அஸ்திவாரம்

Sunday, October 24, 2010

மானங்கெட்ட மனிதர்களும் மரியாதையான பதவிகளும்

நீங்க போனஸ் வாங்கீட்டீங்களா?   

தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் இருக்க திருப்பூருக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் மற்றவர்களை சந்திக்கும் போது கேட்கும் கேள்வி இது.  பணிபுரியும் நிறுவனங்களில் சம்பளம் குறைவு, வாரம் முழுக்க வேலை இல்லாத கொடுமை தொடங்கி அலங்கோலமான நிர்வாகத்தில் சிக்கித்தவித்துக்கொண்டுருக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் இது போன்ற பண்டிகைகள் மிக முக்கியமானது. 

காரணம் அந்த ஒரு வருடம் முழுக்க உழைத்த உழைப்பின் வேர்வைக்கு கிடைக்கும் எச்சமும் சொச்சமுமாய் இந்த போனஸ் பணமென்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று.  ஊரில் உள்ள கடன் முதல் உள்ளூரில் கொடுத்தே தீர வேண்டிய பூதாகர வட்டி வரைக்கும் தீர்ப்பதற்கு உதவும் சர்வரோக மருந்தாக இந்த ஊக்கத் தொகையே உதவுகிறது. 

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரைக்கும் இன்றைய சூழ்நிலையில் இதுவொரு சவாலான நேரமாகும். பஞ்சு ஏற்றுமதியை இன்று வரைக்கும் நிறுத்த எந்த தலைவர்களுக்கும் மனமில்லை. நூல் ஏற்றுமதிக்கு அச்சாரம் போடும் பெரிய தலைகளின் திட்டங்கள் தினமும் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் வாரந்தோறும் இந்த பிரச்சனையை வைத்துக் கொண்டு இங்கு கூட்டம் நடத்தும் ஒவ்வொரு அரசியல் தலைகளின் சித்து விளையாட்டுகளும் ஏதோவொரு வழியில் நடந்து கொண்டேயிருக்கிறது. 

இங்கே முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட தாங்கள் கட்டியுள்ள கோவணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் எவரிடம் போய் முறையிடமுடியும்? பாலும் தேனும் ஓடுவது போல் ஊர் முழுக்க முரசறிவித்துக் கொண்டுருப்பவர்களின் ஒவ்வொரு வருகைக்குப் பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள். இன்றைய சூழ்நிலையில் அதிக பாவம் செய்தவர்கள் சாயப்பட்டறை முதலாளிகள். அவர்களும் வந்து போய்க் கொண்டுருக்கின்ற மக்கள் தலைவர்களுக்கு எத்தனை சூட்கேஸ்களைத் தான் கொடுத்துக் கொண்டேயிருக்க முடியும். 

ஏற்கனவே உள்ளே அட்டைப்பூச்சியாய் உறிஞ்சிக் கொண்டுருக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதல் உள்ளூர் அரசியல் தாதாக்காளின் வசூல்களும் நின்றபாடில்லை. உள்ளேயிருக்கும் தொழில் நடந்தால் என்ன? இல்லை விவசாய பூமிகள் நாசமானால் என்ன? அதுவா இப்போது முக்கியம்? உள்ளேயிருப்பவர்களுக்கு கொடுக்க மின்சாரம் இல்லாத போதும் கூட வந்து இறங்கிக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட முடியுமா?  சாலைகளை மறைத்துக் கட்டும் ஒவ்வொரு ப்ளக்ஸ் போர்டுகளில் சிரிக்கும் தலைகளின் முகத்தில் துப்ப முடியாத எச்சிலை வாயில் அடக்கிக் கொண்டே ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக்கொண்டுருக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டுருகிறார்கள்.

சாயப்பட்டறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய முதல் கட்ட தவணை நிதி வந்து சேர்வதற்கு முன்பே அதற்கான பங்கு சதவிகிதம் குறிப்பிட்ட தலைமைக்கு கொடுத்தாகி விட்டது.  இது போக வரப்போகும் தீர்ப்புக்காக ஒன்று, மத்திய அரசு அடுத்து ஒதுக்கப் போகும் நிதிக்காக என்று ஒவ்வொரு காரணங்களுக் காகவும் திட்ட முடியாமல் திரட்டி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  காரணம் தேர்தல் நாள் மிக அருகில் இருப்பதால் திரட்டும் வழிகளை இப்பொழுதே கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டுருப்பதால் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனங்களின் வாழ்க்கையும் நிரந்தர இருளை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது. இதற்கிடையே இந்த தீபாவளிப் பண்டிகை.

