Tuesday, April 10, 2018

கழகம் என்பது வியாபாரத்தின் தொடர்ச்சி......



மேலும் சில குறிப்புகள் 13 

1995 வாக்கில் தனி ஆளாக வாழ்ந்த போது வைத்திருந்த டேப் ரிக்கார்டில் அரசியல் , இலக்கிய மேடைப் பேச்சுக்களை எப்போதும் கேட்பதுண்டு. அதில் கலைஞரின் இலக்கியப் பேச்சுகளையும் அதிகம் கேட்பதுண்டு. 

என் அறைக்குள் மற்றொருவர் மூலம் அறிமுகமான ஒருவர் எதிர்பாராதவிதமாக வந்த போது கண்களை மூடிக் கொண்டு கலைஞர் பேசிய பேச்சை அந்த மதிய வேளையில் கேட்டுக் கொண்டிருந்தேன். 

அவர் உடனே நீங்க திமுக வா? என்றார். இல்லை என்றேன். அப்புறம் கலைஞரின் பேச்சை இத்தனை ஆர்வமாகக் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? என்றார். ஏன் அவர் இலக்கியத் திறமையை நாம் எடுத்துக் கொள்ளலாமே? என்றேன். ஆனால் நான் பேசிய நபர் கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர். மதுரையில் முரசொலி தொடங்கிய போது முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. 

சென்னையில் தொடக்கத்தில் தீரா விளையாட்டுப் பிள்ளையாக இருந்த அழகிரியை ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும். குறிப்பாகச் சென்னையில் வைத்திருக்கக்கூடாது என்பதற்காக மதுரைப் பக்கம் அனுப்பி வைக்க என்னுடன் பேசியவரும் அழகிரிக்குத் துணையாக இருந்தார். ஆனால் சில மாதங்களில் முரண்பாடுகள் முட்டி முளைக்க இவர் வெளியே வந்து விட்டார். இன்று வரையிலும் அவர் தொடர்பில் இருக்கின்றார். எப்போதும் கலைஞர் குறித்து அவர் பேசும் போது அவரின் நிறை குறைகளைப் பற்றி மற்ற எல்லோரும் போலப் பேசிவிட்டுக் கலைஞர் தினந்தோறும் கல்யாண மாப்பிளை போலவே வாழ விரும்புபவர் என்பார். 

அதன் அர்த்தம் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவரே நடுநாயகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பில் இருப்பார். அதற்குக் கடந்த கால வரலாற்றில் பல உதாரணங்களைச் சொன்னார். ஏன் சொந்த மகனுக்குக்கூடப் பதவியை விட்டுத் தரமாட்டேன் என்கிறார்? என்று போகிற போக்கில் பலரும் கேட்டுவிட்டுச் செல்கின்றனர். 

ஆனால் இந்த இடத்தை அடைவதற்கு, இந்தப் பதவியைப் பெறுவதற்கு, இந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் உழைத்த உழைப்பு, அவர் செய்த வேலைகள் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர் குடும்பத்தில் ஒருவர் கூட ஐந்து சதவிகிதம் என்கிற நிலைக்குக்கூட வரமாட்டார்கள். 

இன்று ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கும் தஞ்சாவூர் மாவட்ட நடைபயணத்தில் பின்னால் ஒரு வசதி மிகுந்த டெம்போ ட்ராவலர் வாகனம் ஒன்று வந்து கொண்டிருக்கின்றது. சிறிது நேரம் நடைக்கு மூச்சி வாங்கி ஓய்வு எடுத்து நடக்கும் நாடகங்கள் போலக் கலைஞர் களப்பணியில் எவரும் குறையே கண்டுபிடிக்க முடியாது. 

உதயசூரியன் என்ற சின்னம் கட்சிக்கு எந்த அளவு பொருத்தமோ அந்த அளவுக்குக் கலைஞரின் உழைப்புக்கு சரியான உதாரணம் சூரியன். ஆனால் சூரியன் காலையில் வருவதற்கு முன்பே எழுந்து விடும் கலைஞர் சூரியன் மறைந்து நள்ளிரவு வரைக்கும் 90 வயது வரைக்கும் உழைத்த தமிழகத்தின் ஆச்சரிய மனிதர். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உழைப்பு என்றுமே மாறியதே இல்லை. தனது உழைப்பின் மூலமே தனது இடத்தை அடைந்தவர். அதன் மூலமே ஒவ்வொரு காலகட்டத்திலும் தக்க வைத்துக் கொண்டவர். சம்காலத்து இளைஞர்கள் அவரை முன் உதாரண மனிதராக எடுத்துக் கொள்ள முடியும். 

