1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது.
குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டிடங்களில், கோழிப் பண்ணைகளில் என கிடைக்கிற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கூட்டம் கூட்டமாகத் தங்கும்போது ஏற்படுகிற உளவியல் பிரச்னை, பாலியல் பிரச்னைகள், அடிப்படை வசதிகளின்மை என இம்மாதிரி பல பிரச்னைகள் உருவாகிய வண்ணம் இருந்தது. அந்தச் சூழ்நிலையில், வாழ்ந்துகொண்டிருந்த அகதிகளின் நிலை, ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு ஒரே நாளில் மாறியது.
அதன் பின்பு, இலங்கையில் போர் உக்கிரமடையும்போதெல்லாம் அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இப்படி அகதிகளாக 1983 - 2012 வரை 3,04,269 பேர் தமிழகம் வந்தார்கள் என்றும், தற்போது 2016 அரசு கணக்குப்படி 107 முகாம்களில் 64,144 நபர்களும், முகாமிற்கு வெளியே 36,861 நபர்களும் இருப்பதாகச் சொல்ல்லப்படுகிறது. இடப்பெயர்வில் அரசுகளின் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிது.
சமீபத்தில் விடுதலைப்புலிகள் / இராஜீவ் காந்தி / சீமான் / ஏழு பேர் விடுதலை / தமிழ் ஈழம் என விதவிதமான டிரெண்ட் போய்கொண்டிருக்கிறது, இதில் நகைமுரணை கவனித்தால் மேற்சொன்னவை மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புள்ளது போலவும் அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் முகாம்களில் இருக்கும் ஈழ அகதிகளுக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாததுபோல் உரையாடல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் இந்த உரையாடல்களுக்குள் அகதிகள் வரமாட்டார்கள் என்று எண்ணுவதற்கில்லை.
மாறாக, திட்டமிட்டு யாரும் அதைப் பேச வேண்டாம் எனத் தவிர்க்கிறார்கள். ஊடகமும் சரி, ஊடகவியலாளர்களும் இதில் விதிவிலக்கல்ல, எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப்பேச வேண்டாம் என்று தெளிவாகவே திட்டமிடுகிறார்கள். நுணுக்கமாக கவனித்தால், பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் பற்றிய உரையாடல்களுக்கு வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது
ஆனால் அதை யாரும் மறந்தும் பயன்படுத்துவதாயில்லை.
இலங்கை, ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள், ராஜபக்ஷே, ராஜீவ்காந்தி, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், இந்திய அரசு இலங்கையில் கட்டும் வீடுகள் இப்படி அத்தனை உரையாடல்களும் தமிழகத்திலுள்ள அகதிகளைத் தவிர்த்துவிட்டு அல்லது நிராகரித்துவிட்டு முழுமையடைய வாய்ப்பில்லை; ஆனால் அத்தனை உரையாடல்களும் அகதிகளை தவிர்த்துவிட்டுத்தான் நடக்கிறது.
அகதிகளாக இந்த தேசத்தில் காலடி வைத்தவர்கள் பொது சமூகத்தின் பார்வைக்கு வேண்டுமானால் அகதிகள் என்று அடையாளப்படுத்தப்படலாம், ஆனால் உண்மையில் இவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகத்தான் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகளைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகள் தங்களது விடயத்தில் கரிசனையோடு நடந்துக்கொள்ளும் என்று நம்புகின்றனர்.
30 ஆண்டுக்காலமாக இந்தியாவில் தமிழகத்தில் வாழ்ந்துவிட்ட தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகின்றனர். ஆனாலும், தொடக்கத்தில் தாய் தந்தையருடன் வந்தவர்களுக்கு திருமணமாகி இன்று அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களும் பதின்ம வயதைத் தொட ஆரம்பித்து விட்டனர். அதாவது தந்தை மகன்/ள் பேரப்பிள்ளைகள் இப்படி மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருப்பதில் பல்வேறு சமூகச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லோருமே நினைப்பதுபோல் அகதிகள் முகாம்களில் இருக்கும் 63000 நபர்களும், இலங்கை அகதிகள் இல்லை. அதில் கிட்டத்தட்ட 30000 பேர் இந்திய வம்சாவழித்தமிழர்கள், அதாவது தேயிலைத் தோட்ட தொழிலாலர்களாக இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். போரினால் பாதிக்கப்பட்டுப் புறப்படும் ஒவ்வொருவரும் எந்த அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு பயணப்பட வாய்ப்பில்லை .
