அஸ்திவாரம்

Friday, October 29, 2010

மது மாது சூது

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்க்கை சீரழிந்து போய்க் கொண்டுருப்பதற்கு இந்த மூன்றையும் தான் உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் இன்று சூது எந்த இடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை என்று கொண்டு வந்த பிறகு கிராமங்களைச் சார்ந்த சிறு நகரங்களில் மட்டும் இன்றும் கூட மறைமுகமாக விற்றுக் கொண்டுருக்கிறார்கள். 

தொடக்கத்தில் கிராமப்புறங்களில் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி பெரிய மனிதர்கள் என்ற கௌரவத்தோடு குஷலாக பணம் வைத்து சீட்டாடிக் கொண்டுருந்தார்கள். இன்று எந்த இடத்திலும் கிளப்புமில்லை.  ஆட்டம் காட்டிய பெரிசுகளுமில்லை.. 


இன்று பெரிய நகரங்களில் கிளப் என்பது மனமகிழ் மன்றமாக மாறி நடுத்தர மக்களின் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டுருக்கிறது. அதுவும் பெயர் மாற்றமாகி காபரே டான்ஸ் என்கிற ரீதியில் வளர்ந்துள்ளது. இதுவே குறிப்பிட்ட விசேடங்களை குறி வைத்து உயர்தர நட்சத்திர விடுதி கல்லா கட்டும் கலாச்சார நடனம் வரைக்குமாய் திமிலோகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிறிய விடுதிகளில் நடந்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்.  அதுவே உயர்தர விடுதிகளிலும், அரசியல் அதிகாரவர்க்கத்தின் பினாமிகள் நடத்தும் இடங்களில் நடந்தால் பெரிய தலைகள் கூடுமிடமாக விசேஷ அந்தஸ்த்தும் பெற்று விடுகிறது. குறிப்பாக அரசியல் விளையாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கும் பவர் புரோக்கர்கள் கூடும் இடமாக இருப்பதால் சீட்டு என்பது மறைமுகமாகவும் விபச்சாரம் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.

தாசி குலம், தேவரடியார், பொட்டு கட்டுதல் என்று ஒவ்வொரு காலமாற்றத்திலும் மாறி மாறி இன்று அங்கிகரிக்கப்பட்ட விபச்சாரம் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. நுகர்வோர் கலாச்சாரத்தின் இதுவுமொரு அங்கமாகி விட்டது.  "எதுவும் தவறில்லை"  என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் இன்று காசு இருந்தால் எல்லாமே எளிது என்ற கலாச்சார மாற்றத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் தமிழர்களின் வாழ்க்கையில் பொதுப்படையான பெண்கள் பழககமென்பது எப்போதுமே எட்டாக்கனி.

கள்ளக்காதல், முறையற்ற காதல், பொருந்தாக் காதல், உணராத காதல் என்று பிரிந்து இன்று பத்தாவது படிக்கும் மாணவர்கள் கூட இந்த காதலைக்குறித்தே அதிகம் யோசிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டுருக்கிறார்கள். எல்லாவிதமான ஊடகங்களும் தங்களது சேவையை சிறப்பான முறையில் செய்து கொண்டுருக்கிறது. காதலைப்பற்றி தெரியாமலும், கடைசி வரைக்கும் காமத்தையும் புரிந்து கொள்ளா முடியாமலும் பெரும்பாலானவர்கள் தங்கள் காதல் எண்ணங்களை பெருமூச்சில் கரைத்து விடுகிறார்கள். 

சமகாலத்தில் இந்த மாது விவகாரம் பண்டமாற்று முறை போல் இயல்பாக மாறிவிடும் போலிருக்கு. வாழ்க்கையை போராட்டமாக கடனே என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு பெரிதான ஈடுபாடு இல்லாமல் கிடைக்காத வாய்ப்பை நினைத்துக் கொண்டு திரை அரங்க இருட்டுக்குள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் என்றுமே மேல்தட்டு மக்களுக்கு இதுவொரு இயல்பான கலாச்சாரம். 

ஆனால் மூவாயிரம் வருட மூத்த குடி தமிழர்களின் வாழ்க்கையில் எப்போதும் போல இந்த குடி மட்டும் முதல் இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டுருக்கிறது.  சோமபானம் என்பதில் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் மாறி வந்துள்ளது. கள்ளச்சாராயம்,  நல்ல சாராயம் என்று இயற்கையான பெயரில் அழைக்கப்படட இந்த குடிபானத்துக்கு இன்று எத்தனை எத்தனை பெயர்கள்.? 

வெவ்வேறு நிறுவன முத்திரையுடன் அரசாங்க முத்திரையும் சேர்ந்து இன்று ஒரு தலைமுறையையே மறைமுகமாக அழிவுப் பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கிறது. 

அரசியல்வாதிகள் முதல் திடீர் பணக்காரர்கள் வரைக்கும் உள்ள  சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் ஆயுத தரகர்களுக்கு அடுத்து இந்த மது தயாரிப்பாளர்கள் தான் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.  ஆட்சியை விலைக்கு வாங்குவதும், மாற்றுவதும் என்று ஜனநாயகவாதிகளையும் பணநாயாக மாற்றுபவர்களாக இருக்கிறார்கள். எந்த அரசியல் தலைகளும் இவர்களை பகைத்துக் கொள்வதுமில்லை. 

என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்னால் சாராயம் காய்ச்சுவது தான் முக்கிய தொழிலாக இருந்தது.  ஒவ்வொரு குடும்பத்தினரும் இதை குடிசைத் தொழில் போலவே நடத்திக் கொண்டுருந்தார்கள். முன்னால் காவல் துறை அதிகாரி தேவாரம் போட்ட அதிரடி ஆட்டத்தில் அத்தனையும் காணாமல் போய்விட்டது.  

சைக்கிள் டயர் தொடங்கி, வயிற்றுக்குள் பாட்டிலை வைத்துக் கொண்டு  கடத்துவதை வியப்புடன் பார்த்து இருக்கின்றேன். அதிகாலையில் பல் விளக்காமல் நடந்தே சென்று அடித்து விட்டு உருண்டு கிடந்தவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. "இவன் சாரயம் குடிக்கிறவன்", "இவன் அப்பா மகா குடிகாரர்".  என்று பெண கொடுக்க மறுத்த. சமூக அமைப்பு இன்று மாறிவிட்டது. 

" மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் " என்கிற ரீதியில் மது என்பதை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றி விட்டனர்.  தொடக்கத்தில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒளிந்து கொண்டு புகைத்தனர். ஆனால் இன்று?  

லஞ்சம் வாங்காதவர் பிழைக்கத் தெரியாதவன் போலவே குடிப் பழக்கம் இல்லாதவர்கள் அரசியல், வியாபார, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக தெரிகின்றனர்.  

இன்று அந்த சிறிய கிராமத்திற்குள் மூன்று டாஸ்மார்க் கடைகள் இருக்கின்றது. தினந்தோறும் கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.  அருகருகே வீடுகள். எவருக்கும் அச்சமில்லை. குடிமகன்களுக்கு தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்தும் பயமுமில்லை. 


அதே கிராமத்தில் விற்கப்படும் கள் என்பதற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதான மரியாதை இல்லை.  தொடக்கத்தில் கள் குடிப்பதை நாட்டு மருந்து போலவே பயன் படுத்திக் கொண்டுருந்தனர். ஆனால் அரசாங்கம் அதற்கும் பெரிய ஆப்பு வைத்து விட்ட காரணத்தால் அத்தனை மரங்களும் அனாதையாய் நிற்கிறது.  வானம் பார்த்த பூமியில் வளரும் மரம் செடிகள் கூட ஏக்கத்துடன் மல்லாந்து பார்க்கும் மனிதர்களைப் போலவே தான் இருக்கின்றது.

ஆனால் இன்று டாஸ்மார்க் என்ற கலாச்சாரம் எங்கெங்கும் வியாபித்து குறிப்பாக நகர்புறங்களில் தொழிலாளர், பணியாளர், முதலாளி என்ற பாரபட்சம் இல்லாமல் பாடைக்கு இந்த உடம்பை கொண்டு போக மறைமுக வழிகாட்டியாய் இருக்கிறது. அரசு அங்கீகாரம், ஆள்வோர்களின் உத்தரவாதம் என்று முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இந்த சாரய வியாபாரம் மாறிவிட்டது, 

வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பயந்து கொள்ளும் ஒவ்வொரு அரசாங்கமும் இறுதியில் இத்ந குடிமகன்களை நம்பித்தான் தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை எந்த பெரிய தலைகளும் பொருட்படுத்துவதே இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்தி மறந்து விடுகின்றது. இதனாலேயே இன்று அரசாங்கமே குடிமகன்களுக்கு விரைவில் சொர்க்கத்தை சென்றடையும் வழியையும் காட்டிக் கொண்டுருக்கிறது. ஆனால் ஒவ்வொரு குடிமகன்களின் குடும்பம் மட்டும் நிரந்தர நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது

Tuesday, October 26, 2010

தப்புத்தாளங்கள்


முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும்   மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?  


அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் நிற்கிறோமே?


அரசியலில் ஊழல் செய்தவர்களை, செய்து கொண்டுருப்பவர்களை பக்கம் பக்கமாக படித்தாலும் படித்தவர்கள் கூட ஒவ்வொரு முறையும் கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே? 


முதல் நாள் வாங்கி அடித்த டாஸ்மார்க் சரக்கு போலி என்றாலும் அடுத்த முறை செல்லும் போது பவ்யமாக நம்பிக்கையோடு வாங்கிக்கொள்கிறோமே ?


ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், ஓட்டுப் போடும் நாளில் கிடைத்த விடுமுறையில் உல்லாசமாய் ஓய்வில் இருந்து விட்டு தேர்தல் முடிவு வந்ததும் "இவன் அடித்த கொள்ளையென்று?" தெருவோர கடையில் கிடைத்த செய்தித்தாளில் பார்த்து விட்டு (படித்துவிட்டு அல்ல) அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோமே??


ஊரெல்லாம் அசிங்கம்.  ஒவ்வொருத்தனும் திருடனுங்க என்று புலம்பிக் கொண்டு தன் வீட்டுக்கு முன்னால் ஓடும் சாக்கடையை நடைபாதையில் திருப்பி விடுவது?  ஆளில்லாத போது நடுப்பாதையில் தூக்கி நின்று கொண்டு அசிங்கம் செய்வதும்??


