Sunday, December 30, 2012

திரும்பிப் பாரடா 2012 - மகிழ்ச்சி அறிவிப்பு


11.கனவாகிப் போய்விடுமோ என்று கவலைப்பட்ட டாலர் நகரம் என்ற புத்தகம் ஜனவரி மாதம் வெளியாகின்றது.  மிக அழகாக நேர்த்தியாக, வண்ண புகைப்படங்களுடன் சேர்த்து ஆவணம் போல 4 தமிழ்மீடியா படைப்பாய்வகம் இதனை கொண்டு வருகின்றது. 27 அத்தியாயங்களுடன் திருப்பூர் சார்ந்த படங்களுடன் வருகின்றது.  சமீப காலமாக புத்தகத்திற்கு எவரும் படங்கள் போடுவதில்லை.

ஆனால் இந்த படத்தோடு படிக்கும் போது தான் உண்மையான திருப்பூருக்குள் உலாவிய திருப்தி கிடைக்கும். புத்தக வடிவில் ஏறக்குறைய 360 பக்கங்கள் வரக்கூடும். மிக அழகாக சுருக்கப்பட்டு வாசிப்பவனை நகர விடாது தொடரச் செய்யும் திரு மலைநாடன் இதில் காட்டிய உழைப்பு மகத்தானது. இத்துடன் மற்றொரு சிற்பியும் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பற்றிய முழுவிபரங்களை அறிவிக்கின்றேன்.

12,.பலருக்கும் இந்த தொடர் சென்று சேர்ந்துள்ளது. தினந்தோறும் என் தளத்திற்கு வருபவர்கள் என் தளத்தின் கீழே உள்ள டாலர் நகரம் படத்தின் வாயிலாக 4 தமிழ்மீடியா தளத்திற்கு சென்று கொண்டிருப்பதை கவனிக்கும் போது தேடல் உள்ளவர்களை இந்த வலையுலகம் அதிகம் பெற்றுள்ளது என்பதை உண்ர்ந்தே வைத்துள்ளேன். ஜனவரி மாதம் 2013 இறுதியில் இதற்கான விழா நடைபெறுகின்றது.  இந்த விழாவின் மூலம் மேலும் சில நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றது.

இது குறித்த முழுமையான விபரத்தை விரைவில் வெளியிடுகின்றேன்.

நண்பர் ராஜநடராஜன் அடிக்கடிச் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் திருப்பூர் தொழில் சம்மந்தபட்ட அத்தனை பேர்களிடமும் சென்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் பல முறை விமர்சனங்களில் தெரிவித்துருப்பதை அடிப்படையாக வைத்து திருபபூருக்குள் இந்த புத்தகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்படி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் ஆதரவு அளிக்க கோருகின்றேன்.

13.இந்த வருடத்தில் எனக்கு அறிமுகமான வலைஉலகத்திற்கு  தெரியாத இரண்டு மனிதர்கள் உண்டு. 

ஒன்று திரு.சங்கர நாரயணன். இவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்து இங்கே பணிபுரிந்துவிட்டு தற்போது ஒரிஸ்ஸாவில் கட்டுமான தனியார் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருக்கின்றார். 

இவர் திருப்பூர் சாயப்பட்டறை முதல் தான் படித்த கேட்ட அத்தனை நல்ல மற்றும் அக்கிரம நிகழ்வுகளையும், கட்டுரைகளையும் அவர் சார்ந்த குழும மின் அஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்பவர். நான் கூகுள் ப்ளஸ் ல் வெளியிடும் படங்களில் பெரும்பான்மையாக இவர் எனக்கு அனுப்புவதே. அத்துடன் குறிப்பிட்ட பிரச்சனைகளை எவர் எவருக்கு அனுப்பி அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை இவர் மூலம் தான் கற்றுக் கொண்டு வருகின்றேன்.

இந்தியாவில் உள்ள அத்தனை அதிகார வர்க்கத்தினரை துவைத்து காயப் போட்டு கதறடித்து வருகின்றார். அற்புதமான புத்திசாலி. ஆனால் நம்மவர்கள் என்ன சாதாரணமானவர்களா? ஆணி அடித்தால் கூட ரத்தம் வராத அளவுக்கு தோல் பெற்ற பாக்கியவான்களாச்சே. இவர் அறுபது வயதை கடந்தாலும் இவர் தேர்ந்தெடுத்து வாசிக்கும் தளத்தையும் அதில் அவர் வைக்கும் விமர்சன பாங்கையும் நான் கற்றுக் கொள்ள இன்னும் நாலைந்து வருடங்கள் ஆகும்.

14.அடுத்து திரு. லஷ்மணன் அவர்கள்.  சேலத்தைச் சேர்ந்தவர். இவரும் தொழில் நுட்ப பட்டப் படிப்பு முடித்து வெளிநாடுகளில் பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு தற்போது சேலத்தில் அற்புதமான கலையம்சம் மிகக வீட்டில் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன்  அமைதியான வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருப்பவர். வாழ்வின் இறுதிக் காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொண்டேன். அவர் வீட்டைப் பார்த்தவுடன் காரைக்குடி பக்கம் உள்ள வீடுகள் தான் என் நினைவுக்கு வந்தது. வீட்டின் வடிவமைப்பும் இவரும் மற்றும் இவர் குடும்பத்தினரே.

இவர் 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியான காக்க காக்க நோக்க நோக்க என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.இவர் மூலமாகத்தான் திரு. சங்கர நாராயணன் அறிமுகமானார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு சமயத்தில் படித்தவர்கள். ஒத்த வயதுள்ளவர்கள். இவர் படிக்கும் பல தளங்களை குழும மின் அஞ்சல் வழியாக தினந்தோறும் அனுப்பிக் கொண்டேயிருப்பார்.  வேலைகளுக்கிடையே என் வலையுலக வாசிப்பு என்பது இது போன்ற சுட்டிக்காட்டல் மின் அஞ்சல் மூலமாகத்தான் பார்க்கப்படுகின்றது. பகிரப்படுகின்றது. இரண்டு என்சைக்ளோபீடியாக்கள் எனக்கு நண்பராக இருந்தது இருபப்து இந்த வருடத்தின் மகத்தான் அங்கீகாரம்.

15.இந்த வருடத்தில் டீச்சர் திருமதி துளசி கோபால் அவர்களை சென்னையில் நடந்த அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் பார்க்க பழக முடிந்தது. இந்த வருடத்தின் சிறப்பான தருணம் அது.  என் மேல் அதிக அக்கறை கொண்ட கோவி கண்ணன் அவர்கள் திருப்பூர் வந்து சந்தித்தது எனக்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான தருண்ம். கடந்த இரண்டு வருடங்களில் என் எழுத்துக்கு மரியாதையை உருவாக்கி எங்கள் தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினராக ஆன 4 தமிழ்மீடியா ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களுக்கு என் நன்றியை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. 

16.என்னை சந்திக்காமலேயே என்னிடம் காட்டும் அக்கறைக்கு தமிழ்வெளி குழலிக்கு என் மனமார்ந்த நன்றி. தமிழ்மணம், இன்ட்லியில் மட்டுமே என் பதிவுகளை இணைக்கின்றேன். சில சமயம் தமிழ் 10 தளத்தில் சேர்க்க நேரம் கிடைக்கின்றது.தமிழ்வெளி இயல்பாக இணைந்து விடும் வசதியை உருவாக்கியுள்ளார்.

இவர்கள் இல்லாவிட்டால் தேவியர் இல்லம் என்பது உலகத்திற்கு சென்று சேர்ந்திருக்காது. 

17.டாலர் நகரம் என்பது கடந்த 20 வருட திருப்பூர் என்ற ஊரின் மாறுதல்கள், நிறுவனங்களுக்கு பின்னால் உள்ள புரிதல்கள், இந்த ஊரை ஏற்றுமதி என்ற ஒரு வார்த்தை எப்படி மாற்றியது. இந்த ஊரில் உள்ள தொழில் வாய்ப்புகள் என்று என்னுடைய அனுபவங்கள் மூலம் உண்மைக்கருகே நெருங்கிப் பார்க்கும் சுவராசிய நடையில் எழுதப்பட்ட பதிவுகளின் சுருக்கம். இந்த துறையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவர்களுக்கும்,  ஆனால் இந்த ஊரின் உள்ளே இருந்து கொண்டு  முழுமையான தகவல்கள் தெரியாமல் வாழ்பவர்களுக்கும் இந்த புத்தகம் உதவக்கூடும். . 

18, டாலர் நகரத்தில் முடிந்தவரைக்கும் அனைத்தையும்  எழுதி விட்டோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சாய்பபட்டறைகளின் மூலம் உருவான பிரச்சனைகள்,அதன் உண்மையான விசயங்கள், பிரச்சனைகள் விஸ்வரூபம்  எடுத்ததும் திருப்பூர் சந்தித்த சவால்கள், மாறிய திருப்பூர், அதன் பின்னால் வந்த மாறுதல்கள் என்பதை இதில் சேர்க்காமல் இருந்தேன்.

ஆனால் எதிர்பாரதவிதமாக புதியதலைமுறை ஆசிரியர் திரு. மாலன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி எழுத அதுவும் அந்த இதழில் கவர் ஸ்டோரியாக வந்தது. அதற்குப் பிறகு ஆழம் பத்திரிக்கைகாக திரு. மருதன் கொடுத்த வாய்ப்பின் மூலம் தற்போதைய திருப்பூரின் நிலவரத்தையும், வெகு அருகே வந்துவிட்ட அந்நிய முதலீடு குறித்தும் எழுத முடிந்த காரணத்தால் இந்த மூன்று தலைப்புகளும் சேர்ந்து மொத்தமாக இன்று வரையிலும் உள்ள திருப்பூரின் நிலைமையை தெள்ளத்தெளிவாக புரிய வைத்து விடும்.

