Saturday, October 31, 2009

வெயிலான்

எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சரி தமிழர்கள் என்பவர்கள் எடுப்பார் கைபிள்ளை தான்.  இரண்டு தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது வரவே வராது.  ஆனால் மூன்றாம் நபர் அவனை கையாளும் போது அப்படியே பெட்டி பாம்பாய் அடங்கி அவர் சொன்ன சொல் பேச்சு கேட்பதில் தமிழனை விட வேறு எவரையாவது எந்த இன மக்களையாவது நம்மால் சிந்தித்து பார்க்க முடியுமா?

தமிழனை ஆண்ட, ஆள வந்த, ஆள்கின்ற தலைவர்களும், தமிழனை ஆளுமைபடுத்தும் கொள்கையாளர்களும் மாற்றம் பெற்றதாக இருந்து கொண்டே இருக்கும்.  ஆனால் "தமிழன் உணர்வுகள்" என்பது சங்ககாலம் முதல் இன்று வரையிலும் ஒரே மாதிரி இருப்பது உலகத்தில் ஒரு விதமான சாதனை தான்.  சந்தேகமே இல்லை.

தனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை எப்போதுமே அவன் களைவது இல்லை. குறிப்பாக அவன் தன்னுடைய இனத்தின் நிறம் குறித்து தமிழன் அடையும் கவலை அளவிடற்கரியது.

அதிகமான வெயிற்கதிர்களை தாங்குவதற்காக மெலனின் என்ற நிறமிகள் தோலில் உள்ளன.  மிகுதியாக ஒளி உள்வாங்கப்படும் போது மெலனின் அதிகமாக உற்பத்தியாகி தோலை கருப்பாக மாற்றி விடுகிறது.  ஆனால் இந்த இயற்கை செய்யும் விந்தையை புரிந்து கொள்ளாத தமிழனுக்கு எப்போதுமே சிவப்பு மேல் தான் அதிக அலாதி பிரியம் தான்.

சங்க காலம் முதல் வழிபாடு என்பது தமிழனின் வாழ்வியலோடு பின்னிப்பினைந்த ஒன்று.  ஆனால் அவன் வணங்கும் தெய்வம் கூட நல்ல புத்தியை இன்று வரை கொடுக்கவில்லை.  கும்பிடும் கிருஷ்ணன், சிவன், திருமால் ஏன் கிராமத்து அத்தனை தெய்வங்களும் கருப்பு நிறத்தில் தான் இருக்கிறார்கள்.  நாம் படிக்கும் எழுத்துக்கள் கருப்பாக இருந்தால் தான் அது எழுத்து.  பார்க்கும் பார்வையில் கருப்பு விழிகள் இருந்தால் தான் அதற்குப் பெயர் நல்லக்கண்ணு.

கருப்பு உலக அழகி கிளியோபாட்ரா, உலகத்தில் உள்ள அத்தனை விளையாட்டுகளிலும் முதன்மை இடத்தை பிடிக்கும் நீக்ரோ இன மக்கள் கருப்பு நிறம் தான்.  ஆனால் இத்தனை விசயங்களையும் தமிழன் என்றுமே ஊன்றிப் பார்ப்பதே இல்லை.  காரணம் ஊன்றுகோலுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவன் தமிழன்.

உலகம் எத்தனை தூரம் விஞ்ஞானம், மெய்ஞானம் மாற்றம் அடைந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அன்றாடம் தன்னுடைய கடமைகளில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் ஆத்மார்த்தமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கடைக்கோடி படிப்பறிவு இல்லாத கிராமத்தானும் கருப்பு நிறம் தான்.  அவன் உழைப்பில் தங்களிடம் வந்து சேரும் அத்தனை பொருட்களை உண்டு தின்று செரித்து வாழ்ந்தாலும் தமிழன் புத்தி மட்டும் செறிமானம் ஆவதில்லை.

கருப்பு என்பது ஒரு நிறத்தின் கதை அல்ல. ஒரு இனத்தின் கதையும் அல்ல.  இயல்பாக தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற் போல் உருவாவது.  உருவானது.

உள்ளுக்குள் எந்த வஞ்சகமும் இல்லாமல் ஆண்டவன் யார்? ஆள்பவன் யார்? என்று தெரியாமல் வாழ்ந்த அத்தனை தமிழன மக்களின் பெரும்பான்மையான தமிழர்களின் நிறம் இந்த கருப்பு தான்.

பழங்கால இலக்கிய பாடல்களில் வர்ணிக்கப்படும் அத்தனை சமாச்சாரங்களிலும், தலைவன் தலைவி ஊடல்களிலும் இந்த கருப்பு தான் பிரதானமாக வருகிறது.  சிலாக்கியமாக வர்ணிக்கப்படுகிறது.  சிவப்பு என்று கூட சொல்லப்படுவதில்லை.  சிவப்பு என்று சொன்னீர்கள் என்றால் வெளுப்பு என்ற அர்த்தத்தில் வந்து விடும்.  உடலில் வெளுப்பு வந்து விட்டது என்றால் நவீன விஞ்ஞான அறிவு வரைக்கும் சோகை என்ற அர்த்தத்திலும் வந்து தொலைத்து விடுகிறது.  ஆனாலும் இந்த சிவப்பு ஆசை தமிழனுக்கு விட்டபாடு இல்லை.

இன்று வரையிலும் ஆணாக, பெண்ணாக இருந்தாலும் சிவப்பு கணவன், சிவப்பு மனைவி, காட்சியில் வரும் கதாநாயகன், கதாநாயகி சிவப்பாக இருந்தால் தான் ரசிக்கின்றோம்.  பிறக்கும் குழந்தை கூட சிவப்பாக இருந்தால் பெற்றவளுக்குக்கூட பெருமூச்சு இயல்பான மூச்சாக மாறுகிறது?

ஆண்ட சிவப்புத்தோல் பின்னால் போன அத்தனை தமிழர்களுக்கும் எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், "ஐயா, சாமி,தொரை"  என்று அலைந்து திரிந்தாலும் "சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற நகைச்சுவை வசனம் கூட உண்மையாக இருந்து தொலைக்கலாம்.

வளர்ந்த நாடுகளில் பிச்சை எடுப்பவர்கள் கூட ஒரே இடத்தில் நின்று கொண்டு, தனக்குத் தெரிந்து இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு நாகரிகமாகவே நின்று கொண்டு யாசகம் கேட்பார்கள். ஆனால் இங்கு மட்டும் அதற்கென்று ஒரு மொழி, வேடம்.  பிறந்த குழந்தைகள் கூட இந்த தொழிலுக்கு மூதலீடு தான்.  என்ன செய்வது?  தாழ்வு மனப்பான்மை என்பது 3000 வருடத்தின் எச்சமும் மிச்சமுமாய் இருக்கும் போது?  மரபு மூலக்கூறை உடைக்கும் விஞ்ஞானிகள் கைக்குத்தான் தமிழனின் மூலக்கூறை ஓப்படைக்க வேண்டும்?

தனது இனத்தை, மொழியை, பண்பாட்டை, காலச்சாரத்தை போற்றி புகழவேண்டாம். புழுதி வாறி தூற்றாமல் இருந்தால் போதாதா? அவ்வப்போது வந்து தோன்றும் திடீர் தலைவர்களையாவது காரண காரியத்தோடு "பார்க்கத் தெரிந்த" வனா தமிழன்?    இல்லை இல்லை வளர்ந்து விட்டோம்?  வளர்ந்து கொண்டுருக்கிறோம் என்ற கணக்கும் ஒரு பக்கம் இருக்கட்டும்!

அக்கரையில் போய் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் கட்அவுட் கலாச்சாரத்தை, விரும்பியவர்களின் வினோத கோலத்தை தாங்குவதும், அலங்கோலம் என்று தெரிந்தும் அசராமல் பின்பற்றுவதும் எந்த வளர்ந்த நாகரிகமாக கருத முடியும்.  எப்போதும் இடங்கள் மட்டும் வேற்றுமையாக இருக்கும்.  இது போன்ற அத்தனை பழக்கவழக்கங்களும் அட்டகாசமாக அனைத்து தமிழர்களுக்கு பொருந்தி போய்விடும்.  அது தான் தமிழனின் தனித்தன்மை.

திரையில் உள்ளவரை நேரில் பார்க்கும் பரவசமும், அவரின் உரைக்கு முந்திச் செல்லும் ஆர்வமும், திகட்டாமல் திரும்பி பார்க்கும் பரம திருப்தியும் கொண்டவர்கள் தமிழர்கள்,

சிந்தனையாளர்கள் கூட்டும் கூட்டத்தை பார்த்ததும் சிறகடித்து பறந்து விடுவது ஏன்?  ஆமாம் உணர்ச்சியால் தூண்டப்பட்டு உருவம் இருந்தும் முண்டமாக வாழ விரும்புவன்.

உணர்ந்து கொள் என்றால் உதைக்க வந்து விட மாட்டானா?  தெளிவாக புரிந்தவர்கள் தான் ஆட்சியாளர்கள்.  புரிந்த காரணத்தால் தான் டெல்லியில் இருப்பவர்கள் எப்போதுமே புன்கையுடன் இருக்கிறார்கள்.

எதைக்கொடுத்தால் மாறுவான்?  எதைப்பேசினால் மறப்பான்?  எதைத்தொட்டால் சீற்றம் பெறுவான்?  எங்கு தொடங்கினால் நம்மை வந்தடைவான்?  இப்போது புரியுமே?  ஆள்பவர்களுக்கு அறிக்கை என்பது எத்தனை அற்புதமாக தயாரிக்க உதவிய காரணிகள் இவை என்று?

மேடைப்பேச்சு என்றாலும் அலங்கார நடை வேண்டும்.  கன்னியர் நடந்தாலும் அலங்கார ஆடை வேண்டும்.  நிறம் என்ற காரணத்தால் உயர்ந்த பதவிக்காக உச்சத்தை தொட முடியாமல் எச்சமாய் போய் நொந்து போனவர்களின் வரிசை மிக நீளம்.  அன்றும் இன்றும் என்றும்?

தாழ்வு மனப்பான்மை தமிழனின் பிறவிக்குணம்.  பாட்டிலில் அடைப்பட்ட நண்டுக்கதையின் மேலேறி வரும் கதை தெரிந்தாலும், நம்மவர்களின் அத்தனை புத்தி மாறாது.  ஏன் உரைக்காது.  மீறிப் பேசினால் நீ ஓழுங்கா என்று ஐயன் திருவள்ளுவரை இழுத்து கதறவைத்து விடுவான்.  தெரிந்தாலும் நாம் எப்போதும் போல அமைதியாக அத்தனையையும் பொறுமையாக சகித்துக்கொள்வோம்.

இந்த ஆட்டத்தில் தொடர்ந்தது தான், நீயும் வேண்டாம்?  நானும் வேண்டாம்?  மூன்றாம் நபரை ஆதரிப்போம் என்று மூப்பனார் பிரதமர் பதவி போகாத வரைக்கும்?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாரபட்சம் இல்லாதது.    படித்தவருக்கும், பாமரனுக்கும் பொதுவானது,  இடம், சூழ்நிலை மட்டும் மாறியதாய் இருக்கும்.  இக்கரையில் இருந்தால் என்ன?  கடல் தாண்டி வாழும் அக்கரையில் இருந்தால் என்ன?

எதிலும் அக்கறையில்லாமல் ஆள்பவர்களையும், ஆடுபவர்களையும் ரசித்துக் கொண்டு நசுங்கிப்போய்க்கொண்டுருக்கிறோம் என்பது தெரியாமலேயே பயணிப்பவன் தமிழன்.

Friday, October 30, 2009

உண்மைத் தமிழன்

தமிழர்களின் வாழ்க்கையில் அறிவுக்கு கொடுக்கும் மரியாதையை விட உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மரியாதை மிக அதிகம்.  சங்ககால இலக்கியங்களில் காணப்படும் தேவையில்லாத புகழ்ச்சி பாடல்கள் முதல் இன்றைய குத்துப்பாடல்களின் மகிழ்ச்சி வரையிலும்.  இது சரியா? தவறா? என்று யோசிப்பதே இல்லை. தன்னை கவர வேண்டும்.  தன்னுடைய புலன்கள் தூண்டப்படவேண்டும்.  அது திரை என்றாலும், அரசியல் தலைவர்களின் உரையாக இருந்தாலும் சரி?

ஒவ்வொரு தலைவர்கள் இறக்கும் போது நம்மவர்களின் உணர்ச்சி தூண்டுதல் மிக அதிகமானது.

தற்கொலை,தீக்குளிப்பு, சாலை மறியல், சமூகத்தை நிர்கதியாக்கும் அத்தனை சம்பவங்களும் அன்று முதல் இன்றுவரையிலும்.  ஆனால் வெவ்வேறு பெயர்கள்.  தூண்டப்பட்டவனின் குடும்பம் துண்டாக நடுத்தெருவில் நிற்கும்.  அதனால் கிடைத்த ஆதாயத்தை பெற்ற தலைவர் அச்சமில்லாமல் ஆட்சியில் அமர்ந்து இருப்பார்.

இன்றைய இன அழிப்பு போராட்டத்தில் எத்தனை உயிர்கள் மாண்டது? எத்தனை போராட்டங்கள்?  எத்தனை அறிக்கைகள்? எத்தனை எத்தனை மேடைப்பேச்சுகள்?  என்ன முடிவு கிடைத்தது?

தொடக்கத்தில் திரையில் கோலோச்சிய வாழ்ந்த பாகவதர் குறித்து பல கதைகள் இன்னமும் உண்டு.  திருச்சிக்கு வருகிறார் என்றால் காலை முதல் ரயில் நிலையத்தில் காத்திருந்த உணர்ச்சிக்கூட்டம் அது.  தொடர்ந்த கதாநாயகர்கள் முதல் நேற்றைய இடுப்பைக்கிள்ளிய கதாநாயகி வரையிலும் உணர்ச்சி தமிழனாகவே வாழ்ந்து வருகின்றான்.

அறிஞர் அண்ணா அவர்களே "நானும் எம்.ஜி.ஆரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் எம்.ஜி.ஆர் தான் வெற்றி வாகை சூடுவார்" என்று அவர் கூறிய கருத்து இங்கு அத்தனை முக்கியமானது.  காரணம் சங்ககாலம் முதல் நேற்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள்.  உள்ளுர் தமிழர்கள் தான் இப்படி என்றால் அக்கரையில் வாழும் தமிழர்கள் இதிலும் இன்று வரையிலும் அந்த உணர்ச்சிகளை அக்கறையாகத் தான் பாதுகாத்து பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திரைப்பட வெளிநாட்டு உரிமை என்பது ஒரு நடிகருக்கு, தயாரிப்பாளருக்கு ஒரு காமதேனு.  இன்று வரையிலும் இன அழிப்புக்கு என கூட்டப்படும் அத்தனை கண்டன கூட்டங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நடிகரும் போய் கலந்தே ஆக வேண்டிய கட்டாயம்.  உணர்வு பூர்வமான, நல்ல உள்வாங்கலான எந்த கருத்தையும் எவரும் அங்கு சொல்லிவிட முடியாது.  அந்த தீர்ப்பு நடிகரின் நடிப்பு வாழ்க்கையையே திருத்தி எழுதிய தீர்ப்பாக அமைந்து அவரை திக்குத் தெரியாத காட்டில் நிறுத்தி விடுவது போல் ஆகிவிடும்.

