Wednesday, February 27, 2013

பணம் மட்டும் போதும்.

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் பகுதி 3

இதன் முந்தைய  பகுதிகள்


முதல் தடவை ஞானாலயா நூலகத்திற்கு சென்று வந்த பிறகு ஒரு வாரம் இந்த நூலகம் குறித்தே சிந்தனைகளே என்னுள் இருந்தது. மலைத்துப் போய்விட்டேன் என்று எழுதி விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் என்னுள் தினந்தோறும் பல கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தது.

வீட்டை விட்டு இறங்கியது முதல் அன்று இரவு வீட்டுக்குள் வந்து சேர்ந்து உறங்குவது வரைக்கும் சந்திக்கும் மனிதர்கள், பேசும், பழகும் மனிதர்கள் என்று எல்லாநிலையிலும் பணம் என்ற வார்த்தை இங்கே பிரதானமாக இருக்கின்றது.

எழுதலாம். படிக்கலாம். ரசிக்கலாம். ஆனால் கடைசியில் எதார்த்தம் என்ற நிலையில் நம்மை வைத்து பார்க்கும் போது இந்த பணம் மற்றும் அது தரும் அடிப்படை வாழ்க்கை என்று எல்லாநிலையிலும் பணத்தைத் தவிர வேறு எதையும் நாம் சிந்திக்க தேவையில்லை என்பதாக நமது வாழ்க்கையும் மாறி விட்டது. .

ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடன் சேர்ந்து குடும்பமும் சேர்ந்து எப்படி இப்படி ஒரு அசாதாரணமான சாதனையை உருவாக்கி உள்ளார்களே? எப்படி சாத்தியமானது என்ற கேள்வி மட்டும் என்னை ஒவ்வொரு நாளும் துரத்திக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொருவரும் சிறுவயதில் எத்தனையோ புத்தகங்களை படித்து வந்த போதிலும் புத்தகங்களுக்கென்று ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று எவராவது யோசித்து இருப்போமா?  குறிப்பாக ஒவ்வொரு புத்தகத்தின் முதல் பிரதி என்பது இன்று எவர் கையிலும் இருப்பதில்லை.  ஒரு புத்தகம் முதன் முதலாக அச்சுக்கு வந்த போது எப்படி இருந்தது. 

அந்த புத்தகமே பல  வருடங்கள் கழித்து வேறொரு பதிப்பகம் மூலம் சந்தைக்கு வரும் போது பல பக்கங்கள், கருத்துக்கள் காணாமல் போயிருக்கும்.  புத்தகம் என்ற ரூபத்தில் இருக்குமே தவிர அது தரும் செய்திகள் வெறும் சுவராசியம் என்கிற  ரீதிக்கு காசுகேத்த பணியாரம் என்கிற கதையாக மாறியிருக்கும்.  ஆனால் ஞானாலயா நூலகத்தில் இது போன்ற முதல் பிரதி நூல்கள் மட்டும் 500 க்கும் மேற்பட்டதாக கவனமாக சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. 

நாம் சிறு வயதில் விரும்பி படித்த புத்தகங்களைக்கூட நாம் சரிவர பாதுகாத்து இன்று வரையிலும் நம்முடன் வைத்திருப்போமா? என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லக்கூடும்.

இந்த கேள்விகள் தான் மீண்டும் ஒரு முறை ஞானாலயாவுக்கு நண்பர் சிவா மற்றும் மதுரையில் உள்ள திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. மூவரும் சென்றோம். ஒரு நாள் முழுக்க அங்கே இருந்தோம்.  வைரம் பட்டை தீட்டப்படுவதைப் போல மேலும் என் எண்ணம் மெருகேறியது.  

திருப்பூர் வாழ்க்கை கொடுத்த பணம் சார்ந்த எண்ணங்களை நண்பர் பகிர்ந்த இந்த பொன்மொழிகளைப் போல என்னுள் இருந்த ஏராளமான கேள்விகளை கொஞ்சம் கொஞ்சமாக துடைக்கப்பட்டு தூசி அடைந்த கண்ணாடியை ஈரத்துணி வைத்து துடைத்தது போல மனம் இலகுவாகி யோசிக்கத் தூண்டியது. மனம் முழுக்க எப்போதும் நிறைந்திருந்த பணம் என்ற வார்த்தை பின்னுக்குச் சென்று மனம் என்பது தடையற்று யோசிக்க காரணமாக இருந்தது.

இந்த தொடரை படித்துக் கொண்டு வரும் நீங்கள் இந்த பணம் குறித்து மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை உள்வாங்கி விடுங்கள்.  

மீண்டும் அடுத்த பதிவில் ஞானாலயா குறித்த மேற்கொண்டு சில விபரங்களைப் பார்ப்போம்.  

பணம் இருந்தால்...!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

இந்த தொடரின் முந்தைய தொடர்ச்சி




Monday, February 25, 2013

வெற்றிகொண்டான் விமர்சனம்

இவரை திமுக உடன்பிறப்புகள் இணைய தள (திமுக) வெற்றி கொண்டான் என்று அழைக்கின்றார்கள். 

இவர் திட்டாத ஆட்கள் இல்லை. இவரை திடுக்கிடும் அளவுக்கு திட்டித் தீர்க்காத ஆளுமில்லை. 

இரண்டு பக்கமும் கிராமத்து மஞ்சுவிரட்டு நடக்கும். சில சமயம் வார்த்தைகளின் எல்லைகள் மீறப்படும். வெற்றி கொண்டான் தனது பாணியை மாற்றிக் கொள்வதில்லை. பரஸ்பரம் வறுகடலை போல பொரியல், அவியல், துவையல் என்று கூகுள் ப்ளஸ் ல் களைகட்டும்.  

இரவு நேரம் என்றதும் இவருடைய மூளையில் உள்ள ந்யூரான்களுக்கு சிறப்பான தகுதி வந்து விடும் போல.  விசைப்பலகையில் அவர் அடிக்கும் வார்த்தைகளில் கவுச்சி வாடை எட்டிப்பார்க்கும். நீ ரத்தத்தை பரிசாக தந்தால் நான் என்ன தக்காளி சட்னியா தர முடியும் என்று பரஸ்பரம் வெட்டு குத்து என்று நடப்பதை படிப்பவர்கள் பயத்தோடு பார்க்க வேண்டும். 

என்னை விருமாண்டி கமல் என்று நினைத்துக் கொள்ளாதீர் என்று அவரே எனக்கு சொல்லியுள்ளார். .  

என்னுடைய டாலர் நகரம் புத்தகத்திற்கு இவர் தனது கூகுள் ப்ளஸ் எப்போதும் போல கலாய்த்து, கவனித்து, அக்கறையோடு தனது பாணியில் விமர்சனம் எழுதியுள்ளார். அடிப்படையில் நல்ல ஆத்மா. 

ஆனால் இவரை கோபப்படுத்த வேண்டுமென்றால் கலைஞர் குறித்து உங்கள் மனதில் தோன்றியதை எழுதி இவர் பெயருக்கு டேக் செய்து விட்டு  சற்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பாருங்கள். ருத்ரதாண்டவம் என்பதை படங்களில் பார்த்து இருப்பீர்கள். வார்த்தைகளில் பார்க்க வேண்டுமென்றால் அபி அப்பா கூகுள் ப்ளஸ்க்கு வாங்க. 

இவர் விமர்சனத்தின் மூலம் பாய்ந்து பிராண்டும் நண்பர்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களே. இவரும் நல்லநண்பரே.  ஆனாலும் என்னையும் பல தடவை குத்திக்காட்டியிருக்கின்றார், ஆனாலும் நம் மீசையில் மண் ஒட்டாத மாதிரி மல்லுக்கட்டி போராடி பார்த்து ஒதுங்கி விடுவேன். ஒரு கட்சியின் உண்மையான தொண்டன் என்றால் எனக்குத் தெரிந்து இவர் தான். கலைஞரின் குடும்ப வாரிசுகள் கூட கலைஞர் மேல் இந்த அளவுக்கு பற்று வைத்திருப்பாரா என்று சந்தேகமே.

நல்ல எழுத்தாற்றல், கவனிப்பு மிக்க இவர் திறமை இவர் மண்டை முழுக்க நிறைந்திருக்கும் திமுக என்ற எழுத்திற்காகவே காணாமல்  போய் விடுகின்றது.  மற்றொரு உடன்பிறப்பிடம் இவரைப் பற்றி சொன்ன போது இவர் உங்கள் புத்தகத்திறகு விமர்சனம் கொடுத்தால் அது நேர்மையாக இருக்கும் என்றார். திமுக தொண்டராக இவர் கலைஞரைப் பற்றி சிலாகித்து எழுதுவதைப் படிக்கும் போது நான் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவதுண்டு. இந்த வார்த்தைகளை படிக்கும்போது கூட அவர் விரல்கள் விசைப்பலகையில் ருத்ரதாண்டவம் ஆடப்போகின்றது

ஒவ்வொருவரின் விமர்சனத்தை மட்டுமே இங்கே வெளியிட்டுக் கொண்டு வரும் எனக்கு இவரை கலாய்க்க வேறு இடம் கிடைக்கவில்லை. 

ஏறக்குறைய இருவருக்கும் சமவயது என்பதால் நன்றி தொல்ஸ்.  


அபி அப்பா டாலர் நகரம் புத்தகத்தின் விமர்சனப் பார்வை

ஜோதிஜி! முழுவதும் படித்து முடித்து விட்டேன். நல்லா இருக்கு புத்தகம். திருப்பூர் பத்தி முழுமையாக புரிஞ்சுக்க உதவும் புத்தகம் என்பதோடு, அங்கே அந்த தொழிலின் வளர்ச்சி, வீழ்ச்சி என இருபக்கமும் புரிந்தது. . 

மேலும் மஞ்சள் பையுடன் ஒருவர் தன் சொந்த ஊரில் இருந்து போனா கூட மூளை இருந்தா, நல்ல குணாதிசயங்கள் இருந்தா பிழைச்சுக்க இயலும் என்றும் அதற்கு சரியான உதாரணம் நீங்கன்னு தெரிஞ்சுது. 

எழுத்துப்பிழைகள், கோர்வையாக இல்லாமை, சில மிகச்சில  பிழைகள் ... 