என் குழந்தை ஆங்கிலத்தில் பேசி கலக்க வேண்டுமென்று நினைக்கின்ற எந்த பெற்றோர்களும் முடிந்த அளவுக்காகவது அந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் இருப்பது? பேச தெரிந்தவர்கள் கூட குழந்தைகளுடன் தெளிவான ஆங்கிலத்தில் பேச மறுப்பது?  நான் படிக்காத தற்குறி. பிள்ளைங்களாவது படித்து முன்னேற வேண்டும் என்று சொல்பவர்கள் கூட பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள் என்பதை உணர மறுப்பது?


சிபாரிசி கடிதம் வாங்கி சாமிக்கு அருகே சென்று தரிசிக்கும் ஆசாமியைப் பார்த்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க நிற்கும் பொதுஜன பார்வையில் எப்படித் தெரிவார்கள்?  உள்ளே கைபேசியில் பேசிக் கொண்டே மந்திரம் சொல்லும் கடவுளின் சார்பாளர்களைப் பார்த்து சாமி என்ன நினைக்கும்?


நான் இந்த நடிகரின் ரசிகன் என்பதை கூச்சப்படாமல் சொல்லிக் கொள்கிறவர்கள்,   நான் வாழும் வாழ்க்கை இந்த கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதை காட்டிக் கொள்ள விரும்புவதில்லையே?

இந்த பத்திரிக்கை மோசம்? அவன் எழுதுவது தப்பு? அந்தாளு பயங்கர திருடன்? இவர் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்படாது?. விக்கிற விலை வாசியில திருடனாத்தான் போகனும் போலிருக்கு?
என்று புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?

Sunday, October 24, 2010

மானங்கெட்ட மனிதர்களும் மரியாதையான பதவிகளும்

நீங்க போனஸ் வாங்கீட்டீங்களா?   

தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் இருக்க திருப்பூருக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் மற்றவர்களை சந்திக்கும் போது கேட்கும் கேள்வி இது.  பணிபுரியும் நிறுவனங்களில் சம்பளம் குறைவு, வாரம் முழுக்க வேலை இல்லாத கொடுமை தொடங்கி அலங்கோலமான நிர்வாகத்தில் சிக்கித்தவித்துக்கொண்டுருக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் இது போன்ற பண்டிகைகள் மிக முக்கியமானது. 

காரணம் அந்த ஒரு வருடம் முழுக்க உழைத்த உழைப்பின் வேர்வைக்கு கிடைக்கும் எச்சமும் சொச்சமுமாய் இந்த போனஸ் பணமென்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று.  ஊரில் உள்ள கடன் முதல் உள்ளூரில் கொடுத்தே தீர வேண்டிய பூதாகர வட்டி வரைக்கும் தீர்ப்பதற்கு உதவும் சர்வரோக மருந்தாக இந்த ஊக்கத் தொகையே உதவுகிறது. 

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரைக்கும் இன்றைய சூழ்நிலையில் இதுவொரு சவாலான நேரமாகும். பஞ்சு ஏற்றுமதியை இன்று வரைக்கும் நிறுத்த எந்த தலைவர்களுக்கும் மனமில்லை. நூல் ஏற்றுமதிக்கு அச்சாரம் போடும் பெரிய தலைகளின் திட்டங்கள் தினமும் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் வாரந்தோறும் இந்த பிரச்சனையை வைத்துக் கொண்டு இங்கு கூட்டம் நடத்தும் ஒவ்வொரு அரசியல் தலைகளின் சித்து விளையாட்டுகளும் ஏதோவொரு வழியில் நடந்து கொண்டேயிருக்கிறது. 

இங்கே முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட தாங்கள் கட்டியுள்ள கோவணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் எவரிடம் போய் முறையிடமுடியும்? பாலும் தேனும் ஓடுவது போல் ஊர் முழுக்க முரசறிவித்துக் கொண்டுருப்பவர்களின் ஒவ்வொரு வருகைக்குப் பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள். இன்றைய சூழ்நிலையில் அதிக பாவம் செய்தவர்கள் சாயப்பட்டறை முதலாளிகள். அவர்களும் வந்து போய்க் கொண்டுருக்கின்ற மக்கள் தலைவர்களுக்கு எத்தனை சூட்கேஸ்களைத் தான் கொடுத்துக் கொண்டேயிருக்க முடியும். 

ஏற்கனவே உள்ளே அட்டைப்பூச்சியாய் உறிஞ்சிக் கொண்டுருக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதல் உள்ளூர் அரசியல் தாதாக்காளின் வசூல்களும் நின்றபாடில்லை. உள்ளேயிருக்கும் தொழில் நடந்தால் என்ன? இல்லை விவசாய பூமிகள் நாசமானால் என்ன? அதுவா இப்போது முக்கியம்? உள்ளேயிருப்பவர்களுக்கு கொடுக்க மின்சாரம் இல்லாத போதும் கூட வந்து இறங்கிக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட முடியுமா?  சாலைகளை மறைத்துக் கட்டும் ஒவ்வொரு ப்ளக்ஸ் போர்டுகளில் சிரிக்கும் தலைகளின் முகத்தில் துப்ப முடியாத எச்சிலை வாயில் அடக்கிக் கொண்டே ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக்கொண்டுருக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டுருகிறார்கள்.

சாயப்பட்டறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய முதல் கட்ட தவணை நிதி வந்து சேர்வதற்கு முன்பே அதற்கான பங்கு சதவிகிதம் குறிப்பிட்ட தலைமைக்கு கொடுத்தாகி விட்டது.  இது போக வரப்போகும் தீர்ப்புக்காக ஒன்று, மத்திய அரசு அடுத்து ஒதுக்கப் போகும் நிதிக்காக என்று ஒவ்வொரு காரணங்களுக் காகவும் திட்ட முடியாமல் திரட்டி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  காரணம் தேர்தல் நாள் மிக அருகில் இருப்பதால் திரட்டும் வழிகளை இப்பொழுதே கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டுருப்பதால் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனங்களின் வாழ்க்கையும் நிரந்தர இருளை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது. இதற்கிடையே இந்த தீபாவளிப் பண்டிகை.

எந்த நிர்வாகமும் தொழிலாளர்களிடம் தொழில் நட்டம் என்றோ, பணமில்லை என்றோ ஒதுங்கி சென்று விடமுடியாது. அழுது கொண்டே கொடுக்க வேண்டிய பணம்.

சில நிறுவனங்கள் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கொடுத்து விடுவதுண்டு.  பல இடங்களில் கடைசி வரைக்கும் எத்தனை சதவிகிதம் தருவார்கள்? எப்பொழுது தருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் கவலையுடன் காத்துக் கொண்டுருக்கும் சூழ்நிலையைத் தான் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பெரிய நிர்வாகத்திலும் இது போன்ற சமயத்தில் மிகப் பெரிய மாறுதல்கள் நடைபெறும்.  சில புத்திசாலியான நிர்வாகங்கள் பண்டிகை வரப்போவதற்கு முன்பே தேவையில்லாத நபர்கள் என்று காரணம் காட்டி கழித்துக்கட்டி விரட்டிவிடுவதுண்டு.  

அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இது போன்ற ஊக்கத் தொகையை விட வேறொரு கொடுமையையும் ஒவ்வொரு நிறுவனங் களும் கடந்து வர வேண்டும்.  பண்டிகை தொடங்க முப்பது நாட்களுக்கு முன்பே அரசாங்கத் துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனங்களாக முறைவைத்து ஏறி இறங்கிக் கொண்டுருக்கும் கொடுமையை பார்க்க சகிக்காது. சமீபத்தில் உயர்பொறுப்பில் இருக்கும் நண்பருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

குசலம் விசாரித்தபிறகு அழைத்த அதிகாரி விடுத்த கோரிக்கை "கட்டிக் கொண்டுருக்கும் வீடு மாடி வரைக்கும் கட்டி முடித்தாகி விட்டது.  மீதி செங்கல் வாங்க வேண்டும்.  பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்புங்க". இதில் ஆச்சரியம் என்னவென்றால் அழைத்த அதிகாரி அவர் வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் போக ரூபாய் 40000 வாங்கும் பதவியில் இருப்பவர்.  அவருக்கு கீழ் 300 நிறுவனங்கள உண்டு. ஒவ்வொரு நிறுவனங்களின் தொழிலாளர் நலவாழ்வு என்பது அவர் கையில் தான் இருக்கிறது.  

நம்முடைய இந்திய ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையென்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எந்த அளவிற்கு தேவையாய் இருக்கிறதோ அதே அளவிற்கு நிறுவனங்களுக்கும் தேவையாய் இருக்கிறது.  அடிப்படைவசதிகள் முதல் அன்றாட நிகழ்வுகள் வரைக்கும் ஒவ்வொன்றும் இந்த அரசியல் விளையாட்டுக்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. 

இயல்பான காரியங்கள் கூட எவரோ ஒருவரின் தயவுக்காக காத்துருக்கும் சூழ்நிலையை இந்த மக்கள் தலைவர்கள் உருவாக்கி விட்ட காரணத்தால் கரம் சிரம் புறம் பார்க்காமல் சென்றால் தான் பயணத்தின் இறுதிப் பகுதிக்கு நம்மால் செல்ல முடியும். அதிகபட்சம் 50 லட்சம் வரைக்கும் கப்பம் கட்டி உள்ளே வரும் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகார வர்க்கமும் அவரவர் இருக்கையில் வந்து அமர்வதற்கு முன்பே ஒரு கணக்கோடு தான் தங்கள் மக்கள் சேவையை தொடங்குகிறார்கள். 

இது போன்ற அதிகாரிகளை சரியான முறையில் நிறுவனங்களுக்கு கையாளத் தெரியாவிட்டால் நாலும் நடந்து விடும். நடுத்தெருவுக்கு கொண்டு வநது நிறுத்திவிடக்கூடும். திருப்பூருக்குள் பணிமாற்றம் கேட்டு வருவது என்பது இன்று அரசாங்கத் துறையில் மிகப் பெரிய பம்பர் லாட்டரி கிடைத்ததற்கு சமமானது.  

வணிகவரித்துறை, காவல் துறை, பத்திரப்பதிவுத்துறை, மின்சாரத்துறை வரைக்கும் ஒவ்வொரு உயர்பதவிகளும் நல்ல விலை போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் இந்த மானங்கெட்ட அரசியல் விளையாட்டின் எல்லை எதுவரைக்கும் சென்று கொண்டுருக்கிறது தெரியுமா? 