அதனால் தான் நல்ல விசயங்களைத் தேடி படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தாலும் இன்று வரையிலும் பரபரப்புச் சம்பவங்கள் என்று கட்டம் கட்டிய செய்திகள் , கிசுகிசு செய்திகள் நமக்கு அத்தனை உற்சாகமாய் இருக்கிறது.

விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, நாவலர் நெடுஞ்செழியன், கர்மவீரர் காமராஜ் போன்றவர்கள் தேர்தலில் தோற்றுப் போயிருப்பதை நீங்கள் எந்த வகையில் பார்ப்பீர்கள்? அறிவை விட அன்று தூண்டும் உணர்ச்சிகளுக்குத்தானே நம் தமிழர்கள் மதிப்பு அளிப்பவர்கள் என்பதில் மாற்றம் ஏதும் உண்டா?

அறிவு வசப்படும் மேலைநாடுகளில் வாழும் மக்கள் இதற்கு நேர்மாறாக வாழ்கின்றனர். "வெற்றிச்சின்னம் நமதே"  என்று இரண்டு விரல் காட்டி பிரிட்டன் மக்களை தன்னுடைய ஆளுமையில் வைத்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தேர்தலில் ஏன் தோற்கடித்தார்கள்.   ஜப்பான், ஜெர்மனின் தொடர் குண்டு வெடிப்புகளை மிக லாவலமாக கையாண்டு எங்களை, நாட்டை காப்பாற்றியது நீ தான்?  ஆனால் உன்னுடைய ஆளுமை என்பது போருக்கு மட்டுமே சரியானது என்று கருதிக்கொண்ட மக்கள் கொடுத்த பரிசு தான் தோல்வி.

ஆனால் இங்கு ஐந்து வருடங்கள் நேர்மையாக ஆட்சி செலுத்த முற்பட்டாலும் தேர்தலுக்கு பத்துநாட்கள் முன்னால் இயற்கையாக செயற்கையாக இறக்கும் தலைவர் மூலம் அனுதாபத்தின் மூலம் எப்படி மொத்த ஐந்து வருட தியாகமும் அடிபட்டு போகின்றது?

இன்றுவரையிலும் கேரளாவில் நடிகர் என்பவர் அரசியலில் நுழைய வேண்டும் என்று கனவு கூட காண்பது இல்லை.  ஆள்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அடுத்த ஆட்சி நம்முடையது இல்லை என்ற எண்ணத்தில் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.  காரணம் அறிவு உந்தப்பட்ட உள்வாங்கல் கொடுத்த பயம் அது.

உலகத்தில் உள்ள அத்தனை இனத்திலும், சமூகத்திலும் நீங்கள் தேடிப்பாருங்கள்.  நம் தமிழனத்தில் உள்ள மேதைகளை விட வேறு எவரையும் நீங்கள் கண்டு விட முடியாது.  இது அதிகப்படுத்தி சொல்லப்பட்டவை அல்ல.  திருவள்ளுவர் ஒருவர் போதும்.  அன்றைய நிலையில் எந்த புத்தகத்தை, எந்த ஆராய்ச்சி நூலை வைத்துக்கொண்டு, குறிப்பு எடுத்துக்கொண்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலை குறி சொல்பவன் போல் அடியில் நிறுத்தியவர் போல் எவரையும் உங்களால் காட்ட முடியுமா?

விஞ்ஞானம், மெய்ஞானம், அறிவு, ஆட்சி, ஆளுமை, அதிகாரம், களவு, கலவு தொடங்கி அவர் தொடாத துறை உண்டா?  இன்று மேல் நாட்டு அறிஞர்கள் என்று புளாங்கிதம் அடையும் எந்த மேற்கோளும் திருவள்ளுவரின் புலன் அடக்கத்தில் அன்றே கிடைத்த ஞான அறிவு.

முப்பாலையும் உங்களுக்கு தாய்ப்பால் போல் கொடுத்த அத்தனை சுத்தமான பாலையும் நீங்களும் நானும் ஐந்து பத்து மதிப்பெண்களுக்குத் தானே குடித்து வளர்ந்தோம். மேற்கோளுக்காக எடுத்த அத்தனை தமிழின தலைவர்களும், உரை எழுதிய தலைவர்களும் என்ன மாறுதல்களை நமக்கு தந்து விட்டார்கள்?

எத்தனை வருடங்கள் கடந்து போய் விட்டது. இன்னமும் திருந்தாமல் இருந்த காரணத்தால் தானே இன்று ஒரு இனமே முகவரியற்று முள்கம்பிகளுக்குப் பின்னால் திண்டாடிக்கொண்டுருக்கிறது?


மோகம் தரும் கலாச்சாரம்.  ஆடை என்பதை மானத்திற்காக உடுத்திய தமிழ் இனம் இன்று மற்றவர்களை கவனிக்கச் செய்ய வேண்டும் , கவர வேண்டும் என்று "காட்டும் பொருளாக"  மாற்றியுள்ளது.  படையெடுத்து வந்தவர்கள் உருவாக்கிய தாக்கங்கள்.  மதம் என்பது மனிதத்தை விட பெரிது என்று அத்தனை பேர்களை பிரித்தாளும் சக்தியாக மாற்றி உள்ளது.  கடவுள் இல்லை என்பவன் கூட எதையும் உடைத்தாக சரித்திரம் சொல்லவில்லை.  உருவான கலப்பின மக்கள் அத்தனை பேர்களும் மூலம் எது என்பதே தெரியாமல் இடையில் உருவாக்கி சென்றவர்களை தொடர்ந்து உள்ளே தொலைந்தும் போனார்கள். உள்வாங்கவும் அறிவும் வளரவில்லை.  

வளர்த்துக்கொண்டவர்களை வாய்ச்சவடால் மூலம் நிர்மூலமும் ஆக்கிவிட்டார்கள்.

குற்ற உணர்ச்சி என்பது தொடக்கத்தில் குறுகுறுப்பாய் இருந்தது.  இன்று "நீ பிழைக்கத் தெரியாதவன்" என்ற மாயையில் கொண்டு நிறுத்தி இருக்கிறது.  நல்ல சிந்தனை என்று நீங்கள் சொல்ல வந்தால் "நாயை விட கேவலமாக பார்க்கப்படும்" ஒரு சமூக கட்டமைப்பு நம்மை சுற்றி எழுப்பப்பட்டு விட்டது.

இதில் சிக்கிக்கொண்டவர்களை வைத்து சித்து விளையாட்டு காட்டிய கூட்டம் தான் இனத்தின் காவலன், இனமான காவலர், புடம் போட வைத்தவர்கள் என்று பட்டங்கள் சூட்டிக்கொண்டு பதவி சுகத்தில் வெந்ததை தின்று விதி வந்து சாகாமல் அழிந்து கொண்டுருக்கும் இனத்தில் அவலக்குரலை ரசித்துக்கொண்டுருக்கிறார்கள்?

"எதையும் காரண காரியத்தை வைத்து சிந்திக்க பழகு" என்று சொல்லிச் சென்ற தந்தை பெரியாருக்கு வேறு என்ன பட்டம் பொருத்தமாக இருந்து விட முடியும்.  நம்பிக்கைகள் என்பது போய் அதுவே மூட தனத்தின் நம்பிக்கையாய் உருமாற்றம் அடைந்த போது அவரின் எரிச்சல் நமக்கு துப்பும் எச்சல் போல் தெரிந்து. ஆமாம் இன்று மூடத்தனம் குறைந்து இருக்கிறதே தவிர முழுமையாக கரைந்து மறைந்து போய்விடவில்லை.

அறிவு உந்தப்பட்ட மக்கள் என்பவர்கள் தான், மனித சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கி "வணிக நிர்பந்தங்களுக்கான பின்வாங்கல் ஒப்பந்தம்"  தான் இன்று ஐயாமாரு பச்சேயின் பச்சைக்காரியங்களை பலநாடுகளையும் யோசிக்கும் நிலைக்கும் கொண்டு வந்த தொடக்கப்புள்ளியாக மாற்றியுள்ளது.

நம் இனத்தின் முக்கிய புள்ளிகள் எப்போதும் போல முக்கும் புள்ளியாக இருந்து கொண்டு முழுமையும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதை அக்கறையாக பாதுகாத்து அக்கரையில் இருப்பவர்களுக்கு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள்.

மடமை, அறியாமை, அறிவற்ற சிந்தனைகள் எல்லாமே மொத்தமாக வளர்ந்து வளர்ந்து மொத்த சமூகத்தில் தமிழன் என்பவன் உணர்ச்சி தமிழனாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றானே தவிர உண்மைத்தமிழனாக வாழவில்லை.


வாழ முடியாத தூரத்தை விட்டு வெகு தொலைவுக்கு சென்று விட்டான்.  அதனால் தூரத்தில் இருப்பவர்கள் அத்தனை மக்களுமே "ஐயாமாருகளே நீங்கள் அமைதியாக இருந்தாலே நாங்கள் எங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்வோம்.  உங்கள் அக்கப்போர் அறிக்கைகளை வைத்து எங்கள் அவல வாழ்கையை உங்கள் ஆதாரமான அரசியல் வியாபார வாழ்க்கையாக பார்க்காதீர்கள்" என்கிறார்கள்.

குழந்தைகள் பாலூக்கு அழுதால் என்ன?  குலக்கொழுந்துகள் கற்பழிக்கப்பட்டால் என்ன?  தந்திரத்தில் எந்திரமாய் வாழ்பவர்களுக்கு ஏராளமான கணக்குகள் இருக்கும்.  அது நமக்கு புரியாது.

இவர்களின் வழித்தோன்றல்களுக்கு ஒரு நாள் புரியவைக்கும்?

சாபக்கணக்கு என்பது சரித்திரத்தை அவர்களின் மொத்த வாழ்க்கையையும் திருப்பி போடும் கணக்கு.

Wednesday, October 28, 2009

ஓரு ஊரிலே (யாதும் ஊரே யாவரும் கேளீர்)

அக்கரைக்குச் சென்று வாழ வேண்டும் என்று கிளம்பிய கூட்டம் எவருமே விருப்பத்துடன் செல்லவில்லை.  இனம்,மதம்,குலம் ஏற்றத்தாழ்வுகள் தந்த வலிகளும் அவமானமும், அவல வாழ்க்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாழ்ந்த கூட்டம் அது.  "எப்படா கதவு திறக்கும்?  காற்றை சுவாசிக்க முடியும்?" என்று காத்துக்கொண்டுருந்த மக்கள் அவர்கள்.
இலங்கைக்கு சென்ற தொடக்க கூட்டத்திற்கு அங்கு எந்த சம்பளமும் அளிக்கப்படவில்லை.  ஆமாம்.  ஒப்புதல் இருந்தால் உடன் வா?  இல்லாவிட்டால் ஒதுங்கி விடு? என்ற கட்டளைக்கு கீழ்படிந்து அட்டை போல் வாழ புறப்பட்ட கூட்டம் அது.  அப்போது அங்கு வாழ்ந்த சிங்கள மக்களிடம் ஆங்கிலேயர்களின் "அறிவுரை" எடுபடவில்லை.

ஆனால் இலங்கை மட்டுமல்ல.  எந்த நாட்டுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்கூட்டமும் சரி, இன்று வரையிலும் பெரிதான முன்னேற்றமும் அடைந்து விடவில்லை. உருவாக்கிக்கொள்ளவும் இல்லை.  பசிக்கு ஒரு வாழ்க்கை.  ருசிக்கு ஒரு கொள்கை.  எந்த நாட்டுக்குள் வாழ்ந்தாலும் அவர்களின் மரபு என்பது தமிழ் பரம்பரையின் மூலக்கூறு தானே?  என்ன பெரிதான மாறுதல் வந்து விடபோகிறது.

மொத்தத்தில் போதும் என்ற பரம திருப்தி.  அதற்கு மேலும் அருகில் உடனடியாக தோற்றுவிக்கப்படும் ஆலயம்.  போதாதா? அழுது புலம்புவதற்கும், அரற்றி பாடுவதற்கும் அன்றைய தினம் கழிந்து விடும்.  அடுத்த நாள் என்பது விதியின் கட்டளை.
காரணம் தொலை நோக்கு பார்வை என்பதை எப்போதுமே நம்முடைய தமிழர்கள் தொல்லை நோக்கு பார்வை என்று கருதிக் கொள்வதால் இன்று வரையிலும் உலக தமிழினத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அரசாங்கம், ஆளுமை, அதிகார வர்க்கம் என்ற எல்லாமட்டத்திலும் தொடக்கத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் நம்முடைய தமிழர்கள்.

மேலேறிய மேட்டுக்குடி மக்கள் அத்தனை பேருக்கும் மேட்டில் இருந்த காரணத்தால் பள்ளத்தில் இருந்தவர்கள் சிறுபுள்ளியாக தெரிந்த காரணத்தால் அவர்கள் அத்தனை பேருமே முக்கியப்புள்ளி என்ற பெயருடன் முகவரி அற்று காணாமல் போய்விட்டனர்.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு காரணங்கள்.

மனதில் அடுக்கிக்கொண்டு புழுங்கிக்கொண்டு புதையுண்டு போவதில் அத்தனை திருப்தி?  உள் மனதில் உள்ள ஆசைகளை வெறும் சொறிந்து கொள்ளும் அரிப்பு போல் வைத்துக்கொண்டு தானும் போய்ச் சேர்ந்து தன்னுடைய வழித்தோன்றல்களையும் அவ்வாறே உருவாக்கி விட்டு சுத்தமான வாழ்க்கை என்னும் அசுத்தத்தை வைத்துவிட்டு போனதின் எச்சமும் சொச்சமும் இன்று ஒரு இனத்தின் ஓலம் ஓப்பாறி போல் உங்களையும் என்னையும் வந்து அடைந்து கொண்டுருக்கிறது.

தமிழனின் நீண்ட வரலாற்றில் இரண்டு காலங்கள் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.  ஓன்று சங்க காலம் (கிபி 250 வரைக்கும்) மற்றொன்று சோழர் காலம் (கிபி 900 முதல் 1200 வரைக்கும்)

400 விதமான வரிகளின் மூலம் ஆட்சி புரிந்த மன்னர்களின் ஆட்சி எத்தனை மகத்தானது என்று வார்த்தை ஜாலத்தில் பல பாடங்கள் பாடல்கள் இன்று நம்மிடம் இருந்தாலும் அது மட்டும் முழுமையில்லை.

ஓதுக்குப்புறமாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை எப்போதும் போல ஓலமாகத்தான் இருந்தது.  மதம் சார்ந்த விசயங்கள், மாசில்லா தான தர்மங்கள், வறியவர்க்கு வள்ளல் என்று வாழ்ந்த அத்தனை மன்னர்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்க முழுமையான எந்த பங்களிப்புகளையும் அளித்ததாக அதிக சான்றுகள் இல்லை.