உதாரணமாக செயற்கை உரங்கள் என உங்க வயலில் எப்போதும் இருக்கும் யூரியா, பாலிடால், பாக்டம்பாஸ்ன்னு சொல்லியிருக்கீங்களே, அதிலே பாலிடால் உரம் அல்ல பூச்சிக்கொல்லி மருந்து.... இது போன்ற சின்ன சின்ன தவறுகள்.... இதை தவிர்த்து ரொம்ப நல்லா இருக்கு புத்தகம். 

எழுத்துப்பிழை என்பது உங்கள் குத்தம் இல்லை. மீதியெல்லாம் அடுத்தடுத்த புத்தகம் போடும் போது சரியாகிடும்

அது போல புத்தகம் படித்து முடிக்கும் போது "அந்த"தனலெஷ்மி" தியேட்டர் கிட்டே முதன் முதலில் நீங்க குடிவந்த போது புத்தகமும் கையுமா குடோன்ல இருக்கும் போது ஒரு பொண்ணு வந்து பேச்சு கொடுத்ததே... அது தான் நீங்க லவ் பண்ண போகும் பெண் என்று கதை படிக்கும் எல்லாரும் நினைப்பாங்க. சுஜாதா ஒரு முறை சொன்னார். 

கதையில் அல்லது அதை விஷூவலா சொல்லும் போதோ சுவற்றில் இரு கடிகாரத்தை சூம் பண்ணினா அது சம்மந்தமா கதையிலே வரனும். கண்டிப்பா வரனும். சும்மால்லாம் காமிக்க கூடாது. காமிச்சு வாசகனை அது பத்தியே குழம்ப வச்சா கதைல நீங்க சொல்லும் மத்த பாயிண்ட் முக்கியமான இடத்திலே வாசகன் அந்த கடிகாரத்தை பத்தி தான் நினைச்சுகிட்டு இதை கோட்டை விட்டுடுவான், என்றார். 

அது போல அந்த பெண் பாத்திரம் தேவையில்லை என்பது என் கருத்து

அடுத்து ஒரு முக்கால்வாசிக்கு பின்னே நீங்க மிளகாய் மூட்டை மேல் உடகாந்து எழுதினது போல ஒரு காரம். 

காங்கிரசை உங்களுக்கு பிடிக்கலை. அது போல கருணாநிதியை பிடிக்கலை.... ஜெயாவை பிடிக்குது... ஓக்கே... 

அதை நீங்க எழுதும் ஒரு ஆவண பதிப்பில் திணிச்ச மாதிரி இருக்கு. 

ஏன்னா 2 மணி நேர மின்வெட்டால் சாயத்தொழில் எல்லாம் சாகடிக்கப்பட்டது போன ஆட்சியில்ன்னு சொன்ன நீங்க... அடுத்து "ஆட்சி மாற்றம் பின்னரும் அது தொடருது"னு பாலீஷ் போட்டீங்க பாருங்க... அங்க தான் நிக்குறீங்க. 

2 மணி நேர மின்வெட்டு 3 மணி நேரமா ஆகியிருந்துச்சு அல்லது 4 மணி நேரமா ஆச்சுதுன்னா நீங்க இபப்டி பாலீஷ் போட்டது ஓக்கே. ஆனா 18 மணி நேர மின்வெட்டு எப்படில்லா அந்த தொழிலை பாதிச்சுதுன்னு விலாவாரியா ஒரு 4 பக்கம் சொல்லியிருக்க வேண்டாமா? 

ஏன் சொல்லலை? பாசம்.... 

அது போல சிதம்பரம், மன்மோகன்னு பெயரை குறிப்பிட்டு விளாசி தள்ளிய நீங்க ஜெயா அம்மையாரை பத்தி மட்டும் மயிலிறகால் வருடி விட்டுட்டீங்க:-))

அது போல "all under one roof" பாலிசி சரியா தப்பான்னு சரியா நெத்தியடியா சொல்லியிருக்கனும். 

சாலமன் பாப்பையா மாதிரி இவுக இப்படி பாதிக்கப்பட்டாக, அவுக அப்படி பாதிக்கப்பட்டாகன்னு ரெண்டு பக்கமும் பேசிட்டு இருந்தீங்க. காரணம் நீங்க முதலாளியா அல்லது தொழிலாளியா அல்லது இருவருக்குமான பாலமா என உங்களால் உங்களை கணிக்க முடியலை. 

இதான் நீங்க மழுப்பினதுக்கு காரணம்ன்னு  நினைக்கிறேன்

ஒரு ஒரு தோல்விக்கும் அடுத்து உங்களை காப்பது உங்க கண்ணியமான குணாதிசயம் என்பது கண்கூடா தெரியுது. அதை எப்போதும் கைவிட வேண்டாம். நல்லதே நடக்கும். 

முதல் இன்னிங்ஸ் திருப்பூர்ல முடிஞ்சு ஊருக்கு போய் பாட்டி வீடு வித்த காசிலே வெளிநாடு ஓடிப்போய் மீண்டும் அதே மஞ்சள் பையும் கட்டிய வேட்டியுமாய் ஊருக்கு திரும்ப வந்து மீண்டும் திருப்பூர்... 

ஊஃப்ப்ப்... வெல்டன் ஜோதிஜி... 

என் வாழ்க்கைக்கதை படிச்ச மாதிரி ஒரு உணர்வு.

புத்தக விமர்சனங்கள்


Sunday, February 24, 2013

பணம் துரத்திப் பறவைகள் - என் தூக்கத்தை தொலைத்தது



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் வெட்டிக்காடு ரவி ஆற்றிய உரையின் காணொளி தொகுப்பு (27.01.2013)

டாலர் நகரம் புத்தக விமர்சனம் - வெட்டிக்காடு ரவி

நண்பர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தகத்தை 27-1-2013 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கிடைக்கப் பெற்றாலும் தொடர்ந்து வார இறுதி பயணங்கள் மற்றும் வேலை காரணமாக புத்தகத்தை உடனே படிக்க இயலவில்லை. இந்த வாரத்தில்தான் படித்து முடித்தேன். 

இந்த புத்தகத்திலுள்ள ஒரு சில பகுதிகளை ஜோதிஜியின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். புத்தகமாக கையில் வைத்துக்கொண்டு படித்தபோது ஒரு நாவலைப் படிக்கும் ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படித்து விட்டேன். 

காரணம்... அவ்வளவு அனுபவங்கள், தகவல்கள் அடங்கிய புத்தகம்.

உலகம் தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞனாக ஒரு மஞ்சள் பையுடன் 1992 ஆம் ஆண்டில் திருப்பூருக்கு வரும் ஜோதிஜியின் ஆரம்ப கால அனுபவங்களுடன் நம்மை திருப்பூர் நகரத்தின் பின்னலாடை நிறுவனங்களின் உள்ளே அழைத்து செல்கிறார். ஒரு சாதரன தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, சூபர்வைசர், மேலாளர், சொந்த தொழில், தற்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பொது மேலாளர் (General Manager) என்று உயர்ந்திருக்கும் ஜோதிஜி தனது கடந்த இருபது ஆண்டு கால வாழ்க்கை பயணத்தில் திருப்பூரின் வளர்ச்சி,வீக்கம், பிரச்சனைகள், பின்னடைவு ஆகியவற்றை பற்றி ஆழமாக, துல்லியமான தகவல்கள், புகைப்டங்கள் வாயிலாக தெரிவிக்கிறார்.
திருப்பூர் நகரத்தின் பல முகங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விளங்குகிறது டாலர் நகரம்.  

அப்பாவி இளைஞனாக இருந்ததால் ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் திருப்பூரை நோக்கி படையெடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தன் அனுபங்கள மட்டும் அல்லாமல் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். 

குறிப்பாக கருணாகரன் என்ற கிராமத்து சிறுவன் காஜாபட்டன் அடிக்கும் குழந்தை தொழிலாளியாக திருப்பூருக்கு வந்து இன்று பல கோடி நிறுவனத்தின் அதிபராக வளர்ந்திருப்பது. கிராமத்திலிருந்து திருப்பூருக்கு தொழிலாளியாக வந்து 100 கோடி நிறுவனத்திற்கு முதலாளியாக உயர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களால் இன்று தெருவில் நிற்கும் வாழ்ந்து கெட்ட ஆறுமுகம் ஆகிய இருவர்களைப் பற்றிய பதிவுகள் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள்.

திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் என்பது பெரும்பாலும் முதலாளிகளின் மேற்பார்வையில் தொழிலாளார்களை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 14 மணி நேரம் கசக்கி பிழிந்து வரைமுறை இல்லா வேலை வாங்குதல் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. 

மனித வளத்துறை (Human Resources) என்பது பெரும்பாலன நிறுவனங்களில் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன, 

சூபர்வைசர்கள், மேலாளர்கள் தொழிலாளர்களை நடத்தும் முறைகள், பெண்களுக்கு கொடுக்கும் பாலியியல் தொந்தரவுகள், அதை குடுபத்திற்காக ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்ட பெண்கள், “பணம் துரத்திப் பறவைகள்” என்ற அத்தியாத்தில் கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை படித்த போது மனம் மிகவும் கனத்து விட்டது.

நாம் தினசரி செய்திகளில் பார்த்து, படித்து கடந்து செல்லும் திருப்பூர் சாயப் பட்டறைகள் பற்றிய பிரச்சினைகள், அரசாங்க பஞ்சு வணிக ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மாற்றங்கள், அன்னிய செலவாணி ஏற்ற இறக்கங்கள், அன்னிய முதலீடு ஆகியவகளைப் பற்றி மிக தெளிவாக பல பாகங்களில் விளக்கி சொல்லியிருப்பது மிகவும் பாரட்டக் தக்கது.

 ”டாலர் நகரம்” புத்தகத்தை படித்த பிறகு  திருப்பூர் பின்னலாடை தொழில் இயங்கும் முறை பற்றி முழுமையாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஜோதிஜி தன் சுயசரிதை கலந்த திருப்பூரின் ஆவணமாக இந்த புத்தகத்தை ஒரு கலவையாக எழுதிருக்கிறார். 

இதனால் படிக்கும்போது சில இடங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கின்றது. 

இந்த சிறு குறையைத் தவிர்த்து பார்த்தால் “டாலர் நகரம்” திருப்பூர் மற்றும் பின்னலாடை தொழில் பற்றிய மிகச் சிறந்த ஆவண புத்தகம் !!!

விமர்சனப் பார்வைகள்.