நிர்வாகத் திறமையும், சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் பாணியும் தமிழகத்தில் வேறு எவருக்கும் அமையாத திறமையது. தமிழகத்தில் வாழ்ந்த தலைவர்களில் கலைஞரின் மூளையில் உள்ள நியூரான்களுக்கு மட்டும் இயற்கை புதுவித பரிணாம வளர்ச்சி கொண்டதாக அமைந்துருக்குமோ என்று நான் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் உருவான எதிரிகளும், உருவாக்கிக் கொண்ட எதிரிகளுடனும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட வித்தகர். 

மேடைப் பேச்சில் தன்னிகரற்று விளங்குபவர்கள் எழுத்துக்கலையில் சிறப்பாக இருந்தது இல்லை. அதே போல எழுத்துக்கலையில் விற்பனராக இருப்பவர்கள் மேடைப் பேச்சில் வென்றது இல்லை. ஆனால் தமிழகத்தில் இந்த இரண்டு திறமைகளில் முதல் இடத்தில் இருந்தவர் கலைஞர். 
உடல் ஆரோக்கியம் நலிவுற்றுப் போகும் வரைக்கும் தன்னை நிரூபித்துக் கொண்டேயிருந்தவர் கலைஞர்.

 எல்லோரும் தான் எழுதுகின்றார்கள்? ஆனால் வார்த்தைகள் நர்த்தனமாடும். காவியம் படைக்கும். பல சமயத்தில் கலவரத்தையும் உருவாக்கும். மொத்தமாகத் திருப்பி மாற்றிவிடும் வல்லமை கொண்ட அவரது பேச்சும் எழுத்தும் ஆச்சரியமானதே. 

அதிகப்படியான நபர்கள் தமிழகத்தில் இன்று வரையிலும் பேசிக் கொண்டே தான் இருக்கின்றார்கள். ஆனால் புராண இதிகாசமாகட்டும், தமிழ் இலக்கியமாகட்டும், கடந்த கால இந்திய தமிழக அரசியல் களமாக இருக்கட்டும். சுடச்சுட வந்து விழுந்து கொண்டேயிருக்கும். இந்த விசயத்தில் என் பார்வையில் அறிஞர் அண்ணாவை மிஞ்சக்கூடிய திறமை படைத்தவர் கலைஞர். 

அறிஞர் அண்ணா இவரின் உழைப்பைப் பார்த்து வாய்ப்பு வழங்கினார். முழுமையாக ஆதரித்தார் என்று கூடச் சொல்ல முடியாது. காரணம் இவருடன் நாலைந்து பேர்கள் போட்டியில் இருந்தனர். தன்னைத் தானே தனக்கான தேவைக்காக உருவாக்கிக் கொண்டார். முன்னேறிக் கொண்டேயிருந்தார். வீழ்ச்சிகள் அவரை நோக்கி வந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர் விழவே இல்லை என்பது தான் அவர் வாழ்க்கையில் மொத்த தத்துவம். 

ஆனால் இந்தத் திறமை முழுக்க அப்பட்டமாகத் தமிழக நலனுக்காக மட்டுமே இருந்ததா? என்ற கேள்விக்குப் பின்னால் வரக்கூடிய சமாச்சாரங்கள் தான் இன்று வரையிலும் பல கேள்விகளும் , கேலியாகவும் பார்க்கப்படுகின்றது. இதற்கும் அவரே பதில் அளித்துள்ளார். 

குளத்தில் வாழும் மீன்கள் அதில் உள்ள அழுக்கைத் தின்று வாழ்ந்தால் உயிர் பிழைத்திருக்க முடியும். 