அன்று முதல் இன்று வரை குறிப்பிட்ட இனம் என்பது அவர்களின் முன்னேற்பாடுகளினால் உருவான முயற்சிகளும், உழைப்புகளும் தான் அவர்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது.  மக்கள் செழித்து இருந்தார்கள், உன்னதமாகத்தான் வாழ்ந்தார்கள் என்ற அத்தனை சான்றுகளுக்குப் பின்னாலும் ஒளிந்துள்ள வறுமையும், வாழ முடியாத மக்களின் வாழ்க்கை தரமும் (புறநானூறு) பல பாடல்களில் இருக்கிறது.

மூவாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்ததாக உள்ள தமிழனின் வரலாற்றில் தொடக்கம் முதல் ஆண்டு வந்த மன்னர்களின் எந்த மாடமாளிகை இன்று வரை இருக்கிறது?  என்ன சாஸ்திர கோளாறு?  அத்தனை சாஸ்திரங்களை சாப்பாடு போல் வாழ்ந்தவர்கள் என்ன தவறு செய்த காரணத்தினால் நிலைக்கச் செய்யமுடியவில்லை?  அத்தனை ஆன்மிகத்தையும் இந்த ஆலயத்திற்குள் வந்து பருகி அருள் பெற்று மெய்ஞானம் பெற்று விடுங்கள் என்று கட்டி எழுப்பி அத்தனை கோவில்களும் இருக்கிறதா?  ஏன்?

மக்கள் நலத்திற்காக கட்டிய அணைகள் இன்றுவரையிலும் உயிர்ப்புடன் இருக்கிறதே ஏன்?  மனதை வெல்ல முடியாமல், நிஜத்தை விழுங்க பயந்து, நிதர்சனம் எது என்பதை புரியவைக்காமல் அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.  தொடர்ந்தவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் இன்று மொத்த தமிழர்கள், தமிழினம் உணர்வு இல்லாமல் மொத்த உணர்ச்சிகள் மட்டும் நிரம்பிய கூட்டமாக வாழ்வதன் அவலம் தான் உங்கள் முன்னால் பரிதாபமாக?

பெரும்பான்மை மக்களின் ஏழையை மறைக்க அன்றும் இன்றும் என்றும் வசதிபடைத்தவர்கள், ஆளுமையில் இருப்பவர்கள் கடைபிடிக்கும் ஒரே பழக்கம் ஈகை.

ஆமாம்.  தானம் வழங்குதல்.  அன்று மன்னரின் புகழ் பாட உதவியது.  இன்று நலத்திட்டம் என்ற பெயரில்.  யானைப்பசிக்கு சோளப்பொறி.

ஓன்று நீயே மறந்து விட வேண்டும்.  அல்லது மறக்கச் செய்ய அத்தனையும் செய்யப்படும்.  அன்று முதல் இன்று வரையிலும் எல்லாவற்றுக்கும் காரணம் வைத்து இருப்பவர்கள் தமிழர்கள்.

புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்பாமை, ஈடுபடுபவர்களை அவர்களின் துணிச்சலை குலைத்தல், எல்லாவற்றுக்கும் ஜென்ம பலன், அடிமையாக இருந்தால் எளிதான வாழ்க்கை, புதிய சிந்தனைகளை புழுவுக்குச் சமமாக பார்ப்பது, வசதி இல்லாத வாழ்க்கையை வழுக்குப்பாறைக்குச் சமமாக பார்ப்பது, திட்டமிட்டு செலவழிக்க மறுப்பது, காசு இல்லாவிட்டால் கூட கடன் வாங்க தயக்கமில்லாமல் ஆடம்பரத்தில் நாட்டம், மதுவுக்கு பரிசு சீட்டுக்கு முந்திக்கொண்டு வரிசையில் நிற்பது.
மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் "தலைவிதி"  என்று ஒரு வசதியான வார்த்தையைக் கொண்டு தனது வாழ்க்கை வதையாக மாற்றிக்கொள்ளுதல்.


"திரை கடல் ஓடியும், திரவியம் தேடு" என்ற பழமொழி மட்டும் தான் நம்முடையது.  ஆனால் நொடித்துப்போன பல மேலைநாடுகள் அத்தனையையும் காரண காரியங்களையும் ஆராய்ந்து பல நாடுகளை கைப்பற்றினர்.  இறுதியில் வெற்றியும் பெற்றனர்.  இன்று வரையிலும் அடிப்படை வசதியான வாழ்வாதாரத்தில் வாழ்ந்து கொண்டுருக்கின்றனர்.

வறுமையின் கோரத்தாண்டவம் தந்த பரிசு தான் பல மேலை நாடுகளில் உருவான புரட்சிகள்.  அதுவே இறுதியில் ஏழைகள் இல்லாத பொது உடைமையும், முதலாளித்துவ கோட்பாடுகளையும் உருவாக்கியது.

இன்றைய வரைக்கும் ஓடுக்கப்பட்டவர்கள் "ஆலய வழிபாட்டு பிரவேசம்" என்று அரசாங்கம் முன்நின்று நடத்திக்கொண்டுருப்பதை வளர்ந்த நாகரிகம் என்று கணக்கில் கொள்ள முடியுமா?

மேலைநாடுகளில் உருக்குலைந்த சமூக அமைப்பை அவ்வப்போது வந்த தலைவர்கள், கொள்கைகளால், தன்னுடைய தனிப்பட்ட ஆளுமை திறன்களால் முன்னெடுத்துச் சென்றனர்.  ஆனால் நம்முடைய மன்னர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும் வெறும் வார்த்தைகளால் நம்மை மயக்கி வைத்திருப்பது என்ன தெரியுமா?
"யாதும் ஊரே யாவரும் கேளீர்".

கடுமையான பஞ்சம் என்றாலும் நமக்கு ஒரு களி உருண்டையின் மூலம் வாழ்ந்து விட முடியும்.  எத்தனை வெள்ளம், புயல் என்றாலும் இயல்பு நிலைமைக்கு நாமே திரும்பி விட முடியும்.  திரும்பித்தான் ஆக வேண்டும்?
அன்று புலவர்கள் புகழ்ந்து பாடி வெகுமதி என்ற பெயரில் தன்னையும் தொலைத்து தமிழையும் தொல்லைபடுத்திக்கொண்டுருந்தார்கள். அதுவே இன்று "வருங்காலமே, வாழ்விக்க வந்தவனே"   என்று புகழ்ந்து  ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை வசதிகளும் நம்மை விட்டு போய்க்கொண்டுருப்பதை வெறும் வேடிக்கையாளனாக பார்த்துக்கொண்டுருக்கிறோம்.

ஒதுங்கியிருக்கும் ஒரு ஊரிலே உள்ள கிராமத்தின் குறைந்த வாழ்வாதாரம் உங்கள் ஊரை உங்கள் வழித்தோன்றலை பாதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தமிழனின் வாழ்வியல் தடங்கள் மூலத்தில் இருந்து இன்று நிர்மூலமாகி முள்கம்பிகளுக்கு பின்னால் வரைக்கும் ஒரு சிந்தனை தொடர் ஓட்டம் இது.....

நீங்கள் வந்த வருகையில் புரட்டப்படும் பக்கங்கள் உருவாகும் சிந்தனை சரியென்றால் ஓட்டு பட்டையில் நீங்கள் அளிக்கும் ஓட்டு மூலம் இந்த முயற்சியை முன்னெடுத்துச்செல்லுங்கள்.

தீர்ப்புகள் திருத்தப்படவேண்டும் என்றால் விமர்சியுங்கள்.


Monday, October 26, 2009

நிகழ்காலத்தில்

இனத்திற்கும், மொழிக்கும் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த அந்நிய கலாச்சார படையெடுப்புகளால் ஏற்படவிருக்கும் பெரிதான பாதிப்புகளை எவருமே தொலை நோக்க பார்வையுடன் பார்ப்பதில்லை.  ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு வரவேற்பு அளித்தவர்கள்  முதன் முதலில் என்ற கணக்கில் தென்னிந்தியர்கள் தான் அந்த சிறப்பை பெறுகின்றனர்.

வாஸ்கோடகாமா (1498) என்ற போர்த்துகீசியர் முதன் முறையாக ஆப்ரிக்க தென்முனையைச் சுற்றிக்கொண்டு  இந்தியாவிற்குள் வந்து புதிய வரலாற்றை உருவாக்கினார்.  வரவேற்பு அளித்த முதல் இடம் சேரநாட்டு கள்ளிக்கோட்டை.  இவரைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்தனர்.  வணிகம், வாணிபம், பண்டமாற்று என்று தொடங்கி மத இன மொழி திணித்தலும் ஒரே சமயத்தில் படிபடியாக நடந்து கொண்டேயிருந்தது.

முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு தமிழில்.  நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது?  என்ன செய்வது நம்மவர்களின் தராள மனப்பான்மைக்கு எல்லை ஏதும் இல்லை.  ஆமாம் இன்று வரையிலும்.  பண்பாடு என்ற கோட்டுக்குள் பதவிசாய் வாழும் பதர்கள்.  அதனால் தான் போர்த்திய பொன்னாடைகளும், வெடித்து சிரித்த புகைப்படமும் நீங்கள் பார்த்த போது எழவு வீட்டில் எவ்வாறு தமிழன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு உணர்த்திய காலப்பெட்டகம் அது.

அதனால் தான் எல்லையை கடந்து சென்றவர்கள் அத்தனை பேருமே எல்லையில்லா பேரின்ப வாழ் நிலையை இன்று அடைந்து கொண்டுருந்த போதிலும் நாம் நம்முடைய நிகழ்கால கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாய் முன்னேறிக்கொண்டுருக்கிறோம்.

கள்ளிக்கோட்டை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று நம்மவர்கள் அவர்களுக்கு கீழே பணிபுரிவதை மிகப் பெருமையாக கருதினர்.  மற்ற எவரையும் விட நம்முடைய தமிழர்கள், அவர்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்காத குறை தான்.  சென்னை ஜார்ஜ் கோட்டையை பண்டக சாலையாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்தனர்.  நம்முடைய முக்கிய புள்ளிகள் அத்தனை பேருமே அவர்களுடன் கலந்து சிறுபுள்ளியாகி சீக்கிரம் கால்புள்ளி கால் இல்லாத புள்ளியாய் மாறிப்போனார்கள்.

ஐரோப்பியர்களின் ஆதிக்கமும் வாணிகத் தொடர்புகளும் ஆதிக்கம் செலுத்திய கால கட்டத்தில் ஒரே ஒரு நாடு மட்டும் உறுதியாய் இருந்தது.  ஆமாம் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தார்கள்.  அது ஜப்பான்.  200 ஆண்டுகளாக அந்நியர் எவரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வந்தவர்களைக்கூட ஓதுக்குப்புற தீவுகளில் தான் வணிகம் செய்ய அனுமதித்தனர்.  ஆனால் இத்தனையும் மீறி இரண்டு பாதிரிமார்கள் உள்ளே நுழைந்த போது அவர்களை கண்டுபிடித்து உலகறிய நாகசாகியில் கழுவேற்றி கொன்றனர்.

நாகசாகியில் குண்டுமழை பொழிந்த காரணங்களுக்குப்பின்னால் இதுவும் ஒன்று என்று இன்றுவரையிலும் நம்பப்படுகிறது.

கூலியாக பயணப்பட்ட தமிழர்கள் கூட தவறாக தெரியவில்லை.  ஆனால் அன்றும் இன்றம் தொலை நோக்கு பார்வையில்லாத காரணத்தால் எத்தனை எத்தனை அவஸ்த்தைகளை பார்த்துக்கொண்டுருக்கிறார்கள்?.  படித்துக்கொண்டுருக்கிறோம்?
ஆனால் இன்றும் அன்றும் நம் மக்களைப் போலவே சீனர்களும், யூதர்களும் எல்லா நாடுகளிலும் குடியேறினார்கள்.  ஆனால் இன்று உலகத்தின் நாட்டமை அமெரிக்காவின் ஆதிக்க வர்க்கம் என்பது மொத்த அங்கு வாழும் யூதர்களின் கையில் தான் உள்ளது.  சீனர்களின் சிறப்பை சொல்லத் தேவையில்லை.  சிங்கப்பூர், மலேசியா ஆரம்பித்து பல நாடுகள் அவர்களின் கண் அசைவில் தான் உள்ளது.  மெஜாரிட்டி மைனாரிட்டு என்று பேச்லெல்லாம் அவர்களின் வாழ்வியலில் எங்குமே இல்லை.  இந்தியாவில் தாஜ்மாகால் ஹோட்டலில் தாக்குதலில் டாடாவை விட அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளுக்குத் தான் முக்கிய அக்கறை.  அது தான் யூதர்கள்.  அவர்களின் சிறப்பு.  அவர்களின் வணிக பலம். மூலதனம்.  மூளை உள்ளவர்களின் முகவரி அது.

ஆனால் நாம் வேறு ஒரு வகையில் சிறப்பை பெற்றுள்ளோம்.  பர்மா அகதி, வியட்நாம் அகதி, இலங்கை அகதி.  இந்த பட்டியல் எதிர்காலத்தில் இப்போது உள்ள இந்திய அயல்உறவு கொள்கையினால் இன்னமும் நீளும் என்று தோன்றுகிறது?

இதன் விட்டகுறை தொட்ட குறை தான் இன்று வரையிலும் "பாண்டி" (கேரளா), "அரவாடு" (ஆந்திரா), மற்றும் வட இந்திய மார்வாடிகள் நம்மை அழைக்கும் "தீவானாதேசு".  ஆனால் நாம் ரொம்ப நல்லவர்கள்.  பழிப்பவர்களை வளர்ப்பதிலும், ஏமாற்றுபவர்களையும் புகழ்பாடுவதிலும், ஆளுமையில் இருப்பவர்களை உணர்ச்சி வேகத்தில் தேர்ந்து எடுப்பதிலும் நம்மை மிஞ்சுபவர்கள் எந்த உலகில் காணஇயலும்?

வயிற்றுப் பிழைப்புக்காக சென்றவர்களின் கதி தான் இன்று அதோகதி என்றால் பண்டைய தமிழ் வரலாற்றில் வாளெடுத்துச் சென்ற அத்தனை மன்னர்களும் தங்களுடைய வீரத்தை அகில உலகமெங்கும் பறைசாற்றியதோடு அவர்களின் கடமை முடிந்ததாகவே கருதினர்.  எந்த சீரழிவும் அவர்கள் செய்தவர்கள் இல்லை.  நான் தான் சிகாமணி என்று நிரூபிக்கவும் இல்லை.

பொருளாதார சீரழிப்பும் செய்யவில்லை.  உலகம் வெறுக்கக்கூடிய கலாச்சார சீழிப்பையும் செய்தவர்களில்லை.  ஆனால் இங்கு வந்து இறங்கிய போர்த்துகீசீயரும், பாரசீகரும், பிரெஞ்ச் நாட்டுக்காரரும் முடிந்தவரையிலும் தங்களுடைய தாக்கங்களை எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் நிலைநாட்ட தவறவில்லை.  வாணிகம் முதல் பட்சம்.  கொள்ளை லாபம் முக்கியம்.  ஆனால் இதைவிட முக்கியம் மதம் மாற்றுதல்.  அத்துடன் இருந்தாலும் பராவாயில்லை.  இங்கே உள்ள அத்தனை விசயங்களையும் முடக்கவும், முயற்சிகளை தடுக்கவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகக் கவனமாக செயல்பட்டனர்.