Saturday, February 23, 2013

கொக்கரக்கோ..!!! - சௌம்யன் விமர்சனம் (DOLLAR NAGARAM)


இதுவரை  சினிமா விமர்சனம் கூட ஒன்றிரண்டு எழுதியிருக்கின்றேன் ஆனால புத்தக விமர்சனம் என்று எதையும் தனி பதிவாக நான் எழுதியதில்லை. 

காரணம் ஒரு புத்தகம் என்பதே, ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றிய விமர்சனம் அல்லது கருத்து அல்லது பதிவு அல்லது .....  என்கிற போது, அந்த நூல் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட விடயம் பற்றிய தனிப்பட்ட கருத்தை விமர்சனம் செய்வது என்ன நியாயம் என்பது என் நிலைப்பாடு!

அதேப் போன்று தான் இந்த “டாலர் நகரம்” புத்தகம் பற்றியும் எனது நிலைப்பாடு என்றாலும், என்னுடைய சக இணைய பதிவர், ஒரு நூலாசிரியராக புது பரிமாணம் எடுத்திருக்கும் இந்த நூல் பற்றி எழுதுவது  என் கடமையாகும். 

அதாவது அது பற்றிய எனது கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வது என்பது, தமிழ் எழுத்துலகுக்கு இணைய உலகம் புடம் போட்டு தந்து கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களைப் பற்றிய கருத்துக்களை அல்லது விமர்சனங்களை பகிர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தான் இந்த நூல் விமர்சனத்தை எழுத முன் வந்திருக்கின்றேன்.

நடப்பு கால மாணவ சமுதாயத்திற்கு வாசிப்பு அனுபவம் என்பது மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட இல்லை என்கிற அளவிற்கே இருக்கிறது என்பதாக சமீபத்தில் எல்லோராலும் பரவலாக கவலைக்குறிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இன்றைய தேதியில் 35 வயதினைத் தாண்டியவர்களில் பெரும்பாலானோருக்கு சம காலத்திய இளைஞர்களோடு ஒப்பிடும் போது இந்த வாசிப்பு அனுபவம் இன்றைக்கும் சற்று அதிகமாகவே இருப்பது கண் கூடு.

இதற்கு காரணம், அப்பொழுது வாஸந்திகளும், சிவசங்கரிகளும், சுஜாதாக்களும், பால குமாரன்களும்....., பேரிலக்கியம், புண்ணாக்கு என்றெல்லாம் பீற்றிக் கொண்டிருக்காமல், வாசிப்பவர்களுக்கு அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய நடையில் எழுதியது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

சமீப காலமாக தோன்றியிருக்கும் இலக்கியவாதிகள், பேரிலக்கியவாதிகள், முன்நவீனத்துவவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்ற எழுத்தாளர்கள், சாமான்ய வாசிப்பாளர்களை அல்லது மாணவப் பருவத்திலிருக்கும் இளைய சமுதாயத்தினரை போட்டு படுத்தி எடுத்து, புத்தகங்களைக் கண்டாலே அவர்களைக் காத தூரத்திற்கு ஓட  வைத்தது தான் நடப்பு கால இளைஞர்களின் வாசிப்பு அனுபவத்தை செயலிழக்கச் செய்திருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

இந்த மாய பிம்பங்களை உடைத்தெறிந்து சாமான்யர்களும் படித்துப் பயன்பெறும் அளவிலான் எழுத்து நடையோடு அவ்வப்பொழுது சில படைப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

அந்த வரிசையில் நண்பர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்த டாலர் நகரம்  புத்தகமும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது என்பதை இங்கு பதிவு செய்து விடுகின்றேன்.  

தன் சுய சரிதம் போல எழுத முற்பட்டு, திருப்பூரின் கடந்த 20 வருட செயல்பாடுகளை, வளர்ச்சி - வீழ்ச்சிகளை தன் பார்வையின் ஊடாக பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர் ஜோதிஜி!

திருப்பூர்வாசிகளுக்கும், திருப்பூரோடு தொழில்முறை உறவு வைத்திருக்கும் வெளியூர் வாசிகளுக்கும், உள்ளூரில் வேலை கிடைக்காமல் திருப்பூர் சென்று வேலையிலமர்ந்து புது வாழ்வைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அந் நகரைப் பற்றிய நல்லதொரு புரிதலை தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.

இதெல்லாம் இந்நூலைப் பற்றிய பொதுவான பார்வைகள் என்றாலும், புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கைப்பிடித்து திருப்பூர் தெருக்களின் ஊடாகவும், அங்குள்ள பல்வேறு வகை தொழில் கூடங்களின் உள்ளேயும் அழைத்துச் செல்வதை காணொளியின் ஊடாக காண்பது போன்ற பிரேமையை உண்டு பண்ணுவதை மறுப்பதற்கில்லை.

இங்கு தான் ஜோதிஜியின், ”சிறந்த எழுத்தாளர்” என்ற அந்த பிம்பம் அறங்கேற்றப் படுகிறது. 

உள்ளே சென்று இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக ஆராயும் பொழுது, சில இடங்களில் சில விஷயங்கள் ஆங்காங்கே தொங்கலாக நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. 

உதாரணத்திற்கு தயாநிதி மாறன் செய்த எந்த மாதிரியான தவறு இந்த துறையை முடக்கிப் போடுகிறது என்பதற்கான விளக்கம் சுத்தமாக இல்லை.  அதேப் போன்று பொருளாதார உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் கையெழுத்திட்டது எந்த விதத்தில் இந்தத் துறையை பாதித்தது என்பது பற்றியும் தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது.

ஒரு கட்டத்தில் அதே பொருளாதார உலகமயமாதல் நல்ல பலன்களை தந்து கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ராக்கெட் வேகத்தில் ஏற்றுமதி அளவு வளர்ந்திருப்பதையும் இந்தப் புத்தகத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது.

ஜோதிஜி ஏதாவது ஒரு தளத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தன் பார்வையை படர விட்டு எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது வெவ்வேறு தளங்களின் நல்லது கெட்டதுகளையும் தெளிவாக பட்டியலிட்டு, அதன் மூலம் களையப்பட வேண்டிய குறைகளை அது எவ்வாறு களையப்பட வேண்டும் என்ற தீர்வோடு சொல்லியிருந்தால், இது ஒரு ஆகச் சிறந்த படைப்பாக, திருப்பூர் தொழில் துறையினருக்கான பொக்கிஷமாக அமைந்திருந்திருக்கும்!

ஆனால் ஜோதிஜியிடம் இது பற்றிப் பேசிய பொழுது, 600 பக்கத்திற்கு எழுதப்பட்ட புத்தகம், சில பல காரணங்களால் இருநூற்று சொச்சமாக குறைந்து விட்டது அதனால் ஏற்பட்ட விளைவுகள் தான் இதெல்லாம் என்று கூறியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

எந்தவொரு படைப்பாளிக்குமே தான் பிரபல்யம் ஆவதற்கு முன் வரும் ஆரம்பகால படைப்புகளில் இது போன்ற சங்கடங்கள் வருவது இயல்பு தான். தன்னுடைய அடுத்தடுத்த நூல்களில் ஜோதிஜி இவற்றையெல்லாம் இலகுவாக கடந்துவிடுவார் என்று நம்பலாம்.

அடுத்ததாக இன்னும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுதுகிறது. 

பொதுவாக ஒரு தேர்ந்த நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் உணரப்படுகின்ற ஒரு இழையில் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இயலதபட்சத்தில், வேறு ஒரு அத்தியாயத்துடன் அது கண்டிப்பாக இணைக்கப்பட்டுவிட வேண்டும். மொத்தத்தில் அனைத்து பகுதிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு காரணத்துடன் இணைப்பில் வந்து விட வேண்டும்.  அப்படியிருந்தால் தான் படிப்பவர்களுக்கு தொண்டை நனைய நீர் குடித்த திருப்தி கிடைக்கும்.

இந்த நூலில் பல சம்பவங்கள் அப்படி தொடர்பில்லாமல் அறுந்து போகும் நிலையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாக சொந்த ஊர் விவசாய சம்பவங்கள், பள்ளிச் சம்பவங்கள் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். திருப்பூரைத் தவிர்த்து நம்மை வெளியில் கொண்டு செல்லும் போது கொஞ்சம் அசூயை வருகிறது.

மேலும் எழுத்துப் பிழைகள் ஒரு எல்லையைக் கடந்து நம் கண்களை உறுத்துகின்றன. அது பதிப்பகத்தார் சரி செய்ய வேண்டிய விஷயம். அடுத்தடுத்த பதிப்புகளில் அது சரி செய்யப்பட்டுவிடலாம்.

இதெல்லாமே நூலின் ஆசிரியர் நமது நண்பர் என்ற வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய, பொதுவாக சாதாரணமாக வாசிப்பவர்களுக்கு எளிதில் புடிபடாத குறைகள் மட்டுமே!

பொதுவாக இந்த புத்தகத்தைப் பற்றிய பார்வையாக நாம் வைக்க வேண்டுமானால், ஒரு அசாத்திய உழைப்பாளியின்  அனுபவங்களை படித்து முடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு நம்மை ஒரு வித பிரம்மிப்பிலேயே ஆழ்த்திவிடுகிறது, என்பதைத் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

எழுத்து நடையும், அவலங்களைக் கண்டு கொதிக்கும் அவரது கோபமும், படிக்கின்ற நம்மையும் அப்படியே தொற்றிக் கொண்டு விடுகிறது. கொஞ்சம் ஒதுக்கக்கூடிய நேரம் அமையப்பெற்றவர்கள், ஒரே மூச்சில் படித்து முடித்து விடக் கூடிய அளவிற்கு விறுவிறுப்பாக புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும், அதைப் பகிர்ந்திருக்கும் முறையும் அருமை. 

புத்தகத்தின் விலைக்கு அதிகமாக தரத்தை தந்திருக்கின்றார்கள். 

நல்ல காகிதம், பெரிய எழுத்துக்கள், வண்ண புகைப்படங்கள்....  இதெல்லாம் சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களில் இத்தனை பக்கங்களில் இந்த விலையில் நிச்சயம் வெளி வந்திருக்கவில்லை. அதனால் கொடுத்த காசுக்கு பைசா வசூல்...

தன்னுடைய  முதல் இன்னிங்ஸிலேயே வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார், தோழர் ஜோதிஜி......  வாழ்த்துக்கள்!!