நாம் தினந்தோறும் தொலைக்காட்சியில் உயர்ரக வெளிச்சத்தில் பார்த்து வாயை பிளந்து கொண்டுருக்கும் பட்டுப் புடவைகள் நெய்யும் நெசவுத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் இறுதியாக 18 சங்கங்கள் இருந்தது. ஒரு புடைவைக்கு ரூபாய் 3000 கூலியாக ஏற்கனவே உருவாக்கப்பட்டுருந்த உள்ளூர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்பட்டுக் கொண்டுருந்தது.  

வெற்றிகரமாக நம் தலைகள் அதிலும் நுழைந்து இன்று சங்கங்களை உடைத்து ஜாதி, அரசியல் கட்சி என்று மாற்றி நெசவாளர்களின் வாழ்க்கையை சாயம் போன பட்டுப்புடவைப் போல மாற்றி விட்டனர். பாதிக்கப்பட்ட எவரும் ஒன்று சேரமாட்டார்கள்.  காரணம் வருமானம் இல்லாத குறையைவிட ஒவ்வொரு வருக்கும் அரசியல் சாயம் முக்கியமானது.  அதை விட தன்னுடைய ஜாதி அந்தஸ்து அதி முக்கியமானது.  இடையே உள்ளே நுழைபவர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்.

இந்திய நாடு மற்ற நாடுகளுக்கு மக்கள் ஆட்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  வெற்றிகரமாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகத்தை பறை சாற்றிக் கொண்டுருக்கிறது என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள எத்தனையோ பெருமையான விசயங்கள் நம்மிடம் உண்டு. 

 எந்திரன் விளம்பரங்களுக்கு இடையே நம் பார்வையில் படாமல் இருந்த மற்றொரு சமீப நிகழ்வுகளை இந்த இடத்தில் யோசித்துப் பார்த்தால் தவறில்லை.  பத்து நாட்களுக்கு முன்பு பிரான்ஸில் 80 சதவிகித மக்கள் தெருவுக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நிகழ்த்தி ஆள்பவர்களை கதிகலக்க வைத்துள்ளனர். 

60 வயதில் வழங்கப்படும் ஓய்வுதிய நிதியை 62 வயதுக்கு மாற்றியதால் மொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த உருவாக்கிய அச்சத்தை உருவாக்கிய ஒற்றுமை நம் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. 

ஆனால் இந்தியாவில் இருக்கும் பல சிறப்புகளுடன் மற்றொரு பெருமை யையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். டிரான்ஸ்பேரன்ஸி இன்டர் நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவின் படி ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப் படுகின்றது. 

கணக்கெடுத்தவர்கள் அதிகாரவர்க்கத்தினரை வைத்து தான் எடுத்துருக்க முடியும்.  அரசியல்வியாதிகள் பக்கம் போயிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 


அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. லஞ்சம் செழித்து வளரும் தர வரிசைப்பட்டியலில்  இந்தியாவுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது. நாம் நல்லவற்றை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு முன்னால் 18 நாடுகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வோம்.

Sunday, October 03, 2010

ஓராயிரம் பார்வைகளும் விடைபெறும் நேரமும்

ந்த கண நேர நிமிடத்தை என்னைப் போலவே கணக்கில் வைத்து காத்திருந்து பாசக்கார பய புள்ள ரவி முதல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட நண்பர்கள் பலரும் தொடர தொடங்கிய இந்த நட்சத்திர வாரம் முடியும் நேரம் இது.
ச்சரியப்படுத்திய மணி மகுடம் வரைக்கும் சூட்டிய தோழமைகளுக்கும் கூகுள் பஸ் வரைக்கும் லைக்கிய பெருந்தலைகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

து தான் எல்லை என்று எண்ணத்தில் வைத்துக்கொள்ளாமல் எப்பொழுதோ எங்கேயோ பெற்ற அனுபவம் அரசியல் சமூகம் வரைக்கும் அத்தனையும் எழுதிப் பார்த்தாகி விட்டது. கற்றுக் கொள்ள இன்னமும் ஆசையிருப்பதால் இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ழம் குறித்து உருவான ஆர்வமே இன்று வரைக்கும் என்னுடைய தேடலை அதிகப்படுத்தியிருக்கிறது.  இந்த குட்டித்தீவை யோசிக்கும் போது உருவான தாக்கம் தான் பலரும் கொடுத்த வாழ்த்துரைகள்.

ற்சாகமாய் உறவாய் பல பேர்கள் தொடர்ந்து வந்தார்கள்.  கட்டுரைகள் நீண்டதாய் இருந்தாலும் பல தளங்களை தொட்டு கொண்டு போனதற்கு முக்கிய காரணம் துளசிதளம் திருமதி துளசி கோபால்.  அவர்களுக்குத் தான் வாசிப்பாளர்கள் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் சொன்னபடியே உண்டு உறங்கி விடு. செரித்துவிடும் என்ற தலைப்பு பலருக்கும் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

என்னை யாரென்று தெரியாமல், முகமோ முகவரியோ அறிந்திராமல் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அவர்களைப்பற்றி நான் எழுதுவதை தேவியர்கள் என்றாவது ஒரு நாள் எழுதக்கூடும். என் அப்பா உருவாக்கிய தாக்கம் என்னை எழுத வைத்தது.  ஆனால் என் குழந்தைகள் தங்கள் எட்டு வயதிற்குள் வாழும் இந்த சுதந்திர வாழ்க்கை நான் அறியாத ஒன்று. 

கடைசி நான்கு கட்டுரைகள் இரட்டையரில் மூத்தவள் வெளியிட்டு விமர்சனத்தை தகுந்த நேரத்தில் வெளியிட்ட விதத்தை நான் எழுதி வைத்தால் நம்ப முடியாத ஒன்றாக பலருக்கும் தெரியும். பள்ளி விடுமுறையில் வீட்டுக்குள் சேர சோழ பாண்டிய போர்க்களத்தை உருவாக்கிய அவர்களை மாற்ற மனைவி எடுத்த இறுதி ஆயுதம் இது.  டீச்சர் நீங்கள் எளிதாக சொல்லி விட்டீர்கள்.  அடங்காதவரை அடக்க வந்த ஆயுதமென்று. ஆனால் சுந்தர் சொன்ன பெண் குழந்தைகள் தேவியின் மறு உருவம் என்பதை பல சமயம் பத்ரகாளியாய் காட்டுகிறார்கள்.

ன்றிக்கவனித்தல் என்பது எழுதத் தொடங்கியதற்கு பிறகு தான் அதிகம் பழக்கத்தில் வந்துள்ளது. இதுவே வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகம் உருவாக்கி பல சங்கடங்களில் இருந்து மீட்டெடுத்துள்ளது. இடுகை என்பதை எந்த மகாராசன் கண்டுபிடித்தாரோ அவருக்குத் தான் நன்றி என்பதை நாலு பதிவில் எழுதி வைக்கனும். கூகுள் தரும் வரைப்படத்தில் கடலுக்கு நடுவே இருக்கும் பெயர் தெரியாத அந்த குட்டித் தீவில் இருந்து கொண்டு இந்த இடுகையை எவரோ ஒருவர் படித்துக் கொண்டுருக்கிறார் என்பதை யோசிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. 

இதனாலேயே அதிக அக்கறை கொண்டு தூங்கும் நேரத்தை தியாகம் செய்ய வேண்டியதாய் உள்ளது.

ழுதிய சட்டம் என்பதை தமிழ்மணத்தில் இப்படி தெரிவித்து உள்ளார்கள்.             

" கடைசி பதிவை 12 மணி நேரத்திற்கு முன் வெளியிட்டால் அனைவருக்கும் சென்று அடையும் " .நண்பர் தவறு சுட்டிக்காட்டியபடி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை குறிப்பாக ஏப்ரல் 2009 பொதுமக்கள் பட்ட துயரத்தை வார்த்தை களாக கோர்த்து வைத்து இருந்ததை நிறுத்தி வைத்து விட்டேன். 

இந்த வாரத்தில் வெளியிட்டுள்ள எந்த கட்டுரைகளும் அவசரமாய் எழுதியது அல்ல. தமிழ்மண அழைப்பு வந்த போது பாதி முடித்து டீச்சரிடம் குட்டு வாங்கி கோர்த்து வைத்து இருந்தேன். ஈழம் தொடர்பான கட்டுரைகளைக்கூட திருப்பூரில் நடந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது எழுதியது. வாக்கியத்தை மீள் ஆய்வு செய்ய முடியாமல் கந்தசாமி அய்யா சொன்ன பொருத்தமான எதிர்மறை விமர்சனம் வரைக்கும் அவசரப் பணிகளும், ஒத்துழைக்காத இணைய வேகமும் கடைசி வரைக்கும் படுத்தி எடுத்துவிட்டது.

ராளமான பார்வைகள்.  சாப்பாட்டில் வெஜ், நான்வெஜ் என்பது போல் வலைப்பூக்களில் இப்போது வினவு நான்வினவு என்பது போல இரண்டாக இருக்கிறது. நான் ஈழம் தொடர்பாக எழுதிய பல கட்டுரைகளுக்கு ஆதாரமான பல புத்தகங்களை அளித்தவர்கள் வினவுத் தோழர்கள்.  அந்த காலகட்டத்தில் தோழர்களை யாரென்றே தெரியாது. 

வலை தளத்தில் போட்டுருந்த கைபேசி எண்ணுக்கு அழைத்து என் எண்ணத்தை சொன்ன போது மூன்றாவது நாளில் நகல் எடுக்கப்பட்ட பத்தாண்டு கட்டுரைகள் என் வீட்டை வந்து அடைந்த போது என்னால் நம்ப முடியவில்லை.  அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன்.  

சமீபத்தில் நண்பர் முகிலன் எழுதிய கட்டுரையில் இடையே இரண்டு வரிகள் வந்தது.  வினவு தளத்தின் கட்டுரைகள் சரியாக வாசகனை உணர வைக்கும்.. ஆனால் கடைசியில் கட்டுரை தடம் மாறி குறிப்பிட்ட காழ்புணர்ச்சியை  கொண்டு நிறுத்துவார்கள் என்று எழுதியிருந்தார்.  உண்மையும் கூட.  தோழர் களிடம் வாதாடி இருக்கின்றேன்.  வம்புச்சண்டை கூட போட்டு இருக்கின்றேன்
  
இப்போது தான் வெளியிடும் விமர்சனத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். இதைப் போலவே பலரும் சொல்லிக் கொண்டுருக்கும் தாக்கத்தை உணரக் கூடும்.   வெகுஜன ஊடகம் மறந்து கொண்டுருக்கும் பல விசயங்களை இன்று வலைதளத்தில் கொண்டு வந்து கொண்டுருப்பவர்கள் அவர்கள் மட்டுமே.   வினவு தளம் என்பதை சமூக விசயங்களை எழுதிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பு உள்ளவர்களுக்கு அதுவொரு என்சைக்ளோபீடியா. 