19.என் அலைபேசி எண் கிடைக்கப்பெற்றதும் திருப்பூர் சார்ந்த இருவர் அழைத்திருந்தார்கள்.பெங்களூரில் இருந்து பேசும் நண்பர் குடும்ப உறுப்பினராகவே ஆகி விட்டார். அதில் ஆச்சரியப்பட்ட நிகழ்வும் ஒன்று. உண்டு.

திருப்பூரில் நான் ஏற்கனவே வாழ்ந்த பகுதியில் ஒரே சந்தில் அருகருகே வீட்டில் வசித்தவரும் பேசினார். பேசியவருடன் பக்கத்து வீட்டில் மூன்று வருடங்கள் வசித்து இருக்கின்றேன். இரண்டு வருடமாக தேவியர் இல்லத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். அப்போது தான் அவர் குறித்த முழு விபரமும் எனக்குத் தெரிந்தது.

இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பார்த்து இருக்கின்றோம்.  தினந்தோறும் பார்த்த போதிலும் கூட இருவரும் பேசிக் கொண்டதில்லை.  அந்த சமயத்திலும் நான் எழுதிக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்துக் கொண்டேன். இப்போது கூட இதை படிப்பார். நான் இதை நினைத்து பல நாட்கள் சிரித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்தது

ஃபேஸ்புக்கில் அடுத்த நாட்டில் இருப்பவர்களுக்கு வணக்கம் வைப்போம். அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்றே தெரியாது. .

20,.இந்த வருடம் சென்ற வருடத்தை விட பாதிக்கு பாதி தான் எழுத முடிந்தது. என் பதிவுகளின் மூலம் ஏராளமான புதிய நண்பர்கள், வாசிப்பாளர்கள், அக்கறை கொண்டவர்கள் கிடைத்துள்ளார்கள்.

அத்தனை பேர்களின் வாழ்க்கையிலும் வருகின்ற 2013 வளமான எதிர்காலத்தை உருவாக்க தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.

உங்கள் உழைப்பின் மூலம் உங்கள் உண்மையான ஒழுங்கான சிந்தனைகளின் மூலம் 2013 ல் பெற வேண்டிய கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியும் அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்க எங்கள் தேவியர் இல்லத்தின் புதிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரு இடைவெளி விட்டு சந்திப்போம்.

திரும்பி பாரடா 1

திரும்பி பாரடா 2

பத்திரிக்கையில் - எனது நேர்காணல்

தொடங்கப்போகும் ஜனவரி 2013 ஆண்டுக்கான ஆழம் முதல் இதழில் எனது நேர்காணல் வெளியாகி உள்ளது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடத்திய நேர்காணலின் முழுவடிவம்.




ஞானாலயா திரு. கிருஷணமூர்த்தி - ஒரு நேர்காணல்.

திருப்பூர் ஜோதிஜி
படங்கள் நிகழ்காலத்தில் சிவா

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டபோதுபுத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று என்றார் பெட்ரண்ட் ரஸல்.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்என்று பதிலளித்தாராம் மகாத்மா.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

புத்தகங்கள் நல்ல மனிதர்களைதலைவர்களை உருவாக்குகின்றது. ஆனால் புதுக்கோட்டையில் திருக்கோர்ணம் பகுதியில் பழனியப்பா நகரில் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புத்தகளுக்கென்றே தன் சொந்த உழைப்பின் மூலம் 1200 சதுர அடி பரப்புள்ள அறிவுக் கோவிலை கட்டி வைத்து மக்களுக்கு அர்பணித்து பாதுகாத்து வருகின்றார். இடம் போதாமல் மேற்கொண்டு மாடியில் கட்டிட நிர்மாண பணியையும் செய்து கொண்டிருக்கின்றார்.

கட்டணம் ஏதுமின்று இந்நூலகத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சிப்பட்டங்களைப் பெற்றவர்கள் (2007) வரைக்கும் 75 பேர்கள்.  பி.ஹெச்டி என்ற முனைவர் பட்டம் பெற்றவர்கள் 15 பேர்கள். இளம் முனைவர் (எம்பில்) 60 பேர்கள் பெற்றுள்ளனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஒருவர் PRIVATE LIBRARIES: WITH SPECIAL PEREFERNCE TO GNANALAYA. A USER LIBRARY என்ற தலைப்பிலேயே ஆய்வை முடித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.

ஒரு நூலகமென்பது எப்படியிருக்க வேண்டும் என்பதன் முழு அர்த்தத்தையும் இங்கே தான் உணர்ந்து கொண்டேன்.  காரணம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஞானாலயா என்ற இந்த நூலகத்தை நடத்தவில்லை.  மாறாக புத்தகங்களையே சுவாசிப்பதால் தான் இந்த மகத்தான் சாதனையை செய்திருந்த போதிலும் அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத மனிதராக காட்சியளிக்கின்றார்.

திரு. கிருஷ்ணமூர்த்தி பி.எஸ்சி (கணிதம்) எம்.ஏ (தமிழ்), எம்.எட் பட்டம் பெற்றவர். கணித ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தி எம்.எஸ்சி, எம்.பிஃல் பட்டம் பெற்று புதுக்கோட்டை அரசு மகளில்கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதங்களை தாண்டி கலப்பு மணம் புரிந்து வாழ்வில் இணைந்தவர்கள்.

முதல் மகள் நிவேதிதா பாரதி மருத்துவர் (லண்டன்) பட்டம் பெற்று சென்னையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றுகின்றார்.  இரண்டாவது மகள் ஞானதீபம் இலண்டனில் எம்பிஏ பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர்.

இந்த நூலகத்திற்கு வருகைபுரிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியன் தனது வருகை குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டியதை தனி மனிதனாக செய்துள்ளார். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் கிருஷ்ணமூர்த்தி, டோரதி சம்பத்திக்கு பத்மபூஷன் விருது கிடைக்கச் செய்வேன்.

புத்தகங்களை நேசிப்பவர்களைவிரும்புவர்களை பார்த்து இருக்கின்றேன்?  ஆனால் இப்படி சேகரிகத்த புத்தகங்களை பாதுகாத்து அதற்கென்று உங்கள் தனிப்பட்ட வருமானம் முழுமையும் இதற்கென்று செலவழித்து ஒரு கட்டிடத்தை உருவாக்கி இன்று வரையிலும் ஆட்கள் போட்டு பாதுகாக்கும் உங்கள் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது

திருவாரூருக்கு அருகில் உள்ள காலாலகுடி எங்கள் சொந்த ஊர். 1926ல் திருச்சி புனித ஜோசப்பில் பிஎஸ்சி இயல்பியல் படித்த எனது தந்தையார் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி.

திருச்சி லால்குடியில் ஆசிரியராக பணியாற்றி அவர் என் புத்தகவாசிப்பின் குருவும் கூட.  தான் படிக்கும் அத்தனை விசயங்களையும் கவனமாக கோடிட்டு வைத்து எங்களுடன் அது குறித்து உரையாடுவார்.  என் தாயாரின் குடும்பமும் மிகவும் படித்த குடும்பம். சென்னை மகாணம் பிரிக்கப்படாத போது என் தாயாரின் அப்பா சென்னையில் தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். ஐந்து மொழிகள் இயல்பாகவே பழகியிருந்தார்.

இந்த படிப்புச் சூழலில் வாழ்ந்த எனக்கு என் அப்பா தான் சேகரித்துவைத்திருந்த 100 புத்தகங்களை கொடுத்து இவற்றையெல்லாம் பாதுகாத்து படி என்றார். இது தான் தொக்க வித்தாக இருந்தது. 

எனது தந்தையார் பணிமாறுதலின் பொருட்டு பல ஊர்களில் என் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது. 8ஆம் வகுப்புவரை பெரம்பலூர் பள்ளியில் படித்தேன். அங்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் பாரதிதாசனின் பள்ளித் தோழரான முருசேக முதலியார். 1950களில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் தமிழ் முழக்கம் ஓங்கியிருந்த காலம். எந்த ஒரு மாணவனும் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிப்பான். பாரதிபாரதிதாசன் பாடல்களை ஒப்பிக்காத மாணவர்களையே பார்க்க முடியாது. பேச்சுப் போட்டிகட்டுரை போட்டிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். எனக்கு பாவேந்தர் பரம்பரையில் வந்த வேணுகோபால் ரெட்டியார் தமிழ் ஆசிரியராக இருந்தார். அவர் பாடம் நடத்திய விதங்களிலேயே நமக்கு மனப்பாடமே ஆகிவிடும். என் இளமையில் கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்புகள் தான் தமிழ் உணர்வும் கலையுணர்வுமாக அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்தியது.

1957 ல் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை அரசியல் கட்சி எனத் திருச்சி மாநாட்டில் அறிவித்து தேர்தலில் ஈடுபட்டது.  வெளிவந்த திரைப்படங்கள் கட்சியின் கொள்கைக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் மாணவர்களிடையே பெரிய எழுச்சியை உருவாக்கியது.  நாவலர் நெடுஞ்செழியன்பேராசிரியர் அன்பழகன்கி.வா.ஜஅ.ஞ.ஞானசம்பந்தம் போன்றோர்களின் சொற்பொழிவுகளை கேட்ட எனக்கு என் இந்த ஆர்வத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே சென்றது.

திருச்சி ஜமால் முகம்து கல்லூரியில் 1959 62 பிஎஸ்சி கணிதம் படித்தேன்.  அப்போது தான் பியூசி அறிமுகமானது.  பெரிய மனிதர்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்க வாய்ப்பும் கிடைத்தது. பெரியாருடைய பல சொற்பொழிவுகளை கேட்டு இருக்கின்றேன். தமிழரசு கழகம் நடத்தி மா.பொ.சி உரையை 1959ல் கேட்டேன். அவர் பேசிய தமிழ்க்கல்வி பற்றி பேசியது என் மனதை மிகவும் கவர்ந்தது. 