சில தினங்களுக்கு முன் கூட முரசொலி பத்திரிக்கையைக் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த படத்தைப் பார்த்த போது அவரின் பாதி வயதில் உடம்பு படுத்தும் பாடுகளை உணர்ந்தவன் என்ற முறையில் வியப்பாகவே உள்ளது. கையில் காசு இல்லாத போது சிறுவனாக இருந்த போதே கையெழுத்துப் பிரதி நடத்தியவர். முரசொலி என்ற பத்திரிக்கையின் வாயிலாக தமிழ்நாடு முழுக்க அனல் வார்த்தைகளை கொண்டு சேர்ந்தவர்.  இன்று கலைஞர் குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள ஊடக பலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த ஊடகங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றது? என்பதனை கவனித்துப் பார்த்ததால் மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்?  இதனால் தான் எப்போதும் திமுக வை ஒரு வழிப்பாதை என்கிறார்கள். எதுவும் உள்ளே மட்டும் போக முடியும்.   அது திரும்பி வருமா? என்று தெரியாது. வந்தவர்கள் சமர்த்தியசாலிகள் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

அரசியல் கூட்டமாக இருந்தாலும், இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் கலைஞர் மேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடனும் பேசமாட்டார். ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஒவ்வொரு பேச்சாளரின் பேச்சுக்களை, அதற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும் பட்சத்தில் சிறிய குறிப்பாக எழுதி வைத்துக் கொண்டே வருவார். தன் பேச்சில் மொத்தமாக ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து அப்ளாஸ் அள்ளுவார். கல்யாண மாப்பிளையின் குணம் என்பது இது தான். தான், தனக்கு, தன்னுடைய, தனக்காக, தன்னால் போன்ற வார்த்தைகளுக்கு முழுமையான சொந்தக்காரர் கலைஞர். 

ஆனால் ஈரோட்டு மாநாட்டில் மேடையில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் விருந்து சாப்பிடவந்தவர்கள் போலப் பரஸ்பரம் பேசி சிரித்துக் கொண்டு அவரவர் முறை வந்த போது கொடுத்த தலைப்பில் பேசி விட்டு நகர்ந்து விட்டனர். எப்போதும் மாநாட்டுப் பந்தலில் பின்புறம் தொண்டர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த காட்சியையும் கண்டேன். 

நீதிக்கட்சி தொடங்கியது முதல் அண்ணா மறைவு (1969) வரைக்கும் ஏறக்குறைய முந்தைய 50 ஆண்டுகள் உள்ள வரலாற்றை முழுமையாகத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் பத்தாயிரம் பேர்கள் கூட இருக்கமாட்டார்கள். திமுகவில் ஆயிரம் பேர்கள் இருப்பார்களா? என்பதே சந்தேகம். ஆனால் பேசிய ஒவ்வொருவரும் பொளந்து கட்டினார்கள். 

யாருக்காகப் பேசினார்கள்? 

கலைஞர் ஆட்சிக்கு வந்து எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தது வரைக்கும் உள்ள நிகழ்வுகள் கூடச் சமகாலத்தில் உள்ள உடன்பிறப்புகளுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதே சந்தேகம் தான். 

காரணம் அன்று அரசியலில் கொள்கை இருந்தது. ஊழல் வெளியே தெரியாத அளவிற்கு இருந்தது. இன்று ஊழல் மட்டுமே வெளியே தெரிவதால் கொள்கை என்பது காணாமல் போய்விட்டது. திமுக மட்டுமல்ல, சின்னக் கட்சிகளில் கூடத் தொண்டர் படையினர் உரையாடல் எந்த அளவுக்கு உள்ளது? 

டேய் அண்ணன் காலேஜ் இரண்டு வச்சுருக்காரு? ஸ்கூல் நான்கு இடத்தில் வச்சுருக்காரு? 

சென்னையில் இவர் தான் பெரிய பில்டர்? பத்து இடத்தில் வேலை நடந்துக்கிட்டுருக்கு? 

மணல் காண்ட்ராக்ட் அவர்கள் பெயரில் இருந்தாலும் அண்ணனுக்க வர வேண்டியது சரியா மாசமான வந்துடும்? 

ஏழு கிரஷர் ஓடிக்கிட்டுருக்கு? ரோடு காண்ட்ராக்ட் எல்லாம் சிக்கல் வேண்டாம் என்று அண்ணன் சம்மந்தி பேரில் பார்த்துக்கிட்டுருக்காரு? 

ஆக மொத்தத்தில் பெரியாரின் கொள்கை என்பது அண்ணாவிற்கு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. 

அண்ணாவின் கொள்கை என்பது கலைஞருக்கு அதனை ஓரளவிற்குப் பரவலாக்க உதவியது. 