விமர்சனப் பார்வைகள்.

Friday, February 22, 2013

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் 2



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா ஆய்வு நூலகம் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரையின் இரண்டாவது பகுதி.

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் முதல் பகுதி.


திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்றால் திருக்கோர்ணம் பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள அந்த 200 வருடத்திற்கும் மேம்பட்ட பழமையான கோவிலை பார்த்தபடியே தான் பேரூந்தில் செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இதன் வழியே எத்தனையோ முறைகள் ஊருக்கு இதன் வழியேத்தான் சென்று இருப்பேன். ஆனால் இந்த பழமையான ஆலயத்திற்குப் பின்னால் தான் ஞானாலயா என்றொரு மற்றொரு ஆலயம் இருக்கின்றது என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

ஊரிலிருந்து புதுக்கோட்டை என்பது 60 கிலோ மீட்டர் பயணத்தில் உள்ள நகரம்.  உறவினர்கள், சகோதரி வாழும் ஊர் என்று பல வகைகளில் என் வாழ்க்கையோடு ஒன்றினைந்த நகரம். ஆனாலும் நமக்குத் தேவையான விசயங்கள் மட்டுமே அந்தந்த சமயங்களில் அறிமுகமாகின்றது.

நம்மிடம் தேடல் இருந்தால் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றாக அறிமுகம் ஆகியே தீரும் என்பது உண்மை என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? 

இப்படித்தான் என் வாழ்வில் இன்று வரையிலும் ஒவ்வொன்றாக அறிமுகம் ஆகிக் கொண்டேயிருக்கின்றது.

அருகில் உள்ள கேரளாவை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் நூலகத்திற்கும், புத்தகங்களுக்கும் நம் தமிழர்களிடம் எப்போதுமே ஆதரவு குறைவு தான்.. காரணம் ஒரு புத்தகத்தை படிக்கும் போது படிப்பவர்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும். குறைந்த பட்சம் தான் வாழும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வைக்கும். ஆனால் நம்மவர்கள் எப்போதும் ஒருவிதமான போதையைத்தான் விரும்புகின்றார்கள். 

அவரவர் சொந்த வாழ்க்கையில் எட்ட முடியாத உயரங்களை தங்கள் கனவின் வழியே, கனவுகளை தந்துகொண்டிருக்கும் ஊடகங்கள் வழியே தான் அதை அடைய விரும்புகின்றார்கள். தானும் அடையாமல், தான் சார்ந்த தலைமுறைகளுக்கும் அடையும் வழிகளை கற்றுத் தராமல் போயும் சேர்ந்து விடுகின்றார்கள். அதிகபட்சம் பொறாமையை மனம் முழுக்க வளர்த்து அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் கழிவிரக்கமாக மாற்றி தன்னைச் சுற்றிலும் பரவ விடுகின்றானர். 

உழைக்காமல் எல்லாவற்றையும் பெறுவது எப்படி? என்பதில் கவனமாக இருந்து அதன் வழியே தான் ஒவ்வொருவரும் பயணிக்க விரும்புகின்றார்கள். திரைப்படங்கள் வழியே தங்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும் நமது சமூக மக்களின் அறிவை எண்ணி வியப்பீர்களா? நொந்து கொள்வீர்களா?.

மனம் தன் வயம் இழந்து விட்டால் மனித ரூபத்தில் மிருகமாகத்தான் வாழ முடியும். அது தான் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றது. தாங்கள் பார்க்கும் அத்தனை பேர்களும் பொறாமைப்படக்கூடியவர்களாக இருப்பதால் கெடுப்பது எப்படி? என்பதில் தான் கவனம் செல்கின்றது. அது குறித்தே யோசிக்க வைக்கின்றது. 

மொத்தத்தில சமூகம் முழுக்க குறைகள் நிறைந்த மனிதர்களாக மாறி விடுகின்றார்கள். மற்றும் குற்றம் என்பது தெரிந்தும் அதையே தான் விரும்புகின்றார்கள்.  குற்றத்தின் வழியே செல்லும் நபர்களையும் ஆதரிக்கவும் செய்கின்றார்கள். தங்களது தலைமுறைக்கும் அதுவே சரியென்று பாடம் நடத்துகின்றார்கள். 

தற்போது தொலைக்காட்சி மக்களை முழுங்கிய நிலையில் இது போன்ற நூலகங்களை எவருக்குத் தெரிந்துருக்கக்கூடும் என்பதை கணக்கில் கொண்டே திருக்கோர்ணம் பகுதியில் முதன் முதலாக நான் பார்த்த பெட்டிக்கடைக்காரரிடம் சந்தேகத்தோடு ஞானாலயா நூலகம் எங்கே இருக்கின்றது? என்று கேட்டேன்.

அவர் வியாபாரத்தின் இடையே தெளிவாக வழிகாட்டினார். மனதிற்குள் ஆச்சரியம் சிறகடித்தது.

அந்த குடியிருப்பு பகுதிகள் அழகான வரிசையான சந்துக்களின் மூலம் கட்டமைப்பு போல உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு பகுதியில் இந்த ஞானாலயா நூலகம் இருந்தது. அந்த பகுதியே அமைதியான இடமாக தெரிந்தது. ஞானாலயா இருந்த கட்டிடத்திற்கு வெளியே தெரிந்த மரங்களுக்கு இடையே கட்டிடத்தின் மேலே பொறிக்கப்பட்டு இருந்த ஞானாலயா என்ற பெயரும் என் பார்வையில் பட்டது. 

அந்த கட்டிடத்தில் இரண்டு நுழைவு வாயில் இருந்தது. முதல் நுழைவு வாயிலின் வழியே நான் நுழைந்த போது திரு. கிருஷ்ணமூரத்தி அவர்கள் என்னை வரவேற்றார்.

இவர் யார்? பின்புலம் என்ன? என்று தெரியாமல் ஆர்வக்கோளாறு காரணமாக பலவிதமான கேள்விகளை மனதில் சுமந்து கொண்டே உள்ளே நுழைந்தேன். 

திருப்பூர் என்ற தொழில் நகரம் எனக்கு கற்றுத் தந்த முதன்மையான பழக்கம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள். ஒவ்வொன்று குறித்து அச்சம் கலந்த வாழ்க்கையைத்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளது. அத்தனைக்கும் பின்னாலும் சுயநலமும் பணமும் கலந்து இருக்கின்றது.

ஞானாலயா நூலகம் என்ற வார்த்தையை முதன் முதலாக பல இணைய தளங்கள் அறிமுகப்படுத்தியிருந்த போதிலும், இணைய தளங்கள் வழியே உணர்ந்த மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டுணர்ந்து திருப்பூரில் சிவாவுக்கு இது குறித்த அறிமுகத்தை தொடங்கி வைத்தார். சிவா ஒரு வலைதளத்தை உருவாக்கி நண்பர்கள் பலருக்கும் அறிமுகம் செய்யும் நோக்கில் மின் அஞ்சல் வாயிலாக எனக்கும் அனுப்பி வைத்தார்.  அப்போது தான் இந்த ஞானாலயா நூலகம் குறித்த அறிமுகம் எனக்கு கிடைத்தது.

நூலகம் என்றொரு வார்த்தைக்காகவே அது குறித்து அப்போது 4 தமிழ்மீடியா தளத்தில் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்ப திரு. மலைநாடன் அவர்களும் வெளியிட்டு வைத்தார்.  நானும் என் தளத்தில் அந்த கட்டுரையை மறுபதிப்பாக வெளியிட இப்படித்தான் ஞானாலயா நூலகத்தின் தொடக்கப்புள்ளி என்னுள் தொடங்கியது.    

முதன் முதலாக செப்டம்பர் 26 (2012) ஞானாலயா நூலகத்திற்கு சென்றேன். தொழிலுக்கு குடும்பத்திற்கு அப்பாற்பட்டு. முதன் முதலாக ஒரு தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒரு பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை. எந்த எதிர்பார்ப்புமின்றி ஒரு ஆர்வத்தின் தூண்டுகோல் காரணமாக ஞானாலயா நூலகத்திற்கு சென்றேன். 

திருப்பூருக்குள் நுழைந்த போது முதல் வருடம் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் அதற்குப் பிறகு ஏறக்குறைய 15 வருடங்கள் எந்த புத்தகங்களையும் படிக்க வாய்ப்பும் அமையவில்லை. நானும் தேடிச் சென்றதும் இல்லை.

காரணம் மனம் முழுக்க பணம் சார்ந்த எண்ணங்கள் மட்டுமே இருந்தது. மற்றவை எல்லாம் தேவையில்லாததாக எனக்குத் தெரிந்தது. ஆனாலும் நம்மிடம் உள்ள தனிப்பட்ட விருப்பங்களை நாம் அடைககாத்து உள்ளே வைத்திருக்கும்பட்சத்தில் ஏதோவொரு சமயத்தில் அது வெளிப்பட்டே ஆகும். திடீரென்று ஒரு நாள் திருப்பூரில் உள்ள பூங்கா சாலையில் உள்ள நூலகத்தை கண்டேன்.

ஒரு அவசர வேலைக்காக அந்த சாலையின் வழியே  சென்ற போது திருப்பூர் தலைமை நூலகத்தை கண்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பலமுறை இந்த சாலையின் வழியே நான் சென்றபோதிலும் பக்கவாட்டில் இருந்த அந்த நூலகத்தை பார்த்ததே இல்லை. காரணம் மனமும், கண்களும் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கான வழிப்பாதை மட்டுமே மனதில் இருக்கும். வேறு எதையும் யோசிக்கக்கூட மனதில் இடம் இருக்காது. திருப்பூருக்குள் இருந்த அந்த நூலகத்தை பார்த்த நாள் இன்னமும் மனதில் நிற்கின்றது.

நான் சென்ற அவசர வேலையை மறந்து விட்டு வண்டியை உள்ளே நிறுத்திவிட்டு ஆர்வத்துடன் உள்ளே சென்றேன்.  உள்ளே ஏராளமான மக்கள் கூட்டமாக இருந்தனர். பலரும் படித்துக் கொண்டு இருந்தனர். எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் திருப்பூர் பத்து வருடங்களுக்கு முன் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டமிது.  நிற்க கூட நேரமில்லாது ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டேயிருந்தனர். நானும் எவர் எவருக்கோ உழைத்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே இருந்தவர்களைப் பார்த்து எப்படி இவர்களுக்கு படிக்க நேரம் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அடுத்த ஒரு மாதத்தில் அங்கே சந்தாதாரர் ஆனேன்.  சில புத்தகங்கள் எடுத்து வந்த போதிலும் என்னால் படிக்க முடியவில்லை. காரணம் நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு திரும்பி வரும் போது தூங்கு என்று உடம்பு உத்தரவிடும் போது மனம் படிப்பதில் ஆர்வம் காட்டாது.