கல்லூரி மாணவர்களுடன் ஜீவாவைபாஸ்கர தொண்டைமான் போன்றவர்களையும் சந்தித்தேன். என்னுடைய இந்த புத்தக ஆர்வத்திற்கு தொடக்கத்தில் குடும்பம் காரணமாக இருந்தது. ஆனால் என்னைச் சுற்றியிருந்த சூழல் அடுத்தபடிக்கு நகர்த்தியது. அதுவே இன்று இந்த ஞானாலயா என்ற 85 000 புத்தகங்களுக்கு மேற்பட்ட சேகரிப்பு நிலையத்தை உருவாக்க காரணமாகவும் இருந்தது.

1965 இல் மணச்சநல்லூர் உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த போது என் மனைவி டோரதி அங்கு பயிற்சி பட்டதாரியாக வந்து சேர்ந்தார். பிறகு பெண்கள் கல்லூரிக்கு மாறிச் சென்ற போதிலும் இருவருக்குள்ளும் இருந்த புரிந்துணர்வும்என்னைப் போலவே அவரும் புத்தகத்தில் காட்டிய ஆர்வமும் இருவரையும் வாழ்க்கையில் ஒன்று சேரவைத்தது. அவர் கிறிஸ்துவராக இருந்த போதிலும் ஜீவாபெரியார் கொள்கையில் பிடிப்புள்ள எனக்கு மதங்களை தாண்டி எங்களை மனங்களை இணைய வைத்தது.  எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.  எங்களுக்கு வந்த மாப்பிள்ளைகளும் எங்கள் பணிக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.

பெரும்பாலும் புத்தக வாசிப்பவர்களுக்கு ஏதோவொரு குறிப்பிட்ட துறையில் தான் ஆர்வம் இருக்கும். அது குறித்த புத்தகங்களில் தான் ஆர்வத்தை செலுத்துவர்.  ஆனால் நீங்கள் பல்துறையிலும் ஆர்வம் செலுத்தி சேகரித்தது ஆச்சரியமாக உள்ளது?  எப்படி இது சாத்தியமானது?

என்னை உற்சாகப்படுத்தி இவ்வளவு பெரிய நூலகம் உருவாவதற்கு மிக முக்கிய முழுமுதற் காரணமாக இருந்தவர் ஏ.கே.செட்டியார்.  உலகம் சுற்றிய முதல் தமிழர். மகாத்மா காந்தி பற்றி குறும்படம் எடுத்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கே பார்வையிட வைத்தவர். ரோஜா முத்தையா செட்டியார் தொடர்பு எனக்கு பல விதங்களில் உதவியாக இருந்தது.

தொடக்கத்தில் இதற்கு மீனாட்சி நூலகம் என்று பெயரிட்டு வைத்திருந்தோம். நண்பர்கள் ஏதோவொரு வாடகை நூலகத்தின் பெயர் போல இருக்கின்றது என்றார்கள். மனைவியின் யோசனைப்படி 1987ல் ஞானத்தின் ஆலயம் என்ற அர்த்தத்தில் ஞானாலயா என்ற பெயர் உருவானது.

19581959ல் திருச்சி பழைய புத்தகக் கடைகளிலே சென்று புத்தகம் வாங்கக்கூடிய பழக்கம் ஏற்பட்டது.  என்னுடைய நோக்கம் முதற்பதிப்பு புத்தகங்களை சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல பக்கங்களுக்கும் சென்றேன்.  இதற்கு முக்கிய காரணம் முதற்பதிப்பில் வரக்கூடிய உண்மையான விசயங்கள் அனைத்தும் அடுத்த பதிப்பில் வருவதில்லை என்பதை கண்டு கொண்டேன். அதுவே அடுத்தடுத்த பதிப்பில் மாறி மாறி கடைசியில் உண்மைக்கும் சொல்லவ்ந்த விசயத்திற்கும் சம்மந்தம் இல்லாத அளவுக்கு மாறிப் போயிருப்பதை கண்டேன். முதற்பதிப்பில் உள்ள முன்னுரை மற்றும் படங்கள் கூட நீக்கப்பட்டு கடைசியில் வெறும் தாள்களைப் போலவே வரத் தொடங்கியதால் இதில் அதிகம் ஆர்வம் செலுத்தினேன்.  1938 ல் நான் பார்த்த பாரதிதாசன் கவிதைகள் அடங்கிய புத்தகத்திற்கும் 1959க்குப் பிறகு நான் பார்த்த அதே புத்தகத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள். 

1940க்கு முன்னால் வந்த பெரியாரின் ஒரு சில நூல்கள் என்னிடம் உள்ளது. இந்த மாதிரி நூல்களை தேடிச் சென்ற போது தமிழில் வந்த வேறு சில அரிய நூல்களையும் பார்கக முடிந்தது.  1985 லேயே மரின் மெடிக்கல் மேனுவல் என்று நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்டுகொண்டேன்.  1888 லேயே கிரிமினல் லாசிவில் லா ஆகியவை மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதை 1922 இல் கூட ஒரு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கொழும்பிலும்,யாழ்ப்பாணத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள்.  மருத்துவம்வானியல்சட்டம் பற்றியெல்லாம் கொழும்பிலும்யாழ்பாணத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் முதல் முறையாக எழுத்து சீர்திருத்தத்தை சுப்பையா பிள்ளைதான் அறிமுகப்படுத்தியோடு தந்தை பெரியார் அவர்களிடம் அந்த புத்தகத்திறகு ஒரு முன்னுரை கேட்கிறார். பெரியாரும் இதுவொரு நல்ல முயற்சி என்று முன்னுரை கொடுத்துள்ளார். முதலில் நானே இதை பின்பற்றுகின்றேன் என்று விடுதலை,குடியரசு இதழ்களில் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்.

1986 இல் ஊதிய உயர்வு வரும் வரையிலும் உங்களைப் போன்ற ஆசிரியர்களின் சம்பளம் சொற்பமானது தானே? எப்படி இது போன்ற சேகரிப்புக்கு பணத்தை எப்படி ஒதுக்க முடிந்தது?

மனைவியும் ஆசிரியர் பணியில் இருந்த காரணத்தாலும், எங்களின் அடிப்படைத் தேவைகளை மிகவும் சுருக்கிக் கொண்டு புத்தகங்கள் வாங்குவதில் தான் அதிக கவனம் செலுத்தினோம்.  1990க்குப் பிறகு தான் நாங்கள் டிவியே வாங்கினோம்.

செட்டிநாட்டு பகுதிகளில் உள்ள செட்டியர்களின் பழைய வீடுகளில் நாள் முழுக்க காத்திருந்து என்னால் முடிந்த தொகையை தருகின்றேன் என்று பல அரிய புத்தகங்களை சேகரித்துள்ளேன்.  புதுக்கோட்டைக்கு நான் மாறுதல் வாங்கிக் கொண்டு வந்த காரணமே இந்த புத்தக சேகரிப்புக்கு வசதியாக இருப்பதால் தான்.  எங்கள் இருவரின் பணி ஓய்வின் மூலம் கிடைத்த தொகையை வைத்து ஏறத்தாழ பத்தரை லட்சத்தில் நூலக பாணியில் ஒரு கட்டிடம் கட்டி இந்த ஞானலயாவை உருவாக்கினேன். 

இங்கு உள்ள புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இங்கு 1842 ஆம் ஆண்டு வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதி முதல் இன்றைய நவீன எழுத்தாளர்களின் புத்தகங்கள் வரைக்கும் உள்ளது.  1904ல் விவேகபானு இதழில் வெளிவந்த பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், அப்போதைய ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்ட பாரதியின் படைப்புகள், 1920க்கு பிறகு வெளிவந்த சிற்றிதழ்கள் இப்படி கிடைத்தற்கரிய பல புத்தகங்கள் இங்கு உள்ளது.

சமயம் சார்ந்த நூல்கள், பழந்தமிழ் இலக்கிய நூல்கள், நவீன இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள், காந்தி இயக்கம் சார்ந்த நூல்கள், திராவிட இயக்கம் சார்ந்த பகுத்தறிவுயக்க நூல்கள், பொதுவுடைமை இயக்கம் சார்ந்த முற்போக்கு நூல்கள், இதழ்த் தொப்புகள் மற்றும் ஆங்கிலத்தில் தத்துவம், இலக்கியம், வரலாறு சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் என் சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் உள்ளடக்கிய 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எளிதில் கிடைக்காத பல தனி இதழ்களும் ஏராளமாக உள்ளது. கன்னிமாரா நூலகத்தில் இல்லாத புத்தகங்கள் கூட ஞானலாயாவில் உள்ளது.

இன்னமும் இந்த புத்தக சேகரிப்பில் சேகரிக்க வேண்டிய புத்தகங்கள் உள்ளதா?

1970க்குப் பின் மருத்துவ நூல்களும், சட்ட நூல்களும் வந்துள்ளன. நல்ல மொழிபெயர்ப்பு நூல்களும், கிரிமினல், சிவில் சட்ட நூல் மொழிபெயர்ப்புகளும் இல்லை என்ற குறையை தீர்க்க உதவும். மயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை வழக்கு அதற்குத்தான் வழங்கிய தீர்ப்பு இரண்டையுமே நூலாக 1870களில் வெளியிட்டுள்ளார்.  அரசாங்கம் மனது வைத்தால் தான் இது போன்ற அரிய பல நூல்களை சேகரிக்க முடியும்.

இங்கு வருகை புரிந்தவர்களைப் பற்றிய உங்கள் அனுபவம்?

அமெரிக்கா ஆய்வாளர் திருமதி. சுமதி ராமசாமி, அமெரிக்கா நாட்டு தமிழ் அறிஞர் பவுலா ரிச்மேன், சிகாகோ பல்கலைக்கழக நூலகர் ஜேம்ஸ் நே. சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஈவ்லின் மாசிலாமாணி இதைத்தவிர கலைஞர் மு. கருணாநிதி, செல்வி செ.ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்ட புத்தகங்கள் இங்கிருந்து கொடுத்து அனுப்பியிருக்கின்றேன்.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பல்துறையில் உள்ள பெரிய மனிதர்கள் என்று அத்தனை பேர்களும் இங்கே வருகை புரிந்துள்ளனர்.