எந்த நிர்வாகமும் தொழிலாளர்களிடம் தொழில் நட்டம் என்றோ, பணமில்லை என்றோ ஒதுங்கி சென்று விடமுடியாது. அழுது கொண்டே கொடுக்க வேண்டிய பணம்.

சில நிறுவனங்கள் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கொடுத்து விடுவதுண்டு.  பல இடங்களில் கடைசி வரைக்கும் எத்தனை சதவிகிதம் தருவார்கள்? எப்பொழுது தருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் கவலையுடன் காத்துக் கொண்டுருக்கும் சூழ்நிலையைத் தான் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பெரிய நிர்வாகத்திலும் இது போன்ற சமயத்தில் மிகப் பெரிய மாறுதல்கள் நடைபெறும்.  சில புத்திசாலியான நிர்வாகங்கள் பண்டிகை வரப்போவதற்கு முன்பே தேவையில்லாத நபர்கள் என்று காரணம் காட்டி கழித்துக்கட்டி விரட்டிவிடுவதுண்டு.  

அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இது போன்ற ஊக்கத் தொகையை விட வேறொரு கொடுமையையும் ஒவ்வொரு நிறுவனங் களும் கடந்து வர வேண்டும்.  பண்டிகை தொடங்க முப்பது நாட்களுக்கு முன்பே அரசாங்கத் துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனங்களாக முறைவைத்து ஏறி இறங்கிக் கொண்டுருக்கும் கொடுமையை பார்க்க சகிக்காது. சமீபத்தில் உயர்பொறுப்பில் இருக்கும் நண்பருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

குசலம் விசாரித்தபிறகு அழைத்த அதிகாரி விடுத்த கோரிக்கை "கட்டிக் கொண்டுருக்கும் வீடு மாடி வரைக்கும் கட்டி முடித்தாகி விட்டது.  மீதி செங்கல் வாங்க வேண்டும்.  பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்புங்க". இதில் ஆச்சரியம் என்னவென்றால் அழைத்த அதிகாரி அவர் வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் போக ரூபாய் 40000 வாங்கும் பதவியில் இருப்பவர்.  அவருக்கு கீழ் 300 நிறுவனங்கள உண்டு. ஒவ்வொரு நிறுவனங்களின் தொழிலாளர் நலவாழ்வு என்பது அவர் கையில் தான் இருக்கிறது.  

நம்முடைய இந்திய ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையென்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எந்த அளவிற்கு தேவையாய் இருக்கிறதோ அதே அளவிற்கு நிறுவனங்களுக்கும் தேவையாய் இருக்கிறது.  அடிப்படைவசதிகள் முதல் அன்றாட நிகழ்வுகள் வரைக்கும் ஒவ்வொன்றும் இந்த அரசியல் விளையாட்டுக்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. 

இயல்பான காரியங்கள் கூட எவரோ ஒருவரின் தயவுக்காக காத்துருக்கும் சூழ்நிலையை இந்த மக்கள் தலைவர்கள் உருவாக்கி விட்ட காரணத்தால் கரம் சிரம் புறம் பார்க்காமல் சென்றால் தான் பயணத்தின் இறுதிப் பகுதிக்கு நம்மால் செல்ல முடியும். அதிகபட்சம் 50 லட்சம் வரைக்கும் கப்பம் கட்டி உள்ளே வரும் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகார வர்க்கமும் அவரவர் இருக்கையில் வந்து அமர்வதற்கு முன்பே ஒரு கணக்கோடு தான் தங்கள் மக்கள் சேவையை தொடங்குகிறார்கள். 

இது போன்ற அதிகாரிகளை சரியான முறையில் நிறுவனங்களுக்கு கையாளத் தெரியாவிட்டால் நாலும் நடந்து விடும். நடுத்தெருவுக்கு கொண்டு வநது நிறுத்திவிடக்கூடும். திருப்பூருக்குள் பணிமாற்றம் கேட்டு வருவது என்பது இன்று அரசாங்கத் துறையில் மிகப் பெரிய பம்பர் லாட்டரி கிடைத்ததற்கு சமமானது.  

வணிகவரித்துறை, காவல் துறை, பத்திரப்பதிவுத்துறை, மின்சாரத்துறை வரைக்கும் ஒவ்வொரு உயர்பதவிகளும் நல்ல விலை போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் இந்த மானங்கெட்ட அரசியல் விளையாட்டின் எல்லை எதுவரைக்கும் சென்று கொண்டுருக்கிறது தெரியுமா? 