2007க்குப் பிறகு தான் மீண்டும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உருவானது. இதன் பிறகே மீண்டும் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருந்து எடுத்து வந்த போதிலும் அத்தனை புத்தகங்களும் தூக்கத்தைத் தான் கொண்டு வந்து சேர்த்தது. 

கட்டுரைகள் சார்ந்த எனது ஆர்வத்திற்கு எழுதியவர்கள் எவரும் வாசிக்கத் தூண்டும் நடையில் இல்லாததே முக்கிய காரணமாக இருந்தது. அப்போது தான் வெளியே புணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானது.  ஒவ்வொரு புத்தகங்களாக அறிமுகம் ஆகத் தொடங்கியது. அப்போது நான் எழுதத் தொடங்கிய காரணத்தால் வாசிக்க வேண்டிய சூழ்நிலை இயல்பாகவே அமைந்தது. வாசிக்க வாசிக்க எழுதுவதற்கு மேலும் இயல்பாக எழுத காரணமாக அமைந்தது.

2007 ல் தொடங்கிய வாசிப்பு அனுபவம் 2012 இறுதியில் இந்த ஞானாலயாவை அறிமுகம் செய்து வைத்தது.  ஏறக்குறைய சிறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து கடைசியாக கடலுக்குச் செல்லும் ஒரு நீண்ட பயணம் போலவே இந்த அனுபவம் என் மனதிற்குள் தோன்றியது.

என்னை வரவேற்ற திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்தித்து உரையாடிய போது தான் இந்த சமூகத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையை திருப்பி போட வைத்தது.  அன்றைய தினமே எனது மங்கலான் பார்வை தெளிவாக மாறத் தொடங்கியது.

அன்று முதல் இன்று வரையிலும் புத்தகங்கள் என்றால் பாடப்புத்தகம் மட்டுமே என்று சராசரி பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் இங்கே அதிகம்.  நானும் அப்படித்தான் வளர்ந்தேன். அதையும் தாண்டி லட்சத்தில் சில நூறு எண்ணிக்கை உள்ள பெற்றோர்கள் தான் மற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து ஆர்வத்தை தூண்டுகின்றார்கள்.  குறிப்பிடத்தக்க சிலர் மட்டும் இயல்பாகவே இந்த புத்தக வாசிப்பை தங்களது இயல்பான் பழக்கத்தில் ஒன்றாக உருவாக்கிக் கொள்கின்றனர்.  குடும்பத்தினர் தூண்டுகோல் இல்லாதபோதிலும் நானும் என் சகோதரிகளும் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அத்தனை புத்தகங்களையும் வாசிக்க எங்கள் ஊர் நூலகம் உதவியது.

நூலகம் என்பதற்கு அவரவர் மனதில் ஒருவிதமான உருவகம் இருக்கும். அதைப் போலவே நினைத்துக் கொண்டு இயல்பான பார்வையில் தான் ஞானாலயா நூலகத்திற்குச் சென்றேன். புதுக்கோட்டையின் முனையில் நம்பிக்கை முனை போல திருக்கோர்ணம் பகுதியில் அமைதியான குடியிருப்புகள் மத்தியில் பெரிய இரண்டு வீடுகள் அடங்கியதாக உள்ள இடத்தில் இந்த ஞானாலயா நூலகம் உள்ளது.

கிராமத்து மனிதரின் தேகமும்அணிந்திருந்த கண்ணாடி வழியே ஊடுருவிப்பார்க்கும் அந்த கண்களைப் பார்த்த போது எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இவர் படித்துருப்பாரோ என்று எண்ணிக் கொண்டு வீட்டின் விஸ்தாரத்தை மனதிற்குள் கணக்கெடுத்துக் கொண்டு முகப்பு பகுதியில் அமர்ந்தேன். காற்றோட்டமான அமைதியான சூழ்நிலை அங்கே நிலவியது.
.
திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் துணைவியாருடன் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அவர் மகளும் வெளியே வந்து என்னை வரவேற்றார்.

மனதிற்குள் குழப்பமாகவே இருந்தது.  

இயல்புக்கு மாறிய நிலையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டிய தொழிலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அங்கே சுத்தமான காற்றை  சுவாசிப்பது போலவே இருந்தது. 

திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.  ஆர்வக் கோளாறு காரணமாகவே போய் இறங்கினேன் என்பது தான் உண்மை.  அந்த நூலகம் அமைந்திருந்த இடம்அங்கு நிலவிய சூழ்நிலைகுடும்பத்தினர் உரையாடிய உரையாடல் என்று என்னை மெதுமெதுவாக மாற்றியது.

பல வருடங்களுக்குப் பிறகு எனது சொந்த ஊரில் ஏதோவொரு விசேடத்திற்கு போனது போலவே இருந்தது. அரைமணி நேரத்திற்குள் திருமதி டோரா கிருஷ்ணமூரத்தி அவர்களுடன் அரட்டை அடிக்கும் அளவிற்கு மாறியது. வீட்டின் அருகே மற்றொரு கட்டிடம் இருக்க அது தான் நூலகம் என்பதை அறியாமல் மனதிற்குள் வீட்டுக்குள்ளே நூலகம் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு திரு. கிருஷ்ணமூர்த்தி வாயிலிருந்து மடை திறந்த வெள்ளம் போல வந்து விழுந்து கொண்டிருந்த வார்த்தைகள் மௌனமாக உள் வாங்கிக் கொண்டே அந்த பிரம்பு நாற்காலியில் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவன் போலவே கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தான் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள் என்பது புரிந்தது.

நான் அமர்ந்திருந்த வீட்டின் முகப்பு வாயில் பகுதியில்அங்கிருந்த திண்ணையில் பலவிதமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.  வார இதழ்கள்குறிப்பாக தனி இதழ்கள் என்று எனக்குப் பிடித்த பல விதமான பத்திரிக்கைகளை பார்த்துக் கொண்டேபுரட்டிக் கொண்டே திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையாடலை குறுக்கே எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

பொதுவாக தொழில் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பேசுவது பிடிக்காது. பேசினால் அது பணம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இது எல்லா நிலையிலும் இருக்கும் இன்றைய இயல்பான நடைமுறை. இது நானும் விதிவிலக்கல்ல. மேலும் தேவையற்ற பேச்சு என்பது எனக்கு அறவே பிடிக்காது. 

ஆனால் ஆறாம் வகுப்பு முதல் நான் படித்த புத்தகங்கள்நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த எழுத்தாளர்கள்பத்திரிக்கையாளர்கள் என்று நான் நினைத்துப் பார்த்திராத அத்தனைப் பேர்களைப் பற்றியும் அவரின் உரையாடல் வழியே கேட்டுக் கொண்டேயிருந்த போது ஏதோவொரு வேறு உலகில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது.  

வந்த வேலையை மறந்து விட்டு அவர் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்த போது தான் வாங்க நூலகத்தைப் பார்க்கலாம் என்று அடுத்த கட்டிடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.  அப்போது தான் நூலகம் என்பது தனியாக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தான் வசிக்கும் வீட்டைப் போலவே நூலக கட்டிடத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தார்கள். நூலகத்திற்குள் உள்ளே நுழையும் போதே ஒரு விதமான நறுமணம் என் நாசியைத் தடவிச் சென்றது. மனதிற்குள் வியப்பாக இருந்தது. பத்து புத்தகங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்திருந்தால்அதுவும் வருடந்தோறும் அடைத்து வைத்திருந்தால் ஒரு விதமான வாடை வருவது இயல்பு. ஆனால் இவர்களின் நடைமுறை பாதுகாப்பு சம்மந்தப்பட்ட முதலீட்டின் காரணமாகவும்அது குறித்த விழிப்புணர்வின் காரணமாகவும் அந்த நூலக கட்டிட பகுதியில் ஒரு இடத்தில் கூட முடை நாற்றமோதூசியோ பார்க்க முடியவில்லை.

என் வாழ்நாளில் இதுவரையிலும் பெரிய பளிங்கு மாளிகைகளை பார்த்தது இல்லை. அதிகபட்சம் செட்டிநாடு பகுதியில் உள்ள விஸ்தாரமான கலை அம்சம் மிக்க செட்டி நாட்டு வீடுகளைத்தான் பார்த்து இருக்கின்றேன்.  ஆனால் தான் வசிக்கும் வீட்டைப் போல திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய ஞானாலயா ஏறக்குறைய ஒரு பளிங்கு மாளிகை போலவே இருந்தது.

ஒவ்வொரு புத்தகத்தையும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்ட முதல் நூலகம் இதுவாகத் தான் இருக்கும். 

இதை வார்த்தைகளில் படிக்க உங்களுக்கு எளிதாக இருக்கும். நூறு வருடங்களுக்கு முன் வெளிவந்த அத்தனை விதமான ஆவணங்கள் போல உள்ள தாள்கள் பைண்ட் செய்யப்பட்டு, தினந்தோறும் தூசி அடையாமல் அதற்கென்று ஆள் நியமித்து, வருகின்றவர்கள் மனம் கோணாமல் அவர்கள் கேட்பதை எடுத்துக் கொடுத்து மீண்டும் அதே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது ஆயிரம் கோடி சொத்துக்களை காக்க எப்படி ஒரு தொழில் அதிபர் தூக்கம் துறந்து தினந்தோறும் உழைத்துக் கொண்டு இருக்கின்றாரோ அந்த பணியில் தான் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் ஈடுபட்டுக் கொண்டுருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

தனிமனிதர்கள் இந்த சமூகத்தை தாண்டி எதுவும் செய்து விட முடியாது என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை அழித்து விடலாம். அதற்காக நாம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் திரு. கிருஷ்ணமூர்த்தி.

ஞானாலயா  பயணம் தொடரும்.

Thursday, February 21, 2013

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள்


எவரிடமும் வேண்டுமானாலும் பேசிப்பாருங்கள்.  

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நான்கு திசைக்குள் தான் அடங்கியிருக்கும். 