எங்களிடமிருந்து பெற்று மறுபதிப்பு கண்ட நூல்கள் 500க்கும் அதிகமாக இருக்கும். எங்கள் நூலகம் தமிழகத்தில் உள்ள தனியார் நடத்தும் நூலகத்தின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நூலகம் ஆராய்ச்சி மாணவர்கள் வரைக்கும் பயன்படுத்தும் விதத்தில் மிக பயன் உள்ளதாக ஆகியுள்ளது. மேற்கொண்டு உங்கள் திட்டங்கள் என்ன?

நாம் நம் மொழியின் அருமையை இன்னமும் உணராமல் தான் இருக்கின்றோம். இந்த நூலகத்தை எங்கள் காலத்திற்குப் பிறகும் இந்த தமிழ் உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இது வெறும் நூலகம் மட்டுமல்ல. நம் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் பற்றிய ஆவணக் காப்பகமும் கூட. பய நூல்கள் பலவற்றை டிஜிட்டல் செய்ய வேண்டும். அல்லது மைக்ரோ பிலிம்மில் பதிய வேண்டும். அரிய நூல்களை பாதுகாப்பது சவாலாகவே உள்ளது.  செலவு பிடிக்கும் சமாச்சாரமும் கூட.  இங்குள்ள புத்தக தொப்பினை இணையத்தில் பட்டியல் வாரியாக இணையத்தில் பதிய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம்.  ஆள்பலமும், பொருட்பலமும் எங்களிடம் இல்லை.

என்னுடைய வயதுக்கு மீறிய உழைப்பை தமிழர்கள் அத்தனை பேர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்குள்ள பல புத்தகங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தவை. இன்றைய நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு ஒளிப்படிவமாக எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு ஞானாலயாவை ஆராய்ச்சி நூலகமாக அங்கீகரித்து நிதியுதவி செய்ய வேண்டும்.

இதுவரையிலும் குறிப்பிட்ட சிலரின் உதவிகள் கிடைத்த போதிலும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொந்த உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டே இங்கேயுள்ள பெரும்பாலான வசதிகளை உருவாக்கியுள்ளோம்.  தற்போதைய சூழ்நிலையில் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் போய்க் கொண்டேயிருக்கின்றது. தனிநபரால் எந்த அளவுக்கு சமாளிக்க முடியும்? முடிந்தவர்கள் எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

முகவரி

பா. கிருஷ்ணமூர்த்தி
ஞானாலயா நூலக நிறுவனர்
6, பழனியப்பா நகர்திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI
IFS CODE: UCBA0000112






Wednesday, December 26, 2012

சாப்பாட்டுக்கடைகள்

காதலும் பெணகளும்

எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று இந்த காதல் என்ற வார்த்தை.  

நான் கடந்து வந்த என் வாழ்க்கைப் பாதையில் ஆயிரக்கணக்கான நபர்களின் காதல் என்ற கருமாந்திரத்தை பார்த்துள்ளேன்.  ஐந்து பேர்கள் மட்டுமே இன்று வரைக்கும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மற்றவர்களைப் பற்றி பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு உள்ள பல சமாச்சாரங்கள் உள்ளது. 

கவிஞர் வைரமுத்து அவர்களை எனக்கு பிடிக்க பல காரணங்களில் ஒன்று இந்த காதல் என்பதே.  எழுத்துக்களில், வார்த்தைகளில், பாடல்களில் என்று மட்டுமல்லாது அவர் வாழ்க்கையிலும் இந்த காதலை ரசித்து இன்று ஜெயித்தும் காட்டியவர். அவர் ஊர், அவர் சாதி என்கிற நிலையில் வைத்துப் பார்க்கும் போது அவர் திருமணம் செய்த காலகட்டத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலையை வைத்து மதிப்பீடும் போது எனக்குள் பல ஆச்சரியங்களை தந்தவர். 

ஆனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் சில காதலர்களை சேர்த்து வைததும்  இருக்கின்றேன்.  நான் விதிக்கும் கட்டுப்பாடுகளை இருவரும் பின்பற்றும் பட்சத்தில் அவர்களின் உறுதிப்பாடுகளை சோதித்த பிறகு அவர்களுக்கு உதவி இருக்கின்றேன்.  எவரும் மோசம் போகவில்லை. எளிமையான ஆனால் இன்றுவரையிலும் இனிமையான காதல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

வீட்டில் அடிக்கடி சொல்லும் ஒரு பிரபல்யமான வாசகம் உண்டு.

"உங்களையெல்லாம் பார்த்தால் எந்த பெண்ணுக்கும் காதல் பண்ணத் தோனாது.  ஆளை விட்டால் போதும் என்று ஓடத்தான் தோன்றும்" என்பார். காரணம் எப்போதும் பெண்கள் விசயத்தில் சற்று அதிகமான கெடுபிடிகளை நிறுவனத்தில் காட்டுவதுண்டு. கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் மன்னிப்பு என்பதே என் அகராதியில் இல்லை.  

ஏதாவது பஞ்சாயத்து என்றால் முதல் வேலையாக அதனை அவர்கள் குடும்பத்திற்கு தெரிவித்து விட்டு முடிவு கட்டி விட்டுத்தான் அடுத்த வேலைக்குச் செல்வதுண்டு. பலரின் சாபத்திற்கு ஆளாகி இருக்கின்றேன். காரணம் பெண்களின் வாழ்க்கை என்பது ஆண்களை விட அதிக கவனமாக வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள். 

ஒவ்வொரு பெண்ணின் நல்லதும் கெட்டதும் அவரோடு முடிவதில்லை. தகப்பனை விட தாயின் வளர்ப்பில் தான் இங்கே பல நல்ல குழந்தைகள் உருவாகின்றார்கள்.  என் வீட்டில் குழந்தைகளை கண்டிப்பதே இல்லை. ஒரு முறை கண்டித்தால் அடுத்த முறை கண்ணீரோடு முன் கூட்டியே வந்து செய்த தவறுகளை சொல்லி மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.

அதற்காக ரசனை இல்லாதவன் என்ற வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டாம். என் ரசனை என்பது வார்த்தைகளில், பார்வைகளில் மட்டுமே. ஆனால் என்னைச் சுற்றிலும் உள்ள பழக்கத்தில் உள்ள பல நண்பர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை நன்றாகவே உள்வாங்கிக் கொண்டே தான் இருக்கின்றேன். கருத்து எதுவும் சொல்வதில்லை. 

அவரவர் அனுபவங்கள். அவர்வர் வாழ்க்கை. 

நான் பார்த்தவரைக்கும் ஸ்த்ரி லோலன்களின் வாழ்க்கை என்பது மற்ற அத்தனை கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களின் வாழ்க்கையை விட கேவலமான வாழ்க்கையில் தான் கொண்டு போய் சேர்ந்துள்ளது. காரணம் தனி மனித ஒழுக்கத்தை பஞ்சர் ஆக்குவதும், பல முறை பரதேசி கோலம் என மாற்ற வைப்பதும் பெண்கள் சகவாசகமே.  

பல அரசியல்வாதிகளைப் பற்றி மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதலாக தெரிந்து வைத்திருப்பதால் அந்த வாய்ப்பிருப்பதால் இந்த நிமிடம் வரைக்கும் அவர்களை ஒரு ஆச்சரியமான பார்வையில் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 

பல சாம்ராஜ்ய ஏற்றுமதி நிறுவனங்கள் மண்ணோடு மண்ணாக போனதற்கு முக்கிய பல காரணங்களில் முதன்மையானது முதலாளிகளின் பெண் சகவாசமே. 

சாப்பாட்டுக்கடைகள்

என்னுடைய உண்மையான காதலின் தொடக்கமே இது தான்.  தொடக்கம் முதல்  என்னுள் இருக்கும் இந்த காதலை எழுத்தில் காட்டிக் கொண்டதில்லை.  ஆனால் சாப்பாடு குறித்து எவர் எழுதினாலும் நான் படிப்பதும் இல்லை. உணவகங்களை தேடி அலைவதும் இல்லை. காரணம் நான் விரும்பும் திருப்தி அந்த அளவுக்கு கிடைப்பதும் இல்லை. 

அசைவம் விட்டொழித்த பத்து வருடங்களில் திடீர் என்று ஒரு போலந்து பெண்மணியுடன் திருப்பூரில் உள்ள வேலன் மூன்று நட்சத்திர உணவு விடுதியில் ஒரு மதிய வேளையில் சாப்பிட நேர்ந்தது. அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு வகைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த போது பறிமாறியவர் என்னிடம் கேட்ட போது என்னன்ன இருக்கிறது? என்றேன்.

அவர் உடனே நீங்க எந்த ஊரு? என்றார். 

காரணம் அவரும் தென் மாவட்ட மக்களின் தோற்றத்தைப் போலவே இருந்த காரணத்தால் அங்கே இருவருக்குள்ளும் ஒரு பந்தம் உருவானது. 

நான் ஊரைச் சொன்னதும் "காரைக்குடி சுவையில் நாடடுக் கோழி கொண்டு வருகின்றேன். நீங்க அசைவத்தை விட்டு விட்டேன் என்கிறீர்கள். இந்த சுவை உங்களை மீண்டும் அசைவ பழக்கத்தை தொடர வைக்கும்" என்றார். 

சுவாரசியம் இல்லாமல் எங்கள் தமிழ் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த போலந்து பெண்மணி மொத்த விபரத்தையும் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு  "அவசியம் கொண்டு வாங்க"என்று என் அனுமதியை பெறாமலேயே உத்தரவு பிறப்பிக்க கால் மணி நேரத்தில் ஒரு பளிங்கு பீங்கான் பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க கறி மற்றும் குழம்பு சேர்த்து பெரிய தட்டில் சாமிக்கு படைப்பது போல கொண்டு வந்தார். மற்றொரு தட்டில் எலும்பிச்சை, நறுக்கிய பச்சை வெங்காயம், இன்னும் சில சமாச்சாரங்கள். கூடவே ஒரு சின்ன கைத்தறி துண்டு. 