நாம் தினந்தோறும் தொலைக்காட்சியில் உயர்ரக வெளிச்சத்தில் பார்த்து வாயை பிளந்து கொண்டுருக்கும் பட்டுப் புடவைகள் நெய்யும் நெசவுத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் இறுதியாக 18 சங்கங்கள் இருந்தது. ஒரு புடைவைக்கு ரூபாய் 3000 கூலியாக ஏற்கனவே உருவாக்கப்பட்டுருந்த உள்ளூர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்பட்டுக் கொண்டுருந்தது.  

வெற்றிகரமாக நம் தலைகள் அதிலும் நுழைந்து இன்று சங்கங்களை உடைத்து ஜாதி, அரசியல் கட்சி என்று மாற்றி நெசவாளர்களின் வாழ்க்கையை சாயம் போன பட்டுப்புடவைப் போல மாற்றி விட்டனர். பாதிக்கப்பட்ட எவரும் ஒன்று சேரமாட்டார்கள்.  காரணம் வருமானம் இல்லாத குறையைவிட ஒவ்வொரு வருக்கும் அரசியல் சாயம் முக்கியமானது.  அதை விட தன்னுடைய ஜாதி அந்தஸ்து அதி முக்கியமானது.  இடையே உள்ளே நுழைபவர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்.

இந்திய நாடு மற்ற நாடுகளுக்கு மக்கள் ஆட்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  வெற்றிகரமாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகத்தை பறை சாற்றிக் கொண்டுருக்கிறது என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள எத்தனையோ பெருமையான விசயங்கள் நம்மிடம் உண்டு. 

 எந்திரன் விளம்பரங்களுக்கு இடையே நம் பார்வையில் படாமல் இருந்த மற்றொரு சமீப நிகழ்வுகளை இந்த இடத்தில் யோசித்துப் பார்த்தால் தவறில்லை.  பத்து நாட்களுக்கு முன்பு பிரான்ஸில் 80 சதவிகித மக்கள் தெருவுக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நிகழ்த்தி ஆள்பவர்களை கதிகலக்க வைத்துள்ளனர். 

60 வயதில் வழங்கப்படும் ஓய்வுதிய நிதியை 62 வயதுக்கு மாற்றியதால் மொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த உருவாக்கிய அச்சத்தை உருவாக்கிய ஒற்றுமை நம் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. 

ஆனால் இந்தியாவில் இருக்கும் பல சிறப்புகளுடன் மற்றொரு பெருமை யையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். டிரான்ஸ்பேரன்ஸி இன்டர் நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவின் படி ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப் படுகின்றது. 

கணக்கெடுத்தவர்கள் அதிகாரவர்க்கத்தினரை வைத்து தான் எடுத்துருக்க முடியும்.  அரசியல்வியாதிகள் பக்கம் போயிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 


அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. லஞ்சம் செழித்து வளரும் தர வரிசைப்பட்டியலில்  இந்தியாவுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது. நாம் நல்லவற்றை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு முன்னால் 18 நாடுகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வோம்.

45 comments:

  1. ஊழலைப் பற்றி இதை விட அதிகமா உறைக்கும் படி சொல்ல முடியாது ஜோதிஜி..

    ReplyDelete
  2. திரும்பவும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்.....!
    தலை விதி என்று தள்ளிப் போக மனமில்லாமல் மக்கள் போராட ஒரு முடிவுக்கு வரும் முன்னமே
    இலவசங்களும், டாஸ்மாக்கின் இரவு மூடும் நேரம் மாற்றியமைக்க பெற்றிருக்கும்..
    இல்லத்தரசிகளுக்கு நெடுந்தொடர் என்ற போதையும்...இளசுகளுக்கு காமம் என்ற போதை சினிமா மூலமும்
    ஊட்டப் படுகிறது ...
    அப்பறம் நாம எதை போயி கேட்க்க???
    அதனால அவரவர்க்கு ஒரு தனி சுகம்...
    நம்ம பெரிய தலைங்களுக்கு எல்லாமே போதையும் சுகமும் தான்......

    ReplyDelete
  3. ஊழல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊழலை தடுக்கும் பிரிவிலும் ஊழல்....
    பொதுமக்களால் புலம்பத் தவிர வேறெதையும் பெரிதாக செய்ய முடியுமோ!

    (நீண்டா நாட்களுக்கு பிறகு பதிவு!!! மகிழ்ச்சி! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!)

    ReplyDelete
  4. //நாம் நல்லவற்றை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு முன்னால் 18 நாடுகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வோம்//
    கவலைப்படாதீர்கள் ஜோதிஜி!! 2020க்குள் நம்மை அதிகார வர்க்கமும் அரசியல்வியாதிகளும் முன்னேறச் செய்து முதலிடத்தில் நிறுத்தி விடுவர்கள்.!!!

