Thursday, April 19, 2018

ராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.


இவர் சொல்லியுள்ள செய்தி எனக்குப் புதிதாக இருந்தது. நான் இதுவரையிலும் வாசிக்காத, கேள்விப்படாத செய்தியிது. 

பிராமணர்கள் கடல் தாண்டிப் போகக்கூடாது என்பதனை கேட்டுள்ளேன். அது இன்றைய சூழ்நிலையில் நடக்காத காரியம். அமெரிக்காவிற்கு 1950 முதல் 1969 க்குள் முதல் தலைமுறை பிராமணர்கள் செல்லத் துவங்கி விட்டனர். தீட்டு என்பது மறந்து போன சமாச்சாரமாகி விட்டது. 

ஆனால் பிராமணர்கள் அரசியலில் நேரிடையாக ஈடுபடக்கூடாது என்று இவர் சொல்லியது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் அதிகாரம் மிக்கப் பதவிகளில் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் உயர்மட்ட அதிகார கேபினட் அமைச்சராகவும் அநேகம் பேர்கள் உள்ளனர். 

மத்திய, மாநில அமைச்சர்களில் உள்ள படிம நிலையை வைத்தே நம்மால் சிலவற்றைத் தனிப்பட்ட முறையில் யூகித்துக் கொள்ள முடியும். 

ஆனால் அதிகாரவர்க்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னமும் பிராமணர்கள் தான் இருக்கின்றனர். நிச்சயம் அவர்களின் புத்திசாலித்தனம் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் வேறு எவருமே அந்த இடத்திற்கு வரமுடியாத அளவிற்குச் சூட்சமத்தை உருவாக்கியிருப்பதில் தான் இன்று ஒவ்வொன்றும் வெளியே வந்து கொண்டிருக்கின்றது. 

கடந்த 25 வருடங்களில் இவரைப்பற்றி எந்தச் செய்திகளையும் தமிழ் பத்திரிக்கையில் நான் படித்தது இல்லை. ராஜிவ் காந்தி ஃபோபார்ஸ் ஊழல் என்றுப் பத்திரிக்கையில் வந்ததைப் படித்த போதெல்லாம் அதற்குப் பின்னால், அதனை வெளிக் கொண்டுவருவதில் சென்னைத் தமிழர் இருந்துள்ளார் என்பதனை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. துண்டு, துணுக்குச் செய்தியாகத்தான் அதனைக் கடந்து வந்துள்ளேன். 

ஏ1 குற்றவாளி மறைந்த பிறகு உருவான தமிழகக் களேபரங்களின் மூலமாகத்தான் இவரின் அந்தரங்க செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரங்கத்திற்கு வரத் தொடங்கியது. 

ஆனால் நான் இவரைக் கடந்த நாலைந்து வருடங்களாகத்தான் கவனித்து வருகின்றேன். திருப்பூரில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் இவரின் கூட்டம் இங்குள்ள முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் அரசாங்கம் இறுதிக்கட்டத்தில் இருந்து. நாள் தோறும் ஏதோவொரு ஊழல் குறித்த செய்திகள். அதைவிடப் பொருளாதாரச் சிக்கல்கள். அணுவுலை சார்ந்த அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் எதிர்பார்த்த ஒப்பந்தத்திற்கு மன்மோகன் அடிமட்டம் இறங்கி விளையாடி அந்த மசோதாவை வெற்றி பெற வைத்தார். இது போன்ற சமாச்சாரங்கள் குறித்தும், அமெரிக்க டாலர் இந்திய பணத்தில் உருவாக்கும் தாக்கம் குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

படுபயங்கரமான புத்திசாலி என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. தரவுகள், புள்ளிவிவரங்கள், சான்றுகள் என்று நாலாபக்கமும் கலக்கி எடுத்து கூட்டத்தினரை பிரமிக்க வைத்தார். முதலாளிகள் அனைவரும் மன்மோகன் இனியும் இருந்தால் நாடு அவ்வளவுதான் என்கிற அளவுக்கு. 