ஆனால் கலைஞரின் கொள்கை என்பது ஸ்டாலின் என்ன செய்யப் போகின்றார் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர் குடும்பம் சென்னையில் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்க வேண்டும். 

இன்று தமிழ்நாடே கொந்தளித்துக் கலவரமான சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என்று ஆளாளுக்குப் பேட்டி, எதிர்ப்பு மூலம் விளாசித்தள்ளிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஸ்டாலின் மௌனமாக இருப்பதன் மூலாதாரத்தைக் கொண்டு நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை விட, தொண்டர்களை விட மருமகன்களின் வியாபாரம் ரொம்பவே முக்கியம்.  அதில் உள்ள பங்கு என்பது கடைசியில் பங்காளிச் சண்டையாக மாறிவிடக்கூடாது அல்லவா?

கலைஞர் தன் அரசியல்வாழ்க்கையில் பலரையும் நம்பினார். நம்பி கை வைத்தார். ஆனால் ஒவ்வொருவரும் கை யை பதம் பார்த்த காரணத்தால் கடைசியில் குடும்பத்தையே நம்பிக்கையாக மாற்றினார். 

தவறில்லை. 

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் வருமானத்திற்குரிய விசயங்களில் உள்ள கவனத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுவதால் இன்று வரையிலும் திமுகத் தன் பழைய பெயரை மீண்டும் கொண்டு வரமுடியவில்லை.

இதைச் சுட்டிக் காட்டினால் தான் காவி அரசியல், அடிமை அரசியலுக்கு வக்கலாத்து வாங்குகிறாயா? என்ற நல்ல பெயர் கிடைக்கின்றது. இது தான் எங்கள் கொள்கை என்று முரசறிவித்து களத்தில் இறங்கியது திமுக.  ஆனால் அன்று முதல் அதிமுக எங்கள் கொள்கை என்று எதனையும் அறிவிக்கவே இல்லை.  காரணம் கொள்கை என்பது தேவையில்லை என்பதாக உருவான கட்சி அதிமுக.  கொள்கை இருக்கிறது? என்றாயே? என்பவர்களிடம் தான் விவாதிக்க முடியும்.  எதுவும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?  அது தான் காலம் நமக்கு ஏ1 குற்றவாளியைத் தந்தது.

சுயமாக தன் உழைப்பில் சம்பாரித்து தொடக்கத்தில் ஸ்னூக்கர் கிளப் தொடங்கி தமிழ் கூறும் நல் உலகத்திறக்கு சேவை செய்து, திடீரென்று படத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த உதயநிதி இன்றைய சூழலில் தமிழகத்தில் ஓரளவுக்குத் தெரிந்த நடிகராக மாறியுள்ளார்.

ஸ்டாலின் மகன் இத்தனை படங்கள் எடுத்தாலும், நடித்தாலும் திமுக வில் கொள்கைகள், கட்சி, பேனர், சின்னங்கள் எதுவும் படங்களில் வராது. காரணம் கட்சியால் நாம் வளர வேண்டும். ஆனால் நம்மால் கட்சி ஒரு துளியும் வளர்ந்து விடக்கூடாது. அதற்கென்று ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் வாழ் நாள் முழுக்க இதற்காகவே வாழப் பிறந்தவர்கள் என்று அர்த்தமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  காரணம் தொழில் என்பது வேறு. கொள்கை என்பது வேறு.  இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.

தவறில்லை. 

மாற்றங்கள் பலவற்றை நம்மிடம் கொண்டு வந்து கொண்டே தான் இருக்கும். 

எம்.ஜி.ஆரை கூத்தாடி என்று இன்று வரையிலும் அழைப்பவர்கள் அவர் திமுகவின் சின்னத்தையும், கொள்கைகளையும், அண்ணாவின் முகத்தையும் தமிழக மக்களிடம் தன் படங்கள் மூலம் கொண்டு சேர்த்து இருக்காவிட்டால் கலைஞர் இன்னமும் கூடக் கூடுதலாக உழைத்திருக்க வேண்டியதாக இருக்குமே? 

ஆனால் இதைப் பற்றியெல்லாம் ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது. 