எதற்கு துண்டு?  என்றேன்.

உங்களுக்கு தேவைப்படும் என்றார்.

ஆவி பறக்க இருந்த அந்த குழம்பை ஒரு கரண்டியில் எடுத்து அந்த சூட்டோடு வாயில் ஊற்றி போது அப்படியே ஊரில் வாழ்ந்த வாழ்க்கை என் ஞாபகத்திற்கு வந்தது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு அப்போது தான் அசைவத்தை தொட்டேன். . 

இருக்கும் இடம், நாகரிகம் அத்தனையும் தூக்கி கடாசி விட்டு உறிஞ்சி, ஒரு கட்டு கட்டியதைப் பார்த்த போது அந்த பெண்மணி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு "எனக்கும் கொஞ்சம் கொடு" என்றார். கேட்டதோடு என் எச்சில் ஸ்பூனை வாங்கிக் கொண்டு அவர் எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்ச ஆ...வூ.... என்ற கத்த அருகில் இருந்தவர் அத்தனை பேர்களும் எங்களையே வேடிக்கை பார்த்தனர்.

காரணம் காரம். 

அடப்பாவி இதையா இப்படி குடிக்கிறே? என்று திட்டிக் கொண்டே இருந்த தண்ணீரை மடக் மடக் என்று தொடர்நது குடித்துக் கொண்டே இருந்தார்.  2009  ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வுக்குப் பிறகு கூட அசைவத்தில் பெரிதான ஆர்வம் வர வில்லை.  ஆனால் குழந்தைகள் ஊருக்குச் செல்லும் போது அங்கே கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வரும் போது கூட நான் தொடுவதில்லை. 

காரணம் பெரிதான ஆர்வம் உருவானதில்லை.  அசைவ உணவில் நான் பெற வேண்டிய அத்தனை திருப்தியையும் பெற்ற காரணத்தால் அதுவொரு ஏக்கமாக இருந்ததே இல்லை. தற்போது கூட குறிப்பிட்ட இடங்களில் அதன் தரம் பார்த்து சில சமயம் முயற்சிப்பதுண்டு. சமீபத்தில் பாப்பீஸ் நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்டு மனதிற்குள் திட்டிக் கொண்டே வந்தேன்.

வலைதளங்களில் இந்த சாப்பாட்டுக்கடைகள் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்த போது உணவு என்பது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது தான் செட்டி நாட்டு மெஸ், சிக்கன் செட்டிநாடு, காரைக்குடி மெஸ், காரைக்குடி உணவகம் என்று ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றிய இந்த பெயரை வியாபார ரீதியாக வைத்து கொள்ளை லாபம் சம்பாரித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. 

கோவையில் சுரேஷ் என்றொரு நண்பர் இருக்கின்றார்.  தெக்கிக்காட்டன் பிரபாகரன் மூலம் அறிமுகமானவர்.  கோவையில் ஒரு சைவ உணவகத்தை நீண்ட நாட்களாக நடத்திக் கொண்டு வருகின்றார். உண்மையான சமூக அக்கறையும்,  ஆச்சரியப்படக்கூடிய பல நல்ல விசயங்களையும் செய்து கொண்டிருப்பவர்.தன்னுடைய உணவகத்தில் பணி புரிகின்ற  அத்தனை தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் லாபத்தை தினந்தோறும் என்கிற கணக்கில் பங்கு போட்டு கொடுத்துக் கொண்டு இருப்பவர். இன்னும் பல விசயங்கள் இவரைப் பற்றி எழுதலாம். 

கோவையில் நடக்கும் மருத்துவ மாநாடு, கூட்டங்கள், உணவு சம்மந்தப்பட்ட விழாக்கள், இது தவிர முக்கிய மருத்துவர்களின் கூட்டங்கள், அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் என்று பலவற்றுக்கு என்னை வரச் சொல்லி வாரம் தோறும் அழைப்பார். இதுவரைக்கும் எதற்கும் சென்றதே இல்லை. அதற்கான சூழ்நிலையும் அமைந்தே இல்லை.  தற்போது திருப்பூர் கோவை சாலையை கொத்துக்கறி போல செய்து வைத்திருப்பதை பார்க்கும் போது பயணிக்கும் ஆசையே போய்விட்டது.  திருப்பூர் கோவைக்கு ஒரு மணி நேரம் பயணம் என்பது தற்போது இரண்டு மணி நேரமாக மாறியுள்ளது. அரசாங்க வண்டி என்றால் இன்னமும் கூட அதிகமாகும்.

ஒவ்வொரு வாரமும் மனம் தளராமல் அழைத்துப் பேசுவார்.  அப்போது பல விசயங்களைச் சொல்லி எனக்கு புரிய வைப்பார்.  அவரின் உரையாடல் மூலம் நான் எடுத்துக் கொண்ட சில விசயங்களைக் கோர்த்து, பல தளங்களை ஒப்பிட்டு இந்த காரைக்குடி உணவகம் என்றொரு கருத்தாக்கம் உருவானது. 

நான் உணவகங்களை விரும்புவதே இல்லை.  நான் ஏற்றுமதி துறையில் இருந்து கொண்டே முயற்சித்த துறைகளில் இந்த உணவக தொழிலும் ஒன்று. ஃபாஸ்ட் புட் என்கிற ரீதியில் நண்பருடன் சேர்ந்து செயல்பட்டேன். நேர்மையான முறையில் வீட்டுச் சமையல் போல என் ஈடுபாட்டை அதில் காட்டிய போது குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைத்தது. அதிக ஆர்வமும் அக்கறையும் இந்த துறையில் இன்னமும் உண்டு. ஆனால் காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்தது தான் மிச்சம். பங்குதாரர் பகையாளியாக மாறிப்போனார்.

உணவகம், அதன் பின்னால் உள்ள லாப நட்டம் அத்தனையும் தெரியும். குறிப்பாக உணவு தயாரிக்கும் முறைகளுக்குப் பின்னால் உள்ள அத்தனை கேவலமான விசயங்களும் எனக்கு நன்றாக தெரிந்த காரணத்தால் குடலைப் பிடுங்கும் பசி எடுத்தாலும் திருப்பூருக்குள் இருந்தால் அழைத்துச் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு ஓடி வந்து விடுவதுண்டு. 

நான் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும். அலைந்து திரிந்து கொட்டிக் கொண்டு கடன் வாங்கி வட்டியோடு மருத்துவமனைகளுக்கு கட்டிய காலமெல்லாம் போயே போயிந்தே.

மொத்தமாக நாம் எழுதிய பதிவுகள், எத்தனை பேர்கள் இதுவரைக்கும் படித்துள்ளார்கள் என்பதை நாம் திரும்பிப் பார்க்கும் போது நமக்கு பல புரிதல்களை, ஆச்சரியங்களை உருவாக்கும். ஒரு வருடம் முழுக்க படித்தவர்களின் எண்ணிக்கை என்பதை விட ஒரு மாதத்திற்குள் படித்தவர்களின் எண்ணிக்கை என்பதை வைத்து பார்க்கும் போது  சாப்பாட்டுக்கடை சமாச்சாரத்தில் நான் சொல்ல வந்த விசயங்கள் நிறைய பேர்களுக்கு சென்று உள்ளது. 

சில சமயம் அவசரத்தில் குறிப்பிட்ட தலைப்புகளை பார்க்காமல் படிக்காமல் கடந்து போயிருப்போம். அதற்காக அடுத்த ஒரு மாதத்தில் இந்த திரும்பிப் பார்த்தல் தொடரும். இதுவொரு முன்னோட்டம். 

ஒவ்வொரு துறையைச் சார்ந்தும் நான் எழுதிய பதிவுகளைப் பற்றியும், அடைப்புக்குறிக்குள் கொடுத்த இது வரைக்கும் படித்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் எழுதி வைத்து விடலாம்  என்ற எண்ணம் தோன்றியது. ஐந்தாவது வருடம்  வருகின்ற ஜுலை மாதம் உடன் முடிவடைகின்றது. 500 தலைப்புக்கு அருகே வந்துள்ளேன்.  அந்த சமயத்தில் 500 ல் 50 என்பதாக மனதில் யோசித்து வைத்துள்ளேன். 

அடுத்தடுத்து விரைவாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது பல தலைப்புகளை பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விடும் வாதம் ஏற்புடையதாக இருந்தாலும் கூட நான் ஆச்சரியப்பட்ட எதிர்பார்க்காத பல தலைப்புகள் பலரின் பார்வைக்குச் சென்றுள்ளது. மேலே வந்து நிற்கும் போது தான் நமக்கே புரியும். 

ஒரு தலைப்பு இதுவரைக்கும் 6 மாதங்கள் கடந்தும் வெறுமனே 250 பேர்கள் தான் படித்துள்ளார்கள். இது போன்ற சுய மதிப்பீடுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் போது எழுதுவதற்கான உண்மையான அக்கறையும் அர்த்தமும் நமக்கு கிடைக்கும்.

இதுவரையிலும் எழுதிய மொத்த தலைப்புகள் என்கிற ரீதியில் முதல் இடத்தில் இருக்கின்ற தலைப்பு என்ற தகுதிக்கு  6144  பார்வையாளர்களும் மாத ரீதியாக முதல் இடத்திற்கு வருவதற்கு  1653 பேர்கள்  தேவைப்பட்டு இருக்கின்றார்கள். 

உண்டு உறங்கி விடு. செரித்து விடு என்ற இந்த தலைப்பு தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் எழுதியது.