ஆனால் இவரைப்பற்றி எவ்வித தனிப்பட்ட தகவல்களையும் எங்கேயும் படித்ததில்லை. இப்போது தான் முதல்முறையாக இந்தப் பேச்சின் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

அதுவும் இயக்குநர் மணிரத்னம் எடுத்த குரு படத்தில் வருகின்ற மாதவன் கதாபாத்திரம் இவரை வைத்துத் தான் எடுக்கப்பட்டது என்பதே இதைப் பார்த்தவுடன் தான் யோசிக்க முடிந்தது. 

புத்திசாலிகள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பார்கள் என்பதனை இவரின் வாழ்க்கையைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகின்றது. சமய சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பார்கள். சாதகமான சந்தர்ப்பங்கள் என்றால் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அல்லது மீண்டும் எழ முடியாத அளவுக்குப் பலத்த சேதாரத்தை உருவாக்கியிருப்பார்கள். உதாரணம் சசிகலா.

செயல்படுத்த நினைத்தார். முடித்தார். இனி சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அடுத்த ஐந்தாண்டுகள் கூட நேரிடையான அரசியலில் செயல்பட முடியாது. சோ வாயால் கெட்டார். இவர் வாயாடாமல் வென்றுள்ளார். சோ குறித்துப் பெருமையாகப் பேசும் இவர் சக கூட்டாளியான சுப்ரமணிசாமியை கவனமாகத் தவிர்க்கின்றார். 

இதை எப்படி எடுத்துக் கொள்வது? 

ஒரு இடத்தை அடைவதற்கு அதன் சூட்சமத்தை அறிய எந்த அளவுக்கு இறங்கி உழைக்க வேண்டும். கற்றுக் கொள்ள எதனை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு இவரின் தொடக்கக் கால வேலைகள் மிகச் சரியான சான்றாக உள்ளது. மார்வாடிகள் எப்படி வரி ஏய்ப்பு செய்கின்றார்கள்? என்பதனை கண்டுகொள்ள வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் பாதிச் சம்பளத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றியதில் இருந்து இவரின் ஆடிட்டர் வாழ்க்கை தொடங்குகின்றது. 

இவர் சொல்லும் கணக்குப்படி ஏறக்குறைய 40 வருடங்கள் இந்திய அரசியலின் முக்கியப் புள்ளிகளின் அந்தரங்க நண்பராக இருந்துள்ளார். முக்கியப் புள்ளிகள் அனைவரும் பெரும்புள்ளிகள். இந்தியா என்ற பெரிய தேசத்தின் செயல்பாடுகளைத் தங்கள் செயல்பாடுகள் மூலம் மாற்றக்கூடியவர்கள். இவரோ அவர்களுக்கு முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய இடத்தில் இருந்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா குறித்து ஓரளவுக்குத் தெரியும். ஆனால் அவரின் நட்பு என்பது இவருக்கும், இவரின் புத்திசாலித்தனம் என்பது அவருக்கும் மிகச் சரியாகப் பொருந்திப் போக வீரமும் விவேகமும் உள்ள செயல்பாடுகள் போல அசைக்க முடியாத ரிலையன்ஸ் நிறுவனத்தை அசைத்துப் பார்த்தது.

மிருக மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி ஆட்சியை ஆட்டி வைக்க முடிந்தது. புத்தியை முதலீடாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பெற்ற அனைத்துப் பெருமைகளையும் இவர் பெற்றுள்ளார். அது நம் பார்வையில் மோசமானதாக இருக்கலாம். ஆனால் இவர் ஒரு வெற்றியாளர். 

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் எந்தப் பகுதியில் என்ன வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய தந்திரசாலி. அதனால் தான் காலம் மைலாப்பூர் அறிவுஜீவி என்று அழைக்கின்றது. 

எப்போதும் மற்ற அனைவரும் சொல்வது போல நான் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. நான் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்பதனை இயல்பாகச் சொல்லிச் செல்லும் போதே நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றது. 

சாதாரண மனிதர்களுக்கு அரசியல் என்பதும், அரசியலில் ஒரு பதவி என்பதும் வாழ்நாள் கனவாக இருக்கும். அதுவும் அமைச்சர் போன்ற பதவிகள் பெறுவது என்பது ஜென்ம சாபல்யம். ஆனால் இவரோ மழை, வெயில் என்று பாராமல் அலைந்து திரிந்து கெஞ்சிக் கூத்தாடி கண்டதையும் சொல்லி, தொண்டைத் தண்ணீர் வற்றி, பேசி, ஓட்டு வாங்கிச் சென்ற ஒட்டுமொத்த ஜனநாயக காவலர்களைத் தன் கோட்டுப் பைக்குள் வைத்துக் கொள்ளும் சாணக்கியன். இது தான் இந்தியாவின் மக்களாட்சி. 

