Monday, April 30, 2018

50 வயதினிலே - 3

இங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல்லாம் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் பேசக்கூடியதாக இருக்கும். வயது, பதவி, பணம், அதிகாரம் போன்ற முக்கியக் காரணிகள் இருந்தாலும் காலாவதி என்ற சொல் நிச்சயம் தன் வலிமையைக் காட்டவே செய்யும். எல்லையைக் கடக்கும் போது இங்கு எல்லாமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

மோடி வளர அத்வானி தான் காரணம். இது உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால் காலம் அவரை இன்று எங்கே நிறுத்தியுள்ளது. மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பல பதவிகள் பார்த்து அனுபவம் இருந்தாலும் எடப்பாடிக்குக் காலம் வழங்கிய வாய்ப்பு ஸ்டாலினுக்கு வழங்கவில்லையே?

சமூகத்தையே மாற்றக்கூடியவர்களுக்கே இந்தக் கதியென்றால் தனி மனிதன் வாழ்க்கை எம்மாத்திரம்? அதிர்ஷ்டம், சூட்சமம், விதி, எல்லையின் முடிவு என்ற ஏதோவொரு வார்த்தையும், அந்த வார்த்தைக்குள் அடங்கிய தத்துவத்தை அவரவர் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எடுத்துக் கொள்ள முடியும்.

சிலவற்றுக்கு காரணங்களை கண்டு கொள்ள முடியாது. காரணங்களை சொல்லவும் தெரியாது. அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நீங்கள் வாசித்த, சந்தித்த பிரபல்யங்களின் ஒவ்வொரு கால கட்ட வாரிசுகளின் வாழ்க்கையைப் பாருங்கள். ஓராயிரம் ஆச்சரியங்களையும் கேள்விகளும் உங்களுக்குள் தோன்றக்கூடும். நமக்குக் கிடைக்காத அனைத்தும் இவர்களுக்குக் கிடைக்கும். எதையும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே கைக்கெட்டும் தூரம் தான். ஆனாலும் எத்தனை பேர்களால் அவரவர் தந்தை, தாய்ப் பெற்றிருந்த புகழின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடிந்துள்ளது? சமூகம் பாராட்டும் வெற்றியாளர்களாக வர முடிகின்றது?

நாடே கொண்டாடிய நடிகர் திலகத்தின் மகனுக்கு விளம்பரப்படங்களில் நடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்று வாழ்க்கை அமைந்துள்ளது. மொழியை வைத்தே வளர்ந்த கலைஞரின் மகனுக்கு வாழ்வின் இறுதி வரைக்கும் வார்த்தைகளே வசப்படவில்லையே?.

எதிர்மறை நியாயங்கள் தான் இங்கே நேர்மறை எண்ணங்களுக்கு ஆதாரம். ஏன் இப்படி? என்று உங்கள் எண்ணத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையென்பது இனிதான வாழ்க்கை என்பதனை உணர முடியும்? நம் பார்வை முக்கியம்? பார்வையில் உணர்தல் அதைவிட முக்கியம்.

மேடு என்பது ஒரு வழிப்பாதை. சிலர் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும். சென்றவர்கள் அருகில் மற்றவர்கள் நிற்க முடியாத அளவிற்குக் குறுகலாக இருக்கும். ஆனால் பள்ளம் என்பது பாதையின் தொடக்கமாக இருக்கும். நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளம் என்பது குழி அல்ல. அதுவொரு வழி. இதுபோன்ற சமயங்களில் உங்கள் மனம் ஆசானாக இருக்க வேண்டும்.

ஆசான் என்பவர் அறிவுரை சொல்பவர் அல்ல. வழிகாட்டியாக இருப்பவர். இந்தச் சமயங்களில் தான் காலாவதி என்ற வார்த்தையை உணர்ந்திருக்க வேண்டும். காரணம் நாம் காலாவதியாகி விட்டோம் என்பதனை குறிப்பிட்ட சில சம்பவங்கள் நமக்கு உணர்த்தும்.

திருமண வாழ்க்கை தொடங்கி வைக்கும். குழந்தைகள் வளரும் போது புரிய வைக்கும். மகள்கள் மகன்களாக மாறி கல்லூரிக்கு நுழையும் போது காலமும் வயதும் நீ காலாவதியாகக்கூடிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளாய் என்பதனை அறிவுறுத்தும்.

புரிந்து கொண்டவர்கள் எப்படித் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள்?

விவாதத்தைத் தவிர்த்து விடு. விதண்டாவாதம் என்பது எப்போதும் கூடாது. ஆக்ரோஷம் அறவே கூடாது. மன உளைச்சல் உருவாக்கும் காட்சிகளை உள்வாங்க முடியாத போது உனக்கு நீயே திரையிட்டுக் கொள். இனியும் சூரத்தனம் தேவையில்லை. மொக்கைத்தனம் தவறில்லை. அமைதிப்படுத்த ஆன்மீகத்தை நாடு. அது தேவையில்லை எனில் உன்னை உனக்கே உணர்த்தும் வாசிப்பை அதிகப்படுத்து. உரையாடலைக் குறைத்து விடு.

உள்ளர்த்தம் தரும் வார்த்தைகளில் கவனம் செலுத்து. மொத்தத்தில் உன் ஆரோக்கியத்தை அடுத்தவர் அழிக்க அனுமதிக்காதே. நீயே உருவாக்கிக் கொள்ளாதே. ஒரு நாளில் ஒரு நேரம் பட்டினி கிடப்பது தவறல்ல. ஆனால் நாள் முழுக்கப் பட்டினியால் மட்டுமே வந்த நோயைப் போக்க முடியும் என்ற நிலையில் வாழ்க்கை அமைவது கொடுமை என்பதனை உணரும் வயது நிச்சயம் ஐம்பதுக்கு அருகே வந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மனைவியின் விருப்பங்கள் ஒரு பக்கம். வளரும் குழந்தைகளின் தேவைகள் மறுபக்கம் என்று காலம் நடத்துப் பாடங்களில் ஒவ்வொரு மாதமும் மர்மக்கதை போலவே இருக்கும். பக்கங்கள் நகர நகரப் படபடப்பு மாறி பயம் உருவாகத் தொடங்கும். காலம் வாசிக்கச் சொல்லும் கதையின் தலைப்புப் பணம்.

எந்த அறிவுரைக்குள்ளும் அடக்க முடியாததும் எவ்விதக் கொள்கைக்குள் அடங்காததும் பணம் என்ற மூன்றெழுத்து. எப்படிச் சேர்ந்தது? என்று சேர்ந்தவர்களுக்கும் விவரிக்கத் தெரியாது. ஏன் இழந்தோம்? என்பதனை இழந்த பின்பு கூட விவரிக்கத் தெரியாதவர்களால் சூழ்ந்த உலகத்திற்குள் நாமும் இருக்கின்றோம். ஆனால் இந்த பணத்தைத் தேடி தான் நாமும் நம்மை இழந்து கொண்டிருக்கின்றோம்.

ஐம்பது வயதில் நம்மை அதிகம் தாக்கும் பிரச்சனைகள் இரண்டு. ஒன்று பாதுகாப்பின்மை. மற்றொன்று பயம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய தோழர்கள். நம் குடும்பத்துக்கு யார் பாதுகாப்பு? நாம் இல்லாது போனால் என்னவாகும்? என்ற கேள்விகளை அதிகம் எதிர்கொள்வது இந்த வயதில் தான். இப்போது தான் பயம் என்ற பூதம் நம் முன்னால் பிரமாண்டாக நிற்கின்றது.

பயமென்பது எளிதில் பரவக்கூடியது. அனுமதிப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. கவலையே ஆறுதல் என்று கருதிக் கொள்பவர்களால் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்க முடியாது. நம்மையறியாமல் நம்முள் பரவசமாய்ப் பரவும் கவலைகள் தான் ஆரோக்கியத்தை விலையாகக் கேட்கின்றது.

தேவையானது தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காமல் கவலைப்படுவது என்பது சிந்திக்க வைப்பது என்று நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவலைகள் என்பது காலாவதியாகிப் போன காசோலை. அதனை வைத்து இருப்பவர்களுக்கும் பிரயோஜனமில்லை. கொடுத்துச் சென்றவர்களும் அதனைக் கண்டு கொள்வதுமில்லை.

அதுவொரு காகிதம். நாளாகச் செல்லரித்துப் போய்விடும். உண்மை தான். நம் உள்ளுறுப்புகள் செல்லரிக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுவதே இந்தக் கவலைகள் தான். அப்போது தான் நம் உள்ளம் குறித்து, உள்ளத்திற்குள் உள்ள நேர்மையைக் குறித்து யோசிக்கத் தொடங்குகின்றோம்.

நம்மிடம் உள்ள நேர்மையைப் பற்றி அப்போது கவலைப்படுபவர்கள் நம் முன்னால் யாரும் இருக்கப் போவதில்லை.

அதுவரையிலும் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த நேர்மை என்ற வார்த்தையே காலாவதியாகி விடும். நம் வாழ்க்கையின் நீள அகலத்தையும் சந்திக்கின்ற ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பொருளாக எடுத்துக் கொள்ளத் தொடங்குகின்றார்கள். சிலர் அறிவுரையை அள்ளிக் கொடுத்து விட்டு அகன்று விடுவர். பலர் வீழ்ந்த பள்ளத்தை எட்டிப் பார்த்து மனதிற்குள் கணக்கீடு செய்து கொள்வர்.

தனி மனித வாழ்வின் வளர்ச்சி என்பதற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்ற கல்விக்குரிய மரியாதை அதன் மூலம் கிடைக்கும் வேலை மூலம் தான் ஒவ்வொருவருக்கும் இங்கே அங்கீகாரம் கிடைக்கின்றது. ஆனால் மக்கள் தொகைப் பெருக பெருக எல்லாவற்றின் மதிப்பு மாறிக் கொண்டேயிருக்க ஒவ்வொன்றின் கொள்கையும் மாறிவிடுகின்றது.

எவையெல்லாம் நீதிக்குப் புறம்பானதாகச் சொல்லப்பட்டதோ அவையெல்லாம் இங்கே அவரவர் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கின்றது. ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றம் பெறுகின்றனர். ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அப்போது தான் வயது காரணமாகக் காட்டப்படுகின்றது. திறமையில் உள்ள நம்பிக்கையின்மை குறித்துப் பேசப்படுகின்றது. இனியாவது அடங்கிப் போய்விடு என்று அறிவுரை அடுத்தடுத்துத் தாக்குகின்றது. மொத்தத்தில் உள்ளார்ந்த கருத்துக்களை உள்ளே வைத்துக் கொள். பெரும்பான்மையினர் சொல்லும் பாதையில் நடக்கப் பழகிக் கொள் என்பதான வாழ்க்கை தத்துவம் உருவாகின்றது.

தன்னை மாற்றிக் கொள்ள முடியாதவர்களின் அன்றாட வாழ்க்கை என்பது திண்டாட்டமாகப் போய்விடுகின்றது. குடும்ப வாழ்க்கையில் தனி மனிதனின் மனதுக்கும் உடலுக்கும் உண்மையான போராட்டமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. பிறகெப்படி பக்குவத்தைப் பற்றிப் பேச முடியும்?

கடன் கழுத்தை நெறிக்கின்றது. சேமிப்பு அறவே இல்லை. பணிபுரியும் வேலையோ உத்தரவாதம் இல்லை. அடுத்த மாதம் வேலை இருந்தால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி. இல்லையேல் உருவாகும் பிரச்சனைகள் ஏராளம். அடிப்படைத் தேவைகளுக்கே இங்கே அல்லாட வேண்டியுள்ளது. இதையும் மீறி பக்குவநிலையை எட்ட முடியுமா?

இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர்கள் நிரந்தரமற்று தான் வாழ்கின்றார்கள். சொந்த வீடு இல்லாமல், நிரந்த வேலையில்லாமல், படித்த கல்விக்குத் தொடர்பில்லாத ஏதோவொரு வேலையில், வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் வாழ்கின்றார்கள். அப்படியென்றால் இப்போது இங்கே நாம் பார்க்கும் வளர்ச்சியென்பது?

வளர்ச்சி என்பதனை நாம் தவறாகவே புரிந்து வைத்துள்ளோம். தொழில் நகர வளர்ச்சி என்பது வளரும் ஜனத்தொகை கொண்ட நாட்டுக்கும் அவசியம் தேவை என்பதனை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டாலும் இங்கு நடக்கும் வளர்ச்சி என்பது வேறு விதமாக உள்ளது. ஒரு தொழிற்சாலை பத்தாயிரம் பேர்களுக்கு நேரிடையாக மறைமுகமாக வேலை அளித்து அவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தாலும் சுற்றிலும் உள்ள ஒரு லட்சம் மக்களின் ஆரோக்கியத்தை விலை பேசும் காரியத்தைக் கண ஜோராகச் செய்கின்றது.

மேற்கித்திய சமூகத்தில் நடக்கும் தொழிற் புரட்சி என்பது வேறு. இங்கே லஞ்சம் உழலில் திளைத்து குறிப்பிட்ட அதிகார வர்க்கம் மட்டும் சுகமாக வாழ உருவாக்கப்படும் செயல்பாடுகள் என்பது வேறு. நாம் தான் உணர்ந்து கொள்வதே இல்லை. அன்றாட வாழ்க்கைக்கே ஆளாய் பறக்கும் மனிதனுக்குத் தன் ஆரோக்கியத்தை விலை வைத்துத் தான் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது அவன் எந்தப் பக்குவத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

இதனால் தான் இனி இங்கே வாழ முடியாது. நன்றாகப் படி. தேர்வில் முந்து. வெளிநாட்டுக்கு ஓடி விடு என்ற இடைவிடாத சூட்சம பாடத்தைப் பள்ளிக்கூடத்தில் இருந்தே போதிக்கப்படுகின்றது. போக முடியாதவர்களுக்குப் போக்கிடம் எங்கே? இங்கே தான் தொடங்க வேண்டும்? இங்கே தான் தொடர வேண்டும்.