    ReplyDelete
  5. ஊழலைப் பற்றி அருமையானதொரு பதிவு ஜோதிஜி. கார்டூன் சொல்லும் கருத்து உண்மை.

    ReplyDelete
  6. இந்த பதிவ மத்தவங்க படிக்காம இருக்க எவ்ளோ காசு கொடுக்கலாம் சொல்லுங்க????

    ReplyDelete
  7. \\லஞ்சம் செழித்து வளரும் தர வரிசைப்பட்டியலில் இந்தியாவுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது\\

    விரைவில் முதலிடத்திற்கு வர அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடும் உழைப்பைத் தந்து கொண்டு இருக்கிறார்கள்.

    883 கோடி என்பது பழைய கணக்காக இருக்கும், சரி பாருங்கள். இது தமிழ்நாட்டுக்கே பத்தாதே:))

    காமென்வெல்த் இதில் அடங்காது:)

    அரசியல் ஒரு தொழில். தொழில். தொழில்
    இதில் 5 வருடத்திற்கு ஒருமுறை முதல்போட்டு பின் அறுவடை செய்கிறார்கள். அரசியல்வாதிகள்

    அதற்கு அரசாங்கத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதிகாரிகள் ஒத்து ஊதி தான் வசதியாக பிழைக்கும் வழியைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

    தீர்வு??????????

    ReplyDelete
  8. இந்த வம்புகள் இல்லாமலிருந்தால் நம் நாடு இன்று வல்லரசாகத் திகழும்.

    ReplyDelete
  9. மிகவும் அருமையான ஒரு பதிவுங்க இது.

    ReplyDelete
  10. கோபம், நியாயம், உண்மை பேசி இருக்கிறது பதிவு.

    ReplyDelete
  11. செம்மொழி மாநாட்டின் போது ஒவ்வொரு மில்களிலும் கோடிகணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது உண்மை. அதனாலதான் இப்போது நூல் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுகிறது அல்லது ஏற்றபடுகிறது. திருப்புரின் இந்த நிலை நீடிக்குமானால் திருப்புரை நம்பி வாழும் மக்களின் நிலை கேள்விகுறிதான்

    ReplyDelete
  12. மிகவும் அருமையான பதிவுங்க.......ஊழலைப்பற்றி இதைவிட உறைக்கிற மாதிரி சொல்ல முடியாதுங்க.....

    ReplyDelete
  13. அது வந்து ஜோதிஜி, இதுல என்னன்னு பாத்திங்கன்னா, ஒரு விஷயம். அது என்னன்னா எப்டி சொல்லுறதுன்னு யோசிக்கிறப்போ, நம்ம ஜனநாயகம் தான் ஒலகத்திலேயே......

    இது வேற ஒன்னுமில்லைங்க, ஒரு ஜனநாயக வியாதிகிட்ட உங்க கட்டுரைய காட்டுறப்போ, அவரு மென்னு முழுங்கிகிட்டே சொல்ல ஆரமிச்ச விஷயம்தான்!

    சோற்றுக்கு 1 / 3 மக்கள் சிங்கி அடிக்கிறப்ப ஜனநாயகமும். தனிமனித சுதந்திர முசக்கங்களும் அருவருப்பைத் தருது எனக்கு.

    வாழ்க லஞ்சம். வளர்க ஊழல்!

    ReplyDelete
  14. நல்லாச் சொன்னீங்க...!
    லஞ்சம்கிறது தேசிய அவமானம்கிறது போய் தேசிய செயல்னு ஆகிப்போச்சு. ஒரு நீதிபதி வேற லஞ்சம வாங்கிறத சட்டமாகிட்டா என்னனு கேக்குறாரு.
    இனி வருங்காலத்துல தாய்ப்பால் கொடுக்க தாய் லஞ்சம கேட்டா ஆச்சர்யப் படாதீங்க!

    ReplyDelete
  15. நோட்டுப் புத்தகத்தில் சீல் போட்டு தொகை எழுதி கனக்கச்சிதமாக தீபாவளி வசூல் நடத்தும் அரசு அலுவலுகங்களின் அவலங்கள் நம்மூரில் மட்டுமே...

    ReplyDelete
  16. நேற்று பின்னூட்டம் போட்டுவிட்டு லாகின் செய்யாமல் பின்னூட்டப்பகுதியில் சேரவில்லை.

    இந்தியாவில் லஞ்சம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

    Lack of transparency and accountability.

    பணம் எங்கிருந்து எப்படி மாற்றம் செய்யப்படுகிறது என்பதும் அதற்கான பொறுப்பாளி யார் என்பதும் வெளிப்படையாக தெரிவதில்லை.இதுவே இந்திய லஞ்சத்தின் சூட்சுமம்.