அவருக்குப் பேச்சுக்கலை இயல்பாகத்தான் வருகின்றது. ஆனால் அதனை அவரே கெடுத்துக் கொள்கின்றார். பேச்சுக்கலை இனி எழுதுவது போலப் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அதற்கு முயன்று அவர் சிக்கிக் கொள்கின்றார். அவரால் ஆங்கிலம் பேச முடியாது என்று தெரிந்தால் அந்தப் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. இலக்கியத்தில் பரிட்சயம் இல்லை. உலக நிகழ்வுகளை வைத்து உதாரணம் காட்டி கை தட்டல் வாங்க வேண்டிய அவசியமில்லை. 

காரணம் வந்து உட்கார்ந்தவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. வைகோ பேசிய கிரேக்க கதை எல்லாமே இன்று வரையிலும் கிண்டலாகத்தான் பேசப்படுகின்றது. ஏன் ஸ்டாலின் கவலைப்பட வேண்டும்? கலைஞர் மகன் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது. கட்சியில் தனிக்காட்டு ராசா என்று இந்த மாநாடு நிரூபித்து விட்டது. உள்ளே இருப்பவர்கள் இனி தன்னைச் சார்ந்து தான் செயல்பட்டுஆக வேண்டிய நிலையை உருவாக்கியாகி விட்டது. இனி ஏன் கவலை? 

பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தயக்கத்துடன் பேசுகின்றார். நேற்று வந்த டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களைக் கதற அடிக்கின்றார். எல்லாப் பந்துகளையும் சிக்ஸராக விளாசுகின்றார். அவர் அனுபவம் என்ன? ஸ்டாலின் அனுபவம் என்ன? காரணம் நமக்கு என்ன முடியுமோ? அதைத்தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் போல நாமும் செய்ய வேண்டும் என்றால் அது கழைக்கூத்தாடி வாழ்க்கை போலவே அமைந்து விடும். அப்படித்தான் ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை அமைந்ததுள்ளது. 

இந்தச் சமயத்தில் உதயநிதி வேறு உள்ளே வந்துள்ளார். 

இவர் படித்து, கற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. காரணம் கட்சியை விடக் கட்சிக்குள் இருக்கும் சொத்துக்கள் முக்கியம் என்ற நிலையில் இருக்கும் போது அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசிய அவசரம் இருப்பதால் உதயநிதியும் கட்சியில் இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லாம். 

பேச்சின் மூலம் தன் இடத்தை அடைந்தார் கலைஞர். பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் ஸ்டாலின். 

இவர்கள் இருவருக்கும் இல்லாத வியாபாரம் என்றால் லாபம். லாபம் தரக்கூடிய விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதனை கற்றுக்கொண்ட அடுத்தத் தலைமுறை உதயநிதி களத்தில் இறங்கியுள்ளார். 

அப்படியென்றால் திமுகவின் கொள்கை? 

இருப்பவனுக்கு வாய்ப்பு. இல்லாதவனுக்கு? 

கலைஞர் ன் கடைசி ஆட்சி காலத்தில் அவருக்குத் தினந்தோறும் பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது.இந்த விழாக்கள் தான் அவரை செய்ய வேண்டிய நிர்வாகத்தில் இருந்து விலக்கி இருக்க வைத்து கடைசியில் கழிசடையை அரியணை ஏற காரணமாக இருந்தது.

இந்த விழாவைப் பார்த்து விட்டு நாம் பிழைப்பைப் பார்க்கலாம். 

புள்ள குட்டிகளைப் படிக்க வைக்கனுமே?


21 comments:

G.M Balasubramaniam said...

நானும் அந்தக் காலம் முதல் கலைஞரின் எழுத்துகளை படித் திருக்கிறேன் சங்ககாலைலக்கியங்களை எளிதாக எடுத்தாளும் இவரது சாதனை ஆச்சரியமூட்டும் நான் நாடகங்களை இயக்கிக் கொண்டிருந்தபோது நடிகர்களைத் தேர்வு செய்ய கலைஞரின் வீரத்தாய் வசனத்தைப் பேசக் கொடுப்பேன் அதை நன்றாக வாசிப்பவர்களுக்கே வாய்ப்பு

தி.தமிழ் இளங்கோ said...

நண்பரே, இந்த தொடர் பதிவின் வரிசை எண்.13 என்று இருக்கிறது. 11 இற்குப் பிறகு வரவேண்டிய "மேலும் சில குறிப்புகள் 12" - என்ன ஆனது?

ஜோதிஜி said...