தனது வாழ்க்கை, தன் குடும்பம், தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்கள்

இந்த நான்கும் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை வாழ வைக்கின்றது. மேலும் வாழ வேண்டுமென்ற ஆசையை ஒவ்வொரு நிலையிலும் தூண்டிக் கொண்டேயிருக்கின்றது.

இதனை தாண்டி வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். அல்லது மாறுதலாக வாழ்ந்து பார்க்கலாம் என்று யோசித்தவர்களின் வாழ்க்கையும் பாதியில் அதோகதியாக மாறியிருக்கும். 

எதார்த்தம் என்பது எவரும் நினைத்துப் பார்க்க முடியாது. அது எப்போதும் போல உண்மையாகவே இருக்கும்.  நாம் தான் புரிந்து கொள்வதே இல்லை.

ஆனாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சொற்ப எண்ணிக்கை தான் இந்த சமூகம் வளர்வதற்கு காரணமாக இருந்து இருக்கின்றார்கள் என்பதையாவது ஏற்றுக் கொள்வீர்களா? நீங்களும் நானும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிக்குப் பின்னாலும் கண்களுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் தன்னலமற்ற உழைப்பு இருந்தது என்பதை உணர்வீர்களா?

அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட சமூகத் தலைவர்கள்,  ஆன்மீகத்தின் மூலம் வழிகாட்டியாக இருந்தவர்கள், தங்கள் கருத்துக்கள் மூலம் சமூகத்தை வேறொரு பாதைக்கு கொண்டு சென்றவர்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு தந்தவர்கள் என்று வாழ்ந்தவர்கள் கடைசிவரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா?

மகிழ்ச்சி என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அளவு கோல் இருக்கின்றது.  பெட்டி நிறைய பணம், மனைவி விரும்பும் அளவிற்கு நகை, குழந்தைகள் பாதுகாப்புக்கு இடங்கள், வங்கிக் கணக்கில் நிறைந்துருக்கும் பணம் என்று இந்த அளவுகோலுக்கு எல்லையே இல்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி பலரும் இந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

நாம் எத்தனை தத்துவங்கள் பேசினாலும் பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்றொதொரு வாக்கியத்திற்குள் அத்தனையும் அடிபட்டு போய்விடும். 

ஆனால் இதையும் தாண்டி சிலர் ஜெயித்து மேலேறி வந்து விடுகின்றார்கள். நம் கண்களுக்கு அவர்கள் கடைசி வரைக்கும் தென்படுவதே இல்லை. அது போன்ற நபர்கள் நம் கண்களுக்கு தெரிந்த போதிலும் நம் சூழ்நிலை அவர்களை பொருட்படுத்தாது அடுத்த நிலைக்கு கடந்து செல்ல தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

என்னுடைய வாழ்க்கையிலும் பணத்தை மட்டுமே தேடி அலைந்த காலமும் இருந்தது.  ஆனால் சூழ்நிலைகள் உருவாக்கிய சதிராட்டத்தில் சேர்த்த பணம் கை கழுவி சென்ற போது மனம் முழுக்க வெறுமையாக இருந்தது. மறுபடியும் பணத்தை துரத்தத் தொடங்கிய போது கைக்குள் வராமல் பழிப்பு காட்டி பாடங்கள் நடத்தத் தொடங்கியது. அது போன்ற காலம் நடத்திய பாடங்களில் ஒன்று தான் இந்த எனது எழுத்துப் பயணம்.

பணத்திற்கு அப்பாற்பட்ட இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் எனக்கு அறிமுகமானது. இன்று வரையிலும் எத்தனையோ விசயங்கள் நாள்தோறும் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றது. நினைத்துப் பார்க்க முடியாத மனிதர்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.  நிச்சயம் பணம் என்ற ஒரு காகிதத்தால் சாதிக்க முடியாத பல விசயங்கள் இந்த உலகில் அதிகம் உண்டு என்பதை உணர வைத்தது இந்த எழுத்துப் பயணமே.

திருப்தி என்ற வார்த்தைக்கு மட்டும் முடிவே இல்லை. ஆனாலும் திருப்தியடைய என்ற வார்த்தைக்காக நாம் பல முயற்சிகளில் இறங்கி ஓயாமல் போராடிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் சென்ற வருடம் செப் 25 2012 அன்று புதுக்கோட்டையில் உள்ள சகோதரி குடும்பத்திற்கு செல்ல வேண்டிய கடமையிருந்தது.  

நான் உறவுகள் அழைப்புக்கு எளிதில் சென்று விடுவதில்லை. ஆனால் ஏதோவொரு சமயத்தில் அத்தனை பேர்களையும் சந்தித்துவிடுவதுண்டு. மனைவி குழந்தைகளை வாய்ப்பு கிடைத்தால் அனுப்பி விடுவதுண்டு.  இன்னமும் கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறையில் இருப்பதால் குடும்பத்தில் யாரோ ஒருவர் என் குடும்பம் சார்ந்த விருப்பங்களை என் சார்பாக (திட்டிக் கொண்டே) நிறைவேற்றி வைத்து விடுகின்றார்கள்.  தப்பி பிழைத்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

அப்போது தான் 20 வருடங்களுக்கு பிறகு அக்கா மகன் பயன்படுத்தும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை திருக்கோர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு (செப்டம்பர் 26 2012) அன்று சென்றேன். என் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை அந்த நான்கு கிலோ மீட்டர் மிதிவண்டி பயணம் உணர்த்தியது.

மூச்சு வாங்கினாலும் திருப்திகரமாகவே இருந்தது.

நாம் ஏன் வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? போன்ற என்னுள் இருந்த கேள்விகளுக்குள் இருந்த தூசிகளை அந்த ஆலயத்தில் தான் கழுவிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது?

ஞானாலயா பயணம் தொடரும்......................

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றிய காணொளி (27.01.2012)

முந்தைய பதிவு.



Wednesday, February 20, 2013

திரு. ஞாநியின் தகுதிகள் ?



என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தில் வரக்கூடிய ஒரு அத்தியாயத்தின் பெயர் நம்பி கை வை.

காரணம் திரு. ஞாநி அவர்களின் மேல் அந்த அளவுக்கு நான் நம்பிக்கை கொண்டவன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் மீண்டும் நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.  ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் தற்கால சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை ஞாநி அவர்களின் ஓ... பக்கங்கள் தான் எனக்கு பல புரிதல்களை உருவாக்கியது.  மனதளவில் சோர்ந்து போய்க் கிடக்கும் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு அருமருந்தாக உதவியது.

இவர் காட்டிய பாதையைத் தான்  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. இவர் மட்டுமல்ல ஞாநி அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டிய 49 ஓ  (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பல கட்சிகளுக்கும் பல சமயங்களில் உதவியது. பல சமயங்களில் பீதியையும் தந்தது.  இன்று வரையிலும் தந்து கொண்டிருக்கின்றது.

எழுத்துலக பயணத்தில் தொடக்கத்தில் இருக்கும் நான் வலைதளத்தில் இன்று அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வளர்ந்தமைக்கு முக்கிய காரணமே திரு. ஞாநி அவர்களின் ஓ பக்கங்கள் தந்த பாதிப்பு தான்.

ஞாநி என்றால் பலருக்கும் கசப்பு என்றே அர்த்தம் கொள்ளும் அளவிற்கு தனது விமர்சனத்தால் இதயத் துடிப்பை எகிற வைப்பவர். இவர் தளத்தை மட்டும் சரியான முறையில் பராமரிக்க நபர்கள் அமைந்தார்கள் எனில் நிச்சயம் இன்னமும் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும். இவரது விமர்சனங்களைக் கண்டு அரசியல்வாதிகளை விட பத்திரிக்கைகள் தான் அதிக அளவு பயப்படுகின்றது. ஆனால் தனது கொள்கையில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல இவரது எழுத்துப் பயணம் பல பத்திரிக்கைகள் தாண்டி இன்று கல்கியில் ஓ.... பக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றது.

வலையுலகில் நமது சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஏதோவொரு வகையில் சுட்டிக்காட்டி விடும் வினவு தளம் போல எழுத்தாளர்களில் வெகுஜன பத்திரிக்கையுலகில் முக்கிய நிகழ்வுகளை தனது கட்டுரையின் மூலம் தனது எண்ணங்களை எடுத்து வைப்பதில் இவரே முதல் இடத்தில் இருக்கின்றார். படிப்பவருக்கு நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்று மனதிற்குள் எத்தனை தோன்றினாலும் இன்று வரையிலும் எழுத்தில் அறம் சார்ந்த கொள்கையை கடைபிடிப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றார்.

திரு. ஞாநி குறித்த பல விமர்சனங்களை வலையுலகில் நான் படித்து வந்த போதிலும் அதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாக புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும்.

ஒரு வட்டத்திற்குள் சிக்காத மனிதர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக எழுத்தின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். ஏராளமான விமர்சனங்கள் எளிதாக கடந்து வந்தவர்.

முழுக்க முழுக்க தனது மனோபலத்தினால் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். 

சொல்லும் செயலும் வெவ்வேறாக வாழும் தற்போதைய சமூகத்தில் தன் மனதில் என்ன தோன்றுகின்றதோஅதையே தனது வாழ்வியல் கொள்கையாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அது மற்றவர்களுக்கு பாதிப்பு தருகின்றது என்பதற்காக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதவர்.  நிச்சயம் ஆதரவு என்ற பெயரில் தனது சுயத்தை தொலைத்து இன்று வரையிலும் நிர்வாணமாக நிற்காதவர்.

திருப்பூரில் தமிழ் இணையத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும், எனது ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை சார்ந்த தொழில் துறை நண்பர்களுக்கு ஞாநியின் வருகை அதிக ஆச்சரியம் அளித்தது.  எனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை கொண்டு போய் கொடுத்த போது தொடக்கத்தில் கிண்டல் அடித்தார்கள். அவராவது உங்கள் விழாவிற்கு வருவதாவது என்றார்கள். விழா மேடையில் ஞாநியைக் கண்ட போது ஆச்சரியப்பட்டார்கள்.

தொழில் வாழ்க்கையில் சூறாவளி போல செயல்படும் அளவிற்கு இதிலும் உன் உழைப்பை காட்டிவிட்டாய் என்று இன்று வரைக்கும் ஆச்சரியத்துடன் பாராட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். . .

