Sunday, June 20, 2021

பெட்ரோல் விலை பற்றி எரிகின்றது? என்ன காரணம்? யார் காரணம்?

மத்தியில் ஆளும் பாஜக மேல் சாதாரண பாமரர் கூட வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் எரிபொருள் விலை உயர்வு.  

மூனா கானா பணியாளர்களுக்கு இது அல்வா துண்டு.  



"சதம் அடித்தது. சங்கடத்தில் இந்தியா" என்று எதுகை மோனையாக எழுதச் சொல்லவா? வேண்டும்.

எரிபொருள் விலை உயர்ந்தால் அனைத்து விலைகளும் உயரும் என்பது எழுதப்படாத விதி. மறுப்பதற்கில்லை.  

ஆனால் அதே எரிபொருள் விலை குறைந்தால் ஏறிய விலைகள் குறையுமா? என்றால் குறையாது. இது இந்தியாவின் வாழ்பவர்களின் விதி என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த இடத்தில் தான் நண்பர்கள் சில அடிப்படை விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.

காரணம் மிகச் சிறந்த பொருளாதார மேதை என்று வர்ணிக்கப்படும் மன்மோகன்சிங் செய்த காரியங்கள் என்பது இந்தியாவைப் பாதாளக் குழிக்குள் இறக்கிய செயல்பாடுகளை எவரும் பேசுவதே இல்லை.  மக்களைத் துன்பப்படுத்தக்கூடாது என்ற ஓட்டரசியலில் தாரக மந்திரத்தைக் காங்கிரஸ் கட்சி அவர்கள் ஆண்ட பத்து வருடமும் கையாண்டது. இதனைத் தந்திரமாக வைத்திருந்தார்கள்.

என்ன செய்தார்கள்?

1. பாஜக அரசு கச்சா எண்ணெய் பீப்பாய் 30 டாலருக்கு வந்த கடந்த காலத்தில் கூட  அந்த விலை குறைப்பை மோடி அரசு இந்தியர்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது குற்றச்சாட்டு. உண்மை தான். 

காரணம் என்ன?

2. மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த போது எரிபொருள் விலையைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று சந்தையில் அதிகமான விலைக்கு வாங்கிய போது அதற்குரிய விலையை இங்கே (எதிர்க்கட்சிகள் அச்சுறுதல்) ஏற்றவில்லை. இப்படியே தான் பத்தாண்டுகளும் நகர்த்தி வந்தார்கள். நாட்டின் நிதி நிலைமை தாங்குமா? தாங்காது? என்ன செய்ய முடியும்? உடனே ஆயில் பத்திரங்கள் வெளியிட்டார்கள்.



2008 ஆம் ஆண்டில்  1.42 லட்சம் கோடி + மதிப்புள்ள 'ஆயில் பத்திரங்களின்' பொறுப்பை யுபிஏ அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அந்தப் பத்திரங்களில் 70K (எழுபதாயிரம் கோடி) கோடிக்கும் அதிகமான வட்டி செலுத்தப்பட வேண்டும். ஆனால் கூச்சப்படாமல் நாட்டுக்குச் செலவழிக்க வேண்டிய தொகையை வட்டிக்கு செலவழிக்கத் தயாராக இருந்தார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்கள் இவரைச் சிறந்த பொருளாதார மேதை என்று பாராட்டு பத்திரம் வழங்கினார்கள். நாட்டின் நிதி செல்லரிக்கத் தொடங்கியது.

3. ஆட்சிக்கு வருகின்றவர்கள் அடுத்து வருகின்றவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று கஜானாவைச் சுரண்டி துடைத்து எறிவது இங்குள்ள அரசியலில் வாடிக்கை தானே? தமிழ்நாட்டின் கடன் ஆறு லட்சம் கோடி என்பது போல மன்மோகன் சிங் உருவாக்கியிருந்த மோசமான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கிய மொத்தக் கடன் சுமைகள் ஒரு பக்கம்.  மற்றொரு பக்கம் எரிபொருள் விலையைச் சந்தை விலையின் அடிப்படையில் அந்தந்த சமயத்தில் உயர்த்தாமல் குறுக்கு வழிகளைக் கையாண்டார்கள். அதன் பாதிப்பு அனைத்தும் மோடி அரசுக்கு வந்து சேர்ந்தது. இந்த நிமிடம் வரைக்கும் காங்கிரஸ் செய்த எந்த அயோக்கியதனத்தையும் சொல்லி மோடி புலம்பவே இல்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்கவும்.



4. இப்போது, அந்தப் பரம்பரை சுமை (இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டு லட்சம் கோடி ரூபாய்)2.48 லட்சம் கோடி 2026 வரை மோடி அரசு செலுத்த வேண்டும். 2024 ல் பாராளுமன்றத் தேர்தல் வரப் போகின்றது. அடுத்த ஆட்சியிலும் இந்த கடன் சுமை தொடரும் என்பதே உண்மை.

5. வங்கியில் நீங்கள் கடன் வாங்கியிருந்தால் எந்தந்த தேதிகளில் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று ஒரு பட்டியல் தாள் கொடுப்பார்கள். அதே போல இதுவரையிலும் வட்டித் தொகை கட்டியது இனி கட்ட வேண்டியதை எரிபொருள் நிறுவனம்  கொடுத்துள்ளதைப் படித்துப் பாருங்கள்.