யோ என்று எழுதாமல் அதென்ன ஐய்யோ என்று ரதி வருத்தம் தெரிவித்து இருந்தார். உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒரு அழுத்தம் வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சின்னப்புள்ளத்தனமான விளையாட்டு. கூர்மையாக தலைப்புகளை கவனித்து வந்தவர்களுக்கு இந்த அரிச்சுவடி எழுதுக்கள் புரிந்துருக்கும்.

ரே பதிவில் சொல்லாமல் ஏன் இந்த நழுவல்?  ராஜநடராஜன் கேட்ட கேள்வியை மகளிடம் கேட்டேன். அவசரத்தில் மாறி வந்து விட்டது என்றார். ஆனால் அதுவே ஒரு முடிச்சு போல வாசித்தவர்களை மூச்சடைக்க வைத்துள்ளது. மகள் அவரை அறியாமல் உருவாக்கிய மாய வித்தை அது. தங்களுக்கு பிடித்த டோரா, சோட்டா பீன் தளங்களை ஒலி ஒளியாக பார்த்துக் கொண்டுருப்பவர்களுக்கு எதிர்காலம் எந்த மாதிரியான புரிந்துணர்வை வைத்துள்ளதோ?
ராயிரம் தளங்களை கடந்த 15 மாதங்களில் பார்த்து இருப்பேன். நூறு தளங்களை முடிந்த வரை உள்வாங்கியிருக்கலாம். எந்த இடத்திலும் பெயரை மறைத்துக் கொண்டு பின்னூட்டமிட்டது இல்லை. எவர் தளத்தில் மைனஸ் ஓட்டு போட்டதும் இல்லை. கருத்துக்களின் எதிர்மறை நியாயங்களை சரியான முறையில் எடுத்து வைக்க தயங்கியதும் இல்லை. அவர்களின் வசவு, வார்த்தைகள் எனக்குத் தேவை. வாங்கி இருக்கின்றேன். நான் வளர வேண்டுமென்றால் தர்க்க வாத பிரதிவாதங்கள் எனக்கு ரொம்பவும் முக்கியம்.

ஓளரங்கசீப் காலம் முதல் இன்றைய ராஜபக்ஷே காலம் மறைக்கும் தமிழினம் எதிர்பார்க்கும் மற்றவர்களுக்கு அடிமையாக இருந்து விடுவது சிறப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை. மனதில் உள்ள இந்த தமிழினம் குறித்த ஆச்சரிய வரலாற்று உண்மைகள் தமிழர் தேசம் என்ற நீண்ட நெடிய பயணம் ஏதோவொரு சமயத்தில் தொடங்கலாம். நம்மவர்கள் நம்மை ஆண்டால் தான் வெட்டு குத்து அடிதடி.  அடுத்தவன் என்றால் அத்தனை பேர்களும் அது தான் சரியென்று அட்டகாசமாக ஒத்துழைப்போம். 

என்னுடைய பார்வையில் மகாகவி பாரதி, தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா தமிழனாக பிறந்தது அவர்களின் துரதிஷ்டம். மற்ற இனத்தில் பிறந்திருந்தால் அவர்களின் புகழும், அவர்களுக்கு கிடைத்துருக்க வேண்டிய அங்கீகாரமும் வெகு எளிதாக கிடைத்து இருக்கக்கூடும்

வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகியாக சித்தரித்து எழுதப்பட்ட கட்டுரையில் ஒருவர் எழுதிய விமர்சனம் எனக்கு நிறையவே நம்பிக்கை அளித்தது.

" விம்பங்களுக்கப்பால் பிரபாகரனை தேடி, கட்டுரையாளர் எழுப்பியிருந்த கேள்வி பிரபாகரனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை, தீமைபற்றி ஆராய முற்படுவதாக தெரிகிறது. கருத்து எழுதுபவர்கள், அவரவர் உணர்ச்சிகளுக்கும் மனப்பண்புகளுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்கிறதே அன்றி, தமிழின விடுதலைக்கு வேண்டிய பாதையை சீர்படுத்துவதற்கோ. அன்றி புதிய பாதையை அமைப்பதற்கான யுக்திகளையோ வெளியிட்டு ஓர் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு ஒன்றிப்போகும் இணக்கத்தை ஏற்படுத்துவதையோ காணமுடியவில்லை. திட்டமிட்டு மக்களை குழப்புவதற்கான கருத்துகள் எழுதுபவர்களையும் இங்கு தாரளமாக காணமுடிகிறது.

பிரபாகரனின் விடுதலைப்போராட்டம் இன்று அழிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் அழிக்கப்பட்டதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன, என்பது ஆராயப்பட வேண்டும். தீமைபற்றி தேவையில்லை பல ஊடகங்களும், இணையதளங்களும் அதுபற்றி நிறையவே எழுதிவருகின்றன. தமிழினத்திற்கு கிடைத்த நன்மையைப்பற்றி இதுவரை எந்த ஊடகமோ, அல்லது இணைய தளமோ செய்தி வெளியிடவில்லை. நன்மை என்றால் அதன் தன்மையை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும் "

வைப் பாட்டி முதல் கண்ணதாசன் வரைக்கும் எத்தனையோ அறிவுரைகள், ஆலோசனைகள் நமக்கு தந்து இருந்த போதிலும் 3000 ஆண்டு கால தமிழர்கள் எப்போது விரும்பும் கலை ஆர்வம் மட்டும் இன்னமும் குறைந்தபாடில்லை. இணையத்தில் தமிழ் வார்த்தைகளை அடித்து சோதித்துப் பாருங்கள்.  வந்து விழும் 20 தலைப்புகளில் பத்து தலைப்புகள் திரைப்பட உரையாகவே இருக்கிறது.  

தமிழ்நாட்டின் பிரபல்ய சிமெண்ட நிறுவனத்தில் பணிபுரியும் உறவினர் சொன்ன கருத்துப்படி எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் ஒரு மூட்டை சிமெண்ட் 130 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய அவஸ்யமே இல்லை.  அதுவே கொழுத்தலாபம்.  

ஆனால் இன்றைய விலை 270 ரூபாய். உண்மையிலேயே நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தானே?  இதுவே எது வரைக்கும் கொண்டு செலுத்துகிறது?  அடுத்த மாநிலத்தில் இருந்த இங்கே கொண்டு வந்தவர்களை மிரட்டும் அளவிற்கு இருக்கிறது.  இப்போது சொல்லுங்கள் நாம் எது குறித்து கவலைப்பட்டு மனதை உடம்பையும் சோர்வடையச் செய்ய வேண்டும்?

அக்கன்னா என்று எழுதும் போதே அப்பாடா என்ற பெருமூச்சு வருகிறது.

உணவு, இருப்பிடம் இரண்டுக்கும் இடையே நமக்குத் தேவையான உடை என்று ஒன்று உண்டு. மூன்றுமே மனித வாழ்வில் முக்கியமானது.  பஞ்சு உற்பத்தி செய்பவர்களுக்கும் அதை விற்று கொழுத்த லாபம் பார்ப்பவர் களுக்கும் உள்ள வித்யாசம் என்ன தெரியுமா தோழர்களே?

அதிகமில்லை 14,000 ரூபாய்.  கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.  எத்தனை பொதிகள்.. எத்தனை ஏற்றுமதி சமாச்சாரங்கள்.  எங்கே யாரிடம் போய்ச் சேருகிறது இந்த கோடி கோடி சமாச்சாரங்கள்.  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்து எதிர்ப்பை காட்டினார்கள். அதிலும் இங்கே அரசியல்.

காலம் முழுக்க தமிழர்களுக்கு புரியாத அரசியல். 
நடப்பு செய்திகளை முந்தி தந்துகொண்டுருக்கும் 4 தமிழ் மீடியாவுக்கு வணக்கம்&வாழ்த்துகள். அற்புத படங்கள் தந்தது மனமே வசப்படு.

விடைபெறும் நேரத்தில் வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாக குழுவினருக்கு நன்றியை தெரிவித்து, என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டுருக்கும் எழுத்தாளர் பா.ராகவன் வார்த்தைகளுடன் முடிக்கின்றேன்.

" புகழோடு வாழுங்கள். அதற்காக உழையுங்கள். விமர்சனத்தை மறுக்காதீர்கள். முறையற்ற விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவஸ்யமில்லை. வாழ்வின் இறுதிப் பகுதியில் நினைத்துப் பார்க்க ஏதோவொன்று தேவையாய் இருக்கக்கூடும். அதற்காகவாவது உங்களுக்குப் பிடித்த துறையில் உங்கள் கவனம் இருக்கட்டும்".

Saturday, October 02, 2010

ஒரு வாரிசு உருவாகிறது

மறுநாள் காலை.

தினசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ரூபன் அறையில் இருந்து முத்து முருகேசனுக்கு அழைப்பு வந்தது.

நேற்று நடந்ததை மறந்து விட்டு ஆசிரியர் அறைக்குள் நுழைகிறார்.

இவ்ர் எப்போதும் ஒரு நிகழ்வு நடந்து விட்டால் அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை.  கவலைப்படுவதும் இல்லை.  இந்த குணாதிசியமே இவரின் குடும்ப வாழ்க்கையில் நடந்த பல போராட்டங்களை வென்று எடுக்க காரணமாக இருந்தது. 

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விசயம் ஒன்று உண்டு.

அன்பு,அஹிம்சை, சத்தியம், நேர்மை, தர்மம் போன்ற எந்த காலத்திற்கும் ஒத்து வராத பல குணாதிசியங்கள் இவரிடம் நிறையவே உண்டு. 

எந்த அளவிற்கு முன் கோபம் வருமோ அந்த அளவிற்கு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் மேஜையில் தயாராக இருக்கும் ஜோல்னா பையை எடுத்துக் கொண்டு அப்பொழுதே வெளியே கிளம்பி விடுவார். பணம், புகழ் குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.  இவருடைய வாரிசுகள் இன்று வரைக்கும் இவர் மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே இது மட்டும் தான்.