    ReplyDelete
  17. கடைசிப் பாராவிலே ஒரு சின்னத்தவறு இருக்குதுங்க.

    //அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது//

    ஊஹூம்............ நாட் ரைட்.

    மூன்றில், மூவரும் என்று இருக்கணும்.

    கண்கூடாகப் பார்த்து நொந்து போய்க் கொண்டிருக்கிறோம்:(

    இது நான் விட்டுப்போன இந்தியா இல்லை என்பதுதான் சுடும் உண்மை:(

    ReplyDelete
  18. துளசி கோபால்

    தலைப்பை மாற்றி விடலாம் போலிருக்கே. சுடும் உண்மைகள். இது கூட நல்லாயிருக்கு. என்னை விட நீங்க இது போன்ற அரசியல் திரைமறைவு பேர விசயங்கள் தெரிந்து வைத்துருந்தும் அமைதியாய் இருப்பது பதில் மூலம் கண்டு கொண்டேன்.

    ராஜ நடராஜன்

    நீங்க சொன்னமாதிரி குறிப்பிட்ட தொகைக்கு மேலே தெவைப்பட்டால் காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றார். என்ன ஆச்சு? கிராமத்து தலையாரி முதல் தலைவர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் ஒரே கூட்டணியில் இருந்தால்? சகாயம் போன்ற அதிகாரியைக்கூட ஒருவர் லஞ்சம் வாங்கினால் என்று கூசாமல் பேட்டி கொடுக்கிறார்?

    வெண்புரவி

    அந்த நீதிபதி சொன்னதக்கேட்டு நானே திகைத்துப் போய்விட்டேன். அதைவிட குறிப்பிட்ட அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்லியது மொத்தத்திலும் ஆச்சரியம்

    ReplyDelete
  19. பூந்தளிர்

    தீபாவளி வரும் போதே பக் பக்வென்று இவர்கள் கொண்டு வருகின்ற வரிசைப்பட்டியல் நோட்டுக்களைப் பார்த்து மனம் துடிக்கிறது.

    விந்தை மனிதன்

    கூட்டிக்கழிச்சுப் பார்த்தா தேடப்படும் குற்றவாளியா இருக்கிற முன்னால் சட்டமன்ற உறுப்பினரின் ஓய்வூதியத் தொகையை நிறுத்த நமது சட்டத்தில் இடமில்லை என்கிற சுதந்திரம் தான் மனதில் வந்து போகின்றது.

    நித்திலம்

    தேனம்மையும் நீங்களும் ஒரே முடிவுக்கு கொண்டு வந்துட்டீங்க போல. நன்றிங்க.

    கார்த்திக்குமார்

    எந்த விசயத்தையும் ஊடகம் வெளியே கொண்டு வர முடியாதபடி கைக்குள் வைத்திருக்கும் வித்தைகளை ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் அணைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

    அன்பரசன், பழமைபேசி, தமிழ்உதயம் ஆதங்கம் புரிகின்றது.

    ReplyDelete
  20. கந்தசாமி ஐயா வல்லரசு ஆசை கூட வேண்டாம். தனி மனித அடிப்படை வாழ்வாதாரமாவது ஒழுங்காக இருக்குமே?

    ஒருமுறை முதல்போட்டு பின் அறுவடை செய்கிறார்கள். அரசியல்வாதிகள்...... இதை தான் மருத்துவர் ஐயா சமீபத்தில் மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டார் சிவா.

    கொள்கையாவது புடலங்காயாவது????

    ReplyDelete
  21. யோகேஷ்

    சிரிக்க சிந்திக்க வைச்சுட்டீங்க.

    நன்றி குமார்.

    லெமூரியன் மக்கள் ஒரு விசயத்தில் மட்டும் தெளிவா இருக்காங்க. உழைக்காமல் தேவையானதை பெறுவது எப்படி? இவர்களை உணர்ந்த தலைவர்களும் ரொம்பவே தெளிவாகவே மாறிக்கிட்டு இருக்காங்க.

    எஸ்கே

    ஊழலை தடுக்கும் பிரிவிலும் ஊழல்....

    2020க்குள் நம்மை அதிகார வர்க்கமும் அரசியல்வியாதிகளும் முன்னேறச் செய்து முதலிடத்தில் நிறுத்தி விடுவர்கள்.

    உண்மையும் கூட.

    ReplyDelete
  22. நாம்தான் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு எருமைமாட்டுமேல் மழை பெய்வதுபோல் வாழப் பழகிவிட்டோமே.