உன்னிப்பாக கவனித்தமைக்கு நன்றி. வருகின்ற சித்திரை 1 சன் டிவி 25 வருட விழா கொண்டாடுகின்றார்கள். எழுதி வைத்துள்ளதை அன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பதால் சற்று மாற்றியுள்ளேன்.

bandhu said...
This comment has been removed by the author.
Anonymous said...

கழிசடை அரியணை ஏற காரணமாக இருந்தது வேறு என்று நினைக்கிறேன். கலைஞர் மிக அதிக அளவில் தொலை நோக்கு திட்டங்களையும், எளிய மக்களுக்கான திட்டங்களையும் செயல் படுத்தி வந்தார். அவர் உழைப்பு அத்தகையது. விழாக்களில் இருந்ததால் குறைவுபட்டு இருக்காது. அத்தனையும் மாற்றியது ஈழ போராட்டம். எதற்கெடுத்தாலும் கபட நாடகம் என்று சொல்லி எடுத்த அத்தனை முயற்சியையும் கெடுத்தது ஈழ தாயும், பேச்சு புலிகளான வைகோ, நெடுமாறன், சீமான். அச்சமயம் திருமா அனைவரையும் ஒன்று படுத்த பட்ட பாடு மிக அருமை. இன்றும் கழிசடை கூட்டம் தமிழகத்தில் என்ன அளவிற்கு தொலை நோக்கு திட்டங்களை செய்தார்கள் என்று பார்த்தால் மிக சொற்ப அளவே. மேலும் தொடர்ந்து பார்பன ஊடகங்கள் திமுகவின் சாதனைகளை மழுங்க அடித்து இன்பம் கண்டனர். இன்று இந்த அவல ஆட்சி நடை பெறுவது கண்டு பார்பனர் கேவலமாக பேசுவது அம்மா இல்லாததால். இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் போய் கொடநாட்டில் படுத்து தூங்கி உல்லாசி வாழ்வை தொடர்ந்து இருப்பார். மக்கள் எப்போ ஒரு அறிக்கை வரும் தூக்கி கொண்டாடலாம் என்று இருப்பார்கள். மக்களுக்கு ஏற்ற ஆட்சியே கிடைகிறது. வேதனை என்னவென்றல் அதை அமைப்பவன் பார்பான். இந்த நாட்டில் அவன் இல்லாமல் எதுவும் நடக்காது. அமெரிக்கா நம்மில் மூன்றில் ஓர் பங்கு மக்கள் உள்ள முன்னேறிய நாடு. காரணம் அங்குள்ள சட்டம் ,மக்கள் தொகை அனைவருக்கும் வளர்ச்சியை முடிந்தவரை சமமாக கொடுக்கிறது. நம் நாட்டில் எண்பது சத மக்கள் எல்லாவற்றிற்கும் போராட்டம் நடத்தி அடிபட்டு சக வேண்டி உள்ளது. சட்டம் எல்லாம் எளிய மக்களுக்கே. ஜெ இருந்திருந்தால் தீர்ப்பு இப்படி இருக்குமா? இப்போதும் எந்த போராட்டதிற்காவது வருகிறானா பார்பான்?. ஆனால் எதையும் திசை திருப்பும் சக்தி அவனிடம் உள்ளது. அனைத்து ஆட்டமும் மக்கள் தூங்கும் வரையே. இயற்கை எங்கே கொண்டு போகிறது என்று பார்ப்போம்.

Amudhavan said...

கலைஞர் பற்றியும் அன்றைய அரசியல் பற்றியும் உங்கள் பார்வை பிரமாதம். ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. எந்தவித ஊழலும் செய்யாமல், பணம் என்பதைப் பற்றியே கிஞ்சிற்றும் கவலைப் படாமல் ஆட்சியையும் அரசியலையும் நடத்திக்கொண்டு போய்விடலாம் என்று கலைஞர் நினைத்திருந்தாரேயானால் இன்னமும் சீக்கிரமாகவே அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரைத் தோற்கடித்து வீட்டுக்கே அனுப்பிவைத்திருப்பார்கள் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. பின்னால் ஆபத்து வரலாம் என்றாலும் பொருளாதார ரீதியிலும் தன்னையும் தன் சுற்றத்தையும் வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தது சரியானதே என்பதையே இன்றைய பொருளாதார உலகம் காட்டுகிறது. ஸ்டாலினோ உதயநிதியோ எப்படி வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்....

bandhu said...

