இப்போது நிழல் முதல்வர்களாக நான்கு பேர்கள் உள்ளனர்.
ஆனால் முதன்மைச் செயலாளர்கள் ஒன்று இரண்டு மூன்று நான்கு என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றார்கள்.
அவர்கள் தமிழக பஞ்சாயத்து நிலங்களில் உள்ள அனைத்துத் துறைகளிலும் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் பொறுப்பு. அவர்களைக் கடந்து தான் கோப்பு ஒவ்வொன்றும் பஞ்சாயத்து தலைமைக்குச் செல்லும். அதாவது இந்த இடத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்கிற நிலையில்.
காரணம் ஒரு கோப்பில் உள்ள அனைத்து விசயங்களையும் ஆராய்ந்து, கேள்வி எழுப்பி, அதில் கீழே ஆட்சேபகரமான விசயங்களைக் குறிப்புகளாக எழுதி, அதை சம்பந்தப்பட்டத் துறைக்கு அனுப்பி, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தக் கோப்பு திரும்பி வராத பட்சத்தில் கேள்வி எழுப்பி...
இதுவொரு நீண்டதொரு நடைமுறை. அதிக நேரம் தேவைப்படும். உடல் உழைப்பு, ஆரோக்கியம், சிந்திக்க வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் இப்போது நீங்கள் யோசிக்கவே வாய்ப்பில்லை.
இவையெல்லாம் இப்போது கனவு தான்.
ஏற்கனவே டபுள்வாட்ச் டக்ளஸ் என் முன்னால் குவிந்துள்ள கோப்புகள் என்று ஒரு படம் காட்டியிருந்தார். அவருக்கே இந்த நிலைமை என்றால் அனைத்துத் துறை சார்ந்த அமைச்சுகளின் மூலம் தலைமைக்குத் தினமும் வரும் கோப்புகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்று யோசித்துக் கொள்ளவும். எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். இது சார்ந்து அதிகாரிகளுடன் உரையாட வேண்டியிருக்கும் என்பதனை உங்கள் கற்பனையில் கொண்டு வரலாம்.
மக்களுக்கு இது சார்ந்த நடைமுறைகள் தெரியவும் வாய்ப்பில்லை. உடனே முன்பு இருந்தவர்கள் கெட்டிக் காரர்கள் என்று அர்த்தமில்லை. எப்போதும் போல அதிகாரிகள் தான் முடிவு எடுப்பார்கள். ஆட்சி மாறும். காட்சிகள் மாறும் அவ்வளவு தான். அரசு சக்கரம் இப்படித்தான் சுழலும். இதன் அச்சு ப்ரோட்டோகால் என்ற வார்த்தைக்குள் அடங்கிவிடும்.
கீழே உள்ள பத்திரிக்கையைச் செய்தியைப் பார்த்ததும் வித்தியாசமான எண்ணம் உருவானது.
மாமனிதர் செங்ஸ் அவர்கள் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றதும் இப்போது முதன்மைச் செயலாளர் நம்பர் ஒன் மரியாதைக்குரிய உதயச்சந்திரன் தான் கல்வித்துறையின் செயலாளராக இருந்தார். குறுகிய காலம் தான் அந்தப் பணியில் இருந்தார். ஆனால் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் பத்து நாட்களுக்குரிய வேலைகள் நடந்தது. நிர்வாக சீர்திருத்தங்கள், ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை, தரம் சார்ந்த விசயங்களில் அதிகக் கவனம், பத்து வருடங்களுக்கு மேலாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டங்களில் மாற்றம், அதனை உடனே ஒப்புதல் வழங்க, சோதனை செய்ய, உறுதிப்படுத்த, இறுதி வடிவம் கொண்டு வர எனப் பலவிதங்களில் பல்வேறு குழுக்கள் அமைத்து படிப்படியாக அதனை இறுதிப்படுத்திப் பல துறைகளில் இருந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உடனே புதிய புத்தகங்கள் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து சேர்ந்தது. பெரிய சர்ச்சைகள் எதுவும் உருவாகவில்லை என்பதனை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும்.
நீட் என்ற வார்த்தை இங்கே அரசியலுக்காகவே தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் சென்ற ஆண்டு 80 சதவிகிதத்திற்கு மேலாக நீட் தேர்வில் வந்த கேள்விகள் அனைத்தும் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திலிருந்து தான் வந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஏன் உதயச்சந்திரன் மாற்றப்பட்டார்? என்பதற்குப் பின்னால் செங்ஸ் அவர்களின் இறுமாப்பு முதல் காரணம் என்றாலும் கல்வித்துறையில் சம்பாதித்துக் கொண்டிருந்த கருங்காலிக்கூட்டம் கொடுத்த தொடர் அழுத்தம் தான் காரணமாக இருந்தது.
காரணம் ஆசிரியர் நியமனம், பணி மாறுதல் விண்ணப்பம், கல்வித்துறை சார்ந்த அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு எமிஸ் என்ற தளம் வடிவமைக்கப்பட்டது. அதாவது ஒரே கூரையின் கீழ் என்பதாக தமிழகக் கல்வித்துறை புத்தாடை அணிந்தது.