தமிழகத்தில் நமக்குத் தெரிந்து இவர் ஒருவர் இருக்கின்றார். இந்தியா முழுக்க இவரைப் போல இன்னும் எத்தனை நூறு பேர்கள் இருப்பார்களோ? 

சாதாரணமாக ஒரு கட்சியில் கிளை, நகரம், ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று மாறி மாறி வருவதற்குள் பாதிப் பேருக்கு நரை கண்டு விடும். ஆனால் இவர் அரசியல் பயணமோ தலைகீழ். மேலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்துள்ளார். எக்காரணம் கொண்டு கீழே வரவில்லை. 

மகாத்மா காந்தியடிகளிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இவரோ காந்தி விரும்பிய வர்ணம் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்கின்றார். குஜராத் கலவரங்களில் இருந்து மோடி வெளியே வரப் பலரும் உதவியுள்ளனர். அதிலும் இவர் பங்களிப்பும் உள்ளது. 

ஒபிஎஸ் ஒரு பக்கம், ஈபிஎஸ் ஒரு பக்கம் என்று இருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள இவர் உதவியை நாடினார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்த சமாச்சாரம். அதற்குப் பின்னால் பல பரிமாற்றங்கள் என்பது அரசல்புரசலாக வெளியே தெரிந்தது. ஆனால் அது போன்ற விசயங்களை இவர் அசால்ட்டாகத் துடைத்துக் கொண்டே போகின்றார். 

இவர் பேசும் பேச்சில் ஒரு இடத்தில் தயக்கம் இல்லை. சால்ஜாப்பு இல்லை. குறிப்பாக இந்த நாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பெரிய கனவின் என் சிறிய உழைப்பின் பங்களிப்பு என்கிற ரீதியில் பேசுகின்றார். 

உலகத்திலே மிகப் பெரிய தானம் நிதானம் என்பார்கள். இவரின் நிதானம் யாருக்குப் பலனாக இருக்கின்றது என்பதனை அவர் வாயால் சொல்கின்றார். 

மாபியா கும்பல் ஆட்சிக்கு வரக்கூடாது. 
சரி 
ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? 

நாம் இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? 

நீ என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ எப்போதும் என் (எங்கள்) கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

வெல்பவர்களின் உலகமிது. காலம் காலமாக வென்றவர்கள் சரித்திரத்தை உருவாக்குகின்றார்கள். சரித்திரத்தின் போக்கையே மாற்றுகின்றார்கள். அதையே காலமும் பதிவு செய்கின்றது. 

பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? 

நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மாறமாட்டீர்கள்? மாற்றத்தை விரும்பாதவர்கள். அது குறித்து உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. வென்றவர்கள் எங்கள் கீழ் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை? 

காலம் நடத்தும் பாடங்களில் இப்போது தமிழகத்தில் ஆடிட்டர் குருமூர்த்திக் கதாநாயகனாக இருக்கின்றார். தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நகைச்சுவை நடிகர்களாக இருப்பது தான் வருத்தமாக உள்ளது.


14 comments:

Avargal Unmaigal said...


ஜோதிஜி நகைச்சுவை பதிவு எழுத முயற்சித்து போல இருக்கிறது.. //கதாநாயகன் குருமூர்த்தி//

Unknown said...

ஓவரான கணிப்பு

நம்பள்கி said...
This comment has been removed by the author.
நம்பள்கி said...

திரு ஜோதி:

நல்ல எழுத்து நடை; படிக்க தூண்டும் எழுத்துக்கள்; வாழ்க்கையில் உயர்ந்த நீங்கள் மேலும் [எழுத்தாளராக] வளர என் வாழ்த்துக்கள்! நிற்க...

தலையில் இருந்து பிறந்தால்...'தறு'தலைகள் கூட இந்தியாவில் புகழகப்படுவார்கள்; பேசப்படுவார்கள். இந்த ஆளும் அப்படியே...