காரணம் என் தகுதி எனக்குத் தெரியும். அவர் நிச்சயம் என் எழுத்துக்காக வந்துருக்காவிட்டாலும் பையன் ஏங்கிப் போய்விடுவான். வளரவேண்டிய பையன் என்று மனதில் யோசித்து இருக்கக்கூடும்.  

காரணம் எனக்கு தெரிந்த தெரியாத துறை எதுவென்றாலும் துணிந்து இறங்கி அது குறித்து முடிந்தவரைக்கும் கற்றுக் கொள்ளும் பழக்கம் இன்று வரைக்கும் என்னிடம் உள்ளது.  

என் வலையுலக எழுத்துப் பயணத்தில் புத்தகம் என்ற எண்ணம் உருவாக காரணமாக இருந்தவர் மற்றும் அதன் வழிப்பாதையை எனக்கு உணர்த்திக் காட்டியவர் திருமதி. துளசி கோபால்

மூன்று வருடங்களுக்கு முன்னால் புத்தகம் வடிவில் நமது எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது முதல் நான் அடைந்த ஏமாற்றங்களும், ஏக்க எண்ணங்களை மற்றவர்களை விட அதிகம் உணர்ந்தவர் திருமதி துளசிகோபால் அவர்களே.

எனது வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் எனது முயற்சிகளையும் அவர் நன்றாக உணர்ந்தவர். ஆறுதல் படுத்தி அமைதி வார்த்தைகளால் என்னை வழி நடத்தியவர்.

டாலர் நகரம் வெளி வரப் போகின்றது என்ற முதல் தகவல் அறிக்கை என்ற மின் அஞ்சல் பார்த்து அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி என்பது  எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.

சில கருத்துக்கள் நம்மை ஆறுதல்படுத்தும். பல சமயம் சிலரின் எழுத்துக்கள் நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இழந்து போன ஆற்றலை மேம்படுத்தும்.  அந்த வகையில் ஞாநி அவர்களின் எழுத்துப் பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம்.

இன்று இது போன்ற ஒரு விழாவை நண்பர்கள் ஒத்துழைப்புடன் நான் நடத்த முடியும் என்கிற வரையில் உயர்ந்துள்ளேன். வேண்டாத வேலை என்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தனி மனித முயற்சி என்பதாகவும் இதைப் பார்க்கலாம்.

இதன் மூலம் நான் சார்ந்திருக்கும் தொழிலுக்கு அப்பாற்பட்ட பல விசயங்களை கற்றுள்ளேன். இன்னமும் எனக்கு புரிபடாத ஆச்சரியமான பல விசயங்கள் உள்ளது.  

நிச்சயம் அது குறித்து எழுதுவேன்.

இந்த விழாவில் திரு. ஞாநி அவர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் விழா திட்டமிடத் தொடங்கிய போதே எனக்குள் ஒரு விதமான வேகம் உள்ளுற உருவாகிக் கொண்டேயிருந்தது. அவருடன் உரிமையுடன் பழகும் வாய்ப்பு அமையப் பெற்ற காரணத்தால் அவரைச் சந்திக்க சென்னை  சென்று அழைப்பு விடுத்து அணிந்துரை வேண்டுமென்று கேட்டேன். தல அதியமானும் உடனிருந்தார். .

எழுத்தாளர்கள் பல சமயம் சிந்தனையாளர்களாக இருப்பதில்லை அல்லது இருக்க விரும்புவதில்லை. தனது கடமை என்பதோடு அதை காசாக்கும் கலையில் கவனமாக இருப்பதால் படிப்பவனுக்கு எந்த நம்பகத்தன்மையும் தருவதில்லை. காலப்போக்கில் அது போன்ற எழுத்துக்கள் வெறும் காகிதமாகத்தான் மாறிவிடுகின்றது. ஆனால் ஞாநி அவர்களின் ஒவ்வொரு கட்டுரையும் படிப்பவருக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு திராவக எரிச்சலை உருவாக்கும்.

இயல்பான ஆரோக்கியத்தை பெற்ற மனத்திற்கு இது இயல்பானதாக இருக்கும். ஆமாம் உண்மைத்தானே சொல்லியிருக்கிறார் என்றும் சரியான எண்ணம் தானே? என்று ஏற்றுக் கொள்ள வைக்கும். ஆனால் மனம் முழுக்க வக்ரத்தை சுமந்து கொண்டு வாழ்பவர்களுக்கு கேலியும் கிண்டலும் அவர் குறித்த தனிப்பட்ட விசயங்களை ஆராய்ச்சி செய்து அழுகல் மணத்தை சுவைக்கத் தோன்றுவதாக இருக்கும்.

ஆனால் ஞாநி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட நான் பார்த்த கேட்ட பழகிய வரைக்கும் திறந்த புத்தகம் போலத்தான் இருக்கின்றது. எவருக்கும் உரிமை உண்டு. அவர் நடத்தும் கேணி கூட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். எது குறித்து வேண்டுமானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். வயது வித்தியாசமில்லாது அனைவரையும் அரவணைக்கும் பாங்கு இங்கே சிலருக்குத் தான் இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அந்த வட்டத்திற்குள் சிலருக்கு மட்டுமே அனுமதி.  வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியேறினால் மீண்டும் உள்ளே வரமுடியாது.

புகழ் மயக்கத்தில் தன்னை தன் ரூபத்தை இழந்து தனனுடைய போலியான அடையாளத்தை பதிய வைப்பதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  எழுத்து துறை மட்டுமல்ல. நீங்கள் காணும் எல்லாத்துறையிலும் இப்படித்தான் இருக்கின்றது.

ஆனால் ஞாநிக்கென்று எந்த பாதையும் இல்லை. எல்லா சாலையும் ரோம் நகரத்தை நோக்கி என்பது போல தனது சிந்தனைகள் அனைத்தும் சமூக மாறுதல் குறித்தே இருக்கின்றது என்பதைத்தான் தனது ஒவ்வொரு கட்டுரை வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார்.

வளர்ந்த, பிரபல எழுத்தாளர்கள் கூட முகநூல், வலையுலகம் என்பதை எட்டிக்காய் போல எட்டி நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இல்லாது நவீன தொழில் நுட்பத்தையும் தனது இந்த வயதில் கூட தளராது பயன்படுத்திக் கொண்டு தன்னளவில் தோன்று சிந்தனைகளை நாள் தோறும் இங்கே விதைத்துக் கொண்டு இருக்கின்றார்.

இந்தியாவிற்குள் ஜனநாயகம் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயம் இவரிடம் உண்டு. இவர் முகநூலைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்..

ஞாநி அவர்களிடம் டாலர் நகரம் புத்தகத்திற்கு அணிந்துரை வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கோப்பை அவருக்கு அனுப்பி கேட்ட போது நிச்சயம் தருகின்றேன் என்றார்.  ஆனால் அப்போது புத்தகமாக வர வாய்ப்பில்லாது போய்விட்டது. மூன்று மாதங்களுக்கு முன் புத்தகம் உறுதியாக வெளி வரப் போகின்றது என்று சொல்லி அவருக்கும் மீண்டும் கோப்பு வடிவில் அனுப்பி வைத்து விட்டு காகித வடிவில் அவர் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தேன்.

ஒருவரிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அல்லது அந்த வேலை முடியாத போது தொடர் நினைவூட்டல் மூலம் அந்த காரியம் முடியும் வரைக்கும் அவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பது என் வழக்கம்.   இது திருப்பூரில் உள்ள தொழில் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பழக்கம்.

ஒரு வேளை காரியம் செய்து முடிக்க வேண்டியவர்களின் சூழ்நிலை இடம் தராத போது நானே இந்த வேலையை எடுத்து முடித்து விடுவது என் வாடிக்கை.  ஆனால் திரு. ஞாநி அவர்களிடம் நினைவூட்டலோ, தொடர் துரத்தல் எதுவும் இல்லாது வழக்கத்திற்கு மாறாக அவர் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைதி காத்தேன்.

சென்னை புத்தக கண்காட்சி, அவர் புத்தகங்களை அவரே அவரது சொந்த பதிப்பகத்தில் வெளியிடும் தன்மை, அது குறித்த தொடர் பணிகள், பத்திரிக்கைகளுக்கு அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள், இதற்கு மேலாக அவர் ஆரோக்கியம் திருச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அவரின் தனிப்பட்ட பயணத்திட்டம் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டதோடு கண்களில் ஒரு கனவை சுமந்து கொண்டு தான்  நம்பிக்கையோடு இருந்தேன்.

மனதளவில் நம்பிக்கையை தளரவிடாத ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

நான் கேட்ட அணிந்துரை வந்தபாடில்லை.  லே அவுட் முடியும் அந்த இறுதிக் கட்டம் தீ போல நேரம் என்னைச்சுற்றிலும் பரவி உடம்பே தகித்துக் கொண்டிருந்தது.

எனக்குத் தெரிந்து விட்டது.

அப்போது தான் அவர் குறுஞ்செய்தி வந்தது.  நிச்சயம் நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லியிருந்தார். 

எனக்கு புரிந்துவிட்டது.  

அவர் ஏன் அணிந்துரை தரவில்லை என்பதை இந்த காணொளியில் நீங்க கேட்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

நான் ஏற்கனவே எழுதிய ஈழம் சார்ந்த விவகாரங்களில், அதைப் போல திருப்பூர் தொழில் சார்ந்த விசயங்களில் எனக்கு நேரெதிர் கருத்து கொண்டவர். ஆனாலும் அவரவர் கருத்துக்களுக்கு சுதந்திரம் அளிப்பவர்.  திருப்பூர் குறித்து ஞாநி அவர்களின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சுற்றுச் சூழலை கெடுக்கும் முக்கிய நகரங்களில் முதன்மையான ஊர் திருப்பூர்.

அவர் எழுத்துலக அனுபவத்தை ஒப்பிடும் போது நான் எழுவதெல்லாம் அவருக்கு மிகச் சாதாரண அரிச்சுவடி சமாச்சாரம் தான். ஆனாலும் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது தான் நான் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்பதற்கு உதாரணமாகும்..  

ஆனால் என் தந்தை தாய் போல வாயார மனதார தன் மனதில் வைத்திருந்த என் எழுத்து குறித்து அப்பட்டமாக கூட்டத்தில் பேசி பெருமை சேர்த்த விதம் நான் இறக்கும் தருவாயில் கூட மறக்க இயலாது.

