"இன்றைக்கு எனக்கு பிறந்த நாள் சார்"
தட்டு நிறைய சாக்லேட்டும், வித்தியாசமான கேக் வகைகளையும் கையில் வைத்துக் கொண்டு என் அறையில் நுழைந்து நீட்டிக் கொண்டிருந்த பெண்ணுக்கு 22 வயது இருக்கக்கூடும். மென்மையாக சிரித்துக் கொண்டே ஒரே ஒரு சாக்லேட் மட்டும் எடுத்துக் கொண்டு "வாழ்த்துக்கள்" என்றேன்.
"சார் கேக் எடுத்துக்கங்க? வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கும் எடுத்துக்கிட்டு போங்க" என்றார்.
"இல்லம்மா போதும்" என்று சொல்லி விட்டு அனுப்பி வைத்தேன்.
அலுவலகத்தில் தினந்தோறும் யாரோ ஒருவர் பிறந்த நாள் என்று புதிய உடையில், கைநிறைய இனிப்புகளோடு வந்து கொண்டே இருக்கின்றார்கள். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று மறக்காமல் கொடுக்கின்றார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எவரும் கொண்டாடி நான் பார்த்ததில்லை. அவர்களின் கொண்டாட்டமெல்லாம் எப்போதும் போல தினந்தோறும் இரவு நேரத்தில் தான் தொடங்குகின்றது.
சாதாரண பதவிகளில் இருப்பவர்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் இங்கே ஏதோவொரு கொண்டாட்டம் தேவையாக இருக்கின்றது.
குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்களில் ஆர்வம் அதிகமாகவே இருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் மாறிய சமூகத்தை நிறைய யோசிக்க முடிகின்றது.
பள்ளிப்பருவத்தில் மாலை வீட்டுக்குள் வரும் போது இலங்கை வானொலியில் ஒலித்த அந்த குரல் இன்னமும் நன்றாக நினைவில் உள்ளது.
பிறந்த நாள்... பிறந்தநாள்............
யாவரும் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.......
இதுவே இன்று ஹேப்பி பர்த்டே என்று மாறியுள்ளது,
கடந்த பத்தாண்டுகளுக்குள் தான் மிக அதிக அளவில் இந்த கொண்டாட்ட மனோநிலை உருவாகியுள்ளது. ஆங்கில வருட புத்தாண்டு, காதலர் தினம், அப்பா தினம், அம்மா தினம் என்று ஏராளமான தினங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றது.
ஆயா தினம் ஒன்று தான் இன்னும் தனியாக வரவில்லை. அதற்குப் பதிலாக முதியோர் தினமாக ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.
பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் விட்டு வந்த ஆத்மாக்களும், அம்மாவிடம் பால் குடித்த மிருகங்களும் அன்று தான் நினைவுக்கு வந்து அவர்களை பார்த்து விட்டு வாழ்த்துகளை சொல்லிவிட்டு வந்து விட்டால் அன்றைய தின கொண்டாட்டமும் முடிவுக்கு வந்து விடும்.
அதற்குப் பிறகு அடுத்த வருடம் சென்று பார்த்தால் போதும்.
ஏறக்குறைய வருடத்தில் 365 நாட்களுக்கும் வியாபாரிகள் உருவாக்கிய கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்குபவர்கள் அடுத்த வருடத்திற்கு வாங்குபவர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ தங்கம் விற்பவன் மட்டும் அடுத்த வருடத்தில் அடுக்குமாடி கடையை கட்டுபவனாக இருக்கின்றான்.
இதற்குப் பின்னால் சமூக உளவியல் காரணங்களை புரிந்து கொள்ள முடிகின்றது.
இன்று நகரங்களில் வசிக்கும் 80 சதவிகித மக்கள் அத்தனை பேர்களும் ஏதோவொரு சமயத்தில் கிராமத்திலிருந்தே இடம் பெயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
கிராமங்களில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. கோவில் விழாக்கள், தேர்த்திருவிழா, மஞ்சுவிரட்டு, பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், வாணவேடிக்கை என்று தொடங்கி வருடந்தோறும் நடக்கின்ற பல திருவிழாக்கள் மக்களை ஒன்று சேரவைத்தது.
எளிமையான அந்த விழாக்களில் மனங்களை பறிமாறிக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று மனம் பின்னுக்குப் போய் பணம் முன்னுக்கு வந்து விட விழாக்களின் போக்கும் மாறிவிட்டது. ஒவ்வொரு கொண்டாட்டங்களும் வியாபாரிகளின் கைக்கு போய்விட்டது.
நகரங்களில் நடக்கும் விழாக்களின் தன்மை தனிப்பட்ட மனிதர்களின் மனோநிலையை கவர்வதை விட கூட்டத்தையே முன்னிலைப் படுத்துகின்றது. இதுவே இன்று "வீக் எண்ட்" கலாச்சாரத்தை விரைவாக வளர்த்துக் கொண்டு வருகின்றது.