    ReplyDelete
  23. ஜோதிஜி, இந்த பதிவிற்கு என்ன எழுதுவது - வருடங்கள் நகர, நகர நிலமை மென்மேலும் மோசம்தான் அடைந்து கொண்டிருக்கிறது... இதெல்லாம் தனிமனித பேராசையென்று, என்று உணரப்படுகிறதோ அன்றே விமோச்சனம். Corruption is chronic sickness and contagious ...

    ReplyDelete
  24. லஞ்ச லாவண்யங்களை அப்பட்டமாக
    தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
    அழுத்தமான,ஆழமான பதிவு,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வேலியே பயிரை மேய்கிறது என்ற நீண்ட, நெடுங்கால வருத்தம் மீண்டுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வினவு தளத்தைப் படிக்கிறேனா என்று ஆச்சர்யத்துடன் சோதித்துக்கொண்டேன்.

    இந்த தீபாவளி, Christmas போனஸ் எல்லாம் உண்மையிலேயே ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக்கொள்வது தான். இப்படி பண்டிகை காலங்களில் கொடுக்கப்படும் பணம் மீண்டும் பண்டிகைக்கால நுகர்வுக்காய் (வெற்றுத்தேவைகளோ????) தானே வீணடிக்கப்படுகிறது. அதில் எத்தனை வீதம் சேமிப்பாய் மாறும், தெரியவில்லை. அப்படி ஒரு மனோநிலைக்கு நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டோம்.

    Reforms <--------------> Corruption cartoon நன்று.

    ReplyDelete
  26. ரதி என்ன புதுசா பீதிய கிளப்புறீங்க. ஏற்கனவே தோழர்கள் இன்னமும் ஆழமாய் பார்வை செல்ல வேண்டும் என்று அறிவுரை வேறு சொல்லிக்கொண்டுருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு வெளுத்து வாங்க முடியுமா?

    நீங்கள் சொல்ல வரும் வெற்றுத் தேவைகள் என்பதைத்தான் தெகா தனி மனித பேராசைகள் என்ற ஒற்றைச் சொல்லில் மொத்த இடுகையின் சாரத்தையும் விமர்சித்து விட்டார். முற்றிலும் உண்மை தானே. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண்கள் சிக்கனமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஒவ்வொரு முறையும் நம்பிக்கையை அளித்துக் கொண்டுருக்கிறார்கள்.

    நன்றி அபுல்பசர்.

    ஜெயந்தி ஆழமான பார்வையின் கூடிய எதார்த்தமான உண்மைக்கு நன்றி.

    ReplyDelete
  27. :)))) நல்லதாப்போச்சு. நான் உங்கள் எழுத்தைப்பற்றி நினைத்ததைத்தான் வினவு நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்குரிய முதல் அறிகுறி இந்த பதிவில் தெரிகிறது. எதுக்கும் இந்த வார்த்தையை வினவிடமிருந்து நீங்கள் சீக்கிரமே கேட்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. பத்து பேருக்கு பின்னாடி வந்து முதல் ஆளா என்னுடைய காரியத்தை சாதிக்க நான் எவ்வளவு காசு வேண்டுமானலும் தர தயார் என்ற மனோபாவம் உடைய மனிதர்கள் இருக்கும் வரை கையூட்டு என்பது இருக்கும்.

    அஞ்சோ பத்தோ ஆயிரமோ கொடுத்து காரியத்தை சாதித்து கொள்வோம் என்று பொதுமனோபாவம் பொதுமக்களிடையே நிகழ ஆரம்பித்துவிட்டது என்பது வேதனையான உண்மை.

    இல்லாதவன் வார்த்தை கொட்டி தீர்க்கிறான்.இருப்பவன் காசு வெட்டி காரியம் சாதிக்கிறான் அன்பின் ஜோதிஜி.

    நல்லபதிவு நன்றிகள்.