தகிடு தத்தம் செய்து ஊடகங்கள் மூலம் குXவை கயிறாய் திரிக்கும் கும்பலிடம் என்று தான் சூத்திரர்கள்....தங்களை தாங்கள் மட்டம் தட்டி கொண்டு 'அவாளின்' பீத்த "புரோக்கர" வேலையை புகழ்வதை நிறுத்தப் போகிறார்களோ?

மன்னிக்கவும்...இந்த பதிவு அப்படித்தான் இருக்கிறது...Though your writing is excellent the whole subject about that fellow is toooooo...much....! And not true...

பின்குறிப்பு:
மறுபடியும்.....தலையில் இருந்து பிறந்தால்...'தறு'தலைகள் கூட இந்தியாவில் புகழகப்படுவார்கள்; பேசப்படுவார்கள். THis fellow is NOT an exception! That is India under siege...you know under whom...

அதற்கு சூத்திரர்கள் அடிமை மனப்பான்மையே காரணம்...காலம் காலமா இருந்த இழிவு நிலையை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?

உங்களுக்கு இருப்பது அழகான பெயர் ஜோதி; இந்த அழகான ஜோதி இருக்க ஏன் ஜோதிஜி?

மீண்டும் மன்னிக்கவும்...ஜோதி'ஜி' என்னவோ எனக்கு பிடிக்கவில்லை; "பாவ் பாஜி" மாதிரி இருக்கு ; எனவே திருவாளர் ஜோதி என்று அழைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன்.My sincere apologies...if I hurt you by calling Jothi instead of Jothiji.

ஜோதிஜி said...

நன்றி. இந்த ஜி என்ற கலாச்சாரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பெயரை தொழில் ரீதியான காரணங்களுக்காக (வெளிநாட்டில் இருப்பவர்கள் நம் பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டு கொத்துக்கறியாக்குவதை தவிர்க்கும் பொருட்டு ) இயல்பாக கணேசன் என்ற பெயரில் முதல் எழுத்து ஜி என்பதனை காலம் சேர்த்து விட்டது. அது அப்படியே இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அடையாளமே அதுவாக மாறிப்போனதால் நான் இதனைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. மற்றபடி உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி. நான் எப்போதும் புகழ், பதவி,பணம் அதிகம் இருக்கும் துறைகளில் அதற்குப் பின்னால் உள்ள நிழல் உலகத்தைப்பற்றி அதிகம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு. அதன் விளைவே குருமூர்த்தி அவருக்குப் பின்னால் உள்ள உலகம். மற்றொரு தகவல். தொடக்கத்தில் ஜோதி என்ற பெயர் போட்டு சிறிது காலம் எழுதிய போது பலரும் பெண் என்று நினைத்து நூல் விட்டனர். தப்பித்து வந்து விட்டேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பதிவினைப் படித்துக்கொண்டு வரும்போதே நீங்கள் யாரைப் பற்றி சொல்ல வருகின்றீர்கள் என்று ஊகிக்க முடிந்தது. என் ஊகம் சரிதான்.

G.M Balasubramaniam said...

அந்தக் கால மெக்காலேயின் கல்வி திட்டப்படி உருவானவரோ உங்கள் ஹீரொ

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி.

ஜோதிஜி said...

அரசியல், திரைப்படம் போன்ற புகழ், பணம் தரக்கூடிய துறைகளை நீங்கள் பத்திரிக்கைகள் வழியே மட்டும் பார்க்கக்கூடும். ஆனால் நான் இதற்குப் பின்னால் கருப்பு பின்புலத்தைப் பார்க்கின்றேன். இன்று ரஜினி தன் உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கின்றார். குருமூர்த்தியை தன் வீட்டுக்கு வரவழைத்து ஒரு மணி நேரம் பேசுகின்றார். இது போன்ற பல செய்திகள். இன்னமும் ஆழமாக வாசிக்கும் செய்திகளை கவனித்து படித்துப் பாருங்கள். உங்களுக்கு நிறைய மறைவிடங்கள் தெரியும்.

ஜோதிஜி said...

காலம் தீர்மானிக்கும்.

ஜோதிஜி said...

நன்றி.

ஜோதிஜி said...

ஆனால் அவர் இன்று இந்தியாவில் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

தகவலுக்கு நன்றி.