/*பின்னால் ஆபத்து வரலாம் என்றாலும் பொருளாதார ரீதியிலும் தன்னையும் தன் சுற்றத்தையும் வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தது சரியானதே என்பதையே இன்றைய பொருளாதார உலகம் காட்டுகிறது. */
:-)

Anonymous said...

"ஈழ போராட்டம்"
.
செம காமெடி , ஈழ போராட் டம் உச்சத்தில் இருந்த போதே திமுக வென்றது . 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வென்றது ..
ஈழ விவகாரம் தமிழக அரசியலை பாதிப்பதில்லை
.
அதுக்கு அப்புறம் தான் கலைஞர் ஜெயாவிடம் தோற்றார் . ஒரு தடவை தோல்வி ஏற்றுக்கொள்ளலாம்
ஆனால்
ஜெயா மோசமான ஆட்சி வழங்கியும் இரண்டாவது தடவையும் திமுக தோல்வி அடைய காரணம் என்ன ?
.

ஜோதிஜி said...

நீண்ட நாளைக்குப் பிறகு உள்ளே வந்து கருத்தை எழுதி விட்டு ஏன் நீங்களே நீக்கினீர்கள் என்பது எனக்கு குழப்பமாக இருந்தாலும் நீங்க எழுதிய கருத்துக்கு என் பின்னூட்டத்தை தர விரும்புகிறேன். நடுநிலைமை என்பது எங்கேயும் கிடையாது. நிச்சயம் ஒரு பக்கச் சார்ப்பு ஏதோவொரு இடத்தில் இருந்து தான் ஆகும். அமுதவன் போன்றோர் கலைஞரின் அதி தீவிர விசுவாசிகள். அதற்கு அவர்களிடம் நியாயமான காரணங்கள் வைத்துள்ளார்கள். ஆனால் திமுக குறித்து மாற்றுக் கருத்து உள்ளவன். ஆனால் கலைஞர் என்ற தனி மனிதர் மேல் சற்று வித்தியாசமான பார்வை கொண்டவன். 25 வருடங்களாக நிர்வாகம் சார்ந்த வேலைகளில் இருப்பதால், இதில் உள்ள சாதகம், பாதகம், கவிழ்த்து விடல், தப்பித்தல், தன்னை நிரூபித்தல், சோர்வடையாமல் தன்னை மேலும் புடம் போட்டு மீண்டு வருதல், இதற்கிடையே தன் ஆரோக்கியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் போன்ற பல பரிணாமங்களை கலைஞர் அவர்களிடம் இருந்து நான் எப்போதும் எடுத்துக் கொள்ள தயங்கியதில்லை. இந்தப் பக்குவம் பலருக்கும் இருக்காது. அவரை ஒரு மோசமான அரசியல்வாதியாக ஊடகங்கள் பிம்பம் அமைத்து அதிலும் வெற்றி கண்டுள்ளது. அவர் மோசமான ஊழல்வாதி என்று சொல்லும் போதே தவறு செய்யாதவர்கள் கல் எறிய வாருங்கள் என்றால் எவரையும் காணவில்லை. இது தமிழகத்தின் எதார்த்தம். மற்றபடி அவரின் வாரிசுகள் குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அதைப் பற்றி எழுதும் போது (எழுதுவேன்) திமுக அபிமானிகள் என் மேல் கோபம் கொள்வார்கள். என் பார்வையை என் மொழியில் எழுதுவதை எப்போதும் தயங்குவதே இல்லை.

ஜோதிஜி said...

ஒரு வகையில் அமுதவன் சொன்னதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இங்கே அரசியல் உலகத்தில் சமூகப் பார்வை கொண்டு, ஊழல் இல்லாமல், நல்ல கருத்துக்களை விதைக்க வந்த எவரையும், அப்படி வாழ்ந்த எவரையும் தமிழர்கள் ஆதரித்ததே இல்லை. நம் முன் அப்போதும் இப்போதும் ஏராளமான உதாரணங்கள் உள்ளது. மக்களின் எண்ணப்படியே அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். உருவாகின்றார்கள்.

ஜோதிஜி said...

இன்று வரையிலும் திமுக என்றாலே மக்கள் மனதில் அச்சம் இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் நேரிடையாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விசயங்களில் தலையிடுவது, அராஜக வழியில் செயல்படுவது, தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வது இது போன்ற பல காரணங்கள்.

ஜோதிஜி said...

மயக்கும் தமிழ் அது.