வாரம் முழுக்க வேலை. வார இறுதியில் ஒய்வு என்பது மேலைநாட்டு கலாச்சாரம். அது இப்போது இந்தியாவில் குடித்து கும்மாளமிடுவர்களின் விழாவாக மாறியுள்ளது.
இங்கு எட்டு மணி நேர வேலையும் இல்லை. எந்த துறையிலும் வெற்றிகள் தொட்டு விடும் உயரத்திலும் இருப்பதில்லை. இதன் காரணமாகவே இந்திய வேலைகள் என்பது 24 மணிநேரமும் அலர்ட் ஆறுமுகமாகவே வாழ வேண்டியுள்ளது.
நான் பார்க்கும் பெரும்பாலான பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் மிகுந்த ஆடம்பரமான விழா போலவே கொண்டாடப்படுகின்றது. அவரவர் (வருமான) தகுதிக்கு மீறியே கொண்டாடப்படுவதும், அதே போல நாமும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மற்றவருக்கு உருவாகி அதன்படியே கடன் வாங்கி செலவளிக்கும் அளவுக்கு இன்று கொண்டாட்டங்களில் முகமே மாறியுள்ளது.
மளிகைக்கடையில் உள்ள கூட்டத்தை விட கேக், ஐஸ்கீரிம் விற்கும் கடைகளில் ஒவ்வொருவரும் செலவளிக்கும் காந்தி தாளை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனும் ஒரு ஐரோப்பியராகவே தெரிகின்றார்கள்.
எண்ண அளவில் ஐரோப்பியனாக இருந்தாலும் எலும்பு முழுக்க இந்தியனாகத்தான் இருக்கின்றான். அவர்களிடமிருந்து எதை எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் விட்டு உடுப்பதை குடிப்பதை கற்றுக் கொண்டு இன்று ஒவ்வொரு நடுத்தரவர்க்கமும் தன்னை ஒரு கணவானாகவே நினைத்துக் கொள்கின்றது. தங்களுடைய குழந்தைகளும் அவ்வாறே வளர வேண்டும் என்று விரும்புகின்றது..
மேலைநாடுகள் அவர்கள் விரும்பிய கல்வியை இந்தியாவில் கொண்டு வந்து திணித்து விட்டே நகர்ந்தார்கள். நம்மவர்களுக்கும் அவர்கள் உருவாக்கித் தந்த கல்வியை மாற்ற விரும்பவில்லை. காரணம் அப்படியே இருந்தால் தான் கல்வி கற்றாலும் கூமூட்டையாக இருக்கமுடியும் என்பதால் இன்று வரையிலும் அந்த கல்வி முறையைத் தான் நாம் கொண்டாடிக் கொண்டுருக்கின்றோம்.
குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியை கற்றவர்கள் தான் இது போன்ற புதிய கலாச்சாரத்தின் காவலர்களாக இருக்கின்றார்கள். படித்து முடித்தவுடன் எப்படியும் ஏதோவொரு வெளிநாட்டுக்குச் சென்று விட்டால்போதும் என்பதே ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்க ஆனால் கனவு தேசங்களோ இன்று கண்ணீர் தேசமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
இன்றைய ஐரோப்பா பார்த்து பார்த்து செலவளிக்கும் இந்திய வாழ்க்கை முறைக்கு மாறிக் கொண்டிருக்க நாமோ அன்றைய வாழ்க்கை அன்றைய சந்தோஷம் என்ற ஐரோப்பிய வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளோம்.
அவ்வப்போது சில நம்பிக்கை நட்சத்திரங்கள் என் கண்ணில் படுவதுண்டு.
அன்று அலுவலகத்தில் இருக்கும் பெண்மணி இன்று மதியம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்ட போது நேற்றே அவர் திருமண நாள் குறித்து சொல்லியிருந்தது என் நினைவுக்கு வந்தது.
அலுவலகத்தில் முகப்பில் வரவேற்புத் துறை பணியில் இருப்பவர். கிராமத்தில் தான் விரும்பிய பையனை சாதி எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் வந்தவர். முழுமையாக அவரைப் பற்றி தெரிந்த காரணத்தாலும், அவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் என்னை கவர்ந்த காரணத்தாலும் அவர் மேல் எப்போதும் ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு.
அனுமதி கொடுத்து விட்டு எப்போதும் போல சிரித்துக் கொண்டே கேட்டேன்.
"என்னம்மா வீட்டில் மதுரை ஆட்சியா? இல்லை சிதம்பரம் ஆட்சியா?" என்றேன்.
யோசிக்காமல் பட்டென்று சொன்னார்.