நம்மவர்களின் வரவேற்ற கைகள் இறுதியில் வணங்கியது.  ஆமாம் அவர்களைப் பார்த்து?  பேசிய மொழியை, வாழ்ந்த வாழ்க்கையை, அடிப்பைட கலாச்சார பெருமைகளை மறந்தனர்.  ஆமாம் காலம் முழுக்க அவர்களை துதிபாட போதவில்லை என்ற போது எங்கே போய் உள்ளே உள்ள விசயங்களில் கவனம் செலுத்த முடியும்?

உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நம்முடைய சாதனைகள் தான் எத்தனை எத்தனை?

மருத்துவம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், போர்க்கலை, கப்பற்கட்டும் தொழில் நுட்பம் போன்றவற்றை மறைத்தார்களா? மழுங்கிய சிந்தனைகளால் அத்தனையும் மறந்து தொலைத்தார்களா?  இல்லை அடுத்தவர் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நல் சிந்தனைகளினால் "குரு + மாணவன் " என்ற போர்வைக்குள் ஓளித்து கரையான் அரித்ததைக்கண்டும் காணாமல் இருந்தார்களா?

மொத்தத்தில் காலம் அத்தனையும் விழுங்கி விட்டது.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி தவிர வளையாபதியையும், குண்டலகேசியையும் அழியவிட்டோம்.  பெரும்பாலான சங்க இலக்கியங்களை தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் கண்டுபிடித்த தரவில்லையென்றால் தமிழ் இலக்கியத்ன் ஒரு பெரிய பரப்பளவுகளையும் இழந்து இருப்போம்.

தமிழ் காவல் தெய்வங்கள், இன காவலர்கள், இன்னும் பல பட்டங்களை சுமந்து வாழ்ந்துகொண்டுருக்கும் நிகழ்கால தலைவர்கள் எவருமே தெளிவான நோக்கில் தமிழை வளர்ப்பதில் கவனம் இல்லாத காரணத்தால் மொரிசீயஸ், யூனியன் பிரதேசங்கள், தென்னாப்ரிக்கா, பீஜீ தீவுகளில் இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் பரவி வாழும் இடங்களில் தமிழ் மொழி பேச்சு வழக்கில் இருந்து மாறி விட்டது.  இன்று கிட்டத்தட்ட வாழ்ந்து கொண்டுருக்கும் நிகழ்கால தலைமுறைகள் வைத்துருக்கும் பெயர் மட்டும் கொண்ட தமிழராக வாழ்ந்து கொண்டுருக்கின்றார்கள்.


தமிழன், தமிழ்மொழி, மொத்த தமிழனத்தில் வாழ்வியல், ஒரு நீண்ட தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள் கம்பிகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டுருப்பது வரையிலும் உள்ள நிகழ்வுகள் குறித்து ஒரு சிந்தனையோட்டம்.

Sunday, October 25, 2009

அச்சம் தவிர்

" சிங்களர்களை கோபப்படுத்தாமல் தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்"

"இந்திய இறையாண்மையை  வேரறுக்கும் எந்த ஒரு தீவிரவாதத்தையும் உள்ளே புக அனுமதிக்க மாட்டோம்"

" எங்களை விட இலங்கை தமிழர்களின் மேல் அக்கறை கொண்டவர்களை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்"

"இங்கு கூடியிருக்கும் மொத்த நிருபர்களும் ஒரே சமயத்தில் வெளியேறி விட முடியுமா?  அதைப்போலத்தான் மெதுவாக முள்கம்பிகளுக்கு பின்னால் உள்ளவர்கள் மீள் குடியேற்றம் மெதுவாக நடக்கும்"

"பிரபாகரனை ஆதரிப்பு என்ற போர்வையில் எங்களுடன் இருந்து கொண்டு எங்களை வசைபாடிக்கொண்டுருப்பவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டுருக்க மாட்டோம்"

"சட்டம் தன் கடமையைச் செய்யும்"

மேலே உள்ள அறிக்கைப் போர் என்ற அத்தனை அக்கப்போர்களுக்குள் உள்ளே இப்போது நாம் போகப் போவது இல்லை.  அரசியல் கணக்கு, ஆளுமை கணக்கு, தந்திர கணக்கு, எந்திரமாய் வாழ்வர்களின் வார்த்தை ஜாலங்கள் என்று எல்லாம் சேர்த்து இன்று ஒரு இனத்தை சாபக் கணக்கில் வரவு வைத்து விட்டது.    இங்கு வெட்கப்பட யாருமில்லை.  அங்கு விடியல் தோன்றும் என்று நம்பிக்கையும் தோன்றவில்லை.

ஆனால் மொத்தத்தில் அடிமை என்ற ஒரு வார்த்தை இயலாமை என்ற கொடுமை, ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஏமாற்ற வாழ்வியல் நம்முடைய தமிழர்களின் வரலாற்றில் எத்தனை அற்புதமான காலங்களை தொலைத்து துவைத்து நம்மை புடம் போட்டு வந்து இருக்கிறது தெரியுமா?

இன்றைய தத்துவ முத்துக்கள் உதிர்க்கும் அத்தனை தலைவர்களும் இந்த மரபு வழியில் வந்தவர்கள் தானே?  அத்தனையும் வெறும் செய்தியாக பார்த்துக்கொண்டு படித்துக்கொண்டு வரும் நாமும் அவர்களின் விசுவாகிகள் தானே?  பின்னோக்கி கொஞ்சம் பாருங்களேன்.

காரணம் தன்மானம் என்பதை விலை மதிக்க முடியாத பொருளாக கருதி வாழ்ந்தவன் நம் தமிழன்.

புறநானூறு என்பது பெறும் படைப்பல்ல.  நம்மவரின் வீர வாழ்வின் சுவடுகள்.  இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இல்லை.

"நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்ட தாய் தன்னுடைய  பால் கொடுத்த மார்பை அறுக்கத் துணிந்த தாய்"

"நேற்றைய போரில் தந்தை இறந்தார்.  இன்றைய போரில் யானையை நேருக்கு நேர் நின்று வென்றிட முயற்சிக்கும் போது கணவன் இறந்தான்.  நாளை நடக்கும் போருக்காக மகனை அலங்கரிக்கும் தாய்"

"பெரிய நகரத்தை பரிசாக கொடுக்க முன்வருபவர் மன்னராக இருந்தாலும் அவர் தன்னம்பிக்கை இல்லாத ஆணாக இருந்தால் தம் பெண்ணுகு மனம் செய்விக்க தந்தை மறுப்பார்"

வீரம் சொரிந்த வாழ்வியல் பெற்ற தமிழினம் இன்று வீரம் என்ற வார்த்தையை சொறிந்து கொள்ள உதவுவதாக மாற்றிக்கொண்டதை என்னவென்று சொல்வீர்கள்?

ஆமாம்.  கடமையுடன் கூடிய தன்னம்பிக்கை, போர்க்குணம் என்பது அழிப்பதற்கு அல்ல.  ஆளுமையை நிலைநாட்ட.  காதல், வாழ்க்கை என்ற பாகுபாடு இல்லாமல் என்றும் நீக்கமற நிறைந்திருந்த வீரஞ்செறிந்த வாழ்க்கையிது

ஒவ்வொரு கால மாற்றத்திலும் தமிழர்களிடமிருந்த போர்க்குணம், வீரம் மெதுவாக மறையத் தொடங்கியது.  போர்க்குணமின்றி கோழை சமூகமாக வாழ்ந்து வந்த காரணத்தால் வந்த படையெடுப்பாளர்கள் அத்தனை பேரும் மிக எளிதில் நம்மை அவர்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.  பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் கூட தொடக்கத்தில் சீக்கியர்கள் வாழ்ந்த பகுதிகளில் அதிகமாக போராட்டம், உயிர் இழப்புக்கு பின்னால் தான் அந்தந்த பகுதிகளை கைப்பற்ற முடிந்தது.  ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த பெரிதான சிரமும் இல்லை(?)

பின்வரும் கணக்குகளை வைத்து பார்க்கும் போது உலக இனத்திலேயே இத்தனை ஆண்டு காலம் இத்தனை பேர்களுக்கு அடிமையாய் வேறு எவரும் வாழ்ந்து இருக்க முடியுமா? என்று ஆச்சரியமாய் அச்சப்பட வைக்கும் தமிழினத்தின் வாழ்வியல் அவலத்தை பாருங்கள்?

களப்பிரர் (கிபி 200 முதல் 500), பல்லவர் (கிபி 500 முதல் 800), வட இந்தியர், மராட்டியர், தெலுங்கு நாயக்கர் (கிபி 1200 முதல் 1600) போர்ச்சுகீசியர், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் கீழ் 1947 வரைக்கும்.

2000 ஆண்டுகள் அடிமை தமிழனாகவே வாழ்ந்த வாழ்வியலின் எச்சமும் சொச்சமும் இன்று உங்களையும் என்னையும் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.

மூவேந்தர் ஆண்ட சங்க காலத்திலும், கிபி 800 முதல் 1200 வரை ஆண்டு சோழப் பேரரசு வாழ்ந்த தமிழர்களின் காலம் பொற்காலம்.  எல்லாவிதங்களிலும்.

இன்று வரையிலும் தமிழனுக்கு மற்றவர்களுக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு சுகம்.  விரும்பாதவர்களையும் மாற்றி விடுவதில் நம்மவர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள்.  காரணம் அதற்கு "சமூக பாதுகாப்பு" என்ற வசதியான குறீயீட்டுப் பெயரும் உண்டு.

கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் கேயன் (1650.1700)என்பவர் கவர்னராக இருந்தார். இவரே முதன் முதலாக தமிழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்கிந்திய தீவுகளில் கரும்பு, ரப்பர், இலவங்கத் தோட்டம் அமைக்க தமிழர்களை கொண்டு சென்றவர்.  ஆமாம் அழைத்துச் செல்லவில்லை.

ஆடு, மாடுகளைப் போல கொண்டு சென்றார்.  வெள்ளையர்களுக்கு செல்வங்களை வாரி வழங்கிய பீஜீத்தீவின் கரும்புத் தோட்டங்களிலும், தென் ஆப்ரிக்காவின் வைரச் சுரங்களிலும், இலங்கையின் தேயிலை தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் கூலியாக கொண்டு போய் நிரப்பினார்.

ஆனால் தமிழனின் தொடக்க வரலாற்று வாழ்வியலில் தமிழன் என்பவன் கூலி என்ற இழி நிலையில் வாழ்ந்ததாக சான்று ஏதும் இல்லை.  ஆளுமைப்பண்புடன் கூடிய வீரம்.  அத்தனனயிலும் சிறப்பு.  இது தான் தொடக்க தமிழன்.  ஆனால் இன்று?

2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழனத்தின் பண்புகள் என்பது அறிவு, ஒழுக்கம், அஞ்சாமை, உதவும் மனப்பான்மை இவற்றுடன் தன்னம்பிக்கை தம்முடையதாக ஆக்க முடியும் என்று நம்பி வாழ்ந்த கூட்டத்திற்கான பல சான்றுகள் உள்ளது.

தமிழன் அடிமைப்படாத மூவேந்தர் அரசாண்ட காலத்தில் போராட்டக்குணம் அதிகமாக இருந்தது.  எந்த நிலையிலும் கீழ்நிலையில் வாழ வேண்டிய அவஸ்யம் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள்.

வடநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டுருந்த மன்னர்களான கனக, விசயர் என்பவர்கள், இங்குள்ள தமிழ் மன்னர்களான மூவேந்தர்களை நடந்த ஒரு விழாவில் மிக இழிவாக பேசிய செய்தி மூவேந்தர்களை வந்தடைந்தது.  மூவேந்தர்களின் சார்பாக சேரன் செங்குட்டுவன் படைபெயடுத்துச் சென்ற வென்று, இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் குளிப்பாட்டி, அதில் கண்ணகிக்கு சிலை எடுக்க அந்த மன்னர்களின் தலையில் சுமக்க வைத்து அழைத்து வந்தான்.

ஆனால் காலம் மாற மாற வானம் பொய்யா நிலம் போல தமிழர்களின் வாழ்க்கையும் நிர்கதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து வந்த படையெடுப்புகளும், கலப்பினமும், மாறிய கொள்கைகளும், கொண்டு சென்ற முன்னேற்பாடுகளும்,அந்த கொள்கைகளை கொண்டு சென்ற குலக்கொழுந்துகளும், குழப்பான சூழ்நிலையையும், வாழ்நிலையையும் உருவாக்கி வழி தடுமாற வைத்தது.

உருவான வறுமையும், உருவாக்கி வறுமையும் தமிழனை தன்னம்பிக்கை இழக்க வைத்தது. அக்கரைக்கு எந்த அக்கறையும் இல்லாமல் வந்து அழைத்தவர்கள் பின்னால் பயணப்படவைத்தது.

Saturday, October 24, 2009

அது ஒரு கனா காலம்

தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த அத்தனை மன்னர்களும் சமய மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும், தன்னம்பிக்கையின் உருவகமாகவும் சிறந்த புத்திசாலிகளாகவும் தான் காட்சியளிக்கிறார்கள்.

"கிமு 5 ஆம் நூற்றாண்டில் புத்தரின் சமகாலத்தில் சோழ நாட்டு தலைநகராம் பூம்புகாரில் இருந்து கிளம்பி ஆயிரக்கணக்கான மைல்கள் விரிந்து கிடக்கும் 16 வட இந்திய அரசுகளின் மேல் படை எடுத்து நடத்திச் சென்றான் கரிகாற்பெருவளத்தான்.

எதிர்த்தவர்கள் அனைவரையும் வழி எங்கும் வென்று காட்டினான்.  அவனை அடிபணிந்த வஞ்சிர, மகத, அவந்தி நாடுகள் முறையே கொற்றப்பந்தர், பட்டிமண்டபம், தோரண வாயில்,

இவற்றை அவன் காலடியில் காணிக்கையாக்கி சமரசம் செய்து கொண்டனர். ஆண்டு கொண்டுருந்தவர்கள்  இறுதியில் இமயத்தின் உச்சி வரையில் சென்று அங்கு தமிழர் இலச்சினையை பொறித்து திரும்பினான்.

கரிகாலனின் இந்த இமாலாய வெற்றியை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்கள் விரிவாக காட்டுகின்றன.  இவனே உலகத்தின் முதன் அணைக்கட்டாகிய கல்லணையை காவிரிக்கு குறுக்கே கட்டியவன்.

பாண்டிய நாட்டை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவர இரண்டு பேரரசர்களும் ஐந்து சிற்றரசர்களும் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்தனர்.  ஆனால் அப்போது அரியனையில் வீற்று இருந்தவன் இளைஞனுக்கும் சிறுவனுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள நெடுஞ்செழியன். அவனுடைய அறைகூவலை படித்துப் பாருங்கள்?                    

"நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்.  யாசிப்போர்க்குத் தானம் செய்ய முடியா வறுமை என்னைச் சூழட்டும்"                                                            

சேரன்,சோழன் இரண்டு பேரரசுகளையும், தித்தியன், எழினி,எருமையூரன்,இருங்கோவண்மான்,பொருநன் ஆகிய ஐந்து சிற்றரசர்களையும் சிதறடித்து பாண்டிய ராஜ்யத்தை காப்பாற்றினான்.  2000 ஆண்டுகளுக்கு முன் இளைய வயதுக்கு கீழ் இருந்த அவனை "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்"  என்று வர்ணித்த சங்கத்தமிழ் இலக்கியத்தில் உள்ள நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி இரண்டுக்கும் "பாட்டுடைத்தலைவனாக" புகழடைந்தான்.