6. 1996 முதல் எரிபொருள் என்ற துறையில் மட்டும் இந்தியா வருடந்தோறும் வட்டி என்கிற வகையில் எத்தனை ஆயிரம் கோடி கட்டிக் கொண்டு இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். இது அனைத்தும் நம்முடைய பணம். நம் வசதிகளுக்கு செலவழிக்க வேண்டிய பணம். ஆனால் வட்டியாக மட்டுமே ஆட்சிக்கு வந்தவர்களின் தவறான கொள்கைகளால் இன்று வரையிலும் கட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள். 2021 மோடி ஆட்சியில் இருக்கும் இன்றைய காலகட்டம் வரைக்கும் வட்டித் தொகை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

7. இன்னமும் உங்களுக்குச் சுருக்கமாக புரிய வைக்க வேண்டும் என்றால் 2019 முதல் 2020 வரை எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருந்த காரணத்தால் ஆயில் பத்திரங்கள் என்ற வகையில் செலுத்தப்பட்ட வட்டித் தொகையின் அளவு 9989.96 கோடி.

8.  2020 முதல் 2021 வரைக்கும் செலுத்தப்பட்ட வட்டியின் தொகை அளவு 9989.96 கோடி.

9. 2021 முதல் 2022 வரைக்கும் நாம் செலுத்த வேண்டிய வட்டித் தொகையின் அளவு 9989.96 கோடி.

ஒருவர் ஆட்சியை விட்டு இறங்கி ஏழு வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் அவர் உருவாக்கிய பள்ளத்தை ஏழு வருடமாக இட்டு நிரப்பி இன்னமும் நிரப்ப வேண்டியதாக உள்ளது என்றால் எவ்வளவு பெரிய பள்ளத்தை உருவாக்கி விட்டுச் சென்று உள்ளார் என்பதனை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். கற்பனையாக நான் எதுவும் எழுதவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை இணைத்துள்ளேன். 

இது பிசினஸ் லைன் என்ற பத்திரிக்கையில் வெளிவந்த முழுமையான தகவல்களை அதன் துண்டுப் பகுதியை இணைத்துள்ளேன். இது இந்து என் ராம் குழுமத்திலிருந்து வெளிவரும் தினசரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரும் மோடியைத் திட்டிக் கொண்டே தானே இருக்கின்றார் என்று குழப்பம் வந்தால் நீங்கள் அரசியலில் உள்ள அரிச்சுவடி கூட இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த செய்தியும் நல்லாத்தான் இருக்கு...!

உழைக்கும் மக்கள் பாவம்...!

திண்டுக்கல் தனபாலன் said...

// பெட்ரோல் விலை பற்றி எறிகின்றது? //

எரிகின்றது...?

ஜோதிஜி said...

மாற்றிவிட்டேன். நன்றி.

கிரி said...

"எரிபொருள் விலை குறைந்தால் ஏறிய விலைகள் குறையுமா? என்றால் குறையாது."

இதை ஜெட்லி கூறி இருந்தார்.

இந்த நிமிடம் வரைக்கும் காங்கிரஸ் செய்த எந்த அயோக்கியதனத்தையும் சொல்லி மோடி புலம்பவே இல்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்கவும்."

பிரச்சனை இது தான் என்று நினைக்கிறேன்.

புலம்ப வேண்டிய அவசியமில்லை ஆனால், இது குறித்த விளக்கங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

பாஜக அரசின் பிரச்சனையே பலவற்றை மக்களிடையே கொண்டு செல்லாதது தான். நல்லது செய்தாலும் கொண்டு செல்வதில்லை, இது போல பிரச்சனைகளையும் விளக்குவதில்லை.

இப்பிரச்சனை குறித்து அரை குறையாக தெரிந்தாலும், உங்கள் கட்டுரை / கட்டுரையில் உள்ள தகவல்கள் ஓரளவு தெளிவு படுத்தியுள்ளது.

இது பற்றி என் தளத்திலும் எழுத முயற்சிக்கிறேன்.

ஜோதிஜி said...

நன்றி கிரி.

Manivannan Kamaraj said...

5 மாநில தேர்தல் தேதி அறிவிக்க பட்ட பிறகு & தேர்தல் முடியும் வரைக்கு மட்டும் அந்த பள்ளத்தை நிரப்பாதது ஏன் கேட்டது தவறு என்றால் மன்னிக்கவும். தெளிவு படுத்தவும்.
Manivannan Kamaraj.

ஜோதிஜி said...

இதில் என்ன மன்னிப்பு. சரியாகத்தான் கேட்டு இருக்கீறீங்க?

இதனை நேரம் இருந்தால் பார்க்கவும். மூன்று பகுதிகள் உள்ளது. அடுத்தடுத்து வரும். தொடர்ந்து கேட்கவும். விருப்பம் இருந்தால். ஆதி அந்தம் முதல் முழுமையாகப் புரியும். https://youtu.be/HxPs7pS4gFc