கமல் ஹாசன் விழாவில் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசிய போது அந்த மேடையில் அப்பொழுதே அதைப்பற்றி ஒரு வார்த்தை கமல்ஹாசன் சொன்னார்.

வேறு எவருக்கு இப்படி மனம் வரும் என்றார்.

இது அதிகப்படியான உதாரணமாக உங்களுக்குத் தோன்றும்.  காரணம் இந்த விழா நடக்கும் அந்த நேரம் வரைக்கும் சில காரணங்களால் அதிக மன உளைச்சலோடு இருந்தேன். காரணம் புகழ் என்ற போதை ஒருவரை எப்படி எல்லாம் செயல்பட வைக்கும் என்பதை உணர நடந்த பல சம்பவங்கள் எனக்கு பல பாடங்களை உணர்த்திக் காட்டியது.

ஞாநி என் எழுத்தை பாராட்டிப் பேசிய போது எனக்கும் அந்த சமயத்தில் அப்படித்தான் தோன்றியது.

வேறு எவருக்கும் இது போன்ற வாய்ப்பு அமையுமா? என்று எனக்குத் தெரியவில்லை

 திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டு வரும் திரு. தங்கராசு அவர்கள் (அலைபேசி எண் 98 43 94 40 44 ) வீட்டில் விழா அழைப்பிதழை கொடுக்க நேரிடையாகச் சென்ற போது ஞாநி கலந்து கொள்கின்றரா? என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே ஒருவர் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு மேடையிலேயே வெளுத்து வாங்கியதைச் சொல்லி சிரித்தார்.

நிச்சயம் ஞாநி கலந்து கொண்டால்(?) உங்களின் உண்மையான தகுதி வெளியே தெரியும் என்றார்.

அவர் சொன்னபடிதான் கடைசியில் நடந்தது.

பிரபல்யங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ள நான் ஒரு முக்கிய பிரபல்யத்தை விழாவிற்கு அழைத்து வைத்து என் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளேன். 

என் அக்கா, மாமனார், மனைவி, சகலை, பள்ளிக்கூட நண்பர்கள், வந்திருந்த பார்வையாளர்கள் அத்தனை பேர்களும் திரு. ஞாநி அவர்களின் பேச்சை குறித்து தான் என்னிடம் சிலாகித்துப் பேசினார்கள். சிலர் முரண்டுபட்டு நின்றார்கள். நானும் ஞாநியைப் போல கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவன் . மெட்ராஸ் பவன் சிவகுமார் திருப்பூரில் கலந்து கொண்ட விழாவில் தமிழ்மொழி பற்று குறித்து அவர் கொண்ட மாற்று சிந்தனைகளை தைரியமாக பேசு என்று தான் அவரை வழிமொழிந்தேன். அதே போல ஞாநி எனக்கு குட்டு வைத்ததை ரசிக்கவே செய்தேன்.

குறிப்பாக என் மனைவிக்கு அவர் ஆதரவு தெரிவித்து என்னை ஞாநி ஓங்கி தலையில் குட்டாமல் குட்டு வைத்த விதத்தை மனைவியிடம் வந்து சொன்ன போது நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியார் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம். 

அவர் சொன்ன வாசகம்.

காலை நான்கு மணிக்கு எழுப்பி ஒரு சட்டி நிறைய இட்லி, சாம்பாரை கொடுத்து விட எப்படி மனம் வந்தது. ஏன் வெளியே சாப்பிட மாட்டோமா? என்றார். எனக்கு அவர் உடல் நலம் முக்கியம். அவருக்கு பெண்களுக்கு சுதந்திரம் முக்கியம்.  ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்பது என் பாணி. ஆனால் நான் சொன்ன கருத்தை ஏற்காது விழா முடிந்தும் கூட என்னை துவைத்து எடுத்தார். மனைவியை ரொம்ப பாடுபடுத்தாதே. மூன்று தேவியர்களும் வளர்ந்து உன்னை உண்டு இல்லை என்று படுத்தப் போகின்றார்கள் என்றார்.

ஒரே ஒரு டாலர் நகரம் புத்தகத்தை அவருக்கு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் அவருக்கு நான் பெரிதாக செய்துவிடவில்லை.

எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வாழப் பழகிய அவர் வாழ்க்கையில் எந்த பெரிதான் விருதுகளும் இன்று வரையிலும் அவரைத் தேடி வரவில்லை.

இவரும் தேடிச் செல்லும் நபரும் இல்லை.

விருதுகள் பலவும் இன்று எருதுகள் சுமக்கும் நிலையில் இருப்பதால் சலனமற்ற நதி போல அவர் பயணம் எந்த எதிர்பார்ப்பின்றி போய்க் கொண்டே இருக்கின்றார். .

Tuesday, February 19, 2013

படம் காட்டும் பார்வையாளர்கள் படங்கள்

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் எதிர்பார்த்த, எதிர்பாராத நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். எதிர்பார்த்து ஏமாற்றம் அளித்தவர்களும் உள்ளனர். அவரவர் சூழ்நிலையை கருத்தில் எடுத்துக் கொண்ட போதிலும் வெகு தொலைவில் இருந்து இதற்காகவே வந்திருந்த நபர்களில் எனக்கு ஆச்சரியம் அளித்தவர்களில் முக்கியமானவர்கள்.

ராஜ்குமார் சின்னச்சாமி (கடைசி வரைக்கும் படம் காட்டிக் கொண்டேயிருந்தார். ஆனால் நிச்சயம் அருகே உள்ள ஊர் தான் சொந்த ஊராக இருப்பதால் வந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் வைத்திருந்தேன்.  குறுகிய காலத்தில் கூகுள் ப்ளஸ் ல் தன்னை சுனாமியாக அறிமுகப்படுத்தி இன்னமும் சூறாவளி போல களத்தில் இருக்கும் தம்பி. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் மனதில் பட்டத்தை, தான் நினைத்ததை அப்படியே அட்சரம் மாறது எடுத்து வைப்பவர்)

ராமச்சந்திரன் (பிகேஆர்)  இவரைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஊரில் இருந்து பேரூந்தில் ஏறும் போது நள்ளிரவில் ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பூருக்கு வந்து சேர்ந்ததும் ஒரு அழைப்பு. அன்பால் அசத்திவிட்ட தல.

ஜோசப் பால்ராஜ். இவரைத் தெரியும். ஆனால் அறிமுகம் இல்லை. என்னை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர். சென்னைக்கு வந்தவர் அண்ணன் விழாவில் நானும் கலந்து கொள்வேன் என்று அப்துல்லாவுடன் கிளம்பி வந்தவர். சென்னையில் இருந்து கிளம்பும் போது அப்துல்லா அழைத்துச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு அழைப்பு கூட அனுப்பவில்லை.

உண்மையான அன்பையும் அக்கறையும் காட்டிய தம்பி.

அருண்மொழித்தேவன். கோவை.  இந்த விழாவிற்கென்று கோவையில் இருந்து வந்து கலந்துகொண்ட போதிலும் கடைசிவரைக்கும் இவரை சந்திக்க முடியவில்லை. இவர் கையில் புத்தகம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில் தம்பிமார்களின் வேலைப்பளூவினால் தவறவிட்ட கொடுமையும் உண்டு. பெருந்தன்மையாக கூகுள் ப்ளஸ் ல் எழுதிய பாங்கு பாராட்டக்கூடியது.

முகநூலில் தீவிரமாக செயல்படும் ஆகாயமனிதன். உறவோடு தளம் நடத்திய விழாவில் நேரிடையாக வந்து அறிமுகம் ஆனார்.  உங்கள் தளம் படித்து படித்து தான்  சாயப்பட்டறை பிரச்சனையில் மோகன் கமிட்டி செயல்பாடுகளை புரிந்து கொண்டேன். நானும் திருப்பூர் மண்ணின் மைந்தன் என்றாலும் உங்கள் எழுத்து தான் என்னை பலவற்றை அடையாளம் காட்டியது என்ற தம்பி.  இவர் அடையாள புகைப்படத்தைப் பார்த்து பல நாட்கள் 70 வயதுக்கு மேற்பட்ட நபராக இருப்பார் என்று மனதில் வைத்திருந்ததை உடைத்த தம்பி. எப்போதும் வெங்கல கடையில் புகுந்த யானை போல தான் சார்ந்திருக்கும் இடத்தை கலகலப்பாக மாற்றும் சிபி செந்தில் குமார் விழாவில் அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சரியமே.

சேர்தளம் சார்பாக பலரும் வந்திருந்த தம்பிமார்கள்.

தொழிற்களம் சார்பாக வந்திருந்த பெண்கள் வரவேற்பு பணியை மற்றும் வருகை புரிந்தவர்களை குறிப்பெடுக்கும் வேலையை சிறப்பாக செய்தனர்.

வலையுலகத்தை அலற வைக்கும் திண்டுக்கல் தனபாலன் மண்டபத்தின் உள்ளே வந்து என் அருகே பின்னால் நின்று கொண்டு இன்று என்னால் வர முடியாது என்று சொல்லி கலாய்த்த தம்பி.

திரு. பழனி கந்தசாமி அவர்களுக்கு முதல் நாள் என் இடுகையின் தலைப்பை அவர் இடுகையில் போட்டு நீங்க அவசியம் வருவீங்கன்னு நினைக்கின்றேன் என்று தான் போட்டேன். மனுஷர் டாண் என்று முதல் ஆளாக கூட ஒரு துணை நபரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். 

இவர்கள் இருவரும் ஒரு கிளையில் பூத்த இருமலர்கள். பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்.
எனக்கு நேரிடையாக அறிமுகம் இல்லாத போதும் கூட விழாவிற்கு முதல் நாள் ஒரே ஒரு அலைபேசி அழைப்பு. மனிதர் தனது வாகனத்தில் முக்கியமான நபர்களுட்ன் வந்த ஈரோடு திரு. தாமோதர் சந்துரு.

தனது திருமண பத்திரிக்கையை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்த நாள் முதல் இன்று வரையிலும் என்னுடன் நல்ல புரிதலோடு இருக்கும் சஞ்சய் காந்தி.

இந்த விழாவின் தொடக்கப்புள்ளி முதல் கடைசி வரைக்கும் மறைமுகமாக பல விதங்களில் எனக்கு உதவிய தம்பி சிந்தன்