இந்த தலைப்பு பெரிதாக இருந்தாலும் மக்களின் பாராட்டை பெற்றது.  அப்போது எனக்கு கோவையில் உள்ள சுரேஷ் அறிமுகம் ஆகவில்லை. அனுபவங்களின் கோர்வையாக எழுதி வைத்தேன். கடந்த ஒரு மாதமாக சுரேஷ் மூலம் இந்த காரைக்குடி உணவகம். என்ற கருத்தாக்கம் உருவானது.  மக்கள் கதக்களியே ஆடி விட்டார்கள்.தீனிக்கார பய புள்ளைங்க.







Monday, December 24, 2012

திரும்பி பாரடா 2012 (2)


1.வீட்டில் இரட்டையரில் ஒருவர் தான் வைத்துள்ள லட்சியத்திற்காக கராத்தே வகுப்புக்குச் சென்று கொண்டிருப்பதோடு அதிலும் முன்னேறியுள்ளார். வகுப்பில் எப்போதும் முதல் நிலை தான். பள்ளிக்கூட அளவில் நடந்து முடிந்த ஸ்பெல் பீ என்று சொல்கின்ற ஆங்கில தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாவட்ட அளவிற்கு தயாராகியுள்ளார்.   சென்ற வருடம் முழுக்க மூவரின் தமிழ் மொழி அறிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு பல காரியங்களை செய்தேன், தூங்கத் தொடங்கும் போது சொல்லிய கதைகளின் வழியே பாடங்கள், வெளியே அழைத்துச் செல்லும் போது புரிய வைத்த விசயங்கள் என்று கிடைத்த நேரங்களில் எல்லாம் அடித்த ஆணிகள் அற்புதமாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. 

2.என் தாய் மொழியை என் குழந்தைகளுக்கும் நல்ல புரிதலோடு சொல்லிக் கொடுக்கவும் இந்த வருடத்தில் முடிந்துள்ளது. ஒருவருக்கு தமிழ்வாசிப்பு சிறுவர் மலரில் தொடங்கிய பயணம் இப்போது வெகுஜன இதழ்களில் வந்து நிற்கின்றது. பத்திரிக்கைகளில் வரும் படங்களைப் பார்த்து விட்டு மனைவி கதறினாலும் நான் கண்டு கொள்வதில்லை. தவறுகளை விட்டு வெளியே வர முதலில் அந்த தவறுகள் குறித்து புரிதல் வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன்.  

இவர் மட்டும் சற்று முரட்டுக் குதிரை. காரணம் வீட்டுக்குள் வந்து பாடங்களை படிப்பதில்லை. பள்ளியிலேயே அத்தனையும் முடித்து விட்டு இங்கே வந்து பத்து நிமிடத்திற்குள் ஒரு திருப்பி விட்டு என்னை திமிராக பார்த்து சவால் விடுகின்றார். முடிந்தவரைக்கும் உரையாடலின் மூலம் புரிய வைத்து விடுகின்றேன். மூவரும் தமிழை பிழையின்றி எழுத வாசிக்க கடிதம் எழுத கற்றுக் கொண்டு விட்டார்கள். இருவர் இந்த வருடம் தான் சிறுவர் மலருக்கு வந்துள்ளார்கள். 

3.கடைக்குட்டியின் மற்றொரு பெயர் ஜில் ஜில் ரமாமணி. காரணம் நாட்டியத்தில் தீரா ஆர்வம். அதைவிட நொறுக்குத்தீனி. படிப்பிலும் வகுப்பிலும் இவரும் முதல் நிலை தான். . ஆனால் ஒவ்வொரு காரியமும் தேர் போல மெதுவாகத்தான் நகரும். பேசத் தொடங்கி விட்டால் ஒவ்வொரு வார்த்தையும் இடி போல இறங்கும். 

மனைவியும் இவரும் அடிக்கடி பேசிக்கொள்வதை கண்டு கொள்ளாதது போல காதில் வாங்கிக் கொண்டிருப்பேன். மாமியார் மருமகள் வாக்குவாதம் போல போய்க் கொண்டிருக்கும். கடைசியில் நான் நாட்டாமையாக ஆக்கப்படுவேன்.  அந்த சமயம் தான் என் ஒன் பாத்ரூம் வருது. இருங்க வந்து விடுகின்றேன் என்று தப்பி விடுவதுண்டு.

4.இடையில் ஒருவர் இருக்கின்றார். படிப்பில் பி கிரேடு. ஆனால் சாப்பாடுச் சுவையில் என்னைப் போலவே ஏ கிரேடு. எது குறித்தும் மற்ற இருவரையும் போல ஆசைப்படுவதில்லை அலட்டிக் கொள்வதும் இல்லை. உண்ண உறங்க கொஞ்சம் படிக்க அவவ்வபோது நான் தான் மிஸ் இங்கே கொஞ்சம் வந்து உட்காருங்க என்று என்னை மிரட்ட என்று அவர் பயணம் அமைதியான நதி போல போய்க் கொண்டிருக்கின்றது.  என் அம்மாவின் அம்மா குணங்களைக் கொண்டு வந்து என்னை பலவிதங்களில் மாற்றியவர் மாற்றிக் கொண்டுருப்பவர். 

5.பத்து வருடமாக எனக்கு ஒரே மருத்துவர் தான். வருடத்தில் தவிர்க்கவே முடியாமல் இரண்டு தடவை செல்வது வழக்கம். எனக்கு பெரிதான எந்த நோயுமில்லை. குடும்பத்தில் இருந்த இருக்கும் சர்க்கரை நோய் கூட அண்டவில்லை. ஆனால் திருப்பூர் நகரம் தரும் தூசியும், மாறும் பருவ நிலையும், அலைச்சலும் தரும் ஒவ்வாமை என்பது தான் சளியில் தொடங்கும். காய்ச்சலை வரவழைக்கும். வண்டி நகராது.  

மருத்துவரிடம் சென்ற பிறகு தான் ஒரு கட்டுக்குள் வந்து நிற்கும்.  உடம்பில் எதிர்ப்பு சக்தியும் வருடத்திற்கு வருடம் இழந்து கொண்டே இருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வருடத்தின் பாதிக்கு மேல் தான் இயற்கை மருத்துவத்தின் பக்கம் சென்றே ஆக வேண்டும் என்று தோன்றி வெற்றிகரமாக குடும்பம் கடந்த ஆறு மாதங்களில் ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வர முடிந்துள்ளது. 

6. இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் மின்வெட்டு திருப்பூரில் உள்ள நெருக்கமான பழக்கத்தில் உள்ள, பார்த்த, பழகிய பலரின் வாழ்க்கையையும் சூறையாடி விட்டது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடும்பத்திற்கென்று உருவாக்கிக் கொடுத்த வசதிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கவில்லை.

பாதிப்பு என்று பார்த்தால் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய உண்மையான வருமானங்கள் பாதியாக கிடைத்தது மட்டுமே. அத்துடன் உழைக்க வேண்டிய தருணங்கள் இன்றி அமைதியாக வேடிக்கை பார்க்க வைத்தது தான் கொடுமை.

7.வசதிகளை பொருட்படுத்தாமல் இயல்பான கிராமது சிந்தனைகளில் வாழ்க்கை வாழ பழகிக் கொண்டதால், குடும்பத்தையும் அதன்படியே வழி நடத்துவதால் எந்த இடர்பாடுகளும் பெரிய அளவில் பாதிப்பதில்லை., குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதற்கு கிடைக்கும் பலன்கள், கிடைக்காத போது செய்ய வேண்டிய உண்மையான அக்கறை சார்ந்த உழைப்பு என்று இந்த வருடம் முழுக்க இனிய நாட்களாகவே இருந்தது.

8.ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வலைதளத்தை சோதனையாக எடுத்துக கொண்டு அதனை முழுமையாக உள்வாங்க முயற்சிப்பதுண்டு. எழுத தொடங்கிய முதல் தலைப்பு முதல் நேற்று எழுதியது வரைக்கும் பார்ப்பேன்.

இந்த வருடம் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தை பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். அவர் மேல் உள்ள விமர்சனங்கள், ஆதரவு, எதிர்ப்பு, வசவுகள், பாராட்டுரைகள் என்று அனைத்தையும்  உள் வாங்க முடிந்தது.  

9.அவரும் தினந்தோறும் விரிவாக தான் நினைப்பதை எந்தவித சமரசமின்றி எழுதுகின்றார். அளவு எதையும் வைத்துக் கொள்ளாத போதும் கூட அது அவசியமான கட்டுரையாகவே இருக்கின்றது. அதைவிட அவரின் தள வடிவமைப்பு தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் எழுதிய எதைப் பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான உழைப்பின் மூலம் சாத்தியமாக்கி இருக்கின்றார்.  எழுதுவதைப் போல அதை கொண்டு சேர்த்தலும் அவசியம் என்பதை அவரின் தளம் எனக்கு உணர்த்தியுள்ளது. 

10.பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் உள்ள நாட்களில் மேடைப் பேச்சுகளில் கலந்து பல பரிசுகளையும் பெற்றுள்ளேன். அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் வாசிப்பு மட்டுமே. பேய்த்தனமான வாசிப்பு முதல் பொழுதுபோக்கு வாசிப்பு வரைக்கும் எந்த பாரபட்சமும் இல்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில் தான் எழுத முடிகின்றது என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. ஆனால் இந்த வருடம் தமிழ்ச்செடி விழாவில் தான் முதன் முதலாக பேசினேன்.

அலுவலக ரீதியான மனித வள மேம்பாட்டுத்துறையில் வாரந்தோறும் உரையாடல் நடக்கும். தமிழ்ச்செடி விழாவில் பேசுவதற்கு முன்பு முதல் நிமிடம் வரைக்கும் எது குறித்து பேசப்போகின்றோம் என்று எதுவும் தெரியாமல் கோவை மு சரளா மற்றும் மெட்ராஸ் பவன் சிவா இவர்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு மையமாக நான் பேசினேன். நண்பர்கள் எழுதும் எழுத்துக்களைப் போல பேசும் பேச்சும் தெளிவாக அற்புதமாக உள்ளது என்றனர். காரணம் பொதுவாக எழுதுபவர்களுக்கு நன்றாக பேச வராது என்பார்கள். இது இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த அங்கீகாரத்தில் ஒன்று..