இவரின் பத்திரிக்கையுலக அனுபவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விசயங்கள் குறித்து எழுத வேண்டாம் என்று வந்த பல அன்புக்கட்டளைகளை மீறியதும் உண்டு.  அதனால் இழந்த பல விசயங்கள் இவரின் குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு முறையும் சூறைக்காற்றில் சிக்க வைப்பது வாடிக்கையாகவே இருந்தது.  

முமு மனைவி இறப்பு வரைக்கும் இவரை ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசியதில்லை.  புலம்பிக்கூட நான் பார்த்து இல்லை.  மகன் மகள்கள் அத்தனை பேர்களையும் மனைவி தான் வளர்த்தார். மிகப் பெரிய அளவில் ஒவ்வொருவரும் வளராத போதும் கூட நடுத்தரவர்க்க வாழ்க்கையில் இன்று அணைவருமே நல்ல நிலைமையில தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். .

ஆசிரியர் ரூபன் அழைத்து இன்று முதல் நீங்கள் எழுதிக் கொண்டுருக்கும் இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை கட்டுரையை நிறுத்தி விடுங்கள் என்றதும் இவர் காரணம் கேட்க உருவானது வாக்குவாதம். உரையாடல் முடிந்து இவர் அறையை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் இவரை மீண்டும் அழைக்க முமு சாலையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டுருக்கிறார்.

பிறகு தான் என்ன நடந்தது என்று  புரிந்து கொள்ள முடிந்தது.

பிரபாகரன் கிறிஸ்துவ மக்களின் மேல் கொண்டுருந்த மரியாதையும், கிறிஸ்துவ பாதிரியார்கள் தொடக்க காலம் முதல் யாழ்பாண வளர்ச்சியில் பங்கெடுத்த விபரங்களும் ஈழம் குறித்து படித்த மற்றும் உள்ளே வாழ்ந்தவர்களுக்கு நன்றாகவேத் தெரியும. 

பிரபாகரன் வளர்ச்சியில் எத்தனை காரணங்கள் இருக்கிறதோ அதில் முதல் பத்து காரணங்களில் இந்த பாதிரியார்களின் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. இதுவே குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.  பிரபாகரன் சென்னையில் இருந்த முக்கிய பாதிரியாரிடம் தகவல் தெரிவிக்க ஜேம்ஸ்ப்ரெட்ரிக் மூலம் கட்டுரை நிறுத்தப்பட்டாகி விட்டது. 

நாற்பது ஐம்பது ஆயிரங்களை கடந்து கொண்டுருந்த பத்திரிக்கை முமு வெளியேறியதும் சட் என்று பத்திரிக்கையின் விற்பனை நான்கு இலக்க எண்களுக்கு வரத் தொடங்கியது,

மறுபடியும் தினசரி நிர்வாகத்தில் இருந்து அழைப்பு வந்த போதும் கூட கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விட்டார். இதன் தொடர்ச்சியாக தினமணி அதிபர் மனோஜ்குமார் செந்தாலியாவிடம் அழைப்பு வந்தது.   காரணம் அப்போது நாகபட்டிணம் பதிப்புக்கு ஆள் தேடிக் கொண்டுருந்தார்கள். தினமணி நிர்வாகத்திற்கு தனிப்பட்ட குணாதிசியங்கள் உண்டு. சென்னை அலுவலகத்தில் ஒருவர் தொடக்கத்தில் பணியில் சேர அறிமுகம் ஆகும் போது நடக்கும் நேர்முகத் தேர்வுகள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போன்றவை. 

ஆனால் இவர் இது போன்ற சடங்குகளில் கலந்து கொள்ள விரும்ப மாட்டார். 

எனக்கு எழுதத் தெரியும். என்னுடைய உரிமைகள் பாதிக்காத வரைக்கும் எழுதிக் கொண்டு இருப்பேன்.  வேறு என்ன வேண்டும்? “  ஒரே வார்த்தையில் முடித்து  விடுவார். நிர்வாகத்தினர் இவருடைய வார்த்தைகளுக்கு சரி என்று சொன்னால் அந்த நிமிடமே தன்னுடைய கடமைகளை தொடங்கி விடுவார்.

மனோஜ் செந்தாலியாவிடம் அறிமுகம் செய்தவர்கள் இவரின் இந்த குணாதிசியங்களையும் சேர்த்துச் சொல்ல இவருக்காகவே அது எதுவும் வேண்டாம். வந்து சேருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.  ஆனால் இவருக்கு மதுரையை விட்டுச் செல்ல மனமில்லை.  குடும்பம் மற்றும் இவருடைய ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும். அதற்கு மேலும் போதுமடா இந்த பொழப்பு என்று மொத்தமாக ஓதுங்கி தன்னுடைய ஆராய்ச்சி சார்ந்த விசயங்களில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தார்.

1990 க்குப் பிறகு முழுமையாக இறங்கி சேகரித்த மொத்த தகவல்களை ஆராய்ச்சிகளை அப்துல் கலாம், போன்றவர்கள் தொடங்கி வெளியே இங்கு குறிப்பிட முடியாத பல பிரபலங்கள் பாராட்டினாலும் இவரின் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதை காசாக்கி பார்க்க எண்ணம் இல்லாமல் இயல்பான வாழ்க்கையில் ஒன்றிப் போயிருந்தார். இவரை சந்தித்த ஒவ்வொருவரும் உயர்ந்தார்கள். எப்போதும் போல இவர் ஏணிப்ப்டியாக ஆரோக்கியமாக வாழ்வின் இறுதி கட்டத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறார். பலரும் சொல்லிப்பார்த்த இவரின் ஆவணங்கள் நிறைந்த கட்டுரைகள் என்றாவது ஒரு நாள் வெளிவரும். தொடக்கத்தில் நான் வாழ்ந்து கொண்டுருந்த வீட்டுக்குள் இவர் வரும் போது இவருடன் சில புத்தக பைகளும் உடன் பயணித்து வரும். 

குறுகிய அறைக்குள் அதுவும் அடைந்து கிடைக்கும்.  இதுவே சற்று வசதியான வீட்டில் குழந்தைகளின் பள்ளிக்காக மாறிய போது திடீர் என்று ஒரு வேனில் வந்து இறங்கினார். அவர் திடீரென்று என்று வந்து இறங்குவது எனக்கு ஆச்சரியமல்ல. 

வந்து விட்டார் என்றால் குடும்பத்தில் ஏதோ நடந்து இருக்கும் என்று அர்த்தம்.  நான் எதையும் கேட்டுக் கொள்வதும் இல்லை. அவருடன் வரும் அத்தனைப் பொருட்களும் என்னை விட என் மனைவிக்கு எரிச்சல் மிகுந்த சமாச்சாரங்கள்.  ஓட்டை ஒடசல் ஈயம் பித்தளைக்கு போட வேண்டிய சமாச்சாரங்கள்.  அத்துடன் பல சாக்குகள் நிறைந்த புத்தகங்கள்.

காந்தி பிர்லா மாளிகையில் இருந்த போது அவர் பயன்படுத்திய கரண்டி கூட ஓட்டையாக இருந்தாலும் அதை கம்பி கட்டி வைத்து பயன்படுத்தியது போலவே இவரிடம் பல வினோதமான சமாச்சாரங்கள் உண்டு.  ஆனால் நான் எதையும் கண்டு கொள்வதில்லை.  அதற்குண்டான இடங்களை ஒதுக்கி கொடுத்து விட்டு  ஒதுங்கி விடுவேன்.

வீட்டில் கோவித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். இனிமேல் இங்கே தான் இருக்க வேண்டும்.  நான் காலையில் சென்றால் இரவு தான் வருகின்றேன்.  வீட்டில் துணை யாருமில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லப் போகிறார்கள். உங்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் அவர்களுக்குத் தேவை என்று அவர் பாணியில் கெஞ்சி வெற்றிகரமாக 11 மாதங்கள் தொடர்ச்சியாக தங்க வைத்து விட்டேன். 

அதன் பிறகு இரண்டு முறை வெளியேறி சென்னை மதுரை அலைந்து விட்டு வருவார்.  அவருடன் மொத்த பார்சலும் பயணிக்கும். எனக்கு எரிச்சலாகக்கூட வரும். சொன்னாலும் கேட்காதவரை என்ன செய்ய முடியும்.  கடைசி வரைக்கும் அந்த குப்பை போன்ற சமாச்சாரங்களுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கத் தோன்றவில்லை.  காரணம் நான் பணத்தை துரத்திக் கொண்டுருந்த போது அதை கவனித்துப் பார்க்க நேரம் அமையவில்லை. 

அவராக வந்து என்னுடைய முக பாவனைகள் பார்த்து பேசத் தொடங்குவார்.  எப்போதும் நான் கோபமாக உள்ளே வந்தால் சற்று நேரம் வெளியே சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதன் பிறகே குழந்தைகளிடம் வருவேன். அதன் பிறகு சமயம் பார்த்து என்னிடம் பேச ஆரம்பிப்பார். 

தொழில் வாழ்க்கை உச்சத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. இடைஇடையே சில அறிவுரைகள் ஆலோசனைகள் தருவார். இருவரும் பேசத் தொடங்கினால் கடைசியில் சண்டையில் தான் முடியும். 

பல முறை இரண்டு நாட்கள் நான் பேசாமல் இருந்து விடுவேன்.  ஆனால் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் முதல் பக்தி பாடல்கள் வரைக்கும் பாடி முடித்து நான் தாமதமாக எழுந்தாலும் திருநீறை வைத்துக் கொண்டு என் முன்னால் நிற்கும் போது வெட்கப்பட்டுக் கொண்டு அப்போது தான் குளிக்க ஓடுவேன்.  என்னுடைய வயதும் அவருடைய அனுபவ வயதும் ஒன்றாக இருக்க அவர் இளைஞர் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டுருப்பார்.

இவருக்கு பயந்து கொண்டே பல பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.  திட்டாமல் ஒரு பார்வையில் உள்ளே வரும் போது கொன்று போட்டு விடுவார். மறுபடியும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்க வேண்டியதாய் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் ஈழம் சார்ந்த விசயங்களை பேசத் தொடங்கினால் பெரிய ரணகளத்தில் முடியும். அப்போது என்னிடம் கோவித்துக் கொண்டு வெளியேறி சற்று நேரம் கழித்து உள்ளே வருவார்.