வாழவே முடியாத நாடல்ல. தேவைக்கும் விருப்பத்திற்கும் உண்டான இடைவெளியை உணர்ந்து கொண்டாலே போதுமானது. அடிப்படைத் தேவைகளை மீறி ஆடம்பரத் தேவைகளை எதிர்பார்த்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த நாடல்ல, எந்த நாடும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

கடல் கடந்து, தனிமையை உறவாக்கி, உள்ளம் வேறு. உடம்பு வேறாகப் பிழைப்பதற்காக மட்டுமே வாழும் வெளிநாட்டு வாசிகளிடம் கேட்டுப் பாருங்கள்? பணம் இருந்தும் அடைய முடியாத அனைத்தையும் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டு காட்டுவார்கள்.

ஆரோக்கியத்தை விலையாகக் கொடுத்து அடுத்தத் தலைமுறைக்கு ஏணியாக இருந்தவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதும் உங்களாலும் என்னாலும் உணரப்படாத கண்ணீர் கறை படிந்தே இருக்கும். அது அவர்களின் சொந்த நாட்டை விட்டுப் பிரித்து வைத்திருக்கும் கடலில் உள்ள உப்பை விட அதிகமாகவே இருக்கும்.

நம் தேவைகள் அதிகமாக நாம் தொலைக்க வேண்டியதும் அதிகமாகவே இருக்கும் என்பதனை உங்களால் உங்கள் குடும்பத்துக்கே புரிய வைக்க முடியாது? பிறகெப்படி நீங்கள் வாழும் சமூகத்திற்குப் புரிய வைக்க முடியும்?

புரிந்தவர்கள் இரண்டு விதங்களில் வாழ்கின்றார்கள்.

மற்றவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. அதனால் கடைசி வரையிலும் புழுங்குவதே இல்லை. இந்தப் பக்குவத்தை அடைய முடிந்தவர்கள் வாழும் போதே சொர்க்கத்தைக் கண்டவர்கள்.

தொடர்வோம்....... 




Thursday, April 26, 2018

50 வயதினிலே - 2

ஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா? உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்டும் வெளியுலகத் தொடர்பின்றி உணர்வின்றி உள்ளும் புறமும் ஒன்றும் அறியாது ஓய்வெடுக்க முடிகின்றதா? ஆழ்ந்த உறக்கத்தின் முடிவில் அதிகாலையில் இயல்பாகவே குறிப்பிட்ட நேரத்தில் எழ முடிகின்றதா? உங்களின் உண்மையான ஆரோக்கியத்தை உடல் கழிவுகள் சிக்கலின்றி நகர்வதை வைத்து கண்டு கொள்ள முடிகின்றதா?. 

அதிகாலை வேளையில் ஆள் ஆரவமில்லா சாலையில் சிங்கம் போலக் கம்பீரமாக நடக்க முடிகின்றதா? கை வீசி நடக்கும் போது உடல் பாகங்கள் வலியில்லாமல் இருக்கின்றதா? நடக்கும் போது உங்களால் சுற்றியுள்ளதை ரசிக்க முடிந்துள்ளதா? இரை தேடிச் செல்லும் பறவைகளைப் பார்த்து உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா? சாலையோர மரங்களில் கூட்டமாக வசிக்கும் பறவைகளின் இரைச்சலை ரசனையுடன் நின்று கவனித்ததுண்டா? பார்க்கும் ஒவ்வொன்றையும் விலகி நின்று பார்க்கும் பழக்கம் உருவாகியுள்ளதா? சாலையில் பார்க்கும் வீடுகள், வாகனங்கள் என் ஒவ்வொன்றும் உங்களுக்குள் உணர்த்தும் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் உருவாகியுள்ளதா? 

பார்வையில் படுகின்ற ஒவ்வொன்றும் எந்தப் பாதிப்பையும் உங்களுக்குள் உருவாக்காமல் இருக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையின் நிலை குறித்த உண்மையான புரிதலை மனம் பெற்றுள்ளதா? நாள் தோறும் உழைக்கும் உழைப்பிற்கும் கிடைக்காத பலனுக்கும் உண்டான சமூக விதிகள் சொல்லும் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துள்ளீர்களா? 

தொழில் உலகத்திற்குத் தேவைப்படாத நேர்மையைக் கட்டிக் கொண்டு வாழும் போது உருவாகும், உருவாக்கப்படும் அரசியலை அங்குலம் அங்குலமாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு நீங்களே குருவாக மாறியிருக்கின்றீர்களா? 

நடைபயிற்சி முடிந்து வீட்டுக்குள் உள்ளே நுழையும் போது நேரம் மறந்து தூங்கும் மனைவி, குழந்தைகளை அவர்கள் நிலையில் நின்று ரசிக்க முடிந்துள்ளதா? முதல் நாள் இரவு குழந்தைகள் படித்த புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்க அதைத் தாண்டிச் சென்று கோபப்படாமல் சிதறிக்கிடக்கும் மற்றவற்றையும் குறிப்பிட்ட இடங்களில் அமைதியாய் அடுக்கி வைத்து விட்டு வாய் விட்டுச் சிரிக்க முடிந்துள்ளதா? 

அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் மனைவி சொல்லும் முதல் நாள் பிரச்சனைகளைத் தொடரும் போட்டுத் தொடங்கும் சமயத்தில் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசனைத் தலைவனையாய் வாழ்ந்ததுண்டா? அலுவலக அரசியலை அங்கேயே விட்டு விட்டுப் பிடித்த பாடலை உரக்கச் சொல்லிக் கொண்டே உலகம் பிறந்தது எனக்காக? என்று வீட்டுக்கு வரும் பழக்கம் உண்டா? அன்றாடம் உருவாகும் அழுத்தங்கள் அனைத்தையும் பிரித்து வைத்து மழுங்காத சிந்தனையைப் பெற்றதுண்டா? 

வாழ்க்கையில் வாசிப்பைத் தொலைக்காமல் இருந்ததுண்டா? வாசிக்கும் ஒவ்வொன்றிலும் எழுதியவரின் பெயரைத் தாண்டி எழுதிய விதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உள்ளே ஆராய்ந்து பார்த்ததுண்டா? போக்குவரத்து நெரிசலில் நசுங்கிச் சென்றாலும் அமைதியான காட்டில் இருக்கும் அமைதியை மனம் பெற்று அவசர மனிதர்களை ஆச்சரியமாகப் பார்க்கும் மனோநிலையைப் பெற்றதுண்டா? சுற்றியுள்ள அனைவரும் மோசம். இதுவொரு குப்பை வாழ்க்கை என்ற உணர்தலை விட்டு வெளியே வந்ததுண்டா? 

இவையெல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் பக்குவம் என்ற நிலையை எட்டியிருப்பீர்கள். பணம் தேவை என்பதற்கும் பணம் மட்டும் தான் தேவை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்று அர்த்தம். உங்கள் ஆரோக்கியத்திற்கு வெளியே உள்ள எந்த மருந்துகளும் தேவையில்லை. நீங்களே மருத்துவராக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளவராக இருப்பீர்கள். 

நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பணத்தைத்தாண்டி உங்களுக்கான உலகத்தில் நீங்கள் உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம். கடவுள் என்ற வார்த்தையைத் தூர வைத்து உங்கள் உள்ளத்தையே கோவிலாக மாற்றியுள்ளீர்கள் என்று அர்த்தம். 

உங்கள் வயது ஐம்பதாக இருக்கலாம். இதனையும் தாண்டி கடந்து வந்து கொண்டு இருப்பவராக இருக்கலாம். ஆன்மீக எண்ணங்கள் என்னை வழி நடத்துகின்றது என்ற நம்பிக்கையுள்ளவராக இருக்கலாம். இல்லை அதையும் மீறி நான் வளர்த்துக் கொண்டுள்ள எண்ணங்களின் வலிமையே என்னை வழிகாட்டும் குருவாக உள்ளது என்று யோசிக்கத் தெரிந்தவராகவும் இருக்கலாம். இங்கு எல்லாமே முக்கியம். ஆனால் எல்லாவற்றையும் விட எண்ணங்கள் முக்கியம். நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கை என்று உணர்வது மிக முக்கியம். 

எண்ணங்களுக்குத் தனிக்குணம் உண்டு. எந்நாளும் நடித்துக் கொண்டேயிருக்க முடியாது. நடித்தாலும் ஏதோவொரு சமயத்தில் காட்டிக் கொடுத்து விடும். எதன் அடிப்படையில் நம்மைக் கவனிக்கின்றார்கள் என்பதனை அவர்களை அறியாமல் காட்டிக் கொடுத்து விடும். நம்மிடம் அளவு கடந்த பணம் இருக்கின்றது என்பதைக் கௌரவமாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்களும் தங்களைத் தனித்தீவாக மாற்றிக் கொள்கின்றார்கள். தாம் சேர்க்க முடியாத பணத்தை நினைத்துக் கொண்டே பலரிடமிருந்து ஒதுங்கி வாழ நினைப்பவர்களும் தீவு போலத்தான் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கின்றார்கள். இரண்டு பேர்களும் தங்களுக்கான வாழ்க்கையைக் கடைசி வரைக்கும் வாழ முடியாதவர்கள். 

மற்ற அனைத்தையும் விடப் பணம் அளவு கடந்த தன்னம்பிக்கையைத் தரவல்லது. அந்த நம்பிக்கை செலுத்தும் பாதை தான் கேள்விக்குரியது. பணத்தை மட்டுமே தகுதியாக நினைத்துக் கொள்பவர்களின் மனவலிமை என்பது ஏதோவொரு சமயத்தில் இறக்கப் பாதையில் இறக்கி விடும். அது பணம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அவர்களின் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கக்கூடும். இதனை உணர்பவர்கள் குறைவு. இவற்றை உணர்ந்தவர்களுக்கு இங்கே எல்லாமே வேடிக்கையாக மாறிவிடும். வேடிக்கையாளனாக வாழத் தெரிந்தவனுக்கு வெயில், மழைக் காலம் என்பது எல்லாமே ஒன்று தான். 

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளப் பழகியிருப்பின் நிச்சயம் எந்தக் கதவும் முடியிருக்காது. ஏதோவொரு வகையில் திறந்தே தான் தீரும். சூழ்நிலையும் மாறலாம். பொறுத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். அதுவரையிலும் வாங்கிய கடனும், இனி வாங்க வேண்டிய கடனும் பாடங்கள் நடத்தலாம். 

அடுத்த மாதம் வேலையில்லையே? மாத சம்பளம் இல்லாவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற அழுத்தம் உங்கள் அசைத்துப் பார்த்தாலும் இவைகள் எதுவும் உங்கள் உள்ளுறுப்புகளைப் பாதிக்காது என்று நிச்சயம் சொல்ல முடியும். கவலைகள் என்பது கற்றுக் கொடுக்கும். தெளிவான பாதையை அடையாளம் காட்டும். ஆனால் அதுவே உங்களை உடல் ரீதியாகப் பாதிப்படையச் செய்தால் அதற்குப் பெயர் உங்கள் திறமையை இதுநாள் வரைக்கும் உணராமல் வாழ்ந்து இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். 

இருபது வயது வரைக்கும் உண்டான வளர்ச்சியென்பது வேறு. நாற்பது வயதுக்கு மேலே நாம் காணும் வளர்ச்சியென்பது வேறுவிதமானது. முதலில் உடல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்குப் பின்னால் வருவதெல்லாம் உள்ளம் சார்ந்ததாகவே இருக்கும். அதுவே இறக்கும் வரையிலும் தொடர்கின்றது. 

உள்ளத்தை அடக்கத் தெரிந்தவனின் உடல் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. ஆரோக்கியம் உள்ளவனுக்குக் காலம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த கூடியதாகவே இருக்கும். அது எழுபது வயதாக இருந்த போதிலும். இதைப் பற்றிச் சொன்னாலே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? என்று நம்மவர்கள் நம் எண்ணத்தை அசைத்துப் பார்க்கக்கூடும்? 

ஐம்பதுக்கு முன்னால் அனுபவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் உடலை சுகப்படுத்துவதாக இருக்கும். ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் பாதிக்கு மேல் வரும் வசதிகளும் வாய்ப்புகளும் உண்டான குணம் வேறு விதமானது. நாம் இறக்கும் வரையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நம்மைச் சார்ந்துள்ள மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அடுத்த கட்ட அமைதியான வாழ்க்கைக்கும் உதவக்கூடியதாக இருக்கும். 

இளமையில் வறுமை என்பதனை விட முதுமையில் வறுமை என்பது தான் கொடூரமாக இருக்கும். உதவி செய்ய ஆட்கள் இல்லாத போது நம்மிடம் இருக்கும் செல்வம் உதவி செய்ய ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால் பக்குவம் இல்லாத நிலையில் வந்து சேர்ந்த செல்வம் நம்மைச் செல்லாக்காசாகத்தான் மாற்றுகின்றது என்பதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள முடியுமே? 

புரிந்தவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தப் புத்திசாலிகளுக்குத் தற்காலச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். அதனால் என்ன? பிழைப்புவாதிகள் உருவாக்கிய சமூகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய போட்டி, பொறாமை, வன்முறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். உருவாக்கிய ஒவ்வொருவரும் கடைசியில் ஏதோவொரு பெரிய மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்து இந்த உடலில் இருந்து என் உயிரைப் பிரித்து விடு இறைவா? என்று கெஞ்சுவதையும் பத்திரிக்கையில் படிக்கத்தானே செய்கின்றோம். 

நம் வாழ்க்கையின் தீர்மானங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொழிலில் வெற்றி, வசதியுடன் கூடிய வாழ்கையில் அனுபவித்தே தீர வேண்டிய வீடு, வாகனங்கள், செல்வாக்கு, அந்தஸ்து, அதிகாரம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லாமே இருந்தாலும் இவற்றைக் கடைசி வரைக்கும் அனுபவிக்க நம் ஆரோக்கியம் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. 

இல்லாவிட்டால் எல்லாமே இருக்கும். ஆனால் அவையனைத்தும் நம் அருகே இருப்பவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கை பார்ப்பவர்களாகக் காலம் மாற்றும். அப்போது உருவாகும் மன அழுத்தம் வேறொரு பாடத்தை நடத்தத் தொடங்கும். 

"நீ வாழ்ந்த வாழ்க்கையென்பது உனக்காக வாழவில்லை. உன்னைச் சார்ந்து இருந்தவர்களுக்காகவே வாழ்ந்து இருக்கின்றாய்?" என்று கண் எதிரே நடக்கும் வித்தியாசமான வாழ்க்கையின் அலோங்கலங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் உருவாகும் மன அழுத்தமென்பது மரணப் பாதையை விரைவு படுத்தும். வெற்றி ராஜ்யத்தை உருவாக்கிய அனைவரும் இந்த இடத்தில் தான் பூஜ்யமாக மாறத் தொடங்குகின்றார்கள். 