ஆனால் இந்த சங்ககாலத்து சோழ மரபு கி.பி.250க்குப் பிறகு வரலாறு சுவடின்றி மறைந்து போனது. அதற்குப்பிறகு, 600 ஆண்டுகள் அந்நியர்களின் ஆட்சி.  இறுதியில்  300 ஆண்டு கால பல்லவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 96 விழுப்புண்களை மார்பில் பெற்ற விஜயாலன் (கிபி 850 )சோழர் காலத்தை உருவாக்கி போட்ட ராஜபாட்டை தான் பின்னால் வந்த இராஜராஜ சோழனும், இராசேந்திரனும், குலோத்துங்கனும் வந்து சோழப் பேரரசை உலக வல்லரசாக்க சாத்தியமானது.

புதிய கட்டிடக்கலை நுட்பத்தை அன்றே உலகிற்கு படைத்த தஞ்சை பெரிய கோவில் தந்தவர் யார் தெரியுமா?  இந்த விஜயாலனின் பேரன் ராஜராஜன்.(கிபி 985 /1014)

நவீன உபகரணங்கள் இல்லாமல் உருவாக்கிய கலைசிற்பத்தையும், கொண்டு வந்து சேர்த்த அந்த கற்களின் வினோத வடிவங்களையும் எந்த மேல் நாட்டு படிப்பு மூலம் இவர்கள் கற்றார்கள்?   இன்றைய நவீன கட்டிடக்கலை நுட்பத்தை அன்றை உலகிற்கு பறைசாற்றியவன் ராஜராஜன். விஞ்ஞான அறிவு ஏதும் தேவையில்லை.  எங்கள் மெய்ஞான அறிவுக்கு  நிகர் ஏது? என்று பறைசாற்றியவன்.  விஞ்ஞானம் வளராத காலத்திலும் தன்னை நிரூபித்தவன்.

இந்த ராஜராஜனின் புதல்வன் இராஜேந்திரன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் 3000 கடல் மைல்கள் தாண்டி பிடித்த அத்தனை தேசங்களிலும் புலிக்கொடி பறக்க வைத்த வீர மன்னன்.  வீரம் என்றே என்னவென்று தெரியாமல் வெளியில் வராமல் சாதனங்களை வைத்து சாகசம் காட்டும் இன்றைய அறிவீலிகளின் செயல்பாடுகள் உங்களைப் பொறுத்த வரையிலும் புத்திசாலித்தனம் என்பதாகவே இருக்கட்டும்.  ஆனால் வீரம் என்ற ஒரு வார்த்தை தந்த ஆளுமையில் அவன் வென்ற நாடுகளின் பட்டியல் என்பது ஒரு நீள பட்டியல்.  படிக்கும் போது பரவசமாய் இருக்கிறது. கடல் பயணம், சென்ற நான்கு வகையான படைகள், ஆள், அம்பாறை, சேனை, எடுப்பு தொடுப்புகள் என்று மொத்த முன்னேற்பாடுகளையும் உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.

வாழ்க்கை என்பது வீரம்.  வீரம் என்பது அர்பணிப்பு.  அர்பணிப்பு என்பது மொத்த ஆளுமை.

உள்ளே படையெடுத்து வந்த ஔரங்கசீப் தில்லி பாதூசாவாக கோலோச்சிக்கொண்டுருந்த சமயம் அது.  தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய ஒரு பாதுகையை மட்டும் ஒரு பல்லாக்கில் ஏற்றி அனுப்புவார்.  அந்த பாதுகை ஒவ்வொரு மன்னரின் ஆளுகைக்குள் போய் வரும். அங்கு ஆண்டு கொண்டுருக்கும் மன்னன்  அந்த பாதுகையை தொட்டு வணங்க வேண்டும்.  அதன் அர்த்தம் "நான் உங்களுக்கு அடிமை".

அந்த பாதுகை நாயக்கரின் அரசவைக்கும் வந்தது.  மங்கம்மா பெற்றெடுத்த வீரன் மூத்து வீரப்பன் வந்த பாதூகையை ஒரு காலில் மாட்டிக்கொண்டு "மற்றொன்று எங்கே?" என்று வினவ ஓளரங்கசீப் அவனின் வீரத்தையும் தன்மானத்தையும் பார்த்து தன்னுடைய பாதுகை பயணத்தை நிறுத்திக்கொண்டார்.

முத்து வீரப்பன் இளமையிலேயே இறந்து போய்விட அடுத்து பட்டத்துக்கு வர வேண்டிய அவன் மகனோ 3 மாதக்குழந்தை.  ஆனால் பாட்டி மங்கம்மா அந்த 3 மாதக்குழந்தையை அரியணையில் ஏற்றி, அந்த கால விதவை என்ற கொடுமையையும் மீறி 18 வருடங்கள் மிகத் திறமையாக ஆட்சி புரிந்தார்.  ஓளரங்கசீப் விழுங்கத் துடித்துக்கொண்டுருப்பதையும் மீறி?

மேலே சொன்ன உதாரணங்கள் வீரம் என்பதன் குறியீடாக வைத்து வாழ்ந்து தமிழர்களின் வரலாற்றில் சாதனை சிகரம் படைத்தவர்களின் சில உதாரணங்கள்.

தன்னம்பிக்கை வழியே வாழ்ந்து வரலாறு படைத்த ஒரு உதாரணம் இது.

குலோத்துங்கச் சோழனிடம் அரசவைப்புலவராக இருக்கும் தன்னுடைய தந்தையின் சோர்வைக்கண்டு மகன் கலக்கமுற்று காரணம் கேட்டான்?

மன்னன் தன்னிடம் கேட்ட மூன்று கேள்விகளுக்கு தன்னால் பதில் அளிக்கமுடியவில்லை என்றதும் நான் நாளை வந்து சொல்கிறேன் என்று  சென்றான் அந்த சிறுவன். இறுதியில் திருக்குறள் மூலமே அதை வென்றான்.

வானத்தை விட பெரிது?

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

உலகத்தை விடப் பெரியது?

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

கடலை விடப் பெரியது?

பயன்தூக்கர் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

சிறுவன் மந்திரியாக பதவியேற்றான்.  தன்னுடைய 63ம் வயதில் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் தான் இவர்.

கற்கோவில் மூலம் சிற்பக்கலையை பறைசாற்றியவன்  அருள் மொழி என்ற இராஜராஜ சோழன்.  தமிழர்களின் இலக்கிய கலைசிறப்பை மேம்படுத்த புதிய சொற்கோவில் கட்டியவர் தான் இந்த  சேக்கிழார்.

Thursday, October 22, 2009

பின்னோக்கி

"எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்டா!" என்ற வசனம் எவ்வளவு நமக்கு சிரிப்பை தந்ததோ அந்த அளவிற்கு உலகத்தில் உள்ள தமிழன் என்ற இனத்திற்கும் இந்த "அடிவாங்குதல்" என்பது இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,

இலங்கையில் நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகள் தொடக்கத்தில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. பிறகு படிப்படியாக மாறி இன்று தினந்தோறும் துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.

மலேசியா என்பது அன்று முதல் இன்று வரையிலும் உள்ளே "ஒருவிதமாக " நடந்து கொண்டு தான் இருக்கிறது.  ஆனால் தந்திர வலையில் மந்திரமாய் மாயமாய் எல்லாமே வெளியே வந்து விடுவதில்லை.

இந்தியாவிற்குள் உள்ளே மாநிலங்களுக்குள் அனைத்து இடங்களிலும் பண்டிகை கொண்டாட்டங்கள் போல வருடத்திற்கு ஒரு முறை இல்லாவிட்டாலும் " பழைன கழிதல் புதியன புகுதல்"  என்ற கோட்டிபாட்டின்படி மறைமுக கொண்டாட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.  இருக்கும்.  ஆனால் எதுவுமே முழுமையாக மொத்த பின்புலமும் நம்மிடமும் வந்து சேர்வதில்லை.

அதிகாரம், ஆளுமை, அரசியல் கணக்கு இத்தனைக்கும் மேல் சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டிய அவஸ்யமான ஜனநாயகத்தின் மேல் உள்ள அக்கறை.

மென்பொருள் துறையில் அத்தனை இடங்களிலும் கோலோச்சிக் கொண்டுருப்பவர்கள் நம்முடைய தமிழர்கள் என்ற கணக்கு விந்தையானது.  காரணம் இந்தியா என்பதே சிறுபான்மையினரின் கணக்கு கொண்டு தானே அத்தனை ஆள்பவர்களின் அக்கறையும்?    வெளியே படம் காட்டிக்கொண்டு அத்தனை மத மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்?

இன்றைய இலங்கை தமிழர்களின் வாழ்வியல் தடங்களை, பிரச்சனைகளை எந்த பாகுபாடும் இல்லாமல் அத்தனை ஊடகங்களும், சரித்திர சான்றுகளை, பட்டபாடுகள், கொண்ட ஒப்பந்தங்கள், அழிந்த கணக்கு என்று எல்லாவிதங்களிலும் தொடராகவே எழுதி வருகின்றன,

உணர்ச்சி வேக தமிழனாக இருப்பதால் படிப்பதை பாதியில் விட்டு விடுவோம் அல்லது உடனே மறந்து அடுத்த சுவாரசியத்திற்குள் நுழைந்து விடுவோம்.  எல்லா வரலாற்று பக்கங்களிலும் "எதிர்மறை நியாயங்கள்" இருக்கத்தான் செய்கின்றன.



உடனடியாக தவறு என்றோ சரி என்றோ உடனடி தீர்வுக்கு கொண்டுவர முடிவதில்லை.  பிரபாகரன் என்று ஆளுமை என்னைப் போன்ற எத்தனை இளைஞர்களுக்கு ஆதர்சணமோ அந்த அளவிற்கு உள்ளே இன்றுவரையிலும் இன்னல்பட்ட, பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையும் அத்தனை கொடுமையானது?  இன்று வரையிலும் இந்த கடுகு நாட்டுக்குள் நடக்கும் காரமான சமாச்சாரங்கள் கண்ணீரை வரவழைத்தாலும் "இப்படி எல்லாம் கூட மனிதர்கள் தற்போதைய நவீன வளர்ச்சி அடைந்த காலத்திலும் இருப்பார்களா?" என்று அத்தனை இலங்கையில் ஆளுமை செய்தவர்களையும் பார்த்து வியப்பாக இருக்கிறது.

ஆண்ட, ஆள்கின்ற வீபரித மனிதர்களை நாம் சுட்டிக்காட்டுவதற்கு முன் நம்முடைய தமிழ் இனம் என்பதன் தொடக்கம், வாழ்வியல், தடங்கள், ஏன் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்ட இருக்கிறது?   என்ன காரணங்கள்?  என்பதை பார்க்க வேண்டும்.

நம்முடைய கைகள் அவர்களை சுட்டிக்காட்டும் ஒரு விரலைப் போல மூன்று விரல்கள் நம்மை நோக்கி பார்க்கின்றது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது?



இலங்கை வரலாறு என்பது இந்தியாவின் சுதந்திர வரலாற்றைப் போல புதைக்கப்பட்ட ரகஸ்யங்கள் அல்ல.  இது இன்று வரையிலும் ரத்தமும் சதையுமாய் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு ஊடகத்தின் வழியே உங்களை வந்து தாக்கிக்கொண்டே தான் இருக்கிறது.  உங்களுக்கு அரசியல் ஈடுபாடு , தேவையில்லாத சமாச்சாரங்களில் தலையிட விரும்பாமை என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும்?   ஆனால் இப்போதைய இந்த கால கட்டத்தில் மொத்த தமிழர்களின் வாழ்வியலை நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்,

இந்த இடுகைக்காக ,  இலங்கை குறித்து, தலைவர்கள் குறித்து, வேதனைகள், கடிதங்கள், என்று எழுதிய அத்தனையும் மாற்றம் பெற்றுவிட்டது.  காரணம் வாழ்வியலை தெரிந்து கொள்ளவதை விட இது ஒரு பரபரப்புக்குண்டான வார்த்தைகளின் ஜலமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக.

வெறுப்போ, அச்சமோ. அவசரமோ இல்லை.  இதற்காக உழைத்த உழைப்பு வீணாகிப்போய்விடக்கூடாது என்பதற்காக.

ஆனால்?

"தமிழன் என்ற ஒரு இனம் உண்டு".
"தமிழன் என்று சொல்லடா"  
"வீழ்வது நாமாக இருந்தாலும்"
"முன் தோன்றா மூத்த குடி"
"உலகின் மூத்த மொழி"
 "வள்ளுவத்திற்கு பிறகு வேறொன்றா?"

இன்னும் எத்தனை எத்தனை மொழிகள், பகிர்தல்கள், வாய் மொழிகள்?

ரிஷிகள், ஞானிகள், கணக்குகள் நமக்கு உண்மையான ஞானத்தை முழுமையாக தந்து விடவில்லை. அமைதியாய் வாழ்வதே வாழ்வின் சிறப்பு என்று மட்டுமே சொல்லித்தந்து சென்றவர்கள், அடக்குமுறை நம் மீது திணிக்கப்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?   என்பதைப்பற்றி சரியான புரிதல் ஏதும் அவர்கள் நமக்கு அளித்துச் செல்லவில்லை.

பண்பாடு, கலாச்சாரம், கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற ஐம்பூதங்களையும் அக்கறையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சென்றவர்கள் கரை தாண்டி சென்றவர்களின் வாழ்க்கை கண்ணீரில் மிதக்கும் போது?

அவர்களுக்கு கை கொடுக்க இன்றைய இந்திய தமிழ்நாட்டு தலைவர்கள் போல் யாரும் இருக்க மாட்டார்கள்.  அங்கே இருக்கும் ஒற்றுமையற்ற தலைவர்கள் போலவே, பாதி கடலில் நின்ற வணங்காமண் கப்பல் போல பரிதாபமாய் பாதியில் நிற்கும்.

ஆனால் இன்று எந்த மொழியிலும் காணாத சோகம் தமிழ் மொழியில், அதைப்போலவே உலகில் எந்த இனமும் இந்த அளவிற்கு கேவலம் அடைந்தது இல்லை என்று கூசிப்போகும் அளவிற்கு இலங்கையில் தமிழர்களின் வாழ்வியல் அவலங்கள் நம் கண்முன்னே காட்சியாய் தினந்தோறும் நம்மை வந்து அடைந்து கொண்டுருக்கிறது.

ஏன் என்பதை முதன் முதலில் பண்டையகாலத்து சோழ மரபு என்ற நம்முடைய முன்னோர்களின் பாதையில் இருந்து பயணிக்க வேண்டும்.  பின்னோக்கி பார்த்தால் தான் இன்று உங்கள் முன்னோக்கி விரிந்து பயம் காட்டிக்கொண்டுருக்கும்  காட்சிகளின் உண்மைகள் புரியும்?