நான் என்னுடைய கருத்துக்களை விட்டுக் கொடுப்பதே இல்லை.  ரணில் விக்ரமசிங்கே ஆட்சி முடிவுக்கு வந்த போது அப்பொழுதே என்னிடம் சொல்லிய விஷயம்.  நீ விரும்பும் தலைவரின் இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டுருக்கிறது.  அவர் விரும்பும் சுபாஷ் சந்திரபோஸ் போலவே அவரின் இறுதிக் காலம் மர்மமாகவே இருக்கும். பார்க்கிறாயா? என்றார்.

நான் ஒரு முறை முறைத்து விட்டு நகர்ந்து விடுவேன்.

காலங்கள் மாறிய போது எதிரபார விதமாக எழுதத் தொடங்கிய போது சில கட்டுரைகளை அவருக்கு வரவழைத்து கொடுத்துப் பார்த்த போது உன்னை விட முட்டாள் உலகில் வேறு எவரும் இல்லை. படிப்பவர்களை முதலில் பாமரர்களாக நினைத்து எழுதிப் பழகு என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

ஈழம் சார்ந்த விசயங்களை நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட போது அப்போது தான் முழுமையாக அவரிடம் பேசத் தொடங்கினேன்.  அப்போது 3000 வருட தமிழர்களின் வாழ்க்கையை பத்து தலைப்பில் பிரித்து வைத்து எழுதி இருந்த போது படித்து பார்த்து மனம் மகிழ்ந்து அந்த குப்பை போன்ற புதையலை தோண்டி பல புத்தகங்களை கொடுத்தார். வெகுஜனம் அறியாத பல முக்கிய ஆதாரங்கள்.

ஈழப் போராட்டங்களில் பங்கெடுத்த அத்தனை நபர்களின் அவர்களின் நேரிடையான வாக்கு மூலங்கள் பேட்டிகள், ஆதாரங்கள் போன்ற திடுக்கிட வைக்கும் பல சமாச்சாரங்கள் இருந்தது.  பல செல்லறித்து கவனிக்காமல் போய் இருந்தது.  பல ஆண்டுகள் உள்ளே கிடந்த பொக்கிஷங்கள். எனக்கே வெட்கமாக இருக்க மெதுவாக உள்வாங்க ஆரம்பித்தேன். 

அப்போது அவர் சொன்ன அறிமுகம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

உன்னுடைய கொள்கை விடுதலைப்புலிகள் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்காத பட்சத்தில் சிங்களர்களை ஜெயிக்க முடியாது என்கிறாய். நான் அது குறித்து உனக்கு புரியவைக்க முடியாது. உலகில் ஆயுத பலத்தால் எந்த நாடும் தன்னுடைய சுதந்திரத்தை அடைந்ததாக சரித்திரம் எதுவும் சொல்லவில்லை. நீ உனக்குப் பிடித்த விசயங்களை மட்டுமே தேடிப் படித்துக் கொண்டுருக்கிறாய்.  எழுதுபவனுக்கு பிடித்த பிடிக்காத என்று எதுவுமே இருக்கக்கூடாது.  எதிர்மறை நியாயங்களை எப்படி எடுத்து வைக்கிறார்கள் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.  அதைத்தான் நீ கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தினாலும் மக்களை ஒன்று சேர்த்து அவர்களுடன் ஒன்றிணைந்து வென்று எடுக்க வேண்டும். இதுபோக ஈழத்தில் உள்ள தமிழர்களே பல்வேறு கூறுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

தமிழர்களுக்கு சிங்களர்கள் எதிரிகளாக இருப்பதை விட தமிழர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் உருவான தலைவர்கள் தங்களை காப்பாறிக் கொள்ள தமிழர்களை பலி கொடுத்தார்கள். இப்போதும் அந்த பலி மட்டும் தான் நடந்து கொண்டுருக்கிறது. இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் உள்ளே இருக்கும் தமிழர்கள் ஒன்றாக சேராத வரைக்கும் அவர்களுக்கு விமோசனம் என்பதே இல்லை.

இங்கு காந்தி இருந்தார். அணைவரும் ஒன்று சேர்ந்தார்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஈழம் போல் பல குளறுபடிகள் இருந்தாலும் இறுதியில் வெற்றி அடைய முடிந்தது. ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன் இது நடக்கவில்லை. காரணம் ஈழ மக்களின் முரண்பாடு பழக்கவழக்கங்கள் நோக்கங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டு எழுத ஆரம்பி. 
நான் பார்த்தவரைக்கும் பிரபாகரன் போல் ஒரு தனிப்பட்ட ஆச்சரிய மனிதனை நான் பார்த்ததும் படித்ததும் இல்லை. 


என்னை சந்தித்த பலரும் அவருக்கு எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட நபர்கள் அத்தனை பேர்களும் அவருடைய கொள்கைகளைத்தான் குறை சொல்லி இருக்கிறார்களே தவிர அவருடைய தனிப்பட்ட ஓழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை குறை சொன்னதே இல்லை. 


எனக்கே அது தான் கடைசி வரைக்கும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் நான் சந்திக்காத  அரசியல்வாதிகளே இல்லை.  அவர்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் தெரிந்த எனக்கு பிரபாகரன் ஆச்சரியமான நபரே. 


ஏன் இன்று ஜெயிக்க முடியாமல் இத்தனை பெரிய பேரழிவு.


அரசியல் தலைவர்களின் வெற்றி என்பது அந்தந்த தலைவர்களின் கொள்கைகள் தீர்மானிப்பது இல்லை.  எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் தந்திரமும், சமயோஜிதமும் தான் தீர்மானிக்கிறது. உனக்கு பிடித்தவரை உயர்த்தி எழுதுவதை விட எதிர்மறை நியாயங்களையும் சேர்த்து எழுது. 


புகழ்பாடும் எந்த எழுத்துக்களையும் சரித்திரம் ஏற்றுக் கொள்ளாது

சமீபத்தில் என்னை அழைத்து பெருமைப்படுத்திய நண்பர் சொன்ன விசயத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் அவர் சொன்ன விடயங்களை இங்கு எழுதினால் சுயவிளம்பரமாக மாறிவிடும். காரணம் முக்கிய அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகள் தேவியர் இலலம் இடுகைக்கு வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை அப்போது தான் புரிந்து கொள்ள முடிந்தது.  

விக்கித்து வியர்த்துப் போனேன். முழுக்க முழுக்க முமுவுக்குத்தான் அந்த பெருமை சேரும். ஒரு வருட இறுதிக்குள் புத்தகமாகவும் மாறிவிட்டது.

பதிப்பகத்தில் இருந்து பிழை திருத்த அனுப்பிய சமாச்சாரங்களை நான் மதிக்கும் சிலருக்கு அனுப்பி விட்டு அதை திருத்தி தர, ஆலோசனை சொல்ல இவரிடம் ஓப்படைத்து விட்டு ஒதுங்கி விட்டேன். 

அவரின் கொள்கைகள் நோக்கங்கள் அஹிம்சை தத்துவங்கள் அத்தனைக்கும் நான் எதிரான கருத்து கொண்டவன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் என் அப்பாவை விட நூறு மடங்கு அக்கறையாய் கொண்டு செலுத்தியவர். முக்கியமாக பிரபாகரன் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான கருத்து கொண்டவர். என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டு அழைக்காமல் இருந்து மிகுந்த தயக்கத்தோடு சென்று பார்த்தேன்.

அவர் சொல்லி விமர்சனம்

"அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஆவணமாக கருதப்படும்.  இந்த தாக்கம் மறைய எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படும்.". 

Friday, October 01, 2010

ஐய்யோ போச்சே....

1983 -84

27 நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜேம்ஸ் பெட்ரிக் தான் வெகு நாளாக நினைத்துக் கொண்டுருந்த ஆசையை நிறைவேற்றத் தொடங்கிய போது அவரின் நினைவுக்கு வந்த பெயர் இந்த முமு.  ஆமாம்.  தினசரி என்ற பத்திரிக்கையை தொடங்கி இவரை முக்கிய செய்தியாளராக போட்டு ஆரம்பித்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த நிர்வாண பூஜையை தனி நபராகச் சென்று காவலில் இருந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினருக்கும் தண்ணீர் காட்டிவிட்டு எதிர்பாரதவிதமாக அவர்களின் வாகனத்திலேயே குறிப்பிட்ட இடத்திற்கு பயணம் செய்து இவர் எழுதிய கட்டுரை அன்று இவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. இவரின் பெயர் தனித்தன்மையான தெரிய ஆரம்பித்த காலம் அது.

இலங்கையில் ஜெயவர்த்னே ஆட்சி. இவரின் தனிப்பட்ட தேடல்களும், இலங்கையில் இருந்து வந்து கொண்டுருக்கும் மக்களைப் பற்றி சிறு செய்திகளாக போட்டுக் கொண்டுருப்பதும் அன்றாட கடமையாக இருந்தது.  இவர் எப்போதும் கட்டுரை எழுதத் தொடங்க தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நேரம் இரவு 10 மணி. குடித்த டீ உற்சாகத்தைக் கொடுக்க அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிக் கொண்டுருககும் ஒவ்வொரு தாளையும் பிரிண்டரில் இருப்பவர்கள் வந்து எடுத்துக் கொண்டு படித்துக் கொண்டே சென்று சேர்த்து விடுவர்.

அப்போது மண்டப முகாமில் இருந்து வந்த கடிதமொன்று தனது வாழ்க்கையை மறுபடியும் திசை திருப்பி விடப் போகிறது என்பது தெரியாமல் படிக்கத் தொடங்கினார்.  எத்தனையோ விசயங்களைப் பற்றி எழுதிக் கொண்டுருக்கிறீர்கள்? ஏன் எங்கள் பிரச்சனையைப் பற்றி எழுதுவது இல்லை? கடித வரிகள் சுருக்கமாக இருந்தாலும் அப்போது தான் அதுவரைக்கும் தேடலின் விளைவாக சேகரித்த தகவல்கள் ஒவ்வொன்றும் உதவத் தொடங்கியது.

விதி வலியது. மறுநாள் இரவு இரண்டு பேர்கள் சரியான நேரத்தை தெரிந்து கொண்டு இவர் அமர்ந்து இருந்த மேஜைக்கு அருகே வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தனர். வந்தவர்கள் இருவரும் இஸ்லாமிய பெரியவர்கள். முல்லை மார்க்கெட் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பேசிய பேச்சகள், காட்டிய ஆதாரங்கள், கண்ணீர் அத்தனையும் இரண்டு நாட்கள் தடுமாற வைக்க கட்டுரை ஆரம்பமானது.