பணத்தை மனதோடு சேர்த்து யோசிப்போம். மனம் தான் உடலை இயக்குகின்றது. இயக்குநர் சரியான நபராக இல்லாவிடின் நடிகரின் நடிப்பு நன்றாக இருக்குமா? 

தொடர்வோம்.......



Tuesday, April 24, 2018

50 வயதினிலே

"நீங்க எப்படிச் சார் முடிவு செய்ய முடியும்? ஐம்பது வயசாச்சுன்னா சுறுசுறுப்பா வேலை செய்ய முடியாதென்று?" 

என் முன்னால் அமர்ந்திருந்தவர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு நான் பணியில் இருக்கும் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு துறைக்குப் பல நபர்கள் வந்து கொண்டேயிருந்தனர். பல முகங்கள். பல பேச்சுகள். பலவிதமான எதிர்பார்ப்புகள். நிறுவனம் அறிவுறுத்தி இருந்த அடிப்படை விசயங்களை வைத்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் ஆட வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் குறைவான சம்பளத்தில் அதிக உழைப்புக்குத் தயாராக இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும். 

இது போன்ற நேர்முகத்தேர்வில் நிச்சயம் ஒன்றைப் பார்க்க முடியும். நிகழ்கால இளைஞர் சமூகத்தின் மொத்த அவலத்தையும் வருகின்றவர்கள் மூலம் கண்டறிய முடியும். கல்லூரி முடித்து வெளியே வந்தவர்கள் தொடங்கி அறுபது வயது வரைக்கும் உள்ளவர்கள் இன்னமும் வேலை தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். 

இப்போது என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகள் நமக்கு முக்கியம்? 

"எங்களைப் போன்ற அனுபவசாலிகள் இந்த உலகத்திற்குத் தேவையில்லையா?" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.

நேர்முகத் தேர்வில் கடைசி நபராக அவர் உள்ளே வந்தார். தோற்றமும், பேச்சும் அவரின் முதிர்ச்சியை உணர்த்தியது. 

அவரின் வயது 51 கடந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால் வார்த்தைகளில் இளைஞனின் வேகம் இருந்தது. அவர் பேசிய ஐந்து நிமிடத்திலும் நான் குறுக்கிடவே இல்லை. அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தேன். 

நிறுவனம் எதிர்பார்த்த திறமைகள் அவரிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதே அளவுக்குக் கோபமும் ஆதங்கமும் கொப்பளித்து. ஒவ்வொரு இடங்களிலும் அவரைப் புறக்கணித்த வலியின் வேதனைகள் அவர் வார்த்தைகளில் சினமாகச் சீறியது. 

நான் எப்போதும் போல "இறுதிகட்ட தேர்வுக்கு உங்களை அழைப்பார்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தேன். 

அடுத்து சில நாட்கள் அவர் பேசிய ஒவ்வொன்றும் என் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஐம்பது வயது என்பது தொழில் உலகத்தில் ஒதுக்கப்பட வேண்டிய வயதா? வாழ்க்கையில் ஒதுங்கியிருக்க வேண்டிய வயதா? இன்னும் இது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. 

காரணம் என் வயதை ஒற்றிய நபர்களின் வாழ்க்கையை அதிகம் கவனித்துக் கொண்டிருப்பதால் ஐம்பது வயது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. 

விவசாயம் சார்ந்த வேலைகளும், அதற்கு உதவக்கூடியதாக இருந்த துணை வேலைகளும் சமூக மாற்றத்தில் காணாமல் போய்விட்டது. மக்கள் தொகை பெருகவில்லை. பிதுங்கி எல்லையைத்தாண்டி வெளியே வந்து விட்டது. கிராமங்களின் முகம் மாறிவிட்டது. மாறாத இடங்களை அரசாங்கமே கூறு போட்டுக் கொள்கை ரீதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கையும் நெல்லிக்காய் போலச் சிதறிக் கிடக்கின்றது. ஏதோவொரு ஊர். ஏதொவொரு இடமென உலகமே சுருங்கிவிட்டது. 

தற்போது ஐம்பது வயதைத் தொட்டவர்கள் பிறந்த போது இருந்த ஜனத்தொகை என்பது அப்படியே இரட்டிப்பாக மாறியுள்ளது. உருவான, உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்பது வேறொரு தளத்திற்குச் சென்று விட்டது. விரும்பிய வாழ்க்கை கிடைக்காதவர்களும், விருப்பமில்லாமலே வாழும் வாழ்க்கையை வாழ்பவர்களும் தான் இங்கே அதிகம். 

ஆட்கள் தேவையில்லை. எந்திரங்கள் போதும் என்ற சூழலில் உருவான தலைகீழ் மாற்றங்கள் சமூக விதிகளையே புரட்டிப் போட்டு விட்டது. இங்குத் தான் வளர்ச்சியும் அதற்குப் பின்னால் உள்ள மனங்களின் வீழ்ச்சியும் தொடங்கியது. 

அரசு வேலைகள், அரசு சார்ந்த வேலைகள், முறைப்படுத்தப்பட்ட பெரிய தனியார்கள் நிறுவனங்கள், இதனைச் சார்ந்து செயல்படும் துணை நிறுவனங்கள் தாண்டி மீதி இருப்பது சிறு, குறு தொழில்கள் மட்டுமே. சுய பொருளாதாரக் காவு கொடுக்கப்பட்டு விட்டது. தன் சுயத்தையே இழந்து சுகமாய் வாழ்வது எப்படி? என்பதே இங்கே முக்கியமாக மாறியுள்ளது. 

இங்கேயிருந்து தான் பிரச்சனை தொடங்குகின்றது. அந்தப் பிரச்சனை விஸ்ரூபமாக எடுத்து நிற்பது அவரவர் ஐம்பது வயதில் தான் தெரியத் தொடங்குகின்றது. 

அரசு சார்ந்த நிறுவனங்களில் அறுபது வயதுக்கு அருகே வந்தவர்களைச் சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கின்றார்கள். அவரவர் சம்பளத்தில் பிடித்து வைத்துள்ள பாக்கித் தொகையைக் கொடுத்து "இனி உன் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொள்" என்பது போன்று வழியனுப்பி வைக்கின்றார்கள். 

ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் கதி? முறைப்படுத்தப்பட்டு இருக்கும் தனியார் நிறுவனங்கள் என்பது வேறு. சிறு, குறு தொழிற்சாலைகளின் நிர்வாக அமைப்பு என்பது வேறு. சக்கை போலப் பிழியப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் குப்பையாக வெளியே எறியப்படுகின்றார்கள். 

இப்படியொரு நிலைதான் ஆயத்த ஆடைத்துறையும். 

ஆயத்த ஆடைத்துறையில் தேவைப்படும் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தேவைப்படும் தகுதியை குறிப்பிட்டு வயதையும் குறிப்பிடும் பழக்கம் உண்டு. அதிக பட்சம் நாற்பது வயதுக்கு மேல் வேண்டாம் என்று குறிப்பிடுவார்கள். சில விதிவிலக்குள் உண்டு. ஆனால் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொது விதிகள் மாறுவதில்லை. இந்த இடத்தில் தான் நான் வாழும் சமூகத்தின் நிகழ்காலப் போக்கின் கொடுமைகளும் கொடூரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒருவரின் இளமைப் பருவம் எப்போது முடிகின்றது? நாற்பதா? ஐம்பதா? ஏதேனும் வரையறை உண்டா? 

வாழும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லோராலும் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை மீறிச் சேமிக்க முடிவதில்லை. அவரவர் அடிப்படை வாழ்க்கை வாழ்விற்கே சம்பாரிக்கும் பணம் சரியாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் சவாலாகவே உள்ளது? தங்கள் ஓய்வு காலத்திற்கெனச் சேமிக்க முடியாத பணப் பிரச்சனைகளின் காரணமாக மீதி காலமும் உழைத்துத் தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முழுமையாக எழுதிப் புரிந்து வைத்து விட முடியாது. அதுவொரு நரக வாழ்க்கையின் தொடக்கம். 

வயதின் காரணமாகத் திறமை இருந்தாலும் மதிப்பு இருக்காது. மதிப்பு இருந்தாலும் ஆரோக்கியம் ஒத்துழைக்காது. 

இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள் துறை சார்ந்த கல்வித்திறமையை வைத்துக் குறிப்பிட்ட சிலருக்குத் தான் தொழில் வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி கிடைத்து ஏற்றப் பாதை தொடங்குகின்றது. படிப்படியாக வளர்கின்றார்கள். தொடர்ந்து திருமணம், சேமிப்பு, விரும்பிய வீடு வசதிகள் அமைகின்றது. குழந்தைகளின் கல்வியும் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற பாதையையும் உருவாக்க முடிகின்றது. வழிகாட்டியாக இருந்து செயல்பட முடிகின்றது. இந்த நிலைக்கு வரும் போதே ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு அருகே வாழ்க்கை வந்து நிற்கும். 

ஆனால் இங்கே எல்லோருக்கும் இந்த வாழ்க்கை அமைவதில்லை. கல்வி வாழ்க்கை முடிந்து அடுத்த ஐந்து வருடங்களில் சரியான பாதை அமையாதவர்களுக்கும், அமைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கும் கடைசி வரைக்கும் நித்தமும் பிரச்சனை தான். எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுவே சமூகத்தில் கேலிப்பார்வையில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. 

ஐம்பது வயதுக்கு அருகே வந்தவர்களும், கடந்து சென்று கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது?அவர்களின் மனநிலை, வாழ்நிலை அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சூழ்நிலைகள் எப்படி உள்ளது? 

தனி மனித வாழ்க்கையில் பொருளாதாரப் பலம் என்பது முக்கியமானது. இதுவே முதன்மையானது. ஆனால் இதிலும் சில ஆச்சரியங்கள் உண்டு. பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டு தன் வாழ்க்கையில் தேடிக் கொண்டு இருப்பவர்களும், தேவையான பணத்தைச் சேர்த்து அதனைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே வாழ்க்கை என்பதாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்க்கும் போது பல கேள்விகள் என்னுள் எழுகின்றது. 

கடந்த சில மாதங்களாகப் பல தளங்களில் இருந்து அவரவர் வாழ்க்கையின் வாயிலாகக் கவனிக்கும் ஆர்வம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என்று தொடங்கி நான் தினந்தோறும் சந்திக்கும் தொழிலாள வர்க்கம் வரைக்கும் பலரையும் பார்த்தேன். பேசினேன். பலவற்றையும் உள்வாங்கிக் கொண்டேன். 

அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சனையில்லாமல் வாழ்பவர்கள் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் வாழும் விதங்களை அலசி ஆராய முடிந்தது. 

உடல்நலம், மனநலம், மாறும் சிந்தனை மாற்றங்கள், ஆரோக்கியம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்த போது சில ஆச்சரியங்களும் பல அதிர்ச்சிகளும் கிடைத்து. குடும்பமும், சுற்றியுள்ள சமூகமும் கொடுக்கும் அழுத்த விதிகள் தற்போதைய சமூகச் சூழலில் எந்த அளவுக்கு ஐம்பது வயதில் இருப்பவர்களைப் பாதிக்கின்றது? அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றது? வாழ்வுக்கும் சாவுக்கும் உண்டான மெல்லிய கோட்டில் அவர்கள் பயணம் செய்யும் வித்தைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகளில் கூட முதியோர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு இருந்த போதிலும் அவர்கள் மன, உடல் ரீதியாக அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்கா. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் கல்லூரி முடித்து வெளியே வந்த பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் செயல்பாட்டிலும் வெளியே தெரியாத இரத்தக் கசிவு கட்டாயம் இருக்கும். 

ஆனால் இந்தியாவில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மனநலம் குன்றியவர்கள் போன்ற வகையில் வரும் அத்தனைபேர்களும் இங்கே எந்நாளும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையைத் தான் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. 

இதனையும் தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் சந்திக்கும் ஐம்பது வயது பிரச்சனைகள் ஏராளம். 

ஐம்பது வயதென்பது வெறும் வயதல்ல. நாம் அதுவரையிலும் சரியான நேரத்தில் எடுக்காத முடிவுகள் தந்த பரிசு. தன் கொள்கைகள் தான் பெரிது என்று தன்மானத்தைக் கடைப்பிடித்த பிடிவாதம் தந்த வெகுமானம் . மனைவி ஒரு பக்கம். வளரும் குழந்தைகள் மறுபக்கம் என அவர்களின் தேவைகள் தரும் அழுத்தம் என்று மொத்தமாக நம்மை மூழ்கடித்து நமக்குள் உருவாகும் ரசாயன மாற்றங்களில் தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. கடைபிடித்த கொள்கைகள் காற்றில் கலந்து விடுகின்றது. காணும் காட்சிகளில் அதுவரையிலும் பார்த்த பார்வைகளின் எண்ணமும் மாறுகின்றது. நாம் விரும்பிய அனைத்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகின்றது. விரும்பாத அனைத்தும் நம் தோளில் வந்து அமர்ந்து விடுகின்றது. 

மொத்தமாக வாழும் சமூகத்தின் சராசரி பிரதிபலிப்பாக நாமும் மாறத் தொடங்குகின்றோம். 

இதுவரையிலும் இந்தச் சமூகத்துடன் எப்படி வாழ்ந்தோம்? என்பதற்கு இந்தச் சமூகம் தரும் கேள்வித்தாளை அப்போது தான் வாசிக்கத் தொடங்குகின்றோம். சிலருக்கு முதியோர் கல்வித்திட்டம் போன்று தோன்றலாம். பலருக்கு முதிர்ந்த ஞானத்திற்குப் பிறகு உருவாகும் வெற்றியின் தொடக்கப் பாதையாகவும் மாறலாம். 

இந்த வயதில் குறைந்தபட்சம் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் அதுவே பெரிய வரமாக இருக்கும். காரணம் அதுவரையிலும் கற்று வைத்திருந்த பழக்கங்கள், விட முடியாத கொள்கைகள், நிராசை கனவுகள் என ஒவ்வொன்றும் பலருக்கும் முகத்தின் வழியாகத் தெரியும். சிலருக்கு அவரவர் உடல் ஆரோக்கியத்தின் வாயிலாகத் தெரியும். 

