அந்த 42 நாட்கள் - 1
Corona Virus 2020
24.03.2020 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 21 நாட்கள் என்ற சுய ஊரடங்கு என்பதனை அறிவித்தார். மேலும் நீடித்தது. இப்போது மே 3 வரைக்கும் என் மொத்தமாக 42 நாட்கள் கொரானா என்ற வைரஸ் கிருமிக்காக இந்தியாவில் 130 கோடி மக்களும் மொத்தச் சமூகத்திலிருந்தும் விலக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு உள்ளனர்.
அடுத்த வீட்டில் இருப்பவர்களிடம் உரையாடப் பயந்து, பார்க்கப் பழகப் பேசத் தயங்கும் சூழலை இப்போது நடைமுறையில் இருக்கும் கொரானா "வைரஸ் தடைக்காலம்" உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டது 29 ஜனவரி - கேரளாவில். (30ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தி வந்தது.)
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு வெளிவந்தது மார்ச் 6.
இடைப்பட்ட காலம் - சுமார் 40 நாட்கள்.
முதல் நோயாளி பற்றிய தகவல் தெரிந்தபோதே மத்திய அரசாங்கம் உஷார் ஆகியிருக்க வேண்டும். விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும். ஸ்கிரீனிங்கை துவக்கியிருந்தால், அதையும் சரியாகச் செய்திருந்தால், இந்தியாவில் இவ்வளவுகூடப் பரவியிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் எல்லை மீறிப் போய்விட்டது. விமானப் பயணிகளும், பணம் படைத்தவர்களும் கொண்டு வந்து சேர்த்தனர். இன்று அன்றாடங்காய்ச்சிகள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பக்கம் வாகன வசதிகள் இல்லாமல் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து வந்து தங்கள் ஊருக்கு வந்து சேரும் அவல நிலையும் உள்ளது.
42 நாட்கள் முடிய இன்னும் 15 நாட்கள் உள்ளது. கடந்த நாட்களில் என்ன நடந்தது. தமிழகத்தில், இந்தியாவில், மற்ற நாடுகளில் என்னவெல்லாம் நடந்தது? கொரானா, கோவிட் 19, வூகான் வைரஸ், சீன வைரஸ், என்றழைக்கப்படும் நுண்கிருமிக்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் போன்றவற்றைத் தொடர் ஓட்டத்தில் பார்க்கப் போகின்றோம்.
முதலில் "கொரானா காலம்" "சுய ஊரடங்கு" "சமூக விலக்கம்:", என்பது எப்படியுள்ளது என்பதனை இந்த வாட்ஸ் அப் பார்வேர்டு செய்தி மூலம் உணர்ந்து கொள்ள முடியும். பெயர் தெரியவில்லை.
எழுதியவருக்கு நன்றி. முதலில் இதிலிருந்து தொடங்குவோம்.