அப்படிச் சான்றுகள் ஏதுமின்றி வந்த அத்தனை பேரையும் (இந்திய வம்சாவழித் தமிழர்கள் உட்பட) சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்றே அணுகுகிறது பாரத தேசம் /தொப்புள்கொடி உறவுள்ள தேசம்.
சட்ட விரோத குடியேறிகள் என்பதால் இந்திய குடியுரிமைச்சட்டப்படி அவர்களோ அவர்களுடைய குழந்தைகளோ இந்தியாவில் எவ்வித உரிமைகளையும் அனுபவிக்க இயலாது- அடிப்படை சலுகைகளைத்தவிர. உண்மையில் முகாம்களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் கூட அருகிலிருப்போருக்கு அல்லது அவர்களது வாழ்வியலை உணராதவர்களுக்கு பெரும் கோவத்தை உருவாக்குகிறது.
இலவச மினாரம், தொகுப்பு வீடுகள், அரசு பணக்கொடை போன்றவை இதைவிட வறுமையிலுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை எனும் ஆதங்கத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதுவே ஒருசில நேரம் முகாம்களின் அருகில் இருப்போர்களிடம் பகைமையை வளர்க்கவும் காரணமாக இருக்கிறது.
ஆனால் உண்மை நிலை அப்படியில்லை- இச்சூழ்நிலை அகதி சமூகத்தை பாழ்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை, (குடும்பங்களையும்தான்) அமர்த்தும்போது அங்கு உண்டாகும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பள்ளிகல்வி இடை நிறுத்தலில் ஆரம்பித்து இளவயது திருமணம், விவாகரத்து, உடனே மறுமணம், போதைப்பழக்கம், குற்றச்செயல்கள் என அதன் நீட்சி அதிகமாகி அது மாற்றான் துணையை அபகரித்தல் வரை வந்து நிற்கிறது.
ஒழுக்கம் என்பது இயல்பாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை என்பது மாறி இன்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற சூழல் வந்துவிட்டது.
முகாம்களில் வாழ்வதால் பிள்ளைகளின் படிப்பு வீணாகிறது, தீயப்பழக்கங்களில் அடிமைப்பட்டுவிடுகறார்கள் என்று அருகாமையிடத்தில் வாடகைக்கு வீடெடுத்து வாழப் பழகத் தொடங்கிவிட்டனர்.
அகதிகளாக இங்கே வரும்போது தான் எந்தவித ஆதாரங்களையும் எடுத்துவரவில்லை என்றாலும் 30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக, கடற்கரையோர மண்டபத்தில் கால் பதித்த கணத்திலிருந்து அவர்களுக்கான முறையான ஆவணங்களைப் பராமரித்து வருவதோடு தமிழக அரசு அத்தனை சலுகைகளையும் இவர்களுக்கும் விரிவுப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு, ஒன்று எங்களைச் சட்ட விரோத குடியேறிகளாக அணுக வேண்டும் அல்லது அரசு சலுகையெல்லாம் வழங்கும்போது என்ன ஆவணங்களைக் கையாள்கிறோமோ அதை வைத்து அவர்களுக்குண்டான பிற சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க வேண்டும்.
இப்படி இரண்டையும் செய்து அவர்களையும் குழப்பி தாமும் குழம்பிக்கொள்ளக்கூடாது. ஆனால் அதுதான் நடைபெறுகிறது. இப்படிக் கூறுவதால் அவர்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எதிர்ப்பதாக அர்த்தமில்லை.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 30 ஆண்டுகளில், தற்போதுதான் இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுகிறார்கள்- அகதிகளாக அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். அதுவும் கூட மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு. (தீர்ப்பின் விவரங்களை ஒரு சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அறிந்திருந்தாலும் அகதிகள் தரப்பிற்கு தற்போதுதான் தெரியும்).