இந்த வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இது போன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதனை பலவிதங்களில் யோசித்த போது இந்தத் தொடரை எழுத வேண்டும் என்று தோன்றியது. 

ஐம்பது வயதென்பது சாதிக்க முடியாத வயதா? இல்லை வாழ்நாள் ஆசையின் முடிவா? 

தொடர்வோம்............




Thursday, April 19, 2018

ராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.


இவர் சொல்லியுள்ள செய்தி எனக்குப் புதிதாக இருந்தது. நான் இதுவரையிலும் வாசிக்காத, கேள்விப்படாத செய்தியிது. 

பிராமணர்கள் கடல் தாண்டிப் போகக்கூடாது என்பதனை கேட்டுள்ளேன். அது இன்றைய சூழ்நிலையில் நடக்காத காரியம். அமெரிக்காவிற்கு 1950 முதல் 1969 க்குள் முதல் தலைமுறை பிராமணர்கள் செல்லத் துவங்கி விட்டனர். தீட்டு என்பது மறந்து போன சமாச்சாரமாகி விட்டது. 

ஆனால் பிராமணர்கள் அரசியலில் நேரிடையாக ஈடுபடக்கூடாது என்று இவர் சொல்லியது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் அதிகாரம் மிக்கப் பதவிகளில் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் உயர்மட்ட அதிகார கேபினட் அமைச்சராகவும் அநேகம் பேர்கள் உள்ளனர். 

மத்திய, மாநில அமைச்சர்களில் உள்ள படிம நிலையை வைத்தே நம்மால் சிலவற்றைத் தனிப்பட்ட முறையில் யூகித்துக் கொள்ள முடியும். 

ஆனால் அதிகாரவர்க்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னமும் பிராமணர்கள் தான் இருக்கின்றனர். நிச்சயம் அவர்களின் புத்திசாலித்தனம் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் வேறு எவருமே அந்த இடத்திற்கு வரமுடியாத அளவிற்குச் சூட்சமத்தை உருவாக்கியிருப்பதில் தான் இன்று ஒவ்வொன்றும் வெளியே வந்து கொண்டிருக்கின்றது. 

கடந்த 25 வருடங்களில் இவரைப்பற்றி எந்தச் செய்திகளையும் தமிழ் பத்திரிக்கையில் நான் படித்தது இல்லை. ராஜிவ் காந்தி ஃபோபார்ஸ் ஊழல் என்றுப் பத்திரிக்கையில் வந்ததைப் படித்த போதெல்லாம் அதற்குப் பின்னால், அதனை வெளிக் கொண்டுவருவதில் சென்னைத் தமிழர் இருந்துள்ளார் என்பதனை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. துண்டு, துணுக்குச் செய்தியாகத்தான் அதனைக் கடந்து வந்துள்ளேன். 

ஏ1 குற்றவாளி மறைந்த பிறகு உருவான தமிழகக் களேபரங்களின் மூலமாகத்தான் இவரின் அந்தரங்க செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரங்கத்திற்கு வரத் தொடங்கியது. 

ஆனால் நான் இவரைக் கடந்த நாலைந்து வருடங்களாகத்தான் கவனித்து வருகின்றேன். திருப்பூரில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் இவரின் கூட்டம் இங்குள்ள முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் அரசாங்கம் இறுதிக்கட்டத்தில் இருந்து. நாள் தோறும் ஏதோவொரு ஊழல் குறித்த செய்திகள். அதைவிடப் பொருளாதாரச் சிக்கல்கள். அணுவுலை சார்ந்த அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் எதிர்பார்த்த ஒப்பந்தத்திற்கு மன்மோகன் அடிமட்டம் இறங்கி விளையாடி அந்த மசோதாவை வெற்றி பெற வைத்தார். இது போன்ற சமாச்சாரங்கள் குறித்தும், அமெரிக்க டாலர் இந்திய பணத்தில் உருவாக்கும் தாக்கம் குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

படுபயங்கரமான புத்திசாலி என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. தரவுகள், புள்ளிவிவரங்கள், சான்றுகள் என்று நாலாபக்கமும் கலக்கி எடுத்து கூட்டத்தினரை பிரமிக்க வைத்தார். முதலாளிகள் அனைவரும் மன்மோகன் இனியும் இருந்தால் நாடு அவ்வளவுதான் என்கிற அளவுக்கு. 

ஆனால் இவரைப்பற்றி எவ்வித தனிப்பட்ட தகவல்களையும் எங்கேயும் படித்ததில்லை. இப்போது தான் முதல்முறையாக இந்தப் பேச்சின் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

அதுவும் இயக்குநர் மணிரத்னம் எடுத்த குரு படத்தில் வருகின்ற மாதவன் கதாபாத்திரம் இவரை வைத்துத் தான் எடுக்கப்பட்டது என்பதே இதைப் பார்த்தவுடன் தான் யோசிக்க முடிந்தது. 

புத்திசாலிகள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பார்கள் என்பதனை இவரின் வாழ்க்கையைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகின்றது. சமய சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பார்கள். சாதகமான சந்தர்ப்பங்கள் என்றால் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அல்லது மீண்டும் எழ முடியாத அளவுக்குப் பலத்த சேதாரத்தை உருவாக்கியிருப்பார்கள். உதாரணம் சசிகலா.

செயல்படுத்த நினைத்தார். முடித்தார். இனி சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அடுத்த ஐந்தாண்டுகள் கூட நேரிடையான அரசியலில் செயல்பட முடியாது. சோ வாயால் கெட்டார். இவர் வாயாடாமல் வென்றுள்ளார். சோ குறித்துப் பெருமையாகப் பேசும் இவர் சக கூட்டாளியான சுப்ரமணிசாமியை கவனமாகத் தவிர்க்கின்றார். 

இதை எப்படி எடுத்துக் கொள்வது? 

ஒரு இடத்தை அடைவதற்கு அதன் சூட்சமத்தை அறிய எந்த அளவுக்கு இறங்கி உழைக்க வேண்டும். கற்றுக் கொள்ள எதனை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு இவரின் தொடக்கக் கால வேலைகள் மிகச் சரியான சான்றாக உள்ளது. மார்வாடிகள் எப்படி வரி ஏய்ப்பு செய்கின்றார்கள்? என்பதனை கண்டுகொள்ள வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் பாதிச் சம்பளத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றியதில் இருந்து இவரின் ஆடிட்டர் வாழ்க்கை தொடங்குகின்றது. 

இவர் சொல்லும் கணக்குப்படி ஏறக்குறைய 40 வருடங்கள் இந்திய அரசியலின் முக்கியப் புள்ளிகளின் அந்தரங்க நண்பராக இருந்துள்ளார். முக்கியப் புள்ளிகள் அனைவரும் பெரும்புள்ளிகள். இந்தியா என்ற பெரிய தேசத்தின் செயல்பாடுகளைத் தங்கள் செயல்பாடுகள் மூலம் மாற்றக்கூடியவர்கள். இவரோ அவர்களுக்கு முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய இடத்தில் இருந்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா குறித்து ஓரளவுக்குத் தெரியும். ஆனால் அவரின் நட்பு என்பது இவருக்கும், இவரின் புத்திசாலித்தனம் என்பது அவருக்கும் மிகச் சரியாகப் பொருந்திப் போக வீரமும் விவேகமும் உள்ள செயல்பாடுகள் போல அசைக்க முடியாத ரிலையன்ஸ் நிறுவனத்தை அசைத்துப் பார்த்தது.

மிருக மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி ஆட்சியை ஆட்டி வைக்க முடிந்தது. புத்தியை முதலீடாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பெற்ற அனைத்துப் பெருமைகளையும் இவர் பெற்றுள்ளார். அது நம் பார்வையில் மோசமானதாக இருக்கலாம். ஆனால் இவர் ஒரு வெற்றியாளர். 

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் எந்தப் பகுதியில் என்ன வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய தந்திரசாலி. அதனால் தான் காலம் மைலாப்பூர் அறிவுஜீவி என்று அழைக்கின்றது. 

எப்போதும் மற்ற அனைவரும் சொல்வது போல நான் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. நான் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்பதனை இயல்பாகச் சொல்லிச் செல்லும் போதே நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றது. 

சாதாரண மனிதர்களுக்கு அரசியல் என்பதும், அரசியலில் ஒரு பதவி என்பதும் வாழ்நாள் கனவாக இருக்கும். அதுவும் அமைச்சர் போன்ற பதவிகள் பெறுவது என்பது ஜென்ம சாபல்யம். ஆனால் இவரோ மழை, வெயில் என்று பாராமல் அலைந்து திரிந்து கெஞ்சிக் கூத்தாடி கண்டதையும் சொல்லி, தொண்டைத் தண்ணீர் வற்றி, பேசி, ஓட்டு வாங்கிச் சென்ற ஒட்டுமொத்த ஜனநாயக காவலர்களைத் தன் கோட்டுப் பைக்குள் வைத்துக் கொள்ளும் சாணக்கியன். இது தான் இந்தியாவின் மக்களாட்சி. 

தமிழகத்தில் நமக்குத் தெரிந்து இவர் ஒருவர் இருக்கின்றார். இந்தியா முழுக்க இவரைப் போல இன்னும் எத்தனை நூறு பேர்கள் இருப்பார்களோ? 

சாதாரணமாக ஒரு கட்சியில் கிளை, நகரம், ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று மாறி மாறி வருவதற்குள் பாதிப் பேருக்கு நரை கண்டு விடும். ஆனால் இவர் அரசியல் பயணமோ தலைகீழ். மேலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்துள்ளார். எக்காரணம் கொண்டு கீழே வரவில்லை. 

மகாத்மா காந்தியடிகளிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இவரோ காந்தி விரும்பிய வர்ணம் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்கின்றார். குஜராத் கலவரங்களில் இருந்து மோடி வெளியே வரப் பலரும் உதவியுள்ளனர். அதிலும் இவர் பங்களிப்பும் உள்ளது. 

ஒபிஎஸ் ஒரு பக்கம், ஈபிஎஸ் ஒரு பக்கம் என்று இருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள இவர் உதவியை நாடினார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்த சமாச்சாரம். அதற்குப் பின்னால் பல பரிமாற்றங்கள் என்பது அரசல்புரசலாக வெளியே தெரிந்தது. ஆனால் அது போன்ற விசயங்களை இவர் அசால்ட்டாகத் துடைத்துக் கொண்டே போகின்றார். 

இவர் பேசும் பேச்சில் ஒரு இடத்தில் தயக்கம் இல்லை. சால்ஜாப்பு இல்லை. குறிப்பாக இந்த நாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பெரிய கனவின் என் சிறிய உழைப்பின் பங்களிப்பு என்கிற ரீதியில் பேசுகின்றார். 

உலகத்திலே மிகப் பெரிய தானம் நிதானம் என்பார்கள். இவரின் நிதானம் யாருக்குப் பலனாக இருக்கின்றது என்பதனை அவர் வாயால் சொல்கின்றார். 

மாபியா கும்பல் ஆட்சிக்கு வரக்கூடாது. 
சரி 
ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? 

நாம் இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? 

நீ என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ எப்போதும் என் (எங்கள்) கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

வெல்பவர்களின் உலகமிது. காலம் காலமாக வென்றவர்கள் சரித்திரத்தை உருவாக்குகின்றார்கள். சரித்திரத்தின் போக்கையே மாற்றுகின்றார்கள். அதையே காலமும் பதிவு செய்கின்றது. 

பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? 

நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மாறமாட்டீர்கள்? மாற்றத்தை விரும்பாதவர்கள். அது குறித்து உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. வென்றவர்கள் எங்கள் கீழ் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை? 

காலம் நடத்தும் பாடங்களில் இப்போது தமிழகத்தில் ஆடிட்டர் குருமூர்த்திக் கதாநாயகனாக இருக்கின்றார். தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நகைச்சுவை நடிகர்களாக இருப்பது தான் வருத்தமாக உள்ளது.


Saturday, April 14, 2018

மேலும் சில குறிப்புகள் 12

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் குறித்து ஏராளமான விமர்சனங்கள் உண்டு. ஆனால் நான் வாழும் காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறந்த தொழில் முனைவோராக, வென்றவராக அவர்களைப் பார்க்கின்றேன்.

பெருமைப்படுகின்றேன்.

தங்கள் அப்பா செய்து கொடுத்த சிறிய உதவியை வைத்துக் கொண்டு தங்கள் திறமைகளால் உச்சகட்ட புகழை, பொருளை ஈட்டியவர்கள் என்ற முறையில் இவர்கள் மேல் பெரிய மரியாதை உண்டு. அதுவும் வட இந்தியர்களின் லாபி வட்டத்தை அசைத்துப் பார்த்துவர்கள். இன்னமும் சொல்லப் போனால் அலறவிட்டவர்கள். டாடா வுக்கே டாடா காட்டியவர்கள்.

இன்று சித்திரை 1. தமிழ்ப் புத்தாண்டு நாள். இன்றோடு சன்டிவி தொடங்கி 25 ஆண்டுகள் முடியப் போகின்றது.

உங்கள் அனுபவத்தில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமான வளர்ந்ததற்குப் பின்னால் உங்களால் பல காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் நிறுவனத்தை நடத்தியவரின் புத்திசாலித்தனம், சமயோஜிதம், சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டவர்களால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

அப்படித் தாக்குப் பிடித்துக் காரணத்தினால் மட்டுமே இன்று உலகமெங்கும் வாழும் தமிழர்களின் வீட்டுக்குள்ளே வந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடிகாரத்தில் ஓடும் முட்கள் உங்களுக்கு காட்டுவது என்னவோ நிமிடங்கள், நேரங்கள் மட்டுமே.  ஆனால் அது இவர்களுக்கோ ஒவ்வொரு நிமிடமும் லட்சத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருக்கிறது என்றால் இது தானே உண்மையான தொழில். வெளியில் அடிக்கும் வெயில், மழை, புயல் போன்ற எந்தவித இயற்கை சீற்றங்களும் தொழிலை பாதிக்காது.

சொல்லப்போனால் இது போன்ற எந்த மோசமான நிகழ்வுகள் நடந்தாலும் மக்களுக்கு அது துயரத்தின் பாதை.  ஆனால் ஊடகங்களுக்கோ லாபத்தை அதிகப்படுத்தும் பாதை.