ஈழப்பிரச்சனைகளுக்கும் பண்டைய தமிழ் மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று கேலி செய்கிறீர்களா?  உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் இந்த மன்னர்கள் தரும் பதில் மூலம் பிரபாகரன் வரைக்கும், இன்று நானும் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து கொண்டுருப்பது வரைக்கும் புரியும்.  உண்மை,

மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள் கம்பிகளுக்கு பின்னால் வாழும் வரைக்கும் உண்டான தமிழனத்தின் தொடர் நிகழ்வுகள்

Wednesday, October 21, 2009

இலங்கை + அகதிகள் + கதிகள் = நிர்கதி

ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிரச்சனை, கலவரங்கள், கோரங்கள் என்று படித்து முடிக்கும் போது அப்போது உடனடியாக நினைவுக்கு 1980 வாக்கில் முந்தைய பிந்தைய, இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த இலங்கை தமிழர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.  எத்தனை வருடங்கள் என்றாலும் அவர்களின் " தொப்புள் கொடி உறவுகள் அங்கு எப்படி இருப்பார்கள்" ?  என்ற பதைபதைப்பு அவர்களிடம் இருக்குமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால் பள்ளியின் தொடக்க நிலையில் ஒரு நாள் திடீர் என்று பசங்களும் பொண்ணுங்களும் திமுதிமுவென்று அத்தனை பெஞ்சுகளிலும் வந்து ஆக்ரமித்தனர்.  நல்ல உயரமும் வேகமான பேச்சும் இருந்த காரணத்தால் தேர்வு ஏதும் இல்லாமலே வகுப்புத் தலைவர்கள் ஆனார்கள்.  உச்சரிப்பு மட்டும் சற்று வித்யாசமாக தொடக்கத்தில் இருந்தது.  ஆனால் அவர்களில் கூட்டணியில் கலந்து விட்ட பிறகு நல்ல சுவாரசியமாக பள்ளி பருவம் அமைந்தது.  அவர்கள் உருவாக்கும் கற்பனை காட்சிகள், எம்.ஜி.ஆர் திரைப்பட சாகசங்கள் அத்தனையும் அவர்களின் பின்னால் செல்வதை சுகமாக கருதியது.  அத்தனை பேர்களுக்கும் அன்று எம்.ஜி.ஆர். தான் கடவுள்.

சிவாஜியைப்பற்றி பேசினால் பிடறி பேந்து விடும்.  அன்று அவர்கள் அத்தனை பேருக்கும் எம்.ஜி.ஆர். ஆதர்சன கடவுளாக ஏன் இருந்தார்? என்பது எனக்கு அன்று புரியவில்லை.  இன்று மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனையான வாழ்வியலில் மக்கள் திலகத்தின் பங்களிப்பு என்பதும் அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கு பார்த்தார்கள்?  எப்படி தெரிந்து கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியாது?

" என்னடா இலங்கை அகதிகள் அதிகமாக பள்ளிக்கூடத்தில் வந்த சேர்ந்து இருக்கிறார்கள் போல" ?  என்று குடும்பத்தினர் கேட்ட போது கூட இலங்கை சம்மந்தபட்ட விசயங்கள் எதுவும் புரியவில்லை.  எப்போதும் போல இலங்கை என்றால் அப்துல் ஹமீது, ராஜா, திரைப்பாடல்களின் தொகுப்பு, நல்ல தமிழ், கரகரப்பு இல்லாத அலை சேவை என்று மிக உயர்வான எண்ணத்தில் வாழ்ந்த காரணமும் ஒன்று.

ஆனால் அப்போது பள்ளியில் சேர்ந்த எந்த மாணவ மாணவிகளும், இன்று வரையிலும் தமிழ்நாட்டு தமிழ் பெயரில் தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்கள் சூட்டிக்கொள்ளும் எந்வொரு ஆளுமையான தமிழ் பெயர்களையும் நான் பார்த்ததே இல்லை.  சோனைமுத்து, தங்கராஜ், லலிதா, சிதம்பரம் இது போன்ற பல பெயர்கள்.

கணிணியில் நேரிடையான தொடர்பு வழியே திடீர் என்று இலங்கை தொடர்பான தமிழர்கள் உள்ளே வரும் போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அவர்களின் பெயர் காட்டி கொடுத்து விடும்.  காரணம் அந்த மாதிரியான தமிழ் பெயர்கள்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் நினைத்தே பார்க்க முடியாத தமிழ்.

அலங்கோல வாழ்க்கை தந்த பயத்தில் பரிதாபமாய் உள்ளே வந்தவர்கள் இன்றைய சிவகெங்கை புதுக்கோட்டை மாவட்டத்திறகு நடுவில் கோடு பிரிக்கும் இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்கோடு போல இடத்தில் அவர்கள் வசிப்பிடம் அரசாங்கம் அமைத்து கொடுத்து இருந்தது.

அத்தனை பேர்களிடமும் காலணி என்றால் அடிக்க வருவார்கள். குறுகிய காலத்தில் அதற்கு சுதந்திரபுரம் என்று பெயர் சூட்டி இன்று அவசர உலகில் பேரன் பேத்தி கூட நாற்பது வயதிற்குள் எடுத்து விட்டு ஊரின் உள்ளேயே வாழ்ந்து கொண்டு வெளியே எங்கும் போக விருப்பம் இல்லாமல் உழன்று கொண்டுருக்கிறார்கள்.

வகுப்புத் தலைவனாக கடைசிவரையிலும் கோலோச்சிக்கொண்டுருந்த வை.சிதம்பரத்தை பார்த்த போது கேட்டேன்?

" என்னப்பா ?  எப்பவாவது தாத்தா ஊரை நினைத்து பார்ப்பதுண்டா" ?

ஊரில் இருந்து அரிசி லோடு ஏற்றி திருப்பூருக்கு அனுப்ப ஆவணங்களை சரி பார்த்துக்கொண்டுருந்தவன்,  "  அங்கு நாலு கடை தெரிஞ்சா அறிமுகப்படுத்துடான்னா இப்படி போட்டு அறுத்து எடுக்கிறியே" ?

இன்று அரிசியுடன் மரக்கட்டை தொழிலும் செய்து கொண்டு அத்தனை யூகப்லிட்ஸ் மரங்களுக்கும் மொத்த காட்டு குத்தகைதாரராக ஓரளவுக்கு வாழ்ந்து கொண்டுருக்கின்றான்.

நான் குறிப்பிட்ட சிதம்பரம் மட்டுமல்ல.  தெரிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பழக்கத்தில் இல்லாத ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அத்தனை பேர்களும் அவர்களின் தினந்தோறும் உண்டான வாழ்க்கை போராட்டத்தில் தான் கவனம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.  நூற்றுக்கும் மேற்பட்ட இருந்த அரிசி ஆலைகள் தொடக்கத்தில் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் வரம் தரும் காமதேனு பசுவாக இருந்தது.


வெளிவந்துகொண்டுருப்பது தொழிலுக்கான புகை மட்டுமல்ல.  நவீனங்கள் கொடுத்த அடிப்படை மக்களின் வாழ்வியலின் புகைமூட்டமும் கூட.

இன்று நவீன சாதனங்கள் உள்ளே வந்து 50 நெல்மூட்டைகள் மூலம் உள்ளே போய் வெளியேறிக்கொண்டுருந்த அத்தனை அரிசி ஆலைகளும் இன்றைய தினத்தில் வெளிநாட்டு இறக்குமதி சாதனங்கள் மூலம் சரக்கு வாகன புகைமூட்டத்தில் 24 மணிநேரமும் மாடர்ன் மில் என்ற நவீன சித்தாந்தத்தில் அவர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கையையும் அழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

ஊரில் இருந்து நான்கு மைல்கள் தூரத்தில் சுதந்திரபுரம் இருந்தாலும், வேலைக்கு வரும் அத்தனை பேர்களும் அந்த அதிகாலையில் அவசர அவசரமாக வந்து ஆலைகளுக்கு முன்னால் வரிசையில் நிற்பதும், அன்றாட வேலையில் தன்னை தேர்ந்தெடுக்க பேசிக்கொண்டுருப்பதையும் பார்க்கும் போது கதைத்த கதைகள் போய் கண்ணீர் வாழ்வியலாகத் தெரியும்.

ஆனாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை.  காரணம் பெரிதான ஆசைகளும் இல்லை.  அதே சுதந்திரபுரத்தில் இன்று எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது.  தொடக்கத்தில் வை.சிதம்பரம் " மக்கள் சக்தி இயக்க" தை அறிமுகபடுத்திய போது எழுந்த எதிர்ப்பு இன்னமும் நினைவில் இருக்கிறது.

அவர்களின் மொத்த வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டது.  மாற்றிக்கொண்டதை போல பிறந்த, பிறக்கின்ற குழந்தைகளின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்து இன்று த்ரிசா தொடங்கி ஸ்ரீ யில் முடியில் அத்தனை பெயர்களும்.

மூன்று வேளையும் நிம்மதியாக உணவு கிடைக்காதா? என்று ஏங்கும் வாழ்க்கை அமைந்தவர்கள் எங்கே போய் வாழ்வுரிமையைப் பற்றி யோசிக்க முடியும்?

இவர்களின் வாழ்வாதாரம் எவ்வளவோ ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.  ஆனால் முகாம் என்ற பெயரில் தினந்தோறும் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்திற்குள் தன்னை தொலைத்து, வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டுருக்கும் எத்தனையோ முகம் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் குறித்து எவர் சிந்திக்க முடியும்?

அக்கரையில் இருப்பவர்களின் அழிவுக்கு அபூர்வ சகோதர்கள் காரணம் எனில் இங்கு நம்மைத் தேடி வந்தவர்களை காப்பாற்றவும் முடியாமல் கனிவான வாழ்க்கையையும் அமைத்துக்கொடுக்காத குற்றத்தை எந்த நீதிமன்றத்தில் போய் முறையிட முடியும்?

தமிழ்நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட தமிழரின் சார்பாளனாகத் தான் சிதம்பரத்தைப் பார்க்கின்றேன்.  நம்முடைய வாழ்க்கையின் நிதர்சனத்திற்காகவே இதை குறிப்பிடுகின்றேன்.

இன்றைய உள்துறை அமைச்சர் எடுத்த முதல் நடவடிக்கை என்ன தெரியுமா?

" ஒரு லட்சம் பேர்கள் வங்க தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து போய்க்கொண்டுருப்பது தேவையில்லை.  அது அவஸ்யமும் இல்லை"    என்று அவர் அடித்த ஆப்பு பத்து வருடங்களுக்கு முன்னே ஆணி அடித்து இருந்தால் இன்றைய கல்கத்தா இன்னும் கூட சற்று சிறப்பாய் இருந்து இருக்கும் போல?
உள்ளே வந்தவர்கள் குடியுரிமை வரைக்கும் வாங்கி வைத்துக்கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டு மொத்த இந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள்?
அவர்கள் காப்பாற்ற எத்தனை ஜீவாத்மாக்கள்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில்?

ஓரு லட்சத்திக்குள் குறைவாக இருக்கும் எந்த அகதிகளுக்கும் இன்று வரையிலும் முறையாக வாழ்க்கை மற்றும் அட்டை இல்லை.  இவர்களும் அட்டை புழுவாகவே வாழ பழகிக்கொண்ட காரணத்தால்.
அகதிகளின் ஓப்பந்தம் இன்று வரையிலும் இந்தியா கையெழுத்து இடாமல் இழுத்துக்கொண்டு வந்து கொண்டுருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?


அரசியல், திரைஉலகம், எழுத்தாளர்கள், பத்திரிக்கை உலகம், பதிவு உலகம் என்று ஐந்து முனைகளும் இந்த இலங்கை பிரச்சனையை பற்றி அவரவருக்கு உண்டான காரண காரியங்களோடு, அக்கறையோடு, அக்கறையின்மையோடு அணுகிக்கொண்டுருந்தாலும் இன்று வரையிலும் எந்த நம்பிக்கை முனைக்கும் இந்தப் பிரச்சனை போய் சென்று அடையவில்லை.
ஒற்றுமையில்லை.  ஒன்றுபடவில்லை.
ஒரே அணியாய் மாறாத அத்தனைக்கும் பின்னாலும் அரசியல் பிணி மட்டும் தெளிவாக இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது?

வீரம் என்பது உண்மை.  அர்பணிப்பு என்பது கூட நூறு சதவிகிதம்.  தமிழீழம் என்ற நோக்கம் கொள்கை என்பதும் அத்தனை உனனதமானது.  சந்தேகம் என்பதே இல்லை. ஆயுதப்போராட்டம் என்பதை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கும் அவர்களின் வாழ்வியலின் மொத்த அவலத்தை தொடக்கம் முதல் உள்வாங்கியவர்களுக்கும் நிறைய வித்யாசங்கள் வினோதமான எண்ணங்கள் உருவாகும்?  உருவாக்கும்?

ஆனால் இன்றுவரையிலும் முடியாத கன்னித்தீவு படக்கதை போலவே இந்த இலங்கைத்தீவின் மக்களின் வாழ்வியலின் முடிவும் தெரியமாட்டேன் என்கிறது.

ஏன்? என்ன காரணங்கள்?  யார் பின்னால் உள்ளவர்கள்? வெளியே தெரியாதவைகள் என்ன? புரிய வைத்தது என்ன?

இந்த ஐந்து புரியாத பூதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பயணிப்பதே இதன் நோக்கம்.

இந்த தொடர் முடியும் தருவாயில் நான் விரும்புவது ஒரு " செய்தி " கிடைக்க வேண்டும்.  அல்லது ஒரு " தண்டணை " உருவாகி இருக்க வேண்டும்.

" உயர்சக்தி "  உலகில் உண்டு என்று நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களின் எண்ணங்களில் வேறு என்ன பெரிதாக தோன்றிவிடமுடியும்?

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது,

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.




இன்று உங்களுக்கும் எனக்கும் நல்லவர் யார்?  கெட்டவர் யார்? தமிழனத்தின் காவலர்கள் யார்? என்று உணர்த்திக்கொண்டுருப்பவர்கள் ?   புகைப்படம் போல இவர்களின் வாழ்வியலின் அவலமும் கூட?

மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள் கம்பிகளுக்கு பின்னால் வாழ்வது வரையிலும்

Tuesday, October 20, 2009

கலைஞானி கமல்ஹாசன் கலைஞன் கணவன் தந்தை

"காதல் மன்னராக "  பிறகு இவர் தான் "இளவரசன் "  பட்டத்துக்கு வந்தவர்.  காதல் மன்னராக ஆட்சி புரிந்தவர் கூட தன்னுடைய கடைசி காலத்தில் பொருந்தாத காதலினால் தானும் அவஸ்த்தை பட்டு அவரின் மொத்த குடும்பத்தையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார்.  ஆமாம்" காதலின்" மொத்த குறீயிட்டின் பலமும் பலவீனமும் இது தான்.



அன்று எனக்கு புரியாத வயதில் அடுத்த வீட்டு அக்கா என்னை விரட்டி விட்டு உங்களை ரசித்தார்கள். இன்று என் குழந்தைகளுக்கு புரியாமல் இருந்தாலும் கூட   உங்களை ரசிக்க முடிகின்றது.

