அப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும் நான் யோசிப்பதுண்டு. நம்பிக்கைகளுடன் தொடங்கும் திருமண வாழ்க்கை அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றி அடைந்ததாகச் சொல்லி விட முடியாது. முன்பு வெளியே தெரியாமல் இருந்தது. இப்போதும் அனைத்தும் வெளியே வந்து விடுகின்றது.
பொருத்தங்கள் என்பதனை அவரவர் நம்பிக்கைகள் வைத்துத் திருமணத்திற்கு முன்பு பார்த்தாலும் வாழும் சூழல் என்பதும், அவரவர் வளர்ந்த விதங்களின் காரணமாகப் பொருந்திப் போவதில்லை. பணம் இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுக்காத தம்பதியினரும், எல்லாமே இருந்தும் வெவ்வேறு துருவமாக வாழும் வாழ்க்கை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.
தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகின் மறுபுறம் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அடுத்த நொடியில் நம் பார்வைக்கு வந்து விடும் இந்த நேரத்தில் அந்தரங்கம் என்பதே இல்லாத சூழலில் நம் அனைவரின் செயல்பாடுகளும் ஏதோவொரு வழியில் வெளியே வந்து விடுகின்றது. பொத்திப் பொத்தி பாதுகாத்த குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் ஏதோவொரு சமயத்தில் பொது வெளிக்கு வந்து விடுகின்றது. திருமணம் முடிந்து சில வருடங்களில் அவரவர் குணாதிசியங்கள் முழுமையாக வெளியே தெரியத் தொடங்கும் சமயத்தில் தான் குழந்தைகள் குடும்பத்தில் வந்து சேர்கின்றார்கள்.
அரசியல், நிறுவனம், அமைப்புத் தொடங்கிக் குடும்பம் வரைக்கும் நம் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் எவரோ? அவர்களைத் தான் நாம் விரும்பச் செய்கின்றோம். நாம் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அனுமதிக்கவும் மாட்டோம். இது நேற்று இன்றல்ல. வாழையடி வாழையாக வந்த மரபு சார்ந்த பிரச்சனை. ஆனால் உலகம் வளர்ந்ததும், வளர்ந்த உலகத்தில் மாறிய நாகரிகத்திற்கும் முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியக் காரணமென்பது மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதே.
மற்ற நாடுகளை விட நம் குடும்ப அமைப்பு வலிமையானது, நெறிமுறையான வாழ்க்கையை நமக்குத் தந்தது என்பதனை நாம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் இந்த வலிமை என்ற வார்த்தைக்குள் வெளியே தெரியாத அடக்குமுறை இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தான் காலம் காலமாக இந்த அமைப்பைக் கொண்டு செலுத்திக் கொண்டு வந்தது. "அப்பா சொன்னது தான் இறுதி முடிவு" என்ற நிலையில் இருந்த குடும்ப வாழ்க்கை இப்போது மாறி விட்டது. "அம்மா முடிவெடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்பது இப்போது பாரபட்சமாகப் பார்க்கப்படுகின்றது.
காலம் ஒவ்வொரு சமயத்திலும் பலவிதமான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே தான் வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழல் கடந்த எந்த நூற்றாண்டிலும் கண்டிராத மாற்றங்களை, நம்பமுடியாத ஆச்சரியங்களைக் கொண்டு வந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. கடந்து சென்ற மாற்றங்கள் அனைத்தும் மனித மூளையின் மூலம் நடந்தது. இப்போது எந்திரங்கள் மூலம் நடக்கின்றது.
சிலருக்குப் புரட்சியாகப் பலருக்கு மிரட்சியாக உள்ளது. ஆச்சரியமாகத் தெரியும் பல மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அவலமாகவும் தெரிகின்றது.. எது சரி? எது தவறு? என்பதனையெல்லாம் மீறி இவையெல்லாம் எனக்குத் தேவை? இது என் பார்வையில் சரிதான் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றோம். நடந்த மாற்றத்திற்கு யாரோ ஒரு தலைவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதில் பொது நலம் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நபரும் மாற்றத்திற்கான காரணமாக இருக்கின்றார்கள்.
சூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது. மாற்றங்கள் என்ற பெயரில் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றிலும் உள்ள சுயநலம் உள்ளே இருப்பதைத் தெரிந்தே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் நமக்கான வாய்ப்பைத் தேடுகின்றோம். அதையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கின்றோம். இது நேரிடையாக மறைமுகமாக ஒவ்வொருவர் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை உருவாக்குகின்றது.