    ReplyDelete
  29. ஜோதிஜி வணக்கம் ..,
    மிகுந்த செறிவுள்ள பதிவு ...,இதே போல் பல விஷயங்கள் கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் நடந்து வருகின்றன ..,ஒரு ITI முடித்தவனை அப்பரன்டிஸ் ஆக வேலை சேர்த்து மாதம் அவனுக்கு தரும் சம்பளம் 1440 ரூபாய் ...,அதில் கேண்டீன் செலவு தனி ...,அவன் கையில் மாதம் 1200 ரூபாய் தான் மிஞ்சும் ..,அனால் அவன் உற்பத்தி செய்கிற ஒரு காம்போனென்ட் விலை ( ஒரே COMPONENT ) 3000 - 5000 வரை ...,அவனுடைய ஒரு ஷிப்டில் அவன் உற்பத்தி சுமார் 1000 பாகங்கள் ..,கணக்கு போட்டு கொள்ளுங்கள் ..,அந்த ஏழை தொழிலாளி எவ்ளவு உறிஞ்ச படுகிறான் என்று ..,அவனுக்கு BONUS கிடையாது ..,இதர படிகள் கிடையாது ..,எந்த விதமான சலுகைகளோ கிடையாது ..,குறிப்பாக வேலை நிரந்தரம் அடியோடு கிடையாது ...,ட்ரைனிங் முடிந்தால் வீட்டுக்கு ..,அடுத்து இன்னொரு அப்பரன்டிஸ் ...,நம் நாட்டில் உள்ள தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் பேப்பரில் தான் ..,அது எவ்ளோவு காசு குடுத்தாலும் நடைமுறைக்கு வராது .நிரந்தர பணியாளர்கள் என்னமோ ஒரு கம்பென்யில் இருநூறு அல்லது அதற்க்கு குறைவானவர்களே இருப்பார்கள் ..,

    மேலும் ....,ஒருவன் 240 நாட்கள் பணி செய்தால் அவனை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது ..,ஆனால் அதை எந்த முதலாளிகளும் கண்டு கொள்வது கிடையாது ..,

    ReplyDelete
  30. என்ன ரவி குறியோடு நிறுத்திவிட்டீங்க.

    சங்கர் மனம் கனத்து விட்டது. குறைந்த ஊதியம் தான். ஆனால் நிச்சயம் 8 மணி நேரம் தானே வேலை. இங்கு எட்டில் தொடங்கி பத்துக்கு மாறி இப்போது பனிரென்டில் கொண்டு வந்து கொண்டுருக்கிறார்கள். நன்றி சங்கர் உங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  31. இல்லை ஜோதிஜி ...,நீங்கள் கட்டாயமாக நான்கு மணி நேரம் OVER TIME செய்ய வேண்டும் ..,அதுவும் SINGLE OT ...,வேறு எந்த சலுகைகள் கிடையாது ...,

    ReplyDelete
  32. http://www.boatsr.tn.nic.in/Training.htm

    இந்த சுட்டியில் உள்ள சம்பள விவரங்களை பாருங்கள் ...,

    ReplyDelete
  33. //////இங்கு எட்டில் தொடங்கி பத்துக்கு மாறி இப்போது பனிரென்டில் கொண்டு வந்து கொண்டுருக்கிறார்கள்.//////

    இதை நீங்கள் தட்டி கேட்கிறீர்கள் ..,ஆனால் இங்கே அவர்களுக்கு இது தெரியாமல் தான் உழைத்து உழைத்து ஏமாற்றபட்டுகொண்டிருகீரர்கள் ...,பத்தொன்பதில் இருந்து இருபது வயது உள்ள இளைஞக்கு இது தெரியுமா ..,

    ReplyDelete
  34. BE என்பது இன்று வரைக்கும் நடுத்தர மக்களின் கனவாகவே இருக்கிறது சங்கர். இன்னமும் நன்கொடை கொடுத்து படிக்க வைப்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் 2600 ரூபாய் என்பது நெஞ்சமே அடைத்து போனது போல் ஆகி விட்டது. முன் அனுபவம் எதுவும் இல்லாமல் இங்கு தொழிலாளர்கள் வாங்கும் மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 4000 ரூபாய். படிப்பு எதுவும் இல்லாமல்.

    மற்றொன்றையும் யோசித்துப் பாருங்கள். அந்த இளைஞர்களிடம் அவர்களின் பொதுவான எதிர்காலம் குறித்து பேசிப்பாருங்கள்.

    உலக நடப்புகளைக்குறித்து கேட்டுப் பாருங்கள். சுத்த மண்ணாக இருப்பார்கள். கற்ற கல்வியும் உதவாமல் சுய சிந்தனைகளும் மழுங்கிப் போன இளைய தலைமுறைகள் இது போன்ற சுரண்டல்களை கடந்து தான் வரவேண்டும்.

    ReplyDelete
  35. ஊழல்.. ஊழல்.. ஊழல்..

    வாங்குபவர்களும் மக்கள்தான். கொடுப்பவர்களும் மக்கள்தான். புலம்புவர்களும் மக்கள்தான்..!

    யாரிடம் சென்று முறையிட..?