சன் டிவி என்பது வெறுமனே வார்த்தையல்ல. தமிழகர்களின் எண்ணத்தை, வாழ்க்கை முறையை, பேச்சு மொழியை, கலாச்சாரத்தை மாற்றிய வார்த்தை.

எது தவறோ அவையெல்லாம் சரி தான் என்று மாற்றப்பட்டது. எது ஆடம்பரம் என்று கருதப்பட்டதோ அவை அவசியம் தேவை என்று தீர்மானமாக கொண்ட வரப்பட்டது. உரையாடலுக்கு உண்டான மொழியை ஏன் கொண்டாட வேண்டும்? என்று தமிழை கொத்துக்கறியாக்கப்பட்டது. மொத்ததில் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பதில் தொடங்கி மனிதர்களை தனித் தீவாக மாற்றியதில் வெற்றி கண்டது.  ஒவ்வொரு வெற்றியிலும் நிறுவனம் வளர்ந்தது.  தமிழர்களின் எண்ணங்களில் மாறுதல் உருவாகி மாற்றமே முன்னேற்றம் என்கிற ரீதியில் ஒவ்வொன்றும் பார்க்கப்பட்டது.

ஒரு நிறுவனம் பல நிறுவனமாக மாறியது.  கிளைகளாகப் பிரிந்தது, மேலும் வளர்ந்து இன்று தமிழர்களின் மனக்கவலையைத் தீர்த்து எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கின்றது.  உங்களுக்கு சுய சிந்தனை எதற்கு? எங்களிடம் இருக்கும் விதவிதமான காட்சிகள். கண்டு களியுங்கள். கவலைகளை மறந்து விடுங்கள் என்ற கொள்கையினால் தமிழினமே இன்று பலவிதங்களில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தொடக்கத்தில் சென்னையில் இருந்து ஒளிபரப்ப எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டார்கள் என்பதும், சென்னைக்கும் பிலிப்பைன்ஸ்க்கும் எப்படி அலைந்தார்கள்? என்பதெல்லாம் கடந்த கால வரலாற்றுச் சுவடுகள். இதுவே மாறி தமக்கு வேண்டிய ஒரு ட்ரான்ஸ்பான்டருக்காக எங்கே எப்படி எவரிடமிருந்து எதன் மூலம் பெற்றார்கள் என்பதனை எல்லாம் நீங்கள் கவனித்து இருந்தால் போர் என்பது தொழில். தொழில் என்பது போர்க்களம் என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

வெற்றி பெற முடியாதவர்களின் தேசிய கீதம் புலம்பல் மட்டுமே. அறம் என்பது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகது. அது தேவையும் இல்லை என்பதன் முன்னோடிகளாக இவர்களை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து பண்பலை வானொலியில் நுழைந்து, அதிலும் வளர்ந்து, மாநிலம் விட்டு மாநிலம் சென்று என்று இன்று இந்தியாவெங்கும் மிகப் பெரிய ஊடக சம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். தொட்டதெல்லாம் ஹிட் என்பார்கள். இவர்கள் தொடங்கிய அனைத்தும் வருமானத்தை அள்ளிக் கொண்டு வந்து கொட்டியது. அதே சமயத்தில் மானம் கப்பலேற்றிப் பறந்தது.

அதைப் பற்றி யார் பேசுவார்கள்? ஊடக பலம் என்பது நீங்களும் நானும் நினைப்பதற்கு அப்பாற்பட்டது. ஒரு மணி நேரத்தில் இருப்பதை இல்லை என்று காட்ட முடியும். இல்லை என்பதனை இருப்பதாகக் காட்ட முடியும். கடந்த காலத்தில் செய்து காட்டியுள்ளார்கள். உங்கள் நினைவடுக்கில் இருந்து தேடிப் பாருங்கள்.

ஒரு மாதம் சன்டிவி நிறுவன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்து வந்தீர்களேயானால் இவர்களின் திட்டங்கள், கொள்கைகள் என்னவென்பதை உங்களால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்?

உனக்கு என்ன தேவை? எப்போது தேவை? அது எங்களுக்குத் தெரியும்? நான் கொடுப்பதை வாங்கிக் கொள்? என்பதாக இருக்கும்.

ஒவ்வொரு நிகழ்விலும் கொள்கைகள் உனக்குச் சோறு போடாது என்பதனை திரும்பத் திரும்ப வலியுறுத்துவதாக இருக்கும்.

கொள்கைள், உறவுகளை எந்த இடத்தில் எப்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை கடந்த 25 வருட கால கட்டத்தில் தமிழகத்திற்கு, வளரும் தலைமுறையினருக்கும் கற்றுத் தந்தவர்களின் முக்கியமானவர்கள் இவர்கள்.

காரணம் முதல் முதலாகச் சன்டிவி எப்படித் தொடங்கப்பட்டது. எந்த நிதியில் இருந்து தொடங்கினார்கள்? எந்த வங்கி உதவியது? எந்தப் பணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவினார்கள்? இப்போது திமுகவில் இருக்கும், கடந்த காலத்தில் இருந்த எத்தனைப் பெருந்தலைகள் சன்டிவி யின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு.

வரலாற்றின் மேலே இருப்பவர்களின் முகம் மட்டுமே தெரியும். அந்த வரலாற்றை உருவாக்கியவர்களின் உருவங்கள் அனைத்தும் அஸ்திவாரத்திற்குள் சென்று விடும்.

சுப. வீரபாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசும் போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் புராண இதிகாச தொடர்களைப் பற்றிப் பேசி விட்டு மிகவும் வருத்தத்துடன் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

பெரியார் தனது கொள்கைகளைத் தமிழகத்தில் பேசிய போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. 90 சதவிகித தமிழர்கள் நம்பும் விசயங்களுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து தைரியமாகப் பொதுக்கூட்டம், தனது எழுத்தின் வாயிலாகப் பலமான பிரச்சாரத்தின் வாயிலாகச் செய்து கொண்டிருந்தார். அன்றைய சூழலில் அது எரிமலையின் மேல் நின்று கொண்டு செயல்படுவது போல. ஆனால் சாதித்துக் காட்டி மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கினார். தொடர்ந்து அறிஞர் பெரியார் கொள்கைகளில் கொஞ்சம் பாலிஷ் தடவினார். கலைஞர் தேவைப்படும் போது தேவைப்படுவதை எடுத்துக் கொண்டு என் கடன் என்பது என் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதே என்று முன்னேறிக் கொண்டிருந்தார்.

ஆனால் இவர்கள் களப்போராளிகள். சரியோ தவறோ தமிழகத்தில் மிகப் பெரும் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தார்கள். ஆனால் இவர்களின் வழித்தோன்றலில் வந்து, இந்தக் கொள்கைகளை முன்னெடுக்காவிட்டாலும், நீர்த்துப் போகச் செய்ததில் சன்டிவியின் பங்கு மிக முக்கியமானது.

சன் கொள்கைகள் மிகத் தெளிவானது.

சந்தையில் நிற்பது என்பது மிக முக்கியம். அதன் மூலம் நிறுவனத்திற்கு வரவேண்டிய லாபம் என்பது அதனை விட மிக மிக முக்கியம். அதன் அடிப்படையில் எவரும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதில் அன்று முதல் இன்று வரையிலும் உறுதியாக இருப்பதற்காக இவர்களை நான் எப்போதும் பாராட்டுவேன்.

அம்பானி எதிரிகளை அழிக்கத் தரைமட்டத்திற்கு இறங்கி விளையாடும் போது அது தொழில் திறமை என்கிறோம். ஆனால் தன்னைத் தவிர வேறு எவரும் இங்கே தொழில் செய்து விடக்கூடாது என்ற கொள்கை கொண்ட இவர்களின் கடந்த செயல்பாடுகளை விமர்சனமாகப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
தொழில், அரசியல் என்ற இரண்டிலும் அழித்து முடித்தால் வளர்ச்சி கிடைக்கும் என்பதனை உணர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் இவர்கள்.

ஆனால் காலம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

இன்று வரையிலும் ராஜ் டிவி மூச்சை பிடித்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதே எனக்கு இன்றளவும் ஆச்சரியமாக உள்ளது. ஆட்சி மாற்றம் நிகழாதபட்சத்தில் புதிய தலைமுறை என்ற புதிய நிறுவனம் வந்து இருக்குமா? என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி? பா.ஜ.க வந்தது யாருக்கு லாபமோ நட்டமோ? ஆனால் தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளைப் புத்திசாலி தமிழர்கள் பார்த்து இருக்க வாய்ப்பு அமைந்திருக்காது?

வந்தவன், போனவன், நின்றவன், உட்கார்ந்தவன் என்று கண்டமேனிக்கு பத்துக்குப் பத்து அறை கிடைத்தால் போதும் என்று கட்சிக்கு ஒன்று ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி விட்டார்கள்.

ஆனாலும் இன்று வரையிலும் சன் டிவி யை எவராலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. காரணம் தமிழர்களை மிக நன்றாகப் புரிந்தவர் என்ற நிலையில் கலைஞருக்கு அடுத்த நிலையில் மாறன் சகோதரர்கள் தான் எனக்குச் சரியாகத் தெரிகின்றார்கள்.

இன்று சன் டிவி பத்து நாட்கள் தொடர்ந்து ஒலிபரப்புத் தடை செய்து விட்டால் தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் வாழும் இல்லத்தரசிகள் பைத்தியம் பிடித்து விடும் அளவிற்கு எட்டரைக் கோடி தமிழர்களின் இதயச் சிம்மாசனத்தில் வீற்று இருக்கின்றது.

இது தானே உண்மையான வெற்றி?

கடந்த காலத்தில் உருவான பல பிரச்சனைகளின் காரணமாகச் சன் நிறுவனப் பங்குகள் அதலபாதாளத்திற்குக் கீழே வந்தது. ஆனால் அசரவில்லையே? அடுத்தடுத்துத் தோல்விகள், அவமானங்கள், வழக்குகள். யாரையும் குறை சொல்லவில்லை. எவரையும் அழைக்கவில்லை. புலம்ப வில்லையே? தங்கள் மேல் உள்ள வழக்குகளுக்காகக் கடந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை பேர்களைப் பார்த்து இருப்பார்கள்? எத்தனை லாபி வட்டத்தை விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள்? எத்தனை ஆயிரம் கோடிகளை வாரி இறைத்திருப்பார்கள்? இன்று வென்று விட்டார்கள்.

அப்புறம் என்ன? சத்தியம் வென்றது.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் திமுக இன்று படக்கூடிய அவமானம், பட்ட அவமானம் என அனைத்துக்கும் காரணம் காங்கிரஸ். அதிலும் குறிப்பாக ப. சி அவர்களின் தில்லாலங்கடிக் காரியங்கள். ஆனால் திமுக வில் உள்ள பெரிய தலைகளால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. ஆப்புக்குள் வாலை விட்ட குரங்கு போல.

இன்று திகார் ல் எடை குறைப்பு உடற்பயிற்சி யில் ஈடுபட்டு, போராடி வெளியே வந்துள்ள கார்த்திச் சிதம்பரத்தைப் பார்த்து முக்கியமாக மகிழ்ச்சியடைந்தவர்கள் மாறன் சகோதர்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்து கனிமொழி, ராஜாவாக இருக்க முடியும். இணையத்தில் தீவிரமாகத் திமுக விற்குக் களமாடும் நண்பர்களின் மனசாட்சிக்குத் தெரியும்.

சன் குழுமத்தின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள்.எளிமையாகச் சொல்லப்போனால் கொள்கை என்பது கூட்டத்தில் மட்டுமே பேசுவது.  அது நிறுவனத்திற்கு பொருந்தாது என்பதாக இருக்கும்.  அப்படி இருந்த காரணத்தினால் மட்டுமே திமுக தேய்ந்தது.  திமுக வினால் வளர்ந்த இவர்கள் வெற்றிக் கொடியை நாட்ட முடிந்துள்ளது.

காங்கிரஸ் பற்றி மாறன் சகோதரர்கள் மட்டுமல்ல, திமுக வில் உள்ள எவரும் பேச முடியாது. பேசவும் கூடாது. இது தான் காங்கிரஸ் ன் செக் பாயிண்ட். நீ என்னை விட்டு விலகவும் முடியாது. நான் உன்னை விட்டுப் பிரியவும் மாட்டேன். இது தேசிய கட்சியான காங்கிரஸ் ன் கொள்கை.

ஆமாம் அவர்களுக்கும் திமுக வில் நடந்த பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்டால் நீங்களும் என்னைப் போல வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் பட்டியலில் உள்ளவர் என்பதனையாவது புரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயமாகச் சொல்வேன் தமிழர்களுக்கு மிகச் சரியான ஆட்சியைத் தர முடியும் என்றால் திமுக வில் என் ஆதரவு தயாநிதி மாறன் அவர்களை மட்டுமே சொல்வேன். கலைஞர் போல ஆயிரம் கலைஞர். காரணம் கலைஞரின் மனசாட்சியின் மகன் அல்லவா?

இந்தக் காணொலிப் பேட்டியில் தயாநிதி மாறன் நான் எப்போது கட்சியில் அடிமட்ட தொண்டனாகவே எப்போதும் இருக்க விரும்புகின்றேன் என்றார். ஆனால் ஸ்டாலின் போன்றோர் அவரைத் தொந்தரவு செய்து கொண்டேயிருப்பது தான் எனக்கு மிகப் பெரிய வருத்தமாக உள்ளது.

இன்று வென்றுள்ளார். வென்றவர்களுக்கான உலகமிது. என் வாழ்த்துகள்.

Tuesday, April 10, 2018

கழகம் என்பது வியாபாரத்தின் தொடர்ச்சி......



மேலும் சில குறிப்புகள் 13 

1995 வாக்கில் தனி ஆளாக வாழ்ந்த போது வைத்திருந்த டேப் ரிக்கார்டில் அரசியல் , இலக்கிய மேடைப் பேச்சுக்களை எப்போதும் கேட்பதுண்டு. அதில் கலைஞரின் இலக்கியப் பேச்சுகளையும் அதிகம் கேட்பதுண்டு. 

என் அறைக்குள் மற்றொருவர் மூலம் அறிமுகமான ஒருவர் எதிர்பாராதவிதமாக வந்த போது கண்களை மூடிக் கொண்டு கலைஞர் பேசிய பேச்சை அந்த மதிய வேளையில் கேட்டுக் கொண்டிருந்தேன். 