காசு பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் கலங்கிப் போனார்கள். "நீங்கள் நிகழ்கால வாழ்க்கைக்குத் தொடர்பு இல்லாதவர். எனவே ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று ஆராயத் தொடங்குகள். இங்கு உங்கள் ஆராய்ச்சி தேவையில்லை" என்று தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். மீண்டும் சூறையாடுதல் தொடங்கியது. அதுவே கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கமாகவும் இருந்தது. நூறு ரூபாய் வருகின்றது என்றாலும் அதில் கூட ஆவலாய் பறந்து சம்பாதித்த பரக்காவெட்டிகளைத் தான் செங்ஸ் அருகே வைத்திருந்தார். தன் அரசியல் வாழ்க்கையில் அதிக அவமானமும், மிக அதிகக் கடனும் வைத்திருந்த செங்ஸ் அதிலிருந்து மீண்டு வந்தார். பதிலாக பத்து லட்சம் மாணவர்களின் வாழ்க்கையில் இருட்டு பரவியது. விவாதிக்க யாருமில்லை. விடியல் ஆட்சியும் வந்து சேர்ந்தது.
இப்போது அதே உதயச் சந்திரன் அவர்கள் உச்சக் கட்ட அதிகாரத்தில் தான் இருக்கின்றார். அவர் பொறுப்பில் தான் பள்ளிக்கல்வித்துறை உள்ளது. அவர் முடிவெடுப்பது பஞ்சாயத்துத் தலைமைக்குப் போகும். ஆனாலும் இந்தச் செய்தி சொல்வது என்ன? என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதுமானது?
தமிழக அரசியல் என்பது நக்கிப்பிழைக்க வாய்ப்பு இருக்கும் இடத்தில் உருண்டு புரண்டு நக்கி பிழைக்க கற்றுக் கொள் என்பதே அடிப்படை பாலபாடம்.
கூடவே மற்றொருமொரு நல்ல செய்தி.
ஏற்கனவே அன்பு இரக்கம் கருணை போன்றவற்றை எல்லாம் வல்லக் கர்த்தர் மூலமாக தமிழகப் பஞ்சாயத்து நிலத்தில் வாழும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அருள் ஒளி பாய்ச்சுவதை தன் கடமையாக வைத்துள்ள மோகன் சி லாரான்ஸ கட்சி நிதி மற்றும் கொரோனா நிதி கொடுத்து பஞ்சாயத்துத் தலைமையைச் சந்தித்தார் என்று ஏற்கனவே எழுதி இருந்தேன். ஆனால் அவர்கள் கோரிக்கை என்ன என்று அறியாமல் இருந்தேன். இப்போது அவர்களின் கோரிக்கை குறித்து தகவல் வந்ததும் ஆச்சரியப்பட்டுப் போய் உள்ளேன்.
ஏற்கனவே விவசாயி செய்த உருப்படியான ஒரே காரியமான 7.5 சதவிகிதம் மூலம் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களை மருத்துவர்களாக மாற்றியது (சென்ற வருடம் 440 மாணவர்கள் முழு அரசு கட்டண உதவியுடன் சேர்ந்துள்ளனர்) நாம் அனைவரும் அறிந்ததே.
இப்போது சிறுபான்மை பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை அதில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். (இது அப்படியே வழக்காக மாறி நீதிமன்றம் இருக்கும் 7.5 சதவிகிதத்தை நிறுத்த வாய்ப்பதிகம்) எப்போதும் போல தனியார் பள்ளிகளுக்கு இதனை நீக்கினால் மகிழ்ச்சியே.
கடந்த சில தினங்களாக அடுத்த மூன்று வாரத்தில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற பத்திரிக்கை அறிவிப்பு நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஏன் இந்த திடீர் அக்கறை? தனியார் பள்ளிக்கூடங்கள் ஒரு பக்கம் காய்ந்து போய் உள்ளனர்.
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் எவ்வித முன் எச்சரிக்கையும் இன்றி இருக்க இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை வருமா? வராதா? என்ற அச்சத்தில் இருக்கும் சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்.
எமிஸ் என்ற இணையதளம் புனிதவதி ஆட்சியில் உருவாக்கப்பட்டு, மறுக்கப்பட்டு கடைசியாக வேறு வழி தெரியாமல் மத்திய அரசின் தொடர் வற்புறுத்தல் பேரில் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் ஒவ்வொரு மாணவர்களின் அனைத்து வித தகவல்களையும் அதில் உள்ளீடு செய்து இருக்க வேண்டும்.
இப்போது உள்ள சூழலில் அது சரியாக நிறைவேற்றி இருந்தால் எந்த மாணவர்களும் பள்ளி செல்லத் தேவையில்லை. மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. இணையம் வழியே சேர்க்கை முடிவுக்கு வந்து விடும். அங்கு பாதி, இங்கு பாதி என்று இணையம் வழியே செயல்பட வேண்டிய கல்வித்துறை திருடித் தின்பதற்காகவே குதறி வைத்துள்ளார்கள். மீண்டும் இப்போது மாணவர்கள் பள்ளிக்குச் சென்று புதிய வகுப்பிற்குச் சேர வேண்டும் என்ற நடைமுறை விரைவில் அறிமுகம் ஆகப்போகின்றது. அப்பா, அம்மா, மகன், மகள் என்று அனைவரும் பள்ளிக்குப் படையெடுப்பார்கள்? நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
விடியல் வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளாக அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் இந்த ஆண்டு(ம்) மாறப் போகின்றார்களா?
கல்வித் தந்தையர்களின் வாழ்க்கை விடியல் ஒளி பரவுமா?
என்பதனை அறிய ஆவலுடன் காத்திருக்கவும்.
1 comment:
நல்லதே நடக்க வேண்டும்...
Post a Comment