கட்டுரையின் தலைப்பு " இரத்தால் நனையும் தமீழீழ கொள்கை"

இவரிடம் மற்றொரு பிடிவாத குணம் ஒன்று உண்டு. 

பத்திரிக்கை தர்மம் என்பதை அச்சு பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்.  கூட்டம் முடிந்தவுடன் அரசியல் கட்சிகள் கொடுக்கும் அன்பளிப்புகளைக்கூட வாங்க மாட்டார்.  எவருடனும் பகைமை பாராட்ட மாட்டார்.  ஆனால் தான் நினைத்த கருத்துக்களை அச்சு பிறழாமல் கட்டுரையாக்கி கதிகலங்க வைத்து விடுவார். உடன் பணியாற்றும் மற்ற நிருபர்கள் கூட இவரின் கட்டுரையின் சராம்சத்தை எதிர்பார்த்து இருப்பார்கள்.

இவர் எழுத நினைத்த இரத்தத்தால் நனையும் தமீழழ கொள்கை கட்டுரையின் நோக்கம் இலங்கை என்ற தீவின் தொடக்கத்தை லேசாகத் தொட்டு, முக்கியமாக சமூக வாழ்க்கையில் தொடக்கத்தில் இருந்த தலைவர்கள் செய்யாமல் விட்ட காரியங்களை சுட்டிக் காட்டி விடுதலைப்புலி இயக்கத்தின் வளர்ச்சியையும் அவர்களின் தொடக்க கால விசயங்களையும் தொட ஆரம்பித்த போது அனல் பறக்க ஆரம்பித்தது.  இவரின் நோக்கம் விடுதலைப்புலிகளையும் அவர்களின் நோக்கத்தையும் தவறு என்று சொல்வதை விட ஏன் தவறாக இருக்கிறது என்பதை எதிர்மறை நியாயங்களுடன் பேச ஆரம்பிக்க எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக வரத் தொடங்கியது.  சரியான நேரம் பார்த்து இலங்கையில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அப்துல் மஜீத் கொல்லப்பட் இயக்கத்தில் இருந்த 800 முஸ்லீம் இளைஞர்கள் வெளியேற ஒவ்வொன்றும் இவரின் கட்டுரைகளை கரை தாண்ட வைத்துக் கொண்டுருந்தது.

தினசரி பத்திரிககைகள் வந்த சில நிமிடங்களில் போதவில்லை என்று ஒவ்வொரு இடங்களிலும் செய்திகள் வந்து கொண்டுருந்தாலும் இவரின் பொருளாதார வாழ்க்கையிலேயோ அல்லது இதை வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லாமல் எப்போதும் போல அத்துவான காட்டில் பயணிப்பவர் போலவே இவர் அலுவலகத்திற்கு வருவதும் போவதும் எவருக்குமே தெரியாது.  பத்திரிக்கை ஆசிரியர் ரூபனுக்கு இவரின் குணாதிசியங்கள் நன்றாகத் தெரிந்த காரணத்தால் எவரும் எதையும் எளிதாக இவரிடன் வந்து பேசி விட மாட்டார்கள்.

இப்போது மற்றொன்றும் நடந்துகொண்டுருந்தது.  பத்திரிக்கை அடித்து முடித்து டெலிவரி செய்ய வெளியே வேனில் ஏறற வரும் போது ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் தனியாக பயணிக்கத் தொடங்கியது.  இந்த விசயமே பின்னாளில் தான் இவருக்குத் தெரிந்தது.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், இன்று புத்தகத்தின் வாயிலாக படித்துக் கொண்டுருப்பவர்களுக்கும் ஜெயவர்த்னே குறித்து நன்றாகவே தெரியும். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்த பல காரியங்கள் முஸ்லீம் மக்களுக்கு சாதமாகத் தெரிய அதையே வந்தவர்களும் அவரின் அருமை பெருமைகளை புகழ்பாட பலபேரிடம் அதை உறுதிபடுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தார்.  

தொடர் போல் வந்து கொண்டுருந்த கட்டுரையின் இப்போதைய தலைப்பு அரசியல் ஞானி ஜெயவர்த்னே.

பகவான் வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தவன் இப்போது சோம்பல் முறித்து கண் திறந்த பார்க்க ஒரு நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு வந்தது.

அழைத்தவர் பழ.நெடுமாறன்.  கொடுத்த தகவல் " தம்பி உங்களைப் பார்கக வேண்டும் என்கிறார் ". 

காரணம் அப்போது பிரபாகரன் பழ நெடுமாறன் அவர்களுடன் தான் இருந்து இருக்கிறார.  மரியாதையின் பொருட்டு அனுமதியோடு வர வேண்டும் என்று அனுமதி கேட்க இவர் கொடுத்த பதில் " எனக்கு தம்பிகளோடு தொடர்பு விட்டு பல வருடம் ஆகி விட்டதே?" என்றார்.

காரணம் இவரின் சகோதர்ர்களில் ஒருவர் தினமலரிலும் மற்றொரு அத்தான் முறையில் உள்ளவர் ஹிண்டுவிலும் பணியாற்றிக் கொண்டுருந்தவர்கள்.  தினமலரில் முக்கியப் பொறுப்பில் கோவிந்தசாமி.  ஹிண்டுவில் இராமநாதன்.  பிராமணர் அல்லாத இவர்கள் இருவரும் இந்த இரண்டு நிறுவனங்களில் சாதித்த சாதனைகள் மிக அதிகம். 

இதில் மற்றொரு ஆச்சரியம் கோவிந்தசாமி. 

எம்.ஜி.ஆர் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டுமென்றால் கோவிந்தசாமி வந்து இருக்காரா? என்று கேட்டு பார்த்து விட்டு தான் ஆரம்பிப்பார்.  ஆனால் அவர்களின் எந்த செல்வாக்கையும் முமு தனக்காக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை.  அவர்களுடன் அதிகப்படியான தொடர்புகளும் வைத்துக் கொள்வதும் இல்லை.

மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்று பிரபாகரன் அந்த இரவு நேரத்தில் வந்து இறங்கி விட்டார். 

இவர் பிரபாகரனை புகைப்படத்தில் பார்த்து இருக்கிறாரே தவிர பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் புரிந்து கொண்டதும் இல்லை.        செல்லும் முக்கிய இடங்களுக்கு பிரபாகரன் எப்படிச் செல்வாரோ தெரியவில்லை?  ஆனால் இப்போது நாலு முழ வேஷ்டி, அரைக்கைச சட்டை, ஒரு ஜோல்பை. 

கை மட்டும் ஜோல்னா பைக்குள் இருக்க இவர் இருந்த மேஜையின் முன்னால் வந்து நின்றார்.

பிரபாகரன் இருபுறம் துப்பாக்கி ஏந்திய இரு புலி வீரர்கள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.  அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சென்று விட இவர் மட்டும் அன்றைய பிரிண்ட் ஆக வேண்டிய கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.  அலுவலகத்திற்கு பின்புறம் பிரிண்டர் மக்கள் வேலை பார்க்க மொத்தத்தில் அந்த இடத்தில் இவர்கள் நான்கு பேர்களைத் தவிர வேறு எவரும் இல்லை.

கரகரத்த குரலில் பிரபாகரன் தான் ஆரம்பிததார்.

" உண்மையான ஈழத்தமிழன் ஜெயவர்த்னேவை அரசியல் ஞானி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.ஒரு தமிழனாக இருந்து கொண்டு ஜெயவர்த்னேவை அரசியல் ஞானி என்று எப்படி எழுதுகிறீர்கள்?"

"நீங்கள் யார்?"

அருகில் இருந்தவர்கள் " தலைவரை யார் என்று கேட்ட முதல் நபர் நீங்கள் தான் " என்றவுடன் அப்போது தான் இவருக்கு லேசாக புரிபடத் தொடங்கியது.  வந்து இருப்பவர் தான் பிரபாகரன்.  

எந்த பதட்டமும் இல்லாமல் " உட்கார்ந்து பேசலாமே " என்று சொன்னவரை மறுத்து விட்டு பிரபாகரன் நடந்த நிகழ்வுகளை பேச ஆரம்பிக்க பதிலுக்கு முமு " உங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லுங்க.  அதையும் நான் கட்டுரையாக கொண்டு வருகின்றேன்.  ஆனால் என்னை எழுதக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.  பாருங்கள் இந்த மேஜையில் இருக்கும் கடிதங்களை. அத்தனை பேர்களும் அவர்களின் அனுபவங்களை சொல்லியதை வைத்து தான் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்."

பிரபாகரனுக்கு புரிந்து விட்டது.  இவர் மசியக்கூடய ஆள் இல்லை  

மேஜையில் இருந்த அத்தனை கடிதங்களையும் அப்படியே அள்ளி தன்னுடைய ஜோல்னாபையில் போட்டுக் கொண்டு வநத வழியே திரும்பி விட்டார்.  அத்தனை கடிதங்களிலும் எழுதியவர்களின் முகவரியும் இருந்தது. 

பிரபாகரன் சற்று முன்னால் சென்றதும் பின்னால் வந்த அந்த இரண்டு புலி வீரர்கள் ஒரு பார்வையும் சில வாசகங்களையும் சொல்ல அதற்கு பதில் பேசாமல் அமைதி காத்தவர் எப்போதும் போல கடிதங்கள் அத்தனையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டாரே என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு.....

எங்கே முமு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய சகாவாக இருந்த முத்து விஜயன் என்ற நிலகிழாருக்கு மகனாக இருந்த முருகேசன் தான் தன்னுடைய பத்திரிக்கை உலக வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் முத்து முருகேசனாக மாறினார். இராமநாதபுர மாவட்டத்தில் அபிராமம் அருகே உள்ள நகரத்தார் குறிச்சி என்ற கிராமமே இவருடைய பிறந்த ஊர்.  இது பசும்பொன் அருகே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.

சொந்த ஊரில் இவர்களுக்குச் சொந்த நிலமென்பது காலஞ்சென்ற கருப்பையா மூப்பனார் வைத்திருந்ததைப் போலவே சற்று பொறாமை படக்கூடிய அளவில் இருந்தது.