குறிப்பு:
சமீபமாக வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கேட்டு கோரிக்கை வைத்து வருவதை நாளேடுகளில் கண்டிருப்பீர்கள். கடந்த 17.06.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் காரணம். அதாவது திருச்சி கொட்டப்பட்டு முகாம் மற்றும் அருகில் தங்கியுள்ள சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்துள்ளனர்.
தாங்கள் அனைவரும் இந்திய- இலங்கை ஒப்பந்த்தத்தில் வந்தவர்களென்றும் தாங்கள் இந்திய குடியுரிமைப்பெற தகுதியுள்ளவர்கள் அதற்கான அத்தாட்சி தங்களிடம் இருப்பதாகவும், அரசு இதனை கவனத்தில் கொள்ளாமல் சட்ட விரோதக் குடியேறிகள் எனும் வகையில் நடத்துவதாகவும், தாங்கள் இந்தியக் குடியுரிமை சம்மந்தமாக பல்வேறு மனுக்களை வழங்கியதாகவும் அதன் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் எனவே நீதிமன்றம் தலையிட்டு இதன்மீது நடவடிக்கைஎடுக்கவேண்டுமென்றும் வழக்குத்தொடுத்துள்ளனர்.
இதன்மீது தீர்பளித்த நீதிபதி அவர்கள் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி மூன்று வகையினர் மட்டுமே குடியுரிமை கோர முடியுமென்றும், சட்ட விரோத குடியேறிகளும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் கூட இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியாது,
இந்திய குடியுரிமை சட்டமும் அதேயேதான் வலியுறுத்துகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருவேறு கொள்கைகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறவாறு தீர்ப்பளித்திருக்கிறார். கூடவே நீண்ட நெடும்காலமாக (முப்பது வருடங்களாக) இந்திய மரபுக் கலாச்சாரங்களை பின்பற்றி வாழ்பவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவின்படி (பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது)
அவர்களது விண்ணப்பம் மீது பரிசீலனை செய்யலாம் என பரிந்துரைத்துள்ளார்.அதலால் அகதி மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தமிழக வாழ் அகதிகள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவண்ணம் உள்ளனர்.
ஏதாவதொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம்பெயர்கிறவர்களுக்காகப் பேச, குறைந்தபட்சம் அவர்களுக்குண்டான தேவைகளைப்பற்றி அவர்கள் தஞ்சமடைந்திருக்கும் நாட்டுடன் பேச ஏதாவதொரு அமைப்பு இருக்கும் அல்லது அவர்களுக்குள்ளாவது ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு அல்லது பிரதிநிதிகளாவது இருப்பார்கள் ஆனால் இலங்கை அகதிகளின் பிரதிநிதிகளாக, அல்லது அவர்களுக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு அமைப்புகூட இல்லை.
அகதிகளின் மறுவாழ்வுக்கான அமைப்பு என்று சொல்லக்கூட்டிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமோ அகதிகளுக்கான மறுவாழ்வைத்தவிர மற்ற அனைத்து சேவைகளையும் தேவையானவர்களுக்கு திறம்படச் செய்கிறார்கள் .
அகதிகள் மத்தியில் இயங்கும் ADRA INDIA, JRS, LIBERA போன்ற அமைப்புகள் கூட சிறு சிறு தொண்டு நிறுவனத் தன்மை சார்ந்த சேவைகளைச் செய்கிறார்களே தவிர இம்மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் எதையும் செய்ய முயலவில்லை அல்லது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதில் சென்னையிலிருக்கும் UNHCR அமைப்போ இலங்கைக்கு விரும்பி செல்ல இருக்கும் நபர்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையைச் செய்துகொடுப்பதையும் வருடாவருடம் உலக அகதிகள் தினத்தைக் கொண்டாடுவதையும் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தமிழக, இந்திய, சர்வதேச அளவில் யாராலும் உதவ இயலவில்லை.