அவர் உடனே நீங்க திமுக வா? என்றார். இல்லை என்றேன். அப்புறம் கலைஞரின் பேச்சை இத்தனை ஆர்வமாகக் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? என்றார். ஏன் அவர் இலக்கியத் திறமையை நாம் எடுத்துக் கொள்ளலாமே? என்றேன். ஆனால் நான் பேசிய நபர் கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர். மதுரையில் முரசொலி தொடங்கிய போது முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. 

சென்னையில் தொடக்கத்தில் தீரா விளையாட்டுப் பிள்ளையாக இருந்த அழகிரியை ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும். குறிப்பாகச் சென்னையில் வைத்திருக்கக்கூடாது என்பதற்காக மதுரைப் பக்கம் அனுப்பி வைக்க என்னுடன் பேசியவரும் அழகிரிக்குத் துணையாக இருந்தார். ஆனால் சில மாதங்களில் முரண்பாடுகள் முட்டி முளைக்க இவர் வெளியே வந்து விட்டார். இன்று வரையிலும் அவர் தொடர்பில் இருக்கின்றார். எப்போதும் கலைஞர் குறித்து அவர் பேசும் போது அவரின் நிறை குறைகளைப் பற்றி மற்ற எல்லோரும் போலப் பேசிவிட்டுக் கலைஞர் தினந்தோறும் கல்யாண மாப்பிளை போலவே வாழ விரும்புபவர் என்பார். 

அதன் அர்த்தம் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவரே நடுநாயகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பில் இருப்பார். அதற்குக் கடந்த கால வரலாற்றில் பல உதாரணங்களைச் சொன்னார். ஏன் சொந்த மகனுக்குக்கூடப் பதவியை விட்டுத் தரமாட்டேன் என்கிறார்? என்று போகிற போக்கில் பலரும் கேட்டுவிட்டுச் செல்கின்றனர். 

ஆனால் இந்த இடத்தை அடைவதற்கு, இந்தப் பதவியைப் பெறுவதற்கு, இந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் உழைத்த உழைப்பு, அவர் செய்த வேலைகள் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர் குடும்பத்தில் ஒருவர் கூட ஐந்து சதவிகிதம் என்கிற நிலைக்குக்கூட வரமாட்டார்கள். 

இன்று ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கும் தஞ்சாவூர் மாவட்ட நடைபயணத்தில் பின்னால் ஒரு வசதி மிகுந்த டெம்போ ட்ராவலர் வாகனம் ஒன்று வந்து கொண்டிருக்கின்றது. சிறிது நேரம் நடைக்கு மூச்சி வாங்கி ஓய்வு எடுத்து நடக்கும் நாடகங்கள் போலக் கலைஞர் களப்பணியில் எவரும் குறையே கண்டுபிடிக்க முடியாது. 

உதயசூரியன் என்ற சின்னம் கட்சிக்கு எந்த அளவு பொருத்தமோ அந்த அளவுக்குக் கலைஞரின் உழைப்புக்கு சரியான உதாரணம் சூரியன். ஆனால் சூரியன் காலையில் வருவதற்கு முன்பே எழுந்து விடும் கலைஞர் சூரியன் மறைந்து நள்ளிரவு வரைக்கும் 90 வயது வரைக்கும் உழைத்த தமிழகத்தின் ஆச்சரிய மனிதர். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உழைப்பு என்றுமே மாறியதே இல்லை. தனது உழைப்பின் மூலமே தனது இடத்தை அடைந்தவர். அதன் மூலமே ஒவ்வொரு காலகட்டத்திலும் தக்க வைத்துக் கொண்டவர். சம்காலத்து இளைஞர்கள் அவரை முன் உதாரண மனிதராக எடுத்துக் கொள்ள முடியும். 

நிர்வாகத் திறமையும், சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் பாணியும் தமிழகத்தில் வேறு எவருக்கும் அமையாத திறமையது. தமிழகத்தில் வாழ்ந்த தலைவர்களில் கலைஞரின் மூளையில் உள்ள நியூரான்களுக்கு மட்டும் இயற்கை புதுவித பரிணாம வளர்ச்சி கொண்டதாக அமைந்துருக்குமோ என்று நான் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் உருவான எதிரிகளும், உருவாக்கிக் கொண்ட எதிரிகளுடனும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட வித்தகர். 

மேடைப் பேச்சில் தன்னிகரற்று விளங்குபவர்கள் எழுத்துக்கலையில் சிறப்பாக இருந்தது இல்லை. அதே போல எழுத்துக்கலையில் விற்பனராக இருப்பவர்கள் மேடைப் பேச்சில் வென்றது இல்லை. ஆனால் தமிழகத்தில் இந்த இரண்டு திறமைகளில் முதல் இடத்தில் இருந்தவர் கலைஞர். 
உடல் ஆரோக்கியம் நலிவுற்றுப் போகும் வரைக்கும் தன்னை நிரூபித்துக் கொண்டேயிருந்தவர் கலைஞர்.

 எல்லோரும் தான் எழுதுகின்றார்கள்? ஆனால் வார்த்தைகள் நர்த்தனமாடும். காவியம் படைக்கும். பல சமயத்தில் கலவரத்தையும் உருவாக்கும். மொத்தமாகத் திருப்பி மாற்றிவிடும் வல்லமை கொண்ட அவரது பேச்சும் எழுத்தும் ஆச்சரியமானதே. 

அதிகப்படியான நபர்கள் தமிழகத்தில் இன்று வரையிலும் பேசிக் கொண்டே தான் இருக்கின்றார்கள். ஆனால் புராண இதிகாசமாகட்டும், தமிழ் இலக்கியமாகட்டும், கடந்த கால இந்திய தமிழக அரசியல் களமாக இருக்கட்டும். சுடச்சுட வந்து விழுந்து கொண்டேயிருக்கும். இந்த விசயத்தில் என் பார்வையில் அறிஞர் அண்ணாவை மிஞ்சக்கூடிய திறமை படைத்தவர் கலைஞர். 

அறிஞர் அண்ணா இவரின் உழைப்பைப் பார்த்து வாய்ப்பு வழங்கினார். முழுமையாக ஆதரித்தார் என்று கூடச் சொல்ல முடியாது. காரணம் இவருடன் நாலைந்து பேர்கள் போட்டியில் இருந்தனர். தன்னைத் தானே தனக்கான தேவைக்காக உருவாக்கிக் கொண்டார். முன்னேறிக் கொண்டேயிருந்தார். வீழ்ச்சிகள் அவரை நோக்கி வந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர் விழவே இல்லை என்பது தான் அவர் வாழ்க்கையில் மொத்த தத்துவம். 

ஆனால் இந்தத் திறமை முழுக்க அப்பட்டமாகத் தமிழக நலனுக்காக மட்டுமே இருந்ததா? என்ற கேள்விக்குப் பின்னால் வரக்கூடிய சமாச்சாரங்கள் தான் இன்று வரையிலும் பல கேள்விகளும் , கேலியாகவும் பார்க்கப்படுகின்றது. இதற்கும் அவரே பதில் அளித்துள்ளார். 

குளத்தில் வாழும் மீன்கள் அதில் உள்ள அழுக்கைத் தின்று வாழ்ந்தால் உயிர் பிழைத்திருக்க முடியும். 

சில தினங்களுக்கு முன் கூட முரசொலி பத்திரிக்கையைக் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த படத்தைப் பார்த்த போது அவரின் பாதி வயதில் உடம்பு படுத்தும் பாடுகளை உணர்ந்தவன் என்ற முறையில் வியப்பாகவே உள்ளது. கையில் காசு இல்லாத போது சிறுவனாக இருந்த போதே கையெழுத்துப் பிரதி நடத்தியவர். முரசொலி என்ற பத்திரிக்கையின் வாயிலாக தமிழ்நாடு முழுக்க அனல் வார்த்தைகளை கொண்டு சேர்ந்தவர்.  இன்று கலைஞர் குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள ஊடக பலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த ஊடகங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றது? என்பதனை கவனித்துப் பார்த்ததால் மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்?  இதனால் தான் எப்போதும் திமுக வை ஒரு வழிப்பாதை என்கிறார்கள். எதுவும் உள்ளே மட்டும் போக முடியும்.   அது திரும்பி வருமா? என்று தெரியாது. வந்தவர்கள் சமர்த்தியசாலிகள் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

அரசியல் கூட்டமாக இருந்தாலும், இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் கலைஞர் மேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடனும் பேசமாட்டார். ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஒவ்வொரு பேச்சாளரின் பேச்சுக்களை, அதற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும் பட்சத்தில் சிறிய குறிப்பாக எழுதி வைத்துக் கொண்டே வருவார். தன் பேச்சில் மொத்தமாக ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து அப்ளாஸ் அள்ளுவார். கல்யாண மாப்பிளையின் குணம் என்பது இது தான். தான், தனக்கு, தன்னுடைய, தனக்காக, தன்னால் போன்ற வார்த்தைகளுக்கு முழுமையான சொந்தக்காரர் கலைஞர். 

ஆனால் ஈரோட்டு மாநாட்டில் மேடையில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் விருந்து சாப்பிடவந்தவர்கள் போலப் பரஸ்பரம் பேசி சிரித்துக் கொண்டு அவரவர் முறை வந்த போது கொடுத்த தலைப்பில் பேசி விட்டு நகர்ந்து விட்டனர். எப்போதும் மாநாட்டுப் பந்தலில் பின்புறம் தொண்டர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த காட்சியையும் கண்டேன். 

நீதிக்கட்சி தொடங்கியது முதல் அண்ணா மறைவு (1969) வரைக்கும் ஏறக்குறைய முந்தைய 50 ஆண்டுகள் உள்ள வரலாற்றை முழுமையாகத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் பத்தாயிரம் பேர்கள் கூட இருக்கமாட்டார்கள். திமுகவில் ஆயிரம் பேர்கள் இருப்பார்களா? என்பதே சந்தேகம். ஆனால் பேசிய ஒவ்வொருவரும் பொளந்து கட்டினார்கள். 

யாருக்காகப் பேசினார்கள்? 

கலைஞர் ஆட்சிக்கு வந்து எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தது வரைக்கும் உள்ள நிகழ்வுகள் கூடச் சமகாலத்தில் உள்ள உடன்பிறப்புகளுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதே சந்தேகம் தான். 

காரணம் அன்று அரசியலில் கொள்கை இருந்தது. ஊழல் வெளியே தெரியாத அளவிற்கு இருந்தது. இன்று ஊழல் மட்டுமே வெளியே தெரிவதால் கொள்கை என்பது காணாமல் போய்விட்டது. திமுக மட்டுமல்ல, சின்னக் கட்சிகளில் கூடத் தொண்டர் படையினர் உரையாடல் எந்த அளவுக்கு உள்ளது? 

டேய் அண்ணன் காலேஜ் இரண்டு வச்சுருக்காரு? ஸ்கூல் நான்கு இடத்தில் வச்சுருக்காரு? 

சென்னையில் இவர் தான் பெரிய பில்டர்? பத்து இடத்தில் வேலை நடந்துக்கிட்டுருக்கு? 

மணல் காண்ட்ராக்ட் அவர்கள் பெயரில் இருந்தாலும் அண்ணனுக்க வர வேண்டியது சரியா மாசமான வந்துடும்? 

ஏழு கிரஷர் ஓடிக்கிட்டுருக்கு? ரோடு காண்ட்ராக்ட் எல்லாம் சிக்கல் வேண்டாம் என்று அண்ணன் சம்மந்தி பேரில் பார்த்துக்கிட்டுருக்காரு? 

ஆக மொத்தத்தில் பெரியாரின் கொள்கை என்பது அண்ணாவிற்கு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. 

அண்ணாவின் கொள்கை என்பது கலைஞருக்கு அதனை ஓரளவிற்குப் பரவலாக்க உதவியது. 

ஆனால் கலைஞரின் கொள்கை என்பது ஸ்டாலின் என்ன செய்யப் போகின்றார் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர் குடும்பம் சென்னையில் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்க வேண்டும். 

இன்று தமிழ்நாடே கொந்தளித்துக் கலவரமான சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என்று ஆளாளுக்குப் பேட்டி, எதிர்ப்பு மூலம் விளாசித்தள்ளிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஸ்டாலின் மௌனமாக இருப்பதன் மூலாதாரத்தைக் கொண்டு நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை விட, தொண்டர்களை விட மருமகன்களின் வியாபாரம் ரொம்பவே முக்கியம்.  அதில் உள்ள பங்கு என்பது கடைசியில் பங்காளிச் சண்டையாக மாறிவிடக்கூடாது அல்லவா?

கலைஞர் தன் அரசியல்வாழ்க்கையில் பலரையும் நம்பினார். நம்பி கை வைத்தார். ஆனால் ஒவ்வொருவரும் கை யை பதம் பார்த்த காரணத்தால் கடைசியில் குடும்பத்தையே நம்பிக்கையாக மாற்றினார். 

தவறில்லை. 

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் வருமானத்திற்குரிய விசயங்களில் உள்ள கவனத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுவதால் இன்று வரையிலும் திமுகத் தன் பழைய பெயரை மீண்டும் கொண்டு வரமுடியவில்லை.

இதைச் சுட்டிக் காட்டினால் தான் காவி அரசியல், அடிமை அரசியலுக்கு வக்கலாத்து வாங்குகிறாயா? என்ற நல்ல பெயர் கிடைக்கின்றது. இது தான் எங்கள் கொள்கை என்று முரசறிவித்து களத்தில் இறங்கியது திமுக.  ஆனால் அன்று முதல் அதிமுக எங்கள் கொள்கை என்று எதனையும் அறிவிக்கவே இல்லை.  காரணம் கொள்கை என்பது தேவையில்லை என்பதாக உருவான கட்சி அதிமுக.  கொள்கை இருக்கிறது? என்றாயே? என்பவர்களிடம் தான் விவாதிக்க முடியும்.  எதுவும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?  அது தான் காலம் நமக்கு ஏ1 குற்றவாளியைத் தந்தது.

சுயமாக தன் உழைப்பில் சம்பாரித்து தொடக்கத்தில் ஸ்னூக்கர் கிளப் தொடங்கி தமிழ் கூறும் நல் உலகத்திறக்கு சேவை செய்து, திடீரென்று படத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த உதயநிதி இன்றைய சூழலில் தமிழகத்தில் ஓரளவுக்குத் தெரிந்த நடிகராக மாறியுள்ளார்.