ஆதிக்கக்காரர்களுக்கு மகனாக பிறந்தாலும் சிறுவயதில் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பல வித தேடல்கள் இயல்பாகவே உருவாகி இருக்க அதுவே. பள்ளிப் படிப்போடு காடு மலை வனாந்திரம் என்று சுற்ற வைத்தது. அப்பாவின் கவலை அதிகமானது. இதற்கு மேல் குடும்பத்திற்கு ஆதாரமான அறிவுரை சொல்லும் இடத்தில் இருந்தவர்கள் இவரைப் பற்றி எதிர்கால கணிப்பு என்று சொன்ன பல விசயங்களை கவனித்து இவர் மேல் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இருந்த சொத்துக்கள் ஒவ்வொன்றும் அப்பாவின் இறப்புக்குப் பின்பு ஒவ்வொருவரும் கைப்பற்றி கடைசியில் ஒரு பிடி மண் நிலம் கூட இல்லாத வாழ்க்கையில் தான் மதுரை வந்து சேர்ந்து இருந்தார். சகோதர்கள் மற்றும் சார்ந்த உறவினர்கள் அத்தனை பேர்களும் சலிப்பாய் பார்க்க எப்போதும் போலவே நூலகமே வாழ்க்கையாக மாறி விட்டது.  எதிர்க்க வேண்டும் தன்னுடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றாமல் எப்போதும் போல புத்தக வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்தார்.

குடும்பம் குழந்தைகள் உருவான போது கூட புலனுக்கு விளங்காத அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்திக் கொண்டுருந்தவர் கடைசி வரைக்கும் குடும்பத்தின் மேல் எந்த அக்கறையும் செலுத்தவில்லை.

காரணம் நண்பர் வீட்டில் திடீர் என்று பார்த்த பண்டிட் சேதுராமன் எழுதிய அதிர்ஷ் விஞ்ஞானம் என்ற எண் கணிதம் குறித்த புத்தகம் கண்களுக்கு தென்பட அது குறித்து ஆராய்ச்சியை சேர்த்துக் கொண்டு அலைய ஆரம்பித்தார்.

மேலே சொன்ன தேடல்கள் அத்தனைக்கும் ஒரு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

இவரின் தாய்வழி பாட்டன் பரம்பரையைச் சார்ந்த அத்தனை பேர்களும் இலங்கையில் வாழ்ந்தவர்கள்.  ஒவ்வொருவரும் லண்டன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்று மலையகப் பிரதேசத்தில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட எஸ்டேட் ஆள் அம்பு சேனைகள் அதிகாரங்கள் அதற்கும் மேலாக ஆங்கியேர்களின் ஆட்சியில் உயர்ந்த இடத்தில் இருந்த பதவிகள்.  அவர்கள் வாழ்ந்த கண்ணாடி மாளிகை வாழ்க்கையும், பொறாமைப்படக்கூடிய திரைப்பட சமாச்சாரம் போல் இருந்த அன்றாட நிகழ்வுகளுக்கு ஒரு நாள் முடிவு வந்தது.

1962 ல் மிஞ்சியிருந்த உயிரை கையில் பிடித்துக்கொண்டு மானாமதுரைக்கு வந்து சேர பயணச்சீட்டுக்கு வழியில்லாமல் வந்து நின்ற வாழ்க்கை இவரின் மொத்த சிந்தனைகளை யையும் அப்போது தான் மாற்றியது.  அதன் பிறகு அரை குறையாய் தேடிக் கொண்டுருந்த தேடல்களை வாழ்க்கையில் முதன்மையாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

அவர்களைப் பற்றிய ஜாதக ஆராய்ச்சி முதல் ஒவ்வொரு கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் கோர்த்து தன்னுடைய அன்றாட கடமைகளில் ஒன்றாக வைத்துக் கொண்டு மறுபடியும் அலையத் தொடங்கினார்.  உறவினர்கள் பெற்ற துன்பங்கள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் இலங்கை மக்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் உருவாக இயல்பாகவே மண்டப முகாமிற்கு செல்வதும், தன்னுடைய ஊருக்கு அருகே இலங்கை சார்ந்த எவராவது வந்தால் அவர்களைப் பற்றி விசாரிப்பதும் என்று ஒவ்வொருவரின் துன்பங்களையும் உள்வாங்க ஆரம்பித்தார்.

அப்போது தான் இலங்கைக்குள் இருந்த தமிழர்களின் வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், ஜாதி ரீதியான தாக்கம், பொருளாதார ரீதியான மனோபாவம், மலையகத் தமிழர்களின் தவிப்பான வாழ்க்கை என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது..  ஒரு மனிதன் எந்த சூழ்நிலையில் எவ்வாறு வாழ்கிறான்? எப்படி மாறுகின்றான்? எது மாற்றுகிறதுஆரம்பம் என்ன? முடிவு என்ன? ஏன்? எதற்கு? இது போன்ற கேள்விகளை சுமந்து கொண்டு எவரையும் பொருட்படுத்தாமல் நண்பர்கள் உதவியுடன் வாழ்ந்து கொண்டுருந்தவரின் வாழ்க்கையில் வேறொரு மனிதர் அறிமுகம் ஆகின்றார்.

1973

முத்து முருகேசனின் மற்றொரு பொழுது போக்கு நாள் முழுக்க புத்தகங்கள் படித்துக் கொண்டுருப்பது.  படித்த ஆங்கில தமிழ் புததகங்கள் குறித்து அதன் விமர்சனத்தை சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்துவது.

அப்போது இவர் படித்துக் கொண்டுருந்த பல புத்தகங்களில் ஒன்று காஷ்மீர் பிரச்சனைகள் குறித்த ஒரு புத்தகம்.( Chesterbowles அமெரிக்க அதிபர் கென்னடி அரசாங்கத்தில் வெளி விவகார அமைச்சராக இருநத்வர்). படித்து முடித்த பிறகு நூலாசிரியருக்கு காரசாரமாய் எழுதிய விமர்சனத்தில் தான் மாற்றிக் கொண்ட முத்து முருகேசன் என்ற பெயரை வைத்துக் கொள்ளத் தொடங்க நூலாசிரியரிடமிருந்து மிகப் பெரிய பண்டல் போல் புத்தக மூட்டையும் அன்பளிப்பும் கடிதமும் வந்து சேர்ந்தது.

இப்போது உள் அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் தொடக்க கால ஆலோசகர் வீ திருநாவுக்கரசு அப்போது தமிழ்நாடு அரசாங்கத்தில் மக்கள் செய்தி தொடர்பு துறையில் முக்கிய பதவியில் வகித்தவர். பின்னால் தூதர்ஷன் இயக்குநராக பணியாற்றியவர். அப்போது அறிமுகம் ஆக உங்கள் திறமை நாட்டுக்குத் தேவை என்று சொல்லாமல் கொண்டு போய் சேர்த்த இடம் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம். அப்போது இவருக்கு வயது 36.

1973 ல் கலைஞர் தமிழ் முரசு என்ற பத்திரிக்கையை மதுரையில் ஆரம்பிக்க மற்றொரு முக்கிய காரணம் இன்றைய உரத்துறை அமைச்சர்.(?)

வீ. திருநாவுக்கரசு இவரை அழைத்துக் கொண்டு தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே இருந்த அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே கலைஞருடன் இருந்தவர் காலஞ்சென்ற திரு. தென்னரசு. கலைஞருக்கு வலதுகரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.

முத்து முருகேசன் எப்போதும் வெளியே சென்றாலும் நெற்றி நிறைய பட்டை அத்துடன் சந்தனம் கலந்த குங்குமபொட்டு கதர் ஜிப்பா நாலு முழ வேட்டி இத்துடன் ஒரு ஜோல்னா பை. காரணம் காந்தியை தெய்வமாக மதித்தவர். .  நேரு குடும்பத்தின் மேல் அலாதி பிரியம் வைத்து இருந்தவர்.

ஆனால் இப்போது இவர் பார்க்க காத்துக் கொண்டுருப்பது கலைஞர் அவர்களை. 

அங்கே இருந்த மற்றவர்கள் இவரை வினோதமாக பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அவர்களுக்காக காத்துக் கொண்டுருந்தார். 

இவர் முறை வந்ததும் உள்ளே சென்று திருநாவுக்கரசு அறிமுகம் செய்து வைக்க கலைஞர் இவர் தோற்றத்தை மேலும் கீழும் பார்த்து விட்டு அமைதியாக கவனிக்கத் தொடங்கினார்.

இவரிடம் பேசியது தென்னரசு மட்டுமே. அவர்களின் பகுத்தறிவு கொள்கைகளுக்கும் இவரின் காந்தியவாதிய கொள்கைகளுக்கும் எந்த பெரிதான வாக்குவாதம் உருவாகமல் போனது மிகப் பெரிய ஆச்சரியமே. 

அதிலும் கலைஞர் ஒருவரை கவனிப்பதில் எப்போதுமே தனித் திறமை மிக்கவர்.

கலைஞர் பேசத் தொடங்கி விட்டால் அது முடிவாகத்தான் இருக்கும்.  

தென்னரசு இவருடன் பேசி முடித்த போது " உங்களுக்கு பத்திரிக்கை உலகில் இதுவரைக்கும் எந்த அனுபவமும் இல்லைன்னு சொல்றீங்க.  ஆனால் வேலை கேட்டு வந்து இருக்கீங்க.  எந்த நம்பிக்கையில்?" என்று கேட்க இவர் சொன்ன பதில் "என் தன்னம்பிக்கை அடிப்படையில் அதற்கு மேலும் நான் இப்போது துறை மாறி வேலைச் செயய வேண்டும் என்பது என் விதியின் கட்டாயம்" என்று சொல்ல தென்னரசுவுக்கு அதற்கு மேலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அறிமுகம் செய்தவருக்காக தென்னரசு மீண்டும் "வேறு ஏதும் உங்களுக்கு அனுபவம் இருக்கா?" என்று கேட்க அப்போது தான் அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் அனுப்பிய அந்த பாராட்டுக் கடிதத்தை அவரிடம் காட்ட அதுவரைக்கும் பேசாமல் இவரையே பார்த்துக் கொண்டுருந்த கலைஞர் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து விட்டு" எப்போது நீங்க வேலைக்குச் சேர முடியும்?" என்றார். குறிப்பிட்ட காலத்திற்குள் எங்கே முமு கட்டுரை? என்று கலைஞர் கேட்கும் அளவிற்கு இவருடைய கட்டுரைகள் பிரசித்தமாகத் தொடங்கியது.