாக ஏன் கண்டிக்க மறுக்கிறார்கள் ? கண்டிக்க மறுக்காமல் அவர்கள் சாதிக்கும் கள்ள மவுனம், ராமதாஸுக்கு அவர்களும் உடந்தை என்பதைத் தவிர்த்து வேறு என்ன பொருளை உணர்த்துகிறது ?
பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கைகள், கவுண்டர்கள், செட்டியார்கள், வன்னியர்கள், முதலியார்கள், தேவர்கள், முத்தரையர்கள், கள்ளர்கள் என்று இடைநிலைச் சாதியினரின் சாதிய ஆதிக்கத்தை தலித்துகளின் மீது நிறுவவவே உதவியிருக்கிறது. பெரியாரின் படத்தைப் போட்டுக் கொண்டு ஆட்சி நடத்தும் இரண்டு கட்சிகளுமே தலித் விரோதிகளாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன.
சமூக நீதிக் காவலர், வாழும் பெரியார், தமிழ் குடிதாங்கி, என்றெல்லாம் தன்னையே அழைத்துக் கொண்டு புளகாங்கிதம் அடையும் ராமதாஸ், கருணாநிதிக்கு நிகரான தீயசக்தி. அவர் ஒரு சாதிச் சங்கத்தின் தலைவர் மட்டுமே. அவருக்கும் பாட்டாளிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மனித இனத்தை நேசிக்கும், தமிழ் மொழியையும், இனத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் ராமதாஸை புறக்கணிக்க வேண்டும்.
ராமதாஸோடு எந்தப் போராட்டத்துக்காகவும் மேடையேறக் கூடாது. தன் சுயநலத்துக்காக, ஏழை தலித்துகளின் வீட்டை தீயிட்டு அந்த நெருப்பில் குளிர்காயும் டாக்டர் ராமதாஸ் என்ற தீயசக்தி, தமிழக அரசியலிலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.
இந்த தீயசக்தியை ஒழித்துக் கட்டுவதே, பாதிக்கப்பட்ட தருமபுரி தலித் மக்களுக்கும், தமிழினத்திற்கும், நாம் செய்யும் மிக மிகப்பெரிய உதவி.