ஸ்டாலின் மகன் இத்தனை படங்கள் எடுத்தாலும், நடித்தாலும் திமுக வில் கொள்கைகள், கட்சி, பேனர், சின்னங்கள் எதுவும் படங்களில் வராது. காரணம் கட்சியால் நாம் வளர வேண்டும். ஆனால் நம்மால் கட்சி ஒரு துளியும் வளர்ந்து விடக்கூடாது. அதற்கென்று ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் வாழ் நாள் முழுக்க இதற்காகவே வாழப் பிறந்தவர்கள் என்று அர்த்தமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  காரணம் தொழில் என்பது வேறு. கொள்கை என்பது வேறு.  இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.

தவறில்லை. 

மாற்றங்கள் பலவற்றை நம்மிடம் கொண்டு வந்து கொண்டே தான் இருக்கும். 

எம்.ஜி.ஆரை கூத்தாடி என்று இன்று வரையிலும் அழைப்பவர்கள் அவர் திமுகவின் சின்னத்தையும், கொள்கைகளையும், அண்ணாவின் முகத்தையும் தமிழக மக்களிடம் தன் படங்கள் மூலம் கொண்டு சேர்த்து இருக்காவிட்டால் கலைஞர் இன்னமும் கூடக் கூடுதலாக உழைத்திருக்க வேண்டியதாக இருக்குமே? 

ஆனால் இதைப் பற்றியெல்லாம் ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது. 

அவருக்குப் பேச்சுக்கலை இயல்பாகத்தான் வருகின்றது. ஆனால் அதனை அவரே கெடுத்துக் கொள்கின்றார். பேச்சுக்கலை இனி எழுதுவது போலப் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அதற்கு முயன்று அவர் சிக்கிக் கொள்கின்றார். அவரால் ஆங்கிலம் பேச முடியாது என்று தெரிந்தால் அந்தப் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. இலக்கியத்தில் பரிட்சயம் இல்லை. உலக நிகழ்வுகளை வைத்து உதாரணம் காட்டி கை தட்டல் வாங்க வேண்டிய அவசியமில்லை. 

காரணம் வந்து உட்கார்ந்தவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. வைகோ பேசிய கிரேக்க கதை எல்லாமே இன்று வரையிலும் கிண்டலாகத்தான் பேசப்படுகின்றது. ஏன் ஸ்டாலின் கவலைப்பட வேண்டும்? கலைஞர் மகன் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது. கட்சியில் தனிக்காட்டு ராசா என்று இந்த மாநாடு நிரூபித்து விட்டது. உள்ளே இருப்பவர்கள் இனி தன்னைச் சார்ந்து தான் செயல்பட்டுஆக வேண்டிய நிலையை உருவாக்கியாகி விட்டது. இனி ஏன் கவலை? 

பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தயக்கத்துடன் பேசுகின்றார். நேற்று வந்த டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களைக் கதற அடிக்கின்றார். எல்லாப் பந்துகளையும் சிக்ஸராக விளாசுகின்றார். அவர் அனுபவம் என்ன? ஸ்டாலின் அனுபவம் என்ன? காரணம் நமக்கு என்ன முடியுமோ? அதைத்தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் போல நாமும் செய்ய வேண்டும் என்றால் அது கழைக்கூத்தாடி வாழ்க்கை போலவே அமைந்து விடும். அப்படித்தான் ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை அமைந்ததுள்ளது. 

இந்தச் சமயத்தில் உதயநிதி வேறு உள்ளே வந்துள்ளார். 

இவர் படித்து, கற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. காரணம் கட்சியை விடக் கட்சிக்குள் இருக்கும் சொத்துக்கள் முக்கியம் என்ற நிலையில் இருக்கும் போது அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசிய அவசரம் இருப்பதால் உதயநிதியும் கட்சியில் இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லாம். 

பேச்சின் மூலம் தன் இடத்தை அடைந்தார் கலைஞர். பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் ஸ்டாலின். 

இவர்கள் இருவருக்கும் இல்லாத வியாபாரம் என்றால் லாபம். லாபம் தரக்கூடிய விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதனை கற்றுக்கொண்ட அடுத்தத் தலைமுறை உதயநிதி களத்தில் இறங்கியுள்ளார். 

அப்படியென்றால் திமுகவின் கொள்கை? 

இருப்பவனுக்கு வாய்ப்பு. இல்லாதவனுக்கு? 

கலைஞர் ன் கடைசி ஆட்சி காலத்தில் அவருக்குத் தினந்தோறும் பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது.இந்த விழாக்கள் தான் அவரை செய்ய வேண்டிய நிர்வாகத்தில் இருந்து விலக்கி இருக்க வைத்து கடைசியில் கழிசடையை அரியணை ஏற காரணமாக இருந்தது.

இந்த விழாவைப் பார்த்து விட்டு நாம் பிழைப்பைப் பார்க்கலாம். 

புள்ள குட்டிகளைப் படிக்க வைக்கனுமே?


Saturday, April 07, 2018

மேலும் சில குறிப்புகள் 11




வைகோ அவர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய காணொலித் தொகுப்பை கண்ட போது பல நினைவுகள் வந்து போனது. 

வைகோ இன்றைய சூழலில் ஸ்டாலினை முதல்வர் ஆக்காமல் ஓய மாட்டேன் என்று சூளுரை செய்த போதிலும் அவர் மேல் நம்பிக்கை வைக்கத்தான் எவரும் தயாராக இல்லை. அடுத்து என்ன செய்வார்? என்ன பேசுவார்? எங்கே செல்வார்? என்பதனை அவர் அருகில் இருப்பவர்களே யூகிக்க முடியுமா? என்பது ஆச்சரியமே. 

அதிர்ஷ்டம் என்ற வார்த்தை சிலருக்குத் தான் அவர்கள் வாழ்க்கையில் பொருந்திப் போய்விடுகின்றது. சிலருக்குப் போராட்டமே வாழ்நாள் முழுக்க அமைந்துவிடுகின்றது. 

தமிழக அரசியல் களத்தில் வைகோ போல வேறு எவரேனும் உழைத்தவர் வேறு எவரேனும் இருப்பார்களா? என்று தெரியவில்லை. நடைபயணங்கள், களப்பணிகள், சூறாவளி சுற்றுப்பயணங்கள், கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்தும் செயல்படுத்திக் காட்டிய போதிலும் அவரால் நடிகர் விஜயகாந்த் போலக்கூடக் கடந்த 25 வருட அரசியல்வாழ்க்கை ஓட்டரசியலில் வெல்ல முடியவில்லை. தமிழக அரசியலில் அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவே உள்ளது. 

என்னைப் போல வைகோ வை விரும்பியவர்கள் பலரும் உள்ளனர். கலைஞர் போல எழுத்தாற்றல், பேச்சாற்றல் அத்துடன் கலைஞருக்கு இல்லாத ஆங்கில மொழிப் புலமை, மற்றும் கலைஞருக்கு அமையாத தேசிய அரசியல் தொடர்புகள் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்புகள் என அனைத்தும் இருந்தும் வைகோ அவர்களால் தமிழக அரசியலில் வெல்ல முடியவில்லை. 

அவருக்கு எல்லாமே கடைசி வரையில் தொடர்புகளாகவே இருந்தது. சரியான சமயத்தில் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றார்கள். காரணம் அவர் வாங்கி வந்த வரமிது. 

தேசிய அரசியலை தனக்குத் சாதகமான நிலையில் எப்போதும் கலைஞர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் எப்போதும் டெல்லி அரசியலை விட்டு எப்போதும் விலகியே தான் இருந்தார். 

தொடக்கத்தில் முரசொலி மாறன் இருந்த தைரியம். அவருக்குப் பிறகு வைகோ இருந்த போதிலும் முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதே வரலாறு சொல்லும் செய்தி. காரணம் வைகோ அவர்களின் உணர்ச்சிக்குவியல் சார்ந்த செயல்பாடுகள். 

திடீரென்று சில மாதங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் விழா என்று ஒரு கூட்டத்தைக் கூட்டி எம்.ஜி.ஆர் குறித்துப் பெரிய சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். இப்போது எஸ்ரா விற்கு இந்த விழாவினை நடத்தியுள்ளார். 

எழுத்தாளர்களுக்கு இரண்டு விசயங்கள் முக்கியமானது. 

பொற்கிழி அத்துடன் கூட்டம். 

தமிழக எழுத்தாளர்களுக்கு வருமானம் என்பது மேகமூட்டம் போல. எப்போதும் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது. அதே போல அரங்கு நிறைந்த கூட்டம் என்பது ஒரு எழுத்தாளன் வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத சூழல் தான் தமிழகத்தில் உள்ள எதார்த்தம். 

ஆனால் ஆச்சரியமாக இரண்டும் இந்தக்கூட்டத்தில் நடந்தேறியுள்ளது. இந்தக்கூட்டத்திற்காகப் படிப்படியாக வைகோ உழைத்த உழைப்பைத் தினந்தோறும் வாசித்து வந்தேன். அரசியல் காட்சிகள் மாறினாலும் வைகோ என்ற ஒரு நபருக்காக அனைத்துக் கட்சியினரும் வந்துள்ளனர். ஆச்சரியமாக வைரமுத்தும் வந்துள்ளார். 

ஆனால் இந்தக்கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எஸ்ரா அவர்களின் ஏற்புரை நெகிழ்ச்சியுடன் இருந்தது. 

வைகோ காலத்திற்குள் இன்னும் சில எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றேன். 


Tuesday, April 03, 2018

ஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...


மேலும் சில குறிப்புகள் 10

தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரசியல் அமைப்பு மக்களுக்காக உருவாக்கிய அனைத்தையும் பாழ்படுத்தினார். 

இது போன்ற அர்த்தம் வரும் வார்த்தைகள், இன்னும் நீதிபதிகளின் கோப வார்த்தைகள், ஜெயலலிதாவின் மேல் குன்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட நகலில் உள்ளது. 

ஆனால் இதனைப் பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை. இன்று வரையிலும் இப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்துள்ளார்கள் என்பதே தமிழகத்தில் பலருக்கும் தெரியாது. 

இந்த வார்த்தைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகளும் மௌனமாகி விட்டது. ஓரே காரணம் நீ ரொம்ப யோக்கியமா? என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் மட்டுமே. 

மொத்தத்தில் பழி மொத்தமும் யார் மேலாவது சுமத்த வேண்டுமே? கிடைத்தார் சசிகலா? இன்று வரையிலும் மாறவில்லை அல்லது மாறுவதற்கான காலம் கனியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

சந்திரலேகா ஐஏஎஸ். 

இவரின் வசீகர முகமும், ஆசிட் வீசிய பின்பு முதல்முறையாக அந்த முகத்தைப் பார்த்த எவருக்கும் இப்படியொரு படுபாதகச் செயலை எவர் செய்திருப்பார்? என்ற எண்ணம் வந்திருக்கும். 

இவர் இப்போது தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். 

நிதானம் என்ற வார்த்தை வெறும் வார்த்தையல்ல. ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் மந்திரச் சொல். இருப்பவன், இல்லாதவன் எனப் பாகுபாடு இல்லாமல் இந்த மந்திரச் சொல்லை சரியாகக் கடைபிடித்து வந்தாலே மன அழுத்தம் நிச்சயம் இருக்காது என்பதற்குச் சந்திரலேகா பேசியதை வைத்து உணர்ந்து கொண்டேன். 

இவர் அனுபவித்த வேதனைகளை, அதனைத் தாண்டி வந்த விதம், இன்னமும் ஜெயலலிதா குறித்துப் பேசும் போது காட்டும் நிதானம் உண்மையிலேயே வியப்பாகவே உள்ளது. 

எதிரிகளிடம் பரிவு காட்டு. எதிரியை மன்னித்து விடு என்று வார்த்தையாக வாசிக்கும் போது எளிதாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில்? அது தான் கற்ற கல்வியும், பெற்ற அனுபவங்கள் கொடுக்கும் வரம். எடுத்துக் கொள்பவர்கள் குறைவான நபர்களே. அதில் ஒருவராகச் சந்திரலேகா மிளிர்கின்றார். 

நான் சசிகலா குறித்து மனதில் வைத்திருந்த சித்திரங்கள் மிகவும் சரியானது என்பது இவர் உரையாடலை முழுமையாகக் கேட்ட பின்பு தோன்றியது. காரணம் சூரியனுக்கு மிக அருகே இருப்பவனைப் போல அதிகாரம் படைத்தவர்களின் அருகே இருப்பவர்களின் நிலையும் இருக்கும் என்பதற்குச் சசிகலாவே உதாரணம். 

எந்தத் தகுதியும் இல்லாமல், வாய்ப்பு வந்த பிறகும் தேவைப்படும் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் வாழ்ந்த ஜெ வுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு சசிகலா. 

தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும், அதிகாரம் சார்ந்த முடிவுகளும் போய்ச் சசிக்கிட்ட பேசிக் கொள்ளுங்கள் என்ற ஜெ வின் ஒற்றை வார்த்தையில் முடிந்துள்ளது என்பதனை இவர் வார்த்தையில் கேட்ட போது நாம் யார் ஆட்சியில் இருந்துருக்கோம் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

ஆளுநர் முதல் அமைச்சருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் போது சொல்லப்பட்ட வாசகங்கள் அனைத்தும் கிண்டலாய், கேலியாய் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றது. 

ஜெ. வைப் பொறுத்தவரையிலும் அதிகாரம் என்பது தன் சுய ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே என்பதில் தொடக்கம் முதலே தெளிவாக இருந்துள்ளார். அதற்காகத் தன்னைச் சுற்றிலும் அரண் அமைத்துக் கொண்டு அந்தக் கோட்டையைச் சுற்றிலும் அகழி அமைத்துக் கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் பல முதலைகளை அனுமதித்துள்ளார். சசிகலா முதன்மையாக இருந்துள்ளார். 

ஒருவர் இருவராகி, பல நபராக மாறி கடைசியில் மன்னார்குடி மாஃபியா என்கிற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. 

ஜெ. முதல் முறை ஆட்சிக்கு வந்த போதே நூறு கோடி வாங்கிக் கொண்டு அனுமதித்த திட்டம் தான் இப்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். இது போலத் தேவையில்லாத ஆளைக் கொல்லும் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு விலை வைத்து அனுமதித்த அவரின் கொள்ளைப் பசிக்கு மக்களுக்குத் தேவைப்பட்ட எந்தத் திட்டங்களும் அவர் எதிர்பார்த்த பேரங்களுக்குப் பணியாத காரணத்தினால் அண்டை மாநிலங்களுக்குப் பறந்தன. 