ஆனால் இன்றுவரையிலும் வாலிப வாலிபிகளுக்கு ஜிலேபி உண்ணும் மகிழ்ச்சியை தந்தவர்,  தந்து கொண்டுருப்பவர் நம்முடைய கமல் ஹாசன் என்றால் அதில்  ஹாஸ்யம் இல்லை.  நடிகர் சிவகுமார் சொன்னது போல்  " அப்போது  தேடிக்கொண்டுருந்த அழகான முகம்"

 இன்றுவரையிலும் அதை காப்பாற்றி வைத்து இருப்பது வெறும் சாதனை என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடக்கூடியதா?  ஆனால் இந்தக் கமலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த புயல்கள், ஏமாற்றங்கள், இழப்புகள்,சோகங்கள் அத்தனையும் மீறி இன்று கமல் 50.



ஓவியமாய் உள்ளே வந்து கடைசியில் வாணியின் ஓவியம் போல் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டீர்கள்?

தாமரைச் சின்னம் கூட பல சமயம் வாடிப்போய் நம்பிக் கொண்டுருந்தவர்களை ஏமாற்றி விட்டதுண்டு.  ஆனால் இந்த கமலம் இன்று வரையிலும் வாடாமல் நம்முடைய தமிழர்களின் வாழ்க்கையையும் பலசமயம் சிந்திக்க வைத்துள்ளார்.
அரசியலில் கலைஞரைப் போல கலையில் இவர் ஒரு ஆச்சரியக் குறியீடு தான். " இசைக்கு ஞானி"  என்ற பட்டம் என்பது இளையராஜாவுக்கு எத்தனை பொருத்தமோ அத்தனை பொருத்தம் இவருக்கு" கலைஞானி "  தொடக்கத்தில் வெறியனாக, ரசிகனாக, பார்வையாளனாக என்னை பரவசமாய் நவரசத்தில் ஆழ்த்தியவர்.  கற்பவர்களுக்கு கரை இல்லை என்று இன்றுவரையிலும் அனைவருக்கும் உணர்த்திக்கொண்டுருப்பவர்.  அதென்னவோ தமிழ்நாட்டில் மட்டும் ஞானி என்றால் பிரச்சனை தான்.


சிந்தனையாளர் ஞானியின் ஓ....... பக்கங்களுக்கு  ஓகோ....... என்று படிக்கவிரும்பாதவர்கள்,  சிறகடித்து காற்றில் பறக்காத சிம்பொனி என்று சீண்டி பார்த்துக்கொண்டுருக்கும் பட்டியலில் இவர் மட்டும் இன்னும் சிக்க மாட்டேன் என்கிறார். எவர் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் எனக்குள் ஒருவன் தான்.
நடிப்பில் சிறந்தவர் என்றால் நடிகர் திலகம் போதுமே?   எது மக்களுக்குத் தேவை என்று உணர்ந்தவர் என்றால் மக்கள் திலகம் போதுமே?
ஆனால் இவர்கள் இருவரிடத்திலும், தொடர்ந்து வந்து கொண்டுருப்பவர்களிடத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இவரிடம் உண்டு.

கலைஞானி ஒரு விஞ்ஞானி

தனது கலையை, வாழ்க்கையை, கொள்கையை, எதிர்கால லட்சியங்களை எல்லாவற்றையும் விஞ்ஞானப் பார்வையில் பார்க்கத் தெரிந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர்.  அதில் தோல்வியும் உண்டு.  தொடர்ந்த வெற்றியும் உண்டு.
அது பலருக்கு புரியாத ஆபூர்வ ராகங்களாக இருந்தாலும் இன்று வரையிலும் வற்றாமல் ஓடிக்கொண்டுருக்கும் மகா நதியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

சாட்டிலைட் உடன் சண்டை பிடிக்காதீர்கள் என்று நுழையும் போதே சமரசம் பேசியவர்.  சண்டியர் தனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.  அனைத்து திரை அரங்குகளிலும் வெளியிடுங்கள் என்று சொல்லி வெற்றி விழா பாதையை காட்டியவர்.

திரை உலகில் நுழைந்த போது, வளர்ந்த போது, தடுமாறி நின்ற போது, மேலேறிய போது, மேட்டுக்கு வந்தடைந்த போது, மேலான மக்களுக்கு அறிமுகமான போதும் தன்னால் என்ன முடியும் என்பதை சோதித்து பார்த்தவர்.  மேம்பட்ட நுட்பம் உள்ளே வந்த போதெல்லாம் அதற்குள் தன்னை பொறுத்திப் பார்த்தவர்.

எட்டு மொழி வித்தகம்.  எல்லா நாட்டு திரை அறிவையும் கரைத்துக்குடித்தவர்.  இவரின் பள்ளி அறிவு சொல்லித் தரமுடியாததை இவர் உள் வாங்கி சொன்ன போது உலகில் இவரும் ஒரு முக்கியப் புள்ளி ஆனார்.   வாழ்க்கை முழுவதும் கோரப்பசி.  ருசித்து ருசித்து குடித்தவருக்கு இன்னமும் கலை தாகம் அடங்கவில்லை.

நல்லவற்றை நடிகர் சிவகுமார் மூலம் பெற்றுக் கொண்டு ரசிகர்களை நாலாம்தர குடிமக்களாக மாற்றாதவர்.  நா நயம் நம்மை விட பெற்றவர். நாணயத்தில் வருமான வரி துறையின் குறும்படத்தில் நடிப்பவர்.  அத்தனை இலக்கிய அறிவும் உண்டு.  ஆற்றாமையில் வரும் கடவுள் மறுப்பும் உண்டு.  இவரின் கிசு கிசு செய்திகள் போல் இவரின் வளர்ச்சியில் புசு புசு என்று புழுக்கம் அடைந்தவரும் உண்டு.

திரையையே குடும்பமாக கொண்ட நோக்கத்தால் தான் என்னவோ நூறு படங்கள் முடித்தும் விரும்பக்கூடிய வீட்டை அடைய அதற்கும் இந்த குருநாதர் பாலச்சந்தரின் அதட்டல் அவஸ்மாக இருந்தது.   கட்டிய மணைவியுடன் கொண்ட வாழ்க்கை இறுதியில் கண்ணீரைத் தந்தாலும் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யமாகவே புதைந்து விட்டது.  எல்லாமே புதுமை.  சிந்தனை மட்டுமல்ல.  குழந்தை பெற்று தாலி கட்டியதும் புதுமை தான்.

பிரிவினைகள் என்பது மனைவியுடன் மட்டுமல்ல.  சகோதரர்கள் கூட என்ற போதிலும் அத்தனையிலும் சாணக்கியன் தான்.



உங்களின் கலைக்கு மட்டுமல்ல .  உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் இவர் தான் கடவுள். உங்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காவிட்டாலும்?


மாநில பிரச்சனைகள் மீறி மகத்தான மனிதராக காட்டிக் கொண்டவர்.   தலைகோதி, உடை மாற்றி  உள்ளம் கவர்பவர் ஒரு பக்கம்.  ஆனால் அவர் முதல் படம் வருவதற்கும் காரணமாக இருந்தவரும் இவரே.  இன்றளவும் அவருக்கு மட்டுமே போட்டியாக இருப்பவரும் இவரே.  உள்ளத்தை சிரிக்க வைக்க வந்த பல பேர்களில் இன்று வரையிலும் உடலை வருத்தி கலையாத தாகத்தில் தவிப்பவர்களுக்கு தன்னை அர்பணித்துக்கொண்டவர்.


நடிகனாக இருப்பவருக்கு என்ன பாராட்டு பத்திரம்?

ரத்தத்தின் ரத்தமே என்று சொல்லாமல் தந்த ரத்த தானங்கள், உடன்பிறப்பே என்று சொல்லாமல் உடலை தொடக்க காலத்திலேயே தானமாக தந்தவர்.


மதம் இல்லாத பள்ளியை தேர்ந்தெடுத்தபோதே உங்களின் வாழ்க்கையின் பாதை குறித்து பெரிதான ஆச்சரியம் இல்லை. எல்லா நிலையிலும் நாயகன் தான்.

எல்லாவிதத்திலும் முன்னோடி தான்.

அம்மாஞ்சி மலையாள பிரமாணன், தேவர் மகனாக மாறுவார்.  விருமாண்டியின் வீரம் பயமான தெனாலியாக கதைக்க முடியும்.  ஆனால் அவதாரமாக உருவெடுத்து உன் அருகில் தீவிரவாதம் என்பதை உயரத்தில் இருந்து ஊருக்கு உரைக்க முடிகின்ற தைரியசாலி.

மற்றவர்களுக்கு, தொடர்ந்தவர்களுக்கு, நம்பியவர்களுக்கு எதைத்தந்தார்?

சுந்தர் சி, சந்தானபாரதியிடம் கேட்க வேண்டும்.  திரைக்கதை பட்டறையில் பங்கெடுத்தவர்களிடம் கேட்க வேண்டும்.  கமலுக்கு பிறகு விக்ரம் தான் என்று ஞாநியிடம் கேட்க வேண்டும். கற்றது என்னவோ அனந்து, பாலசந்தரிடம் தான்?

ஆனால் இவர் நேரிடையாக மறைமுகமாக மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுருப்பவரிடம் எதைக் குறிப்பிட்டு கேட்டு விட முடியும்?

இவர் யார் கைபிடித்தும் வரவில்லை?  அதற்கான அவஸ்யத்தையும் உருவாக்கவில்லை.




உங்களின் கான்சாகிப் நிறைவேறாத லட்சியமாகவே இருக்கட்டும். அதற்குள் சிறுபான்மையினர் கொண்டுள்ள கோபக் கனல் மாறிவிடும் ?


கதை, திரைக்கதை, வசனம், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற தெரிந்த முகமும், அதிகம் வெளியிடாத கவி படைப்பாளியும், மேம்பட்ட தரமான இலக்கிய அறிவாளியும் எத்தனையோ தசவதாரம்.

இவர் பேசும் பேட்டிகள் புரியாத மொழிகள் என்றாலும் புரிந்தவர்களுக்கு சொர்க்கம்.  அது புஷ் மொழியாக இருந்தாலும் சரி,  இல்லை 
குஷ்  மொழியாக இருந்தாலும் சரி.

 எல்லாமே தனி  மொழி தான்.  சந்தேகம் என்பதே இருக்காது.

காரணம் காதல் காட்சியில் கதாநாயகி முகத்தில் திருக்குறளை அவசரமில்லாமல் படித்து ரசிக்கும் ருசிக்கும் அந்த மூன்றாவது பாலை பார்க்கும் பார்வையாளன் , ரசிகன் வீட்டில் (?) தயாராக இருக்க வேண்டும்?  காரணம் அவர் சொல்வது போல் உள்ளே உறங்ககி கொண்டுருக்கும் மிருகத்தை எழுப்பி விட்டுருப்பார்.

எல்லாமே சரி தான்?

குழந்தைகளுக்கு முதல் தரமாக முதன்மை தரமான கல்வியை வழங்கிய கலைஞானி அவர்களுக்கு தரமான வளர்ப்பை தந்துள்ளாரா?

 உலகளாவிய பார்வைகள் என்பது உள்ளூருக்குள் தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற அவர்களுக்கு எதிர்காலத்தில் சரியானதாக இருக்குமா? என்பதை அவர் சொல்லும் வார்த்தைகளில்  திருமணம் என்பது விரும்பியவர்களுக்காக செய்து கொண்ட ஒரு சமரசம் என்பதாக எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்போலிருக்கு.  காரணம் முன்னோடி என்பவர்களின் தத்துவம் எல்லாம் நமக்கு தொடக்கத்தில் புரியாது.  ஒரு வேளை அவர் கடைசி காலத்தில் அவர் விரும்பியபடி கேரளாவில் ஓய்வு எடுக்கும் நிஜ இந்தியன் தாத்தாவாக வாழும் போது ஒரு வேளை மறு பரிசீலினை செய்வாரா?  அல்லது நாம் தான் அன்று நாம் வாழப் போகும் வாழ்க்கையை மறு பரிசீலினை செய்யக்கூடிய கட்டாயம் வருமா? என்று தெரியவில்லை.

காரணம் ஒவ்வொரு முறையும் அவர் அவசரப்பட்டு சொன்ன போதிலும் இறுதியில் அவரது வார்த்தைகள் தான் ஜெயித்துக்கொண்டுருக்கிறது.

குறிப்பு  
நீண்ட 50 போலவே நீண்டு விட்டது. அதிலும் பிரகாசமானவர், மம்முட்டியானவர், லால், வெங்கி உரை திரையை விரும்பாமல் இருப்பவர்களுக்கும் பொன் உரை.

Sunday, October 18, 2009

பிரபலங்களும் பதிவர்களும் கலந்து கொண்ட கண்ணீர் அஞ்சலிக்கூட்டம்

இறுதி கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்ள வந்த உங்களுக்கு இந்த நீள் பதிவு, சாப்பிட்ட தீபாவளி பலகாரத்தை,சிறப்பு திரைப்படத்தை,சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் பேட்டியை, செரிக்க வைத்துவிடும். கொண்டுள்ள கண் வழியோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வேறு வழி இல்லை

ஹே ராம்.


மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள்
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் முடிவு பதிவு (51)

டெல்லியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜெ.சஞ்சீவிக்கு பம்பாயில் இருந்து ஜிம்மி நகர்வாலா என்கிற துப்பறியும் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் தொலைபேசியில் தெரிவித்த கருத்து இது.

" ஏன்? எப்படி? என்று கேட்காதீர்கள்?  என்னுடைய உள் உணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.  காந்திஜியை கொலை செய்ய மற்றொரு முயற்சி நடக்கப்போகிறது.  இப்போது இங்கு நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது."

தொடக்கம் முதல் அக்கறையில்லாமலே காலத்தை கடத்திக் கொண்டுருந்த சஞ்சீவி என்ற உயர் அதிகாரி "என்னை என்ன செய்ய சொல்கீறீர்கள்? உடுப்புடன் எந்த காவர்களையும் உள்ளே பார்த்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார்.  நான் என்ன செய்ய முடியும்? "என்றார்.

ஆனால் இந்த இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் தேவையான உண்மையான குற்றவாளிகளின் பெயர், புகைப்படம் போன்ற சகல விபரங்களுடன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த பூனா டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் யு. எச்.ராணாவின் மேஜையில் தயாராக இருந்தது.  யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், இத்தனை பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அன்று தான் பணியில் சேர்ந்து இருந்தார்.

நுழைந்த நாளில் அத்தனை கோப்புகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டுருந்தார்?

1948 ஜனவரி 30 காந்திஜியின் கடைசி தினம்.  அன்று அவர் பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய ஸ்லோகத்தின் பொருள் இது.

"பிறந்தவர்களுக்கு மரணம் உறுதி.  இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பது உறுதி.  ஆகையினாலே தவிர்கக இயலாதவற்றைப் பற்றி நீ துயரப்படலாகாது"

அன்று மாலை காந்திஜி சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டுருந்தார்.  ஐந்து மணிக்கு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டியவர் அன்று பேசிக்கொண்டுருந்ததால் நேரம் போவதே தேரியவில்லை.  எதேச்சையாக கடிகாரத்தை பார்த்த போது மணி ஐந்து பத்து.

"நேரமாகி விட்டது.  பிறகு சந்திப்போம்" என்று அவசரமாக கிளம்பினார்.