இங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது.
எதனால் இது நடந்தது? என்பதனை யோசிக்கும் முன்பு இருப்பதை இழந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. உழைப்பு என்பதின் வரையறை மாறியுள்ளது. முடிவெடுக்கும் திறனில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது என்று அறிவுரையாகப் போதிக்கப்படுகின்றது. முதல் முடிவு மாறும் போது அடுத்த முடிவுக்குச் செல்ல வேண்டும் என்று பாடங்களை உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சோர்ந்து போனவன் பின்னுக்குச் சென்றுவிடக் காரணக் காரியத்தைச் சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனின் உலகமாக மாறியுள்ளது.
இந்த இடத்தில் தான் மற்றொரு பிரச்சனை உருவாகின்றது. நம் தாத்தா அப்பாவைக் குறை சொன்னார். அது அப்பாவின் அணுகுமுறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று நாம் மகன்,மகள்களைக் குறை சொல்கின்றோம். அது அவர்களின் மாறிய பழக்கவழக்கங்கள் குறித்தே இருக்கின்றது. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது,
ஐம்பது வயதாகியும் கற்ற அனுபவங்கள் எதுவும் நமக்கு உதவவில்லையே? என்ற ஆதங்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமலும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒன்று சேர்ந்து அழுத்தச் சமாளிக்க முடியாமல் தடுமாறத் தொடங்குகின்றோம்.
தலைமுறை இடைவெளி என்பது எல்லாச் சமயங்களிலும் உருவாகின்ற ஒன்று தான். ஆனால் மாற்றத்தின் காரணமாக உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் பின்னாலும் ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. நான் முக்கியம். என் வாழ்க்கை மற்ற அனைத்தையும் விட முக்கியம். இந்தக் கேள்வி குடும்பத்தில் உருவாகும் போது, மகள், மகள் வாயிலிருந்து வார்த்தைகளாக வரும் போது தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தான் தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கின்றது.
சுதந்திரம் என்ற பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. அதன் வரையறை குறித்து யாருக்கும் கவலையில்லை.
இங்கேயிருந்து உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கையில் அதிகளவு தடுமாற வைக்கின்றது. காரணம் நம் வாழ்க்கை முறையின் அமைப்பு அந்த அளவுக்கு நேசம், பாசம் போன்ற வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கலந்திருப்பதால் அதன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் மரண வாதையாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்குரிய சொத்துக்களை மட்டும் சேர்ப்பதில்லை. அதில் ஒரு அங்கமாகக் குழந்தைகளையும் வைத்துள்ளனர்.
அவர்கள் திருமணம் ஆகி வேறோர் இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெற்றோர்களுக்கு மரணம் வரைக்கும் பழி சொல்லாகவே உள்ளது. இந்த வாழ்க்கை முறையில் தான் தற்போது உருவாகியுள்ள மாற்றங்கள் பேரிடியை நிகழ்த்தி உள்ளது.
குறிப்பாகப் பெண்கள் குறித்த பார்வையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் சிந்தனைகள் மாறிய சூழலில் காலாவதியாகி விட்டது என்பதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். பெற்றோர்களும், கணவனும் தான் வாழ்க்கை என்ற தத்துவம் மாறி அவர்கள் கற்ற கல்வி நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலைகள் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. வட்டத்திற்குள் நின்றவர்கள் வெளியே வந்து விடச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தடுமாறத் தொடங்குகின்றார்கள்.
கூட்டுக்குள் அடங்காத பறவைகளில் பாய்ச்சல் இங்கே பலருக்கும் பயமுறுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி நான் வாழ்வது என் குழந்தைகளுக்காகவே என்று வாழ்ந்த பெற்றோர்களுக்குப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.
பற்றாக்குறை என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பது வயதில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
வாங்கும் சம்பளம், கற்றுக் கொள்ள முடியாத நுட்பங்கள், விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடல் ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலும் ஏதோவொரு இடத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் பற்றாக்குறை இருந்தே தான் தீரும். முழுமை என்பது மனதோடு சம்மந்தப்பட்டது என்றாலும் அது உணர முடியாத சூழல் தான் நம்மைக் கொண்டு செலுத்துகின்றது. வெறும் வார்த்தைகளும், வாசிப்புகளும் இவற்றைத் தந்து விடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது.
நிஜமென்பதும் எதார்த்தமென்பது சூட்றெரிக்கும். நேசித்தவற்றை விட்டு விலக முடியாமலும் நிஜமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அனுதினமும் தடுமாறும் சமயங்களில் உடன் இருக்கும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாதபட்சத்தில் நொடிக்கு நொடி மரண அவஸ்தை தான்.
ஆண், பெண்ணின் அங்கீகாரமென்பதைத் திருமணம் என்று இங்குள்ள சமூகச் சூழல் தீர்மானித்து வைத்துள்ளது. அதுவே அவரவர் வாழ்வில் குழந்தைகளின் வரவுக்குப் பிறகே முழுமையடைவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளது.
தவமாய்த் தவமிருந்தேன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தருபவர்கள் பிறக்கும் குழந்தைகளை வரம் தந்த சாமி போலப் பார்க்கப்படுகின்றார்கள். மகன்களை அடைந்தவர்களின் பார்வையும் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நோக்கமும் சமூகத்தால் வேறு விதமாகப் புரிய வைக்கப்படுகின்றது. எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் அழுத்தங்கள் என்பது வாழும் வரைக்கும் படிப்படியாக அவரவர் மனதிற்குள் புகுத்தப்படுகின்றது. இதனையே இங்குள்ள கலாச்சாரம், கடமை என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.
குழந்தைகள் வந்தவுடன் அங்கீகாரம். வளரத் தொடங்கும் போது மகிழ்ச்சி, வாழ்க்கையைத் தொடங்கும் போது கடமை நிறைவேறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு சமயத்திலும் இல்லாத தலைகீரிடத்தில் ஒரு பூ சூட்டப்படுகின்றது. பாசம் சேர்த்துப் பக்குவமாகச் சமைத்த சமையல் பலசமயம் குலைந்து போகின்ற சமயத்தில் மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையிருமாகத் துடித்துவிடுகின்றது.
இவையெல்லாமே ஐம்பது வயதில் தாக்கும். தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றதோ இல்லையோ சமூகத்தால் கேலியாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்தவர்களின் பார்வையில் நாம் எப்படியிருக்க வேண்டும்? என்று உருவாக்கியிருந்த கட்டுமானம் உடைபடும் போது அணை உடைந்து வெளியே தாறுமாறாகப் பாயும் வெள்ளநீர் போல ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.
நாம் வாழுமிடம் பொறுத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நாமே ஒவ்வொரு பெயர்களைக் கொடுத்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மகள், மகனின் கல்வி, குடும்ப வாழ்க்கையென்பது அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற நோக்கமே இன்னமும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாக உள்ளது. இது பெற்றோர்களின் உளவியலைச் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்துகின்றது.
இந்தச் சமயங்களில் தான் அப்பாக்களின் ஆதிக்கம் நொறுங்கிப் போய் விடுகின்றது. அம்மாக்களின் வாழ்க்கையென்பது நான் வளர்த்த விதம் தவறா? என்று கூனிக்குறுகி விட வைக்கின்றது.
இன்றைய சூழலில் கடினமானதும், சவாலானதும், ஒருவரை சாதனையாளராகக் காட்டுவதும் அவரவர் குழந்தைகள் வளர்ப்பு தான் என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.
பணம் சேர்த்து வாழ்வில் வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் குடும்பம் முதல் மிகச் சாதாரணக் குடும்பம் வரைக்கும் இன்று நீக்கமற நிறைந்திருப்பதும் சந்ததிகள் சார்ந்த பிரச்சனைகள் தான். தகுதியான வேலை கிடைக்கவில்லை என்பதில் தொடங்குகின்றது. தரமான தொடர்பில்லாமல் தரங்கெட்டு அலைகின்றானே என்பது வரைக்கும் சொல்லித் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இங்கே ஏராளமுண்டு. இதற்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் சுனாமியை உருவாக்கிக் கொண்டிருப்பது காதல் என்ற வார்த்தை.
நம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் வென்றவர்கள் தோற்றவர்கள் நம் முன் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள். சந்தர்ப்பங்கள் மீண்டும் சரியாக அமைந்தால் மீண்டு வரக்கூடிய வாய்ப்பதிகம். மீண்டு வந்தவர்களும் நம் முன்னால் ஏராளனமான பேர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது?
நாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும் நம் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் ஒப்பு நோக்கி விடுவோம்.
காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது?
தொடர்வோம்.......
50 வயதினிலே 5
28 comments:
இன்று ஐம்பதுகளில் இருப்போரும் அன்று ஐம்பதுகளில் இருந்தோரும் நாளைஐம்பதுகளுக்கு வருவோருக்கும் இதே மாதிரி பிரச்சனைகள்தானா
"திருப்தியாக வாழ்கிறோம்" என்று திருப்தியாக மனம் ஏற்பதில்லை என்பதும் ஒருவிதத்தில் உண்மை...
தலைமுறை இடைவெளி என்பதை விட வயதுதான் காரணம். இளமைக்கான சிந்தனை எப்போதும் ஒன்றுதான். புரட்சிகரமாகத் தோன்றிய சிந்தனை 50 வயதில் அபத்தமாகத் தெரியும். விஞ்ஞானத் தொழில் நுட்பங்கள் வடிவத்தை மாற்றிக் கொள்கிறதே தவறிய வயதுக்கேற்ற அடிப்படை குணங்களில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்றே கருதுகிறேன்.20 வயதில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை சகஜமாகக் கருதும் ஆணுக்கு 50 வயதில் அதனை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படுவதும் இயல்பாக உள்ளது
பெற்ற அனுபவங்கள் மூலம் அடி வாங்கியவர்கள் தங்களின் கொள்கை உறுதியில் திடமுடன் நிற்பதைத் தவறென்று சொல்வதற்கில்லை.
***காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது? ***
காலம் கெட்டுப்போய்க்கொண்டுதாங்க இருக்கு. தெர்மொடைனமிக்ஸ் படிப்பார்த்தாலும் என்ட்ரோப்பி அல்லது டிஸார்டர் அதிகமாகிக்கொண்டுதான் போகுது. தண்ணீர் பஞ்சம், கெமிக்கல் பொல்லுஷன் எல்லாமே அதிகமாகிக்கொண்டுதான் போகுது.
எதை வளர்ச்சினு சொல்றீங்கணு தெரியலை? நம்மை வைத்து ஜப்பான் கார் கம்பெணிகளும், சைனா செல் ஃபோன் கம்பெனிகளும், ஃபேஸ் புக்கும், கூகிலும் வளர்ந்துகொண்டுதான் போகுது?
மறுபடியும் எதில் நீங்க வளர்ந்து இருக்கீங்கனு சொல்லுங்க??!!
சேலை கட்டியவர்கள் ஜீன்ஸ் போட்டா வளர்ச்சியா? இல்லை வேட்டி கட்டியவன் பேண்ட்ஸ் போட்டா வளர்ச்சியா?
இல்ல்லைனா உங்க கமலு, லிவ் இன் டுகெதர்தான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு, அந்தம்மாவும் ஓடிப் போனதும் ஊரில் உள்ள பெண்களுக்காக ஒப்பாரி வைப்பதை வளர்ச்சினு சொல்றீங்களா??
தமிழ் அழிந்து கொண்டிருக்கும்போது ஹார்வேர்ட் தமிழிருக்கை தாலினு பீத்திக்கொண்டு திரிவது வளர்ச்சியா??
மக்கள்த் தொகை பில்லீயனுக்கு மேலே ஆகி, கால் கழுவ தண்ணி இல்லாத நிலையிலிருக்கும் போதும் பெருசா வளர்ந்துவிட்டதாகத்தான் பீத்திக் கொள்கிறீர்கள்??!!
என்னத்தை வளர்ந்தீங்களோ என்னவோ!
சூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது.
உண்மைதான் ஐயா
ரொம்பவும் பயமுறுத்தீறீங்களே சாமி, நீங்க உங்களுடைய யோசிக்கிற திறமையை கொஞ்சம் நேர்மறையா யோசிக்கலாமே. ஆனாலும் சொன்ன விஷயங்களலெல்லாம் ஒத்துக்கொள்ளக்கூடியவைதான், சந்தேகமேயில்லை.
குறிப்பாக 2வது கட்டுரையில் உடலினைப்பற்றி கூறியதும், 3இல் வெளிநாட்டினரின் எண்ண ஓட்டத்தினை பிரதிபலித்ததும், இந்த கட்டுரையில் தாம்பத்யத்தின் புரிதல்கள் பற்றியும் சொன்னதையெல்லாம் சத்தியமானவைகள்.
நான் தற்போதைய 40களில் இருந்து பார்க்கும்போது கொஞ்சம் மிரட்சியாகத்தானுள்ளது. சென்ற தலைமுறையினரடித்தில் சமாளித்து வாங்கிய நன்மதிப்பையும், செல்வத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கடமையும் உள்ளபோது என்ன, எப்படி சொல்ல போகிறோமோன்னு யோசிக்கறப்போ பிரமிப்பா இருக்கு. ரொம்ப சுலபமாக போப்பா உனக்கொண்ணும் தெரியாதுன்னு கடந்து போயிடுறாங்க. இதையே பெத்தவங்களும் சொன்னாங்க, கட்டினவளும் சொல்றா, இப்போ கொழந்தைகளும். என்னோட புறவெற்றியெல்லாம் இதற்க்கு முன் செல்லாக்காசாகிறது. இப்போவே இப்படின்னா நீங்க சொல்லற 50களில் தோணுவதெல்லாம் யூகிக்கும்பொழுது பயமாகிறது சாமி.
கையை கடிக்காத வருமானம், மரியாதையான வேலை, சிறந்த குடும்பம், தரமான கல்வி மற்றும் மருத்துவம், வாரக்கடைசியில் குடும்பத்தினரோடு நல்ல பொழுதுபோக்கு, சிறந்த சுற்றம் எல்லாம் இருக்கிறப்போ எனக்கு இதுதான் சொர்கமோன்னு தோணும், கூடவே ஆண்டவா இது நிலைக்கணுமேன்னு பதற்றமும்கூட.
காலம்தான் பதில் சொல்லவேண்டும். பார்ப்போம்.
இங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது. //
உண்மையே! அது போல குடும்ப நிகழ்வுகள் இப்போது உலகமே அறியும் நிலையில் தொழில்நுட்பமும் வளர்ந்து அதுவும் வளர்ச்சி என்ற பெயரில். நிச்சயமாக இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது. இது வீழ்ச்சியே. பெர்சனல் ஸ்பேஸ் குறைந்துள்ளது அல்லது இல்லை என்றே தோன்றுகிறது. எதுவுமே ரகசியம் இல்லை. எல்லாமே வேவு பார்க்கப்படுகிறது.
நான் என் குடும்பத்தில் அனுபவத்தில் கற்றவை இதோ இன்று என் மகன் வரை கடத்த முடிந்திருக்கிறது. தடுமாற்றம் இல்லை இதுவரை. மனித உள்ளங்களைக் கையாள்வதிலிருந்து குடும்பப் பொருளாதாரம் வரைக்கும் நான் கற்றவற்றை என் மகனுக்குக் கற்பிக்க முடிந்தது. மகனு இன்றைய காலகட்டத்திற்கேற்ப அவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தவும் கற்கிறான் நானும் இக்காலகட்டத்திற்கேற்ப மாற்றிக் கொண்டு.... இதுவரை தடுமாற்றம் இல்லை. மற்றொன்று மிக எளிமையான வாழ்க்கைக்கு எங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டதாலும் தடுமாற்றமும் இல்லை. இது இப்படியே தொடர வேண்டும் என்றுதான் வேண்டுதல்.
கீதா
காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது? //
ஜோதிஜி நீங்கள் வளர்ச்சி என்று எதைச் சொல்கிறீர்கள்? தொழில்நுட்பம்? தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது சமுதாய மாற்றங்கள்...தனிநபர் வருமானம் என்று பார்க்கும் போது தனிநபர் வருமானம் ஒரு கூட்டத்திற்கு உயர்ந்துள்ளதால் அந்தக் கூட்டம் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பயங்கரமான விளைவுக்ளை இல்லையா ஏற்படுத்தியுள்ளது. ஏழைககளுக்கும் அவர்களுக்குமான இடைவெளி கூடியுள்ளது இல்லையா? அப்போது எப்படி வளர்ச்சி என்று சொல்ல முடியும்.? சரி கிராமத்தாரும், தென்னைமரம் ஏறுபவரும் கூட செல் ஃபோன் வைத்திருக்கிறார்கள் இப்போது என்று தொழில்நுட்பத்தைச் சொல்லலாம்..ஆனால் பொருளாதாரம் என்று பார்க்கும் போதும், குடும்பச் சிக்கல்கள் என்று பார்க்கும் போதும் அது வீழ்ச்சிதான் இல்லையா? என்றாலும் உங்கள் பார்வையையும் அறிய ஆவல்
கீதா
மிகவும் ரசிக்க வைத்த யோசிக்க வைத்த விமர்சனப் பார்வை இது. நீங்க யோசித்த அளவில் நான் இதைப் பற்றி சிந்திக்கவில்லை. மீண்டும் ஏதாவது ஒரு அனுபவம் உருவாகும். அதைப் பற்றி அப்போது நீங்க சொல்லியுள்ள விமர்சனத்தின் அடிப்படையில் மீண்டும் எழுத முடியுமா? என்று பார்க்கின்றேன். நன்றி முரளி.
நீங்கள் சொல்வது உண்மை தான். சுய ஒழுக்கம் சார்ந்தஅவரவர் வாழ்க்கையில் அமைதி நிச்சயம் கிட்டும். ஆனால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி அமையுமா? என்று பார்த்தால் சதவிகித அளவில் மிகவும் குறைவு. தனக்கான கொள்கை என்பதும் தான் பெற்ற அனுபவங்கள் என்பதும் தன் சுயநலத்தின் அடிப்படையில் அமைந்து தன்னை தன் குடும்பத்தை பாதுகாக்க மட்டுமே அமைந்து விடுகின்றது. அது பெரிய வெற்றியைத் தந்து விடுவதில்லை. இது நான் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவ உண்மையும்கூட.
உங்க நீண்ட விமர்சனத்தில் வந்துள்ள உங்க கமலு என்ற வாசகம் உறுத்தலாக உள்ளது. அவர் என்னை தத்து எடுக்கவில்லை. அவரின் கொள்கைகள் எதையும் எங்கேயும் ஆதரிக்கவில்லை. ஆரம்ப காலத்தில் அவரைப்பற்றி ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதியுள்ளேன். ஏன் அந்த வார்த்தை வந்தது வருண்.
நன்றி
நன்றி
ரசித்த விமர்சனம். ஒன்றை உள்வாங்க தொடர்ந்து அதற்கு முன்பும்பின்பும் உள்ள பதிவுகளை உள்வாங்கி அதனை விமர்சனமாக எழுதும் போது உள்ளார்ந்த புரிதலுடன் எழுத முடியும் என்பதற்கு உங்கள் விமர்சனமே ஆதாரம். நன்றியும் வாழ்த்துகளும். உங்கள் பதிவுகள் பல வற்றை படித்தேன். இங்கே விமர்சனம் எழுதிய அளவுக்கு நீங்கள் எழுதும் பதிவுகளில் வார்த்தைக் கோர்வைகளில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தினால் உங்களால் சிறப்பாக எழுத முடியும் கார்த்திகேயன்.
ஏற்கனவே உங்கள் குடும்பம் குறித்து நீங்கஎழுதிய பல பழைய பதிவுகள் நினைவுக்கு வந்து போகின்றது. வாழ்த்துகள்.
மிக நல்ல கேள்வி. ஒவ்வொரு காலகட்டதிலும் குடும்ப சிக்கல்கள் என்பது வெவ்வேறு விதமாக உருவாகின்றது. உதாரணமாக இப்போது இந்த சமயத்தில் பத்திரிக்கையில் வாசித்த செய்திகள் சில. 1. நெடுந்தொடர் பார்த்துக் கொண்டு இருந்த மனைவியில் ஐபில் மாற்றச் சொன்ன கணவருக்கும்நடந்த சண்டையில் மனைவி குத்திக் கொலை. 2. ஆறு வயது குழந்தையை வண்புணர்வு செய்த முதியவர் கைது. 3. ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த மாணவன் கொலை. 4. மதிப்பெண்கள் குறைந்த மாணவர் தற்கொலை. 5. செல்போன் வாங்கித் தராத காரணத்தால் மாணவன் தற்கொலை. இவையெல்லாம் 25 வருடங்களுக்கு முன்பு நிகழாத நினைத்தே பார்க்க முடியாத மாற்றங்கள். இதுவே 2025 ல் வேறு விதமாக மாறும். அவற்றில் மனம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளும், தேவைப்படும் வசதிகள் சார்ந்த விசயங்களும் இடம் பெறும். பொருளாதாரம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் திருப்தி என்பது அவரவர்மனம் சார்ந்தது. இங்கு ஒரு தொழிலாளர் கணவன் மனைவி வேலை செய்தால் இயல்பான நிலையில் கூட 20 000 பெற முடிகின்றது. ஆனால் அவர்கள் வாழும் வாழ்க்கை முறையை வைத்து தான் அது பற்றாக்குறையா? போதுமானதா? என்பதனை முடிவு செய்ய முடியும். தான் வாங்கும் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு வசதிகளை எதிர்பார்க்கும் எவருக்கும் 2050 வரைக்கும் பிரச்சனை தான்.ஆடம்பரத் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பொருளாதார சிக்கல்கள் உருவாகின்றது. அதுவே குடும்ப சிக்கல்கள் உருவாக காரணமாகவும் அமைந்து விடுகின்றது.
நன்றி
இந்த இடத்தில் தான் வாழும் சமூகத்தை நாம் எப்படி உற்று நோக்குகின்றோம்? எந்த அளவுக்கு உள்வாங்குகின்றோம்? எப்படி அதனை பாடமாக எடுத்துக் கொண்டோம்? என்பதில் இருந்து நம் அனுபவ பாடம் கிடைக்கின்றது. இதைத்தான் இரண்டாவது பதிவில் சொல்லி உள்ளேன் தனபாலன். சுருக்கமான தெளிவான விமர்சனம். நன்றி.
உங்களுக்கான பதில் கீழே நீண்ட விமர்சனமாக கொடுத்துள்ளேன்.
ஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது? - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
அதிர்ச்சியான வேதனையான நிகழ்வுகள். அதுதான் ஜி ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க பொருளாதார சிக்கல்கள் மற்றும் குடும்பச் சிக்கல்கள் உருவாகக் காரணம் என்பது மிகவும் சரியே அது இப்போது நடைமுறையில் நடந்தும் வருகிறது.
இதோ அடுத்த பகுதியை வாசித்து வருகிறேன்..
துளசி அவரது மகனின் ரிசல்ட் என்று கொஞ்சம் பிஸியாக இருக்கிறார். வாசித்தாலும் கருத்து அனுப்பவில்லை.
தொடர்கிறோம்
கீதா
ஒரே கல்லுல பல மாங்காய்களை அடிச்சிச்சிட்டிங்க பாஸ்.பாராட்டுக்கு ஏங்காத ஜீவனுண்டா?எவ்ளோ அழகா பாராட்டுறீங்க.நன்றி.
ஒரு காலத்துல பாலகுமாரன், சுஜாதா, ஜெயகாந்தன், சுந்தரம் ராமசாமி, இப்போ எஸ்.ரா, ஜெயமோகன் ன்னு தறிகெட்டு படிச்சாலும், இணையத்துல உங்களோட எழுத்துக்கள் ரொம்ப புடிச்சிருக்கு.
உங்களோட விடுதலைப்புலிகள் பற்றிய தொடர் படிக்கும்போது இவ்ளோ அழகா எழுதறாரே ஒரு வேல தொழில்முறை எழுத்தாளரோன்னு நினைச்சேன், ஆனா எழுத்து ஒரு பொழுதுபோக்கா எழுதுறீங்கன்னு தெரிஞ்சுதும் ஆச்சரியமாயிருந்திச்சி.
நானும் திருப்பூர்ல 1 வருஷம் ஆட்டோமொபைல் சேல்ஸ்ல இருந்ததனால உங்களோட டாலர் நகரம் படிக்கும்போது அந்த ஊரோட தொடர்பு படுத்திக்க முடிஞ்சுது. தொடர்ந்து உங்களோட புத்தகங்களும், கட்டுரைகளும் படிச்சிட்டிருக்கேன். இந்த முறை இந்தியா வரும்பொழுது திருப்பூரில் இருக்கும் எனது சித்தப்பாவை பாக்க முயற்சிக்கிறேன், முடிந்தால் உங்களுக்கும் நேரம் இருந்தால் உங்களையும்.
எண்ணத்தினை எழுத்தாக மாற்ற ரொம்ப மெனக்கெட வேண்டியிரு்கு, அதுலேயும் தமிழில் டைப் பண்றதுக்கு இன்னும் கத்துக்காதது சிரமம்தான். முயற்ச்சிக்கறேன்.
என் சுயபுராணத்தை அதன் சார்ந்த அனுபவங்களை தயக்கமில்லாமல் அவ்வப்போது பதிவின் வாயிலாக எழுதி விடுவதுண்டு. காரணம் அடுத்த நாள் என்ன நடக்கும்? என்ற ஆச்சரியமும் வியப்பும் தான் என்னை இங்கே இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. பள்ளிககூட பருவத்தில் கற்றுக் கொண்ட தட்டெழுத்துப் பயிற்சி எனக்கு எழுத்துலகில் உதவும். நானும் எழுதுவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. தொழில் முறை எழுத்தாளர் என்றால் எப்போதும் காசு குறித்த கவலை இருந்து கொண்டேயிருக்கும். இதை நம்பியே வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். குடும்ப வாழ்க்கை பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு சிறப்பாக அமைந்தது இல்லை. உள் மனம் முழுக்க வக்ரம் வன்மம் என்று வேறொரு தோற்றத்தில் இருப்பார்கள். இது நான் பார்த்த உண்மை. இவையெல்லாம் பார்த்து தான் ஆசைக்காக ஒரு புத்தகம் வெளியிட்டு விட்டு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் மின் நூலாக மாற்றினேன். மூன்று லட்சம் பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. தொழில் முறை எழுத்தாளர்கள் இது போன்ற வீபரித முயற்சிகளில் இறங்க மாட்டார்கள். மற்றொரு வாய்ப்பு. உலகத்தில் உள்ள அனைத்து கண்டங்களில் வாழும் தமிழர்களிடம் சென்று சேர்வது இதன் கூடுதல் சிறப்பு. வாரம் ஒரு முறை யாரோ ஒருவர் மின் அஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பார். அதுவே மனத்திற்கு நிறைவாக இருக்கும். சில நாட்களுக்கு முன் எழுதிய ஒருவர் இந்தப் புத்தகத்தை நான் விலையோடு வைத்து இருக்கலாமே? என்று சொல்லியிருந்தார். நம் இறப்புக்குப் பின்னாலும் யாரோ ஒருவரால் நம் எழுத்து வாசிக்கப்படும் என்பதே என் அளவில் திருப்தியாக உள்ளது. அதனால் வாழும் வாழ்க்கை நிறைவாக உள்ளது கார்த்தி. அவசியம் திருப்பூர் வரும் போது வாங்க.
hi sir ,
thanks for your wounderfull books , konjamsoru and konjam varalaru and vellai adimaigal, what you mention in these book is really worth and it should reach all to know world politics.keep researching sir ,instead of free ebooks you can charge for the books. expecting more books from you sir .
thanks
நிறைகுடம் தளும்பாதுன்னு நிரூபிக்கிறீங்க. ரொம்ப சந்தோஷம். எல்லாம் வல்ல இறை உங்கள் வசம் என்றுமிருப்பராக.
இது என்னுடைய வயதுக்கு அதிகமாக தோன்றுகிறது. இன்னும் பல அனுபவங்கள் பெறவில்லை.
நான் இதுவரை கற்றுக்கொண்டது பதட்டமாகக் கூடாது, தன்னிலை மறக்கக்கூடாது, நேர்மறையாக சிந்திக்கணும், நமக்கு கெடுதல் நடந்து விடாது, எந்தப் பிரச்சனை என்றாலும் விரைவில் சரியாகி விடும்.
மேற்கூறியவை எனக்கு செம்மையாக வேலை செய்கிறது :-) .
ஒவ்வொரு கால்கட்டத்திலும் காலம் கெட்டுப்போச்சு என்று அலுத்துக்கொள்வது உண்மைதான். டைமன்ஷன்தான் வித்தியாசப்படுகிறது. நீங்க சுட்டிக்காட்டின மாதிரி நினைத்துப்பார்த்திராத விஷயங்கள் உருவெடுக்கின்றன.
குழந்தைகளை கட்டற்றும் விட முடியாது. கட்டுக்குள்ளேயே வைக்கவும் முடியாது. நடுவில ஏதோ ஒரு பாலன்ஸ் இருக்கு. கண்டுபிடிக்கறது சிரமமானாலும் செய்யத்தான் வேணும். வளர வளர கொஞ்சம் கொஞ்சமா சுதந்திரம். முதல்ல இப்படி செய் என்கிறது போல கட்டுப்பாடு. அப்புறம் செயல்பாட்டில் சுதந்திரம், என்ன செய்ய வேண்டுமென்கிறதில இல்லை. அடுத்து என்ன செய்யலாம்ன்னு டிஸ்கஷன் ரைட்டு செய், உதவி வேணுமானால் கேளு. கடைசியா சுயமா சிந்திக்க விளவுகள் ஏதானாலும் ஏற்றுக்கொள்ள முதிர்ச்சி வந்த பிறகு கட்டுப்பாடில்லாத முடிவெடுத்தல் செயல்பாடு. இப்படி போனா நல்லா இருக்கலாம்.
Post a Comment