தான் விரும்பிய வசூலுக்காகவும் அரசியல் வாழ்க்கை வாழ்ந்த அவரின் செயல்பாடுகளுக்கும், அதற்கு உதவியாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கும் கிடைத்த பரிசைத்தான் இப்போது சசிகலா அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். 

எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மறைய வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே கவனமாக இருந்த ஜெ செய்து கொண்டு வந்த ஒவ்வொரு காரியங்களும் கடைசியில் அவருக்கு அம்மா என்ற வார்த்தைக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. 

ஆனால் சசிகலா கணப்பொழுதில் உருவத்தை, நடை, உடை, பாவனைகளை மாற்றி மற்றொரு ஜெ வாக மாற நினைத்ததே அவரின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது. சுற்றிலும் உள்ள அடிமைக்கூட்டத்தை வைத்துக் கொண்டு ஆமை போல நகர்ந்து வந்திருந்தால் இந்நேரம் தமிழக அரசியல் அரங்கில் காட்சிகள் மாறியிருக்கக்கூடும். 

நடராஜன் என்று ஆடிட்டர் குருமூர்த்தியை எதிர்த்து பேசத் தொடங்கினாரோ அன்றே பகவான் தலையில் அமர்ந்து விட்டார் என்பதனை அறியாமல் இருந்தது தான் இவர்கள் முப்பது வருடங்களில் நிஜ சூழ்ச்சி அரசியலை கற்றுக் கொள்ளாமல் இருந்துள்ளார்கள் என்பதனை உணர வைத்தது. 

குருமூர்த்தி உருவாக்கியது யுத்தமல்ல. சப்தமே இல்லாத சாணக்கிய தந்திர அரசியல். எங்குத் தொட வேண்டும்? எப்போது தொட வேண்டும்? எவர் மூலம் தொட வைக்க வேண்டும்? என்று செய்து காட்டினார்.  காலம் காலமாக அதிகாரத்தை தங்களை கைகளில் வைத்துப் பழகியவர்கள் அத்தனை எளிதாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்களா? 

சரஸ்வதி சபதம் படக் காட்சிகள் அரங்கேறியது. தெருவில் நின்றவருக்கு மாலை விழுந்தது. 

காலம் சுழன்றது. 

இன்று ஒருவர் மண்ணுக்குள். மற்றொருவர் மனம் முழுக்க அழுத்தத்தில். 


ஏணிகள் என்பது காலம் முழுக்க ஏணியாகவே இருக்கும். ஏறியவன் ஏணியைக் கொண்டாடி பார்த்து இருக்கின்றோமா?






கடந்து சென்ற பதிவுகள் (மேலும் சில குறிப்புகள் 1 முதல் 9)

நடராசன் சசிகலா

முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ. ராசா

திரைப்பட பாடல்களுக்குப் பின்னால்

ஆண்டாள் சர்ச்சை ஹெச் ராஜா மற்றும் வைரமுத்து

தமிழ் திரைப்பட இசைத் துறை

திருப்பூர் கொங்கு நகர் (வட சென்னை)

சொந்த வீடென்பது?

இளையராசா ஆன்மிகவாதியா?

பணம் (மட்டுமே) துரத்தும் மனிதர்கள்

மறைந்த எழுத்தாளர் ஞாநி அஞ்சலி கடிதங்கள் (மின் நூல்)






Sunday, April 01, 2018

மேலும் சில குறிப்புகள் 9

சூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. 

பதவி, பணம், அதிகாரம் இந்த மூன்றும் இருக்கும் போது அல்லது இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாவது நம்மிடம் இருந்தால் மனிதர்களின் பார்வையும், வார்த்தைகளும் எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு நடராசனின் இறுதி அஞ்சலியில் பேசிய இரங்கல் வார்த்தைகளை வைத்தே நம்மால் முடிவு செய்ய முடியும். 

மொழி ஆர்வலர். 
ஹிந்தி எதிர்ப்புப் போராளி 
தமிழ் இலக்கியத்தை விரும்பி முன்னெடுத்தவர். 
ஈழப்போராளிகளுக்கு ஆதரவளித்தவர். 
கொள்கை வேந்தன். 
உதவும் கரங்களுக்குச் சொந்தக்காரர். 
பத்திரிக்கை ஆசிரியர். 
வட மாநில அரசியல்வாதிகள் வரைக்கும் அறிந்து வைத்திருந்த செல்வாக்கு மிகுந்தவர். 

எல்லாமே சரி தான். ஒவ்வொன்றுக்கும் அவர் கொடுத்த விலையைப் பற்றிப் பேசியவர்கள் எவருமே சொல்லவில்லை. இப்போது தான் ஒரே ஒரு செய்தி மட்டும் வெளியே வந்துள்ளது. 

மாயாவதிக்கு கொடுத்த ஆயிரம் கோடி இனி என்னவாகும்? திரும்புமா? இல்லை அது காந்தி கணக்கில் போய்விடுமா? 

இன்று வரையிலும் தொலைக்காட்சியில் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியர் என்று தான் அடைமொழியிட்டு அழைக்கின்றார்கள். சமஸ்தான மன்னர்களுக்கு ஆங்கிலேயர் கொடுத்திருந்த சர் பட்டம் போல. 

கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா இதழ் போலப் புதிய பார்வை இதழும் கவர்ச்சிகரமாகவே இருந்தது. கோமல் கையைக் கடிக்க ஒதுங்கி விட்டார். இவருக்குக் கை மட்டுமல்ல காலும் எந்த நாளும் கடிக்காது. காரணம் லாபத்திற்காகப் பத்திரிக்கை நடத்துவது என்பது வேறு. வெறுமனே தொழிலுக்காக ஒரு பத்திரிக்கையை நடத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருப்பதென்பது வேறு. இரண்டாவது நிலையில் தான் ம. நடராசன் இந்தப் பத்திரிக்கையை நடத்தி வந்தார். இப்போது இருக்கின்றதா? என்பது தெரியவில்லை. 

இவர் சில மாதங்களுக்கு முன்பே சென்று சேர்ந்திருப்பார். ஆனால் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு இளைஞர் சாலை விபத்தில் இறக்கும் தருவாயில் இருந்தவரை இவருக்குத் தேவைப்பட்ட உடல் உறுப்புக்காகக் கொண்டு வந்த காட்சிகள் திரைப்படச் சாகசத்தை மிஞ்சுவதாக இருந்தது. 

இப்போது ஆட்சி புரியும் எடப்பாடி அரசு என்பது உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். ஆனால் என் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நேரிடையான தொடர்பு வேண்டாம் என்கிற ரீதியில் இருப்பதால் இன்று வரையிலும் சசிகலா சிறைவாழ்க்கை கூடச் சிறப்பாகத்தான் உள்ளது. 

இவரின் சாதனை என்பதனை பத்திரிக்கைகள் பலவிதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன. அது வெறுமனே சசிகலா, ஜெயலலிதா இருவருடன் உள்ள தொடர்பும் அதன் மூலம் உருவாக்கிய நிழலுக வேலைகளைப் பற்றித்தான் பேசுகின்றார்கள். ஆனால் இவர் மற்றொரு அழகான காரியத்தைச் செய்துள்ளார்.

முதல்முறையாக ஜெ. ஆட்சிக்கு வந்த சமயம். 
ஜெ, தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தின் கொடூர முகத்தை உணர்ந்து கொள்ளாமல் என்றும் அதிகாரம் நம்மிடம் தான் இருக்கப் போகின்றது என்பதனை மனதில் வைத்துக் கொண்டு திரைப்படச் சாகச வேலைகளைப் போலவே அதிகார சுவையில் திளைத்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வர உதவிய நடராஜன் அப்போதே தன் புனிதப் பணியைத் தொடங்கி விட்டார். 

தன் சாதி சார்ந்த படித்த, படிக்காத ஒவ்வொருவரையும் அரசு சார்ந்த, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு இடங்களிலும், அதுவும் அதிகாரம் பொருந்திய பதவிகளில் தொடர்ந்து உள்ளே நுழைத்துக் கொண்டேயிருந்தார். அரசாங்கத்தின் வருமானம் வேறு எவருக்கும் போய்விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். 

தன் உறவுகளை எங்கே வைக்க வேண்டும்? உறவுகளைச் சார்ந்திருக்கும் கட்சிக் காரர்களை எங்கே நிறுத்த வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தார். ஆனால் மொத்த லகானையும் தன் கையில் வைத்திருந்தார். ஒவ்வொரு செயல்பாடுகளில் கவனமாக இருந்தவர் செயல்பாடுகளினால் கிடைத்த லாபத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மட்டும் மனைவி பார்க்கும்படி வைத்திருந்தார். மனைவி மூலம் மேல் மட்டம், கீழ் மட்டம் என்று மட்டைப்பந்து ஆட்டம் போலவே தினசரி வசூல் களைகட்டியது. 

உறவுகளின் எண்ணிக்கை கூடக்கூட வசூலின் பரிணாமமும் அதிகரித்தது. ஜெயலலிதா தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை வைத்திருந்தார். ஆனால் கணவரும் மனைவியும் விலைக்குக் கட்டுப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களைப் பெற்று இருந்தார்கள். ஜெ. வின் எதிர்பார்ப்பு என்பது வெறுமனே கேள்விகளாகவே இருந்தது. ஆனால் அதற்கு விடை எழுதும் முழுத் தகுதியை நடராசனும் சசிகலாவுமே பெற்று இருந்தனர். 

பிறகென்ன? 

பதிலை எழுதுபவர்களே திருத்தும் ஆசிரியர்களாக இருந்தால் எல்லாப்பாடமும் நூற்றுக்கு நூறு தானே? 

வருமானம் எல்லை மீறியது. தமிழக மானம் கப்பலேறியது. கப்பலுக்குக் கேப்டன் ஒன்று ஒருவர் தான் இருந்தார். ஆனால் கப்பலின் கட்டுப்பாடு என்பதோ சசிகலாவின் கையில் இருந்தது. பள்ளிக்கூடம் கூட முழுமையாக முடிக்காத பெண்மணியின் கண் அசைவில் நம் தமிழகம் இருந்தது என்பது நமக்கு எந்த அளவு பெருமை? 

ஊடகங்கள், சட்டங்கள், மத்திய மாநில அரசின் அதிகாரவர்க்கத்தின் அனைத்துக் கதவுகளையும் தன் விருப்பத்திற்காக மாற்றிய பெருமையைப் பெற்ற ஒரே பெண்மணி ஜெ என்றால் அதனைத் தங்களுக்கு எல்லா நிலையிலும் சாதகமாகவே கடைசி வரையிலும் வைத்திருந்த அருஞ்சாதனையைச் செய்தவர்கள் நடராசனும் சசிகலாவும். 

இன்று சசிகலாவின் கணவர் நடராஜன் என்ற பெயர் தான் நிலைத்துள்ளது. 

கடந்த 30 ஆண்டுகளில் அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் இவர் சேர்த்த நபர்கள் சகல துறைகளிலும் இருக்கின்றார்கள். இன்று பலர் ஓய்வு பெற்றுள்ளனர். குறிப்பாகக் கன்பெர்டு ஐஏஎஸ் பதவிகளில் அமர்ந்த பலரும் இவரின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள். தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் மலைச்சாமி போன்றவர்கள் கூடத் தலைமைச் செயலாளராக வர முடியும் என்பதற்கு இவரே ஒரு முன் உதாரணம். 

இன்று காவல் துறையில் கள்ளர் இனம் சார்ந்த அதிகமான பேர்கள் இருப்பதற்கு முக்கியக் காரணமும் இவரே. ஒவ்வொரு வேலைகளையும், ஒவ்வொரு நிலையிலும் சுருதி சுத்தமாகச் செய்து கொண்டே வந்தார். 

எதிர்காலம் என்பது எப்படியிருக்க வேண்டும்? என்பதனை துல்லியமாக கணக்கில் வைத்திருந்தார். ஈழப்பிரச்சினைக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு முகம். அரசாங்கத்திற்கு மற்றொரு முகம். எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களிடம் பழக்கவழக்கத்திற்கு ஒரு முகம். அதன் மூலம் அறிமுகமாகி நெருக்கமானவர்களிடம் மற்றொரு முகம் என்று ஒவ்வொரு இடங்களிலும் தன் தயாள குணத்தைக் கடை பரப்பி வைத்திருந்தார். சாதி ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் சமாதானத்தைக் கையில் வைத்துக் கொண்டு கடைசி வரைக்கும் தான் ஒரு ராஜதந்திரி என்பதனை நிரூபித்துக் கொண்டேயிருந்தார். 

இன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இவரின் கடைக்கண் பட்டுத் தொழில் அதிபர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர்கள். பாதிப் பேர்கள் வெளியே தெரிகின்றார்கள். மீதிப் பேர்கள் இப்போது மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருப்பார்கள். தம்பதியினரின் மகத்தான மறுக்க முடியாத சாதனை என்பது தங்களைத் தவிர வேறு எவரும் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஜெ அருகே நெருங்க முடியாத அளவிற்கு வைத்திருந்த வலைபின்னல் என்பது என்பது இனி எவராலும் செய்ய முடியாத சாதனை.  சோ ராமசாமி தோற்றது கூட எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே உள்ளது. 

அடியாட்கள் அதிகாரத்தின் சுவையை அருந்த முடியும். ஆனால் அதிகாரத்தின் உச்சத்தைத் தொட முடியாது. இது தான் மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரைக்கும் சரித்திரம் நமக்குச் சொல்லும் பாடம். 

தங்களால் வாழ்க்கை பெற்றவர்கள் அனைவரும் உச்சத்தில் இருக்க இன்று எச்சம் போல எவரும் எட்டிப் பார்க்காமல் இருக்கும் வாழ்க்கையோடு மண்ணுக்குள் போய்ச் சேர்ந்துள்ளார். 

கடைசி வரையிலும் தனக்கான வாழ்க்கையை வாழாமல் தான் சென்றுள்ளார்.

வாழ்க்கை சொல்லும் பாடங்கள் எப்போதும் நம்மால் புரிந்து கொள்ள  முடியாததாகவே உள்ளது.