சரி, புறத்திலிருந்து யாராலும் வந்து உதவ இயலாத நிலை இருக்கிறது, அகதிகள் அவர்களுக்குள்ளாகவே சில தன்னார்வலர்கள் இணைந்து தங்களது பிரச்சனைகளைப்பற்றிச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஒன்றிணைந்தால் அதற்கும் அனுமதியில்லை. இப்படி எல்லாப் பக்க கதவையும் அடைத்துவிட்டு, உலக அரங்கில் ஈழம், போர்க்குற்றம் எனப் பேசத் துடிப்பது என்னவிதமான அரசியலென்று தெரியவில்லை.
என் கேள்வியெல்லாம் ஒன்றுதான் - மனிதம் , சமூகம், சமத்துவம், சுதந்திரம் என அன்றாடம் பேசும் நம் கண் எதிரே தமிழகம் முழுவதும் 106 முகாம்களில் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வியல் எப்படி இருக்கும் என்று உரையாடியதுண்டா , அந்த சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருவருக்குக் கூடவா கலெக்டர் கனவு இருக்காது? ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது? அதைப்பற்றிச் சிந்திக்க யாருமில்லை 63 ஆயிரம் பேரில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 10லிருந்து 20 தற்கொலைகள் நடக்கிறதே என்ற செய்தியையாவது அறிந்ததுண்டா?
எங்களில் படித்த இளைஞர்களெல்லாம் பெயிண்ட் வாளியுடன் தமிழகமெங்கும் வலம் வருகிறார்களே அவர்களில் ஒருவருக்குக் கூடவா தொழில் அதிபர் கனவு இருக்காது அல்லது ஒரு 6 இலக்க சம்பளம் வாங்கும்படியாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசை இருக்காதா என எப்போதாவது யோசித்ததுண்டா. அட ஒரு விளையாட்டு வீரர் ஆகக் கூடவா வாய்ப்பில்லை?
பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால் பரவாயில்லை; அதைப்பற்றி பேசுவதற்கூட ஏன் இவ்வளவு பயம் எனத்தெரியவில்லை.
‘சார், இந்த அகதிகள் பிரச்சினை’ என்று ஆரம்பித்தாலே அதைச் சிக்கலுள்ள, தீண்டத்தகாத பிரச்சனையாகப் பார்ப்பதுவும், வேண்டுமென்றே பிரச்சனையைத் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாதென்பது போல பாவனை செய்வதுவும் ஏன் என்று புரியவில்லை. உண்மையில் அகதிகள் பிரச்சினையைப் பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறது.
வெளிப்படையான உரையாடலுக்கு இந்த சமூகம் தயார் எனில், இந்தப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம் என்று மனமார நம்புகிறோம்.
எதையெதையோ பற்றி யூகத்திலும், நம்பிக்கையிலும் கருத்துக்கள் கூறும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் கூட அகதிகளைப்பற்றிப் பேசுவதில்லை என்பதுதான் உண்மையிலேயே கொடுமை. இன்னும் , இந்திய வம்சாவளி தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், ஸ்ரீ மாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், நாடற்றவர்கள், போதைப்பொருள், கடத்தல்காரன், ஆஸ்திரேலியப்பயணம், சட்டவிரோதக்குடியேறிகள் என அவர்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது..
அகதிகளிடம் நீங்கள் உரையாட நிறைய இருக்கிறது. நீங்கள் செவி மடுக்கத் தயாரெனில் அவர்களும் தங்களிடம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.
ந.சரவணன்.
ந.சரவணனின் பெற்றோர் தொண்ணூறுகளில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள். இருவரும் உயிரோடில்லை. சரவணன் அகரம் பவுண்டேசனில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்.
நன்றி நிசப்தம்
*****************
சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், யானைகள் வாழும் காட்டில் சிறு குயில்களின் ஓசையும் ஒலிக்கத்தான் செய்யும்.
அமேசான் கிண்டில் காட்டில் திசைகாட்டிகள் தேவையில்லை.
நடக்கத் தொடங்கினால் போதும். வழி கிடைத்து விடும்.
நம்பிக்கை தான் இலக்கு.
இயங்குவது தான் இலக்கு.
இங்கே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது தான் முக்கியம்.
5 நவம்பர் முதலாளிகள் உங்களுடன் பேச வருகின்றார்கள்
அட்டைப்பட வடிவமைப்பு மயிலாடுதுறை கணேஷ்.
.#Amazon Pen To Publish - 2019