அடுத்த பதிவில் முடிகின்றது.

திரும்பி பாரடா 2012  1

Sunday, December 23, 2012

காரைக்குடி உணவகம் - பசியா? ருசியா?


சாலம்ன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றத் தலைப்பு போல இருக்குதே என்று யோசிக்கின்றீர்களா?

வேற என்ன செய்வது?  

உண்ண வழியில்லாமல் ஒரு பெருங்கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்து என்ன மாதிரி வித்தியாசமான சுவையில் உண்ணலாம் என்று அலையும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தானே இருக்கிறது.

பழைய சாதம். தொட்டுக்க கொஞசம் முதல் நாள் வைத்த பழைய புளிக்குழம்பு? ரெண்டு வெங்காயம். எனக்கு இது போதும்.

சோறு தவிர வேறெந்த கருமாந்திரமும் தேவையில்லை. சோறு தான் வேண்டும்.  அதை சாப்பிட்டால் எனக்கு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி?

அய்யோ? இந்த சோறு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வரும். விதவிதமான டிபன் வகைகள் தான் எனக்கு எப்போதும் விருப்பம்?

விதவிதமான புதிய வகைகளை சுவைத்துப் பார்ப்பது எனக்கு பிடிக்கும்? வர வர பீட்ஸா,பர்கர் கூட பிடிக்கமாட்டுது. 

அடப் போங்கப்பா சாப்பாடு என்றால் அசைவம் தான் உண்மையான சாப்பாடு. ஒரே ஒரு கருவாடு. ஒரு தட்டு சாப்பிட்டு விடுவேன். எனக்கு சிக்கன், மட்டன் இருந்தா ஒரு கட்டு கட்டி விடுவேன். ஒரு முட்டை கூட சாப்பிட்டுற சாப்பாட்டில் இல்லைன்னா அது என்னப்பா சாப்பாடு?

இந்த ஐந்துக்குள் தானே நாமே ஏதோவொரு இடத்தில் ஒளிந்து தின்று கொண்டிருக்கின்றோம்.

இந்த பஞ்சபாண்டவர்களைப் போல இவங்க முப்பாட்டனும் நான்கில் இருந்து தான் தொடங்குகின்றார்கள். .

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு. 

ஆனாலும் இதன் நீட்சி அதிகம் என்றாலும் இப்போது இதனை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

கண்மாய் மீனில் கருப்பட்டி போட்டு சமைத்தால் நன்றாகவா இருக்கும்?

அல்வாவை அயிரை மீன் பக்குவத்தில் செய்ய முடியுமா?

புளியோதரையில் அதிகமாக உப்பை அள்ளிக் கொட்டினால்  உப்போதரை என்று சொல்ல மாட்டார்கள்.  செய்தவர் அடிவாங்கி விடுவார். .

சொல்லிக் கொண்டே போகலாம்.  காரணம் நாம் விரும்பும் ருசி தான் நமக்கு முதலில் பசியைத் தூண்டுகின்றது.   குழப்பமாக இருக்கின்றதா? 

இயல்பாக உடம்பில் நேரம் வந்ததும் பசி எடுப்பது என்பது வேறு? 

ருசி நம்மை தூண்டுவது என்பது வேறு.  

திடீரென்று சுவராஸ்சியம் இல்லாமல் ஒரு கிராமத்துக் கடையில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்க.  இயல்பான பசிக்காக உள்ளே நுழைந்து இருப்பீங்க.  வேறு எந்த கடைகளும் அந்த சமயத்தில் கண்களுக்கு தென்பட்டு இருக்காது. ஆனால் அவங்க கொடுத்த கோழிக் குழம்பை பார்த்து சொக்கிப் போய்  என் சொத்தை வேண்டுமானாலும் எழுதித் தருகின்றேன். இன்னோரு கரண்டி ஊத்துங்க என்று உறிஞ்சத் தோன்றுமே? அது தான் ருசியின் மகிமை.

கூழாக மாற்றுங்க.

இன்று ஒவ்வொருவரும் ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ விதமான உணவுகளை தினந்தோறும் தினறு பார்க்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் எப்படி சாப்பாடுகின்றோம் என்பது தான் பெரிய கேள்விக்குறி?

சாப்பிடுவதைப் பற்றி இப்போது பேச வேண்டும்.

ஒரு கையில் அப்படியே எடுத்து ஒரு உருண்டை உருட்டி அப்படியே வாயில் திணிப்பது ஒரு வகை.  வாய் என்பது ஒரு சிறிய அளவு உள்ள பகுதி. ஆனால் அதன் கொள்ளவுக்கு மேல் திணிக்கும் போது பாதிக்கும் மேலே அரைக்காமலேயே அப்படியே உள்ளே போய்விடுகின்றது.  வயிறு என்பது செரிக்கத்தானே இருக்கிறது என்பது நீங்க சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது.  ஆனால் வயிறு என்பதன் பணி வேறு.

சாப்பிடுவதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு விரலின் நுனியில் தொடங்கும் முதல் கோடு வரைக்கும் தான் சாப்பாட்டை எடுக்க வேண்டுமாம். அதாவது நான்கு விரல்களும் சோர்ந்த அந்த அளவுக்கு எடுக்கும் போது தான் கிடைக்கும் அளவு தான் வாயில் இயல்பாக பற்கள் கடித்து நாக்கு சுழற்றி அது கூழாக மாற்றி உள்ளே இறங்க உதவும். அளவுக்கு மீறி எடுத்து வாயில் திணிக்கும் போது தான் பாதி கடித்தும் கடிக்காமலும் உள்ளே போக ஒவ்வொரு பஞ்சாயத்தின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது.

செரிக்காமல் வயிற்றில் தங்குவது, செரிமாணத்தின் அளவு தெரியாமல் சாப்பிடுவது, எப்போது சாப்பிட வேண்டுமோ அதை மீறி கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நேரத்தில் உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது...............

இத்தனையும் செய்து விட்டு குத்துதே குடையுதே என்றால் அதற்கு என்ன தான் தீர்வு? 

நோய்களின் ஆரம்பம் ஒவ்வொருவரின் வயிற்றில் இருந்து தான் தொடங்குகின்றது. அந்த வயிற்றை சரியாக கவனிக்காமல் வைத்திருக்கும் போது வயிற்றுப் போக்கு முதல் வெளியே தள்ளி விடுப்பா என்று சொல்லாமலேயே செய்யும் வாந்தி வரைக்கும் நம்மை வரவேற்கின்றது.

மைதா மாவு போன்ற சமாச்சாரங்களை வழிக்கு கொண்டு வர ஈஸ்ட் என்ற பொருளைச் சேர்ப்பதை கவனித்து இருப்பீர்கள் தானே? 

காரணம் நொதித்தல் என்ற நிலை நடக்க வேண்டும்.  அப்புறம் வகுத்தல் கூட்டல் பெருக்கல் போன்ற சமன்பாடுகள் நடக்கும். அதன் பிறகே நாம் விரும்பிய பலகாரத்தைச் செய்ய முடியும். மாவு நொதிக்கவில்லை என்றால் நாம் நொந்து போய் அந்த மாவை வேடிக்கைப் பார்க்க மட்டுமே உதவும்.  

அதைப் போலத்தான் நம் வாயில் உள்ள எச்சில் என்ற உமிழ்நீர் என்ற அற்புத பணியைச் செய்கின்றது.  காறி காறி துப்பி அதை வீணாக்கும் மனிதர்களுக்கு அதன் அருமை புரியப்போவதில்லை. 

சுவை என்பது நாக்கு மட்டுமே உணரும். உள்நாக்கில் தொடங்கும் அந்த உணவின் கூழ் என்பது வெறும் சாறு தான். அதற்குப் பிறகு அதன் சுவையை எந்த உறுப்பும் உணர வேண்டிய அவசியமில்லை.  

ஆனால் இந்த நாக்கு வரைக்கும் நடக்கும் பயணத்திற்குத்தான் நான் நாயாய் பேயாய் அலைந்து அலைந்து கண்ட கண்ட இடங்களில் உள்ள கருமாந்திரங்கள் வாங்கி வாயில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் கூழாக மாறி உள்ளே அளவோடு உள்ளே செல்லும் எந்த உணவும் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருகின்றதோ இல்லையோ அது அவஸ்த்தையை தராது. 

சத்துக்கு உணவா? சக்திக்கு உணவா? இல்லை சாவதற்குள் அத்தனை சுவையையும் தின்று பார்க்கத்தான் இந்த உணவா? என்று எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் ருசியோடு அத்தனை பசியையும் போக்குவதோடு நன்றாக வாயில் அரைத்து அதை கூழாக்கி உள்ளே அனுப்புங்க.  ஆயுள் கெட்டி என்று அர்த்தம். நோய்கள் வர யோசிக்கும்.

Saturday, December 22, 2012

திரும்பி பாரடா 2012

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அடுத்த ரெண்டு மூன்று வருடங்களில் என் கையில் கிடைத்த நோட்டுக்களை டைரியாக நினைத்துக் கொண்டு  அப்போது தோன்றியதை நாட் குறிப்புகளாக நிறைய விசயங்களைப் பற்றி எழுதி இருக்கின்றேன்.

ஆனால் தொடர்ந்து என்னால்  எழுத முடிந்ததில்லை. பல நினைவுகள் மறந்து  போய் விட்டது. இப்போது கூட பழைய டைரிகளை வீட்டில் காட்டும் போது நக்கல் வார்த்தைகள் வந்து விழும்.  இந்த வலைபதிவில் நான் இதுவரைக்கும் முயற்சிக்காத ஒன்று

நண்பர் வெயிலான் உடன் இது குறித்து உரையாடிய போது ஏற்கனவே மா.சிவகுமார் இதைப் போல அன்றாட நிகழவுகளை தினந்தோறும் குறிப்புகளாக எழுதியிருப்பதாக சொன்னார். ஆனால் நான் இந்த வருடம் முழுக்க நடந்த நிகழ்வுகளை அனுபவ குறிப்புகளாக வலைபதிவில் எழுதி வைக்க முடியுமா? என்று யோசித்தன் விளைவு இது. . 

ஒவ்வொருவருக்கும் முன்று வாழ்க்கை உண்டு.

குடும்பம், தொழில் நம் தனிப்பட்ட விருப்பங்கள்.

இந்த மூன்றையும் முயற்சித்துப் பார்த்துள்ளேன். 

பதிவின் நீளம் கருதி மூன்று பதிவுகளாக வருகின்றது.. 

றிமுகமான இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து நிற்க பேச எழுத முடியாத தொழில் வாழ்க்கையில் வருடத்தின் இறுதிப் பகுதியில் தான் ஆற்றங்கரையோரம் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அமைதி வந்தது. காரணம் இந்த வருடம் செயல் இழந்து போன தமிழ்நாட்டு அரசாங்கத்தின் "அறபுத திறமையான புரிதல்" நிர்வாகத்தில் திருப்பூர் என்ற தொழில் நகரமே  ரஜினிக்காந்த் சொன்னது போல ச்சும்மா அதிர்ந்து  கலகலத்துப் போய்விட்டது.  உருவான மின்தடையில் ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் டீஸல் வாங்கி கட்டுபிடியாகவில்லை.படிப்படியான ஆட்குறைப்பு நடவடிக்கை, என்று கண் எதிரே பல கொடுமைகளை பார்க்க நேர்ந்தது. ஆனால் நமக்கு பலசமயம் ஆட்கள் தேவைப்பட்ட போதிலும் அமைதியாகவே இருந்து விடுங்க என்ற அறிவுறுத்தல் வந்த காரணத்தால் ஏராளமான ஓய்வுகளை வேதனையுடன் பார்க்கத்தான் முடிந்தது. எழுதித் தீர்க்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. ஏதாவது ஒரு சமயத்தில் இது குறித்து எழுத வேண்டும்.

று வருடமாக முடிந்தே போய்விட்டது என்ற கிடந்த ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்தியதோடு நிர்வாக மேலாண்மையில் கற்றுக் கொண்ட பாடங்களும் கிடைத்த அனுபவங்களும் ஏராளம்.

னிய வெற்றிகளை மட்டுமே நாம் விரும்புகின்றோம். வாழ்வில் எதையும் வெற்றி தோல்வி என்று மட்டுமே பார்க்கின்றோம். ஆனால் என்ன கிடைத்தது? எப்படி மாறியுள்ளோம்? என்பதை எடுத்துக் கொள்ளும் போது நான் இந்த வருடம் நிறைய மாறியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.  பண ரீதியாக இழப்பில்லை. அதே சமயத்தில் மன ரீதியான வளர்ச்சி அபரிதமானது.

யடிச்சான் காப்பி போல வாழ்பவர்கள் வெள்ளம் வந்து விட்டது. காப்பாற்றுங்க காப்பாற்றுங்க என்று (உடன் பணிபுரிவர்கள்) தொழில் ரீதியான பிரச்சனைகளை என்னிடம் கொண்டு வரும் போது அழகாக அமைதியாக பிரித்து வைத்து அவர்களை வைத்தே அதை முடிவுக்கு கொண்டு வந்த திறமையை இந்த வருடம் வளர்த்துக் கொண்டுள்ளேன். இதற்கு காரணம் வலையுலக எழுத்துக்களே. கூர்மையாக ஒன்றை கவனிக்கும் போது அவசரத்தை விட அமைதியாக இருப்பதென்பது நம் இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது. 

லகம் நம்மை பாராட்டினாலும் நம்மிடம் உள்ள அத்தனை இயல்பான குணங்களையும் காண்பவர், சகிப்பவர், மாற்றுபவர் அவரவர் மனைவிகள் மட்டுமே. அந்த வகையில் நான் என்றுமே பாக்கியவான் தான். என்னை என் போக்கிலேயே வாழ அனுமதித்தவளுக்கு இந்த வருடம் என் அன்பை எப்போதும் போல கோபத்தோடு கொஞ்சம் கூடுதலோடு கொடுத்துளேன். வாங்கிய திட்டுக்களை விட கிடைத்த மதிப்பெண்கள் அதிகம்.

ர் உலகம் தெரிய நம்முடைய முயற்சிகளுக்கு உண்மையான பலன் கிடைக்காத போது அது கவலையை அறிமுகம் செய்கின்றது. அது உடனே சோகத்தை அறிமுகம் செய்ய இறுதியில் உடம்பில் கொண்டு போய் பதிவு செய்கின்றது. ஆனால் அது போன்ற தருணங்களில் பிடித்த விசயங்களில் ஈடுபடும் போது நம்மிடம் உள்ள அடுத்த திறமைகள் ஒவ்வொன்றும் எட்டிப்பார்க்க புதிய பாதை உருவாகின்றது. உணர்ந்த உண்மைகளும் உணர்த்தும் எதார்த்தமும் கைகோர்கக கிடைக்க அனுபவங்களை எழுத்தாக மாற்றும் போது சிலருக்கேனும் பயன் உள்ளதாக இருக்கின்றது. பல சமயங்களில் நாம் கடந்து வந்த அவசர தருணங்களை படித்துப் பார்க்கவும் உதவுகின்றது.

து குறித்து யோசித்தாலும் அதன் தொடர்பான வார்த்தைகள் தொடர்ச்சியாக தோன்ற ஆரம்பித்து விடுகின்றது. மனதிற்குள் பார்த்த, பாதித்த, படித்த, கேட்ட, யோசித்த அத்தனை விசயங்களின் கோர்வையும் நமக்கு பல புரிதலை புரிய வைக்கின்றது.  அந்த சமயத்தில் தொடர்ச்சியாக யோசனையில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் எழுத ஆரம்பித்த பிறகு அத்தனையும் மறந்து போய் புதிதான சிந்தனைகள் எழுத்தாக மாறி யோசித்ததை விட இயல்பாக ஒரே மூச்சில் எழுதி முடித்து விட முடிகின்றது.

றக்குறைய 600 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையை தலைப்பு மற்றும் மேலும் கீழும் பார்த்து படித்து விட்டு ஒரு விமர்சனத்தை உடனே எழுத முடிகின்றது. விமர்சனத்தை எழுதிய பிறகு அந்த கட்டுரையை முழுமையாக படித்து முடித்து விட்டு மீண்டும் அந்த விமர்சன வரிகளை பார்க்கும் போது பொருத்தமாகவே இருந்து விடுகின்றது.

யோ இவருக்கு எப்படி நேரம் கிடைக்கின்றது? எப்படி பெரிதாக எழுத முடிகின்றது என்ற விமர்சனங்களுக்கு எப்போதும் என் கைவசம் இருக்கும் பதில் ஒன்றே ஒன்று தான். எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தினந்தோறும் அதிகப்ட்சம் நான்கு மணி நேரமென்பது வெட்டியில் கழிப்பதாகத் தான் இருக்கும். அந்த நேரம் கூட கிடைக்காமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் சீக்கிரம் மருத்துவமனைக்குச் செல்லப் போகின்றார்கள் என்று அர்த்தம். குடும்பம், குழந்தைகள் மேல் கவனம் செலுத்தாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கக்கூடும். 

வ்வொரு நாளும் இணையத்தோடு வாழ கடமைப்பட்ட தொழில் உள்ளவர்களுக்கு இன்னமும் கூடுதலாக கிடைக்கும்.நான்கு மணி நேரமென்பது என்னால் 600 வார்த்தைகள் உள்ள கட்டுரை 3  எழுத முடியும். எழுதுவதை விட வடிவமைப்புக்குள் கொண்டு வருவதற்கான சவாலில், எழுத்துப் பிழைகளை திருத்த இன்னமும் நான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.

ராயிரம் சிந்தனைகளை நாம் எழுத்தில் எழுதினாலும் நம் குடும்ப வாழ்க்கையில் ஓரளவுக்கு மேல் ஏமாற்றி விட முடியாது. பொதுவாக எழுத்தாளர்களை,எழுத ஆசைப்படுவர்களை இந்த சமூகம் ,வாசிப்பாளர்கள் கொண்டாடுகின்றதோ இல்லையோ முக்கியமாக அவரவர் வீட்டில் மதிப்பு கிடைப்பதில்லை. எளிதான காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எழுத்து மூலம் சிந்தனைகளை வளர்க்க முடியும்.  குடும்பத்தினர் ஆசைப்படும் எதையும் அத்தனை எளிதாக கொண்டு வர முடியாது. ஆனால் எனக்கு அந்த பிரச்சனை இதுவரைக்கும் வந்ததில்லை. இரண்டு தண்டவாளமாக வைத்துக் கொண்டிருப்பதால் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஓளவையார் குறித்து படிக்கும் போதெல்லாம், அவர் சொல்லிவிட்டுச் சென்ற பாடல்களை படித்து முடிக்கும் போது ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரும் இந்த பாட்டியின் திறமையும் சுண்டக் காய்ச்சிய பாலின் சுவையை உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். எழுத்துப் பயணத்தில் நாம் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.

 பணம், மனம், எழுத்து இது மூன்றிலும் முடிவும் இருக்காது. அதன் எல்லையை வாழ்வின் இறுதி வரைக்கும் நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆகா நாம் நன்றாக எழுதியிருக்கின்றோம் என்று யோசிக்கும்  போது நாம் வாசித்த ஒரு சிறிய கவிதை அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விடும். உடலில் ஆரோக்கியம் இருக்கும் வரையிலும் இந்த எழுத்துப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் தீரா ஆசை. 

மீதி அடுத்த பதிவில்..................

சென்ற ஆண்டு 2011  (தினந்தோறும் மலரும் பூக்கள்) அதிகம் பேரால் பாராட்டப்பட்ட தலைப்பு.