Justin Robers said...
This comment has been removed by the author.
Anonymous said...

கலைஞர் செய்த ஒரு தவறுதான், இந்த கழிசடையை, தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. 1988 இல், ஜானகி அம்மையார் ஆட்சியை கவிழ்க்க இந்த கழிசடை முயற்சி செய்த போது, ஜானகி தரப்பினர், கலைஞரின் திமுக ஆதரவை எதிர்பார்த்தனர். ஆனால் கலைஞர் மறுத்து விட்டார்.
இதனால் ஜானகி அம்மாள் ஆட்சி கவிழ்ந்தது. அதிமுக உடைந்து, மீண்டும் இணைந்து, கழிசடை கைக்குச் சென்றது.
கலைஞர் மட்டும் ஜானகி அம்மாளுக்கு ஆதரவு கொடுத்திருந்தால்.
ஒரே வருடத்தில், கட்சியினர், அந்த கழிசடையை துடைத்துப் போட்டிருப்பார்கள்.
அதன் பின்பு வந்த தேர்தல்களில், கலைஞருக்கு 4-5 முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

bandhu said...

விளக்கத்துக்கு நன்றி. ஏன் நீக்கினேன் என்றால் இது உங்கள் தளம். உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் இடம். இதில் உங்கள் சார்பை குறை சொல்வது எந்த விதத்திலும் சரியில்லை என்பதால் நீக்கினேன்.

bandhu said...

அதாவது, எப்படியாவது பொருள் ஈட்டுபவன் பிழைக்கத் தெரிந்தவன். இதையே இன்றைய பொருளாதார உலகம் காட்டுகிறது. இதையே நீரவ் மோடி, மல்லய்யா போன்ற பிழைக்கத் தெரிந்தவர்கள் காட்டுகிறார்கள்!

(கண்டிப்பாக இது திசை திருப்பும் உத்தியோ, இவரை போல அவர் என்று காட்டுவதோ இல்லை. தன்னை வளப்படுத்திக் கொள்வது தவறே இல்லை என்று சொல்ல ஆரம்பித்தால் அது எங்கே போய் முடியும் என்று சொல்கிறேன்)

ஜோதிஜி said...

நான் எழுதுவது தான் சரி என்ற நோக்கமே தவறு. அதன் மூலம் மற்றவர்களின் கருத்துக்கள் என்ன? என்று அறிவதே என் நோக்கம். ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் அனுபவங்கள் வாயிலாக நாம் ஒவ்வொருவரையும் பார்க்கும் பார்வை மாறிக் கொண்டேயிருக்கும்.

ஜோதிஜி said...

எப்படியோ பிழைக்கத் தெரிந்த மனிதன் மட்டும் தானே தற்போதைய உலகில் அதுவும் பொருளாதார ரீதியாக தன்னை வளப்படுத்திக் கொண்டவன் மட்டுமே தானே இங்கே வெற்றியாளனாகத் தெரிகின்றான். மற்றவர்கள் அனைவரும் அனுபவங்களை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுக்க பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றான்.

bandhu said...

I do not agree. இப்படி இருந்தால், values என்பதற்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடும்!

ஜோதிஜி said...

நான் வாழும் உலகில் தினசரி சம்பாரித்தால் தான் அடுத்த வேளை உணவு உண்ண முடியும் என்கிற ரீதியில் நடையோரா வியாபார கடைகள் வைத்திருப்பவர்கள் தொடங்கி, வீட்டுக்கே வந்து பொருட்கள் விற்பவர்களை வரைக்கும் உண்டான மனிதர்களிடத்தில் மட்டுமே நீங்க சொல்லியுள்ள நேர்மை நீதி நியாயம், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல் தன் வாழ்க்கையை வாழ்பவர்கள் இருக்கின்றார்கள். மற்றபடி சமூகத்தில் 80 சதவிகித மக்கள் எப்போது தனக்கான வாய்ப்பு வரும். அது எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற ரீதியில் தான் வாழ்கின்றார்கள். அடித்தட்டு மக்களின் இந்த குணங்கள் என்னை ரொம்பவே யோசிக்க ஆச்சரியப்பட வைத்துக் கொண்டு இருக்கின்றது. இது தான் இங்குள்ள கட்டுமாணம் சிதையாமல் இருப்பதற்கு காரணமாகவும் உள்ளது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி.