Saturday, May 05, 2018

50 வயதினிலே -5

காலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று என் நினைவில் வந்து போகும். மாறும் உடல் இயக்கச் செயல்பாடுகள் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுமா? அல்லது அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலை இயக்கும் மனத்தின் கட்டுப்பாடு மாற்றிவிடுமா? பதிலை தேடிக் கொண்டிருந்த எனக்கு இரண்டு விதமாகப் பதில் கிடைத்தது. 

வாரம் தோறும் தினமும் 16 முதல் 17 மணி நேரம் உழைத்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை. 

ஒவ்வொரு நாளும் உற்சாகமாகத்தான் வருகின்றார்கள். அவர்களின் வேலை செய்யும் திறன் மட்டுமே பாதிக்கப்படுகின்றது. செய்யும் வேலையில் தெளிவு என்பது மாறி ஏனோதானோ என்று பணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பேற்றுகின்றனர். இதையே மற்றொரு விதமாக ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பு அமைந்தது. அன்றொரு நாள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் மூலம் வேறொரு விடை கிடைத்தது. 

தீராத ஒற்றைவலியுடன் இருக்கும் அவரின் இந்தப் பிரச்சனை அலுவலகம் முழுவதும் அறிந்ததே. ஆனால் இதற்கான காரணத்தை வேறொருவர் மூலம் கண்டறிந்த போது அவர் குடும்ப வாழ்க்கை கொடுக்கும் அழுத்தம் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணவரின் வருமானத்தை மீறி ஆசைப்படும் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத அழுத்தங்கள் உள்ளே சேர்ந்து சேர்ந்து ஒவ்வொரு நோய்களாக உருவாகத் தொடங்கியுள்ளது. 

அவரின் அலுவலகப் பாரங்கள் என்பது அடுத்த நாள் தீர்ந்து விடக்கூடியது. ஆனால் மனம் சார்ந்த தீராப் பிரச்சனைகள் ஆரோக்கியத்தைக் காவு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் மனம் என்பது ஆரோக்கியத்தில் இங்கே முக்கியப் பங்காற்றுகின்றது என்பதனை உணர்ந்த நாளது. 

பொருத்தங்கள் பார்த்து, கௌரவம் சேர்த்து மனங்களைச் சேர்த்து வைத்து உருவாக்கப்படும் திருமணத்தின் வரையறை இன்று மாறியுள்ளது. இரண்டு பக்கத்திலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. விருப்பங்களின் நோக்கங்கள் முற்றிலும் திசை மாறியுள்ளது. திருமணத்திற்கான வயதும் மாறியுள்ளது. இவை அனைத்தும் வாழும் சூழலே தீர்மானிக்கின்றது. இவற்றைப் போலவே குடும்ப வாழ்க்கையின் தற்போதைய இலக்கணம் முழுமையாகப் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. 

சரியான வயதில் திருமணம் முடிந்திருந்தாலும், முப்பது வயதுக்குள் பரஸ்பரம் உடல் இச்சைகள் தீர்ந்து விட உடனே வந்து சேரும் குழந்தைகள் மூலம் கவலைகளும், கடமைகளும் வரவேற்கின்றது. பேச்சு குறைகின்றது. வாழ்க்கை தடம் மாறுகின்றது. இருவரின் உள்ளார்ந்த விருப்பங்கள் வெளியே நிற்கின்றது. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கடைசி வரையிலும் சேர்ந்தே வாழ்ந்து ஆக வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் அழுத்தி வைக்கின்றது. 

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது வீட்டில் யாரோ ஒருவர் தான் பேசும்படி வாழ்க்கை மாறுகின்றது. அது பெரும்பாலும் மனைவியாகத்தான் இருக்கின்றார்கள். கணவனின் எண்ணமும் நோக்கமும் வேறு பாதையில் செல்கின்றது. இது பணம் சார்ந்ததாகவும், தனிப்பட்ட மனம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. 

இங்கிருந்து தான் ஆணின் மனம் ஊர் மேயத் தொடங்குகின்றது. 

இந்தச் சமயத்தில் தான் இருவரிடத்திலும் ஒரே ஆதங்கம் வெளிவரும். 

"நான் யாருக்காக இந்த அளவு பாடுபடுறேன்?"

"நான் யார்?" "நீ யார்?" என்ற ஈகோ விஸ்வரூபம் எடுக்கின்றது. 

உள்ளார்ந்த புரிதலின்றிப் பேசத் தொடங்கும் போதே வாதங்கள் திசைமாறி வாக்குவாதத்தில் சென்று நிற்கும். இனியும் ஏன் நான் பேச வேண்டும்? என்ற எண்ணம் ஒருவனுக்குத் தோன்றும் போது நாய் போல நாற்பது வயதில் மனம் அலைபாயத் தொடங்கும். கட்டுப்பாடு என்ற வார்த்தையை மதிப்பவர்கள் உள்ளும் புறமும் உருவாகும் இழப்புகளை மீறி தங்கள் கடமையை உணர்கின்றனர். எல்லைக் கோடுகளைத் தாண்டி வாழ நினைப்பவர்களின் வாழ்க்கை அதற்குப் பிறகு முட்டுச் சந்தில் போய் நிற்பதைத் தவிர்க்க இயலாது. 

இவை இங்கே சகல வசதிகளுடன் இருப்பவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு என்று பாரபட்சமில்லாமல் நடக்கும் நிகழ்விது. மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் கணவனும், மனைவியும் பேசாமல் வாழும் கொடுமை, காமத்தை நோயாக மாற்றிக் கொண்டவர்கள் என்று சுட்டிக் காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உண்டு. 

"மூன்று மணிக்கு முழிப்பு வந்து விடும். வாரத்தில் ஏதோவொரு நாள் தான் வீட்டில் முழுமையாகத் தங்கும் நிலையில் அருகே படுத்திருக்கும் மனைவியை எழுப்பிப் பேசத் தொடங்கினால் பத்து நிமிடத்தில் வாக்குவாதமாக மாறி நிற்கும். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு வந்து நிற்கும்." 

தொழில் வாழ்க்கையில் வென்று கோடீஸ்வராக இருக்கும் முதலாளி சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. 

தொழில் உலகில் கடைபிடிக்கும் அதிகாரம் என்பது தான் நம் அடையாளம் என்பதனை கருதிக் கொள்பவர்கள் அதனைக் குடும்ப வாழ்க்கையிலும் காட்ட முற்படும் போது குடும்பத்தில் குதுகலம் மறைந்து விடுகின்றது. உருவாகும் காயங்கள் அனைத்தும் மனதை ஆற்ற முடியாத ரணங்களாக மாற்றி விடுகின்றது. பணக்கார தோரணையில் கௌரவத்தைச் சுமந்து கொண்டு வாழும் வரைக்கும் வெளியே சொல்ல முடியாத சோகங்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து முடிக்க வேண்டியது தான். 

பதவி உயரும் போது வார்த்தைகளைக் குறைத்துக் கொள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அதை விட முக்கியம் வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசும் போது அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் வார்த்தைகளும் மனதளவில் நிரந்தர விலகலை கணவன் மனைவி இருவரிடமும் உருவாக்கி விடுகின்றது. இதற்கு மேல் தான் இரண்டு பக்கமும் நடிப்பு வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது. 

"என்ன செய்தாய்? என்ன இழந்தாய்? என்ன சாதித்தாய்? உனக்கு என்ன தகுதியிருக்கு? ஏன் இவை உன்னால் முடியவில்லை?" 

இந்தப் பஞ்ச சீல கொள்கைகள் குடும்ப வாழ்க்கையைப் பணால் ஆக்கும். நம் குடும்பத்துக்குள் அன்றாடம் நடக்கும் உரையாடலாக மாறும் போது குடும்ப வாழ்க்கை தெருவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். மேலே சொன்ன ஐந்துக்கும் அடிப்படை பணம். ஐந்திலும் நுழைய மறுப்பது மனம். கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. 

"குழந்தைகளுக்காகத் தான் பொறுத்துக்கிட்டு வாழ்றேன். குழந்தைகள் இல்லைன்னா எங்கேயாவது போய்த் தொலைந்திருப்பேன்." 

இரண்டு பக்க வசனமும் வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையைத் தொழில் போல நினைத்து வாழ விரும்புபவர்களின் லாப நட்ட கணக்கு இது. 

பணம் படைத்தவர்கள், அதிகாரம், புகழ் அடைந்தவர்கள் என்று எவராயினும் குடும்பக் கோட்டுக்குள் வந்து நிற்பவர்கள் சிலவற்றை இழந்து தான் சிலவற்றைப் பெற முடியும். வெளியே நம் முகம் ஒவ்வொருவர் பார்வையிலும் வெவ்வேறு விதமாகத் தெரியும். ஆனால் நம்முடைய மொத்த முகத்தையும் ஒன்றாக அறிந்தவர் மனைவி மட்டுமே. நம் ராஜதந்திரங்கள் எல்லாச் சமயங்களிலும் வென்றிடாது. தயக்கத்தை உடைத்து மயக்கமின்றிச் சரணாகதி தத்துவம் தான் உதவும். 

வீட்டில் நம் பத்து வயது குழந்தை கேட்கும் கேள்வியென்பது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்து விடலாமா? என்று எண்ணத் தோன்றும். ஏன் கேட்டாய்? என்று கேட்க முடியாது. புரிய வைக்கலாம். ஆனால் நம் நிலையைப் புரிந்தும், புரியாதது போலக் கேட்கும் மனைவியின் வார்த்தைகளைத் தனியாகப் பிரித்துப் பார்த்து நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். 

விழித்திருக்கும் மனநிலையில் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தனித்திருக்கத் தான் வேண்டும். இவை இரண்டையும் கடந்து வந்தாலும் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டில் கோபத்தில் சாப்பிட முடியாத நேரத்தில் பசித்திரு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் எல்லாவற்றுக்கும் காலத்திடம் மருந்து உண்டு. காத்திருக்கத்தான் வேண்டும். 

வாழ்ந்த காலம் முழுக்கக் கிடைக்காத அங்கீகாரம், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடலுறுப்புகள் என்பதோடு, நமக்கு வாழ்நாளில் கிடைத்தது வெறும் அனுபவங்கள் மட்டுமே என்று எண்ணம் கொண்டவரா நீங்கள்? இறக்கும் வரையிலும் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி உங்கள் எதிர்கால விருப்பங்களுக்குத் திறமை இருந்தும் காலம் ஒத்துழைக்கவில்லை என்ற ஆதங்கம் கொண்டவரா நீங்கள்? 

உங்களுக்குத் தெரிந்த பிரபல்யங்கள், தொழிலதிபர்களின் இறுதி நாட்களில் அவர்கள் பேசியுள்ள வார்த்தைகளை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். அவை உங்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதல்ல. காலம் உங்களுக்கு வழங்கிய வட்டத்திற்குள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கணக்கீடு செய்யாது? எப்படிப் பயன்படுத்திக் கொண்டாய் என்று தீர்மானம் செய்யும். 

அந்தத் தீர்மானம் தான் உங்கள் அடுத்தத் தலைமுறைக்குப் பாடமாக மாற்றப்படுகின்றது. இவர் வாழ்க்கை எப்போது முடியும்? என்று குடும்ப உறுப்பினர்களே காத்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர் எதனை வென்றவர்? எதில் தோற்றவர்? 

என் சுதந்திரம் எனக்கு முக்கியம் என்று கருதி கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்கள். என் ஆதிக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று கடைசி வரைக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத ஆண்கள் என்று பரஸ்பரம் உருவாக்கிக் கொண்ட யுத்தத்திற்கான பெயர் இல்வாழ்க்கை எனில் வாழ்க்கை முழுக்க எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை எப்படிச் சொல்வீர்கள்? 

"வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" என்று வாழ்ந்தவர்கள் அவரவர் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றது கொலையும், தற்கொலைகளும் மட்டுமே. மனதில் காயத்தை உருவாக்கி விட்டுச் சென்ற அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் சந்ததிகளுக்கானது மட்டுமல்ல. சந்ததிகள் சேர்ந்து வாழப்போகும் சமூகத்திற்கும் உரியது. சிலவற்றை மாற்ற முடியும். சிலரை எந்நாளும் மாற்றவே முடியாது என்பதனை உணர்ந்திருந்தால் உங்களின் ஐம்பது வயதில் கூட இளைஞரைப் போலவே மனதாலும் உடலாலும் வாழமுடியும் என்ற எளிய தத்துவத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்தியிருக்கும். 

நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம். 

வென்றோம். தோற்றுவிட்டோம் என்று. 

அவரவருக்கான வேஷம் கலையும் நேரம் வரும் போது கூட்டம் கலைந்து விடும். வெட்ட வெளி ஆகாயம் போல எல்லாமே மாறி விடும். இயற்கையோடு கலந்தார் என்று வாசிக்கும் போது அதுவரையிலும் செயற்கையாய் செய்த செய்கைகள் அனைத்தும் சிரிப்பாய் சிரிக்கும். 

நம் வாழ்க்கையும் அடுத்தவரின் சிரிப்புக்குப் பலியாக வேண்டுமா? 

தொடர்வோம்....... 









9 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்// உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

// "வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" // இதுபோல் பலரை கடந்துள்ளேன்... சொந்த உறவுகளிடமும்...! பல வருட சிந்தனைக்கு பிறகு எழுதிய பதிவு தான் "எதை வச்சி என்ன நினைப்பாங்க...?"

அந்த நாட்கள் மீண்டும் ஞாபகம் வந்தது... நன்றி...

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ
ஒருவரால் நச்சப் படாஅ தவன் (1004)

Thulasidharan V Thillaiakathu said...


நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம்.

வென்றோம். தோற்றுவிட்டோம் என்று. // வெற்றி தோல்வி என்பதே இல்லை மாயை தான். நாமாக உருவாக்கிக் கொள்வது...

அருமையாகச் சொல்லி வருகின்றீர்கள். தொடர்கிறோம்

கீதா

ஜோதிஜி said...

நன்றி முரளி.

ஜோதிஜி said...

வாதம், பிடிவாதம், விதாண்டாவாதம் செய்பவர்களை நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஆழ் மன ஏக்கமும், நிறைவேறாத ஆசைகளும் அதிகமாகவே இருக்கும். அதை வேறு வகையில் நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு உங்கள் இருவருக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா அருமை

Thulasidharan V Thillaiakathu said...

// "வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" //

இதை அன்று சொல்ல விட்டுப் போனது ஜோதிஜி. நெருங்கிய உறவு இப்படித்தான்...நீங்கள் டிடிக்குச் சொல்லியிருக்கும் பதில்தான் நான் சொல்ல வந்தேன்..அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதே தான்...

கீதா.

திவாண்ணா said...

ஈகோவை கழட்டி வைக்க முடிந்தால் எங்கேயோ போய்விடலாம். ஆனா லேசில முடியறதில்லை.