மறுபடியும் விதியின் விளையாட்டு?

எப்போதும் அருகில் இருக்கும் சுசிலா நய்யார் பாகிஸ்தான் பயண ஏற்பாட்டுக்கு சென்று இருந்தார்.  எப்போதும் அவர் மேல் அக்கறையாக சாதாரண உடையில் காந்திஜியின் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்த டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்குப் பதிலாக இப்போது மற்றொரு அதிகாரி.

யார் காரணம்? காந்திஜியா? நேருவா? ஜின்னா சாகிப்பா? மவுண்ட் பேட்டன் பிரபுவா? கோடு கிழித்த ஆங்கிலேய கணவானா?  பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நேற்று கோடியில் புழங்கிய அடுத்த நாள் புழுங்கியவர்களின் அவஸ்த்தை பேரணி இது.  நாதுராம் கோட்ஸே தொடக்கத்தின் மூலம் இது.  காந்திஜியின் இறப்பு நிர்மூலத்தில் இதுவும் ஒரு காரணம்?

அந்த மாலை வேலையில் அவரும் அவசரமாக கலந்து கொள்ள வேண்டிய கூட்டத்திற்காக வெளியே சென்று விட்டார்.

மனுகாந்தி, ஆபாகாந்தி தோளில் கைப்போட்டுக்கொண்டு சென்ற போது பாதையில் இருந்தவர்கள் இரண்டு புறமும் விலகி வழிவிட்டனர்.  அதுவரையில் ஒரு ஓரமாக அத்தனையும் கவனித்துக்கொண்டுருந்த கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்தவனாக பின்னால் இருந்து சுடுவதை விட முன்னால் நேருக்கு நேர் நின்று சுடுவது எளிது என்று நினைத்து இரண்டே எட்டி முன்னே பாய்ந்து சென்றான்.



வணங்குகிறேன் ஐயா.  வாழ்த்துகிறேன் தாத்தா.  உங்கள் பணியை நீங்கள் முடித்துக்கொள்வதாக தெரியவில்லை.  உங்களை வழி அனுப்ப எனக்கு வேறு வழியும் தெரியவில்லை.  உள்ளே என்னுள் எறியும் தீக்குஎத்தனை மக்களின் விழிநிரைக்கொண்டு ஊற்றி அணைக்க முடியும்? சொல்லாமாலே உணர்த்திய நாதுராம். 

பாதைக்கு நடுவில் நின்றவன் வந்து கொண்டு இருந்த காந்திஜியை பார்த்து "
நமஸ்தே காந்திஜி"  என்றான்

கொண்டு வந்து இருந்த பைபிளில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து கூப்பிய கரங்களுக்குள் வைத்திருந்தான்.  அவன் காந்திஜியின் காலில் விழுந்து வணங்கப்போகிறான் என்ற பயந்த மனுகாந்தி அவசரமாக " சகோதரரே விலகுங்கள்.  பாபுஜிக்கு ஏற்கனவே பிரார்த்தனைக்கு தாமதமாகிவிட்டது  "என்றார்.

அதே வினாடி நாதுராம் வினாயக கோட்ஸேயின் இடது கரம் மின்னல் வேகத்தில் நீண்டு அவளை முரட்டுத் தனமாக விலக்கித் தள்ளியது.  வலது கரத்தில் இருந்து நீண்ட பெரட்டா துப்பாகியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குண்டுகள் கிளம்பி காந்திஜியின் மார்பில் புதைந்தன.




கோட்ஸேவுக்கு பதில் வணக்கம் தெரிவிகக குனிந்த கரங்கள் அப்படியே இருக்க "ஹே ராம்"  என்று திணறிய காந்திஜி இன்னும் முன்னால் செல்ல முயற்சிக்கின்றவரைப் போல மேலும் ஒரு அடி முன்னால் வைக்க முயற்சித்த உயிரற்ற உடலாகக் கீழே சரிந்தார்.

ஆம் காந்திஜி என்ற அந்த எளிய மனிதரோடு அஹிம்சை, சத்தியம், உண்மை அத்தனையும் சரிந்தது.

ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் என்கிற பத்திரிக்கை முதல் பக்கத்தை காலியாக கருப்புக் கட்டம் போட்டு நடுவில் ஒரே ஒரு பாரா அளவுக்கு செய்தி வெளியிட்டு இருந்தது.

" காந்திஜி எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ அவர்களில் ஒருவனால் கொல்லப்பட்டு விட்டார்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட அதே வெள்ளிக்கிழமையன்று, 1915 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது சிலுவையேற்றம் நடந்துள்ளது.  ஆண்டவனே, எங்களை மன்னித்து விடு."

பின்குறிப்புகள் அல்லது எழுத்தில் வராத விசயங்கள்

1. காந்தியின் நோக்கங்கள், கொள்கைகள், தனிப்பட்ட வாழ்வில் கடைசி வரையிலும் கடைபிடித்தவைகள், மகனிடம், பேரனிடம் காட்டிய கண்டிப்பின் விளைவாக இழந்தவைகள், மற்ற நகைச்சுவை சமாச்சாரங்கள்.  ஆனால் மொத்தத்தில் அவர் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை உணர்த்தக்கூடிய உள்வாங்கக்கூடிய குறியீடு அல்ல.  தவமில்லா பெற்ற வரம்.  அதனால் தான் சாபக் கணக்கில் வரவு வைத்தோம்.

2. ஜின்னா சாகிப் அவர்கள் பாகிஸ்தான் என்ற தன்னுடைய கனவு கைக்கு வந்ததும், புதிய பாகிஸ்தானின் தொடக்க தேசிய கீதத்தை இவர் தான் இயற்ற வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்த ஒரு இந்துக் கவிஞர்.  முதல் 18 மாதங்கள் அந்த கீதம் தான் ஒலித்தது.

3. ஜின்னா சாகிப் தன்னுடைய கடைசி வாழ்நாள் வரைக்கும் வாழ்நாளில் நான் செய்த மகா மிகப் பெரிய தவறு என்பது இந்தியாவை பிளவு படுத்தியது என்று புலம்பிக்கொண்டுருந்தது.

4.  ஜின்னா சாகிப் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள், குணாதிசியங்கள், உடம்பு முழுக்க நோய் என்பதைத்தவிர வேறேதும் இல்லா போதும் அவருடைய நோக்கத்திற்காக எடுத்துக்கொண்ட பாதைகள்.

5.  பாகிஸ்தான் என்ற நாட்டில் வாழக்கூடிய மக்கள் "  மதம் என்பதைக் கடந்து மனிதப்பண்புகளுடன் வாழ்ந்தால் தான் கடைசி வரை இந்த நாடு முன்னேற்றம் அடைவதற்குண்டான் வழியாக இருக்கும்.  எதிர்காலத்தில் இப்போது மதம் சார்ந்த பாகிஸ்தானாக இருக்கக்கூடாது? " என்ற நிதர்சன குறீயீட்டை அன்றே அவர் வெளியிட்ட மனசாட்சி குறித்து.

6.  நிஜாம் மற்றும் ஹரிசிங் மன்னர் குறித்து.  அளிக்கப்பட்ட தகவல்கள் நாலில் ஒரு பங்கு மட்டுமே.

7,  கலவரத்தின் போது முஸ்லீம் மற்றும் சீக்கியர்களின் முழுமையான கோரத்தாண்டவம், பின்புலம், தனிப்பட்ட நபர்கள் அடைந்த லாபங்கள், குணாதிசியங்கள், மொத்த மக்கள் அடைந்த துன்பங்கள்.

8, வெகுஜன ஊடகத்தால் இன்று வரையிலும் சரியான முறையில் வெளிவராத வீர் சாவர்க்கர் குறித்த குறிப்புகள்.  கடைசி வரையிலும் அவர் ஒரு அவதாரமாகவே வாழ்ந்தார்.  மதப்பற்று என்பது ஜின்னாவைப் போல அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்த போதிலும், தன்னுடைய கொள்கைகளுக்காக ஜின்னாவைப் போல சாமான்யன் வாழ்க்கையை பாதிக்கப்படச் செய்யவில்லை.  அவரது முக்கிய குறிகோள் முஸ்லீம்களாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவரது அழிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை.  ஆங்கிலேயர்கள் உட்பட.


1. இடுகை என்பதும் பதிவு படைப்புகள் என்பதும் தேவைதானா?  என்ன சாதித்து விடப்போகின்றோம்?

தினந்தோறும் நாள்குறிப்பாக உங்கள் டைரியில் எழுதிக்கொள்ளும் போது அது உங்களின் அந்தரங்கம் குறித்ததாக உங்களுக்கு மட்டும் சொந்தமாகி விடுகின்றது.  அதுவே நீங்கள் உள்வாங்கிய விசயங்களை படைப்புகளாக எழுத முற்படும் போது உங்களின் உண்மையான திறமை, ஆளுமையினால் வளர்ந்துக்கொண்ட உங்களின் சிந்தனைகளில் உள்ளே இருப்பது வெறும் வக்கிர எண்ணங்களா? வடிகாலுக்கான விசயங்களா? படிப்பவர்களை சிரிக்க வைத்து அவர்களின் ஆயுளை கூட்டுவதற்காகவா? இல்லை சமூக அக்கறையினால் உருவாகும் சிந்திக்கக்கூடிய விசயமாக இருக்கிறதா? இல்லை புகழ் போதையினாலா என்பதை உணர்த்தி வாசிப்பாளர்களை உள்வாங்க வைத்து விடும்.

2. நன்றாக எழுத வேண்டும் என்று முற்படும் போது?

நீங்கள் வாசிக்கும் அல்லது பார்க்கும் எந்த ஊடகமும் உங்களின் உணர்ச்சிகளை தூண்டாது.  உண்மைகளை தேடி அலையத் தொடங்கும். வசதியான வாழ்க்கை அமையாவிட்டாலும் உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழ உங்களை அமைதிப்படுத்தும்.  வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையை குறை நிறைகளுடன் நேசிக்கத் தூண்டும். எழுதுகின்ற எழுத்து என்பது காசு வாங்காத மன நல மருத்துவர்.

3. விமர்சனம் என்பது? ஏன்?

எழுத வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும், முயற்சித்துக்கொண்டுருப்பவர்களும், முடியவில்லை என்று அங்காலாய்ப்பில் சலித்துக்கொள்பவர்களும் உள்வாங்கியதை விமர்சித்துப்பாருங்கள்.  என்ன விமர்சனம் என்பதை விட உங்கள் உள்வாங்கிய, உள்வாங்கும் தகுதி என்ன என்பதை அப்பட்டமாக உணர்த்திவிடும்.

நீங்கள் அளிக்கும் ஓட்டு முறை என்பது நீங்கள் உள்வாங்கியது பிடித்தமானது என்பதை உலகறியச் செய்வதற்காக நீங்களும் படியுங்கள் என்று படிப்பவர்களை அதிகப்படுத்தும் முயற்சி. 

இவர்கள் என்னை வளர்த்தவர்கள், வாழ்ந்து கொண்டுருக்கின்ற வாழ்க்கையை எழுத்துலக வாழ்க்கையை வளப்படுத்தியவர்கள்.   விமர்சனம் தந்த காரணத்தால் முக்கியமானவர்கள் அல்ல.  இவர்களின் அத்தனை பேர்களின் இடுகையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் படித்து என்னுடைய படபடப்பை குறைத்துக்கொள்கிறேன். காரணம் சிரிக்க வைக்கின்றார்கள், சிந்திக்க வைக்கின்றார்கள், குறைகளை சுட்டிக்காட்டுகிறார்கள், போக வேண்டிய பாதையை தங்களுடைய எழுத்தால் குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  இவர்களைப் போல் நண்பர்களாக இணைந்தவர்கள்,  ரீடரில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண் இன்று இரண்டு இலக்கமாக மாறியதற்கு காரணம் அத்தனையும் இவர்கள் தான் முக்கிய காரணம். கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் இவர்களை  உள்வாங்கிப்பாருங்கள்.  இல்லத்தை பிடிக்காதவர்கள் கூட உங்கள் உள்ளத்தில் இவர்களுக்கு இடம் கிடைக்கக்கூடும்.

1. அதிகபிரசங்கி தனமான தொடக்க எழுத்துக்களை தன்னுடைய காந்திய தன்மையால் கரை சேர்த்தவர். உறவான வழிகாட்டி.

2. எல்லாமே விஞ்ஞானப்பார்வை என்றாலும் என்னுடைய திசைகாட்டி.

3. உறங்கிய சுதந்திர உண்மைகளை நீங்களும் உள்வாங்கலாம் என்று உலகிற்கு உரைத்த உத்தமர் குழு.

4. அப்பொழுதே நன்றாகத்தான் இருக்கும் என்று வழிமொழிந்தவர்

5. விமர்சனங்கள் தேவையில்லை.  அப்பாற்பட்டது என்று அக்கறையின்பால் சொன்ன பெரிய வார்த்தைகள் தந்த ஆசிரியை.

6. அருகில் இருந்தாலும் அமைதியாய் ரசித்துக்கொண்டுருந்தவர்? சத்திய வார்த்தைகளை எப்படி விமர்சிப்பது என்ற தோழி.

7. இலங்கை குறித்து எழுதியே ஆகவேண்டும் என்று சிந்திக்க சொல்லி தந்தவர்கள் 1, வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்கையை மாணவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டுருப்பவர்.   2. பக்கத்து ஊரை பரவசமாக சொன்னவர். அவலத்தை உணர்த்தியதால் பல நாட்கள் தூக்கம் கெடுத்தவர்.
8. அலட்டிக்கொள்ளாமல் ஆச்சரியப்படுத்தியவர் இவர்.

9. கந்தா போற்றி,

10.  முன்னோக்கி உங்களை அழைத்துச் செல்பவர்

11.  பதிவும் சரி இயக்கும் படமும் சரி அளிக்கும் விமர்சனமும் சரி நமக்கு பாடம்.

12. வாழும் நிகழ்காலத்தை உணர்த்தியவர்.

13. சீக்கிரம் உரிக்க மாட்டார்.  உரித்தால் சிரிக்க வேண்டும் அல்லது அழ வேண்டும்.

14. அடுத்த ப்ளைட் பிடித்து வந்து ஆட்டோகிராப் கேட்பாரோ?


16.  வாழும் வாழ்க்கையும் செய்யும் தொழிலும் பகுத்தறிவு பாதை.

17. வலைதள சூட்சமத்தை சொல்லித்தந்த குரு.


19. தமிழ் சொல்லித்தாருங்கள் என்றவர்.

20. நான் எழுதக் காரணமாக இருந்த பிரபல்யம்.

21. என் தகுதியை உணர்த்திய பிரபல்யம்.

22. பேசிய பிரபல்யம்.

23. எழுத வேண்டும் என்ற சக்தியை அளிப்பது.

24.  திருந்தாமல் திசை தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கையை அக்கறைபடுத்தியவர்கள். ஆளுமை செய்து கொண்டுருப்பவர்கள்.

ஆனால் படைப்பு என்பதை ஒரு நாள் அத்தனை பேர்களும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று படைத்துக்கொண்டுருப்பவர்.



ஜோதிகணேசன். தேவியர் இல்லம்.  திருப்பூர்.

வணங்குகிறேன்.  வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.  வளர்க நலமுடன்.