    ReplyDelete
  36. ஜோதிஜி ,
    இவ்வுரையாடலை இந்த பதிவில் தொடர மன்னிப்பு கோருகிறேன் ...,நம் நாட்டில் தொழிலாளர்களை அடக்கி வேலை வாங்கும் அட்டுழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல ...,இந்த அப்பரன்டிஸ் ஆக்ட் சட்டம் என்ன சொல்கிறதென்றால் ..,அவர்களை வைத்து உற்பத்தி செய்ய கூடாது ..,அவர்களிடம் வேலை வாங்க கூடாது ,மாறாக அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும் ..,அவர்களின் திறமைகளின் சாத்திய கூறுகளையும் அறிந்து அதை ஒரு ரிப்போர்ட் தர வேண்டும் ..,ஆனால் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அவன் பத்து மிஷங்களுக்கு நடுவே ...., அவன் ஒருவன் வேலை செய்ய வேண்டும் ...,அது போல் அவர்கள் இரவு பணியில் வேலை செய்யும் போது என் ரத்தம் கொதிக்கும் ..,ஏனென்றால் இயற்கைக்கு முரணான முறையில் வேலை செய்தும் அவர்களுக்கு தர வேண்டிய எந்த அல்லவன்ஸ் கிடையாது ...,பத்து மிஷன்களையும் ஒரு OPERATOR வேலை செய்யும் போது அவனால் இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாது ...,அந்த சமயத்தில் நான் மிஷன் ஓட்டுவேன் ..,முதலில் இந்த அப்பரன்டிஸ் மூலம் முதாளிகள் அடையும் பணம் கொஞ்சம் நஞ்சமல்ல ...., இதை நீங்கள் பார்க்க வேண்டுமானால் HOSUR உள்ள தொழிற்சாலைகளில் பார்க்கலாம் ..,

    ReplyDelete
  37. அருமை ஜோதிஜி நானும் கிருஷ்ணகுமாரும் படித்து ரசித்தோம். பாராட்டுக்கள். படங்கள் கார்டூன் மற்றும் எழுத்து சூப்பர்

    ReplyDelete
  38. சங்கர் இந்த விசயங்கள் எனக்கு புதிது அல்ல. நான் இங்கு பார்த்துக் கொண்டுருப்பது தான். என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு. தான் சுரண்டப்படுகிறோம்? ஏமாற்றப்படுகிறோம் என்று உணரும் ஒரு இளைஞன் ஒன்று எதிர்க்க வேண்டும். அல்லது மற்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். குறைந்த பட்சம் அதை விட்டு வெளியேறி வேறு துறையில் தன்னை பொருத்திக் கொண்டு முன்னேற வேண்டும் ஏன் நினைப்பதில்லை?

    காரணம் நாம் தமிழர்கள்.

    ReplyDelete
  39. தமிழா நாம் நம்மை உணராத வரைக்கும் தெய்வத்திடம் முறையிட்டு விட்டு முடங்கி போய் கிடக்க வேண்டியது தான்?

    ReplyDelete
  40. இது மாதிரி இன்னொரு பதிவு தான் என்னால எழுத முடியும். பின்னூட்டம் முடியாது. :-(

    ReplyDelete
  41. ஐயா மிக நல்ல பதிவு. இப்பொழுதான் இந்த பதிவினை படித்தேன்.
    எப்பொழுதுமே உண்மை சுடும், அதிலும் இது போன்று பட்டவர்த்தனமாக சொல்லும்பொழுது அதன் வீரியம் மிகவும் சங்கடமாகவும், நம்முடைய இயலாமையை பொட்டில் அடித்தாற்போலும் உரைக்கின்றது. நாம் அனைவருமே இதனை கடந்தும், கடந்து கொண்டும் இருப்பவர்கள்தான். அதிலும் இது நீக்கமற எல்லா துறைகளிலும் நிறைந்திருக்கின்றது என்பதுதான் நம்முடைய மக்கள் சேவகர்களின் மிகப்பெரிய சாதனை.
    நீங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு பானையில் ஒரு சோறு, மற்ற எண்ணற்ற துறைகள் குறிப்பாக வட்டார போக்குவரத்து, சார்பதிவாளர் துறை, வருமான வரி போன்றவற்றின் அக்கிரமம் சொல்லில் அடங்காவொண்ணது. கடைமையை மீறுவதற்கு லஞ்சம் என்பது போய் கடைமையாற்றுவதற்கே இந்த கொடுமையை அங்கீகரித்தது யாருடைய குற்றம் என்பது எல்லோரும் உணரவேண்டியது கட்டாயம்.
    இந்தியன், முதல்வன், அன்னியன் போன்ற சினிமாவில் கூறியது அத்தனையும் உண்மை, உண்மை,பட்டவர்த்தனமான உண்மை.
    நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோர்களும், நாமும் விட்டு செல்லும் எச்சம் இந்த கழிவு.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.